பக்கம் எண் :

4267.

     பொறிவே றின்றி நினை - நிதம் - போற்றும் புனிதரு ளே
     குறிவே றின்றி நின்ற - பெருஞ் - சோதிக் கொழுஞ்சுட ரே
     செறிவே தங்களெ லாம் - உரை - செய்ய நிறைந்திடும் பேர்
     அறிவே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.

உரை:

     அறிவால் வேறே எப்பொருளையும் நோக்குதலை யொழித்து உன்னையே நாடோறும் அறிவொன்றிப் போற்றுகின்ற தூய சிவஞானிகளின் திருவுள்ளத்தின்கண் வேறு குறிப்பின்றி நின்று திகழும் பெரிய சோதியையுடைய கொழுவிய சுடராகிய சிவனே! செறிந்த வேதங்கள் யாவும் துதிக்க, எங்கும் புகழ் நிறைந்து விளங்கும் பேரறிவுருவாகிய பெருமானே! நினது திருவருளாகிய ஞானவமுதத்தை எனக்குத் தந்தருளினாயாதலால் யான் நினக்கு யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     பொறி - அறிவு. கண் முதலிய பொறி புலன்களால் எய்தப்படுவதால் அறிவு பொறியெனப்படுகிறது. சிவபெருமானாகிய மெய்ப்பொருளையன்றி வேறே யாதும் நோக்காமை விளங்க, “வேறின்றி நிதம் போற்றும் புனிதர்” என்கின்றார். நிதம் - நாடோறும். புனிதர் - தூய சிவஞானிகள். குறிப்பு - மறக் கருணை நோக்கம். பொருள் நிறைந்திருக்கின்றமையால், “செறி வேதம்” என்று சிறப்பிக்கின்றார். உரை செய்தல் - புகழ்தல். நல்லறிவுடைய சான்றோர் யாவரும் எப்போதும் இடையறவின்றி ஓதுதல் விளங்க, “உரை செய்ய நிறைந்திடும் பேரறிவே” எனப் பராவுகின்றார். அறிவுருவானவனை “அறிவு” என்பது உபசார வழக்கு.

     (5)