4262. நந்தா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே
பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே
என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய்
உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
உரை: நந்நான்காக விரியும் சரியை முதலிய நான்கின் நிலைகளையும் கடந்து விளங்கும் ஞானசபைக்குத் தலைவனே! பொற் சபையிற் பொலிபவனே! திருவருள் பூரணமாக நிறைந்த புண்ணிய மூர்த்தியே! என்னால் உனக்கு ஆவது ஒன்றுமில்லையாயினும் எந்தையே, நான் உன்னருளால் வாழ்கின்றேன்; ஆதலால், எனக்கு உண்மை ஞானத்தை உரைத்தருள்க. எ.று.
சரியை முதலிய நந்நான்காவன: சரியையிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையிற் யோகம், சரியையிற் ஞானம்; கிரியையிற் சரியை, கிரியையிற் கிரியை, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம்; யோகத்திற் சரியை, யோகத்திற் கிரியை, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம்; ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என வரும். இப் பதினாறாலும் பெறப்படும் பதானுபவங்களைக் கடந்து நிற்பதுபற்றிச் சிவபெருமானை, நந்நாலும் கடந்தே ஒளிர் ஞான சபாபதியே” என்று நவில்கின்றார். பொன்னாருஞ்சபை - பொற்சபை; அஃதாவது பொன் வேய்ந்த சபை. அருளே உருவானவனாதலால் இறைவனை, “அருட் பூரண புண்ணியன்” என்று புகழ்கின்றார். உயிர் வாழ்க்கைக்குத் திருவருளே ஆதாரமாவது பற்றி, “உன்னால் வாழ்கின்றேன்” என்று உரைக்கின்றார். (10)
|