பக்கம் எண் :

41. பவனிச்செருக்கு

        அஃதாவது உலாக் காட்சியிற் பிறந்த மயக்கம் பற்றி யுரைப்பதாம். முருகப் பெருமான் தனது மயில் ஊர்தி மேல் நின்ற கோலத்தில் வீதியிற் போந்து மக்கட்குக் காட்சி வழங்குகின்றானாக, அதனைக் கண்டு மகிழும் கூட்டத்தில் இளமை கனிந்த மகளிர் பலர் அவனைக் கண்களாற் கண்டு மகிழ்கின்றார்கள். சிலர் அவன்பாற் கருத்தைச் செலுத்தி, மனம் அருட் காம மயக்க முற்றுத் தத்தமக் கேற்றன பேசுகின்றார்கள். நலம் இழந்தேன் என்பவரும், கைவளையும் இடையுடையும் முறையே இழந்தேன் நெகிழ்ந்தேன் என்பவரும், என் நிலை கண்டு அன்னை வெகுண்டாள் என்பவரும், அலர் கூறுகின்றார். என்பவருமாகப் பலர் மயங்கிப் பேசுவதை இப்பத்துப் பாட்டுக்களிற் காணலாம்.

கலி விருத்தம்

440.

    பூவுண்டவெள் விடையேறிய புனிதன்தரு மகனார்
    பாவுண்டதோ ரமுதன்னவர் பசுமாமயில் மேல்வந்
    தாவுண்டன ரெனதின்னலம் அறியாரென விருந்தால்
    நாவுண்டவர் திருமுன்பிது நலமன்றுமக் கெனவே.

உரை:

     தோழி, பூவுலகை யுண்டுமிழ்ந்த திருமாலாகிய வெண்மையான எருதேறுகின்ற தூயவரான சிவபெருமானுக்கு மகனும், பரந்து வரும் அமுதம் போன்றவருமான முருகப் பெருமான் பசுமை நிறம் கொண்ட பெரிய மயில் மேல் இவர்ந்து வந்து எனது இனிய நலத்தைக் கவர்ந்தகன்றாராக, இப்போது ஒன்றும் அதனை யறியாதார் போல இருப்பாராயின், அவர் திருமுன்பு சென்று இச்செய்கை நுமக்கு நன்றாகாது என உரைப்பதற்கு நமக்கு நாவொன்று உண்டென அவர்பாற் சென்று அறிவிப்பாயாக, எ. று.

     பூவுலகை யுண்டுமிழ்ந்தார் திருமால் என்ற வரலாற்றையும், அத் திருமாலே ஒருகாற் சிவபெருமானுக்கு எருதாய் நின்று தாங்கினார் என்ற வரலாற்றையும் நினைவிற் கொண்டு சிவனைப் “பூவுண்ட வெள்விடை யேறிய புனிதன்” என்றும், முருகப் பெருமான் மயிலேறித் திருவீதியில் உலா வருவது இனிய அமுதம் பலரும் கண்டு பருகி இன்புறுமாறு பரந்து வருவதாகவும் கூறலுற்ற ஆன்மாவாகிய நாயகி, “பாவுண்டதோர் அமுதன்னவர் பசுமாமயில் மேல்வந்து” என்றும் தன் தோழிக்குக் கூறுகின்றாள். மயில் மேல் உலா வந்த பெருமானைக் கண்ட நங்கை அவன்பாற் கருத்தையிழந்து நிறம் வேறுபட்டுப் பசப்புற்றாள்; அவ்வேறுபாடு முருகன் தன் நலத்தை கவர்ந்து கொண்டதனாலாயிற் றென்பாளாய், “ஆ, எனது இன்னலம் உண்டனர்” எனவும், இப்போது ஒன்றும் அறியாதவர் போல என்பால் வாரா திருக்கின்றார். என்பாளாய், “அறியார் என இருந்தால்” எனவும், நலமிழந்த நான் வாளா இராது அவர் திருமுன்பு சென்று இது உமக்கு நன்றன்று என்று சொல்லப் போகிறேன்; சொல்லுதற்கு எனக்கும் நாவன்மை உண்டு என்பாளாய், “அவர் திருமுன்பு இது நலமன்று உமக்கு என நாவுண்டு” எனவும் தன் உயிர்த் தோழியிடம் பேசுகின்றாள். அகனைந்திணைப் பெண் போலாது இவள் பெருந்திணைப் பெண் மகளாதலால் இவ்வாறு பேசுகின்றாள்.

     இதனால் முருகன்பால் உண்டாய காதலன்பாற் கருத்திழந்து மேனி வேறுபட்ட நங்கை ஆற்றாமை மீதூர்ந்து தோழிக் குரைத்தவாறாம்.

     (1)