70. அம்பலவாணர் வருகை
சிந்து
அஃதாவது, தில்லையம்பலக் கூத்தப் பெருமானை வருக, என வரவேற்கும் விருப்ப மிகுதியால் பாடுவதாம். இதன்கண் வரும் பாட்டுக்களைக் கண்ணிகள் என்பதுமுண்டு.
பல்லவி 4353. வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
வல்லி மணாளரே வாரீர்
மணிமன்ற வாணரே வாரீர்.
உரை: வாரீர், வருக என்னும் பொருளில் வரும் முன்னிலைப் பன்மையுயர் சொற்கிளவி. சிதம்பர வல்லி - சிதம்பரத்திற் கோயிற் கொண்டருளும் வல்லிக்கொடி போன்ற உமாதேவி. சிவகாமவல்லி என்பது தில்லைப்பதிக்கண் வழங்கும் சிறப்புப் பெயர். மணாளர் - கணவர். மன்றவாணர் - அம்பலத்தில் எழுந்தருளுபவர். மணிமன்றம் - அழகிய அம்பலம்; மணிகள் இழைத்த அம்பலம் எனவும் பொருள் கூறுவதுண்டு. (1)
|