பக்கம் எண் :

ஆகம முடிமேல் ஆரண முடிமேல்

ஆகநின் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி           6

உரை : ஆகமங்களின் முடிபுக்கும் வேதங்களின் முடிபுக்கும் மேம்பட்ட பரம்பொருளாக நிலையுற நின்று ஓங்குவது பரசிவமாகிய அருட்பெருஞ்சோதி. எ.று.

பரம்பொருளின் உண்மையுணர்ந்துரைக்கும் பழமையான நூல்களாதலின், வேதம் ஆகமம் என்ற இரண்டையும் விதந்து கூறுகின்றார். மேலும் அவைகள் தோன்றிப் பல்லாயிரமாண்டுகளாயினும், அவற்றின் பொருணலம் ஆய்ந்தோர் பண்டும் இன்றும் எண்ணிறந்தோராவர்; ஆயினும் அவை யுணர்ந்துரைக்கும் முடிபுகட்கு அதீதமாகும் பரம்பொருளின் தன்மை நிலை வேறுபடாது நின்று விளங்குதல் புலப்பட, “நின்று ஓங்கிய அருட்பெருஞ்சோதி” என வள்ளலார் எடுத்துரைக்கின்றார். “ஆகமமாகி நின்றண்ணிப்பான்” எனவும், “வேதங்கள் ஐயா என வோங்கி யாழ்ந்தகன்ற நுண்ணியன்” ( சிவபுரா ) எனவும் மணிவாசகர் உரைப்பது காண்க. முடி - ஈண்டு முடிபு குறித்து நின்றது.

இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்

அகமறப் பொருந்திய அருட்பெருஞ் ஜோதி          8

உரை : இவ்வுலகத்தில் நிலைபெற்றுள்ள பொருளாயும் மேலுலகங்களில் நிலையாகவுள்ள பொருளாயும் குறைவறப் பரமாய்ப் பொருந்தியது மெய்ப்பொருளாகிய அருட்பெருஞ்சோதி. எ.று.

இகம் - இவ்வுலகம். பரம் - மேலுலகம். இம்மை இவ்வுலகத்தில் திரிபு சிறிதுமின்றி நிலைத்துள்ள பொருள்களில் நிலையாக இருப்பது விளங்க, “இகநிலைப் பொருளாய்” என்றும், மேலுலகங்கள் பலவற்றிலும் உள்ள மெய்ப்பொருள்கள் அனைத்தினும் நிலையாய பொருளாதலால், “பரநிலைப் பொருளாய்” என்றும் இயம்புகின்றார். அகம் - குறைவு. நினைவு சொற்செயல்களின் குறைபாட்டால் உளதாகும் பாவமும் அகம் எனப்படும். பாவத்துக்கேதுவாகிய குறைவு சிறிதுமின்றி நிறைவுடன் கலந்திருக்குமாறு புலப்பட, “அகமறப் பொருந்திய அருட்பெருஞ்சோதி” என அறிவிக்கின்றார்.

ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்

ஆனலின் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி          10

உரை : இகம் பரம் என்ற இரண்டின் கண்ணும் உள்ள, குற்றமில்லாத பொருள்கள் யாவற்றிற்கும் மேலாகிய பரம்பொருளாய் அமையாது உயர்ந்த அருட்பெருஞ்சோதி. எ.று.

ஈனம் - குற்றம். தாழ்வுடையனவாக மதிக்கப்படாமையால், “ஈனமில் இகபரம்” எனவுரைக்கின்றார். இக வாழ்வும் பர வாழ்வும் உயிர்கள் வாழ்ந்து உய்தி பெறுதற்காக அமைந்தனவாதலால், “ஈனமில் இகபரம்” என்று சிறப்பிக்கின்றார். ஆனல் - அமைதல். இகபரப் பொருள்களாயும், அப்பொருள்களுள் ஒன்றாய் அமையாமல், அவையெல்லாவற்றிற்கும் மேலாய் உயர்ந்தோங்குவது விளங்க, “மேற்பொருளாய் ஆனலின்றி ஓங்கிய அருட்பெருஞ்சோதி” என அறிவிக்கின்றார். ஆனலின்றி - ஆனாது. மேலாவதோடு நில்லாது இகபரம் இரண்டிற்கும் அப்பாலாய் அப்பாலுக் கப்பாலாய் உயர்ந்து செல்கின்றமை விளங்க, “ஆனலின் றோங்கிய அருட்பெருஞ்சோதி” என்று கூறுகின்றார். இன்றி என்பது இன்று என வந்தது. “விண்ணின்றிப் பொய்ப்பின்” எனற்பாலது “விண்ணின்று பொய்ப்பின்” ( குறள் ) என வந்தாற்போல என அறிக.

உரைமனம் கடந்த ஒருபெரு வெளிமேல்

அரைசுசெய் தோங்கும் அருட்பெருஞ் ஜோதி                                        12

உரை : சொற்கள் செல்லும் எல்லையையும் மன நினைவு செல்லும் எல்லையையும் கடந்த, நிலையாகிய ஒரு பெரிய வெளியின்கண் இருந்து, அருளரசு புரிந்து ஓங்குவதாகிய அருட்பெருஞ்சோதி. எ.று.

வாக்கு மனங்கட்கு எட்டாத நிலையை, “உரை மனம் கடந்த ஒரு பெருவெளி” எனவுரைக்கின்றார். “மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே” ( சிவபுரா ) என்பது திருவாசகம். மாற்றம் - சொல். மனநினைவுக் கெட்டுவன அனைத்தும் சொல்லாற் சொல்லுதற்கு இயலாதொழிதலால், “உரை மனம் கடந்த ஒரு பெருவெளி” என்று கூறுகின்றார். கரும்பும் அதன் சாறும் சொல்லாலும் மனத்தாலும் சொல்லியும் எண்ணியும் உணரப்படும்; ஆயினும் சாற்றின் இனிமை மனத்தால் உணரப்படுவதுபோலச் சொல்லாற் சொல்லப்படும் இயல்பிற்றன்று. மனத்தாலும் நினையவொண்ணாதது “உரை மனம் கடந்த ஒரு பெருவெளி” எனப்படுகிறது. இன்ன தன்மைத்தென எண்ணியறியாத நிலையை “வெளி” என விளம்புகின்றார். இவ்வெளியின் பெருமையைப் புலப்படுத்தற்குப் “பெருவெளி” என்கின்றார். இப்பெரு வெளியின்கண் இருந்து மனத்தையும் சொல்லையும் இயக்கியருளுவது பற்றி, “பெருவெளி மேல் அரைசு செய்தோங்கும்” எனவும், பெருவெளியின் கண்ணே இருந்தொழியாமல் அதற்கு மேலும் உள்ள பெருவெளிகளில் உயர்ந்தோங்கும் ஒட்பம் தோன்ற, “பெருவெளி மேல் ஓங்கும் அருட்பெருஞ்சோதி” எனவும் இயம்புகின்றார்.

ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்

ஆக்கமும் அருளிய அருட்பெருஞ் ஜோதி                                        14

உரை : மனவெழுச்சியும் உண்மை யுணர்வும் மேனியொளி பொருந்திய உடம்பும் செல்வமும் நல்கியருளிய அருட்பெருஞ்சோதி. எ.று.

நல்ல நினைவுகளும் சொற்களும் செயல்களும் உளவாதற்கு மனத்தின்கண் எழுச்சி வேண்டப்படுதலின், “ஊக்கமும்”, இன்ப வாழ்வுக்கு நல்லதுணரும் உணர்வும் இன்றியமையாமையின் “உணர்ச்சியும்”, நோயின்மையும் கட்டுடைமையும் பொருந்திய உடம்பின்கண் அழகொளி சிறந்து விளங்குதலின், “ஒளிதரும் ஆக்கையும்” எடுத்தோதுகின்றார். ஊக்கம் முதலிய மூன்றும் வளமுற நிலவுதற்குச் செல்வம் வேண்டப்படுதலால் ஆக்கத்தை விதந்துரைத்து, இவைகள் திருவருளால் உண்டாவன என்றற்கு, “அருளிய அருட்பெருஞ்சோதி” எனக் கூறுகின்றார்.

எல்லையில் பிறப்பெனும் எழுகடல் கடத்திஎன்

அல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி                                        16

உரை : எல்லையில்லாத பிறவிகள் எனப் பேசப்படும் எழுவகைக் கடல்களையும் நீந்தச் செய்து, என் துன்பத்தைப் போக்கிய அருட்பெருஞ்சோதி. எ.று.

காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலால் எல்லையில்லாதது எனச் சான்றோர் உரைப்பது பற்றி, “எல்லையில் பிறப்பு எனும் கடல்” எனவும், ஊர்வன, நீர் வாழ்வன, பறப்பன, நாற்கால் உடையன, தாவரம், மக்கள், தேவர் என எழுவகைப்படுவதால் “எழு கடல்” எனவும் இயம்புகின்றார். பெருமை புலப்படுத்தற்குப் பிறப்பு ஒவ்வொன்றையும் கடல் என்கின்றார். எழு பிறப்பாலும் உயிர்கள் மலமாசு நீங்கி வீடுபேற்றுக்குரியவாதலின், “எழுகடல் கடத்தி” என்றும், பிறவிதோறும் மலமாசுகள் எய்துவிக்கும் துன்பம் ஒழிதல் பற்றி, “அல்லலை நீக்கிய அருட்பெருஞ்சோதி” என்றும் கூறுகின்றார். அல்லல் - பிறவித் துன்பம்.

ஏறா நிலைமிசை ஏற்றிஎன் தனக்கே

ஆறாறு காட்டிய அருட்பெருஞ் ஜோதி                                        18

உரை : ஏற மாட்டாத தத்துவ நிலைகளில் மேன்மேல் ஏறச் செய்து, எனக்கு அத்தத்துவங்கள் முப்பத்தாறையும் காண்பித்தருளிய அருட் பெருஞ் சோதி. எ.று.

தத்துவாதீதமாகிய இன்ப நிலையை ஏறி யடைதற்குத் தத்துவங்கள் படிகள் போல் இலங்குவது பற்றியும், அவற்றைத் திருவருளால் ஏறியடையும் நெறி விளங்கவும் “ஏறா நிலைமிசை யேற்றி” என்று கூறுகின்றார். “பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி” ( கண்ணப் ) எனச் சேக்கிழார் பெருமான் கூறுவது காண்க. ஆறாறு - ஆன்ம தத்துவம் இருபத்து நான்கு; வித்தியா தத்துவம் ஏழு; சிவதத்துவம் ஐந்து ஆக முப்பத்தாறு.

ஐயமும் திரிபும் அறுத்தென துடம்பினுள்

ஐயமும் நீக்கிய அருட்பெருஞ் ஜோதி                                        20

உரை : அறிவின்கண் உளவாகும் சந்தேக விபரீதங்களைப் போக்கி, உடம்பின்கண் உண்டாகிய சிலேத்துமம் வாதம் பித்தம் ஆகிய மூன்றையும் நீக்கிய அருட் பெருஞ் சோதி. எ.று.

பொருளுண்மை யறியுமிடத்து அதுவோ இதுவோ என எழும் மயக்கம் ஐயம் என்றும், இரவில் கயிற்றைப் பாம்பென்று மாறாகக் கருதும் விபரீத வுணர்வு “திரிபு” என்றும் கருதப்படும்; இவை உண்மை யுணர்வுக்குத் தடை செய்தலின், “ஐயமும் திரிபும் அறுத்து” என வுரைக்கின்றார். சிலேத்துமமும், வாதமும், பித்தமும் உடம்பின்கண் தோன்றித் தத்தம் அளவில் மிகினும் குறையினும் நோய் செய்தலால், “உடம்பினுள் ஐயமும் நீக்கிய அருட் பெருஞ் சோதி” என்று கூறுகின்றார். “மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று” ( குறள் ) என்று திருவள்ளுவர் உரைப்பது காண்க. ஐ யென்பது ஐயம் என வந்தது.

ஒன்றென இரண்டென ஒன்றிரண் டெனஇவை

அன்றென விளங்கிய அருட்பெருஞ் ஜோதி                                        22

உரை : சிவம் எனப் பரம்பொருள் ஒன்றென்றும், சிவமும் சத்தியுமென இரண்டு என்றும், இரண்டு எனப்படும் இவையல்ல என்றும் ஞானவான்கள் கூறுவதை விளக்கி யருளிய அருட் பெருஞ் சோதி. எ.று.

சிவம் சத்தி என்ற இரண்டையும் விலக்கிப் பிரமமே பொருள் என்றலும் உண்டாதலின், “இவை யன்றென விளங்கிய அருட் பெருஞ்சோதி” என மொழிகின்றார். விளக்கிய எனற்பாலது விளங்கிய என வந்தது.

ஓதா துணர்ந்திட ஒளிஅளித் தெனக்கே

ஆதாரம் ஆகிய அருட்பெருஞ் ஜோதி                                        24

உரை : நூல்களைக் கற்காமலே பொருளுண்மைகளை யுணர்ந்து கொள்ளுமாறு அறிவொளியை எனக்களித்து, என் அறிவுக்கு ஆதாரமாய் நிலவும் அருட் பெருஞ் சோதி. எ.று.

நூலோர் எழுதிவைத்த நூல்களைக் கற்காமல் சிந்தனையே கருவியாகத் தாம் பொருள்களின் மெய்ம்மைத் தன்மையை அறிந்து கொண்டமை விளங்க, “ஓதா துணர்ந்திட” எனவும், அங்ஙனம் உணர்தற்குத் தமக்குள் உள்ளொளி தோன்றி உதவிற்றென்பார், “ஒளியளித்து” எனவும், தாம் உணர்ந்தவற்றிற்கும் ஆதாரமாய் உறுதி செய்தது திருவருள் என்றற்கு, “எனக்கே ஆதாரமாகிய அருட் பெருஞ் சோதி” எனவும் இயம்புகின்றார். ஓதா தொழிந்த நூற்பொருள்களை யுணருமாறு இறைவன் திருவருள் ஞானவொளி உள்ளே தோன்றித் தமக்கு உதவிய திறத்தை வடலூர் வள்ளல் இதனால் தெரிவிக்கின்றார்.

ஔவியம் ஆதிஓர் ஆறுந் தவிர்த்தபேர்

அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ் ஜோதி                                        26

உரை : குரோத முதலிய அறுவகைக் குற்றங்களையும் போக்கிய பெருமை யமைந்த அந்த நல்லியல்புகளை உபதேசிக்கும் அருட் பெருஞ் சோதி. எ.று.

ஔவியம் - காமம் முதலிய குற்றங்கள். அவை யாறும் காமம், குரோதம், உலோபம், மதம், மோகம், மாற்சரியம் என வரும். காமமின்மை, குரோதமில்லாமை முதலிய ஆறும் நற்பண்புகளாய்ப் புகழ் தருவனவாதலால் அவற்றைப் “பேர் அவ்வியல்” எனக் குறித்தருளுகின்றார். வழுத்துதல் - உரைத்தல்.

திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும்ஓர்

அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ் ஜோதி                                        28

உரை : முத்திச் செல்வம் நிலைத்திருக்கின்ற ஒப்பற்ற வெளியாய்ச் சிவவெளி எனப்படும் ஒப்பில்லாத அருள் வெளியின்கண் பதிவாய் விளங்கியருளும் அருட் பெருஞ் சோதி. எ.று.

திரு - ஈண்டு முத்திச் செல்வம் குறிக்கிறது. முத்தி நலமும் இன்பம் என்றும் குன்றாதிருக்கும் அற்புத வெளியாதலால், “திருநிலைத் தனிவெளி” எனப்படுகிறது. இது பரசிவவெளி எனச் சிவஞானிகளால் சிறப்பிக்கப்படுவது பற்றி, சிவவெளி யெனும் ஓர் அருள்வெளி” என்று புகழப்படுகிறது. பதி வளர்தல் - பதிவாய் விளங்குதல்.

சுத்தசன் மார்க்கச் சுகத்தனி வெளிஎனும்

அத்தகைச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி                                        30

உரை : சுத்த சன்மார்க்கத்தாற் பெறலாகும் சுகமனைத்தும் நிலவுகின்ற தனிவெளியெனப் போற்றப்படும் அத்தகைய சிற்சபையின்கண் எழுந்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சுத்த சன்மார்க்கர்கள் பெறுவது அழியாப் பேரின்பமாதலால் அதனைச் “சுக” மென்றும், அது நிலவுமிடமாதல் பற்றித் “தனிவெளி” யென்றும் கூறுகின்றார். அப்பெருவெளி இறைவற்கு இனிய ஞான சபையாவது விளங்க, “அத்தகைச் சிற்சபை” என வோதுகின்றார். அ - உலகறி சுட்டு.

சுத்தமெய்ஞ் ஞானச் சுகோதய வெளிஎனும்

அத்துவி தச்சயை அருட்பெருஞ் ஜோதி                                        32

உரை : தூய மெய்ப்பொருளுணர்வால் எய்தலாகும் சிவஞான சுகப் பிரபை தோன்றி வேறற்ற கலப்பின்பம் பயக்கும் அருட் பெருஞ் சோதி. எ.று.

மெய்ஞ்ஞானம் - ஐயம் திரிபுகளாகிய மாசின்றித் தூயதாய் ஞானானந்தம் நல்குதலால் அது நிலவும் சிவபோகப் பெருவெளியை, “சுத்த மெய்ஞ்ஞானச் சுகோதய வெளி” என்றும், அதனை யடையும் ஆன்மாவும் சிவானந்த ஞாவுருப் பெற்றுச் சிவத்தோடு அத்துவிதமாதல் விளங்க, “அத்துவிதச் சபை” என்றும் இயம்புகின்றார். அத்துவிதம் - ஆன்மாவும் சிவமும் அநந்நியமாதல். சிவ மெழுந்தருளும் திருவோலக்கமாதலால், வெளியைச் சபை யெனுற் குறிக்கின்றார். அநந்நிய வெளியை அதனால் “அத்துவிதச் சபை” எனச் சிறப்பிக்கின்றார்.

தூய கலாந்தச் சுகந்தரு வெளிஎனும்

ஆயசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி                                        34

உரை : தூயதாய், அதீத கலைக்கண் பெறலாகும் இன்பத்தைத் தரும் வெளியாகிய நுண்ணிய ஞானவெளியில் எழுந்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை என்ற கலை யைந்தனுள் சாந்தியதீதை, கலாந்தம் எனப்படுகிறது. கலாந்தப் பெருவெளி நுண்ணிய ஞானவெளி எனப் பகர்தற்கு, “ஆய சிற்சபையில் அருட் பெருஞ் சோதி” என வுரைக்கின்றார். ஆய்தல் - நுணுகுதல்.

ஞானயோ காந்த நடந்திரு வெளிஎனும்

ஆனியில் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி                                        36

உரை : ஞானத்துக்கு வாயிலாகிய யோகாந்தத்தில் நிகழும் நடனத் திருவெளி யெனப்படும் குற்றமில்லாத ஞானச் சபையில் விளங்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

வேதாந்த முதலாகக் கூறப்படும் அந்தங்கள் ஆறனுள் யோகாந்தம் ஞானம் பெறுதற்கு வாயிலாதல் பற்றி, “ஞான யோகாந்தம்” என்று நவில்கின்றார். இந்த இயைபு பற்றியே ஞான காண்டமாகிய வேதாந்தத்துள் “போதாந்தமும் யோகாந்தமும் வியாப்பியம்” என உபதேசப் பகுதியில் வள்ளலார் உரைத்தருளுகின்றார். ஆனி - குற்றம். இஃது ஆனம் எனவும் வழங்கும்.

விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளிஎனும்

அமலசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி                                        38

உரை : தூய போதாந்தம் எனப்படும் மெய்யுணர்வு வெளியாகிய மலமறைப் பகன்ற ஞானச் சபையில் எழுந்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

போதாந்தம் - ஞான வெல்லை மெய்யுணர்வுடைய ஞானிகள் கண்டமைந்து ஒடுங்கும் ஞான வெல்லை என்றற்கு, “மெய்ப்பொருள் வெளியெனும் அமல சிற்சபை” என விளம்புகின்றார். அமலம் - மலத்தின் மறைக்கும் சேட்டை யில்லாதது. சிற்சபை - ஞான சபை. இப்போதாந்தம் வேதாந்தத்துள் ஒடுக்கம் என்பது வடலூர் வள்ளலின் உபதேசம்.

பெரிய நாதாந்தப் பெருநிலை வெளிஎனும்

அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி                                        40

உரை : பெரியதாகிய நாதாந்தம் என்ற பெருவெளி யென்ற பெறற் கருமை வாய்ந்த சிற்றம்பலத்தில் எழுந்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

நில முதல் நாத மீறாகவுள்ள தத்துவங்கள் பலவற்றினும் பெரிதாதல் பற்றி, பெரிய நாதாந்தப் பெருநிலை வெளி” என்று புகழ்கின்றார். நாதாந்தம் சித்தாந்தத்துள் வியாப்பியம் என்பர். பெருநிலை வெளி - பெரிய நிலையாகிய ஆகாயம். தத்துவம் கடந்தது என்பதற்கு “அரிய சிற்றம்பலம்” என்று கூறுகின்றார். அம்பலம் - சபை. சிற்றம்பலம் - சிற்சபை எனவும் கொள்ளப்படும்.

சுத்தவே தாந்தத் துரியமேல் வெளிஎனும்

அத்தகு சிற்சபை அருட்பெருஞ் ஜோதி                                        42

உரை : தூய வேதாந்த நெறியில் கூறப்படும் துரியாவத்தைக்கண் காணப்படும் மேலான துரிய வெளி என வழங்கும் அந்தச் சிற்சபைக் கண் எழுந்தருளுவது அருட்பெருஞ்சோதி. எ.று.

வேதாந்திகள் துரியாவத்தையையே இறுதி யவத்தையாகக் கொள்வதால், துரிய நிலையில் காண நிற்கும் ஞானாகாயத்தைத் “துரிய வெளியெனும் சிற்சபை” என்று சிறப்பிக்கின்றார். “நனவொடு கனவு சுழுத்தியே துரியம் நான்கெனச் சொல்படும் அவத்தை” ( பக் - 275 ) எனக் குறுந்திரட்டுக் கூறுவது காண்க. இது வேதாந்தக் கருத்து என்பது விளங்குதற்குச் “சுத்த வேதாந்தத் துரியம்” என்று குறித்தருளுகின்றார்.

சுத்தசித் தாந்தச் சுகப்பெரு வெளிஎனும்

அத்தனிச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி                                        44

உரை : தூய சித்தாந்த நெறியினர் “சுகப் பெருவெளி” என்று பேசும் துரியாதீதமாகிய அந்தத் தனிச் சிறப்புடைய ஞானாகாயத்தில் விளக்கமுறுவது அருட்பெருஞ்சோதி. எ.று.

வேற்று மதக் கொள்கைக் கலப்பில்லாதது என்றற்குச் “சுத்த சித்தாந்தம்” என்று கூறுகின்றார். சித்தாந்தம் - சிவாகம் நெறி. சித்தாந்திகள் உந்திக்குக் கீழதாகிய மூலாதார அவத்தையைத் துரியாதீதமெனக் கொள்பவாதலின், அதீதாவத்தை நல்கும் இன்ப வெளியை, “சுகப் பெருவெளி” என்று சொல்லுகின்றார். அதுவும் ஞானக் காட்சிக்கு இடமாதல் பற்றி, “அத்தனிச் சிற்சபை” எனவும், ஆகம வுரையாதலால், “அத்தனிச் சபை” எனவும், ஞான மயமாதல் விளங்கச் “சிற்சபை” எனவும் தெரிவிக்கின்றார்.

தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளிஎனும்

அகர நிலைப்பதி அருட்பெருஞ் ஜோதி                                        46

உரை : உடம்பினுள் இதய கமலத்தின் உள்ளகமாகிய தகராலயத்தின்கண் விளக்கமுறும் உண்மை ஞானப் பெருவெளி எனக் கூறப்படும் பிரணவத்தின் அகரக் கூற்றின்கண் நிலையுறும் பதிப் பொருளாவது அருட்பெருஞ்சோதி. எ.று.

தகரம் - தகராலயம்; உள்ளத்தின் உட்கூறு. இதனை யுணர்வது தகரவித்தை எனப்படும். “ஏய்ந்த சீர்த் தகரவித்தை முறை” ( காஞ்சிப் நகரப் ) எனச் சிவஞான முனிவர் செப்புவது காண்க. “தகர மெய்ஞ்ஞானத் தனிப் பெருவெளியை”த் தகராகாசம் என்பதும் வழக்கு. ஓம் என்னும் பிரணவத்தின் அகரக் கூறுகளை “விந்து, நாதம், பரவிந்து, பரநாதம், அபரவிந்து, அபரநாதம், திக்கிராந்தம், அதிக்கிராந்தம், வாமசத்தி, சேஷ்ட சத்தி, ரௌத்திரி சத்தி, காளி சத்தி” எனப் பன்னிரண்டாக வடலூர் வள்ளல் உரைக்கின்றார் ( உபதே. பக்.98 ). அகரத்தில் நாத விந்துகளாக நிலைபெறுமாறு உணர்த்துதற்கு “அகர நிலைப்பதி அருட்பெருஞ்சோதி” என அறிவிக்கின்றார்.

தத்துவா தீதத் தனிப்பொருள் வெளிஎனும்

அத்திரு அம்பலத் தருட்பெருஞ் ஜோதி                                        48

உரை : தத்துவக் கூறுகள் அனைத்துக்கும் அப்பாலதாகிய ஒப்பற்ற பரம்பொருட்குரிய பராகாசமாகும் அந்த ஞானச் சபையின்கண் எழுந்தருளுவது அருட்பெருஞ்சோதி. எ.று.

தத்துவங்கள் பலவும் உடம்பு உலகுகளில் வைத்து முப்பத்தாறும் தொண்ணூற்றாறுமாகவும் மேலும் பலவாகவும் வகுத்தும் விரித்தும் ஓதப்படுமாயினும், உடம்பெல்லைக்கும் உலகெல்லைக்கும் அப்பாலாய் எல்லாவற்றிற்கும் மேலாய் விளங்கும் பரம்பொருட்கு இடமாகும் தேக புவனாதீத பரஞானப் பெருவெளியை ஞானவம்பலமாகக் குறிக்குமாற்றால், “அத் திருவம்பலத் தருட் பெருஞ்சோதி” என வுரைக்கின்றார்.

சச்சிதா னந்தத் தனிப்பர வெளிஎனும்

அச்சியல் அம்பலத் தருட்பெருஞ் ஜோதி                                        50

உரை : சத்தும் சித்தும் ஆனந்தமும் தழைத்திருக்கும் தனிப் பரவெளி என்று ஓதப்படும் உணர்வுருவாலமைந்த ஞான வம்பலத்தில் எழுந்தருளுவது அருட்பெருஞ்சோதி. எ.று.

சத்து - மெய்ம்மை; சித்து - ஞானம்; ஆனந்தம் - ஞானத்தால் நுகரப்படும் இன்பம். இம்மூன்றும் சேர்ந்து சச்சிதானந்தம் எனப் படுவதாயிற்று. அச்சு - உணர்வு. உணர்வுருவாதலால் உயிரும் அச்சு எனப்படுவதுண்டு. சச்சிதானந்தம் பரசிவமாதலின், பரசிவ வெளியை, “சச்சிதானந்தத் தனிப் பரவெளி” எனச் சிறப்பிக்கின்றார். பரசிவ வெளி அருண் ஞான மயமாதல் பற்றி, “அச்சியல் அம்பலம்” என உரைக்கின்றார்.

சாகாக் கலைநிலை தழைத்திடு வெளிஎனும்

ஆகா யத்தொளிர் அருட்பெருஞ் ஜோதி                                        52

உரை : சாதலின்றி நெடிது வாழ்ந்திருக்கும் வித்தை நிலையுற்றிருக்கும் அறிவு வெளியாகிய ஆகாயத்தில் விளக்கமுறுவது அருட்பெருஞ்சோதி. எ.று.

“ஒருவன் ஒரு நாளைக்கு இரண்டரை நாழிகை தூங்கப் பழக்கம் செய்வானானால் அவன் ஆயிர வருடம் சீவித்திருப்பான்; எப்போதும் மறப்பில்லாமல் ஆசானுடைய திருவடியை ஞாபகம் செய்து கொண்டிருப்பதே சாகாத கல்விக்கு ஏதுவாம்” ( பக். 67 ) என்று உபதேசப் பகுதியில் வள்ளற் பெருமான் கூறுகின்றார். நெடிது வாழப் பயில்வது சாகாக் கலையாகும். அக் கலை ஞானத்தால் உணரப் பெறுவது அறிவாகாசம் என்றற்கு, “திருவெளியெனும் ஆகாயம்” என்று கூறுகின்றார்.

காரண காரியம் காட்டிடு வெளிஎனும்

ஆரணச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி                                        54

உரை : பொருள்களின் காரணங்களையும் அக்காரணங்களால் விளையும் காரியப் பாட்டையும் எண்ணியறியும் அறிவுவெளி யெனப்படும் வைதிக ஞான நிலைக்கண் விளக்கமுறுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பொருள்களின் தோற்றக் கேடுகள் காரணமின்றிக் காரியப் படுவதில்லை யென்பது உலகியலிற் கருவி கரணங்களால் அறியப்படுதலால், அந்த அறிவு நிலை “காரண காரியம் காட்டிடும் வெளி” எனப்படுகிறது. பொருள்களின் மெய்ம்மைத் தன்மையை யுணர்தலே மெய்யுணர்வுக்கு வாயிலாதலின், அதனை “ஆரணச் சிற்சபை” எனப் புகல்கின்றார். மெய்யுணர்வுக்குத் துணை புரியும் ஞானத்தை வைதிக ஞானம் என நூலோர் வழங்குவதால், வடலூர் வள்ளல், காரண காரிய ஞானத்தை “ஆரணச் சிற்சபை” என்று குறித்தருளுகின்றார். ஆரணம் - வேதம். ஆரணச் சிற்சபை - வேத ஞான நிலையம். வைதிக நெறியில் காரண காரிய ஆராய்ச்சியால் மெய்யுணர்வு பெறுதற்குத் தனி முதலாக விளங்குவது அருட்பெருஞ் சோதி என்பது கருத்து.

ஏகம் அனேகம் எனப்பகர் வெளிஎனும்

ஆகமச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி                                        56

உரை : பொருள்களின் தனித் தன்மை பற்றி, ஒன்று என்றும் பலவென்றும் கூறுதற்கு ஏதுவாகிய அறிவு வெளி என அறிஞர் ஓதும் ஆகம ஞான சபைக்கண் விளக்கம் அருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

பரம்பொருளின் பரமாம் தன்மை கண்டு, ஏகம் என்பதும், உயிர் வகைகளின் தனித்தனி இயல்புணர்ந்து அநேகம் என்பதும் ஆகம வுரைகளாதலால், ஏகாநேகம் எனவுணரும் ஞானத்தை, “ஆகமச் சிற்சபை” என அறிவிக்கின்றார். இனி, அநேகம் என்பதற்கு இறைவன் தன்னை யன்புற்று வழிபடும் அடியவர் பொருட்டுப் பல வுருக்கொள்வதால், “அநேகமாக வுள்ளான்” என்பதும் உண்டு. “ஏகன் அநேகன் இறைவன்” ( சிவபுரா ) என மாணிக்கவாசகர் உரைப்பது காண்க. “ஒருவனே இராவணாதி பாவக முற்றாற் போலத் தருவன் இவ்வுருவ மெல்லாம் தன்மையும் திரியானாகும்” ( சிவசித்தி ) என அருணந்தி சிவனார் கூறுவர்.

