4230. மணவாளர் வருகின்ற தருணம்இது மடவீர்
மறைந்திருமின் நீவிர்என்றேன் அதனாலோ அன்றி
எணமேது நுமக்கெனைத்தான் யார்தடுக்கக் கூடும்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
குணநீடு பாங்கிஅவள் எம்மிறையை நினையார்
குணங்கொண்டாள் வளர்த்தவளும் பணம்விண்டாள் ஆனாள்
மணநீடு குழன்மடவார் குணநீடு கின்றார்
வள்ளல்நட ராயர்திரு உள்ளம்அறிந் திலனே.
உரை: என் கணவராகிய சிவபிரான் என்பால் வருகின்ற காலம் இதுவாகையால், என் தோழியரே, நீவிர் இவ்விடத்தினின்றும் நீங்கி அவர் கண்படாத வகையில் இருப்பீராக என்றும், அவரோடு கூடியிருந்த போது, உம்முடைய திருவுள்ளம் யாது? நீவிர் இவண் வருவதை ஒருவராலும் தடுக்க வொண்ணாதே என்றும் உரையாடினேனாக, என் கழி காதலை எண்ணியோ வேறே எதனாலோ அவர் வாராமைக்குக் காரணம் அறியேன் என்று சொன்னேன்; என் சொற்களைக் கேட்ட தோழி மிக்க நற்குண முடையவளாயினும் எங்கள் இறைவனாகிய சிவனை அன்புடன் நினையாதவர் போல மாறு கொண்ட குணம் செயல்களை மேற்கொண்டு ஒழுகலானாள்; என்னை வளர்த்த செவிலித் தாயும் கைப் பணத்தை இழந்தவர்களைப் போல வருந்தலுற்றாள்; மணம் கமழும் கூந்தலையுடைய அயற் பெண்டிரும் அயன்மைக் குணமுடையவராய்ப் பேசுகின்றார்கள்; வள்ளற் பெருமானாகிய நடராச மூர்த்தியின் எண்ணம் யாதெனத் தெரியாமல் வருந்துகிறேன். எ.று.
மறைந்த ஒழுக்கத்தை மேற்கொண்டு வருகின்றாராதலால் அவர் இங்கு என்பால் வரும்போது நீவிர் இவ்விடத்து நில்லாது நீங்கி யிருப்பீராக என்பாளாய்த் தலைவி, “மணவாளர் வருகின்ற தருணம் இது, மறைந்திருமின் நீவிர் என்றேன்” எனத் தலைவி தோழிகட்குரைக்கின்றாள்; தலைவனொடு கூடியிருக்கும்போது நீவிர் இவண் வருவதற்குத் தாமதமேன்; உம்மைத் தடுப்பவர் ஒருவரும் இல்லையே எனத் தலைவி சிவனோடு புலந்து பேசினமை தெரிவிப்பாளாய், “எணம் ஏது நுமக்கு? எனைத்தான் யார் தடுக்கக்கூடும் என்றுரைத்தேன்” என மொழிகின்றாள். இக்கூற்றுப் பெருந்திணைப் புறமாய்க் குற்றப்படுதலால் தோழி வெறுக்கின்றாள் என்பாளாய், “குணம் நீடு பாங்கியவள் எம்மிறையை நினையார் குணம் கொண்டாள்” என்று இயம்புகின்றாள். எம்முடைய இறைவனை அன்பால் நினையாதவர் மனத்தின் வன்பு கொண்டு பழிப்புரை பகர்வர் என்பது புலப்பட, “எம்மிறையை நினையார் குணம் கொண்டாள்” என்று தலைவி கூறுகிறாளாம். கைப்பொருளை யிழந்தவர்கள் கையறவுபட்டு வருந்துவது போலச் செவிலி வருந்துகின்றமை தோன்ற, “வளர்த்தவளும் பணம் விண்டாளானாள்” என வுரைக்கின்றாள். பணம் - கைப்பொருள். அயன்மைக் குணமாவது அயலார்க்குள்ள அன்புத் தொடர்பில்லாத தன்மை. நீடுதல் - மிக்குறுதல். (21)
|