4240. நம்பார் வதிபாக னம்புரத்தில் நின்றுவந்தோன்
அம்பாரத் தென்கிழக்கே அம்பலத்தான் - வெம்பாது
பார்த்தால் அளிப்பான் தெரியுஞ் சிதம்பரம்நீ
பார்த்தாய்இப் பாட்டின் பரிசு.
உரை: நம்மால் துதிக்கப்டும் பார்வதிக்குத் தலைவனும், நம்முடைய உடம்பாகிய புரத்தின்கண் இருந்து மகிழ்பவனும், திசை காணுமிடத்து இவ்வூர்க்குத் தென்கிழக்கிலுள்ள தில்லையம்பலத்தை யுடையவனுமாகிய சிவபெருமான், தண்ணிய மனத்துடன் தன்னை யடைந்து காணின் திருவருள் நல்குவன்; அருள் ஞானம் பெற்றார்க்கு
அவனுடைய சிதாகாசமாகிய சிதம்பரம் இனிது தெரியும்; இதுவே இப்பாட்டைப் பார்த்தால் நமக்குக் கிடைக்கும் பரிசு. எ.று.
திசையை யுணர்த்தும் அம்பரம் என்ற சொல் செய்யுளாதலால் எதுகை நோக்கி அம்பாரம் என வந்தது. வெம்புதல் - வெண்மை யுறுதல். புரத்தில் நின்று உவப்பவனும் அம்பலத்தானுமாகிய சிவனைப் பதற்றமின்றி நோக்குவோமாயின் அவனுடைய சிதம்பரம் தெரியும் என்பதாம். சிதம்பரம் - சித் அம்பரம் எனப் பிரிந்து ஞானாகாசம் எனப் பொருள்படுவது காண்க. பரிசு - பொருள் நலம். இன்றும் பார்வதி புரமாகிய வடலூர் அம்பலத்தின் மேல் தட்டிலிருந்து தென்கிழக்கில் நோக்கினால் சிதம்பரம் தெரியும் என அறிக. (7)
|