வேதாக மங்களின் விளைவுகட் கெல்லாம்

ஆதார மாம்சபை அருட்பெருஞ் ஜோதி                                        58

உரை : வைதிக நெறியிலும் ஆகம நெறியிலும் பல வகையாய் உண்டாகிய மதங்கட்கெல்லாம் ஆதார நிலையமாகிய சமய ஞான நிலையங்களில் விளங்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

வேதாகம சாரமாக நிற்கும் பிரம சூத்திரம் ஒன்றே கொண்டு சங்கரர், இராமாநுசர், மாத்துவர், நீலகண்டர் முதலிய பலரால் பல மதங்கள் தோற்றுவிக்கப்பட்டதும், ஆகம நெறியில் மாவிரதம், பாசுபதம், காபாலம், வைரவம், வாமம், ஐக்கியவாதம் எனப் பல உண்டாயதும் குறித்தற்கு, “வேதாகமங்களின் விளைவுகள்” என வள்ளற் பெருமான் கூறுகின்றார். இவ்விளைவுகட்கெல்லாம் அவ்வத்தலைவர்களின் கிரியா யோக ஞானமே ஆதாரமாயினும், அவ்வாதாரமுதல் திருவருள் ஞானமாதல் பற்றி, “விளைவுகட் கெல்லாம் ஆதாரமாம் சபை அருட் பெருஞ் சோதி” என அறிவுறுத்துகின்றார்.

என்றா தியசுடர்க் கியனிலை ஆய்அது

அன்றாம் திருச்சபை அருட்பெருஞ் ஜோதி                                        60

உரை : ஞாயிறு முதலிய ஒளிப் பொருள்களின் மூல காரணமாகிய நுண்ணொளியாகவும், அதனின் வேறாகவும் நிலவும் ஞானப் பொருள் அருட் பெருஞ் சோதி. எ.று.

ஞாயிறு முதலிய பூத வொளிப் பொருட்கெல்லாம் மூலமாய் நுண்ணிதாய் இலங்கும் ஒளி நின்று நிலவுவதாகவும், அவ்வொளியும் ஞானப் பொருளாகாமையின் அஃது அன்றாகவும், பரம்பொருளின் அருள் ஞானவொளி நிலையை, “இயல் நிலையாய் அது அன்றாம் திருச்சபை” என மொழிகின்றார். “சோதி யந்தமாயினாய் சோதியுள்ளோர் சோதியாய்” ( ஆலவாயில் ) எனத் திருஞானசம்பந்தர் தெரிவிப்பது காண்க. ஒளியாய் இயலும் நிலை, இயல் நிலை எனப்படுகிறது.

சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய்

அமையுந் திருச்சபை அருட்பெருஞ் ஜோதி                                        62

உரை : பல்வேறு சமயங்களுக்கெல்லாம் அதீதமாயுள்ள பரம்பொருட்குரிய பரசிதாகாசமாய் விளங்கும் சிவஞான நிலையை யுணர்வித்தூக்குவது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஒவ்வொரு சமயமும் தான் கண்ட பரம்பொருளைத் தனக்கு எல்லையாகக் கொண்டதாயினும் சமயங்கள் மிகப் பலவாதலால் அவற்றின் எல்லையிற் காண நிற்கும் பரம்பொருட் கெல்லாம் மேலதாய் அப்பாலதாகும் பரம தனி மெய்ப்பொருளைக் காட்டுதற்கு, “சமயம் கடந்த தனிப் பொருள்” எனவும், அது விளக்கம் செய்யும் பரமமான ஞானாகாசத்தை, “வெளியாய் அமையும் திருச்சபை” எனவும் தெரிவிக்கின்றார். “தனிப் பொருட்குரிய வெளி இன்ன தன்மைத்” தென வுணரவாராமையால் வெறிதே, “வெளியாய்” எனக் கூறுகின்றார்.

முச்சுடர் களும்ஒளி முயங்குற அளித்தருள்

அச்சுட ராம்சபை அருட்பெருஞ் ஜோதி                                        64

உரை : சூரியன், சந்திரன், நெருப்பு என்ற மூவகை ஒளிப் பொருள்கட்கும் ஒளியே யுருவாய் அமைய ஒளி வழங்கும் பரம வொளி நிலையத்தை யுணர்விப்பது அருட்பெருஞ் சோதி. எ.று.

வெம்மைப் பிழம்பு சூரியனும், தண்மைப் பிழம்பாவது சந்திரனும், சுடர்ப் பிழம்பாவது நெருப்புமாயினும், இவற்றிற்கு ஒளி யுருவம் நல்குவது பரஞ்சுடராகிய சிவமாகிய காரண வொளிப்பொருள் என விளக்குதற்கு, “ஒளி முயங்குற அளித்தருள் அச்சுடர்” எனக் கூறுகின்றார். ஒளி முயங்குதல் - ஒளி யுருவம் அமைதல். ஒளிக்குள்ளும் சிவம் எழுந்தருளுதலால் அதனையும் “சுடராம் சபை” என்று சுட்டுகின்றார்.

துரியமும் கடந்த சுகபூ ரணந்தரும்

அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி                                        66

உரை : துரிய நிலைக்கு அப்பாலான அதீதத்தில் நிற்கும் ஆன்மாவுக்குக் குறைவற நிறைந்த இன்பத்தைத் தந்தருளுவது பெறுதற்கரிய ஞான சபைக்கண் அமைந்த அருட் பெருஞ் சோதி. எ.று.

துரியம், சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் என வைதிக வேதாந்தம் கூறும் இறுதி அவத்தை. அந்த அவத்தைக்கண் இருந்து ஞான நாட்டம் கொண்டு ஆன்மா சிவானந்தத்தைப் பெறும்; சிவானந்த நிலையம் பெறுதற் கரிதாய்த் திருச்சிற்றம்பலம் எனப்படுதலின், ஆங்கே எழுந்தருளிப் பரிபூரண இன்பானுபவத்தை நல்குவதால், “அரிய சிற்றம்பலத்து அருட் பெருஞ் சோதி” என்று கூறுகின்றார். இங்கே அருட் பெருஞ் சோதி என்பது கூத்தப் பெருமானைக் குறிப்பதை நோக்குக.

எவ்வகைச் சுகங்களும் இனிதுற அளித்தருள்

அவ்வகைச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி          68

உரை : ஆன்மாக்களாற் பெறப்படும் இன்பானுபவங்கள் யாவையும் இனிது நுகர்விக்கும். அத்தகு சிறப்புடைய ஞான சபையை எய்துவிப்பது அருட் பெருஞ் சோதி. எ.று.

இச்சை, கிரியை, ஞானம் என்ற மூவகைச் சத்திகளால் ஆன்மாக்கள் எய்தும் இன்பானுபவங்களைப் பெருகப் பெறச் செய்வது ஞானப் பொருளாகிய சிற்சபை; இது பற்றியே ஞானசம்பந்தப் பெருமான் சிவ பரம்பொருளை, “ஞானத் திரளாய் நின்ற பெருமான்” ( அண்ணா ) என்பது காண்க. சிவஞான இன்பானுபவத்தை ஆன்மா ஞானானந்தப் பெருவெளியில் பெற்றுய்ய அருளுவது பெரிய சோதியுருவாகிய சிவமாதல் இனிது விளங்க, “அவ்வகைச் சிற்சபை அருட்பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார். சுக போகத்தை எய்துவிக்கும் இயல்புடைமை புலப்பட, “அவ்வகைச் சிற்சபை” என்கின்றார்.

இயற்கைஉண் மையதாய் இயற்கைஇன் பமுமாம்

அயர்ப்பிலாச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி                                        70

உரை : இயல்பாகவே உள்ளதாய் இயல்பிலே இன்ப வுருவாய்ச் சோர்வில்லாத ஞான சுகத்தை நல்குவது, அருட் பெருஞ் சோதி. எ.று.

செயற்கை வகையால் உள்பொருளாதலின்றி இயல்பாகவே உள்ளதாம் தன்மை யுடையது என்றற்கு, “இயற்கை யுண்மையதாய்” என்றும், தன்னியல்பில் இன்ப வுருவினது எனச் சிவாகமங்கள் தெரிவித்தலால், “இயற்கை யின்பமுமாம் சிற்சபை” என்றும் இயம்புகின்றார். மறைதலும் ஒளிர்தலும் இன்றி எஞ்ஞான்றும் ஞான வொளி தன்மை திரியாது திகழ்வது என்றற்கு, “அயர்ப்பிலாச் சிற்சபை” என அறிவிக்கின்றார். அத்தகைய சிவத் திருவோலக்கத்தை எய்துவித்தலால், “சிற்சபை அருட் பெருஞ் சோதி” எனக் கூறுகின்றார். சிற்சபை - சிவஞானத் திருவோலக்கம்.

சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை

வாக்கிய சிற்சபை அருட்பெருஞ் ஜோதி                                        72

உரை : சாக்கிரத்தில் அதீதத்தைப் புரியும் சிவஞானிகட்கு ஒப்பற்ற சிவவெளியாய், சிவபோகத்தைக் குறைவற நிறைவிக்கும் ஞானச் சபையை எய்துவிப்பது அருட் பெருஞ் சோதி. எ.று.

சாக்கிராவத்தைக்கண் இருந்துகொண்டே துரியாதீத நிலையிற் பெறலாகும் சிவஞானக் காட்சியில் திளைத்தல் சாக்கிராதீதம் என உமாபதி சிவனார் உரைப்பர். அந்த அதீதாவத்தையிற் பெறலாகும் சிவானந்தத்தைக் குறைவறப் பெறுவித்தலைத் தெரிவித்தற்கு, “நிறைவாக்கிய சிற்சபை அருட் பெருஞ் சோதி” என இசைக்கின்றார். சாக்கிராவத்தை இன்பப் பேற்றைக் குறைக்குமாதலின், அக்குறையின்மையை விளக்குதற்கு, “நிறைவாக்கிய சிற்சபை” என்று தெரிவிக்கின்றார்.

சுட்டுதற் கரிதாம் சுகாதீத வெளிஎனும்

அட்டமேல் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி                                        74

உரை : இத்தன்மைத் தெனச் சுட்டி யுணர்த்தற் கரியதாகிய, சுகாதீத வெளியெனக் கூறப்படும் மிக்க மேலான ஞான சபையை எய்துவிப்பது அருட் பெருஞ் சோதி. எ.று.

கருவி கரணங்களால் அறிதல் சுட்டறிவு. பொறி புலனறிவாலும் மன முதலிய கரண அறிவாலும் அறிய வொண்ணாதது சுகாதீதம் என்றற்குச் “சுட்டுதற் கரிதாம் சுகாதீத வெளி” என்று சொல்லுகின்றார். ஞான வின்பானுபவத்துக்கும் மேம்பட்டமை புலப்படுத்தச் “சுகாதீத வெளி” எனச் சான்றோர்களாற் புகலப்படுகிறது என்பது கருத்து. அட்டமேற் சபை - மிக மிக மேலான ஞான நிலையம். அட்ட - அட்டக் கறுப்பு என்றாற் போல மிகுதி யுணர்த்தும் குறிப்புமொழி. ஞான சபையின்கண் ஞாதிருஞேயமென்ற உணர்வின்றி ஞானமேயாய் நிற்றலின், அது சுகாதீதமாயிற்று என அறிக.

நவந்தவிர் நிலைகளும் நண்ணும்ஓர் நிலையாய்

அவந்தவிர் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி                                        76

உரை : ஒன்பதாகப் பொருந்திய நிலைகளும் முடிவாக அமையும் ஒரு நிலையாய்க் குற்றத்தை யொழிக்கும் ஞான சபைக்கண் விளக்க முறுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

உருவம் நான்கு, அருவம் நான்கு, அருவுருவம் ஒன்றாகக் கூடும் ஒன்பது சிவபேத நிலைகள் “நவம் தவிர் நிலைகள்” என்று கூறப்படுகின்றன. இவற்றிற்கு முதலாகிய பரசிவ நிலை, “நண்ணும் ஓர் நிலை” எனவும், பரசிவ பதத்தை “அவம் தவிர் சிற்சபை” எனவும் இயம்புகின்றார். அவம் - குற்றம். தவிர்தல் - முதலில் தங்குதற் பொருளிலும் பின்னர் நீக்குதற் பொருளிலும் வந்தது. இனி, அக்கினி சூரியன் சந்திரன் நட்சத்திரம் என அண்டத்தில் நான்கும், ஆன்மா, ஜீவன், கரணம், இந்திரியம் எனப் பிண்டத்தில் நான்கும், பிண்டாண்ட நடுவான அருளொளி ஒன்றும் என ஒன்பதாகச் சரவணானந்தா கூறுகிறார். உருவம் நான்காவன : அயன், அரி, அரன், உருத்திரன் என்பன. சிவம், சத்தி, நாதம், விந்து ஆகிய நான்கும் அருவம்; சதாசிவன் அருவுருவம். இவ்வொன்பதும் சிவஞான சித்தியாரிற் காணப்படுவன.

உபயபக் கங்களும் ஒன்றெனக் காட்டிய

அபயசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி                                        78

உரை : பரபக்கம், சுபக்கம் எனக் கூறப்படும் இரண்டும் பரஞானத்தாற் காண்பார்க்கு ஒரு பொருளே நோக்குவதால் ஒன்றே என அறிவித்தருளும் ஞான சபையின்கண் விளங்குவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பரபக்கம் - உலகாயதம் முதலாக நிலவும் சமய வகைகள். சுபக்கம் - சைவத் திருவருள் நெறி. எல்லாச் சமய வகைகளும் திருவருள் ஞான நாட்டம் உடைய ஞானவான்களுக்குப் பலவாகிய ஆறுகள் யாவும் ஒரு கடலை நோக்கியோடுவது போல “விளங்கு பரம்பொருள்” ஒன்றையே வற்புறுத்துவதால், “ஒன்றெனக் காட்டிய சிற்சபை” என அறிவுறுத்துகின்றார். அபய சிற்சபை - விபரீத ஞானங்களாற் பிறக்கும் மயக்கத்தைப் போக்கும் அருள் ஞான நிலையம்; இதனைச் சமரச சுத்த சன்மார்க்க நிலையம் என்பர்.

சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்

ஆகர மாம்சபை அருட்பெருஞ் ஜோதி                                        80

உரை : கன்மம், யோகம், ஞானம் என்ற மூவகைச் சித்தி நிலைகளுள், தலையாய ஞான சித்தி நிலைகட் கெல்லாம் இடமாகும் ஞான சபையில் விளக்கமுறுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சேகரம் - தலையாயது. தலையாய ஞானசித்தி “அறுபத்து நாலாயிரம் சித்திகளையும் அறுநூற்று எண்பத்தெட்டுக் கோடி மகாசித்திகளையும்” தன்கண் கொண்டதாகலின் ( உபதேசப். 114 ), “சித்தி நிலைக்கெலாம் ஆகரமாம் சபை” என்று கூறுகின்றார். ஆகரம் - இடம்.

மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்

அனாதிசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி                                        82

உரை : மனம் முதலிய கரணங்களுக்கெல்லாம் எட்டுதற் கரியதும், சமயங்கள் பலவற்றிற்கும் அப்பாலாயதும் ஆகிய அனாதி ஞான சபையின்கண் விளங்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

மனம், வாக்கு, காயம் என்ற கரணங்களால் பற்றி யறியமாட்டாமை விளக்குதற்கு, “மனாதிகட் கரிய” என்றும், பலவேறு சமய நூலோர்களாலும் காண வியலாமை விளங்க, “மதாதீத வெளி” என்றும், திருவருள் ஞான நிலை ஆதியந்தம் இல்லாதது என்றற்கு, “அனாதி சிற்சபை” என்றும் இயம்புகின்றார்.

ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்

ஆதிசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி                                        84

உரை : ஓதிய பொருளின்கண் கருத்தூன்றி நுணுகி நுணுகி யுள்ளத்தால் உணர்ந்த வழியும் இன்ன தன்மைத்தென உணர்தற்கு அரிதாகிய ஆதி முதல்வனாகிய சிவத்தின் ஞானநிலையத்தில் விளங்குவது அருட்பெருஞ்சோதி. எ.று.

ஓதுதல் - ஈண்டு மெய்ந்நூல்களைக் கற்றுணர்தலைக் குறிப்பதாம். கற்ற நூற் பொருளின்கண் கருத்தூன்றி நின்று பல்வகை நெறிகளால் உணரத் தலைப்பட்டு நுணுகி நுணுகி நோக்கினும் உணர்வுக்கு எட்டாதொழிதல் பற்றி, “ஓதி நின்று உணர்ந்துணர்ந்து உணர்தற் கரிதாம்” எனவும், சிவஞானப் பெருநிலை ஆதி பரம்பொருளாகிய சிவத்தின் ஞானப் பேற்றுக்குரிய நிலையை, “ஆதி சிற்சபை” எனவும் இசைக்கின்றார். சிவஞானப் பேற்றின்கண் திருவருள் ஞானப் பேரொளியாய்ப் பிறங்குவது விளங்க, “சிற்சபையில் அருட் பெருஞ்சோதி” என்று அறிவுறுத்துகின்றார்.

வாரமும் அழியா வரமும் தரும்திரு

ஆரமு தாம்சபை அருட்பெருஞ் ஜோதி                                        86

உரை : மெய்யன்பும் கெடாத வரங்களையும் தருவதாகிய ஞான வமுத நிலையத்தில் விளக்கமுறுவது அருட்பெருஞ்சோதி. எ.று.

வாரம் - அன்பு. “வாரம் பட்டுழித் தீயவும் நல்லவாம்” ( சீவக ) என்று தேவர் வழங்குவது காண்க. கேடில் விழுப் பொருளாதலால் சிவம் தரும் வரங்கள் யாவும் கெடாத இயல்பினவாம் என்பது பற்றி “அழியா வரம்” என்று சிறப்பிக்கின்றார். அழியா வரமாவது சாகா வரம் என்பவரும் உண்டு. சிவஞானமாகிய திருவருள் தௌ¢ளிய அமுத மயமாவது என்றற்கு, “திருவாரமுதாம் சபை” என்று புகழ்கின்றார். அருள்ஞான வமுதினைப் பெற்றார்க்கு விளங்கித் தோன்றுவது என்பாராய் “அமுதாம் சபை அருட்பெருஞ் ஜோதி” என்று வள்ளற் பெருமான் வழுத்துகின்றார்.

இழியாப் பெருநலம் எல்லாம் அளித்தருள்

அழியாச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி                                        88

உரை : குறைதல் இல்லாத பெருமை பொருந்திய அனைத்தையும் தந்தருளும் கெடாத ஞானச் சபையின்கண் திகழ்கின்ற அருட் பெருஞ் சோதி. எ.று.

ஞான வொழுக்கத்தால் உயர்ந்தவர் மீளவும் தாழ்வுறாதவர்களால் பெருமை சான்றது திருவருள் நலமாதலால் அதனை, “இழியாப் பெருநலம்” என்றும், அருணலங்கள் பலவற்றையும் தருவது அழியாத சிவபோகத்தையும் நல்குவது விளங்க, “அழியாச் சிற்சபை” என்றும், அருள் புரியும் சிவத்தை, “அருட் பெருஞ் சோதி” யென்றும் போற்றுகின்றார்.

கற்பம் பலபல கழியினும் அழிவுறா

அற்புதம் தரும்சபை அருட்பெருஞ் ஜோதி                                        90

உரை : கற்ப காலங்கள் மிகப் பல கழிந்தாலும் அழிவென்பதில்லாத அருள் ஞான நிலையத்தில் விளங்கி நிற்பது அருட் பெருஞ் சோதி. எ.று.

கற்பம், நானூற்று முப்பத்திரண்டு கோடி வருடம் கொண்டது; இது பிரமனுக்கு ஒரு நாளாகக் கூறுவர். பல கற்பங்களை வாழ்நாளாகக் பெற்ற பிரமன் முதலியோர் கற்பாந்தத்தில் இறந்துபட்டனர்; சிவஞான போக நிலையம் எத்தனைக் கற்பங்கள் கழியினும் தனது நிலையிற் சலியாத சிறப்பமைந்தது என்பாராய், “கற்பம் பலபல கழியினும் அழிவுறா அற்புதம் தரும் சபை” என்று அதன் நிலைபேற்றை எடுதுரைக்கின்றார். கற்பங்கள் அழிவுறினும் சிவம் அழிவுறாமையின் “அற்புதம்” என்கின்றார். மாணிக்கவாசகரும், “வான் கெட்டு மாருத மாய்ந்து மண் கெடினும் தான் கெட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையன்” ( தௌ¢ளே ) என வுரைக்கின்றார். பிரமர் நாரணர் இந்திரர் முதலாய பலர் இறந்து படினும் “ஈறிலாதவன் ஈசன் ஒருவனே” எனத் திருநாவுக்கரசரும் உரைப்பர்.

எனைத்தும் துன்பிலா இயல்அளித் தெண்ணிய

அனைத்தும் தரும்சபை அருட்பெருஞ் ஜோதி                                        92

உரை : எவ்வகையானாலும் துன்பமில்லாத வாழ்வளித்து எண்ணிய யாவையும் தந்தருளுந் திருவருளை விளக்கிக் காட்டுவது அருட்பெருஞ்சோதி. எ.று.

துன்பிலா இயல் - துன்பமில்லாத வாழ்வு. துன்பம் துன்பு என வந்தது. இயல் - இயற்கை வாழ்வு. முக்குண மயக்கத்தால் வாழ்வு துன்பம் விரவியதாதலினாலும், இன்பப் பேறே உயிர்களின் நாட்டமாதலாலும் “துன்பிலா இயல் அளித்து” எனவும், எண்ணிய தனைத்தும் எண்ணியாங்கு எய்துவது அரிதென்பது பற்றி, “எண்ணிய தனைத்தும் தரும் சபை” எனவும் எடுத்துரைக்கின்றார்.

பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி

ஆணிப்பொன் னம்பலத் தருட்பெருஞ் ஜோதி                                        94

உரை : வணங்கி வாழ்த்துபவர்க்கு வேண்டுவதைக் காலம் தாழ்த்தாமல் உதவியருளும் தூய பொன்னம்பலத்தின்கண் விளங்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

பரவுதல் - வணங்கி வாழ்த்தி ஏத்துதல். மெய்யன்புடையார்க்கன்றி இதனை இனிது செய்தல் இயலாதாகலின், “அவர்களைப் “பரவினோர்” என்று குறிக்கின்றார். பாணித்தல் - தாமதித்தல். ஆணிப் பொன் - தூய மாற்றுயர்ந்த பொன். இவ்வாறே உயர்ந்த முத்தையும் ஆணி முத்து என்பர். பொன்னம்பலத்திற் கூத்தப் பெருமானாய்க் காட்சி தந்தருளுதலால், “பொன்னம்பலத்தருட் பெருஞ் சோதி” என்று கூறுகின்றார்.

எம்பலம் எனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி

அம்பலத் தாடல்செய் அருட்பெருஞ் ஜோதி                                        96

உரை : எமக்கு வலிய துணையாம் என்று கையால் தொழுது வாயாற் பரவும் அன்பர்கட்கு அருள் புரிதற்கென்று பொற் சபையின் கண் நடராச மூர்த்தியாய் ஞான நடம் புரிந்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

எம்பலம் - எமக்கு வன்மை கொண்ட துணை. தொழுதல் - கை குவித்துக் கும்பிடுதல். “கைகாள் கூப்பித் தொழீர்” ( திருவங்க ) எனத் திருநாவுக்கரசர் கூறுவது காண்க. ஏத்துதல் - புகழை எடுத்தோதி வழிபடுதல். வழிபடுபவர்க்கு அருள் வழங்குவதென்றற்குக் குமர குருபரர், “பூங்கொன்றைக் கண்ணியான் பொன்மன் றிசைஞ்சிடுக, ஆங்கொன்றைக் கண்ணியவர்” ( சிதம். செய்யுட் ) எனக் கூறுவது காண்க.

தம்பர ஞானசி தம்பரம் எனும்ஓர்

அம்பலத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி                                        98

உரை : பரஞான வுருவாய்த் திகழ்வது சிதம்பரம் எனச் சான்றோர்களால் புகழப்படும் ஞான சபையின்கண் உயர்ந்து விளங்குவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பரஞானம் - பரம்பொருள் ஞானம். கீழான தத்துவ சாத்திர ஞானங்களை நோக்கச் சிவஞானம் மேலானதாகலின், அதனைப் பரஞானம் என்பர். அருவமாகிய பரஞானத்தை யறிதற்கு உருவாய் நிலவுவது சிதம்பரம் எனப் பெரியோர் கூறுவதால், “பரஞான சிதம்பரம் எனும் ஓர் அம்பலம்” என்று உரைக்கின்றார். சிதம்பரம் - சித் அம்பரம் எனப் பிரிந்து ஞானாகாசம் என்று பொருள்படும்.

எச்சபை பொதுஎன இயம்பினர் அறிஞர்கள்

அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ் ஜோதி                                        100

உரை : எந்தச் சபையைப் பொது என்று அறிவுடையோர் உரைக்கின்றார்களோ அந்தச் சபையினைத் தனக்கு உரிய இடமாகக் கொண்டு விளங்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

தில்லையம்பலத்தைச் சால்புடைய அறிஞர்கள் பொது வென்று வழங்குதலால், அதனை வற்புறுத்தும் கருத்தால் “எச்சபை பொது என அறிஞர்கள் இயம்பினர்” என வுரைக்கின்றார். அங்கே எழுந்தருளும் நடராச மூர்த்தமே அருட் பெருஞ் சோதி என்பது கருத்து.

வாடுதல் நீக்கிய மணிமன் றிடையே

ஆடுதல் வல்ல அருட்பெருஞ் ஜோதி                                        102

உரை : துன்பத்தால் உளதாகும் மெலிவுகளைப் போக்கிய அழகிய அம்பலத்தின்கண் நின்று நிருத்தம் புரிவது அருட் பெருஞ்சோதி. எ.று.

பிறவித் துன்பங்களால் உலகில் வாழும் உயிர்கட்குத் துன்பங்கள் தோன்றி வருத்துவதால், தன்னை நினைந்து வழிபட்டு அவற்றை நீக்கிக் கொள்ளும்பொருட்டு அம்பலத்தில் அருட் சோதி ஆண்டவன் ஆடல் புரிகின்றான் என்பதனால், “ஆடுதல் வல்ல அருட் பெருஞ் சோதி” என்று கூறுகின்றார். வாடுதல் - பிறவித் துன்பங்களால் மனம் வருந்தி உடல் மெலிதல்.

நாடகத் திருச்செயல் நவிற்றிடும் ஒருபேர்

ஆடகப் பொதுஒளிர் அருட்பெருஞ் ஜோதி                                        104

உரை : திருக்கூத்தாகிய அருட் செயலைச் செய்தருளும் ஒப்பற்ற பெரிய பொற் சபைக்கண் விளங்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் செய்தல் குறித்து இறைவன் பொன்னம்பலவனாய் ஆடல் புரிகின்றான் எனச் சான்றோர் எடுத்தோதுதலால், “ஒரு பேர் ஆடகப் பொது ஒளிர் அருட் பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார். நவிற்றுதல் - ஈண்டுத் திருக்கூத்தாடுதல். ஆடகம் - பொன். பொது - சபை.

கற்பனை முழுவதும் கடந்தொளி தரும்ஓர்

அற்புதச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி                                        106

உரை : மனத்தின் கற்பனையெல்லையெல்லாம் கடந்து அதற்கு அப்பாலாய் நின்று ஞானவொளி பரப்பும் அற்புதமான சபையின்கண் விளங்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

கற்பனை - மனத்தின்கண் கலை நெறியில் எழும் நினைவு. கற்பனை எல்லையையும் கடந்து விளங்குவது அருட்பெருஞ் சோதி என்பார், “கற்பனை முழுதும்” எனக் காட்டுகின்றார். “கற்பனை கடந்த சோதி” என்பர் சேக்கிழார் பெருமான். கற்பனை எல்லையைக் கடந்ததாகலின், இல்பொருளாவ தன்றென்றற்கு, “ஒளிர் தரும் அற்புதச் சிற்சபை” என்று சிறப்பிக்கின்றார். சிற்சபை - ஞான சபை.

ஈன்றநற் றாயினும் இனிய பெருந்தய

வான்றசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி                                        108

உரை : பெற்ற தாயினும் இனிமை மிக்க பெரிய அருளின்பம் அமைந்த ஞான சபையின்கண் விளக்கமுறுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

பெற்ற தாயினும் பேரன்புடையது உயிர்கட்கு உலகில் வேறொன்று இன்மைபற்றி, “ஈன்ற தாயினும் இனிய பெருந் தயவு” எனக் கூறுகின்றார். “தயவு ஆன்ற சிற்சபை” - அருளின்பம் நிறைந்த ஞான சபை. அருள் என்பது வடமொழியில் தயவு எனவும் தயா எனவும் வழங்கும்.

இன்புறு நான்உளத் தெண்ணியாங் கெண்ணியாங்

கன்புறத் தருசபை அருட்பெருஞ் ஜோதி                                        110

உரை : எளியவனாகிய யான் இன்பம் அடையுமாறு மனத்தில் எண்ணியவற்றை எண்ணியவாறெல்லாம் அன்புடன் எய்த அருளுவது அருட்பெருஞ்சோதி. எ.று.

எண்ணியவை எண்ணியபடி எய்தும்போது யாவர்க்கும் எல்லையற்ற இன்பம் உண்டாதல் இயல்பாதலால், “நான் இன்புற” எனவும், எண்ணியதை எய்துவிக்குமிடத்து எனக்கு மனத்தின்கண் இறைவன்பால் அன்பு மீதூரச் செய்கின்றான் என்பாராய், “அன்புறத் தருசபை” எனவும் கூறுகின்றார். உறுதல் - மிகுதல்.

எம்மையும் என்னைவிட் டிறையும் பிரியா

தம்மை அப்பனுமாம் அருட்பெருஞ் ஜோதி                                        112

உரை : இம்மை மறுமை என்ற எப்பிறப்பினும் என்னைச் சிறிதும் பிரியாமல் தாயும் தந்தையுமாய் அருள் செய்வது அருட்பெருஞ்சோதி. எ.று.

இம்மை - இப்பிறப்பு. மறுமை - மறுபிறப்பு. எவ்வுலகத்து எப்பிறவியெடுப்பினும் இறைவன் பிரியாது உடனிருந்து அருள் புரிவது விளங்க, “எம்மையும் என்னை விட்டு இறையும் பிரியாது” என்றும், தாயாய்ப் பிறப்பையும், தந்தையாய் உணர்வையும் பேணியருளுவது புலப்பட, “அம்மை யப்பனுமாம் அருட்பெருஞ்சோதி” என்றும் இயம்புகின்றார். அம்மை - தாய்.

