பக்கம் எண் :

4265.

     துப்பார் செஞ்சடை யாய் - அருட் - சோதிச் சுகக்கடலே
     செப்பா மேனிலைக் கே - சிறி - யேனைச் செலுத்திய வா
     எப்பா லும்புக ழும் - பொது - இன்ப நடம்புரி யும்
     அப்பா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.

உரை:

     பவளம் போற் சிவந்த சடையை யுடையவனே! திருவருட் சோதியாகிய இன்பக்கடலே! சொல்லுதற்காகாத மேனிலைக்கண் சிறியவனாகிய என்னை உய்த்தருளியவனே! எவ்விடத்தும் யாவரும் புகழ்ந்து போற்றும் அம்பலத்தின்கண் திருக்கூத்தாடும் தந்தையே! உனது திருவருள் ஞானமாகிய அரிய அமுதத்தை அளித்தாயாதலால் நான் என்ன கைம்மாறு செய்வேன். எ.று.

     திருவருள் ஞானமாகிய அருளொளி எல்லையில்லாத இன்பப் பெருக்காதலால் “அருட்சோதிச் சுகக்கடலே” என்று சொல்லுகின்றார். சிவஞானானந்தப் பெருநிலை, சொல்லின் எல்லை கடந்ததென்றற்கு, “செப்பா மேனிலை” என்று தெரிவிக்கின்றார். சிறுமை யுடையவனாயினும், சிறுமை கருதாமல் என்னை அச்சிவானந்த மேனிலைக்கண் வைத்தருளத் திருவுளம் கொண்டனை யென்பாராய், “சிறியேனைச் செலுத்தியவா” என்று போற்றுகின்றார். எப்பாலும், நிலவுலகில் எவ்விடத்தில் வாழ்பவரும் வியந்து போற்றுவது திருச்சிற்றம்பலம் என்றற்கு, “எப்பாலும் புகழும் பொது” என்று புகல்கின்றார். இன்ப நடம் - காண்பார்க்கு இன்பம் விளைவிக்கும் நடனம்.

     (3)