பக்கம் எண் :

431.

    மைய னெஞ்சினேன் மதிசிறி தில்லேன்
        மாத ரார்முலை மலையிவர்ந் துருள்வேன்
    ஐய நின்றிரு வடித்துணை மறவா
        அன்பர் தங்களை யடுத்துள மகிழேன்
    உய்ய நின்திருத் தணிகையை யடையேன்
        உடைய நாயகன் உதவிய பேறே
    எய்ய விவ்வெறும் வாழ்க்கையி லுழல்வேன்
        என்செய் வான்பிறந் தேனெளி யேனே.

உரை:

     எல்லாமுடைய நாயகனான சிவபிரான் பெற்றளித்த புதல்வனே, எளியனாகிய யான், மயக்க முற்ற நெஞ்சினை யுடையவனாய், இயற்கை யறிவு சிறிதும் இல்லாதவனாய், மகளிருடைய மலை போன்ற முலை மேல் வீழ்ந்து புரளுவதன்றி ஐயனாகிய உன்னுடைய திருவடி யிரண்டையும் மறவாது நினைக்கின்ற அன்பர்களை யடைந்து கூடி மகிழ்வதில்லை; உய்தி பெறுதற்குரிய நினது திருத்தணிகைப் பதியை வந்தடைவது மில்லை; இளைத் தொழிய வமைந்த இவ் வெறுமையான மண்ணக வாழ்வில் கிடந்து வருந்துகின்ற யான் யாது செய்தற் பொருட்டு இங்கே பிறந்தேனோ? அறியேன், எ. று.

     மயக்கம் வெகுளி காமமாகிய மூன்றும் நெஞ்சின்கட் கிடப்பன வாதலால், “மையல் நெஞ்சினேன்” என்றும், இயற்கை உயிரறிவும் அனாதி மலவிருளால் அவ்வப்போது மறைக்கப் படுவது பற்றி, “மதி சிறிது இல்லேன்” என்றும் எடுத்துரைக்கின்றார். சிறிதும் என்றவிடத்து உம்மை தொக்கது. மகளிர் தரும் இன்பக் கூட்டத்தில் ஈடுபடும் திறத்தை, “மாதரார் முலை மலை யிவர்ந்துருள்வேன்” என்கின்றார். அடித்துணை- திருவடி யிரண்டு. திருவடி மறவாத அன்பர்கள் தம்மைச் சார்ந்தாரையும் திருவடி ஞான முடையவராக்கி அத்திருவடி மறவாப் பெரு ஞானகளாக்குவர் என்பது கருத்து. உய்தி நல்கும் மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற மூன்றனுள் தணிகை தலமாதலால், “உய்ய நின் திருத் தணிகையை யடையேன்” என வருந்துகின்றார். பிறப்புக்களால் உயிர்கள் இளைத்தல் உண்மை பற்றி, “எய்ய” எனவும், இவ்வாறு பயனின்றி வாழும் வாழ்க்கை வெறுமையாய்க் கழிவது விளங்க, “இவ்வெறும் வாழ்க்கையில் உழல்வேன்” எனவும், பயனில செய்யா யாதலின், என் பிறப்பில் ஒரு கருத்திருக்க வேண்டும்; எளியனாதலால், எனக்கு அது தெரியவில்லை என்பாராய், “ஏன் பிறந்தேன் எளியேன்” எனவும் மொழிகின்றார்.

      இதனால், மையல் நெஞ்சமும் சிறுமதியும் அன்பர் கூட்டத்தை அடையாமையும் பிறவும் உடைய யான் ஏன் பிறந்தேன் என விளம்பியவாறாம்.

     (2)