பக்கம் எண் :

கண

கண்ணிகள்

4459.

     தன்மைபிறர்க் கறிவரியீர் ஆடவா ரீர்
          தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
     வன்மைமனத் தவர்க்கரியீர் ஆடவா ரீர்
          வஞ்சமிலா நெஞ்சகத்தீர் ஆடவா ரீர்
     தொன்மைமறை முடியமர்ந்தீர் ஆடவா ரீர்
          துரியபதங் கடந்தவரே ஆடவா ரீர்
     இன்மைதவிர்த் தெனைமணந்தீர் ஆடவா ரீர்
          என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்

உரை:

     மெய்யன்பரல்லாதவரால் சிவனது தனிமுதலாம் தன்மையறியப்படுவ தில்லையாதலால், “தன்மை பிறர்க்கு அறிவரியீர்” என்று கூறுகின்றாள். “தன்மை பிறரால் அறியாத தலைவர்” (சதகம்) என மணிவாசகர் உரைப்பது காண்க. பெரும்பதி - சிவன் எழுந்தருளும் இடம்; இதனைச் “சிவமாநகர்” என்று திருவாசகம் குறிக்கின்றது. பெரும்பதியீர் என்பதற்குப் பெரிய பதியாகிய தலைவரே என்று உரைத்தலும் உண்டு. வன்மை மனத்தவர் - இரக்கமில்லாத வன்கண்மை பொருந்திய மணம் உடையவர். வேதங்களை அனாதி என்பதுபற்றி, “தொன்மை மறை” என்று சொல்லுகின்றார். மறைமுடி - வேதாந்தம். துரிய பதம் கடந்தவர் - துரியாதீதத்தில் எழுந்தருள்பவர். இன்மை - ஈண்டுத் துணையில்லாமை.

     (1)