பக்கம் எண் :

429.

    பேய னேனின்னு மெத்தனை நாட்செலும்
        பெருந்துயர்க் கடல்நீந்த
    மாய னேமுதல் வானவர் தமக்கருள்
        மணிமிடற் றிறையோர்க்குச்
    சேய னேயகந் தெளிந்தவர்க் கினியனே
        செல்வனே யெனைக்காக்கும்
    தாய னேயென்றன் சற்குரு நாதனே
        தணிகைமா மலையானே.

உரை:

     திருமால் முதலிய தேவர்களைக் காத்தருளும் நீலமணி போன்ற கழுத்தையுடைய இறைவனாய சிவபெருமானுக்கு மைந்தனே, தெளிந்த மனமுடைய பெரியோர்க்கு இனிமையான முருகப் பெருமானே, செல்வமுடையவனே, எளிய என்னைக் காத்தருளும் தாய் போன்றவனே, எனக்கு மெய்யான குருபரனே, தணிகை மலையில் எழுந்தருள்பவனே, பேயை ஒப்பவனாகிய எனக்கு இப்பெரிய துன்பமாகிய கடலினின்றும் நீங்குதற்கு இன்னும் எத்தனை நாட்கள் கழிய வேண்டுமோ, அறிவித்தருள்க, எ. று.

     பேயன் - பேய் போல் அலைபவன். எல்லை யின்றிப் பெருகிய வண்ண மிருத்தலின் பிறவித் துயரைப் “பெருந் துயர்” என்கின்றார். தேவர்கள் உய்யும் பொருட்டுக் கடல் விடத்தை யுண்டருளினா னாதலால், “வானவர் தமக்கருள் மணிமிடற் றிறையோ” னெனவும், சிந்தை தெளிந்தவர்க்குத் தேனும் அமுதுமாய் இனிப்பவனெனப் பெரியோரும் (ஞானசம்) கூறுவதால், “தெளிந்தவர்க் கினியன்” எனவும், தாய் போல் தலை யளிக்கும் தன்மை யுடைமை விளங்க, “எனைக் காக்கும் தாயனே” எனவும் எடுத்தோதுகின்றார். மெய்ப்பொருளை யுணர்ந்துரைக்கும் உலகியல் ஞான குருமார்களைப் போலின்றித் தானே மெய்ப்பொருளாகவும் ஆசிரியனாகவும் இருத்தலால் முருகனைச் “சற்குரு நாதனே” என்று சாற்றுகின்றார்.

     இதனால் தாயாய்ச் சற்குருவாய் விளங்கும் நீ எனக்கு இப்பெருந் துயர் நீங்க எத்தனை நாள் செல்லும் என உரைத்தருள்க என வேண்டிக் கொண்டவாறாம்.

     (10)