பக்கம் எண் :

4473.

     பொதுவில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
          பொற்புடைய புண்ணியரே அணையவா ரீர்
     மதுவில்இனிக் கின்றவரே அணையவா ரீர்
          மன்னியஎன் மன்னவரே அணையவா ரீர்
     விதுவின்அமு தானவரே அணையவா ரீர்
          மெய்யுரைத்த வித்தகரே அணையவா ரீர்
     இதுதருணம் இறையவரே அணையவா ரீர்
          என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்

உரை:

     பொது - அம்பலம். பொற்பு - அழகு. மது - தேன். “தேனினும் இனியர்” என்பது பற்றி, “மதுவில் இனிக்கின்றவரே” என மொழிகின்றாள். மன்னிய - நிலைபெற்ற. விது - சந்திரன். சந்திரனிடத்து அமுதுண் டென்பது பற்றி, “விதுவின் அமுதானவரே” என விளம்புகிறாள். மதுவுடைமை கொண்டே சந்திரனை மதி என வழங்குகின்றார். வித்தகர் - ஞான வுருவினர்.

     (3)