4277. தொம்பத உருவொடு தத்பத வெளியில்
தோன்றசி பதநடம் நான்காணல் வேண்டும்
எம்பத மாகி இசைவாயோ தோழி
இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி.
உரை: தொம்பதம் - துவம் என்னும் சொல். துவம் - நீ. தற்பதம் - அது வென்னும் சொற்பொருளாகிய பிரமம். பிரமத்துக்கிடம் பரஞானாகாசமாகிய வெளி; இது தத்பத வெளி என்று குறிக்கப்படுகிறது. அசிபதம் - ஆகின்றாய் என்னும் உபதேச வுரை. அது நீயாகின்றாய் என்ற பொருளில் வரும் தத்துவம். அசி என்பது உபதேசம். அது நீயாகும்போது உளதாகும் இன்பக்களிப்பு. மிக நிகழும் ஆனந்தக்கூத்து அசி பத நடம் என்று உரைக்கப்படுகிறது. எம்பதமாக இசைதல் - எனக்குரிய நிலையாகும் பொருட்டு உதவுதல். அசைதல் - சென்றலைதல். (2)
|