பக்கம் எண் :

4485.

     இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
          இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
     ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்
          உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல்ஆணை என்றுசொன்னால் வருவார்

உரை:

     இடுக்கு - குறுகிய இடம். இருத்தற் கமைந்த மூலட்டானம் நாற்புறமும் சுவர் நின்று இடுக்கண் செய்கிறது. இங்கே பரந்த இடம் உளது என்பாளாய், “இடுக்கில்லாமல் இருக்க இடமுண்டு” எனவும், நடம் புரிதற்குத் தில்லையாகிய இங்கே ஒரு அம்பலமேயுண்டு; வடலூரில் எண்கோண வடிவில் அமைந்த பேரம்பலம் உளது என்பாளாய், “நடம் செய்ய இங்கே அம்பலம் அங்கே எட்டு அம்பலம் உண்டு” எனவும் தலைவி இசைக்கின்றாள். ஒடுக்கு - ஒடுங்கிய இடம். என்னால் ஆன்ம சிற்சத்தியின் எல்லையை இனிதறிந்து கொள்ளலாம் என்றற்கு, “உளவு கண்டு கொள்வீர் என்னால்” என இயம்புகின்றாள்.

     (4)