பிரிவுற் றறியாப் பெரும்பொரு ளாய்என்

அறிவுக் கறிவாம் அருட்பெருஞ் ஜோதி                                        114

உரை : என்னைப் பிரிந்திருப்பதில்லாத பெருமையமைந்த பரம்பொருளாய் என்னுடைய ஆன்மவுணர்வுக்குள் உள்ளுணர்வாய் இருந்தருளுவது அருட்பெருஞ்சோதி. எ.று.

எக்காலத்தும் ஒரு சிறிதும் பிரிந்திருப்பதில்லாத இறைவன் இயல்பை, “பிரிவு உற்றறியாப் பெரும்பொருள்” என்று புகழ்கின்றார். பிரிவறியாமை இறைவற்குப் பெருமையாதலாற் “பெரும்பொருள்” எனவுரைக்கின்றார். ஆன்மவுணர்வையே தான் இடமாகக் கொள்ளுதல் பற்றி, “அறிவுக் கறிவாம் அருட்பெருஞ்சோதி” என்று கூறுகின்றார். “அகர வுயிர் போல் அறிவாகி யெங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து” என ( திருவருட் ) உமாபதி சிவனார் உரைப்பது காண்க.

சாதியும் மதமும் சமயமும் காணா

ஆதிஅ னாதியாம் அருட்பெருஞ் ஜோதி                                        116

உரை : சாதி மத வேற்றுமைகளைப் பொருளாக மதியாத ஆதியும் அனாதியுமாக விளங்குவது அருட்பெருஞ்சோதி. எ.று.

மதம் - தனிப்பட்ட கொள்கை. சாதி சமய வேறுபாடுகள் மக்களினம் உலகில் வாழ்தல் வேண்டி வகுத்துக் கொண்டவையாதலால், மக்களினும் தேவரினும் உயர்ந்த பரம்பொருள் அவர்களுடைய சாதி மதங்களையும் சமயங்களையும் மதிப்பதில்லை என்பாராய், “சாதியும் மதமும் சமயமும் காணா” என்று கூறுகின்றார். எனவே, மெய்யுணர்வுடைய மேலோர்க்கும் அவ்வேறுபாடு காண்பது இல்லை யென்பது கருத்து, ஆதி, காலம் இடம் முதலிய காரணக் கூறு பற்றித் தோன்றுவது. அனாதி - ஒரு காரணமும் பற்றாது என்றும் எங்கும் கேடின்றி இருப்பது.

தனுகர ணாதிகள் தாங்கடந் தறியும்ஓர்

அனுபவம் ஆகிய அருட்பெருஞ் ஜோதி                                        118

உரை : உடல் கருவி கரணங்களின் எல்லையைக் கடந்து அறியப்படும் ஒப்பற்ற அனுபவப் பொருளாவது அருட்பெருஞ் சோதி. எ.று.

தனு - உடம்பு. கரணாதிகள் கண் காது முதலிய இந்திரியங்களும் மனம் சித்தம் முதலிய கரணங்கள், இந்திரியக் காட்சிக்கும் மானதக் காட்சிக்கும் அப்பாலதாகிய யோகக் காட்சியால் உணரப்படும் சிவானுபவத்தை, “ஓர் அனுபவமாகிய அருட் பெருஞ் சோதி” என்று உரைக்கின்றார். தனு கரணாதிகளின் காட்சி பெரும்பாலும் உலகத்தோடு ஒட்டி நிற்பனவாதலின், உலகுகளைக் கடந்த யோகானுபவத்தைத் தனுகரணாதிகள் கடந்தவோர் அனுபவம் என்று குறிக்கின்றார்.

உனும்உணர் வுணர்வாய் உணர்வெலாம் கடந்த

அனுபவா தீத அருட்பெருஞ் ஜோதி                                        120

உரை : உள்ளத்தால் ஒன்றி யுணரும் உணர்வுருவாய், உணர்வு வகை யாவற்றிற்கும் அப்பாலாய், உணர்வுகள் நல்கும் அனுபவத்துக்கும் அப்பாலதாவது அருட் பெருஞ் சோதி. எ.று.

பொறிகளால் உற்றுணர்வதும், கரணங்களால் எண்ணி யறிவதும் இன்றிக் கருவி கரணாதிகளை ஒடுக்கி நோக்கும் யோகக் காட்சிக்கு உணர்வுருவாய்த் தோன்றுவது விளங்க, “உனும் உணர்வு உணர்வாய்” என வுரைக்கின்றார். யோகியர் தம்முடைய யோகத்தால் பல நுட்பங்களைக் காண்பவராதலின், “உணர்வெலாம்” எனவும், அவற்றால் விளையும் அனுபவங்கட் கெல்லாம் அதீதமாய் ஞான மயமாய் விளங்குதலால், “அனுபவாதீத அருட் பெருஞ் சோதி” எனவும் இயம்புகின்றார்.

பொதுவுணர் வுணரும் போதலால் பிரித்தே

அதுஎனில் தோன்றா அருட்பெருஞ் ஜோதி                                        122

உரை : கண் காது முதலிய கருவிகளால் பொதுவாகப் பொருளுண்மையை உணரும் போதன்றி, பொதுத் தன்மையின் நீக்கிச் சிறப்பாக நிலவும் அது என்று சுட்டிக் கூறுதற்காகாதது அருட் பெருஞ் சோதி. எ.று.

பொது நிலையிற் அது இது எனச் சுட்டியறிவது போலச் சிறப்புற நிலவும் பொருண்மை சுட்டறிவுக்கு எட்டாமை போல அருட் பெருஞ் சோதியும் அமைந்துளது என்பது கருத்து.

உளவினில் அறிந்தால் ஒழியமற் றளக்கின்

அளவினில் அளவா அருட்பெருஞ் ஜோதி                                        124

உரை : குருபரன் காட்டும் குறிப்பு வழி நின்று அறிவதை விடுத்து அளக்கும் பிரமாணங்களால் அளக்க வொண்ணாதது அருட் பெருஞ் சோதி. எ.று.

உளவு - குருநாதன் உபதேசித்துக் காட்டும் திருவருட் குறிப்பு. அளக்கும் அளவைகள், உண்மை துணிதற்குதவும் பிரமாணங்கள், அவை ஆறு என்றும், எட்டென்றும், பத்து என்றும் கூறுவர். ஆறு என்பவர் சைமினி என்றும், போதாயனர் எட்டு என்னும், வியாதர் அளவைகள் பத்து என்றும் கூறுவர். பின் வந்த ஆசிரியன்மார் காட்சி, கருத்து, ஆகமம் என மூன்றென்பர். சிவ பரம்பொருள் அளவைகட்கு எட்டாதது எனப்படுதலால், “அளவினில் அளவா அருட் பெருஞ் சோதி” எனப்படுகிறது. இவற்றின் விரிவை, இவ்வுரைகாரர் எழுதிய மணிமேகலை உரைப்பகுதியிற் காண்க.

என்னையும் பணிகொண் டிறவா வரமளித்

தன்னையில் உவந்த அருட்பெருஞ் ஜோதி                                        126

உரை : எளியவனாகிய என்னையும் தனக்கு ஆளாகக் கொண்டு சாகா வரம் தந்து அன்னை போற் காத்து அன்பு செய்வது அருட்பெருஞ்சோதி. எ.று.

தமக்குத் திருவருள் ஞானத்தை நல்கித் திருவருட் பணியே செய் தொழுகுவிப்பது பற்றி, “என்னையும் பணி கொண்டு” எனவுரைக்கின்றார். இறவா வரம் - சாகா வரம். பூதவுடம்பழியினும் ஆன்ம ஞான தேகமாகிய ஞான நுண்ணுடம்பு அழியா நிலை பெறத் தமக்கு இறைவன் அருளிய திறம் புலப்பட, “சாகா வரம் அளித்து” என்றும், அந்நிலையில் குற்றம் புரிந்து சாகா நலத்தை இழக்காமல் காத்துதவுதல் விளங்க, “அன்னையில் உவந்த அருட்பெருஞ்சோதி” என்றும் அறிவுறுத்துகின்றார் வடலூர் வள்ளற் பெருமான்.

ஓதிஓ தாமல் உறஎனக் களித்த

ஆதிஈ றில்லா அருட்பெருஞ் ஜோதி                                        128

உரை : நூல் பல கற்றும் பலவற்றைக் கல்லாமலும் இருப்பவும், கல்லாதவற்றின் பொருள் நலங்கள் எனக்கு உண்டாமாறு அளித்தருளியது ஆதியும் அந்தமுமில்லாத அருட்பெருஞ்சோதி. எ.று.

தொடக்கத்திற் பல நூல்களைக் கற்றுப் பின்னர் பலவற்றைக் கல்லாது ஒழியினும், கல்லாதவற்றின் நலம் பலவும் தமக்கு உண்டாயினமை தெரிவித்தற்கு, “ஓதாமல் உற எனக்களித்த அருட்பெருஞ் சோதி” என்று கூறுகின்றார். அருட் பெருஞ்சோதி ஆண்டவனாகிய சிவனுக்குத் தோற்றக் கேடுகள் இல்லாமையால், “ஆதி யீறில்லா அருட்பெருஞ் சோதி” எனப் புகழ்கின்றார். “ஆதியும் அந்தமுமில்லா அரும் பெருஞ் சோதி” ( எம்பா ) என்பது திருவாசகம்.

படிஅடி வான்முடி பற்றினும் தோற்றா

அடிமுடி எனும்ஓர் அருட்பெருஞ் ஜோதி                                        130

உரை : திருவடி நிலத்தில் தோயினும் திருமுடி வானத்தைத் தொட்டுக் கொண்டிருப்பினும் முடிவு காண வியலாத திருவடியும் திருமுடியும் உடையது எனப் போற்றப்படுவது ஒப்பற்ற அருட்பெருஞ் சோதி. எ.று.

படி - நிலவுலகம். வான் - வானம். முடி - சிவத்தின் திருமுடி. மாநிலம் சேவடியாகவும் வானம் திருமுடியாகவும் விளங்கினும், திருமாலால் திருவடியும் பிரமனால் திருமுடியும் காணப்படா தொழிந்தமையின், “தோற்றா அடிமுடி யெனும் ஓர் அருட்பெருஞ்சோதி” என்று மொழிகின்றார்.

பவனத்தின் அண்டப் பரப்பின்எங் கெங்கும்

அவனுக் கவனாம் அருட்பெருஞ் ஜோதி                                        132

உரை : உலகத்திலும், உலகத்தைத் தனக்குட் கொண்ட அண்டங்களிலும் எங்கும் எல்லாவற்றிலும் நிறைந்து நிற்கும் பரமனாகிய அவனுக்குப் பரம் அவனேயாவது அருட்பெருஞ்சோதி. எ.று.

பவளம் - நிலம் முதல் காற்றும் வானமும்ஈறாகக் கொண்ட உலகம். பவளம் - காற்று மண்டிலமுமாம். நில முதலிய பூதங்கள் ஐந்தும் கொண்டது உலகம். வானம் என்பது வெற்றிடமாதலின், புவனத்தைப் பவனம் என்று கூறுகின்றார். உலகங்களினும் அண்டங்களிலும் நிறைந்துள்ள பரமசிவனுக்கு மேற் பரம்பொருள் வேறின்மை பற்றி, “அவனுக்கு அவனாம் அருட்பெருஞ்சோதி” என அறிவிக்கின்றார்.

திவள்உற்ற அண்டத் திரளின்எங் கெங்கும்

அவளுக் கவளாம் அருட்பெருஞ் ஜோதி                                        134

உரை : விளங்குகின்ற அண்டப் பகுதிகளில் எவ்விடத்தும் நிலவும் சிவசத்திக்கு அச் சிவசத்தியே பரமாக்குவது அருட்பெருஞ் சோதி. எ.று.

அண்டங்கள் பலவும் வானத்தின்கண் ஒளித்திரளாய்க் காட்சி தருதலால், “திவளுற்ற அண்டத் திரள்” என்று கூறுகின்றார். திவளுதல் - விளங்குதல். “திவளும் வெண்மதி” ( திவ்யபிரபந் ) எனப் பெரியோர் வழங்குவது காண்க. உண்டை வடிவினவாதலால் அண்டம் எனப்படுகின்றன. “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்” என்பது திருவாசகம். அண்டங்கட்கு உருவும் ஆக்கமும் தருவது சிவசத்தி. சிவசத்தியைப் பெண்ணென்பவாகலின் “அவள்” என்றும், சிவசத்திக்கு மேலும் ஒரு சத்தியில்லாமை விளங்க, “அவளுக் கவளாம்” என்றும் இயம்புகின்றார். அண்டங்கள் பிண்டங்கள் அனைத்திற்கும் வடிவு தருவது சிவசத்தி. “வரும் வடிவெல்லாம் சத்தி” ( சிவ. சித்தி. சுபக். 67 ) எனச் சான்றோர் கூறுவர்.

மதன்உற்ற அண்ட வரைப்பின்எங் கெங்கும்

அதனுக் கதுவாம் அருட்பெருஞ் ஜோதி                                        136

உரை : வலி மிக்க அண்ட கோடிகள் அனைத்தினுள்ளும் எவ்விடத்தும் செறிந்திருக்கும் பொருள் ஒவ்வொன்றினுக்கும் மூல காரணமாவது அருட்பெருஞ்சோதி. எ.று.

மதன் - வலிமை. “மதனுடை நோன்றாள்” ( முருகு ) என நக்கீரர் வழங்குவது காண்க. அண்டங்களிலுள்ள பொருள் அத்தனையும் அவன், அவள், அது என்ற மூன்று பகுதிக்குள் அடங்குதலால், அவற்றுள் அவனுக்கு அவனாகவும் அவளுக்கு அவளாகவும் விளங்கும் அருட் சோதியாண்டவன், அதுவுக்கு அதுவாகவும் அமைந்துள்ளமையும் புலப்பட, “அதனுக்கதுவாம் அருட்பெருஞ்சோதி” என்று தெரிவிக்கின்றார். அவனும் அவளுமாகிய உயர்திணைப் பொருளின் கண்ணும், அதுவாகிய அஃறிணைப் பொருளின் கண்ணும் கலந்தொன்றிப் பரமாய் விளங்குவது அருட்பெருஞ்சோதி என விளக்குவது கருத்து.

எப்பாலு மாய்வெளி எல்லாம் கடந்துமேல்

அப்பாலும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி                                        138

உரை : மாயா காரியமாகிய அண்டங்களில் எப்பாலுமாய், அண்டங்கள் இயலும் வெளி வகை யாவும் கடந்து, அதற்கு மேலுள்ள வியோம வெளியாய் விளங்குவது அருட்பெருஞ்சோதி. எ.று.

காணப்படும் நிலவுலகுக்கும் அதனைச் சூழ விளங்கும் அண்டங்களுக்கும் இடமாய் நிலவுவது மாயா வெளி; இது மாயப் பாழ் என்றும் கூறப்படும். இந்த மாய வெளி யாவும் கடந்து அப்பால் உள்ளது வியோம வெளி; இது வியோம்ப் பாழ் எனவும் வழங்கும். அதன் கண்ணும் அதற்கப்பாலதாகிய உபசாந்த வெளியின் கண்ணும் அதுவதுவாய் நின்று திகழ்வது அருட்பெருஞ்சோதி என்பதாம்.

வல்லதாய் எல்லாம் ஆகிஎல் லாமும்

அல்லதாய் விளங்கும் அருட்பெருஞ் ஜோதி                                        140

உரை : எல்லாம் வல்லதாய் எல்லாப் பொருளுமாயும், எல்லாவற்றிற்கும் மேலாய் அல்லதாயும் விளங்குவது அருட்பெருஞ்சோதி. எ.று.

வரம்பில்லாத ஆற்றலுடைய தென்றற்கு, “வல்லதாய்” என்றும், எல்லாப் பொருள்களிலும் கலந்து அவையேயாயும் நிற்றலால், “எல்லாமாகி” என்றும், அவற்றாற் கலத்தலின்றித் தூயதாய் மேலாய் மேம்படுதலின், “எல்லாமும் அல்லதாய்” என்றும் சிறப்பிக்கின்றார்.

எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய் கண்டோர்

அப்பொருள் ஆகிய அருட்பெருஞ் ஜோதி                                        142

உரை : மெய்யுணர்வுடைய சான்றோர் எதனை மெய்ப்பொருள் என்று சொல்லுகின்றார்களோ அந்த மெய்ப்பொருளேயாவது அருட் பெருஞ்சோதி. எ.று.

பொருள்கள் எத்தன்மையவாயினும் அவற்றை யாவர் சொல்லினும், பொருள்களின் மெய்ம்மை காண்பது மெய்யுணர்வு என்பர் திருவள்ளுவர். அப்பெருமக்களால் கண்டறிந்து சொல்லப்படும் மெய்ப்பொருள் யாதோ அதுவே அருட்பெருஞ்சோதி என இதனால் விளக்குகின்றார் வடலூர் வள்ளல்.

தாங்ககி லாண்ட சராசர நிலைநின்

றாங்குற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி                                        144

உரை : உயிர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாகிய அண்டங்கள் அனைத்திலும் உள்ள தாவரம், சங்கமம் என்ற இருவகை யுயிர்களும் நிலையாக நின்று ஆங்காங்கு வாழ்விப்பது அருட்பெருஞ்சோதி. எ.று.

அண்டங்களின் படைப்பு ஆங்காங்கு உயிர்கள் வாழ்ந்து உய்தி பெறுவிப்பதாகலின், அவ்வண்டங்களைத் “தாங்கு அகிலாண்டம்” என வுரைக்கின்றார். அகில அண்டம் அகிலாண்டம் என வந்தது. உயிர்கள் பிறந்து வாழ்ந்து உய்தி பெறுங்காறும், தோன்றிய அண்டங்கள் தம்மில் மோதுண்டு கெட்டழியாவாறு நிலைபெற வேண்டுமாகலின், “நிலை நின்று” எனக் கூறுகின்றார். தாவரம் - நிலையாக நின்றாங்கு நின்று வாழ்கிற உயிர் வகை. சங்கமம் - மக்கள் விலங்கு பறவை முதலியவைகளாக இயங்கி வாழும் உயிர் வகை. தாவரத்தை அசரம் எனவும், சங்கமங்களைச் சரம் எனவும் வழங்குதலால் “சராசரம்” என வுரைக்கின்றார். சரம் அசரம் என்பன சராசரம் என இயைந்தன. அண்டங்கள் அனைத்தையும் உயிர் வகைகள் வாழ்தற் கிடமாக்கியுய்விப்பது அருட்பெருஞ்சோதி என்பது கருத்து.

சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம்புறத்

தத்திசை விளங்கும் அருட்பெருஞ் ஜோதி                                        146

உரை : சத்திமான்கள் யாவரும் மிக்குற்று விளங்குமாறு திசை தோறும் அகத்தும் புறத்தும் இலங்கச் செய்வது அருட் பெருஞ் சோதி. எ.று.

சத்திமான்கள் - சத்திகளையுடைய தலைவர்கள். திசை தோறும் உலகபாலர் உருவாய் நின்று, அத்திசைகளின் உள்ளும் புறமும் காத்தொழுகும் தேவர்களைச் “சத்தர்கள்” என்று குறிக்கின்றார். திசையெட்டும் காக்கும் சத்தர்களைக் கூறினாராயினும், படைத்தல் முதலிய தொழில்களைச் செய்தொழுகும் பிரமன், திருமால் முதலிய சத்தர்களையும் கொள்ளல் வேண்டும். கலைமகள் பிரமனுக்குச் சத்தி; பிரமன் அவட்குச் சத்திமான். இவ்வாறே பிற தேவர்களும் சத்தர்கள் எனப்படுவர். திசை காக்கும் தேவர்களில் இந்திரனாகிய சக்திமானுக்கு இந்திராணிசத்தி எனப்படுபவள் என அறிக.

சத்திகள் எல்லாம் தழைக்கஎங் கெங்கும்

அத்தகை விளங்கும் அருட்பெருஞ் ஜோதி                                        148

உரை : சத்திமான்களுக்கிடமாய் அவர்களின் இச்சா ஞானக் கிரியைகளை இயக்கும் சத்திகள் மிக்குற்று விளங்க, எவ்வெவ்விடத்தும் இருந்து அவ்வவர்க்கேற்ப வியலும் சத்திகட்கு விளக்கம் தருவது அருட்பெருஞ் ஜோதி. எ.று.

திருமாலுக்குத் திருமகளும், உருத்திரனுக்குத் துர்க்கையும், மகேசுரனுக்கு மகேசையும் போலச் சத்திகள் இருந்து இயக்குதற்கு ஏதுவாவது அருட்பெருஞ் சோதி என்பாராய், “அத்தகை விளங்கும் அருட் பெருஞ் சோதி” என்று கூறுகின்றார்.

முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும்

ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ் ஜோதி                                        150

உரை : முற்பட்டு நிற்கும் படைத்தல் முதலிய ஐந்து தொழில்களுக்குரிய பிரமன் முதலிய மூர்த்திகள் அனைவருக்கும் படைத்தல் முதலிய தொழில் ஐந்தையும் அளித்துச் செய்விப்பது அருட்பெருஞ்சோதி. எ.று.

உலகங்களின் தோற்றம், நிலைபேறு, ஒடுக்கம் முதலிய செயல்கள் முற்பட நிற்றலனி, “முந்துறும் ஐந்தொழில்” எனவும், அத்தொழில்களைப் பிரமனாய்ப் படைத்தலும், திருமாலாய்க் காப்பதும், உருத்திரனாய் ஒடுக்குவதும் செய்தலால், “மூர்த்திகள் பலர்க்கும் ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ்சோதி” எனவும் கூறுகின்றார். திருஞானசம்பந்தர், “விண் முதல் பூதலம் ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும், படைத்தளித் தழிப்ப மும்மூர்த்திகளாயினை” ( எழுகூற் ) என்பது காண்க.

பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்

அரிதினும் அரிதாம் அருட்பெருஞ் ஜோதி                                        152

உரை : பெரிய பொருள் எல்லாவற்றினும் பெரியதாயும், சிறிய பொருள் யாவற்றினும் சிறியதாயும் அரிய பொருள் அனைத்தினும் அரிதாயும் விளங்குவது அருட்பெருஞ்சோதி. எ.று.

பெருமைக்கும் சிறுமைக்கும் அருமைக்கும் எல்லையாக வுள்ள பொருள்கள் யாவற்றிற்கும் பெரிதாகவும் சிறிதாகவும் அரியதாகவும் இருக்கும் பரம்பொருள் என்பது இதன் கருத்து. இக் கருத்தை, “அணுத்தரும் தன்மையிலையோ காண்க, இணைப்பரும் பெருமையில¦சன் காண்க, அரியதில் அரிய அரியோன் காண்க” ( அண்டப் ) என மாணிக்கவாசகர் உரைப்பது காண்க.

காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்

ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி                                        154

உரை : கண் காது முதலிய வாயிற் காட்சியாலும், மானதம் யோகம் முதலியவற்றாலும் பெறலாகும் காட்சிப் பொருளுமாய், அப்பொருளைப் பயன் கொள்ளும் அறிவுப் பொருளுமாய் இலங்குவது அருட்பெருஞ்சோதி. எ.று.

கண் காது முதலிய ஐம்பொறிகளால் அறியும் அறிவு, வாயிற் காட்சி யெனவும் இந்திரியக் காட்சி எனவும் வழங்கும். இவை பலரும் நன்கறிந்தவையாதலின், “காட்சி” எனப் பொதுப்படப் புகல்கின்றார். இந்திரியங்களின் நீங்கி மனம் சித்தம் முதலிய அகக் கரணங்களாலும் யோக முறையாலும் காணும் காட்சி யறிவைக் “காணாக் காட்சி” என்று கூறுகின்றார். இருவகைக் காட்சிகளாலும் பெறலாகும் நல்லறிவைப் பயன்கொள்ளும் ஞானத்தை, “அது தரும் ஆட்சி” என அறிவிக்கின்றார். இக்காட்சிகளும் ஆட்சி யின்பமும் திருவருளின் இனிய துணையால் எய்துதலால், “காட்சியும் காணாக் காட்சியும் அது தரும் ஆட்சியுமாகிய அருட்பெருஞ் சோதி” என்று போற்றுகின்றார்.

இன்புறு சித்திகள் எல்லாம் புரிகஎன்

றன்புடன் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                                        156

உரை : இன்பம் தரும் சித்திகள் பலவற்றையும் செய்க, என்று மிக்க அன்புடன் அதற்கு வேண்டிய வன்மையை எனக்கு நல்கியருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

சித்திகள் - சித்திச் செயல்கள். தன்பால் அன்பு செய்பவர்க்கு இனிய பொருள்களை வெறுங் கையாலோ, அருள் நினைவாலோ இருந்தவிடத்தே யிருந்து வழங்குதல். இந்நாளில் புட்டப் பருத்திச் சாயிபாபா அவர்கள் இச் சித்திகள் பலவும் செய்வதைக் காண்கின்றோம். இச்சித்திகள் இன்பம் தரும் இயல்பின என்றற்கு, “இன்புறு சித்திகள்” எனப்படுகின்றன. இவை யாவும் இறைவனது அருளால் நிகழ்பவையென வற்புறுத்தற்குச் “சித்திகள் எல்லாம் புரிக என்று அன்புடன் எனக்கருள் அருட் பெருஞ் சோதி” என உரைக்கின்றார்.

இறவா வரமளித் தென்னைமேல் ஏற்றிய

அறவாழி யாம்தனி அருட்பெருஞ் ஜோதி                                        158

உரை : வரம்பு கடவாமல் என்னை யளவில் என்னை நிறுத்தி, மேனிலைக் குயர்த்திய அறக் கடலாய் விளங்குவது அருட் பெருஞ்சோதி. எ.று.

இயற்றப்படும் “இன்புறு சித்திகளால்” அறிவு மயங்கித் தமக்குரிய எல்லையைக் கடந்து துன்புறாமற் காத்து எல்லைக்கண் நிற்கப் பண்ணிச் சிவஞானத்தின் மேல் நிலையை எய்துவித்தமை விளங்க, “இறவா வரமளித்து என்னை மேலேற்றிய அறவாழி” என இறைவனைப் பாராட்டுகின்றார். அறவாழி - அருட் கடல். அறம் - ஞான வரம்பு. இறவா வரம் என்பதற்குச் சாகா வரம் என்று பொருள் கூறுபவரும் உண்டு.

நான்அந்தம் இல்லா நலம்பெற எனக்கே

ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ் ஜோதி                                        160

உரை : கெடுதல் இல்லாத திருவருளின்பத்தை நான் பெறுதற்கு அமைந்த ஞானானந்தத்தை எனக்கு நல்கி யருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

ஞானிகள் ஞானத்தால் இன்புறுவது அழிவில்லாததும் உயர்ந்ததுமாகிய திருவருள் இன்பத்தைப் பெறுதற் பொருட்டே என்பது இதனால் விளக்கப்படுகின்றது. ஞானம் இன்பத்தைச் சுரக்காதாயின், ஒருவரும் அதனை விரும்பார் என அறிக.

எண்ணிய எண்ணியாங் கியற்றுக என்றெனை

அண்ணிஉள் ஓங்கும் அருட்பெருஞ் ஜோதி                                        162

உரை : மனத்தால் எண்ணியவற்றை, எண்ணியவாறே செய்க என்று உரைத்து என்னுள் எழுந்தருளி அறிவொளி தந்து ஓங்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

செய்தற்குரியவை என்று தெளிந்து செயல் வகைகளைத் தெரிந்த பின் அவற்றைச் செய்து முடித்தற்குச் செய்பவர் திண்ணிய சிந்தையுடையவராதல் வேண்டும்; திண்மை யில்லாதபோது செயல் பயன்படாதாகும் என்பர் திருவள்ளுவர். அத்திண்மையை நல்குவது திருவருளாதலின், “எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்று எனை யண்ணி யுள்ளோங்கும் அருட் பெருஞ் சோதி” எனக் கூறுகின்றார். அண்ணுதல் - அடைதல். திருவருள் ஞானம் ஒளிமயமாதலின், அஃது உள்ளத்தில் தோன்றி மேன் மேலும் ஓங்குவது பற்றி, “உள்ளோங்கும் அருட் பெருஞ் சோதி” என்று உரைக்கின்றார்.

மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீஅது

ஆயினை என்றருள் அருட்பெருஞ் ஜோதி                                        164

உரை : நன்ஞானம் உற்று மெய்ப்பொருளாகிய சிவத்தைத் தெளிந்து கொண்டாயாகலின், சீவனாகிய நீ சிவமாயினை என உபதேசித்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

மெய்யுணர்வு உடையவர்க்கன்றி மெய்ப்பொருளாகிய சிவம் விளங்காதாகலின், “மேயினை மெய்ப்பொருள் விளங்கினை” என விளம்புகின்றார். சிவஞானத்தின் பயன் சிவயோகமாவதாதலால், “நீ அதுவாயினை” என உபதேசிக்கின்றார். அதுவாதல் - சிவமாம் தன்மையை எய்துவது. இதனைத் “தத்துவம் அசி” என்பதும் உண்டு. தத் - அது; துவம் - நீ; அசி - ஆகினாய் என இந்த மகாவாக்கியத்துக்குப் பொருள் கூறுவர்.

எண்ணிற் செழுந்தேன் இனியதௌ¢ ளமுதென

அண்ணித் தினிக்கும் அருட்பெருஞ் ஜோதி                                        166

உரை : மெய்யுணர்வாற் சிவனைச் சிந்திக்குமிடத்துச் சிவபரம் பொருள் சிந்தையிற் சுரந்து செழுமையான தேன் போலவும், இனிய தெளிந்த அமுது போலவும் இனிமைச் சுவை நல்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

மெய்யுணர்வு கொண்டு சிந்திக்க வேண்டுமென்பது பற்றி, “எண்ணில்” என எடுத்து மொழிகின்றார். புதுமையும் செழிப்பும் உடைய தேன் என்றற்குச் “செழுந்தேன்” என்று தெரிவிக்கின்றார். “சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன” எனத் திருநாவுக்கரசர் கூறுவது காண்க. தூய பாலையும் “தௌ¢ளமுது” என்பர். அண்ணித்தல் - சுரத்தல். “எண்ணித் தம்மை நினைந்திருந்தேனுக்கு அண்ணித்திட் டமுதூறும் என் நாவுக்கே” ( வெண்ணி ) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க.

சிந்தையில் துன்பொழி சிவம்பெறு கெனத்தொழில்

ஐந்தையும் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                                        168

உரை : மனத்தின்கண் தோன்றும் தீய நினைவுகளைப் போக்கிச் சிவமாம் தன்மையை எய்துக என்று சிவம் புரியும் தொழில் ஐந்தையும் செய்யும் தன்மையை எனக்கு அருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

தீய நினைவுகள் துன்பத்துக் கேதுவாதலின் அவற்றைப் போக்குக என்பாராய், “சிந்தையில் துன்பொழி” எனப் பணிக்கின்றார். சிவயோக போகம் எய்துமோ என்ற மனக்கவலை கொள்ளா தொழிக என்றற்குச் “சிந்தையில் துன்பொழி” என வுரைக்கின்றார் எனினும் பொருந்தும். சிவமாந் தன்மை பெற்றார் அதுவே காரணமாகச் சிவம் புரியும் செயல்களைச் செய்வர்; சிவக்கக் காய்ந்து நெருப்பாம் தன்மை பெற்ற இரும்பு, நெருப்பின் செயலைச் செய்வதுபோல என வரும் கொள்கை பற்றிச் “சிவம் பெறுக எனத் தொழில் ஐந்தையும் எனக்கு அருள் அருட்பெருஞ் சோதி” என மொழிகின்றார். ஐந்தொழில் - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன.

