பக்கம் எண் :

4239.

     அதுபார் அதிலே அடைந்துவதி மற்றாங்(கு)
     அதில்ஏழை யைப்புரமெய் யன்பால் - அதிலே
     நலமே வதிலேநின் னாவூர் திருவம்
     பலமேவக் காட்டும் பரிசு.

உரை:

     பார்வதிபுரம் என்ற ஊர்ப் பெயரில் தலைமகள் உறையும் ஊராவது பார்; அங்கு அடைந்து வதிக; அதன்கண் ஏழையாகிய தலைவியின் திருமேனியைக் காண்க; மெய்யன்புடன் அவ்வூர்க்கண் நலமாக அவளோடு வாழ்க; அவ்வாழ்க்கையில் நிலையாக நிற்பாயாக; இது நாவால் ஓதப்படும் திருவம்பலத்தை அடையின் பெறலாகும் பரிசு காண். எ.று.

     பார்வதிபுரம் என்ற பெயரைப் பார் வதிபுரம் எனப் பிரித்துப் பார் என்பது தலைமகளது ஊர் என்றும், வதிதல் தங்குதலாதலின் அங்கு வதிக என்றும், புரம் என்பது உடம்பைக் குறிப்பதாதலால் அவளது திருமேனியாகவும் இப்பாட்டில் காட்டப்படுகின்றன. அதிலே நலம் மேவு என்றும், அதிலே நில் என்றும் பிரித்து மெய்யன்புடன் அவளோடு கூடி நலம் பெறுக எனவும், அந்த நல நுகர்ச்சியிலே நிலைபெறுக எனவும் பொருள் கொள்க. நாவூர் திருவம்பலம் - நாவால் புகழப்படும் திருவம்பலம் என்க.

     இஃது இயலிடம் கேட்ட தலைவனுக்குத் தோழி பார்வதிபுரத்தின் பெயரைக்காட்டிக் கூறியவாறாம். இதனைப் பார்வதிபுரம் என்ற பெயரின் சொற்பொருள் நலம்காட்டி மகிழ்வித்தல் என்பதும் உண்டு

     (6)