4504. குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
குதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது
விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது. இது நல்ல
உரை: வேதாகமக் கூச்சல், வேதமே பிரமாணமாம் என வேதாந்திகளும் ஆகமமே பிரமாணமாம் எனச் சித்தாந்திகளும் தம்மிற் கலாய்த்துக் கொண்ட காலமும் உண்டாகலின், “வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று” எனவுரைக்கின்றாள். குதித்த மனம் - துள்ளித்திரிந்த மனம். மனமுருட்டுக் குரங்கு - மனமாகிய முரணியொழுகிய குரங்கு; முருட்டுக் குரங்கு முரட்டுக் குரங்கு என வழங்குவதுண்டு. அடக்க அடங்காமை புலப்பட, “முருட்டுக் குரங்கு” என மொழிகின்றாள். வெறித்த வினை - பயனில்லாத செயல்கள். வெவ்வினை - தீது பயக்கும் தீவினைகள். குலைந்தது - பன்மை யொருமை மயக்கம். இனிவருமிடங்களிலும் இதுவே கூறிக்கொள்க. விந்தை - வி்பரீதம். கொடுமாயைச் சந்தை - உலகியல் மயக்கமாகிய பேரிரைச்சல். நன்னெறிக்கண் செல்லாமையின், “கொடுமாயை” எனக் குறிக்கின்றாள். நண்பரைப் பகைவராக்கலும், அன்பர்களைத் துரோகிகளாக்குதலும், நற்பண்பாளரைத் தீயவராக்குதலும் உலகியல் மாயையின் விளைவுகளாம். (4)
|