443. ஒன்றோடிரண் டெனும்கண்ணின ருதவும்திரு மகனார்
என்றோடிக லெழிலார் மயிலேறியங் குற்றார்
நன்றோடினன் மகிழ்கூர்ந்தவர் நகைமாமுகங் கண்டேன்
கன்றோடின பசுவாடின கலையூடின வன்றே.
உரை: தோழி, மூன்று கண்களையுடைய சிவபெருமான் அளித்த திருமகனார், சூரிய வொளியோடு மிக்கு மாறுபடும் அழகு படைத்த மயில் மேல் ஏறி வந்து அவ்விடத்தே நின்றாராகக் காணும் ஆசை பெரிதாயினமையின் நான் ஓடினேன்; மகிழ்ச்சி மிகுந்து அவருடைய சிரித்த முகத்தைப் பார்த்தேன்; அது கண்டு பசுவின் இளங்கன்றுகள் ஓடின; பசுக்கள் ஓட மாட்டாது வாட்ட முற்றன; மான்கள் தம்மிற் பிணங்கியோடின, எ. று.
நெற்றியில் ஒன்றும் நேரில் இரண்டு மெனக் கண் மூன்றுடைமை பற்றி, “ஒன்றோடு இரண்டெனும் கண்ணினர்” என வுரைக்கின்றார். என்று - சூரிய வொளி. சூரியன் ஒளிக்கதிரில் பல்வகை வண்ணங்கள் காணப்படுவது போல மயிலிடத்தும் பல்வகை வண்ணங்கள் தோன்றுவதனால், “என்றோடு இகல் எழிலார் மயில்” எனக் கூறுகின்றார். நன்று - பெரிது மிகுதி குறிப்பது. ஆசை பெரிதுற்று ஓடினன் என்பாள், “நன்றோடினன்” என்றும், அதனால் நன்றே விளைந்த தென்றற்கு, “அவர் நகைமா முகம் கண்டேன்” என்றும், அந்நகையும் மகிழ்ச்சி மிகுதி குறித்தது என்றும் இயம்புகின்றாள். இளமை நலம் வியந்து கன்றுகள் ஓடின எனவும், அன்பு மிகுதியால் பசுக்கள் பால் சுரந்து மடி கனத்தமையின் ஓட மாட்டாமையால் வாடின எனவும், பிணை மான்கள் முருகன் பின் செல்லு மென்று அஞ்சி ஒன்றினொன்று முந்திச் சேறற்கண் பிணங்கின எனவும் தோழி யொடு பேசுகின்றாள்.
இதனால் முருகன் அங்குற்றமை கண்டு தான் ஓடியது போல கன்றும் பசுவும் கலையும் பிணையும் ஓடியது உரைத்து உவந்தவாறாம். (4)
|