பக்கம் எண் :

461.

    புதுவா னவர்தம் இடர்முழுதும்
        போக்கும் கதிர்வேற் புண்ணியனே
    மிகுவான் முதலாம் பூதமெலாம்
        விதித்தே நடத்தும் விளைவனைத்தும்
    தகுவான் பொருளாம் உனதருளே
        என்றா லடியேன் றனையிங்கே
    நகுவான் வருவித் திருணெறிக்கே
        நடத்த லழகோ நவிலாயே.

உரை:

     புகலிடம் நீயே என வரும் தேவர்களின் துன்ப முழுதும் போக்கியருளும் ஒளி பொருந்திய வேற்படையை ஏந்தும் புண்ணியப் பொருளான முருகப் பெருமானே, மிக்குள்ள விண் முதலிய பூதங்களெல்லாவற்றையும் படைத்து இயக்கி அவற்றின் விளைபயன்களை உறுவிப்ப தெல்லாம் தகுதியாற் பெருமை யுற்ற உனது திருவருளே யெனின், அடியவனாகிய என்னை அருளாளர் கண்டு நகைக்குமாறு இவ்வுலகிற் பிறப்பித்து இருணெறியிலேயே நடக்கச் செய்வது நினது அருட்கு அழகாகுமா? உரைத்தருள்க, எ. று.

     இடுக்கண் வந்த போது புகலாகிற முதல்வன் நீயே யென அறிந்து வரும் தேவர்களின் துயரனைத்தையும் நீ போக்கி யருளுவதைப் புராணங்கள் ஓதுவது நாடறிந்த செய்தியாதலால், பொதுவகையில், “புகுவானவர்தம் இடர் முழுதும் போக்கும் கதிர்வேற் புண்ணியனே” என்று போற்றுகின்றார். புகுவானவர் என்பதனால் அபயம் என வானோர் வந்தடைவது பெற்றாம், புண்ணியங்கட் கெல்லாம் பொருளாயவனாதல் பற்றிப் “புண்ணியனே” என்று புகல்கின்றார். ஒடுங்குங் கால் ஏனைப் பூதங்களாகிய நிலம், நீர் தீ, காற்று ஆகிய நான்கும் தன்கண் ஒடுங்கத் தான் அவற்றின் மிக்கிருத்தலால், “மிகுவான் முதலாம் பூதம்” என்கின்றார். “இருநிலனது புனலிடை மடி தர எரியது புக எரியது மிகு பெருவளியினில் அவிதா வளிகெட வியனிடை முழுவது கெட, இருவர்களுடல் பொறையொடு திரி எழிலுருவுடையவன்” (மறைக்காடு) என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. விதித்தல் - ஈண்டுப் படைத்தல். பூதங்களின் குணங்கட் கேற்பச் செயல்கள் நடைபெறச் செய்வது தோன்ற, “நடத்தும்” எனவும், செயற் பயன் தானே விளையாதாகலின், விளைவிப்பதும் திருவருளே என்றற்கு விளைவனைத்தும், “உனதருளே” எனவும் இயம்புகின்றார். “அருளே யுலகெல்லாம் ஆள்விப்பது” (அற்பு) எனக் காரைக்காலம்மையும் கூறுவது காண்க. அருளிற் பெரியது வேறில்லை எனச் சான்றோர் உரைப்பது பற்றித் “தகுவான் பொருளாம் அருள்” எனச் சிறப்பிக்கின்றார். உனது திருவருளாலே எல்லாம் நடப்பதாயின் யான் இவ்வுலகிற் பிறந்து நின் திருவருள் நெறியிலே நடவாமல் மருள் நெறியாகிய உலகியலாகிய இருள் நெறியில் நடந்து இடர்ப்படுவது எற்றுக்கு என வினவுவார், “அடியேன் தனை இங்கே புகுவான் வருவித்து இருள் நெறிக்கே நடத்தல் அழகோ” என்று முறையிடுகின்றார். மலத்தாற் பிணிப்புண்டு கண்ணிலாக் குழவி போற் செயலுற்றுக் கிடந்த உயிர்க்கு அப்பிணிப்பு நீங்குதற் பொருட்டு இப்பிறப்பளித்தது திருவருளென்றும், உடம்புலகுகளோடு கூட்டி அறிவுக் கண்ணைச் சிறிது திறப்பித்ததும் திருவருளென்றும், தனது அறிவை விரிவு செய்து கொள்ளாமல் உணர்வுருவாகிய உயிர் இருள் நெறியிற் சேறலாயிற் றென்றும், சைவநூல்கள் விரிவாக விளக்கிக் கூறுதலால், அவற்றை அங்கே கண்டு கொள்ளுமாறு விடுப்பாராய் வள்ளற் பெருமான் வினாவோடு நின்று விடுகின்றார்.

     இதனால், திருவருள் உலகைப் படைத்தளித்துப் பயன் விளைப்பதெனின், உயிர்களை உலகிற் பிறந்திறந்து துன்புறச் செய்வானேன் என்னும் வினாவை யெழுப்பி உலகவர் சிந்தனையைத் தூண்டியவாறாம்.

     (2)