4460. திருவாளர் போற்ற என்னோ டாடவா ரீர்
திருவ னையார் வாழ்த்தஇங்கே ஆடவா ரீர்
பெருவாய்மைப் பெருந்தகையீர் ஆடவா ரீர்
பேராசை பொங்குகின்றேன் ஆடவா ரீர்
உருவாகி ஓங்குகின்றீர் ஆடவா ரீர்
உத்தமரே இதுதருணம் ஆடவா ரீர்
இருவாணர் ஏத்தநின்றீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
உரை: திருவாளர் - சிவஞானமாகிய செல்வத்தையுடைய ஞானவான்கள். திருவனையார் - திருமகளைப் போன்ற மகளிர். பெருவாய்மைப் பெருந்தகை - பெருமை பொருந்திய வாய்மை யறத்தால் பெருந்தகவுடையவர். பேராசை - மிக்க பெருங்காதல். இருவாணர் - மனைவாழ்வும் துறவு வாழ்வும் உடையவர்; சங்கம் பதுமம் என்ற இரு நிதியும் நிறைந்து வாழ்பவர் எனினும் பொருந்தும். வாழ்நர் என்பது வாணர் என மருவிற்று. (2)
|