எங்கெங் கிருந்துயிர் ஏதேது வேண்டினும்

அங்கங் கிருந்தருள் அருட்பெருஞ் ஜோதி                                        170

உரை : எவ்வெப்பிறப்பில் எவ்வெவ்வுடம்பில் இருந்து கொண்டு உயிர்கள் எவ்வெவற்றைப் பெற விரும்பினாலும், அங்கங்கே அவ்வுயிர்கட்கு நல்கி வாழ்விப்பது அருட் பெருஞ் சோதி. எ.று.

எவ்வகையுயிர்களையும் வாழ்விப்பது ஈசன் செயலாதலின், அதனை விளக்குதற்கு “எங்கெங் கிருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கங்கிருந் தருள் அருட் பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார். “எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க் கிங்கே யென்றருள் புரியும் எம்பெருமான்” ( பிரம ) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. வேண்டுவன பெறாத வழி உயிர்கள் வாழ முடியாதாகலின், “அங்கங்கிருந்து” அருள்புரிவது இறைவற்குக் கடனாதல் இதனால் விளக்கப்படுகிறது. “வாழச் செய்த நல்வினை யல்லது ஆழுங்காலைப் புனை பிறிதில்லை” ( புறம் ) எனச் சங்கச் சான்றோர் உரைப்பது காண்க.

சகமுதல் புறப்புறம் தங்கிய அகப்புறம்

அகம்புறம் முற்றுமாம் அருட்பெருஞ் ஜோதி                                        172

உரை : உலகனைத்துக்கும் அகம், புறம், அகப்புறம், புறப்புறம் எனவுள்ள பக்கம் எங்கும் தங்கி நிறைந்திருப்பது அருட் பெருஞ் சோதி. எ.று.

சகம் - உலகம். உலகிற் பொருள்கள் எல்லாவற்றிற்கும் அகம் எனவும் புறம் எனவும், அகமும் புறமும் ஒட்டிய அகப்புறமும் புறப்புறமும் எனப் பக்கக் கூறுகள் காணப்படுவதுண்டாகலின் அவையெல்லாம் அடங்க, “புறப்புறம், அகப்புறம், அகம், புறம்” என வுரைக்கின்றார். பக்கக் கூறுகள் எங்கும் தங்குதலாலும், அவற்றுள் குறைவற நிறைதலாலும் இறைவனைத் “தாங்கிய” எனவும், “முற்றுமாம்” எனவும் விதந்து கூறுகின்றார். அருட் பெருஞ் சோதி யுருவினனாதல் பற்றி, “அருட் பெருஞ் சோதி” எனக் குறித்தருளுகின்றார்.

சிகரமும் வகரமும் சேர்தனி உகரமும்

அகரமும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி                                        174

உரை : திருவைந்தெழுத்தில் நிற்கும் சிகர வெழுத்தும் வகர வெழுத்தும் பிரணவத்தைச் சேர்ந்த அகர வெழுத்தும் உகர வெழுத்தும் ஆகியது அருட்பெருஞ் சோதி. எ.று.

சிவயநம என்ற திருவைந்தெழுத்தினுள் சிவத்தைக் குறிக்கும் ‘சி’ என்ற எழுத்தும், சிவசத்தியாகிய அருளைக் குறிக்கும் ‘வ’ என்ற எழுத்தும், ஓங்காரப் பிரணவத்துள் நாத கலையைக் குறிக்கும் ‘அ’கர வெழுத்தும், விந்து கலையைக் குறிக்கும் ‘உ’கர வெழுத்தும் சிவ பரம் பொருளையே குறிப்பனவாம் என்பது கருத்து.

உபரச வேதியின் உபயமும் பரமும்

அபரமும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி                                        176

உரை : தரிசன வேதி பரிச வேதி என்ற இரண்டுமாய், ஒன்றிற்கொன்று பரமும் அபரமுமாகியது அருட் பெருஞ் சோதி. எ.று.

கட்பார்வையால் ஒரு பொருளை மற்றொன்றாக மாற்றுவது தரிசன வேதி; ஒரு பொருளைக் கையால் தொட்டும் தீண்டியும் வேறொன்றாக்குவது பரிச வேதியாம். வேதி - வேறு ஒன்றாக மாற்றுவது. இவ்வித்தையை இரச வாதம் என்பதுமுண்டு. இவ்விருவகை வேதியும் ஒன்று நிகழும்போது முற்படுவது பர மெனவும், மற்றது அபரமாகவும் கருதப்படும். தரிசன வேதி சிறக்கும்போது பரிச வேதி அபரமாகவும், பரிச வேதிக்கண் தரிசன வேதி அபரமாகவும் எண்ணப்படும், செயல் வகையால் வேறுபடினும் பொருளியல் பொன்றேயாதலால், “பரமும் அபரமுமாகிய அருட் பெருஞ் சோதி” என மொழிகின்றார்.

மந்தணம் இதுஎன மறுவிலா மதியால்

அந்தணர் வழுத்தும் அருட்பெருஞ் ஜோதி                                        178

உரை : வேதரகசியம் என்று குற்றமில்லாத அறிவால் தெளிந்து வேதியர்களால் ஓதப்படுவதும் அருட் பெருஞ் சோதி. எ.று.

மத்தணம் - இரகசியம். மந்தமாக ஓதப்படும் மந்திரமுமாம். தூய வுணர்வுடைய அருளாளர்களால் ஓதப்படுவது பற்றி, “மறுவிலா மதியால் அந்தணர் வழுத்தும் அருட் பெருஞ் சோதி” என்று கூறுகின்றார். அந்தணர் - ஞானிகளாகிய அருளாளர்.

எம்புயக் கனிஎன எண்ணுவார் இதய

அம்புயத் தமர்ந்த அருட்பெருஞ் ஜோதி                                        180

உரை : எம்முடைய கையின்கண் அமர்ந்த இனிய கனியாம் என்று நினைக்கின்ற சான்றோருடைய இதயமாகிய தாமரைக்கண் எழுந்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

புயம் - ஆகு பெயரால் கையைக் குறிக்கின்றது. கையின் மேற் கூறு புயம் எனப்படும். அங்கை நெல்லிக் கனி என்னும் வழக்கு “எம்புயக் கனி” என உரைக்கப்படுகிறது. எம்முடைய அங்கையில் உள்ள தூய இனிய கனி போல்பவன் எங்கள் இறைவன் என எண்ணிப் போற்றி மகிழ்கின்ற பெரியோர்களை, “எம்புயக் கனி யென எண்ணுவார்” என்று புகழ்கின்றார். “நெல்லிக் கனியைத் தேனைப் பாலை” ( புணர்ச் ) என மணிவாசகர் எண்ணுவது காண்க. இதய அம்புயம் - இதயமாகிய தாமரை. “மனத்திடை மன்னிய மன்னே” ( கோயிற் ) என்பது திருவாசகம்.

செடிஅறுத் தேதிட தேகமும் போகமும்

அடியருக் கேதரும் அருட்பெருஞ் ஜோதி                                        182

உரை : மெய்யடியார்க்குக் குற்றங்களைப் போக்கி வன்மையான தேகத்தையும் அதனாற் பெறலாகும் இன்பத்தையும் நல்குவது அருட்பெருஞ் சோதி. எ.று.

செடி - குற்றம் காரணமாக வுண்டாகும் துனபம் உடம்பினால் நோயும் குற்றமும் பெருகி இன்றியமையாத வலிமையைச் சிதைப்பதால், அவற்றை போக்கி யருளும் திருவருள் நலத்தைச் “செடியறுத்தே திடதேகமும் போகமும் தரும் அருட் பெருஞ் சோதி” என மொழிகின்றார். அடியர் - சிவனடியே சிந்திக்கும் திருவுடைய நன்மக்கள், நோயும் துன்பமும் அடியாருடைய சிந்தனையைச் சிதைத்தலால் “அடியருக்கே” என எடுத்தோதுகின்றார். தேகம் - உடம்பு. திடமான தேகமுடையார்க்கே உலகியற் சுகபோகங்களை இனிது நுகர்தற்கு இயலுமாதலின், “திட தேகமும் போகமும்” எனவும், தேக ஓகங்களை நுகர்ந்து கழித்தாலன்றிப் பிறவி யறாமையின், “தேகமும் போகமும் அடியருக்கே தரும் அருட் பெருஞ் சோதி” எனவும் இயம்புகின்றார். தேகமும் போகமும் சிவசிந்தனையாற் பெறலாம் என்பது கருத்து.

துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை

அன்பருக் கேதரும் அருட்பெருஞ் ஜோதி                                        184

உரை : துன்ப வேதுவாகிய மனக்கவலைகளை நீக்கி, நின்மல துரியக் காட்சியிற் பெறலாகும் இன்பத்தை மெய்யன்பர்களுக்கு நல்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

இறைவன் திருவடி நினைக்கும் அன்பர்களின் மனக் கவலையை மாற்றும் மருந்தாகலின், “துன்பறுத்து” என்று சொல்லுகின்றார். உடம்பின்கண் மேலும் கீழும் இயங்குமிடத்து ஆன்மா எய்தும் துரிய நிலை மலவாதனையைக் கழித்தற் பொருட்டாதலின், அதனின் நீங்கி மலத் தொடர்பின்றிப் புருவ நடுவினின்று மேனோக்கிச் சிவக்காட்சி பற்றி எழுமிடத்து உளதாகும் துரிய நிலை சிவ துரியமாகும்; அதனை நின்மல துரியம் என்றும் சான்றோர் கூறுவர். நின்மல துரியத்திற் பெறும் சிவக் காட்சியின்பம் “சிவ துரிய சுகம்” எனப் படுகிறது. ஞானமாகிய அன்புடையார்க்கு இவ்வின்பம் இனிது எய்துவது பற்றி “அன்பருக்கே” எனத் தெளிவிக்கின்றார். இதனைச் சுத்தாவத்தையென்று துகளறு போதம் (52) சொல்லுகின்றது.

பொதுஅது சிறப்பது புதியது பழையதென்

றதுஅது வாய்த்திகழ் அருட்பெருஞ் ஜோதி                                        186

உரை : சிவ பரம்பொருள் பொதுவென்றும், ஒரு திறத்தோர்க்கே சிறப்பாக வுரியது என்றும், புதுமையானதென்றும், பழமையானதென்றும் ஓதுபவர்கட்கு அவரவர் ஓதும் பொருளாய் விளங்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

எந்நாட்டவர்க்கும் இறைவனாதலால் “பொது” எனவும், தென்னாடுடைய சிவனாதலின் “சிறப்பு” எனவும் கூறுதலுண்மை பற்றி, “பொதுவது சிறப்பது” என்று புகல்கின்றார். பொதுவைச் சாமானியம் எனவும், சிறப்பை விசேடம் எனவும் விளம்புவர். முன்னைப் பழம்பொருட்கெல்லாம் பழமையாவதுபற்றியும் புதியவாய்த் தோன்றுவன யாவற்றுக்கும் புதுமையுடையதாதல் பற்றியும், “புதியது பழையது” எனப் போற்றுகின்றார். யாவர் யாது கருதினும் அவரவர்க்கு அதுவாய் விளங்கும் இயல்பு கண்டு, “அதுவதுவாய்த் திகழ் அருட் பெருஞ் சோதி” என்று கூறுகின்றார். அறிவு காட்சிக்குத் தெற்றெனத் தெளிய விளங்குவதுணர்த்தற்குத் “திகழ் அருட் பெருஞ் சோதி” என மொழிகின்றார்.

சேதனப் பெருநிலை திகழ்தரும் ஒருபரை

ஆதனத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி                                        188

உரை : தூய சைதன்னியமாய் விளங்கும் ஞானப் பெருநிலையின் கண் விளக்கமுறும் பரையாகிய சிவசத்தியை இருக்கையாகக்கொண்டு விளங்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

பரஞான வெளியின்கண் தூய சைதன்னியமாய்ச் சிவம் விளங்குதலை யுணர்த்தற்கு, “சேதனப் பெருநிலை” எனக் கூறுகின்றார். ஞானமே யுருவாய் ஞானாகாசத்தில் ஒளிர்தலால், அதனைச் “சேதனப் பெருநிலை” எனச் சிறப்பிக்கின்றார். சேதனம் - அறிவு. அறிவாயமைவது சைதன்னியம். சுத்த சைதன்னியம் காட்சிப்படுவது அருட்சத்தியின் கண் என்பது பற்றி, “ஒரு பரை யாதனத்து ஓங்குவ” தென வுரைக்கின்றார். பரை - சிவசத்தி. இது பராசத்தி என்றும், அருட்சத்தி என்றும் வழங்கும். பரசிவம் - சிவமும் சத்தியுமாய்ப் பிரிந்து விளங்குமிடத்து, சிவத்துக்குச் சத்தியிடமாகவும், சத்திக்குச் சிவம் இடமாகவும் ஞானக் காட்சிக்குப் புலப்படுவது பற்றி, “ஒரு பரை ஆதனத்து ஓங்கிய அருட் பெருஞ் சோதி” எனச் சொல்லுகின்றார். பரம்பொருளாவதால் பரையெனப்படுகிறது. ஆதனம் - இடம்.

ஓமயத் திருவுரு உவப்புடன் அளித்தெனக்

காமயத் தடைதவிர் அருட்பெருஞ் ஜோதி                                        190

உரை : ஓங்கார மயமாகிய தமது திருவுருவை எளியனாகிய என்னுடைய உள்ளத்தின்கண் காட்சியருளித் துன்பவுணர்வுகளாய தடைகளைப் போக்கி யருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

ஓம் மயம் - பிரணவம். இதனை ஓங்காரம் எனவும் கூறுவர். உயிர்கள் தோறும் ஓங்கார வுருவாய் நிற்கின்றானென உணர்ந்தோர் உரைப்பதால், “ஓமயத் திருவுரு வுவப்புட னளித் தெனக்கு” என்று உரைக்கின்றார். “ஊனங்கத் துயிர்ப்பாய் உயிர்க்கெல்லாம் ஓங்காரத் துருவாகி நின்றான்” ( வலிவலம் ) என்று நம்பியாரூரர் கூறுகின்றார். “உய்ய வென்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா” ( சிவபுரா ) என மாணிக்கவாசகர் ஓதுவது காண்க. ஞானக் காட்சியுடையார்க்குத் தலையும் நெஞ்சும் மூலாதாரமும் இடமாக நின்று ஓங்காரம் காட்சிப் படுமாயினும், திருமூலர் முதலியோர் அதனை, “நடுவெழு தீபம்” ( ஓம் என்றெழுப்பி ) எனக் கூறுதலால் சிவபுராணம், “உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா” என விளம்புகின்றது. பிரணவக் காட்சி பெற்றுப் பிறவிக் கேதுவாகிய துன்பங்களைத் துடைத்துக் கொண்டமை புலப்பட வடலூர் வள்ளல், “உவப்புடன் அளித்து எனக்கு ஆமயத் தடை தவிர் அருட் பெருஞ் சோதி” என்று கூறுகின்றார். ஆமயம் - துன்பம். “ஆமயம் தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார்” ( தனி. தாண் ) என்று திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. சிந்தையைக் கலக்கித் தெளிவுறாதவாறு சிதைப்பதால் துன்பத்தை ஆமயத் தடை என்று அறிவுறுத்துகின்றார்.

எப்படி எண்ணிய தென்கருத் திங்கெனக்

கப்படி அருளிய அருட்பெருஞ் ஜோதி                                         192

உரை : இவ்வாழ்வில் என்னுடைய மனம் எவ்வாறு எண்ணுகிறதோ அவ்வாறே செயற் பயன் எய்துமாறு செய்வது அருட் பெருஞ் சோதி. எ.று.

உலகியற் சூழ்நிலையில் தாம் வாழ்வாங்கு வாழ்தல் தோன்ற “இங்கு” எனவும், தாம் எண்ணுவன எண்ணியாங்கு எய்துவது புலப்பட, “என் கருத்து எப்படி எண்ணியது இங்கு எனக்கு அப்படியருளிய அருட் பெருஞ் சோதி” என்று உரைக்கின்றார். வாழ்வில் மக்கள் எண்ணுவன எண்ணியாங்கு எய்துதல் அரிதாகலின், இதனை விதந்து கூறுகின்றார். தவமுடையவர்க்கே எண்ணியன எண்ணியாங்கு எய்தப்படும் எனத் திருவள்ளுவர் தெரிவிக்கின்றார் என அறிக.

எத்தகை விழைந்தன என்மனம் இங்கெனக்

கத்தகை அருளிய அருட்பெருஞ் ஜோதி                                        194

உரை : இவ்வுலகில் என் மனத்தால் பொருள்கள் எவ்வியல்பில் அமைய வேண்டுமென நினைக்கப்பட்டனவோ, அவ்வகையில் குற்றமின்றி அமையச் செய்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது, என்ற வுலக வழக்கால் நினைந்தவை நினைந்த இயல்பில் நிகழ்வதில்லை என்பது விளங்கும். அருட் பெருஞ் சோதியின் இன்னருளால் நினைப்பவை நினைப்புக்கு ஒத்த வகையில் நிகழும் என்பதை விளக்குதற்கு, “இங்கு என் மனம் எத்தகை விழைந்தன எனக்கு அத்தகை யருளிய அருட் பெருஞ் சோதி” என்று இதனால் அறிவிக்கின்றார். நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கும் என்பது அருட் சோதி ஆண்டவன் அருளுடையார்க்கு இல்லை யென்பது கருத்து.

இங்குறத் திரிந்துளம் இளையா வகைஎனக்

கங்கையில் கனியாம் அருட்பெருஞ் ஜோதி                                        196

உரை : இவ்வுலகியலில் மனம் மிகவும் வேறுபட்டுச் சோர்வடையாதவாறு எனக்கு எல்லாம் இனிதுண்டாக அங்கையி லேந்திய நெல்லிக் கனி போல் நன்கு எய்த அருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

இங்கு என்றது இவ்வுலகியலை நோக்கி என அறிக. நினைப்பன பலவும் முக்குண வயத்தால் முறை திரிந்து குற்றப்பட்டுத் துன்பம் விளைவித்தலால் மனம் சோர்ந்து நிலை கெடுதல் உலகியல் வாழ்வில் இயற்கையாதலால், “இங்கு மனம் உறத் திரிந்து இளையா வகை” என இயம்புகின்றார். நினைத்தது நினைத்தபடி நிகழ்வதை வற்புறுத்தற்கு, “அங்கையிற் கனி” என்று எடுத்துரைக்கின்றார். கனி - நெல்லிக்கனி.

பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளிஎன்

ஆருயிர்க் குள்ஒளிர் அருட்பெருஞ் ஜோதி                                        198

உரை : எதனைச் செய்யினும் உலகம் உய்தல் வேண்டுமென எண்ணிச் செய்க, என்று கட்டளையிட்டு அவ்வாறே செய்தொழுகுமாறு அருள்புரிந்து அரிய உயிர்க்குள் எழுந்தருளி விளங்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

தனக்கென வாழாது பிறர்க் குரியாளராய் வாழ்தல் வேண்டுமென எல்லா அற நூல்களும் அறிவுறுத்தலால், “பாருயப் புரிக எனப் பணித்து” என்றும், பணித்ததோடன்றிச் செய்தற் கேற்ற அறிவும் ஆற்றலும் நல்கினமை விளங்க, “எனக்கு அருளி” என்றும், அந்த நல்லறத்தை மறவாமற் கடைப்பிடிக்குமாறு உயிரின்கண் உணர்வு வடிவாய் நின்று உதவினமை புலப்பட, “என் ஆருயிர்க்குள் ஒளி அருட் பெருஞ் சோதி” என்றும் இசைக்கின்றார். நல்லறத்தைக் கடைப்பிடித்து ஒழுகுதற்கு உரிய துணை புரிதற்கு இடமாகும் அருமை யுடைமை இனிது விளங்க “ஆருயிர்” என்று சிறப்பிக்கின்றார்.

தேவியுற் றொளிர்தரு திருவுரு உடன்என

தாவியில் கலந்தொளிர் அருட்பெருஞ் ஜோதி                                        200

உரை : உமாதேவியின் கூறு பொருந்தி மாதொரு பாகனாகிய திருவுருவத்துடன் என்னுடைய உயிரிற் கலந்து விளங்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

உமாதேவியின் கூறு சிவன் திருமேனியின் இடப்பாகத்தே விளங்குதலால் “தேவியுற் றொளிர்தரு திருவுரு” என்று புகழ்கின்றார். “நீல மேனி வாலிழை பாகத் தொருவன்” ( ஐங் ) என்பர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இடப்பாகம் பசுமை நிறங் கொண்டு விளங்குவது பற்றி, “தேவியுற் றொளிர் தரு” எனவும், தேவியொடு கூடிய திருவுருவைத் “திருவுரு”வெனவும் சிறப்பிக்கின்றார். ஆவி - உயிர். உயிரின் கண் உணர்வொளியாய்த் திகழ்தலால், “ஆவியிற் கலந்தொளிர் அருட் பெருஞ் சோதி” என்று கூறுகின்றார்.

எவ்வழி மெய்வழி என்பவே தாகமம்

அவ்வழி எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                                        202

உரை : எந்தச் சமய நெறி மெய்ம்மை நெறி என்று வேதங்களும் ஆகமங்களும் கூறுகின்றனவோ அந்நெறியை எனக்கு அருள்வது அருட் பெருஞ் சோதி. எ.று.

உலகிற் பற்பல சமயங்களும் தத்தம் நெறியே மெய்ந்நெறி என்று கூறுமாயினும், பிறவற்றோடு முரணிப் பிணங்குவது இயற்கையாகலின், பிணக் கொழித்துச் சமரசம் காண்பதற்கு வேதாகமங்கள் உதவுதல் பற்றி, “வேதாகமம் எவ்வழி மெய்வழி என்ப அவ்வழி எனக்கு அருள் அருட் பெருஞ் சோதி” என்று வடலூர் வள்ளல் கூறுகின்றார். வேத நெறியினரும் ஆகம நெறியினரும் இடையறாத பிணங்கி வேறுபடினும் முடிவில் ஆன்ம நேய உரிமைப்பாட்டில் ஒத்தல் வேதாகம நெறியை விதந்துரைக்கின்றார்.

வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள்

ஐயறி வளித்த அருட்பெருஞ் ஜோதி                                        204

உரை : மண்ணுலக மக்களும் விண்ணகத் தேவரும் என்னை வியந்து வாழ்த்துமாறு எனக்கு அருள் ஞானப் பேற்றுக்குரிய மன வுணர்வை எனக்கு உதவு யருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

ஐந்தாகிய அறிவு மனவுணர்வு. மனவுணர்வு ஐந்தாகிய பொறிவாயிற் செல்லாமல் திருவருள் ஞான நெறிக்கண் ஒன்றி நிற்பது சிறப் பாதலின் அதனை, “அருள் ஐயறிவு” எனப் புகன்று மொழிகின்றார். ஒன்றி நிற்பதைத் தாரணைக்கண் நிற்றல் எனப் பரிமேலழகர் ( குறள். 354 ) கூறுவர். பொறி தோறும் சென்றுணரும் செயலுடைமை பற்றி மனம், ஐயறிவு எனப்படுகிறது. அருணெறியில் மனவுணர்வு ஒன்றி நிற்பதன் அருமை நோக்கி மக்களும் தேவரும் வியந்து பாராட்டல் இயல்பாகலின், “வையமும் வானமும் வாழ்த்திட” என்று கூறுகின்றார்.

சாமா றனைத்தும் தவிர்த்திங் கெனக்கே

ஆமா றருளிய அருட்பெருஞ் ஜோதி                                        206

உரை : உலகில் மக்கள் பலரும் சாதற் கேதுவாகிய நெறிகள் அனைத்தையும் நீக்கிச் சாவாப் பெருநிலையை எனக்கு உதவுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

திருவருள் ஞானப் பேற்றுக்கு ஆகாத நெறிகள் யாவும் வெறிதே செத்து மடிதற்கு ஏதுவாமாதலால் அவற்றைச் “சாமாறு” எனக் குறிக்கின்றார். திருவருள் ஞானப் பேறு எய்தினோர் இம்மையிலும் அம்மையிலும் சாத லொழிந்து சிவானந்த ஞான வுடம்புற்று எக்காலத்தும் வாழ்வர் என்பது கருத்து.

சத்திய மாம்சிவ சத்தியை ஈந்தெனக்

கத்திறல் வளர்க்கும் அருட்பெருஞ் ஜோதி                                        208

உரை : சத்தாய் நித்தியமாய் உள்ளதாகிய சிவத்தின் அருட் சத்தியை எளியனாகிய எனக்குத் தந்து, அந்த அருளாற்றலில் என்னை வளர்த்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

சத்தாயும் நிலைபேறுடையதாயும் உள்ள இயல்பு சத்தியம் எனப்படுகிறது. சிவசத்தி - சிவத்தின் அருட் சத்தி; இது திருவருள் எனவும் வழங்கும். உலகியலிற் பொருளினும் வலி யுடையது பிறிதில்லையாதல் போலத் திருவருள் வாழ்வியலில் அதனிற் பெருமையும் வன்மையுமுடையது பிறிதில்லையாதலால் திருவருளைச் “சிவசத்தி” என்று சிறப்பிக்கின்றார். “அருளிற் பெரியது அகிலத்தில் வேண்டும் பொருளித்தலையிலது போல்” ( 31 ) என்பது திருவருட் பயன். அருளாற்றல் - அருள் ஞான வின்பம்.

சாவா நிலைஇது தந்தனம் உனக்கே

ஆவா எனஅருள் அருட்பெருஞ் ஜோதி                                        210

உரை : திருவருளின்ப வாழ்வு வெறிது சாவாத நிலைமையைத் தருவதாதலால் இதனை உனக்குத் தந்துள்ளோம்; ஆகவே இதனைப் பெறுதற்கு என்பால் வருக என அழைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

சாவா நிலை - சாதல் இல்லாத வாழ்க்கை. இதனை நல்குவது திருவருள் ஞானமாதலால் ஞான வாழ்வருளிய திறத்தை “உனக்குத் தந்தனம், ஆ வா என அருள் அருட் பெருஞ் சோதி” என வுரைக்கின்றார். அருளே நினைந்து அருளே மொழிந்து அருளே செய்தொழுகுவது, அருள் ஞான வின்ப வாழ்வாம் என அறிக. வடலூர் வள்ளலின் வாழ்வு முழுதுமே இதற்கு இலக்கியமாம்.

சாதியும் மதமும் சமயமும் பொய்என

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி                                        212

உரை : சாதியென்றும் மதமென்றும் சமயமென்றும் கூறப்படுபவை பொய்யாகப் புணர்க்கப்பட்டவையென்று இளமைப் போதிலேயே எனக்கு அறிவுறுத்தியது அருட்பெருஞ்சோதி. எ.று.

சாதி சமயப் பிரிவுகள் மக்களிடத்தே ஆன்ம நேயம் தோன்றா தொழிதற்குத் தடையாதல் பற்றி அருள் வாழ்வின் தொடக்கத்தேயே அவை யாவும் பொய்யாகப் புனையப்பட்டவை என வள்ளலார் அறிவுறுத்தப்பட்டமை விளங்க, “சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட் பெருஞ் சோதி” எனக் கூறுகின்றார். மதம் - சமயத்தின் கொள்கை வகை. சிவ மதம், விஷ்ணுமதம், கௌமார மதம், சாக்தமதம் என்றாற் போல்வன. ஆதி என்றது வடலூர் வள்ளல் திருவருள் உணர்வு பெற்ற இளமைக் காலம். அருட் சோதி யாண்டவன் அவர்க்கு ஞானகுரு வடிவிற் போந்து அறிவித்தமை பற்றி, “ஆதியில் உணர்த்திய அருட் பெருஞ் சோதி” என மொழிகின்றார்.

மயர்ந்திடேல் சிறிதும் மனந்தளர்ந் தஞ்சேல்

அயர்ந்திடேல் என்றருள் அருட்பெருஞ் ஜோதி                                        214

உரை : மயக்க முறாதே என்றும், சிறிதளவும் மனம் சோர்ந்து அஞ்சுதல் ஒழிக என்றும், தளர்வு கொள்ளாதே என்றும் உபதேசித்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

முக்குணங்களும் கணந்தோறும் மாறுவனவாதலால் அவற்றால் அறிவு மயங்கலாகாது என்றற்கு, “மயர்ந்திடேல்” என்று கூறுகின்றார். மயக்கம் உயிர்க் குற்றமாதலால் அதனை முதற்கண் எடுத்து மொழிகின்றார். உயிர்க் குற்றமாதலால் அதனை முதற்கண் எடுத்து மொழிகின்றார். உயிர்க் குற்றத்தை காம வெகுளி மயக்கம் என மூன்றாக வகுத்துத் திருவள்ளுவர் கூறுவது காண்க. மனம் அறிவு வழி நிற்கும் கருவியாதலின், அதனை இடையில் வைத்தும், தளர்தலும் அஞ்சுதலும் அதன் இயல்பாதலால், “சிறிதும் தளர்ந்து அஞ்சேல்” என்றும் இயம்புகின்றார். அயர்ச்சி மனத்தின் வழி நிற்கும் தேகத்தில் தோன்றுவது பற்றி, “அயர்நிதிடேல்” என அறிவுறுத்துகின்றார்.

தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்

ஆசறத் தெரித்த அருட்பெருஞ் ஜோதி                                         216

உரை : ஞான வொளி மிகுமாறு விளங்கும் சைவத் திருநெறியின் பொருளியல்பைக் குற்றமறத் தெரிவித்தருள்வது அருட் பெருஞ் சோதி. எ.று.

தேசு - ஒளி; ஈண்டு ஞான வொளி மேற்று. சிவஞானத்தின் அருளொளி இனிது விளங்கச் செய்வது திருநெறித் தமிழ் எனப்படும் சைவத் திருமுறையின் இயல்பாதலால் அதனைச் :தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்” என்று தெரிவிக்கின்றார். தாம் பாடியருளும் திருமுறையைத் “திருநெறிய தமிழ்” எனத் திருஞானசம்பந்தர் கூறுவது காண்க. திருநெறித் தமிழின் பொருணலம் கண்டவர், “மெய்த் தவத்தோர் விரும்பும் மன்னு சோதி ஈசனோடே மன்னியிருப்பாரே” ( வலிவலம் ) என ஞானசம்பந்தர் உரைக்கின்றார். ஆசு - குற்றம். தெரிவித்தல் - தெரித்தல் என வந்தது.

