4286. தத்துவத் துட்புறந் தானாம் பொதுவில்
சத்தாந் திருநடம் நான்காணல் வேண்டும்
கொத்தறு வித்தைக் குறிப்பாயோ தோழி
குறியா துலகில் வெறிப்பாயோ தோழி.
உரை: நிலம் முதல் நாதம் ஈறாக வுள்ள தத்துவம் ஒவ்வொன்றிலும் அகத்தும் புறத்தும் ஒப்பச் சிவம் நிலவுதல் பற்றி, “தத்துவத் துட்புறம் தானாம் பொது” எனத் தலைவியுரைக்கின்றாள். தத்துவங்கள் அசத்தாதலால் சிவமாகிய சத்துப் பொருள், “சத்தாம் திருநடம்” எனப் புகழப்படுகிறது. தத்துவ தாத்துவிகக் கூட்டத்தைக் “கொத்து” எனவும், அவற்றின் வேறுபாட்டைத் தெரிந்து நீங்கும் திருவருள் ஞானத்தை உறுதித் துணையாகக் கொள்வாயோ எனத் தோழியைக் கேட்பாளாய், “கொத்து அறுவித்தைக் குறிப்பாயோ” எனவும் வினாவுகின்றாள். வெறித்தல் - பயனின்றிக் கழிதல். (11)
|