44. மாணித்த ஞான மருந்தே யென் கண்ணினுள்
மாமணியே
ஆணிப் பொன்னே யென தாருயிரே தணி
காசலனே
தாணிற் கிலேனினைத் தாழாத வஞ்சர்
தமதிடம் போய்ப்
பேணித் திரிந்தன னந்தோ வென் செய்வனிப்
பேதையனே.
உரை: மாண்புடைய நித்தப் பொருளான ஞானமாகிய மருந்தே, என் கண்ணினுள் திகழும் மணி போல்பவனே, ஆணிப் பொன்னே, என்னுடைய அரிய உயிராயவனே, தணிகை மலையை யுடையவனே, உன் திருவடி நெறியில் நில்லாமல் உன் திருவடியை வழிபடாத வஞ்சகர் பால் சென்று அவரது உறவை விரும்பி யலைந்தேன்; ஐயோ, பேதையாகிய யான் என்ன செய்வேன், எ. று.
மாண் ஞானம், நித்த ஞானம் என இயையும். நோய் நீக்கத்துக்கு நன் ஞானத்தினும் மருந்து பிறிதில்லையாதலால், “ஞான மருந்தே” என்று இயம்புகின்றார். ஆணிப் பொன்-மாற்றுயர்ந்த பொன். உயிர்க்கு உயிராய் இலகுவதுணர்ந் துரைத்தலால் “ஆருயிரே” என்று கூறுகின்றார். திருவடிப் பேற்றுக்குரிய நெறியின்கண் நிற்கின்றிலேன் என்பார், “தாள் நிற்கிலேன்” என மொழிகின்றார். நிற்றற்குரிய நெறியில் நில்லாமைக்குக் காரணம் கூறுவார், வஞ்சகர் கூட்டத்திற் கலந்திருந்தேன் என்பாராய், “நினைத் தாழாத வஞ்சர் தமதிடம் போய்ப் பேணித் திரிந்தனன்” என்றும், அத்தவற்றை நினைந்து நெஞ்சம் வருந்துதல் தோன்ற, “அந்தோ என் செய்வன்” என்றும், செய்வதறியாப் பேதைமையை எண்ணி, “இப்பேதையனே” என்றும் கூறுகின்றார்.
இதனால், முருகப் பெருமான் திருவடி ஞானப் பேற்றுக்குரிய நெறி நில்லாமையும் அதற்குற்ற காரணமும் தெரிவித்தவாறாம். (44)
|