பக்கம் எண் :

4225.

     கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
          கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி
     எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
          என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
     வற்பூத வனம்போன்றாள் பாங்கியவள் தனைமுன்
          மகிழ்ந்துபெற்றிங் கெனைவளர்த்தாள் வினைவளர்த்தாள் ஆனாள்
     விற்பூஒள் நுதல்மடவார் சொற்போர்செய் கின்றார்
          விண்ணிலவு நடராயர் எண்ணம்அறிந் திலனே.

உரை:

     என் கணவராகிய சிவபிரான் என்பால் வந்தருளுவாராயின் அவர்க்குக் கண்ணேறு கழிக்கும்பொருட்டுக் கற்பூரம் கொண்டு வந்து வைப்பீராக எனச் சேவடியர்க்குச் சொன்னேன்; அதனால்தானோ; அவருடைய திருவடியின் கீழ்நிலை ஒளியுடைய பூத தத்துவங்களின் நிலையாகும் என்று மொழிந்தேன்; அதனாலோ வேறு யாது காரணத்தாலோ, தலைவராகிய சிவபெருமான் வந்திலர்; இந்நிலை கண்ட தோழி சினம் மிக்கு வலிய தீயாகிய பூதம் பற்றிய காடு போல் எரிந்து என்னை நோக்கலுற்றாள்; அவளை முன்பே பெற்றவளும் என்னையன்புடன் வளர்த்தவளுமாகிய செவிலித் தாய் கொடுமை செய்வாளாயினாள்; வில்லைப் போல் வளைந்த அழகிய நெற்றியையுடைய ஆயமகளிர் பலரும் என்னொடு மாறுபட்டுச் சொற்களால் என்னை யேசிப் பூசல் செய்கின்றனர்; யான் யாது செய்வேன்; ஞானாகாசத்தில் நடம்புரியும் நடராசப் பெருமானுடைய கருத்தையும் யான் அறிகிலேன். எ.று.

     கண்ணெச்சில் - கண்ணேறு. பலரால் பார்க்கப்படுதலால் உண்டாகும் குற்றமுமாம். சிறு குழவிகளும் மணமக்களும் கண்ணெச்சிற் படுவது காணும் தாயர் கற்பூரத்தை யேற்றி முகத்தெதிரே சுற்றி நிலத்தில் எறிவது மகளிர் உலக வழக்கு. இது கண்ணேறு கழித்தல் எனப்படும். நில முதலிய பூதமைந்தும் ஒன்றன் கீழ் ஒன்றாக நிற்கும் உலக நிலை, “எற்பூத நிலை” எனப்படுகிறது. எல் - ஒளி. “நீலமேனி வாலிழை பாகத்தொருவன் இருதாள் நிழற் கீழ் மூவகையுலகும் முகிழ்த்தன முறையே” (ஐங். கட.) எனப் பெரியோர் உரைப்பது பற்றி, “அவர்தம் திருவடிக் கீழ் எற்பூத நிலை” எனத் தலைவி சிவனது திருவடிப் பெருமையை எடுத்தோதுகின்றாள். வற்பூதம் - நில முதலிய பூதமைந்தனுள் வலியுடைய தீ. பூதவனம் - தீப் பற்றிய காடு. கண்ணும் முகமும் சினத்தால் சிவந்து நிற்கும் தோழியை, “வற்பூத வனம் போன்றாள் பாங்கி” எனவும், தனக்குச் செவிலியாயினும் இப்போது வேறுபட்டு ஒழுகுகின்றமையால் அயன்மை தோன்ற, “அவள் தனை முன் மகிழ்ந்து பெற்று இங்கு எனை வளர்த்தாள்” எனவும் தலைவி கூறுகின்றாள். இளமகளிரின் நெற்றி விற்போல் வளைந்தும் அழகும் ஒளியும் கொண்டு பொலிதலால், “விற்பூ வொண்ணுதல் மடவார்” என்று இயம்புகின்றாள். நெற்றி நெளிந்தும் பூப் போன்ற கண் சிவந்தும் வெம்மையுற்றும் தோன்றுதலால், “விற் பூ வொண்ணுதல் மடவார்” எனத் தலைவி மொழிகின்றாள். விண் என்றது - ஞானமாகிய ஆகாசத்தை எனக் கொள்க.

     (16)