4228. தனித்தலைவர் வருகின்ற தருணம்இது மடவீர்
தனிக்கஎனை விடுமின்என்றேன் அதனாலோ அன்றி
இனித்தசுவை எல்லாம்என் கணவர்அடிச் சுவையே
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
பனித்தகுளிர் காலத்தே சனித்தசலம் போன்றாள்
பாங்கிஎனை வளர்த்தவளும் தூங்குமுகங் கொண்டாள்
கனித்தபழம் விடுத்துமின்னார் காய்தின்னு கின்றார்
கருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
உரை: என்னுடைய ஒப்பற்ற தலைவராகிய சிவபிரான் என்பால் வரும் காலம் இதுவாகலின், தோழியரே, என்னைத் தனிக்க விடுவீர்களாக என்றும், இனிமையுடையவையென நீவிர் கூறும் சுவை வகைகள் யாவும் என் கணவராகிய சிவனுடைய திருவடி நல்கும் சுவையாம் என்றும் எடுத்துரைத்தேன்; அதனாலோ, வேறே எதனாலோ அவர் என்பால் வந்திலர் என வுரைத்தேனாக, என் தோழி வெறுப்புற்று மிகக் குளிறும் பனிக் காலத்தில் ஊற்றெடுக்கும் தண்ணீர் போல் மேனி சிலிர்த்து என் தோழி நடுக்கமுற்றாள்; செவிலியும் முகம் சுருங்கி வேறுபடலானாள்; ஏனை மகளிரும் செவி கைக்கும் சொற்களைப் பேசுவாராயினர்; யான் யாது செய்வேன்; தலைவராகிய நடராசப் பெருமானுடைய திருவுள்ளக் கருத்தை அறிகிலேன். எ.று.
இளமகளிரைக் குறிக்கும் மடவார் என்பது மடவீர் என விளியேற்றது. என்னைத் தனியே இருக்கவிட்டு நீங்குமின் என்பாளாய், “தனிக்க விடுமின்” என்றேன் எனத் தலைவி யுரைக்கின்றாள். இது நாண் வரம்பு கடந்த நவிற்சியாதலை யுணர்கின்ற தலைவி, “இதனாலோ அவர் வந்திலர்” என இரங்குகின்றாள். இறைவன் திருவடிப் பேற்றின்கண் பெறப்படும் இன்பத்தை, “இனித்த சுவையெல்லாம் என் கணவர் அடிச்சுவையே” என மொழிகின்றாள். கூற மாட்டாததனைக் கூறிய குற்றமாதலை யுணர்ந்தமை புலப்பட, “இதனாலோ எதனாலோ அறியேன்” என்று கவல்கின்றாள். சனித்த சலம் - ஊற்று நீர். பனிக் காலத்தில் நிலம் குளிர்ந்திருத்தலால் அதன்கண் ஊறும் நீர் மிக்க குளிர்ச்சியுடையதாய்த் தன்கண் மூழ்குவாரை உடல் நடுங்கச் செய்தலால், “சனித்த சலம் போன்றாள்” என்றும், இன்னாத கூறல், காய் கவர்தல் போல்வதாமெனச் சான்றோர் உரைப்பதால், இன்னாத அலர் கூறித் தூற்றும் அயற் பெண்டிரை, “காய் தின்னுகின்றார்” என்றும் இசைக்கின்றாள். கனிந்த என்பது எதுகை நோக்கிக் “கனித்த” என வலித்தது. மின்னார் - மின்னற் கொடி போலும் இடையையுடைய இளமகளிர். (19)
|