பக்கம் எண் :

4260.

     தடையா வுந்தவிர்த் தே - எனைத் - தாங்கிக்கொண் டாண்டவ னே
     அடையா யன்பிலர் பால் - எனக் - கன்பொடு தந்தபெ ருங்
     கொடையாய் குற்றமெ லாங் - குணங் - கொண்ட குணக்குன்ற மே
     உடையாய் உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.

உரை:

     என் வாழ்வுக்குத் தடை செய்வன அனைத்தையும் போக்கி என்னைத் தாங்கிக்கொண்டு யான் உய்தி பெறச் செய்தவனே! அன்பில்லாதவரிடத்து நீ செல்லாய் எனினும் எனக்கு அன்புடன் வேண்டுவன தந்த பெருமானே! என் குற்றமெல்லாவற்றையும் குணமாகக்கொண்டு ஆதரிக்கும் குணக் குன்றாகியவனே! எல்லாமுடைய உத்தமனே! எனக்கு உண்மை ஞானத்தை உரைத்தருள்க எ.று.

     தடை - ஞான வாழ்வுக்கு இடையூறு செய்யும் காம வெகுளி முதலிய குற்றங்கள். காமமும் வெகுளியும் மயக்கமும் முற்றவும் தவிர்க்கப்படுவன அல்லவாதலின், அவை மீள மீள வந்து தாக்கா வண்ணம் காத்தற்கு இறைவன் திருவருள் இன்றியமையாததாகலின் அதனைச் சிறப்பித்துத் “தடை யாவும் தவிர்த்து என்னைத் தாங்கிக் கொண்ட ஆண்டவனே” என்று பாராட்டுகின்றார். அன்பிலார், சிவனை நினையாராதலின் அவரைச் சிவன் அடைவதிலன் என்பது விளங்க, “அடையா அன்பிலர்” என்கின்றார். அடையாது என்னும் வினையெச்சம் ஈறு கெட்டது. அன்பு என்பது ஞானமாதலின் அந்த ஞானிகட்கு இறைவன் தனது திருவருளைப் பெருக நல்குவது பற்றி, “பெருங் கொடையாய்” என்று போற்றுகின்றார். குற்றம் புரிவது மக்கட்கு இயல்பு என்பது பற்றி, “குற்றமெலாம் குணம் கொண்ட குணக்குன்றமே” என்று கூறுகின்றார். உயிர்களைத் தனக்கு அடிமையாகவும், அவற்றின் உடல் பொருள்களைத் தனக்கு உடைமையாகவும் கொண்டவனாதலின், இறைவனை, “உடையாய்” என்று உரைக்கின்றார்.

     (8)