காட்டிய உலகெலாம் கருணையால் சித்தியின்

ஆட்டியல் புரியும் அருட்பெருஞ் ஜோதி                                        218

உரை : யாவரும் காண நின்ற உலகமெங்கும் திருவருளால் ஞான யோகக் கிரியா சித்திகளால் யாவற்றையும் இயக்கி யருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

காண நிற்கும் உலகைக் “காட்டிய வுலகெலாம்” என்று கூறுகின்றார். திருவருள் ஞானம் கருணை யெனக் குறிக்கப்படுகிறது. அருள் ஞானிகளின் செயல் திறம் ஞான சித்தி என்றும், யோக சித்தியென்றும், காரிய சித்தி யென்றும் வகுத் துரைக்கப்படுவது பற்றி அம்மூன்றாலும் செயற்படும் நல்லன யாவும், “சித்தியின் ஆட்டியல்” எனப்படுகின்றன. சித்தி - நற்செயல். சித்திகளைச் செய்யும் திறனைச் சித்தாடுதல் என உலகம் வழங்குவது பற்றி, “சித்தியின் ஆட்டியல்” எனக் கூறுகின்றார். சித்தியாதல் - பயன்பட நிறைவுறுதல். அரியனவும் அற்புதமானவையும் ஆகிய செயல்கள் சித்தி என வழங்குதலுண்டு.

எங்குலம் எம்மினம் என்பதொண் ணூற்றா

றங்குலம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி                                        220

உரை : இவர் எங்கள் குலத்தவ ரெனவும், எங்கள் இனத்தவரெனவும் உரைப்ப தெல்லாம் தொண்ணூற்றாறு அங்குல வுயர முடைய உடம்பைக் கொண்டு கூறுவதாம் என அறிவித்தருள்வது அருட் பெருஞ் சோதி. எ.று.

உயிர்க்கு உருவ மில்லாமையால் அது நிற்கும் உடம்பைக் கொண்டு தான் உலகவர், இவர் எங்கள் குலத்தவ ரெனவும், இவர் எங்கள் இனத்தவர் எனவும் உரைக்கின்றார்கள்; குலப் பிரிவும் இனப் பிரிவும் பிறவும் ஆன்மாவுக்கு இல்லை என்பது கருத்து. இனம் - சாதி. ஓர் இனத்துக்குள் குலம் பல பேசுத லுண்டாகையால் குலத்தையும் இனத்தையும் பிரித்துக் கூறுகின்றார். மக்களுடம்பின் உயரம் எட்டடியெல்லை யுடைய தென்பது பற்றி, “தொண்ணூற்றாறு அங்குலம்” எனக் கூறுகின்றார். அங்குலம் பன்னிரண்டு கொண்டது ஒரு அடியென அறிக. அங்குலத்தை விரலெனக் கொண்டு பன்னிரண்டு விரலளவு ஒரு சாண் என்றும், சாண் எட்டுக் கொண்டது உடம்பென்றும் கூறுவதுண்மையாதலால், உடம்பைத் “தொண்ணூற்றாறங்குலம்” எனக் கூறுகின்றார் என வுரைப்பினும் அமையும். விரலளவினதான அங்குலம் அங்குலி என்று கூறுவதும் நூல் மரபு.

எம்மதம் எம்இறை என்ப உயிர்த்திரள்

அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி                                        222

உரை : எங்கள் மதம், எங்கள் இறைவன் என்று மக்கள் கூட்டம் எது உரைக்குமோ அதுவே நமக்கும் மதமாம் என்று தெரிவிப்பது அருட் பெருஞ் சோதி. எ.று.

எம்மதம் - நாங்கள் மேற்கொண் டொழுகும் சமயம். எம்மிறை - எங்கள் சமய நூல்கள் எடுத்துரைக்கும் பரம்பொருள். யாவர் யாவர் யாது யாது தங்கள் சமயம் என்று கூறுகின்றார்களோ அதுவே சமயமாம் என்பது குறிப்பு. “யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்” ( சிவ சித்தி ) என்று சைவ நூல்கள் கூறுவது ஈண்டு நோக்கத் தக்கதாம். இறை - பரம்பொருள்.

கூறிய கருநிலை குலவிய கீழ்மேல்

ஆறியல் எனஉரை அருட்பெருஞ் ஜோதி                                        224

உரை : யோக நெறியிற் கூறப்பட்ட மூலாதாரத்தைப் பொருந்திய கீழ்நிலையாகக்கொண்டு மேன்மேலாய் நிற்கும் ஆதாரம் ஆறினுள்ளும் ஆன்மா உடற்குள் இயலுகின்றது எனத் தெளிவிப்பது அருட் பெருஞ் சோதி. எ.று.

யோக சமயத்தவர், மூலாதாரம், சுவாதிட்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என ஆறு நிலைகளை ஆறாதாரம் என வுரைத்தலால், அவற்றை ஆறியல் என்று கூறுகின்றார். மூலாதாரம் என்பது உந்திக் கீழ் நால்விரற் கிடையளவில் இருப்பது பற்றிக் கீழ்நிலை என்றும், அங்கிருந்து ஆன்ம சிற்சத்தியை எழுப்பும் குண்டலினி கிடத்தலின் அதனைக் கருநிலை என்றும் இயம்புவர். கருப்பைக்கு இடமும் அதுவாதல் விளங்க மூலாதாரத்தைக் “கருநிலை” என்று குறிக்கின்றார். கீழுள்ள கருநிலையை ஆதாரமாகக் கொண்டு, மேன் மேலாய்ச் சுவாதிட்டான முதல் ஆஞ்ஞை ஈறாக ஆன்மா யோக ஞான முயற்சியால் ஓங்குகிறது என்பது கருத்து. “மண்டலமாக வித்தின் வயிற்றிலே இரண்டு சுற்றிக் குண்டலி கிடந்த தித்தைக் கோலியே கீழுமேலும் எண்டிகழ் எழுத் தீராயிர மெனும் நாடியெல்லாம் கண்டனம்” என்று தத்துவ சித்தி ( பெருந் திரட்டு ) என்னும் நூல் கூறுவதும் ஈண்டு நோக்கத் தக்கது.

எண்தர முடியா திலங்கிய பற்பல

அண்டமும் நிறைந்தொளிர் அருட்பெருஞ் ஜோதி                                        226

உரை : இத்துணை யென்று எண்ணிச் சொல்ல முடியாத அளவில் விளங்குகின்ற பற்பலவாகிய அண்டங்கள் அனைத்திலும் நிறைந்து விளங்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

அண்டங்கள் எண்ணிறந்தன என்று கந்தபுராணம் கூறுதலும், “அண்டப் பகுதியில் உண்டைப் பிறக்கம், அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி,. ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின், நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன” ( திருவண்டப் ) என்று திருவாசகம் ஓதுவதும் நோக்கி, “எண் தர முடியா திலங்கிய பற்பல அண்டம்” என்று உரைக்கின்றார். ஒன்று போல் ஒன்றின்றி வேறு வேறாய் விளங்குவது பற்றிப் “பற்பல அண்டம்” என்று பகர்கின்றார். இவ்வண்டங்களின் இயல்பையும் விரிவையும் சிவஞான மாபாடியத்து இரண்டாம் சூத்திரத்து மூன்றாம் அதிகரணத்துட் காண்க. இவையனைத்தினும் நீக்கமற நிறைந்திருப்பது பற்றி, “நிறைந்தொளிர் அருட் பெருஞ் சோதி” என்று கூறுகின்றார்.

சருயிர்க் கெல்லாம் தாரக மாம்பரை

ஆருயிர்க் குயிராம் அருட்பெருஞ் ஜோதி                                        228

உரை : உலகுடம்புகளைச் சார்ந்து வாழும் உயிர்வகை யாவற்றுக்கும் ஆதாரமாகிய பராசத்தி யருளும் அரிய உயிர்கட்கு உயிராய் நிறைந்து விளங்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

உடம்பிடமாக இருந்து உலக போகங்களை நுகர்ந்து வாழ்தற்கமைந்தவையாதலின் “சாருயிர்” என்று சாற்றுகின்றார். “சாருயிர்” என்று சிறப்பித்தலால், உயிர் உடம்பின்றித் தனித்து நின்று உய்திபெற முடியா தென வற்புறுத்தியவாறாம். தாரகம் - ஆதாரம். மாயையைக் கலக்கி உலகுகளையும் உடம்புகளையும் உடம்புடன் கூடி நின்று நுகரும் போகங்களையும் படைத்தளிப்பது பரையாகிய சிவசத்தியாதலால், “தாரகமாம் பரை” என்றும், அது பரமனோடு பிரிப்பற நின்று இயலுவ தென்பது தோன்றப் “பரை” என்றும் பகர்கின்றார். பரை நல்கிய உடம்பின்கண் நிறைந்து உறைவது பற்றி, “ஆருயிர்” எனவும், உயிர்க்குயிராய் உணர்வு தந்தருளும் நலம் புலப்பட, “ஆருயிர்க்குயிராம் அருட் பெருஞ் சோதி” எனவும் இயம்புகின்றார்.

வாழிநீ டூழி வாழிஎன் றோங்குபேர்

ஆழியை அளித்த அருட்பெருஞ் ஜோதி                                        230

உரை : பரை யளித்த வுடம்பின்கண் நின்று உலகில் வாழ்க எனவும் வாழ்வையும் நெடிது வாழ்க எனவும் ஓங்கிய பெரிய ஆணையை அளித்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

வாழ்வு அறிவு விளக்கம் தருவது பற்றி, “வாழி” என்றும், நெடிது வாழ்ந்தாலன்றி மலமாசுகள் கழியா என்றற்கு, “நீடூழி வாழி” என்றும், வாழ்தல் இறைவனுடைய அருளாணை என்பாராய், “பேராழியை அளித்த அருட் பெருஞ் சோதி” என்றும் இயம்புகின்றார். உலக வாழ்வு குறித்து “வாழி” எனவும், வினை மாசு போக நீண்ட நாள் வாழ்தல் வேண்டுவது பற்றி, “நீடூழி வாழி” எனவும் இசைக்கின்றார். அருளாணை ஆஞ்ஞா சக்கரம் எனப்படுவது பற்றிப் “பேராழி” என்றும், அதன் பெருமை புலப்பட “ஓங்கும் பேராழி” என்றும் பாராட்டுகின்றார்.

மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை

ஆய்ந்திடென் றுரைத்த அருட்பெருஞ் ஜோதி                                        232

உரை : உயிர் துறந்தவர் மீளவும் அதனைப் பெறுதற்கமைந்த நெறி இதுவாம் என உரைத்தருளி இதனை யாராய்ந்தறிக என உபதேசித்தருளியது அருட் பெருஞ் சோதி. எ.று.

உயிர் அழிவில்லதாகலின், நின்ற வுடம்பினின்றும் நீங்கினும் வேறு உடம்பின்கண் நின்றே வாழ்தல் வேண்டுமாகலின், “மாய்ந்தவர் மீட்டும்” வருதல் இயல்பு என்பது முறையாகும். “உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்குப் புக்கில் அமைந்தின்று கொல்லோ” எனத் திருவள்ளுவர் கூறுகின்றார். புக்கில் - புகுமிடமாகிய வுடம்பு. உடம்பிலிருந்து நீங்கிய வுயிர்க்கு மீளப் புகுதற்கு உடம்பாகிய இடமுள தெனப் பெறப்படுதலின், அது கழித்த உடம்புமாகலாம் என்றற்கு இடமுண்மை பற்றி, “இதை ஆய்ந்திடு” என ஞானாசிரியன் உபதேசித்தார் என இதனால் தெரிவிக்கின்றார்.

எச்சம் நினக்கிலை எல்லாம் பெறுகஎன்

றச்சம் தவிர்த்தஎன் அருட்பெருஞ் ஜோதி                                        234

உரை : நின்னாற் பெறலாகாமல் எஞ்சும் பொருள் ஒன்றுமில்லையாதலால் நீ எல்லாவற்றையும் எஞ்சாமற் பெறுவாயாக என அச்சத்தைப் போக்கி யருளியது என்னை யாண்டருளும் அருட் பெருஞ் சோதித் தெய்வம். எ.று.

திருவருள் ஞான சத்தி யுடையவர்க்குப் பெறலாகாதது யாதுமில்லை என்பது பற்றி, “எச்சம் நினக்கு இல்லை” என்று உரைக்கின்றார். எச்சம் - எஞ்சு பொருள். “எல்லாம் பெறுக” என்பதால் பெறலாகாது என எஞ்சும் பொருள் என்பது வருவிக்கப்பட்டது. “அரிய வென்று ஆகாதவில்லை பொச்சாவாக் கருவியாற் போற்றிச் செயின்” ( குறள். 537 ) எனப் பெரியோர் கூறுவர். பொருளின் அருமையும் பெருமையும் காணுமிடத்து இது பெறலாகுமோ என்று ஐயமுற்று அஞ்சுதல் எவர்க்கும் இயல்பாதலால், “மாய்ந்தவர் மீட்டும் வருநெறி” காட்டிய போது, இது எய்தலாகுமோ என வடலூர் வள்ளல் அஞ்சினாராகலின், “என் அச்சம் தவிர்த்த அருட் பெருஞ் சோதி” என இயம்புகின்றார். திருவருள் ஞானத்தால் அந்த அச்சம் நீங்கினமை புலப்பட, “என் அச்சம் தவிர்த்த அருட் பெருஞ் சோதி” என்று கூறுகின்றார். தொடர் புணர்த்தற்கு “என் அருட் பெருஞ் சோதி” என்கின்றார்.

நீடுக நீயே நீள்உல கனைத்தும்நின்

றாடுக என்றஎன் அருட்பெருஞ் ஜோதி                                         236

உரை : திருவருட் செயலின்கண் நீ நெடிது ஓங்குக என்றும், நெடிய இவ்வுலகின்கண் நீயும் நெடிதிருந்து திருவருட் செயலைப் பரப்புக என்றும் எனக்கு உபதேசித்தருளியது அருட் பெருஞ் சோதி. எ.று.

வாழ்நாட்கள் சிலவே யுடைய தம்மால் இயலுமோ என்று வள்ளற் பெருமான் அஞ்சினமை புலப்படவே ஞானாசிரியன், “நீடுக நீயே” என்றும், உலகம் நெடியதாகலின், மிகப் பலநாள் இருந்தாலன்றித் திருவருட் செயல் விளக்கம் நிறைவுறாது என்ற ஐயம் போக்குதற்கு, “நீளுலக னைத்தும் நின்று ஆடுக” என்றும் ஞானாசிரியன் அறிவுறுத்துகின்றார்.

முத்திறல் வடிவமும் முன்னியாங் கெய்துறும்

அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                                        238

உரை : மூவகைப்பட்ட வடிவங்களையும் யான் எண்ணியவாறு பெறுதற்கான அவ்வன்மையை, எனக்கு அருளுவது அருட் பெருஞ் சோதியாகும். எ.று.

சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம் எனப்படும் மூவகைத் தேகங்களை எண்ணியபோது எண்ணியவாறு பெற அருள்புருபவன் அருட் சோதி யாண்டவன் என்பது கருத்து. சுத்த தேகத்தைச் சுவர்ணதேகம் என்பதுமுண்டு. மேலும், சுத்த தேகம் காரிய ரூப மெனவும், பிரணவ தேகத்தைக் காரண காரிய ரூபமெனவும், ஞான தேகத்தைக் காரண ரூபம் எனவும் கூறுவர். இவற்றின் விரிவுகளைத் திருவருட்பா உபதேசப் பகுதியிற் காண்க.

மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்

ஆவகை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                                        240

உரை : கருமம், யோகம், ஞானம் என்ற மூன்று வகைச் சித்திகளின் கருத்துக்கள் முற்றும் கைவருமாறு எனக்கு அருள் செய்வது அருட் பெருஞ் சோதி. எ.று.

கரும சித்தி - அணிமா மகிமா முதலிய எண்வகைச் சித்தி. யோக சித்தி - சித்திகள் அறுபத்து நான்கையும் தன் சுதந்திரத்தில் நடத்துவது என்பர். ஞான சித்தி - அறுபத்து நாலாயிரம் சித்திகளையும் தன் சுதந்திரத்தில் நடத்துவது என்று கூறுவர். இவற்றின் இயல்பைத் திருவருட்பா உபதேசப் பகுதியிற் காண்க.

கருமசித் திகளின் கலைபல கோடியும்

அரசுற எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                                        242

உரை : செயல் வகைகளைச் சிந்தித்தவாறு செய்து முடிக்கும் திறமாகிய கலைத்திறங்கள் எண்ணிறந்தனவற்றைத் தலைமை யுண்டாகச் செய்யுமாறு எனக்கு அருள் செய்வது அருட் பெருஞ் சோதியாகும். எ.று.

செய்பொருள் வகைகளும் அவற்றைச் செய்யும் திறனும் செய்பொருள் நலமும் செய்வோர் சிந்தனைக் கேற்ப அமைவது கலை. கலைத்திறம் எண்ணிறந்தனவாகலின், “கலை பல கோடி” என்று கூறுகின்றார். கலை யென்பது செயல் மேல் நிற்பதெனக் கலா தத்துவத்துக்குச் சிவ ஞானபாடியம் உரைக்கும் உரையால் அறியப்படும். சிந்தித்தவாறு செயலாற்றும் நலம் கரும சித்தியாகும். கரும சித்தியால் உயர்வற உயர் நிலையில் எய்தும் தலைமைச் சிறப்பைத் தமக்கு அருளுவது பற்றி, “அரசுற எனக்கருள் அருட் பெருஞ் சோதி” எனத் தெரிவிக்கின்றார்.

யோகசித் திகள்வகை உறுபல கோடியும்

ஆகஎன் றெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                                        244

உரை : மனமொன்றி நின்று செயல் வகைகளைச் சிறப்புறச் செய்து முடித்தலாகிய யோக சித்திகளைச் சிந்தித்தவாறு செய்து முடிக்கும் திறம் அனைத்தையும் எனக்கு உண்டாக அருள் புரிவது அருட் பெருஞ் சோதி. எ.று.

யோகம் - மனம் ஒன்றிச் செயல் வகைகளைச் செய்யும் முயற்சி. யோக சித்தியாவது அறுபத்து நான்கும் அவற்றின் மேலும் விரியும் இயல்பென்பதாகலின் அதனை, “உறுபல கோடி” என வுரைக்கின்றார். சித்தி வகைகள் அறுபத்து நான்கு என்றும், அவற்றைத் தன்னியல்பில் நடத்துவது யோக சித்தி என்றும் உபதேசப் பகுதி யுரைக்கின்றது. இதற்குக் கரணம், சங்கல்ப குளிகை என்றும், அதற்கு அமையும் தேகம் பிராண கல்ப தேகம் என்றும், அதற்கு நிலவும் காலம் பிரம காலம் என்றும் உபதேசப் பகுதி கூறுகின்றது. யோகசித்தி கைவருங்காலம் பன்னிரண்டு வருடம் முதல் நூற்றெட்டு வருடம் வரை என்றும், அக்கால எல்லைக்குள் புதைக்கப்பட்ட தேகம் சிதைந்து கெடுமுன் யோக சித்தியால் உயிர்ப்பிக்கலாம் என்றும் உபதேசப் பகுதி உரைப்பது காண்க.

ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்

ஆனியின் றெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                                        246

உரை : அறுபத்து நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ஞான சித்தி வகைகள் எல்லாம் தனக்கு எய்துமாறு குற்றமின்றி அருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

அறுபத்து நாலாயிரம் சித்திகளையும், அறுநூற்று நாற்பத்தேழு முதல் அறுநூற்று எண்பத்தெட்டுக் கோடி பேதமாகிய மகாசித்திகளையும் தன்னியல்பில் நடத்துவது ஞான சித்தியாம் என்று உபதேசப்பகுதியுரைக்கின்றது. சுத்த கர்ம, சுத்த யோக, சுத்த ஞான சித்தி வல்லபங்களைத் தன்னியல்பில் நடத்துவது ஞான சித்தியாம் என்பர்.

புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை

அடைவதென் றருளிய அருட்பெருஞ் ஜோதி                                        248

உரை : ஆன்மாக்கள் முத்தி பெறுதற்குச் செய்யும் முயற்சியின் குறிப்பனைத்தும் மேலே சொன்ன கரும யோக ஞான சித்திகளைப் பெறுதற் பொருட்டே என உபதேசித்தது அருட் பெருஞ் சோதி. எ.று.

முத்திப் பேற்றிற்குரிய முயற்சி நேரிய முறையில் பேரின்பம் கருதிய தாயினும் அவாந்தரப் பயனாக விளைவது இம்மூவகைச் சித்திகளுமாதல் தோன்ற, “புடையுறு சித்தி” என்று புகல்கின்றார்.

முத்திஎன் பதுநிலை முன்னுறு சாதனம்

அத்தக வென்றஎன் அருட்பெருஞ் ஜோதி                                        250

உரை : முத்திப் பேறு என்று மொழிவது ஆன்மா எய்தும் இன்ப நிலை என்றும், அதனை எய்துதற்குச் சாதனமாவது முத்தி முயற்சி என்றும் உபதேசித்தருளுவது அருட் பெருஞ் சோதியாம். எ.று.

ஆன்மாக்கள் உலகிற் பிறந்திறந் துழலுவது முத்தி பெறுவதன் பொருட்டே எனவும், முத்திப் பேற்றிற்குரிய நிலை சீவன் முத்தி நிலை அல்லது சுத்த நிலை எனவும் ஞான நூல்கள் மொழிவதால் முத்தியென்பது நிலை என்று மொழிகின்றார். அதனை எய்துதற்குரிய முயற்சியும் கர்மம், யோகம், ஞானம் என மூவகைப்படுதலின், “முன்னுறு சாதனம் அத்தகவு” என்று அறிவிக்கின்றார்.


சத்திஎன் பதுநிலை சேர்ந்த அனுபவம்

அத்திறம் என்றஎன் அருட்பெருஞ் ஜோதி                                        252

உரை : முன்னே கூறிய சித்திகள் கைவரும் நிலையானது சாதனத்தோடு கூடியதாகும் எனத் தெரிவிப்பது அருட் பெருஞ் சோதி. எ.று.

சித்தியின் இயல்புகளைக் குரு உபதேசத்தாலும் நூல்களாலும் அறிந்து கொள்வதன்று. அது செயல் வகையோடு கலந்தது என்பதை விளக்குதற்கு, “சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்” என்று தெரிவிக்கின்றார்.

ஏகசிற் சித்தியே இயல்உற அனேகம்

ஆகிய தென்றஎன் அருட்பெருஞ் ஜோதி                                        254

உரை : ஒன்றாகிய ஞான சித்தியே எங்கும் பொருந்துமாறு மிகப் பலவாய் மிகுந்து விளங்குகிறது என்று உபதேசித்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

கரும யோக சித்திகள் வினை முதல் அளவாய் நின்று ஒன்றாகியிருப்பது போலாது ஞான சித்தி எங்கும் எல்லாப் பொருள்களிலும் கலந்து விரியும் இயல்பினதாதலால், “இயலுற அனேகமாகியது” என்று உரைக்கின்றார். தன்னியல்பில் ஒன்றாய் உயிர்தோறும் நிறைந்து இயலும் தன்மை யுடையதென்று விளக்குதற்கு, “ஏக சிற்சித்தி” என்று ஞான சித்தியைக் குறிக்கின்றார்.

இன்பசித் தியின்இயல் ஏகம்அ னேகம்

அன்பருக் கென்றஎன் அருட்பெருஞ் ஜோதி                                         256

உரை : ஞான சித்தியின் விளைவாகிய இன்பப் பேற்றின் இயல்பு ஒன்றேயாயினும் நுகர்தற்குரிய அன்பர்கள் எண்ணிறந்தவராவர் என அறிவுறுத்துவது அருட் பெருஞ் சோதி. எ.று.

ஞானத்தால் விளையும் ஆனந்தம் நுகர்பொருளாம் வகையில் ஒரு தன்மைக்கு என்பாராய், “இன்ப சித்தியின் இயல் ஏகம்” எனவும், ஞான சித்தியால் அதன் இன்பத்தை நுகர்தற்குரிய ஆன்மாக்கள் அனேகராதல் பற்றி, “அனேகம் அன்பருக்கு” எனவும் உரைக்கின்றார்.

எட்டிரண் டென்பன இயலும்முற் படிஎன

அட்டநின் றருளிய அருட்பெருஞ் ஜோதி                                        258

உரை : எட்டாகிய அகரமும் இரண்டாகிய உகரமும் கலந்து இயல்வது பிரணவம் என அறிவது ஞானத்திற்கு முதற் படியென ஞானக் காட்சிக்கு விளங்க நின்று அறிவுறுத்துவது அருட் பெருஞ் சோதி. எ.று.

தமிழில் எட்டு என்னும் இலக்கத்தை அகர உயிரெழுத்தாலும் இரண்டு என்னும் இலக்கத்தை உகர உயிரெழுத்தாலும் காட்டி இவை யிரண்டின் கலப்பே பிரணவம் என்று பெரியோர் கூறுவது பற்றி இவற்றை அறிவது ஞானப் பேற்றிற்குரிய சோபான முறையில் முதலாவது என்பதைக் காட்டுதற்கு, “எட்டிரண் டென்பன இயலும் முற்படி” என வுரைக்கின்றார். முதற் படியாகிய இதனை அறிந்திலேன் என்பாராய் மாணிக்கவாசகர் தம்மை, “எட்டிரண்டும் அறியேனைப் பட்டி மண்டபம் ஏற்றினை” என்று கூறுவது ஈண்டு நினைவு கூரத் தக்கது. அட்ட நிற்றலாவது அவ்விடத்தே விளங்க நிற்றல் எனப் பொருள் படுவது.

இப்படி கண்டனை இனிஉறு படிஎலாம்

அப்படி யேஎனும் அருட்பெருஞ் ஜோதி                                        260

உரை : பிரணவ ஞானப் பேற்றிற்கு முதல் சோபானத்தை இப்பொழுது காட்டக் கண்டனை; இனி ஞானானந்தம் கைவரப் பெறுதற்கு அமைந்தபடி முறைகள் அனைத்தையும் இவ்வாறே கண்டு கொள்க என உபதேசித்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

விந்து தரிசனம், ஞான தரிசனம், பரவிந்து பரநாதம், அபரவிந்து, அபரநாதம் திக்கிராந்தம், அதிக்கிராந்தம், வாம சத்தி, ஜேஷ்ட சத்தி, ரௌத்ர சத்தி, காளி சத்தி முதலியவற்றைக் காணும்படி முறைகள் பலவாதலின் அவற்றையும் அகர எழுத்திலிருந்தே உபதேசப் பகுதியில் காட்டுகின்றாராதலால், “இனி யுறுபடி யெலாம் அப்படியே” என இயம்புகின்றார்.

படிமுடி கடந்தனை பார்இது பார்என

அடிமுடி காட்டிய அருட்பெருஞ் ஜோதி                                        262

உரை : பசு அறிவும் பாச அறிவுமாகிய இரண்டு அறிவு வகைகளைக் கடந்து நீ நிற்கின்றாய்; அவற்றுள் அடியாகிய பசு அறிவு இதுவாகும், பாச அறிவு இதுவாகும் எனத் தனித்தனியே காண்பாயாக என்று எனக்குக் காட்டியது அருட்பெருஞ் சோதியாகும். எ.று.

படி என்பது உலகியல் உண்மையறிவுக்குத் தொடக்கமாதலின் பசு அறிவைப் படியெனவும், அதன் முடிபை யறியும் அறிவைப் பாச அறிவு எனவும் குறிப்பாராய், “படி முடி கடந்தனை பார் இது பார்” எனப் பகர்கின்றார். ஒரு பொருளைக் காணும் தன்மையுடையது பாச அறிவு எனவும், பசு அறிவாவது பொறி புலன்களாலே அறியப்படுவது எனவும் உபதேசப் பகுதி தெரிவிப்பது காண்க. பசு அறிவு சீவ அறிவு எனவும் வழங்கும். மலத்தில் அழுந்துவது பாசம். பகுத்தறிவாவது பசுவென்று உபதேசப் பகுதி இதனை விளக்குகிறது. பசுபாச ஞானங்கள் மேலும் கீழும் செல்லுதலால் இவ்வறிவு நெறியை அடி முடி தேடல் என்று புராணங்கள் உரைக்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் அடியும் முடியும் உண்மை பற்றி, “ஒவ்வொரு வஸ்துவிலும் பதி பசுபாச லட்சணம் உண்டு” என்று அருட்பா உபதேசப் பகுதி அறிவிக்கின்றது.

சோதியுட் சோதியின் சொரூபமே அந்தம்

ஆதிஎன் றருளிய அருட்பெருஞ் ஜோதி                                        264

உரை : காணப்படும் ஒளிகட்கெல்லாம் உள்ளொளியாய் விளங்குவது ஒளியின் உண்மைச் சொரூபமாகும்; அதுவே எல்லா ஒளிகட்கும் தோற்றமும் முடிவுமாகும் என்ற உபதேசித்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

சோதியாகிய ஒளிப் பொருள்களை வடலூர் வள்ளல் பிண்ட வொளி அண்ட வொளி என்றும், ஆன்ம வொளி அக்கினி வொளி என்றும், சீவ வொளி சூரிய வொளி என்றும், மனவொளி சந்திர வொளி என்றும், கண்ணொளி நட்சத்திர வோளி என்றும் உபதேசப் பகுதியில் விரித்துரைக்கின்றார். இவ்வொளி வகைகள் எல்லாவற்றிற்கும் தோற்றமும் முடிபுமாய் இருப்பது ஒளிகட் கெல்லாம் உள்ளொளியாய் விளங்கும் உண்மை ஒளி என்பது கருத்து.

இந்தசிற் ஜோதியின் இயல்உரு ஆதி

அந்தம்என் றருளிய அருட்பெருஞ் ஜோதி                                        266

உரை : ஈண்டுக் காட்டப்பட்ட ஞான வொளியின் இயல்பான சொரூபம் சீவனாகிய நீயே ஆவாய் என்று தெரிவிப்பது அருட் பெருஞ் சோதி. எ.று.

ஒளியைப் பிண்டவொளி அண்டவொளி என்று பிரித்துக் கொண்டு, பிண்டத்திலுள்ள ஆன்ம ஒளியை அண்டத்திலுள்ள அக்கினி ஒளி என்றும், சீவ ஒளியை சூரிய ஒளி என்றும், மனவொளியைச் சந்திர ஒளி என்றும், கண்ணொளியை நட்சத்திர ஒளி என்றும் வடலூர் வள்ளல் உபதேசப் பகுதியில் விளக்குகின்றார். சீவ ஒளியும் ஆன்ம ஒளியும் எனப் பிண்ட வொளியைப் பிரித்துரைக்கின்றாராயினும் இரண்டும் ஞான சொரூபங்களாதலால் அவற்றை, “இந்த சிற்சோதி” எனவும், இவை ஆன்ம சொரூபங்களாதல் பற்றி, “இயல் உரு” எனவும், இவை ஆன்ம ஒளிக்குத் தோற்றமும் முடிபுமாய்த் துலங்குவதால், “ஆதி யந்தம் என்றருளிய அருட் பெருஞ் சோதி” எனவும் எடுத்துரைக்கின்றார்.

ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே

ஆதிஎன் றருளிய அருட்பெருஞ் ஜோதி                                        268

உரை : சிற்சோதியாகிய ஆன்ம ஒளியின் தோற்றமும் முடிபும் அறிந்து கொண்டாயாதலால் நீயே அந்தச் சோதிச் சொரூபமாவாய் என்று உபதேசித்தருளுவது அருட் பெருஞ் சோதியாகும். எ.று.

ஆதி - ஆவாய். ஆதி என்பது ஆகிறாய் என்னும் பொருளில் ஆகுதி என நின்று ஆதி எனக் குறுகிற்று. ஆதி என்பதன் ஈற்றிலுள்ள தி என்பது த்+இ எனப் பிரியும்; அவற்றுள் ஈற்றிலுள்ள இகரத்தை முன்னிலை யேவல் வினைமுற்று விகுதி என்றும், த் என்ற மெய்யெழுத்தை எழுத்துப் பேறு என்றும் இலக்கணப் புலவர்கள் இயம்புவர். ஆன்ம சீவ ஒளிகள் வள்ளலார் கருத்துப்படிச் சேதன சோதிகளாதலால் அவ்விரண்டையும் சிற்சோதி எனச் செப்புகின்றார். இந்தச் சோதி சைதன்னியத்தைத் தெளிவாக அறிந்தவன் ஞான சோதி யுருவாகிய சைதன்னியப் பொருளாகிறான் என்ற உபநிடதக் கருத்தை மனத்துள் கொண்டு உரைக்கின்றாராதலால் அவ்வுண்மை விளங்க, “ஆதியும் அந்தமும் அறிந்தனை” ஆதலால் அது “நீயே ஆதி” என வடலூர் வள்ளல் தெரிவிக்கின்றார்.

நல்அமு தென்ஒரு நாஉளம் காட்டிஎன்

அல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி                                        270

உரை : நலம் பயப்பதாகிய அமுதம் என்று எனது நாவின் உள்ளுறுவது காட்டி என் வருத்தத்தைப் போக்கியது அருட் பெருஞ் சோதியாகும். எ.று.

நல்லமுது - இனிப்புள்ள அமுது. நாவுளம் - நாக்கின் அடியிலும் உள்நாக்குக்கு மேலும் சுரந்தினிப்பது. உள்ளிருந்து ஊறுவதனால் அமுதத்தை இளம் என்கின்றார். உள்ளேயுள்ளது உளம் எனப்படுகிறது. உள்ளது அமுதமாதலின் அதனை உளம் என்கின்றார். மனத்துக்கு உள்ளே யிருப்பது பற்றி ஆன்மாவை உளம் என்பது போல, உள்நாக்கின் அடியிலும் ஊறும் அமுதத்தை, “நாவுளம்” என நவில்கின்றார். சுட்டிக் காட்டித் தெரிவிப்பதாகிய பொருளன்றாதலால், “நாவுளம் காட்டி” என்று மொழிகின்றார். இதனை விளக்க வந்த உபதேசப் பகுதி, - ( 112 ), “சுத்த அமுத ஸ்தானங்கள் ஐந்து: முதலாவது - அமுதம் நாக்கின் அடியில் இனிப்புள்ள ஊற்று நீர் போலிருக்கும்; இரண்டாவது - அமுதம் உள்நாக்கு மேல் இளகின இனிப்புள்ள சர்க்கரைப் பாகு போலிருக்கும்; மூன்றாவது - மூக்கு முனையில் காய்ச்சின சர்க்கரைப் பாகு போலிருக்கும்; நான்காவது - நெற்றி நடுவில் முதிர்ந்த சர்க்கரைப் பாகு போலிருக்கும்; ஐந்தாவது - மிக இனிப்புள்ள மணிக்கட்டியாக இருக்கும்; மிக குளிர்ச்சியாகவும் இருக்கும். இந்த ஐந்தாவது அமுதத்தை யுண்டவர்கள், என்றும் அழியாத தேக சித்தியைப் பெற்றவர்கள் என்று விளக்குகின்றது. அல்லல் - துன்பம். இங்கு அமுதத்தை யுண்ணப் பெறாமையால் உளதாகிய வருத்தத்தைக் குறிக்கின்றது.

கற்பகம் என்உளங் கைதனில் கொடுத்தே

அற்புதம் இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி                                        272

உரை : கற்பகமாகிய தொன்றை என் உள்ளங் கையில் கொடுத்து இது கொண்டு அற்புதங்கள் செய்வாயாக என்று என்னைப் பணித்தது அருட் பெருஞ் சோதியாகும். எ.று.

கற்பகம் - கற்பகக் கனி போல்வ தொன்றை. கற்பகக் கனி அமரர் உலகத்துக் கற்பக மரத்தின் கனி என்பர். இங்கே திருவருள் ஞானம் கற்பகம் எனப்படுகிறது. விரும்பினார்க்கு விரும்பினது நல்கும் மேன்மையுடையது கற்பகக் கனி யென நூலோர் கூறுவர். திருவருள் ஞானம் கைவரப் பெற்றார் வேண்டியது வேண்டியாங்கு எய்துவது பற்றி, “கற்பகம் என் உளங் கைதனில் கொடுத்து அற்புதம் இயற்றுக” என்று அருளப் பெற்றமை இதனால் தெரிவித்தவாறாம். உள்ளங்கை என்பது உளங்கை என வந்தது.

கதிர்நலம் என்இரு கண்களிற் கொடுத்தே

அதிசயம் இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி                                        274

உரை : ஒளியும் அதனால் விளையும் நலமும் எனக்குண்டாக அவ்விரண்டையும் என் கண்களுக்குக் கொடுத்துக் கண்டார் அதிசயிக்கும் செயல்களைச் செய்க என்று எளியேனுக்கு அருள் புரிந்தது அருட் பெருஞ் சோதி. எ.று.

கதிர் நலம் - கதிரும் நலமும் என விரியும் உம்மைத் தொகை. கண்ணொளியும் அதனால் பெறலாகும் காட்சியின்பமும் பெறுதற்கு இவையிரண்டும் இன்றியமையாத நலங்களாய்க் கண்ணாகிய கருவியைச் சிறப்பிப்பது பற்றி, “என் இரு கண்களில் கொடுத்து” என்று கூறுகின்றார். அதிசயம் - கட்பார்வையால் எய்தும் அரிய காட்சி.

அருள்ஒளி என்தனி அறிவினில் விரித்தே

அருள்நெறி விளக்கெனும் அருட்பெருஞ் ஜோதி                                         276

உரை : திருவருள் ஞானமாகிய ஒளியை என்னுடைய தனித்த அறிவில் விளங்கச் செய்து, திருவருள் நெறியை உலகினர்க்குத் தெரிவிப்பாயாக என உபதேசிப்பது அருட் பெருஞ் சோதியாகும். எ.று.

அருளொளி - திருவருள் ஞானம். அருள் ஞானம் எய்தற் கிடமாதல் பற்றித் தம்முடைய நல்லறிவைத் தனியறிவு எனச் சிறப்பிக்கின்றார். ஞானத்தின் பயனை நுகர்தற் குரியவர் உலகினராதலின் அதனைப் பெற்றோர் பெற்றளவில் நில்லாமல் பிறர்க்கெல்லாம் தெரிவிப்பது அறமாதலால் அதனை இயற்றப் பணிக்கும் இறைவனை, “அருள் நெறிவிளக்கெனும் அருட் பெருஞ் சோதி” எனச் சிறப்பிக்கின்றார். விளக்கு - ஏவல் வினைமுற்று.

பரைஒளி என்மனப் பதியினில் விரித்தே

அரசது இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி                                        278

உரை : என் மனமாகிய கோயிலின்கண் சிவசத்தியின் ஞான ஒளியை நிறுவி அதன் இனிய ஒளி எங்கும் பரவச் செய்து, அருளரசு புரிக என என்னைப் பணித்தருளுவது அருட் பெருஞ் சோதியாகும். எ.று.

பரை - பரம்பொருளாகிய சிவத்தினுடைய அருட் சத்தி. அஃது ஒளிமயமாதலின் அதனைப் “பரை ஒளி” என்று புகல்கின்றார். அது மனத்தின்கண் எழுந்தருளித் தனது ஞான ஒளியைப் பரப்புவது என்றற்கு, “மனப் பதியினில் விரித்து” என்று கூறுகின்றார். இருள் நீக்கி இன்பம் செய்வது பற்றி, “அரசது இயற்று” என அறிவுறுத்துகின்றார். அரசு அது என்பதில் அது பகுதிப் பொருள் விகுதி.

வல்லப சத்திகள் வகைஎலாம் அளித்தென

தல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி                                        280

உரை : வல்லமை பொருந்திய சத்தி வகைகள் எல்லாவற்றையும் எனக்குத் தந்து என்னுடைய துன்பங்களைப் போக்கி யருளுவது அருட் பெருஞ் சோதியாகும். எ.று.

அறிவும் ஆற்றலும் கொண்டு செய்து முடிப்பதற்கு வேண்டும் சத்திகளை “வல்லப சத்திகள்” என்று குறிக்கின்றார். அணுவை மலையாக்குவதும் மலையை அணுவாக்குவதுமாக முதலிய எட்டு வகைச் சத்திகளையும் “வல்லப சத்திகள்” எனக் கூறுகின்றார். சத்தி யமையாவிடத்துச் செயல்களை முற்றவும் செய்யவல்ல தன்மை யுண்டாகாது என்பது பற்றிச் சத்திகளை விதந்தோதி அவற்றில் குறைபாடு உள்ளதாகும் துன்பத்தைப் போக்கினா ரென்பது புலப்பட, “எனது அல்லலை நீக்கிய அருட் பெருஞ் சோதி” என்று உரைக்கின்றார்.

ஆரியல் அகம்புறம் அகப்புறம் புறப்புறம்

ஆரமு தெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                                        282

உரை : அருமை வாய்ந்த பொருட்களின் அகம், புறம், அகப்புறம், புறப்புறம் ஆகிய கூறுகளின் குணஞ் செயல்களில் நிறைந்த கூறுகளை யுணர்ந்து கொள்ளும் ஞானத்தை எனக்கருளுவது அருட் பெருஞ் சோதி என்பதாகும். எ.று.

ஒவ்வொரு பொருட்கும் அகக்கூறும், புறக்கூறும், அகப்புறக் கூறும், புறப்புறக் கூறும் எனப் பல்வகைக் கூறுகளமைந்து நுண்ணறிவுடையோர் நுணுகி நோக்குந்தோறும் பல நுட்பங்கள் தோன்ற நிலவுதலால் அவற்றின் நுண்ணிய ஞானத்தை “ஆரமுது” என்று சிறப்பிக்கின்றார்.

சூரிய சந்திர சோதியுட் சோதிஎன்

றாரியர் புகழ்தரும் அருட்பெருஞ் ஜோதி                                        284

உரை : சூரியனுடைய ஒளியிலும் சந்திரனுடைய ஒளியிலும் காரண உட்சோதியாக விளங்குபவன் இறைவன் என்று ஞானாசிரியர்களால் புகழ்ந் தோதப்படுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

சூரிய ஒளிக்கும் சந்திர ஒளிக்கும் காரண ஒளியாய் விளங்குவதும் பிற ஒளிகட்கும் காரண ஒளியா யிருப்பதும் இறைவனாகிய அருட் பெருஞ் சோதி எனக் கண்டு, “ஆதியும் அந்தமு மில்லா அருட் பெருஞ் சோதி” என்றும், “சுடர்ச் சோதியுட் சோதியாம்” என்றும் இறைவனை ஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் உணர்ந்துரைத்தலின், “சோதியுட் சோதி என்று ஆரியர் புகழ் தரும் அருட் பெருஞ் சோதி” என்று புகழ்ந்துரைக்கின்றார். ஆரியர் - ஞானாசிரியர்.

பிறிவே தினிஉனைப் பிடித்தனம் உனக்குநம்

அறிவே வடிவெனும் அருட்பெருஞ் ஜோதி                                        286

உரை : உன்னை விட்டுப் பிரிவதில்லை என்று சொல்லி, உன்னைப் பற்றிக் கொண்டோமாதலால் இனி உனக்கு அறிவே வடிவமாம் என்று உபதேசித் தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

உயிர்க்குயிராகும் உறவுகொண்டு உயிருள் உயிராய்க் கலந்திருப்பது விளங்க, “பிரிவு ஏது இனி உனைப் பிடித்தனம்” என்று சிவபெருமான் ஞானாசிரியன் வடிவில் தோன்றி அறிவுறுத்துகின்றமை விளங்க, “பிறிவு ஏதினி உனைப் பிடித்தனம்” என்று புகல்கின்றார். பிரிவு பிறிவு என வந்தது. உயிர்க்கு வடிவம் ஞானமாதலின் அதனை வற்புறுத்தற்கு அந்த ஞானம் தானும் சிவஞானமாம் எனத் தெளிவித்தற்கு, “உனக்கு நம் அறிவே வடிவு எனும் அருட் பெருஞ் சோதி” என இயம்புகின்றார். உணர்வு வடிவாகிய ஆன்மா, பசுபாச உணர்வுகளின் உருவாய் அமையாது, சிவஞான வடிவமாகும் பண்புடைமை தெரிவித்தற் பொருட்டு, “நம் மறிவே உனக்கு வடிவு” என அருட் சோதியாண்டவன் அறிவிக்கின்றமை புலப்படுத்தவாறாம். சிவஞான வடிவமாகும் பண்பு ஆன்மாவுக்கு இருத்தலால், “முத்தான்மா நண்ணரிய சிவானந்த ஞான வடிவு பெறுகின்றது” என அறிக.

எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்

அஞ்சேல் என்றருள் அருட்பெருஞ் ஜோதி                                        288

உரை : யாதொன்றிற்கும் நீ குறைபடல் வேண்டா; உலகியல் தொடர்புகளில் யாதொன்றினால் பற்றப்படினும் அதன் விளைவுகள் நீ சிறிதும் அஞ்சுதல் வேண்டா என்று உபதேசித்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

உலகியல் போகங்களை நுகர்விக்குமாற்றால் பொருட்கள் அளவிறந்தன படைத்தமைக்கப்பட்டிருத்தலால் எல்லாவற்றையும் குறைவறப் பெற்று நுகர்க என அறிவுறுத்துவாராய், “எஞ்சேல்” என்று இசைக்கின்றார். எஞ்சுதல் - குறைதல். உலகியல் போகங்களை முற்றவும் நுகர்ந்த பின், ஆன்மாவுக்கு வினைத் தொடர்பு நீங்கி உய்தி பெறுதற்கு வாய்ப்பு இல்லாமையால் “எஞ்சேல்” என்று வற்புறுத்துகின்றார். போக நுகர்தல் பொருட்டு ஆன்மா உலகியற் பொருள்களோடு தொடர்புறுங்கால் பல்வகைத் துன்பங்கள் தோன்றித் தாக்குதலால், ஆன்மாவுக்கு அச்ச முண்டாதல் இயல்பாதல் பற்றி, “யாதொன்று பற்றியும் அஞ்சேல்” என்று உபதேசிக்கின்றார். பற்றுவனவற்றுள் சிறிது துன்பம் பயப்பனவும் பெருந் துன்பம் பயப்பனவும் எனப் பல திறம் உள்ளமையால் “யாதொன்று பற்றியும்” என இயம்புகிறார்.

மாண்டுழ லாவகை வந்திளங் காலையே

ஆண்டுகொண் டருளிய அருட்பெருஞ் ஜோதி                                        290

உரை : வீணே இறந்து வருந்தாதவாறு இளமைப் பொழுதிலேயே என்னை ஆண்டருளியது அருட் பெருஞ் சோதியாகும். எ.று.

மண்ணுலகில் பிறந்து வாழ்ந்து திருவருட் பேறின்றி இறப்பது பயனில்லாத செயலும் நோயுமாதலின், “மாண்டு உழலா வகை” எனவும், முதுமையுற்றுப் பிணிக்கும் பிறவித் துன்பத்துக்கும் இரையாகிக் கெடாதபடி இளமைப் பொழுதிலேயே திருவருள் ஞானத்தைத் தந்தருளித் தம்மை ஆட்கொண்டமை புலப்படுத்தற்கு, “இளங்காலையே ஆண்டு கொண்டருளிய அருட் பெருஞ் சோதி” எனவும் வடலூர் வள்ளலார் மொழிகின்றார்.

பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்தென

தற்றமும் நீக்கிய அருட்பெருஞ் ஜோதி                                         292

உரை : என்னைப் பற்றி யுள்ள நான் எனது என்னும் பற்றுக்கள் எல்லாவற்றையும் முற்றக் கெடுத்து என்னுடைய குற்றங்களையும் நீக்கியருளுவது அருட் பெருஞ் ஜோதி. எ.று.

பற்றுக்களை நான் என்றும், எனது என்றும் இரண்டாக வகுத்து நான் என்னும் உணர்வடியாகப் பிறக்கும் பற்றுக்களை அகப்பற்று என்றும், எனது என்னும் உணர்வடியாகப் பிறக்கும் பற்றுக்களை புறப்பற்று என்றும், அவையிரண்டையும் தொகுத்துப் “பற்றுக்கள் அனைத்தையும்” என்று கூறுகின்றார். பற்றறத் தவிர்த்தலாவது இருந்தவிடம் தெரியாதபடி ஒழித்தல். “யான் எனதென்னும் செருக் கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகம்” என்று திருவள்ளுவர் உரைப்பது காண்க. சுகதுக்க மோகங்களையுண்டாக்கும் சத்துவம் முதலிய குணமயக்கத்தால் உண்டாவது குற்றமாதலால், அவற்றைத் தனிப்படுத்தி “அற்றம்” என மொழிகின்றார்.

சமயம் குலமுதல் சார்பெலாம் விடுத்த

அமயந் தோன்றிய அருட்பெருஞ் ஜோதி                                        294

உரை : சமய வுணர்வு சாதிப் பிறப்புணர்வு முதலிய உணர்வுகளெல்லாம் விடுத்துச் சமரச உணர்வை உள்ளத்தில் தோற்றுவிப்பது அருட் பெருஞ் சோதியாகும். எ.று.

சாதி குல வேற்றுமை யுணர்வும், சமய வேற்றுமை யுணர்வுகளும் பிறந்து வாழும் சூழ்நிலைகளால் உயிருணர்வைச் சூழ்வனவாதலால் அவற்றை, “சமயம் குல முதல் சார்வு” என இயம்புகின்றார். மக்களினத்தின் சூழ்நிலை காரணமாக உணர்விற் கலந்து ஒன்றினும் உண்மையுணர்வு ஒளிருமிடத்து நீங்கும் இயல்பின என்றற்குச் சாதி குல உணர்வுகளைச் “சார்பு” என்று குறிக்கின்றார். இவை யாவும் பிறந்த பிறப்பின் சூழ்நிலை காரணமாக வந்து சார்தலின் அவை போக்க மாட்டாத பொற்பின வல்ல என்பது புலப்படுத்தற்கு, “சார்பெலாம் விடுத்த அமயம்” என்று கூறுகின்றார். அமயம் - காலம். மெய்யுணர்வு தோன்றிய பொழுது சமய குலச் சார்வுகள் கெட்டொழிந்து, சமரச ஞானத்திற் கிடம் தருவது பற்றி, “சார்பெலாம் விடுத்த அமயம் தோன்றிய அருட் பெருஞ் சோதி” என்று அறிவுறுத்துகின்றார்.

வாய்தற் குரித்தெனும் மறைஆ கமங்களால்

ஆய்தற் கரிய அருட்பெருஞ் ஜோதி                                         296

உரை : உண்மை காண்பதற் குரியவை என்று, சான்றோர்களால் பேசப்படும் வேதங்களாலும் ஆகமங்களாலும் ஆராய்ந்தறிதற் காகாதது அருட் பெருஞ் சோதியாகும். எ.று.

வாய்தல் - உண்மை காண்டல். மெய்யுணர்வு பெறுதற்குத் துணை செய்வன வேதங்களும் ஆகமங்களுமாம் என்று பெரியோர்கள் பிரமாணம் என எடுத்தோதப்படுவதால், “வாய்தற் குரித்தெனும் மறை ஆகமங்கள்” என்று வழங்குகின்றார். உரித்தெனும் குறிப்பு வினையை மறையோடும் ஆகமத்தோடும் கூட்டுக. வேதங்கள் நல்கும் வைதீக ஞானமும் ஆகமங்கள் நல்கும் ஆத்ம ஞானமும் முத்தி நல்கமாட்டாவாயினும் முத்திக்குரிய உண்மை ஞானத்தை ஆராய்ந்து பெறுதற்கு உதவுதல் பற்றி, “மறை ஆகமங்களால் ஆய்தற்கரிய அருட் பெருஞ் சோதி” என மொழிகின்றார்.

எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை

அல்லா திலைஎனும் அருட்பெருஞ் ஜோதி                                        298

உரை : அரிய செயல்கள் எல்லாவற்றையும் செய்து முடிக்க வல்ல அறிவாற்றலை எனக்குத் தந்து, உன்னையல்லது உறுபொருள் வேறில்லை என்னும் உணர்வு தந்தருள்வது அருட் பெருஞ் சோதி. எ.று.

எல்லாம் வல்ல சித்தாவது எத்தகைய அரிய செயல்களாயினும் அவற்றை இனிது அறிந்து செய்து முடிக்க வல்ல அறிவாற்றல் உண்மை யுணர்வோடு தன்னை வணங்கி வழிபடுவார்க்கு எல்லாம் செயல் வல்ல ஆற்றலுண்டாம் என்பதை வற்புறுத்தற்கு, “எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து” எனப்பிறிதோரிடத்தே வற்புறுத்தி யுள்ளாராதலால் வடலூர் வள்ளலார், “எல்லாம் வல்ல சித்தி எனக்கு அளித்து” என எடுத்துரைக்கின்றார். நுண்மையும் வன்மையும் வாய்ந்த அறிவும் ஆற்றலும் எனக்களித்தாராயினும் திருவருள் ஞானத்தாலன்றி இவை யுனக்குக் கைவரா என அறிவுறுத்தமை புலப்படுத்தற்கு, “எனக்கு உனை யல்லா திலை” என்று உபதேசிக்கின்றார்.

நவைஇலா உளத்தில் நாடிய நாடிய

அவைஎலாம் அளிக்கும் அருட்பெருஞ் ஜோதி                                        300

உரை : குற்றமில்லாத மனத்தை யுடையவர்கள் யாவை யாவை விரும்புகின்றார்களோ அவற்றை யெல்லாம் அவர்கட்கு அளித்தருளுவது அருட் பெருஞ் சோதியாகும். எ.று.

நவை - குற்றம். குற்ற நினைவுகள் சிறிதுமின்றிக் குண வடிவாய் விளங்கும் ஞானிகளின் திருவுள்ளத்தை, “நவை யிலா வுள்ளம்” என நவில்கின்றார். நற்குணமே வடிவாக வுள்ள தவத்தால் நன்மை மிக்க திருவருள் ஞானிகள் எண்ணியவற்றை எண்ணியாங்கு பெறுதல் கண்டு, “நவை யிலா உளத்தில் நாடிய அவை யெலாம் அளிக்கும் அருட் பெருஞ் சோதி” என்று அறிவிக்கின்றார். உள்ளத்தால் நாடப் படுபவை மிகப் பலவாதலின் அவற்றில் பன்மையும் மிகுதியும் விளங்குதற்கு, “நாடிய நாடிய அவை” என்று கூறுகின்றார். நாடி யனைத்தும் குறைவறப் பெறுதல் விளங்க, “அவை யெலாம்” எனக் குறிக்கின்றார்.

கூற்றுதைத் தென்பால் குற்றமும் குணங்கொண்

டாற்றல்மிக் களித்த அருட்பெருஞ் ஜோதி                                        302

உரை : மார்க்கண்டனது உயிர் கவரும் பொருட்டு வந்த எமனை, யுதைத்துப் போக்கி அவனைப் போல் ஆன்மாவாகிய என்னுடைய குற்றங்களையும் குணங்களையும் தன்னுடையனவாக ஏற்றுக்கொண்டு கூற்றுவனை உதைத்துத் தள்ள வல்ல பேராற்றலை எனக்கு மிகைப்பட அளித்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

கூற்று - எமன். தன்னை உண்மை யன்போடு வழிபட்ட மார்கண்டனுடைய குணங் குற்றங்களைத் தான் ஏற்றுக்கொண்டு அவனுடைய பசு கரணங்களைச் சிவகரணமாக்கிச் சாவா நிலை அவன் எய்த அருளியது விளங்கக் “கூற்றுதைத்து” என்றும், அவ்வாறே பசுகரணங்களைச் சிவகரணமாக்கிக் கொள்ளும் ஆன்மாவினுள் ஒருவனாகிய எனக்கும் கூற்றைக் குதித்தலும் கைகூடும் என அறிவிப்பாராய், “என்பால் குற்றமும் குணமும் கொண்டு ஆற்றல் மிக்களித்த அருட் பெருஞ் சோதி” என்று அறிவுறுத்துகின்றார்.

நன்றறி வறியா நாயினேன் தனையும்

அன்றுவந் தாண்ட அருட்பெருஞ் ஜோதி                                        304

உரை : நன்றாகிய அறத்தினைப் பற்றிய அறிவு சிறிதுமில்லாத நாய் போன்றவனாகிய என்னையும் இளமைப் பொழுதில் அன்புடன் ஆண்டு கொண்டது அருட் பெருஞ் சோதியாகும். எ.று.

நன்றறிவு - அறத்தின் மாண்பை யுணர்ந்துகடைப்பிடிக்கும் அறிவு. அறமாவது நல்லதன் நலத்தையும் தீயதன் தீமையையும் கண்டறிந்து நலமறிவதாதலின் அற வுணர்வை, “நன்றறிவு” என்கின்றார். நலந் தீங்கு கண்டு ஒழுகும் அறிவில்லாத கீழ்மகன் என்பதற்கு “நன்றறி வறியா நாயினேன்” எனத் தம்மை வடலூர் வள்ளலார் பழித்துரைக்கின்றார். அன்று என்பது இளமைப் பருவத்தினை. இளம் பருவத்திலேயே இறைவன் தமக்கு அருளறிவு தந்து அதன் வழியே நிற்கச் செய்தமை விளங்க, “அன்று வந்தாண்ட அருட் பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார்.

நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்

ஆயினும் அருளிய அருட்பெருஞ் ஜோதி                                        306

உரை : நாய் போல் கடையவனாயினும் ஈயைப் போல் இழிந்தவனாயினும் என்பால் அருள் கொண்டு திருவருள் ஞானத்தை எனக்கு அளித்தது அருட் பெருஞ் சோதி. எ.று.

எத்துணைச் சிறந்த பொருளைத் தந்து வளர்க்கினும் இழிந்த பொருளையே நாடும் இயல்புடையது நாய். இனிய தூய சர்க்கரையை மொய்க்கும் ஈ அதே சமயத்தில் மலத்திலும் தங்கி மகிழும் இயல்புடையது. இவற்றைப் போல் இழிந்த பொருளை நாடுவதும் கடையான எண்ணங்களை எண்ணி மகிழ்வதும் மனத்தின் இயல்பாதல் பற்றித் தம்மை, “நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்” என்றும், அவ்விழிநிலையைப் பொருளாகக் கருதாமல் தமக்கு அருள் ஞானம் வழங்கியது பற்றி இறைவனை, “ஆயினும் அருளிய அருட் பெருஞ் சோதி” என்றும் வடலூர் வள்ளல் அறிவிக்கின்றார்.

தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன்

ஆத்திரம் அளித்த அருட்பெருஞ் ஜோதி                                        308

உரை : இறைவனைப் புகழ்ந்தேத்தும் நூல்களை ஓதுவதும் திருவருள் பெறுதற்குரிய தகுதியை அடைவதும் இல்லாதவனாகிய எனக்கு, அவற்றின்கண் ஆர்வமுண்டாக அருளியது அருட் பெருஞ் சோதியாகும். எ.று.

தோத்திரமாவது திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் இறைவனைப் புகழ்ந்தோதிய பாட்டுக்கள். பாத்திரம் - தகுதி. திருவருள் ஞானத்தைப் பெறுதற்குரிய தகுதி தம்பால் இல்லை என்பது புலப்படப் “பாத்திரம் அல்லேன்” என வுரைக்கின்றார். அத்தகுதியைப் பெறுதற்குத் தோத்திரம் இன்றியமையாமை பற்றி அதனை முதற்கண் வைத்து மொழிகின்றார். ஆத்திரம் - மிக்க ஆர்வம்.

எச்சோ தனைகளும் இயற்றா தெனக்கே

அச்சோ என்றருள் அருட்பெருஞ் ஜோதி                                        310

உரை : சிவநெறித் திருத்தொண்டர்களின் வாழ்வில் செய்தது போல எத்தகைய சோதனைகளையும் என் வாழ்வில் செய்யாமை எனக்கு எய்திய இஃது என்னே என்று எளியவனாகிய நான் வியக்குமாறு திருவருள் இன்பத்தை வழங்கியது அருட் பெருஞ் சோதி. எ.று.

சோதனை - சோதித்தல்; அஃதாவது ஆராய்தல். அச்சோ வியப்புக் குறிப்பு. அன்பரது அன்பின் உறுதியையும் தொண்டரது தொண்டின் உறைப்பையும் சோதித்து உலகறியச் செய்வது இறைவன் பண்பாதலின் அவற்றைத் தாங்கி நிறுத்தும் மதுகை தம்பால் இல்லையென்பது புலப்பட, “எச்சோதனைகளும் இயற்றாது” எனவும், தமக்கு எளிதில் திருவருட் பேறு எய்தினமை கண்டு தம்மை வியந்தமை தோன்ற, “எனக்கே அச்சோ என்றருள் அருட் பெருஞ் சோதி” எனவும் இயம்புகின்றார்.

ஏறா நிலைநடு ஏற்றிஎன் றனைஈண்

டாறாது கடத்திய அருட்பெருஞ் ஜோதி                                        312

உரை : எளிதில் அடைய மாட்டாத மணி பூரகத்தின்கண் என்னை யுயர்த்தித் தத்துவம் முப்பத்தாறையும் கடத்தி யுதவியது அருட் பெருஞ் சோதி. எ.று.

மூலாதாரம் முதலிய யோக நிலை யாறனுள் நடுவாயது மணிபூரகமாதலின் அதன்கண் உயர்த்தி நிறுத்தி யருளினமை பற்றி, “நடுநிலை யேற்றினை” என்றும், மூலாதாரத்தையும் சுவாதிட்டானத்தையும் கடந்து, யோகத்தானமாகிய மணிபூரகத்தை யடைந்து கருதிய பொருளோடு ஒன்றித் தியானித்தல் அரிய செயலாதலால் அதனை, “ஏறா நடுநிலை” என்றும் சிறப்பிக்கின்றார். யோகத் தியானம் கைவரப் பெற்றாலன்றி ஆன்ம தத்துவம் இருபத்துநான்கும் வித்தியா தத்துவம் ஏழும் சிவதத்துவம் ஐந்துமாகிய முப்பத்தாறினையும் கடத்தல் அருமை என்பது பற்றி, “ஈண்டு ஆறாறு கடத்திய அருட் பெருஞ் சோதி” என்று புகழ்கின்றார்.

