பக்கம் எண் :

61. ஞானசிதம்பர வெண்பா

தில்லையும் பார்வதிபுரமும்

    அஃதாவது, ஞான சிதம்பரம் என்னும் பார்வதிபுரத்தைச் சிறப்பித்துரைக்கும் வெண்பாக்கள் கொண்ட பாமாலையாகும். இவ் வெண்பாக்கள் பலவுள், சித்திரக்கவி நடையில் இயன்றுள்ளமை கண்டு இன்புறத் தகுவன.

நேரிசை வெண்பா

4234.

     அன்னையப்பன் மாவினத்தார் ஆய்குழலார் ஆசையினால்
     தென்னைஒப்ப நீண்ட சிறுநெஞ்சே - என்னைஎன்னை
     யாவகைசேர் வாயில் எயிற்றில்லை என்கிலையே
     ஆவகைஐந் தாய்ப்பதம்ஆ றார்ந்து.

உரை:

     தாய் தந்தை, மாமன் மாமி முதலாயினோர் மேலும், ஆய்ந்த கூந்தலையுடைய மகளிர் மேலும் ஆசையுற்றுத் தென்னை மரம் போல உயர்ந்த சிறு நெஞ்சமே, எவ்வகையுயிர்களும் சென்றடையும் வாயில் பொருந்திய மதில் சூழ்ந்த தில்லையம்பதியை, முன்னேறுதற்குதவும் ஐந்தறி வுடையையாய்ப் பிரமபதம் முதலிய ஆறுவகைப் பதானுபவம் நிறைந்து சிந்திக்கின்றாயில்லையே; என்னே; இடையறாது சிந்திப்பாயாக. எ.று.

     மாமன், மாமி, மைத்துனன், மைத்துனி என்ற உறவு முறையினரை, “மாவினத்தார்” என்று கூறுகின்றார்; மா இனத்தார் - பெரிய உறவினர் எனினும் அமையும். நெய் பெய்து சிக்கறுத்து ஒப்பனை செய்யப்பட்ட கூந்தலையுடையராதலால், “ஆய்குழலார்” என்கின்றார். சிறு நெஞ்சம் - சிறுமையுடைய நெஞ்சம். செயற்குரியதைச் செய்யாமல் சிறுமையுற்றமை விளங்க நின்றது. தென்னைபோல் நீண்டு வளர்ந்தும் ஆசையால் சிறுமையுற்றது என்பதாம். நெஞ்சின் சிறுமைக்கு இரங்கி, “என்னை என்னை” என்று வள்ளற் பெருமான் உரைக்கின்றார். உயிர் வகைகள் பலவும் அடங்க, “யாவகை” என்று குறிக்கின்றார். முற்றும்மை தொக்கது. எயில் - மதில். மெய் வாய் முதலிய கருவிகள் ஐந்தாலும் எய்தும் அறிவு உடம்பொடு கூடி வாழும் உயிர் உய்தி பெறுதற்கு உதவுவனவாதலால், “ஆவகை யைந்து” என அறிவுறுத்துகிறார். பதம் ஆறாவன, பிரம பதம், வைகுந்த பதம், உருத்திர பதம், சாதாக்கிய பதம், மகேசுர பதம், வித்தியேசுர பதம் என்பனவாம். என்கிலை - என்று சிந்திக்கின்றாயில்லை; ஓதுகின்றாயில்லை என்றாலும் ஒன்று.

     ஐயுணர் வெய்தி அறுவகைப் பதானுபவம் நிறைந்து, தில்லையம்பதியை சிந்திப்பாயாக என்பதாம்.

     (1)