பக்கம் எண் :

4242.

     பூமி பொருந்து புரத்தே நமதுசிவ
     காமிதனை வேட்டுக் கலந்தமரந்தான் - நேமி
     அளித்தான்மால் கண்மலருக் கானந்தக் கூத்தில்
     களித்தான் அவன்றான் களித்து.

உரை:

     நமது அன்னையாகிய சிவகாமியை, மணம்புரிந்து கலந்துறையும் சிவபெருமான், திருமால் அருச்சித்த கண்ணாகிய மலர்க்கு மனம் மகிழ்ந்து சக்கரப் படை தந்து, பார்வதிபுரத்தின்கண் எழுந்தருளி ஆனந்தக் கூத்தாடி மகிழ்கின்றான். எ.று.

     பூமி பொருந்து புரம் - பார்வதிபுரம் என வரும். பார் - பூமி, பொருந்துதல் - வதிதல். வேட்டல் - மணம் செய்துகொள்ளுதல். அமர்தல் எழுந்தருளுதல். நேமி - சக்கரப்படை. ஆனந்தக் கூத்திற் களித்தவனாகிய அச்சிவபெருமான், களித்து நேமி அளித்தான் என இயையும். பார்வதிபுரத்தில் சிவகாமியைக் கலந்து அமர்ந்தவன் ஆனந்தக் கூத்தில் களித்தான் என இயைத்துக் கொள்க.

     இதனால், பார்வதிபுரத்தில் ஆனந்தக் கூத்திற் களித்து மால் அர்ச்சித்த கண் மலர்க்காகச் சக்கரப்படை தந்தமை தெரிவித்தவாறாம்.

     (9)