4255. அன்பே என்னர சே - திரு - அம்பலத் தாரமு தே
என்பே உள்ளுரு கக் - கலந் - தென்னு ளிருந்தவ னே
இன்பே என்னறி வே - பர - மேசிவ மேயென வே
உன்பே ரோதுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
உரை: அன்பும், அருளரசும், அம்பலத்தாடும் அமுதாயவனும், என் உடலிடத்து எலும்பும் உள்ளே உருகுமாறு கலந்து எனக்குள் இருப்பவனும், இன்பமும், என்னறிவும், பரம்பொருளும், சிவமுமாயவனே என்று உன் திருப்பெயரையே எடுத்து ஓதுகின்றேனாதலால் எனக்கு உண்மை ஞானத்தை உரைத்தருள்க. எ.று.
அன்புருவாயும் அருளுருவாயும் விளங்குதலால், “அன்பே அரசே” எனக் கூறுகின்றார். உருகாத எலும்பும் உருகச்செய்தல்பற்றி, “என்பு உள்ளுருக” என்கின்றார். உயிர்க்குயிராய் உணர்விற் கலந்துறைதலால், “என்னுள் இருந்தவனே” என இயம்புகின்றார். பரம் - பரம்பொருள். பேர் என்றவிடத்துத் தேற்றேகாரம் தொக்கது. (3)
|