பக்கம் எண் :

4227.

     தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது
          தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி
     ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம்
          என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
     கூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த
          கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள்
     சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார்
          சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.

உரை:

     நீண்ட கூந்தலை யுடைய தோழியர்களே! நீவீர் என்னைச் சிறிது போது தனித்திருக்க விடுவீர்களாயின், நான் என் தலைவராகிய சிவபிரானைக் கண்டு மகிழ்வேன் என்று சொன்னேன்; மேலும் நான் அவர்பாற் பெற்ற சிவயோக வின்பம் கடல்கள் ஏழினும் பெரிது காண் என்று இயம்பினேன்; இதனாலோ வேறு எதனாலோ, என்பால் அவர் வந்தாரில்லை என்று வாய் விட்டுச் சொன்னேனாக, கேட்ட தோழி கூழ் கொதிப்பதுபோலச் சினத்தால் கொதிக்கலானாள்; என்னை வளர்த்த செவிலித் தாய், மருள் கொண்டு உடல் துடித்து ஆடுகின்ற பேதைப் பெண் போல ஆடலுற்றாள்; சூழவிருந்த அயற் பெண்டிர் அனைவரும் பல சொல்லித் தூற்றி இகழ்வாராயினர்; என் செய்வேன், தூயராகிய நடராசப் பெருமானுடைய திருவுள்ளத்தை நான் அறிகிலேன். எ.று

.      நீண்ட கூந்தல் இடையளவும் தாழ்ந்து விளங்குவதால் தோழியரை, “தாழ் குழலீர்” எனத் தலைவி கூறுகின்றாள். “தலைவரைக் காண்குவல்” என்பது இடக்கர் மொழியாய்க் குற்றப்படுதலால், “அதனாலோ அவர் வந்திலர்” என அவலிக்கின்றாள். தான் பெற்ற சிவபோகானுபவத்தை யுரைக்கின்றாளாகலின், “ஏழ் கடலிற் பெரிதன்றோ நான் பெற்ற இன்பம் என்று உரைத்தேன்” எனத் தலைவி சொல்லுகின்றாள். “சொலற் கரிய சூழ”லாகச் சான்றோர் குறிக்கும் சிவானந்த நிலையை, “ஏழ் கடலிற் பெரிது” என உவமம் காட்டிக் கூறுவது பற்றித் தோழியும் செவிலியும் வெகுள்கின்றனர் என்பது கருத்து. பாங்கி - தோழி. வளர்த்த கோதை -தலைவியை வளர்த்த செவிலித் தாய். கோதை - பெண். பேதை - அறிவில்லாத மங்கை. நகைத்தல் - எள்ளும் குறிப்புடையது. சூழ் மடந்தைமார் - சூழவிருக்கும் பெண்டிர்.

     (18)