பக்கம் எண் :

திருத்தணிகைப்பதிகங்கள்

3. பிரார்த்தனை மாலை

கட்டளைக் கலித்துறை

42.

    சீர்கொண்டதெய்வ வதனங்க ளாறும் திகழ்கடப்பந்
    தார்கொண்டபன்னிருதோள்களும்தாமரைத் தாள்களுமோர்
    கூர்கொண்டவேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட்
    கார்கொண்ட வண்மைத் தணிகாசலமு மென் கண்ணுற்றதே.

உரை:

     சிறப்புப் பொருந்திய தெய்வ வொளி திகழும் ஆறு முகங்களும் மணம் கமழும் கடம்பு மாலை கிடந்தொளிரும் பன்னிரண்டு தோள்களும் தாமரை மலர் போன்ற திருவடிகளும் கூர்மையுற்ற தொரு வேற்படையும் மயிலாகிய ஊர்தியும் நல்ல கோழிச் சேவல் எழுதிய கொடியும் அருள் உற்ற கருமுகில் தவழ்வதால் வளமை பொருந்திய தணிகை மலையும் என் கண்ணிற் காணக் காட்சி தருகின்றன. எ. று.

     சண்முகத் தெய்வமாதலால், முருகன் திருமுகங்களைத் “தெய்வ வதனங்கள்” என்றும், இயல்பிலேயே சிறப்புடையனவாதல் பற்றி “சீர் கொண்ட” என்றும் சிறப்பித்துக் கூறுகின்றார். பிரார்த்தனை மேற்கொண்டு சொன்மாலை தொடுக்கின்றாராதலின், மங்கலச் சொல்லால் தொடங்கும் மரபு பற்றிச் “சீர்கொண்ட” என எடுக்கின்றார் எனினும் அமையும். கடம்பு மாலையை விரும்பியணிபவனாதலால், அது கிடந்து அசையும் பன்னிரண்டு தோள்களையும் காண்கின்ற வள்ளற் பெருமான், “திகழ்கடப் பந்தார் கொண்ட பன்னிரு தோள்களும்” என்று குறிக்கின்றார். கடம்பின் பூ, தேர் உருளை போல வட்டமாக இருத்தலை வியந்து “மராஅத்து உருள்பூந்தண்டார்” (முருகு) என்று நக்கீரரும், கடம்பு மாலையை முருகன் விரும்புதலை விதந்து, “கடம்பார் காளை” (தனி. நேரிசை) என்று நாவுக்கரசரும் புகழ்ந்துரைக்கின்றனர். அடியார்கள் முடியிற் சூடிக் கொள்ளும் பெருமையுடைய வாதலால் “தாமரைத் தாள்” என்று திருவடியைச் சிறப்பிக்கின்றார். மலையைப் பிளக்கும் இயல்பிற்றாதலின், வேற்படையை “ஓர் கூர்கொண்ட வேல்” என்று குறிக்கின்றார். ஏனையோர் படை போல மழுங்குதலும் வடித்தலும் தீட்டலும் இல்லதாகலின் “ஓர் கூர்கொண்ட வேல்” எனச் சிறப்பிக்கின்றார். என் கண் வதனங்கள் ஆறையும் தோள்களையும் தாள்களையும் வேலையும் மயிலையும் கொடியையும் தணிகாசலத்தையும் உற்று மகிழ்ந்தது என இயைத்தலும் பொருந்தும்.

     இதனால் வள்ளற் பெருமான் தணிகை மலையையும், அறுமுகப் பெருமானுடைய முழுத்த காட்சியையும் பெற்று இன்புற்றதைக் கூறுகின்றார்.

     (42)