39. நாளெண்ணி வருந்தல்
அஃதாவது பிறந்த பிறவிக்கண் எய்தியதும்
எய்துவதும் எய்தக்கடவதுமாகிய துன்பங்களை நினைந்து மனம்
நொந்து ஆற்றாமை யுற்று இத்துன்பச் சூழலினின்றும்
நீங்கும் காலம் எப்போது வரும் என எண்ணி வருந்துவதாகும்.
இங்கு வரும் பாட்டுக்களில் ஒவ்வொன்றும் உய்தி பெறும்
நாள் என்று வரும் என்பதே பொருளாகக் கொள்ளினும்,
முருகப் பெருமானது பரமாம் தன்மையையும், பர ஞானத்தின்
இயல்பையும், பர ஞானிகள், இயல்பையும், பேரின்ப
வாழ்வின் பெருமையையும் பேசுவது நினைவு கொள்ளத் தக்கது.
அறுசீர்க் கழிநெடிலடி
யாசிரிய விருத்தம்
420. இன்னும் எத்தனை நாள்செலும் ஏழையேன்
இடர்க்கடல் விடுத்தேற
மின்னும் வேற்படை மிளிர்தரும் கைத்தல
வித்தகப் பெருமானே
துன்னு நற்றணி காசலத் தமர்ந்தருள்
தோன்றலே மயிலேறி
மன்னு முத்தம வள்ளலே நின்றிரு
மனக்கருத் தறியேனே.
உரை: ஒளிர்கின்ற வேற்படை யிருந்து விளங்கும் கையை யுடைய ஞானமூர்த்தி யாகிய பெருமானே, அன்பர்கள் சேர்கின்ற நல்ல தணிகை மலையில் வீற்றிருந்தருளும் தலைவனே, மயிலேறி யருளும் உத்தமனான வள்ளலே, ஏழையாகிய யான் இப்பிறப்பு நல்கும் துன்பக் கடலினின்றும் நீங்கிக் கரையேறுதற்கு இன்னும் எத்தனை நாள் கழிய வேண்டுமோ? நின்னுடைய திருவுள்ளக் குறிப்பு யாதோ? அறிகிலேன், எ. று.
தூய சத்தி வேலாதலால், “மின்னும் வேற்படை” எனவும், முருகப் பெருமான் கையின் கண் அது மிக்க ஒளி செய்தலால், “மிளிர்தரு கைத்தலம்” எனவும் வியந்துரைக்கின்றார். வித்தகம் - ஞானம். சிவஞானத் திருவுருவினனாதல் பற்றி, “வித்தகப் பெருமானே” என வுரைக்கின்றார். துன்னுதல் - நெருங்குதல். அன்பர் கூட்டம் வந்தடைந்த வண்ணமிருப்பதால் “துன்னும் தணிகாசலம்” என்று சிறப்பிக்கின்றார். நற்றணிகாசலம் என்பதில் நன்மை, வேண்டி வரும் அன்பர்களுக்கு வேண்டிய நலங்களைத் தடையின்றி எய்துவித்தல், தோன்றல் - ஆடவரிற் சிறந்த தலைவன். மயிலேறி மன்னுதலாவது, மயிலேறி வந்து உயிர்கட்கு ஆக்கம் அருளுவதாகும். உத்தம வள்ளல் - உத்தமனான வள்ளல்; இருள் நீங்கி அருளின்பம் பெருக வழங்கும் வள்ளன்மையுடையவன் என்பது கருத்து உத்தமம், மத்திமம், அதமம் என வகுத்து நோக்கப்படும் மானிட வள்ளலன்மையின் முருகப்பெருமானை உத்தமமான வள்ளன்மையுடையவன் என்று பொருள் கோடல் ஈண்டைக்குப் பொருந்தாது; வள்ளற்பெருமான் கருத்துமாகாது. பிறவித் துன்பமாகிய கடலின் கண் வீழ்ந்து கரையேற மாட்டாது பன்னட்களாய் வருந்துகிறேன்; நின் திருவருளாலன்றிக் கரையேறவும் முடியாது; இத்தனை நாள் கிடந்து வருந்தியது நின் திருவுள்ளக் குறிப்பாதலால், இன்னும் எத்தனைக் காலம் இக்கடலிற் கிடந்து துயருற வேண்டுமோ, அறிவில்லாத ஏழையாதலால் அறிகிலேன் என்பாராய், “ஏழையேன் இடர்க்கடல் விடுத்தேற இன்னும் எத்தனை நாள் செலும்” என்றும், “திருமனக் கருத்தறியேன்” என்றும் முறையிடுகின்றார்.
இதனால் பிறவித் துன்பமாகிய கடலினின்றும் கரை யேறுதற்கு இன்னும் எத்தனை நாட்கள் செல்லுமோ என வருந்தி முருகன்பால் முறையிட்டவாறாம். (1)
|