4233. கூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக்
கூடுவதோ நும்மாலே என்றஅத னாலோ
ஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ
என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள்
நண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள்
தேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார்
திருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
உரை: அன்புடன் என்னைக் கூடி மகிழ்வித்த கணவராகிய சிவபெருமான், மீளவும் என்பால் வந்து என்னைக் கூடாதபடி அவர் கருத்தைச் சிதைக்க உங்களால் இயலுமோ என்றும், ஏடி தோழி வந்துள்ளார் பலருள் என்னையறிந்து கொள்வாரோ, நாம் கூடியிருக்கும் இச்சபைக்கு வருவாரோ என்றும் தோழியர்பால் உரையாடினேன்; இது காரணமாகவோ, வேறு யாது காரணமாகவோ நான் அறியேன், அவரும் வந்திலர்; இதனால் என்பால் அன்பு செய்த தோழியும் மனத்தில் வெறுப்புற்று என்னின் நீங்கினாள்; என்னையெடுத்து வளர்த்த செவிலியும் தான் எண்ணியவாறெல்லாம் பேசலாயினாள்; என்னைத் தேடிக் கூடி மகிழும் ஆயமகளிர் எல்லாரும், என்னிற் பிரிந்து தாம்தாம் தனித்துக் கூடி அலர் மொழிகின்றார்கள்; தூயராகிய நடராசப் பெருமான் வந்திலராதலால் அவருடைய திருவுள்ளக் குறிப்பு யாதோ, யான் அறியேன். எ.று.
ஏடி - தோழியை அழைக்கும் மொழி. இதற்கு ஆண்பால் ஏடன் என வரும். நின்பால் வருதற்பாலராகிய நின் கணவர் மாறாமைக்குக் காரணம், என் போல் மகளிரால் தடுக்கப்பட்டார் போலும் என்று தோழியர் கூறினமையால் தலைவி உள்ளத்தில் வெகுளி கொண்டு அவர் கூற்றை மறுக்கலுற்று அவர் மகளிரால் மயக்கி விலக்கப்படும் இயல்பினரல்லர் எனத் தெரிவித்தற்கு, “கூடிய என் கணவர் எனைக் கூடாமற் கலைக்கக் கூடுவதோ நும்மாலே” என்று தலைவி யுரைக்கின்றாள். தன்னோடு வந்திருக்கும் மகளிர் பலராதல் கண்டு, தன்னைக் கண்டறிந்து அன்பு செய்வாரோ என உள்ளம் அலமருதல் தோன்ற, “ஏடி எனை அறியாரோ” எனத் தலைவி வருந்துகிறாள். மனமூடுதலாவது அன்பால் விரிவதின்றிக் கூம்பிச் சாம்புதல். எண்ணியவாறு இசைத்தல் - நினைத்தபடி பேசுதல். திருத்தர் - தான் தூயராயினார் பிறரும் அங்ஙனம் ஆமாறு தூயராக்குபவர். “திருத்தித் திருத்தி வந்து என் சிந்தை இடங்கொள் கயிலாயா” (ஊர்த்தொகை) என்று சுந்தரர் கூறுவது காண்க. திருத்தன் எனச் சிவனைச் சான்றோர் பாராட்டுவது பற்றித் “திருத்தர்” எனப்படுகின்றார் எனினும் பொருந்தும். “திருத்தன் சேவடிக்கு நாம் இருப்பதே” (பூந்துருத்தி) என்று நாவுக்கரசர் சிவனைப் போற்றுவது காண்க. (24)
|