447. தண்டேன்பொழி யிதழிப்பொலி சடையார்தரு மகனார்
பண்டேன்புரி தொடையார்தமைப் பசுமாமயின் மீதில்
கண்டேன்வளை காணேன்கலை காணேன்மிகு காமம்
கொண்டேன்துயில் விண்டேனொன்றும் கூறேன்வரு மாறே.
உரை: தோழி, குளிர்ந்த தேனைச் சொரியும் கொன்றைப் பூவாற் பொலிகின்ற சடையையுடைய சிவன் அணிந்த புதல்வனாரும், வண்டினம் இசை பாடும் மாலையணிந்தவருமான முருகப் பெருமானார் பசுமை நிறமான மயில் மீது உலா வரக் கண்டேனாக, கையில் வளை கழன்றோடியதும் இடையில் உடை பெயர்ந்ததும் காணேனாயினேன்; அன்றியும் அவர்பால் மிக்க காம முற்று உறக்கமும் நீங்கினேன்; என்பால் வருமாறு ஒருசொல்லும் கூறா தொழிந்தேன்; என்ன செய்வேன்? எ. று.
பூக்களில் ஊறும் தேன் தட்பமுடைய தாதலால் “தண்தேன்” எனக் கூறுகின்றார். இதழி - கொன்றை. கொன்றையும் வில்லமும் சிவனுக்குச் சிறந்தவை யென்பது பற்றி, இங்கே இதழியைச் சிறப்பித் தோதுகின்றார். பண்தேன் புரிதொடை, தேன் பண் புரி தொடை யென்று இயையும்; தேன் - தேனுண்ணும் வண்டு. தொடை - மாலை. மாலையிற் பூக்கள் நிரல் படத் தொடுக்கப் படுதலால், தொடை யென்பது மாலைக்கு ஒரு பெயராயிற்று; இது தொடையல் எனவும் வழங்கும். மயில் மீது இவர்ந்து உலா வரக் கண்டவள் முருகனது திருவருட் காட்சியில் ஒன்றி உணர்விழந்து உடல் மெலிவுற்றமை தோன்ற, “மயில் மீதில் கண்டேன் வளை காணேன் கலை காணேன்” எனவும், உலகியல் மக்கள்பால் உண்டாகும் காமம் போலாது இறைவன் திருவருளின்பத்தை நோக்கிய காமமாய் மிக்குற்றமை வெளிப்பட, “மிகுகாமம் கொண்டேன்” எனவும் இயம்புகின்றாள். காமக்காத லுற்றார்க்குக் கண் துயில் மறுத்தல் இயல்பெனின், திருவருட் காதற் காமத்தார்க்கு எப்போதும் உறக்க மெய்தாதாகலின், “துயில் விண்டேன்” என்றும், அவன் அருளாலன்றி அவனது அருட் கூட்டம் எய்தாமை யெண்ணி, “வருமாறு ஒன்றும் கூறேன்” என்றும் இசைக்கின்றாள். விள்ளல்- நீங்குதல்.
இதனால், திருவுலாக் காட்சியால் திருவருட் காதற் காம முற்ற திறத்தை எடுத்தோதியவாறாம். (8)
|