பக்கம் எண் :

4244.

     ஒளிவளர் உயிரே உயிர்வளர் ஒளியே
          ஒளியுயிர் வளர்தரும் உணர்வே
     வெளிவளர் நிறைவே நிறைவளர் வெளியே
          வெளிநிறை வளர்தரு விளைவே
     வளிவளர் அசைவே அசைவளர் வளியே
          வளியசை வளர்தரு செயலே
     அளிவளர் அனலே அனல்வளர் அளியே
          அளியனல் வளர்சிவ பதியே.

உரை:

     ஒளி மிகும் உயிர்ப்பொருளும், உயிரிடத்து ஓங்கும் அறிவாகிய ஒளியும், ஒளியும் உயிருமாகிய பொருளிடத்தே சிறக்கும் உணர்வுருவாயவனும், வெளியும் நிலவும் நிறைவுத் தன்மையும், குறைவற்ற நிறைவின்கண் நின்றோங்கும் வெளியும், வெளியும் நிறைவும் உள்ளதன்கண் விளையும் பயனாயவனும், காற்றிடத்து ஓங்கும் அசைவும், அசைவு பெருகுவிக்கும் காற்றும், அசைவும் காற்றும் கலந்து செய்யும் செயல் வகையும், அருள்வேண்டுவிக்கும் நெருப்பும், நெருப்புத் தோற்றுவிக்கும் அருளுருவும், அருளும் அனலுமாய்த் தோற்றுவித்து மிகுவிக்குபவனுமாகிய சிவபதியே வணக்கம். எ.று.

     உயிரிடத்து நிலவும் உணர்வையும் ஒளியாக உரைப்பது சான்றோர் மரபாதலின், “ஒளி உயிர் வளர்தரும் உணர்வே” எனவும், பூதகாரியமாகிய அண்டங்கள் அனைத்தையும் குறைவறத் தனக்குள் அடக்கி நிற்பது வெளியாதலால், குறைபட்டவிடத்தே அடக்கும் பொருளே காணப்படுதலாலும், நிறையுற்றவிடத்து அடக்கும் பொருளுக்கு இடமாகும் வெளி காணப்படுதலாலும், குறைவற நிறைந்த வெளியின் கண் மேல் காட்சிக்கிடமின்றி மனவொடுக்கம் அறியப்படுதலால், “வெளி நிறை வளர்தரு விளைவே” எனவும் இசைக்கின்றார். காற்றின்கண் அசைவு இயற்கை; பொருள்களின் அசைவால் காற்றுண்மை அறியப்படுதலால், “அசை வளர் வளியே” என்றும், வளியின் அசைவால் செயல் பல உளவாதலால், “வளியசை வளர்தரு செயலே” என்றும் கூறுகிறார். இறுகிய பொருள்கள் அனல் வெம்மையில் இளகி உருகுவதால், “அளி வளர் அனலே” எனவும், இளகிய பொருள் அளி எனப்படுவது பற்றி, “அனல் வளர் அளியே” எனவும் உரைக்கின்றார். அனலாய்க் கன்மனத்தையும் உருக்கி அளியாக்குவதால் சிவனை, “அளி யனல் வளர் சிவபதியே” என்று புகழ்கின்றார்.

     இதனால், உயிரிடத்து உணர்வுமயமாகவும், வெளி நிறைவின்கண் விளையும் அமைதியாகவும், வளியசைவு விளைவிக்கும் செயலாகவும், அளி விளைவிக்கும் தீயாகவும் சிவபதி விளங்குவது கூறியவாறாம்.

     (2)