4231. பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப்
பார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ
எதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால்
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
மதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள்
மகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள்
துதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார்
சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
உரை: பதிப் பொருளாகிய சிவபெருமான் என்பால் வந்தணையும் பொழுது இதுவாகும்; அவருடைய திருவுருவைக் கண்டு மகிழ்தற்கு உங்கட்குத் தகுதியில்லையாதலால், விலகியிருப்பீராக என்று சேடியர்க்கு உரைத்தேன்; அது காரணமாக அவர் என்பால் வந்திலரோ; அன்றியும் அவருடைய திருவடிக் கண்ணன்றி வேறு எதன்பாலும் எனக்கு இச்சையில்லை என்று சொன்னேன்; அதனாலோ வேறு எதனாலோ அறிகிலேன்; என் சொற்களைக் கேட்டுச் சந்திரன் போன்ற முகத்தை யுடையவளாகிய தோழி, கடுத்த முகங்கொண்டு விலகியொழுகுகின்றாள்; என்னை விருப்புடன் வளர்த்த செவிலியும், என்னை இகழ்ந்து பலவற்றையுரைக்கின்றாள்; என்னைப் போற்றி நிற்கும் மகளிரெல்லாரும் அலர் கூறி இடையூறு செய்கின்றனர்; தூயராகிய நடராசப் பெருமானுடைய, திருவுள்ளத்தையும் அறிகிலேன்; என் செய்வேன். எ.று.
உலகுயிர்கட்குத் தலைவனாதலால் சிவனை, “பதி” என்று கூறுகின்றாள். சிவஞான ஒழுக்கமில்லாதார் அவனைக் காணும் தகுதி படைத்தவராகார், என்பதுபற்றித் தலைவி தன் சேடியரை நோக்கி, “நீவிர் அவர் வடிவைப் பார்ப்பதற்குத் தரமில்லீர்” என்றும், சிவனுடைய திருவடி இன்பமும் அழகுமுடைய எல்லாப் பொருளுமாதலால், “எதிலும் எனக்கு இச்சையில்லை அவரடிக்கண் அல்லால் என்றுரைத்தேன்” என்றும் இயம்புகின்றாள். அவள் எதிர்பார்த்தபடி பதியாகிய சிவன் காலம் வந்தும் அவள்பால் வாராமையால், “இதனாலோ எதனாலோ அறியேன்” என்று வருந்துகிறாள். மதி முகத்தாள் - முழுச் சந்திரன் போன்ற முகத்தையுடையவள். விதி முகத்தாள், ஏவலரைக் கட்டளையிடுபவர் போல முகங்கடுத்துத் தன்னைத் தோழி நோக்கினமை தோன்ற, “பாங்கி ஒரு விதி முகத்தாளானாள்” எனக் கூறுகின்றாள். குளிர்ந்த முகமுடையளாயினும் தண்ணிய ஒளியுடைமை நீங்கிக் கடுத்து நோக்கினமையின், “மதி முகத்தாள் ஒரு விதி முகத்தாள் ஆனாள்” எனத் தலைவி கவல்கின்றாள். துதி செய் மட மாதர் - பணிபுரியும் பெண்கள். சதி செய்தல் - இடையூறு செய்தல். சித்தம் - திருவுள்ளம். (22)
|