தாபத் துயரம் தவிர்த்துல குறும்எலா

ஆபத்து நீக்கிய அருட்பெருஞ் ஜோதி                                         314

உரை : இரக்கப் பண்பால் உண்டாகும் மனவருத்தத்தை நீக்கி, உலகுயிர்கட்கு உளவாகும் எல்லா இடுக்கண்களையும் போக்கி யருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

தாபம் - இரக்கப் பண்பு. உலகில் உயிர்கள் எய்தும் துன்பங்களைக் கண்டு எய்தும் மனவருத்தம் “தாபத் துயரம்” எனப்படுகிறது. துயரத்தில் ஆழ்ந்த வழி அதனைப் போக்கும் செயற்கண் உள்ளம் எழாது சுணங்குதலால், “தாபத் துயரம் தவிர்த்து” எனவும், சுணக்கம் இவ்வழி உள்ளம் செயற்கண் தோய்ந்து தோன்றும் இடுக்கண்களை விரைந்து போக்குவது பற்றி, “உலகுறும் எல்லா ஆபத்தும் நீக்கிய அருட் பெருஞ் சோதி” எனவும் உரைக்கின்றார்.

மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே

அருட்குரு வாகிய அருட்பெருஞ் ஜோதி                                        316

உரை : மயக்க வுணர்வாகிய பகையை நீக்கி, என்னைத் தெளிவு நிலையில் இருத்தி இனிது வாழச் செய்து எனக்குத் திருவருள் ஞானத்தை நல்கிய ஞான குருவாகியதும் அருட் பெருஞ் சோதியாம். எ.று.

மருள் - ஒன்றைப் பிறிதொன்றாகக் காட்டிக் குற்றத்தின்கண் வீழச் செய்வது. “பொருளல்லவற்றைப் பொருளென் றுணரும் மருள்” ( குறள் ) எனத் திருவள்ளுவர் உரைப்பது காண்க. இம்மருளுணர்வு துன்பத்துக் கேதுவாதலின், “மருட் பகை” எனப்படுகிறது. மருளுணர்வு நீங்கிய போது ஞான வொளி நிலவும் தெளிவு நிலை விளங்கி வாழ்வை இனிதாக்குதலால், “வாழ்வித்து” என்றும், அந்நிலையில் இறைவன் திருவருள் ஞானத்தை நல்கினமை புலப்பட, “எனக்கு அருட் குருவாகிய அருட் பெருஞ் சோதி” என்றும் இயம்புகின்றார்.

உருவமும் அருவமும் உபயமும் ஆகிய

அருள்நிலை தெரித்த அருட்பெருஞ் ஜோதி                                        318

உரை : ஆன்மாக்கட்கு அருள் புரிவது குறித்துப் பரம்பொருள் கொள்ளும் அருவம், உருவம், அருவுருவம் என்ற மூவகை நிலைகளையும் தெரிவித்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

உருவம் - ஈசன், உருத்திரன், மால், அயன் என்ற நான்குமாம்; அருவம் - சிவம், சத்தி, நாதம், விந்து; அருவுருவம் - சதாசிவம். இதனை, “சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன், உவந்தருள் உருத்திரன்தான் மாலயன்: ஒன்றி னொன்றாய்ப் பவந் தரும் அருவம் நாலிங் குருவம் நால் உபயம் ஒன்றாம், நவந்தரு பேத மேக நாதனே நடிப்பன் என்பர்” ( சிவசித்தி ) என்று அருணந்தி சிவனார் கூறுவது காண்க. அருவுருவம் - உபபம் எனப்படுகிறது. இவ்வொன்பதும் ஆன்மாக்கட்கு அருள் புரிவது காரணமாக விளங்குதல் பற்றி, “அருணிலை” என்று அறிவிக்கின்றார்.

இருளறுத் தென்உளத் தெண்ணியாங் கருளி

அருளமு தளித்த அருட்பெருஞ் ஜோதி                                        320

உரை : உணர்வின்கண் படிந்திருக்கும் மலவிருளை நீக்கி, மனத்தால் எண்ணியவற்றை எண்ணியவாறு எய்துவித்து எனக்குத் திருவருள் ஞானமாகிய அமுதத்தை வழங்கி யருளியது அருட் பெருஞ் சோதி. எ.று.

உயிரின்கண் அனாதியே படிந்திருக்கும் மலவிருளை நீக்கினமை தோன்ற, “இருளறுத்து” என்றும், அதனால் தடை நீங்கி எண்ணியவை எண்ணியவாறு எய்தினமை விளங்க, “என்னுளத்து எண்ணியாங்கருளி” என்றும் உரைக்கின்றார். திருவருள் ஞானத்தை “அருளமுது” என்று இயம்புகின்றார்.

தெருள்நிலை இதுவெனத் தெருட்டிஎன் உளத்திருந்

தருள்நிலை காட்டிய அருட்பெருஞ் ஜோதி                                        322

உரை : தெளிந்த ஞான நிலை யிதுவாகும் என விளக்கி, என்னுள்ளத்தில் எழுந்தருளித் திருவருள் நிலையைக் காட்டி யருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

தெருணிலை - ஞான நிலை. உண்மை ஞானத்தை யுணரும் நிலைக்குரிய இயல்புகளைப் பெற்றாலன்றி அதனை யுணர்ந்தோங்கும் திறம் எய்தாதாதலின், அதனை ஞானாசிரியனாய் உணர்த்தி யருளிய குறிப்பு விளங்க, “தெருணிலை யிதுவெனத் தெருட்டி” என்றும், அது காட்டக் காணும் பொருளாகாது உணர்த்த வுணரும் ஒட்ப முடையதாகலின், “உளத்திருந்து அருணிலை காட்டிய அருட் பெருஞ் சோதி” என்றும் எடுத்தோதுகின்றார்.

பொருட்பதம் எல்லாம் புரிந்துமேல் ஓங்கிய

அருட்பதம் அளித்த அருட்பெருஞ் ஜோதி                                        324

உரை : பொருளையும் அதனாற் பெறலாகும் சிறப்புக்களையும் குறைவறத் தந்து, அப்பொருணலங்கட் கெல்லாம் மேலாகிய அருள் ஞான வின்ப நிலையை எய்துவிப்பது அருட் பெருஞ் சோதி. எ.று.

உலகியற் பொருள்களும் அவற்றால் உண்டாகும் சிறப்புக்களும் அருளறத்தை வளர்த்து வளப்படுக்கும் இயல்பினவாதலின், அவற்றை இறைவன் உதவிய குறிப்பை, “பொருட் பதம் எல்லாம் புரிந்து” என்று இயம்புகின்றார். பதம் - சிறப்பு. எல்லாம் என்றது, சிறப்பையளிக்கும் பொருள் வகைகளைக் குறித்ததாம். பொருளுடையார் எல்லாரிடத்தும் தங்காமல், அற்ப பண்பால் உயர்ந்த மேன்மக்களிடத்தே அருளறமும் அருள் ஞானமும் நிற்றல் பற்றி, “மேலோங்கிய அருட் பதம்” என்று சிறப்பிக்கின்றார்.

உருள்சக டாகிய உளஞ்சலி யாவகை

அருள்வழி நிறுத்திய அருட்பெருஞ் ஜோதி                                        326

உரை : உருண்டோடும் தேர்ச் சக்கரம் போன்ற மனம் சுழன்று மெலியாவாறு திருவருள் நெறியிற் செல்லுமாறு நிறுத்தி யருள்வது அருட் பெருஞ் சோதி. எ.று.

மனத்தின் சுழற்சிக்கு உருளும் சக்கரத்தை உவமிப்பது மரபு. “கட சக்கரமெனச் சுழல் வெம்பவக் கடல் நெஞ்சே” ( காஞ்சிப்புரா ) எனச் சிவஞான முனிவர் கூறுவது காண்க. பொறி புலன்கள் காட்டும் நெறியில் சுழன்று ஓடி யுலவுவது பற்றி மனத்தை, “உருள் சகடாகிய உளம்” என வுரைக்கின்றார். பொறி புலன் காட்டும் நெறிகள் போலாது திருவருள் காட்டும் செந்நெறி மனத்தை அலைய விடாது இன்பத்துக் கேதுவாதலால், “அருள் வழி நிறுத்திய அருட் பெருஞ் சோதி” என்று கூறுகின்றார்.

வெருள்மன மாயை வினைஇருள் நீக்கிஉன்

அருள்விளக் கேற்றிய அருட்பெருஞ் ஜோதி                                         328

உரை : திகைப்புண்ணும் மனத்திற் படியும் மாயை விளைவிக்கும் வினையிருளைப் போக்கி, உள்ளத்தின்கண் அருள் ஞான, விளக்கொளியை ஏற்றி வைத்து, உய்விப்பது அருட்பெருஞ் சோதி. எ.று.

வெருளுதல் - திகைத்தல்; அஞ்சுதலுமாம். சிறிது தடையுறினும் தெளிவிழந்து அலமரும் இயல்பிற்றாதலின், மனத்தை “வெருள் மனம்” என விளம்புகின்றார். மாயை - உலகியல் ஆசையாகிய மாயை, வனத்தை மயக்குதலால் “மாயை” என்கின்றார். மாயையின் மயக்கம் காரணமாக நினைவும் சொல்லும் செயல்களும் இயங்கி வினைகளைத் தோற்றுவிப்பது பற்றி, “மனமாயை” என வினைகளை அடுக்கியுரைக்கின்றார். வினையால் அசத்து விளைவது பற்றி, “வினையிருள்” என்றும், அது தீர்ந்தாலன்றி ஞானம் விளங்காதென்பது பற்றி, “வினை யிருள் நீக்கி உள்ளருள் விளக்கேற்றிய அருட்பெருஞ் சோதி” என்றும் கூறுகின்றார். “வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்” என்பது சிவஞான போதம்.

சுருள்விரி வுடைமனச் சுழல்எலாம் அறுத்தே

அருள்ஒளி நிரப்பிய அருட்பெருஞ் ஜோதி                                        330

உரை : மலரரும்பு போற் கூம்பிய மனத்தை விரிந்து மலர்விக்கும் சூழ்ச்சியுடையவர்களின் சூழ்வினைகளைப் போக்கித் திருவருள் ஞானவொளியைப் பரப்புவது அருட் பெருஞ் சோதி. எ.று.

“மனம் முகிழ்த்த சுருள் நீக்கி மலர்விக்கும் கலை” எனச் சேக்கிழார் பெருமான் கூறுவர். கரையுணர்வை வேறு நெறியிற் செலுத்துபவரை ஈண்டு, “சுருள் விரி மனத்தினர்” என்று குறிக்கின்றார். சுழல் - சூழ்ச்சி; சூழ்வினையுமாம். கலைப் புலமையால் மனவுணர்வை இருள் நெறியிற் செலுத்துதலால், “சுருள் விரி மனச் சுழலெலாம் அறுத்தே” என்று கூறுகின்றார். கூம்புதலும் விரிதலும் இன்றி எப்போதும் ஒரு தன்மைத்தாய் ஞானவின்ப வொளி திகழ்தலின், “அருள் ஒளி நிரப்பிய அருட் பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார். நிரப்புதல் - நிறைவித்தல்.

விருப்போ டிகல்உறு வெறுப்பும் தவிர்த்தே

அருட்பே றளித்த அருட்பெருஞ் ஜோதி                                        332

உரை : விருப்புணர்வையும் அதனோடு மாறுபட்டு இயலும் வெறுப்புணர்வையும் போக்கி, இரண்டையும் ஒப்பக் கருதும் அருள் ஞான வுணர்வை நல்குவது அருட்பெருஞ் சோதி. எ.று.

நல்லதன் நலத்தையும் தீயதன் தீமையையும் உள்ளவாறு கண்டாலன்றித் திருவருள் ஞானம் பிறவாதாகலின், “விருப்போடு வெறுப்பும் தவிர்த்தே” எனவும், விருப்புணர்வுக்கு மாறாய்த் தீது செய்தற்கு ஏதுவாய் நிற்றலின், வெறுப்பை, “இகலுறு வெறுப்பு” எனவும் கூறுகின்றார். “செஞ்சாந் தெறியினும் செத்தினும் போழினும், நெஞ்சோர்ந் தோடா நிலைமை” என இதனைச் சான்றோர் விளக்குவர். விருப்பு வெறுப்புக்களை ஒப்பக் கருதாத உள்ளத்திற்கு உண்மை ஞானம் தோன்றாதாகலின், “அருட் பேறளித்த அருட்பெருஞ் சோதி” என்று இசைக்கின்றார்.

அருட்பேர் தரித்துல கனைத்தும் மலர்ந்திட

அருட்சீர் அளித்த அருட்பெருஞ் ஜோதி                                        334

உரை : அருளறம் என்ற பெயர் கொண்டு உலகனைத்தும் அருளின்பத்தில் திளைத் தோங்குமாறு திருவருள் ஞானச் சிறப்பை நல்குவது அருட்பெருஞ் சோதி. எ.று.

அருட் சோதி யாண்டவனது செந்நெறி அருணெறி யெனப் படுதலின், “அருட் பேர் தரித்து” என்றும், அருளறத்தால் உலகனைத்தும் இன்புறுவது விளங்க, “உலகனைத்தும் மலர்ந்திட” என்றும், அதனால் அருள் ஞானத்தின் நற்புகழ் சிறப்புறுவது பற்றி, அருட் சீர் அளித்த அருட்பெருஞ் சோதி” என்றும் விளம்புகின்றார்.

உலகெலாம் பரவஎன் னுள்ளத் திருந்தே

அலகிலா ஒளிசெய் அருட்பெருஞ் ஜோதி                                        336

உரை : திருவருள் ஞானம் உலகெங்கும் பரவுதல் வேண்டி எளியேனுடைய மனத்தின்கண் இருந்தருளி அளவில்லாத ஞானவொளியைச் செய்வது அருட்பெருஞ் சோதி. எ.று.

உலகங்கள் மிகப் பலவாதலின், “உலகு எலாம்” என்று குறிக்கின்றார். “உலகெலாம்” என்னும் மெய்ம்மொழிக்கு வடலூர் வள்ளல் செய்துள்ள விரிவுரையைக் காண்க. உலகனைத்தும் உய்தி பெறுதற்குத் திருவருள் ஞானம் இன்றியமையாதாகலின், “உலகெலாம் பரவ” என்றும், வானத்தில் ஓரிடத்திருந்தே உலகனைத்தும் ஒளிபரப்பும் சூரியன் போலத் தன் உள்ளத்தின்கண் இருந்தே திருவருள் ஞான வொளி எங்கும் பரவுகிறதென்பாராய், வடலூர் வள்ளல், “என்னுள்ளத் திருந்தே அலகிலா வொளி செய் அருட் பெருஞ் சோதி” என்றும் இயம்புகின்றார். அருள் ஞான வொளி அளப்பரும் சிறப்புடைய தென்றற்கு, “அலகிலா வொளி” என்று சிறப்பிக்கின்றார்.

விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்

அண்ணி நிறைந்த அருட்பெருஞ் ஜோதி            338

உரை : விண்ணாகிய பூதத்தின் உள்ளுறும் விண்ணாகியும் நடுவுறும் விண்ணாகியும் நெருங்கி நிறைந்திருப்பது அருட் பெருஞ் சோதி. எ.று.

விண்ணாகிய பூதம் ஒன்றுபோலத் தோன்றினும், முதல் நடு ஈறு என முக்கூறாய் நிற்றலின், அக் கூறுகள் அனைத்தினும் நெருங்கி நிறைந்து விளங்குகிற அருட் பெருஞ் சோதி என்பது கருத்து. அண்ணுதல் - நெருங்குதல்.

விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்

அண்ணி வயங்கும் அருட்பெருஞ் ஜோதி                                        340

உரை : விண்ணாகிய பூதத்தின்கண் உறுகின்ற விண்ணாகவும், அதன்கண் அசைவின்றி நிலைபெறும் விண்ணாகவும் நெருங்கி விளங்குவது அருட்பெருஞ் சோதி. எ.று.

விண்ணாகிய பூதம் தங்குமிடம் விண்ணெனப்படுகிறது. விண்ணுலகும் ஒன்றின் மேலொன்றாய்த் தங்கும் திறமும் நிலைபெறும் இயல்பும் புலப்பட, “விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்” என விளம்புகின்றார். தங்குதல், நிலைகொளல் என்ற இரண்டினும் அருட்சோதி யாண்டவனது இருப்பு விளங்க, “அண்ணி வயங்கும் அருட்பெருஞ் சோதி” என்று கூறுகின்றார்.

காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்

ஆற்றலின் ஓங்கும் அருட்பெருஞ் ஜோதி                                        342

உரை : காற்று மண்டிலத்தின் உள்ளுறு காற்றாகவும், இடையுறு காற்றாகவும் தனது அருளாற்றலாற் கலந்து ஓங்குவது அருட்பெருஞ் சோதி. எ.று.

வானத்துக்கும் காற்று மண்டிலத்துக்கும் இடையில் வளி வழங்காத இடைவெளியும் உண்டு; அதனை, “வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்” என்று புறநானூறு கூறுகிறது. நில மண்டிலத்துக்கு மேலே சூழ்ந்திருக்கும் காற்றினும் வளி வழக்கற்ற வெளியைத் தொட்டுக் கொண்டிருக்கும் காற்று மென்மையானதாகலின் அதனுள்ளும் கீழும் உள்ள காற்றை உள்ளுறு காற்று என்றும், இடையிலுள்ளதைக் காற்றிடைக் காற்று என்றும் பிரித்தோதுகின்றார். காற்றினுட் காற்றாய் நிலவுவது பற்றி அருட்சோதியாண்டவனை, “ஆற்றலின் ஓங்கும் அருட் பெருஞ் சோதி” என மொழிகின்றார். ஆற்றல் - அருளாற்றல்.

காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்

ஆற்ற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி                                        344

உரை : வளி மண்டிலத்தின்கண் மிக்குற்ற காற்றாகவும், அம் மண்டிலத்தின்கண் நின்றசையும் காற்றாகவும் மிகவும் விளங்குவது அருட்பெருஞ் சோதி. எ.று.

காற்றுக்கே மேலும் உள்ளும் கீழுமாய் உயிர்ப்பாய் விளங்குவது அருட்பெருஞ் சோதி என்பது கருத்து. காற்று மண்டிலம் நிலத்தை யொட்டித் தண்காற்றாகவும் மென்காற்றாகவும் கடுங்காற்றாகவும் தன் பணியைச் செய்விப்பதுபற்றி, “ஆற்ற விளங்கும் அருட்பெருஞ் சோதி” என வுரைக்கின்றார். கால் - காற்று.

அனலினுள் அனலாய் அனல்நடு அனலாய்

அனலுற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி                                        346

உரை : தீயாகிய பூதத்தினுள் வெம்மையின் உருவாகிய அனலாகவும், அதன் நடுநின்றொளிரும் வெந்தீயாகவும் ஒளியுண்டாக விளங்குவது அருட்பெருஞ் சோதி. எ.று.

வெம்மையும் ஒளியுமா யிருத்தலின் தீயாகிய பூதம் அனல் எனப்படுகிறது. இதன் உருவம் உள்ளகத்தில் வெம்மை மிக்கு நீலநிறம் கொண்டு நிலவுவதால், “உள்ளல்” என்றும், தீயணுவின் நடுக்கூறு வெம்மையேயாய் இருத்தலின் “நடுவனல்” என்றும் குறிக்கப்படுகிறது. எவ்விடத்தும் வெம்மையுற நிற்றலின், “அனலுற விளங்கும் அருட்பெருஞ் சோதி” என்று இயம்புகின்றார். தண்ணிய நீரினுள்ளும் பனிமலையின் பனியினுள்ளும் வெம்மை காணப்படுவதுபற்றி, “அருட்பெருஞ் சோதி” என்று பாராட்டுகின்றார்.

அனலுறு அனலாய் அனல்நிலை அனலாய்

அனலுற வயங்கும் அருட்பெருஞ் ஜோதி                                        348

உரை : தீயினிடத்து அனலாகவும், தீத்தானும் சிறியதோர் அணுவிடத்திலும் இருத்தற்கேதுவாய் வெம்மையுற விளங்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

தீயை அனல் எனவும் நெருப்பெனவும் வழங்கும் மரபு பற்றித் தீயாகிய பூதத்தை, “அனல்” எனக் கூறுகின்றார். தீ முற்றும் வெம்மை நிறைவது பற்றி, “அனலிடத்து அனலாய்” என்றும், எங்கும் எப்பொருளிலும் கலந்துறைதலின், “அனல்நிலை யனலாய் அனலுற வயங்கும் அருட்பெருஞ் சோதி” என்றும் இயம்புகின்றார்.

புனலினுள் புனலாய்ப் புனலிடைப்புனலாய்

அனைஎன வயங்கும் அருட்பெருஞ் ஜோதி                                        350

உரை : நீராகிய பூதத்தின்கண் மேலும் கீழும் இடையிலும் நீராய் நின்று உயிர்கட்கு அன்னையாய் விளங்குவது அருட்பெருஞ் சோதி. எ.று.

புனல் - நீர். நீர்நிலைக்கண் மேனீரும், கீழ் நீரும், இடை நீரும், பகுத்துக் காணப்படினும், எல்லாம் ஒரு நீர்மயமாய் இருத்தலின், “புனலுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய்” என்றும், உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாமை நோக்கி நீரைப் பெருகத் தந்தருளித் தாயாய்த் தலையளி செய்தலால், “அனையென வயங்கும் அருட்பெருஞ் சோதி” என்றும் கூறுகின்றார்.

புனலுறு புனலாய்ப் புனல்நிலைப் புனலாய்

அனைஎனப் பெருகும் அருட்பெருஞ் ஜோதி                                        352

உரை : நீர் நலமாய்ப் பெருகுவதாய், நிறைவுற்று நிலைப்பதாய் உயிர் வாழ்க்கைக்குத் தாயாய்ப் பயன் தந்து மேன்மையுறுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

உறுபுனல் - மிகுகின்ற நீர். மிகுதல் கூறுவதால் சுருங்குவதும் கொள்ளப்படும். ஓரிடத்துப் பெருகுவதும், சுருங்குவதும் பற்றி, “உறுபுனலாய்” எனவும், ஓரிடத்துப் பெருகி நின்று பயன்படுவதால், “புனல் நிலைப் புனலாய்” எனவும் புகல்கின்றார்.

புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய்

அவைதர வயங்கும் அருட்பெருஞ் ஜோதி                                        354

உரை : நிலமாகிய பூதத்தின்கண் உள்ளும் புறமும் நடுவிலும் நிலமேயாய் ஆகாய முதலிய நான்காகிய அவையனைத்தும் கலந்துறைய விளங்குவிப்பது அருட் பெருஞ் சோதி. எ.று.

உள்ளீடில்லாத பூதமன்று; முற்றவும் நீலமாய் முழு முதலாய் நிலவுவது என்றற்குப் “புவியினுட் புவியாய்ப் புவி நடுப் புவியாய்” என்றும், நிலத்தினுள் ஏனை ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய பூதம் நான்கும் நிலவுதல் பற்றி, “அவை தர வயங்கும் அருட் பெருஞ் சோதி” என்றும் கூறுகின்றார். நிலமாகிய பூதத்தின்கண் ஏனைப் பூதங்கள் கலந்துறையும் நிலைமையைக் காட்டற்கு, “அவை தர வயங்கும் அருட் பெருஞ் சோதி” என வுரைக்கின்றார்.

புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்

அவைகொள விரிந்த அருட்பெருஞ் ஜோதி                                        356

உரை : நிலமாகிய பூதமும் வன்மையும் மென்மையும் உற்றுத் தன்கண் உள்ள எல்லாவற்றையும் தாங்கும் நிலப் பூதமாய், ஏனைப் பூதத் தொகுதிகளையும் அவற்றின் குணங்களையும் தன்கட் கொண்டு விளங்குவிப்பது அருட்பெருஞ் சோதி. எ.று.

நிலமாகிய பூதம் மிகப் பல வடுக்குகளை ஒன்றின் கீழ் ஒன்றாகக் கொண்டிருத்தலால், “புவியுறு புவியாய்” என்றும், நிலப் பொருள்களையும் ஏனைப் பூதங்களையும் ஏந்தி நிற்பது பற்றி, “நிலைப் புவியாய்” என்றும் இயம்புகின்றார். “நிலனேந்திய விசும்பு” ( புறம் ) என்று சங்கச் சான்றோர் கூறுவது காண்க. ஆகாய முதல் நிலம் ஈறாக வுள்ள ஐம்பெரும் பூதங்களின் குணநலங்களையும் கொண்டிருப்பது விளங்க, “அவைகொள விரிந்த அருட்பெருஞ் சோதி” என வுரைக்கின்றார்.

விண்ணிலை சிவத்தின் வியனிலை அளவி

அண்ணுற அமைந்த அருட்பெருஞ் ஜோதி                                        358

உரை : விசும்பாகிய பூதத்தின் இயல்பைச் சிவ பரம்பொருளின் பரந்த பண்பொடு கலந்து பொருந்துமாறு அமைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

விரிந்து பரந்து விளங்கும் விசும்பாகிய பூதத்தின் இயல்பு ஏனைப் பூதங்கள் தோறும் கலந்து பரந்து, எல்லாப் பொருளோடும் கலந்தொன்றி விளங்கும் பரசிவம் போறலின், “சிவத்தின் வியனிலை யளவி யண்ணுற” எனத் தெரிவிக்கின்றார். “பூதங்கள் தோறும் நின்றாய்” ( திருப்பள்ளி ) என மணிவாசகர் உரைப்பது காண்க. அண்ணுறுதல் - பொருந்துதல். இது அருட் சோதி யாண்டவனது படைப்பு நலம் என்றற்கு, “அமைத்த” எனக் குறிக்கின்றார்.

வளிநிலைச் சத்தியின் வளர்நிலை அளவி

அளிஉற அமைத்த அருட்பெருஞ் சோதி                                        360

உரை : காற்றாகிய பூதத்தின் இயல்பு சிவசத்தியின் மேன் மேல் வளரும் நிலைமையொடு கலந்து உயிர்கள் அருட் பண்பு பொருந்தி வாழுமாறு அருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

வானமாகிய பூதத்தை யடுத்திருப்பது பற்றி வளி மண்டிலத்தை உடன் கூறுகின்றார். சத்தி - சிவசத்தியாகிய சிவனது அருட் சத்தி. விண்ணாகிய பூதத்துக்குச் சிவத்தின் வியனிலை கூறினாராதலின், அதனை யளாவி நிற்கும் காற்றாகிய பூதத்துக்கு எல்லையின்றிப் பெருகிய சிவசத்தியின் பெருக்க நிலையை எடுத்துரைக்கின்றார். காற்றாகிய பூதத்தின் மென்மைத் தன்மை உயிர்கள்பால் அருள் உண்டாக விளங்குதலால், “அளியுற அமைத்த அருட்பெருஞ் சோதி” என மொழிகின்றார். அளி - அருட் பண்பு.

நெருப்பது நிலைநடு நிலைஎலாம் அளவி

அருப்பிட வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        362

உரை : நெருப்பாகிய பூதத்தின் இயல்பு உள்ளும் புறமும் ஒப்பக் கலந்து நிலவப் படைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

நெருப்பின் இயல்பு - சுடுதலும் ஒளி செய்தலுமாம். நெருப்பது என்றவிடத்து அது பகுதிப்பொருள் விகுதி. நெருப்பின் அகத்தும் புறத்தும் நெருப்பின் சுடும் சத்தியும் ஒளிசெய் சத்தியும் ஒப்ப விளங்குவதால், “அளவி அரும்பிட” எனத் தெரிவிக்கின்றார். அரும்பிட என்பது அருப்பிட என வலித்தது.

நீர்நிலை திரைவளர் நிலைதனை அளவி

ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                         364

உரை : நீராகிய பூதத்தின் இயல்பாகிய அலையாய்த் திரளும் தன்மையுற்று நிறைந்தியலுமாறு படைத்தருளியது அருட் பெருஞ் சோதி. எ.று.

காற்றலைத்த வழித் திரண்டு அலையாய் எழுவதும், பள்ளத்தை நோக்கி யோடுதலும் இயல்பாதலால், “திரை வளர் நிலைதனை யளவி ஆர்வுற” என மொழிகின்றார். பள்ளமெல்லாம் நிறைந்து சமநிலை காண்பதனால், “ஆர்வுற” என வுரைக்கின்றார். ஆர்வு - நிறைவு.

புவிநிலைச் சுத்தமாம் பொற்பதி அளவி

அவையுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        366

உரை : மண்ணாகிய பூதத்தின் இயல்பு சுத்த நிலையாகிய அழகிய தன்மையொடு கலந்து தொகுதியுறப் படைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

புவி - நிலம்; இது மண்ணெனவும் வழங்கும். மண்ணுதல் சுத்தம் செய்தல் எனப்படுதலால், “சுத்தமாம் பொற் பதி யளவி” எனக் கூறுகின்றார். பொற் பதி - அழகுறும் தன்மை. அவை - தொகுதி. மேடும் குன்றும் மலையுமாய்த் தொகும் இயல்பு விளங்க, “அவை யுற” எனக் குறிக்கின்றார்.

மண்ணினில் திண்மையை வகுத்ததிற் கிடக்கை

அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        368

உரை : மண்ணாகிய பூதத்துக்குத் திண்மையாகிய குணத்தை யமைத்துக் கிடந்தாங்குக் கிடக்கும் தன்மையும் பொருந்த அமைத்தருளியது அருட் பெருஞ் சோதி. எ.று.

“மண்தானும் கடினமாகித் தரித்திடும்” ( சிவசித்தி ) எனவும், “மண் கடினமாய்த் தரிக்கும்” ( உண்மை விளக்கம் ) எனவும், சான்றோர் எடுத்தோதுதலால், “மண்ணினில் திண்மையை வகுத்து” என வுரைக்கின்றார். மணிவாசகர், “வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன்” ( அண்டம் ) எனக் கூறுவது காண்க. ஏனை நால்வகைப் பூதங்களையும் அவற்றின் காரியப் பொருள்களையும் தாங்கிக் கிடந்தாங்குக் கிடத்தல் பற்றிக் “கிடக்கை அண்ணுற” என அறிவிக்கின்றார்.

மண்ணினில் பொன்மை வகுத்ததில் ஐம்மையை

அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        370

உரை : மண்ணாகிய பூதத்துக்கும் பொன்னிறம் வகுத்து அதன் மேல் ஐந்து நிறமும் பொருந்த அமைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

மண்ணாகிய பூதத்துக்கு நிறம் பொன்னெனக் கூறுவர்; அதனால், “மண்ணினிற் பொன்மை வகுத்து” எனவும், பொன்மை, வெண்மை, செம்மை, கருமை, புகை நிறம் ஆகிய ஐந்தும் பொருந்தக் காணப்படுதலால் “ஐம்மையை அண்ணுற வகுத்த” எனவும் இயம்புகின்றார்.

