பக்கம் எண் :

4264.

     விண்ணார் செஞ்சுட ரே - சுடர் - மேவிய உள்ளொளி யே
     தண்ணார் வெண்மதி யே - அதில் - தங்கிய தண்ணமு தே
     கண்ணார் மெய்க்கன லே - சிவ - காமப்பெண் காதல னே
     அண்ணா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.

உரை:

     வானத்துலவும் சிவந்த ஒளியையுடைய சூரியனாகியவனே! அச்சூரிய வொளிக்குள் ஒளிரும் உள்ளொளியாகியவனே! குளிர்ச்சி நிறைந்த வெண்மையான சந்திரனாகியவனே! அச் சந்திரனிடத்துப் பொருந்திய தண்ணிய அமுதாகியவனே! கண்ணிறைந்த பொருளாகிய நெருப்பாகியவனே! சிவகாமியாகிய தெய்வப்பெண்ணின் கணவனே! தலைவனே! எனக்கு நினது அரிய அருள் ஞான வமுதத்தைத் தந்தனையாதலால் யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     செஞ்சுடர் - சூரியன். “அந்தியில் அருக்கனாவான் அரனுரு வல்லனோ” (ஆதிபுரா) எனத் திருநாவுக்கரசர் முதலிய சான்றோர் கூறுதலால், “விண்ணார் செஞ்சுடரே” என்று விளம்புகின்றார். சந்திரனும் அப்பெருமான் உரு என்பது பற்றி, “தண்ணார் வெண்மதியே” என்று சாற்றுகின்றார். சந்திரனிடத்துத் தண்ணிய அமுதம் உளது என்பது பண்டையோர் கருத்தாதலால், “அதில் தங்கிய தண்ணமுதே” என்று உரைக்கின்றார். அமுதம் உடைமை பற்றிச் சந்திரனை மதி என்பது வழக்காயிற்று. மது - மதுவை உடையவது மதி என அறிக. மெய்க்கனல் - உருவாகிய நெருப்பு. கண்ணிறைந்த காட்சியாவதால் கனல், “கண்ணார் மெய்க்கனல்” எனப்படுகிறது. சிவகாமப் பெண் - சிவகாமி எனப்படும் உமாதேவி. தில்லையில் உமா தேவிக்குச் சிவகாமி என்பது பெயர்.

     (2)