மண்ணினில் ஐம்பூ வகுத்ததில் ஐந்திரம்

அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        372

உரை : மண்ணுலகில் ஐந்து நிலங்களை வகுத்து அவ்வுலகத்தில் ஐவகைத் தாதுப் பொருள்கள் பொருத்தமுற அமைத்தருளியது அருட் பெருஞ் சோதி. எ.று.

ஐந்து நிலங்களை, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்பர். குறிஞ்சி - மலைநாடு; முல்லை - காடுகள் நிறைந்த நிலப்பகுதி; பாலை - முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வேறுபட்ட நிலம்; மருதம் - நீர்வள மிக்க நாடு; நெய்தல் - கடற்கரைப் பிரதேசம். அவற்றுள் முறையே பொன், வௌ¢ளி, இரும்பு, செம்பு, ஈயம் என்ற ஐவகைத் தாதுப் பொள்களைத் தருவதை “ஐந்திரம்” எனக் கூறுகின்றார். ஐந்திரம் - ஐவகைத் தாதுப் பொருள். திறம் - திரம் என வந்தது. பூ - நிலப் பகுதி.

மண்ணினில் நாற்றம் வகுத்ததில் பல்வகை

அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி                                        374

உரை : மண்ணின் குணமாக நாற்றத்தைப் படைத்து அந்நாற்றவகையுள் மிகப் பலவகைகள் பொருந்த அருளியது அருட் பெருஞ் சோதி. எ.று.

நாற்றமென்னும் தன்மாத்திரையில் தோன்றுவது பற்றி நிலமாகிய பூதத்துக்கு நாற்றமே தலையாய குணமாம் எனச் சிவாகமங்கள் கூறுகின்றன; அதனால் “மண்ணினில் நாற்றம் வகுத்து” என்று கூறுகின்றார். மண்ணின்கண் ஆகாய முதலியவற்றின் குணங்களும் செயற்கையாய் அமைவதால், “பலவகை அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் சோதி” என மொழிகின்றார். இது கருதியே மணிவாசகர் “பாரிடை யைந்தாய்ப் பரந்தாய் போற்றி” என்று இயம்புகின்றார். இந்நாளைய விஞ்ஞானக் கருத்துக்கள் வள்ளலார் காலத்தில் பரவாமையின் அவற்றை அவருடைய கருத்தாக இதன்கட் புகுத்தல் நேரிதாகாது.

மண்ணினில் பற்பல வகைகரு நிலஇயல்

அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி                                        376

உரை : மண்ணுலகில் பற்பல வகையாய்க் காணப்படும் கருநிலம், செந்நிலம், உவர்நிலம் என வியன்றுள்ள வகை பலவும் பொருந்தப் படைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

கருமண் ணிலம், செம்மண் ணிலம், உவர் நிலம், சுண்ணாம்பு நிலம், கந்தக நிலம், முரம்பு நிலம் எனப் பல திறமுண்மை பற்றி, “பற்பல வகை கருநிலவியல் அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் சோதி” என்று கூறுகின்றார்.

மண்ணினில் ஐந்தியல் வகுத்ததில் பல்பயன்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        378

உரை : மண்ணக வாழ்வில் ஐவகை ஒழுக்கங்களை வகுத்து அவற்றுள் திணை பல காட்டிப் பயனுகர அமைத்தது அருட்பெருஞ் சோதி. எ.று.

புணர்தல், இருத்தல், பிரிதல், ஊடல், வருந்தல் என்பன ஐவகை ஒழுக்கங்களாகும். இவை அகனைந்திணையாகும். இவ்வாறே புறத்திணைகள் பலவாதலின், “பல்பயன் அண்ணுற” எனக் குறிக்கின்றார். பலபயன் என்றற்கு அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கொள்வர்.

மண்ணிடை அடிநிலை வகுத்ததில் பல்நிலை

அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        380

உரை : மண்ணுலகின் கீழே பலவகை நிரப வகைகளை வகுத்து அவற்றுட் பல்வேறு நிலைகளை அமைத்தது அருட்பெருஞ் சோதி. எ.று.

மண்ணுலகின் கீழ்ப் பாவிகள் சென்றடையும் அடிநிலை நரகங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக முப்பத்து மூன்று தளங்களும் முப்பத்திரண்டு இடைவெளியு முடையவாய் உள்ளன; இவை நரகம், மாநரகம், இராச நரகம், இராசராசேச்சுர நரகம் என நால்வகைப்படும். இவற்றுள் நரகம் இரௌரவம் முதலாக எண்வகையாம் எனவும், மாநரகம், சூசிமுகம் முதலாக எண்வகை எனவும், இராச நரகம், இலாக்காப் பிரலேபம் முதலாக எண்வகை யெனவும், இராசராசேச்சுர நரகம், உலோகத் தம்பம் முதல் எண்வகையெனவும், இந்த நால் வேறு வகையின் எவ்வேழுக்கு ஒவ்வொன்று பிரதானமாக இருக்கும் எனவும் சிவாகமங்கள் தெரிவித்தலால், அதில் “பன்னிலை யண்ணுற வமைத்த அருட்பெருஞ் சோதி” என்று அறிவிக்கின்றார்.

மண்ணில்ஐந் தைந்து வகையும் கலந்துகொண்

டண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி                                        382

உரை : மண்ணாகிய பூதத்தில் தன்மாத்திரைகள் ஐந்து வகையும் அவற்றின் காரியங்களாகிய பூதங்கள் ஐந்தும் கலந்து கொண்டு உலகியற்குப் பொருந்த அமைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

நுண்ணிய தன்மாத்திரைகளையும் விண் முதல் நில மீறாகிய பூதங்களையும் பிரித்துக் காட்டற்கு, “ஐந்து ஐந்து வகை” எனக் கூறுகின்றார். தன்மாத்திரைகளும் பூதங்களும் அணுவடிவிற் கலந்திருப்பது பற்றி, “கலந்து கொண்டு” என வுரைக்கின்றார்.

மண்ணியல் சத்திகள் மண்செயல் சத்திகள்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        384

உரை : மண்ணுலகத்தின் ஆக்கத்துக்கும் செயல் வகைகட்கும் அமைந்த சத்திகளை வகுத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

“ஒரோவொரு குணம் ஏற்றமாக வுடைய வாயு முதலிய நான்கும் கேவலமாய் நின்ற பரிச முதலியவற்றில் தோன்றாமையின், சத்தத்தோடு விசிட்டமாய் நின்ற பரிச தன்மாத்திரையே வாயுவுக்குக் காரணம்; அத்தன்மைத்தாய பரிசத்தோடு கூடி விசிட்டமாய் நின்ற உருவ தன்மாத்திரையே தேர்வுக்குக் காரணம்; அத்தன்மைத்தாய உருத்தோடு கூடி விசிட்டமாய் நின்ற இரத தன்மாத்திரையே புனலுக்குக் காரணம்; அத்தன்மைத்தாய இரதத்தோடு கூடி விசிட்டமாய் நின்ற கந்த தன்மாத்திரையே புடவி ( நிலத்து )க்குக் காரணம்” என நீலகண்ட பாடியமும் சிவஞான பாடியமும் உரைக்கின்றன. இவை தாமாகவே செயற்படமாட்டாவாதலின் ஒவ்வொரு கூற்றையும் செயலுறுவிக்கும் சத்திகள் பலவாதலின், அவற்றை “மண் செயற் சத்திகள்” எனவுரைக்கின்றார். உருப்படுத்தற் கேதுவாகிய சத்திகள் “மண்ணியற் சத்திகள்” எனப்படுகின்றன.

மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        386

உரை : மண்ணணுக்கள் செறிந்து நிலமாகி, பூத வடிவாக்கும் சத்திகளும், அவை ஒழுங்காக அமைந்து செயல்படுத்தும் சத்திகளும் பொருந்தவமைவிப்பது அருட் பெருஞ் சோதி. எ.று.

கேவலம் கந்த தன்மாத்திரையாய் அருவாய் உள்ளதனை, மண்ணுருவாக்கும் சத்திகளை “மண்ணுருச் சத்திகள்” எனவும், மண்ணணுவும் தம்மிற் செறிந்து ஒழுங்கு பிழையாமல் செயற்படுத்தும் சத்திகள் “கலைச் சத்திகள்” எனவும் குறிக்கப்படுகின்றன. கலை - கலித்தல் என்னும் செயலடியாகத் தோன்றிய சொல் என்பர் சிவஞான முனிவர்.

மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        388

உரை : மண்ணணுவினுள் ஒளி வடிவாய்க் கரந்திருக்கும் சத்திகளும், மண்ணில் கருப்பொருள் தோன்றி வளர்விக்கும் சத்திகளும் பொருந்த அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஒளி வடிவாய் அணுவினுள் மறைந்திருக்கும் சத்தியை “மண்னொளிச் சத்தி” என்றும் மண்ணில் தாவரங்களும் பிற வுயிர்களும் தோன்றி வளர்தற்கேதுவாகும் சத்திகளை, “மண் கருச் சத்திகள்” என்றும் கூறுகின்றார். “கருவளர் வானம்” எனப் பரிபாடல் கூறுதலால், இச்சத்திகளை “மண் கருச் சத்தி” எனச் சிறப்பிக்கின்றார்.

மண்கணச் சத்திகள் வகைபல பலவும்

அண்கொள அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        390

உரை : மண்ணணுக்கள் கூட்டமாய்த் திரண்டும் குவிந்தும் விரிந்தும் நிலவுதற் கேதுவாகும் சத்திகள் மிகப் பலவாய் நன்கமையப் படைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

மண்ணணுக்கள் தம்மிற் றிரளுதல், கூடி ஒன்றாதல், பலவாதல், கல்லாதல், பொடியாதல் முதலிய செயல் பலவற்றிற்கும் ஏதுவாகும் சத்திகள் “மண்கணச் சத்திகள்” எனப்படுகின்றன. கணம் - கூட்டம்.

மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்

அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        392

உரை : மண்ணாகிய பூதத்தின்கண் நிலைபெற்ற சத்திமான்கள் பலவேறு வகைகளான பலவும் வகைதோறும் உள்ளன பலவும் பொருந்த அமைத்தது அருட் பெருஞ் சோதி. எ.று.

சத்தியைத் தன்கண் உடையது சத்தர்; தீயின் சுடுஞ் சத்தி தீயைப் பற்றி நிற்பதுபோல எல்லாச் சத்திகளும் சத்தர்களைப் பற்றி நிற்பனவாம். “குணங்கள் குணசமூகமாகிய குணியை யின்றியமையாவாறு போலச் சத்திகளும் சத்தி சமூகமாகிய சத்திமானை யின்றியமையா” என்று சிவஞான மாபாடியும் கூறுவது காண்க. சத்திமானைச் சத்தர் என்பதும் மரபாதலின், “சத்தர்கள்” எனக் குறிக்கின்றார். சத்தியையுடைய பொருள்கள் எண்ணிறந்தனவாய் எண்ணிறந்த வகைகளாகவும் இருத்தலால், “மண்ணிலைச் சத்தர்கள் வகை பல பலவும்” என வுரைக்கின்றார்.

மண்கரு உயிர்த்தொகை வகைவிரி பலவா

அண்கொள அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        394

உரை : மண்ணுலகின் கருப்பொருளாகிய உயிரினத்தின் வகைகளும் வகைதோறும் அடங்கிய உயிர்களும் மிகப் பலவாதலின் அவை ஆங்காங்குப் பொருந்த அமைத்தருள்வது அருட் பெருஞ் சோதி. எ.று.

மண் முதலிய பூதங்கள் மாயையிலிருந்து படைக்கப்படுவது போல உயிர்த்தொகை படைக்கப்படுவன வல்லவாதலின், “மண் கருவுயிர்த்தொகை” என்று கூறுகின்றார். உயிரினம் நால்வகை யோனியும், ஏழ்வகைப் பிறப்புமாய் எண்பத்து நூறாயிரமாய் விரித்துரைப்பர். “உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம், நிரை சேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்” ( வீழிமிழலை ) என ஞானசம்பந்தர் ஓதுவது காண்க. நால்வகை யோனிகளைச் சராயுசம் ( கரு ), உற்பிசம் ( விதை ), அண்டசம் ( முட்டை ), சுவதேசம் ( வியர்வை முதலிய அழுக்கு ) என்பர். பிறப்பு ஏழினையும் ஊர்வன, நீரில் உள்ளன, பறப்பன, நடப்பன, தாவரம், மானுடம், தெய்வம் எனக் கூறுவர். இவை இலக்கம் இலக்கமாக விரிவதால், “விரி பலவா அண்கொள அமைத்த அருட்பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார்.

மண்ணிணிற் பொருள்பல வகைவிரி வெவ்வே

றண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி                                        396

உரை : மண்ணாகிய பூதத்தின்கண் உயிருள்ளனவும் இல்லனவுமாகிய பொருள்கள் வேறுவேறு வகையாய் எண்ணற்காகாத விரிவுடையனவாய்ப் படைத்தமைத் தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

உயிர்கள் நின்று வாழ்தற் கமைந்த பொருள்களும் அல்லாத பிறவுமாகிய பொருள்கள் உலகத்து உண்மையால், அவை யனைத்தையும் தொகுத்து, “பொருள் பலவகைவிரி வெவ்வேறு அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் சோதி” என மொழிகின்றார். வேறு வேறு என்பது வெவ்வேறு என வந்தது.

மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல

அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி           398

உரை : மண்ணக வாழ்வில் பலவேறு நிலைகளையுண்டாக்கி அவற்றிற்கொத்த செயல் வகைகளையும் அமைத்தருளியது அருட் பெருஞ் சோதி. எ.று.

உயிர் வாழ்க்கையில் ஊனமில்லாத நிலைகளையும், கூன் குருடு முதலிய ஊனமுடைய நிலைகளையும் இன்னோரன்ன பிறவும் உண்டாக்கி, அவ்வந்நிலைகளிலும் உயிர்கள் வினை செய்து பயன் நுகர்ந்து உய்தி பெற வேண்டுதலால், “நிலை பல வகுத்து அதிற் செயல் பல அண்ணுற அமைத்த அருட்பெருஞ் சோதி” என வுரைக்கின்றார்.

மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்

அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        400

உரை : மண்ணில் வாழும் உயிர்க்கு அறிவாற்றல்கட் கேற்பக் குணம் செயல்கள் பலவற்றைப் படைத்துத் தன்னியல்பாகவும் பிறவற்றோடு கூடிப் பெறுவனவாகவும் வாழ்வுக்குப் பொருந்த அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

இயல் - உயிர்கட்குரிய குணம் செயல்கள். தாமாகவும் பிறர் கூட்டுறவாலும் உளவாவன மிகப் பலவாதலால், “பிறவும்” என்று குறிக்கின்றார். அறிவாற்றலால் வெளிப்படுவன குணஞ் செயல்கள்; இவை இயற்கையும் செயற்கையுமாய் விரிதலால், “பலபல வகுத்து” என்றும், “பிறவும் அண்ணுற அமைத்த” என்றும் இயம்புகின்றார்.

மண்ணிடைப் பக்குவம் வகுத்ததில் பயன்பல

அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        402

உரை : மண்ணக வாழ்வில் வாழ்வார் பெறற்குரிய பயன்களைப் பெறற் பொருட்டு உரிய பக்குவம் எய்தப் படைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

பக்குவம் - வேண்டும் பயன்களைப் பெறுதற்குரிய காலநிலை. பெறற்காகாத நிலை அபக்குவம், பக்குவம், மந்தம், மந்ததரம், தீவிரம், தீவிரதரம் என்று நால்வகைப்படும், அரும்பின்கண் மணமின்மை அபக்குவம். மலர் விரிந்து மணம் பரப்பிக் கருக்கொண்டு காய் கனி விளைவித்தல் பக்குவம். உண்மை ஞானப் பேறும் இவ்வியல்பாகும். பக்குவம் எய்துவது பயன் நுகர்தற் பொருட்டாதலின், “பக்குவம் வகுத்து அதிற் பயன் பல அமைத்த அருட்பெருஞ் சோதி” என இசைக்கின்றார்.

நீரினில் தன்மையும் நிகழ்ஊ றொழுக்கமும்

ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        404

உரை : நீராகிய பூதத்தின்கண் தட்பத்தையும் அதன் வழிப் பரிசத்தையும் இடையறாது ஒழுகும் தன்மையையும் நிறைவுற வகுத்தளிப்பது அருட் பெருஞ் சோதி. எ.று.

தட்ப வெப்பக் காலநிலைக்கேற்ப மாறுமாயினும் மாற்ற மெல்லாம் தண்ணீரின் மேனிலையில் தோன்றுமாயினும் உண்ணீர் தட்பமே யுடையதாதலால், தன்மையை விதந்துரைக்கின்றார். ஊறொழுக்கம் என்பதற்கு ஊறிப் பெருகுதலும் சுருங்குதலுமாகிய பண்பு என்றும் கூறுவதுண்டு. நீரின் குணம் நெகிழ்தல் என அடியார்க்கு நல்லார் கூறுவர். “சத்தம் பரிச ரூப இரதம் நான்கும் புனலுக் கியல்பதாம்” ( பெருந்திரட்டு ) என நித்தியானந்த சரிதை கூறுகிறது. ஆர்தல் - நிறைதல்.

நீரினில் பசுமையை நிறுத்தி அதிற்பல

ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        406

உரை : நீரின்கண் வளமையை நிறுவு, அதன்கண் பலவேறு இயல்புகள் உண்டாகச் செய்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

பசுமை - ஈண்டு வளமை மேற்று. நீர்வளம் சான்ற நிலப் பகுதிகள் பசுமையான தோற்றம் தருவதே இதற்குச் சான்றாகும். வளமை பல திறப்படுவதால், “அதிற் பல ஆருற அமைத்த” என வுரைக்கின்றார்.

நீரிடைப் பூவியல் நிகழ்உறு திறஇயல்

ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        408

உரை : நீராகிய பூதத்தின்கண் நிலவுலகின் வளம் தரும் கூறுபாடுகளையும் இயல்புகளையும் நிறைந்துற அமைத்தருளியது அருட் பெருஞ் சோதி. எ.று.

பூவியல் - நிலவுலகின் வளம் தரும் தன்மை. அது இடந்தோறும் காலந்தோறும் பல திறமாய் நிலவுவதால், “நிகழுறு திறவியல்” என்று தெரிவிக்கின்றார். நிலவுலகின் பலவேறு பகுதிகளில் பலதிறப் பொருளும் போகமும் உண்டாகுமாறு நீராகிய பூதம் உதவுதல் பற்றி, “நிகழுறு திறமும் இயலும் ஆர்தர வகுத்த அருட்பெருஞ் சோதி” எனக் கூறுகின்றார்.

நீரினில் சுவைநிலை நிறைத்ததில் பல்வகை

ஆருறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி                                        410

உரை : நீரின்கண் பல்வகைச் சுவைகளும் பொருந்தும் இயல்பை நிறைவித்து எங்கும் இயல்வித் தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

தூய நீர் தன் தனிநிலையிற் சுவையிலதாயினும் ஏனைப் பூதங்களின் கலப்பால், சுவை பல வுடையதாதல் பற்றி, “சுவை நிலை நிறைத்து” என்றும், கார்ப்பு, கைப்பு, இனிப்பு, உவர்ப்பு எனச் சுவைகள் பலவாதலின், “பலவகை ஆருறப் புரிந்த அருட்பெருஞ் சோதி” என்றும் இயம்புகின்றார். ஆர்தல் - நிறைதல். “நிலத் தியல்பால் நீர் திரிந்தற்று” எனத் திருவள்ளுவர் கூறுகின்றார். நித்தியானந்த சரிதை என்னும் நூல், “சத்தப் பரிச ரூப இரதம் நான்கும் புனலுக்கு இயல்பதாகும்” என வுரைப்பது காண்க.

நீரினில் கருநிலை நிகழ்த்திய பற்பல

ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        412

உரை : நீரின்கண் உயிர் வருக்கத்தின் தோற்றத்துக் கேதுவாகிய பற்பல இயல்புகள் நிறைவுற வகுத்தருளியது அருட் பெருஞ் சோதி. எ.று.

கருநிலை - உயிர்கள் அணு வுரு முதலிய உடம்புகளுடன் தோன்றும் நிலை. நீரின்கண் மீன் முதலிய உயிரினங்கள் எண்ணிறந்த வகையில் தோன்றிப் பெருகி வாழ்தலால், அவற்றின் வாழ்வுக்குரிய கூறுகளைப் “பற்பல” எனத் தொகுத்துக் காட்டுகின்றார்.

நீரிடை நான்கியல் நிலவுவித் ததிற்பல

ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        414

உரை : நீரின்கண் நான்கு இயல்புகள் நிலவும்படி யருளி ஒவ்வொன்றும் பற்பலவாய் நிறைவித் தருளியது அருட் பெருஞ் சோதி, எ.று.

நான்குமாவன : சத்தம், பரிசம், உருவம், இரதம் என வரும். நீரின் சுவையியலை விதந்து மணிவாசகர், “நிழல் திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன்” ( அண்டப் ) என்பது காண்க. இவை ஒவ்வொன்றும் நுண்ணிய லாராய்ச்சியால் மிகப் பலவாய் விரிந்து காணப்படுதலின், “பல ஆர்தர வகுத்த” என மொழிகின்றார்.

நீரிடை அடிநடு நிலைஉற வகுத்தனல்

ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி                                         416

உரை : நீரின்கண் அடியெனவும், நடுவெனவும், மேல் எனவும் வகுத்து அவற்றினுள்ளும் வெம்மை நிலவுமாறு அமைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

நீர் நிலைகளில் உள்ள நீர் மேனீர், நடுநீர், அடிநீர் எனப் பிரித்துக் காணப்படுவதும், அவற்றினுள் தீயின் வெம்மைத் தன்மை யுளதாவதும் யாவராலும் உணரப்படுவதால், “அனல் ஆர்தரப் புரிந்த” என வுரைக்கின்றார். அனல் - ஈண்டு வெம்மை குறித்து நின்றது. பனிப் பாறைகளும் படலங்களும் உள்ள கடல்களில் அடியிலும் நடுவிலும் உள்ள நீரின்கண் வெம்மை யுண்மையின் அடி நடு நிலைகளை எடுத்துரைக்கின்றார்.

நீரிடை ஒளிஇயல் நிகழ்பல குணஇயல்

ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        418

உரை : நீரின்கண் ஒளியும், அதன்கண் நிலவும் இயல்புகள் பலவும் பொருந்தப் படைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

நீர்க்கு ஒளி யுண்டென்பதை வற்புறுத்தவே மணிவாசகர், “நிழல் திகழ் நீர்” என்று சிறப்பித்துள்ளார். ஒளிக்குள் பல நிறங்களைக் காட்டும் பண்பிருத்தல் பற்றி, “பல குணவியல் ஆர்தர” என வுரைக்கின்றார். படைத்தல், காத்தல், அழித்தலாகிய குணங்களும் நீர்க்கு உண்டு.

நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல

ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        420

உரை : நீரின்கண் பலவகைச் சத்திகள் பொருந்தப் படைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

பொருள்களைத் தன்கண் அழுத்தும் சத்தி, அழுந்தியதை மேலே யூக்கும் சத்தி, பக்கமெங்கும் பரந்து நிறையும் சத்தி, உருவமாகியது அருவமாகும் சத்தி, கற்போல உறையும் சத்தி என நீர்க்கு உண்மையின், “சத்திகள் நிகழ் வகை பலபல ஆர்தர” என வுரைக்கின்றார். நீர் ஆவி யுருக் கொள்ளுங்கால் அருவமாம் என அறிக.

நீரினில் சத்தர்கள் நிறைவகை உறைவகை

ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி                                         422

உரை : நீராகிய பூதத்தின்கண் பலப்பலவாகிய சத்திகட்கிடமாகிய சத்தர்கள் நிறைந்தும் நீங்காமல் இருந்தும் பயன்படும் வகையிற் படைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சத்திகளை யுடையது சத்தர்; சத்திமான் எனவும் இது வழங்கும். நீரின் ஒவ்வோர் அணுவிலும் சத்திகளும் சத்திமான்களும் நிறைந்து நீங்காமல் உறைவது தோன்ற, “நிறை வகை உறை வகை ஆர்தரப் புரிந்த” என அறிவிக்கின்றார்.

நீரிடை உயிர்பல நிகழ்உறு பொருள்பல

ஆருற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        424

உரை : நீரின்கண் எண்ணிறந்த உயிர் வகைகளும், அவையனைத்தும் உண்டு உறைதற் கேற்ற பல்வகைப் பொருள்களும் பொருந்த அமைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

ஓர் நீர்த் திவலையில் எண்ணிறந்த உயிரினங்கள் வாழ்வதும், பெருகுவதும் காணப்படுவதாலும் கடலுள் பலவேறு உயிர்களும் பொருள்களும் காணப்படுதலாலும், “உயிர் பல பொருள் பல ஆருற அமைத்த அருட் பெருஞ் சோதி” என்று கூறுகின்றார்.

நீரிடை நிலைபல நிலைஉறு செயல்பல

ஆர்கொள வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        426

உரை : நீரின்கண் பலவேறு நிலைகளும் நிலைக்கொத்த செயல்கள் பலவும் பொருந்த அமைப்பது அருட் பெருஞ் சோதி. எ.று.

நீரின்கண் விஷக் கூறும், பொருட் கூறும், அமுதக் கூறும் எனப் பல கூறுகள் உண்டென்று அறிஞர் கூறுதலால், “நீரிடை நிலை பல” என்றும், அவ்வந் நிலைகட்கேற்ப அழித்தல், அளித்தல், ஆக்குதல் முதலாகச் செயல்கள் பல நிகழ்தலால், “நிலையுறு செயல் பல” என்றும் எடுத்துரைக்கின்றார்.

நீர்உறு பக்குவ நிறைவுறு பயன்பல

ஆருற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        428

உரை : நீர்க்கென்று பக்குவ வகையும், அவ்வகை பலவும் நிறைந்த பயன் பலவும் விளைவிக்கும் தன்மைகள் பொருந்த அமைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

வெப்பமுறுதல், தண்ணிதாதல், ஆவியாதல், பனிக்கட்டியாய் உறைதல், நிலத்தியல்புக்கேற்பத் திரிதல் முதலிய பல நிலைகளையும், நிலை தோறும் உரிய பயன்களைச் செய்வதும் பற்றி, “நீருறு பக்குவம்”, “நிறைவுறு பயன்” ஆகியவற்றை வகுத்துரைக்கின்றார்.

நீர்இயல் பலபல நிறைத்ததிற் பிறவும்

ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி                                         430

உரை : மேலே கூறியனவேயன்றி மேலும் பல இயல்புகளை நிறைவித்து நீர் முற்றவும் பொருந்தப் படைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

மேலே நீராகிய பூதத்தின் இயல்புகள் பலவற்றையும் படிப்படியாக வகுத்துரைத்தாராதலின், அவற்றிற்குப் புறனடையாக இதனைக் கூறுகின்றார். கூறிய இயல்புகள் போக, கூறாதவற்றையும் இம்முறையே அறிந்து கொள்க என்பது குறிப்பு.

தீயினில் சூட்டியல் சேர்தரச் செலவியல்

ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        432

உரை : தீயாகிய பூதத்தின்கண் வெப்பத்தின் இயல்புகள் பொருந்தியியலுமாறு நுண்ணிதாக அமைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

சூட்டியல் - வெப்பமாகிய குணவியல்புகள். கண்ணுக்குத் தெரியாத அணுவுக்குள்ளும் ஏனைய காற்றும் நீரும் நிலமுமாகிய பூதங்களினுள்ளும் இருப்பறியா வகைக் கரந்தும் ஒளியாய் வெளிப்பட்டும் இயலும் தன்மை பற்றிச் “சேர்தரச் செல” எனவும்,. தீயின் இயல்புகள் பலவும் ஆய்ந்துணர நுணுக்கமாய் அமைந்தமையால், “இயல் ஆயுற வகுத்த” எனவும் இயம்புகின்றார். “உருவ தன்மாத்திரையினின்றும் தோன்றிய தேயு ( தீ ) சத்தம் பரிசம் உருவமென்னும் மூன்று குணங்களை யுடைத்தாய்ப் பாகஞ் செய்தல் முதலிய தொழிற் பாட்டதாய் உலகத்திற் காருக பத்தியம், ஆகவனீயம், தென்றிசையங்கி என்னும் வைதிக அங்கியும் இவற்றின் வேறாகிய சைவ அங்கியுமாய் நின்று வினைகட்குபகாரமாயும், அகத்தினுள் விந்து வங்கியாய் நின்று உண்டவற்றையெல்லாம் பாகஞ் செய்து உயிர்கட்குப் பெரிதும் உபகாரமாகியும் இங்ஙனம் பலவேறு வகைப்படும்” என்று சிவஞான பாடியம் கூறுகிறது.

தீயினில் வெண்மைத் திகழ்இயல் பலவாய்

ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        434

உரை : தீயின்கண் வெண்மை முதலிய நிறம் விளங்கும் இயல்புகள் பலவாய் அறிஞர் ஆய்ந்துணர வகுத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

அதிவெப்ப நிலையில் தீ வெண்ணிற மெய்துதலின் அதனை விதந்து கூறுகின்றார். வெம்மை குறையுமிடத்துப் பொன்மை, நீலம், பசுமை முதலிய நிறங்களைப் பெறுதலால், “வெண்மைத் திகழியல் பலவாய்” என விளம்புகின்றார். தீப்பற்றிய பொருள் முற்றவும் எரிந்தழியுமிடத்து வெண்ணிற நீறே எஞ்சுதல் பற்றி வெண்மை எடுத்தோதப்படுகிறதென்றலும் உண்டு.

தீயிடைப் பூஎலாம் திகழுறு திறம்எலாம்

ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        436

உரை : தீயின் எங்கும் பரந்த பண்பினால் நிலத்தின்கண் பூக்கள் யாவும் நிறம் பல பெற்று ஆய்வறிவுக்கு விளங்குமாறு படைத்தருளியது அருட் பெருஞ் சோதி. எ.று.

பகலில் ஞாயிற்றின் வெம்மையால் மலரும் பூக்கள் பலவும் பன்னிறங்களையும் ஒளியையும் கொண்டு விளங்குவது பற்றி, “பூவெலாம் திகழுறு நிறமெலாம்” எனக் கூறுகின்றார். இரவில் மலர்வன வெண்ணிறமும் பகலில் மலர்வன பன்னிறமும் பெற்று விளங்குவது, ஆய்வறிவு இனிது காணத் திகழ்வதால், “ஆயுற” என வோதி வற்புறுத்துகின்றார்.

தீயிடை ஒளியே திகழுற அமைத்ததில்

ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                         438

உரை : தீயாகிய பூதத்துக்கு ஒளியே இயல்பாக அமைத்து அதன்கண் பலவேறு குணநலங்களை அறிஞர் ஆய்ந்து பெறப் படைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

ஒளியுள்ள பொருளனைத்தினும் இடம் அனைத்தினும் தீயின் வெம்மைப் பண்பு காணப்படுதலால் தீயிடை ஒளியே திகழுற” என்று கூறுகின்றன. விண்ணில் நிலவும் ஞாயிறு முதலிய கோள்களும் விண் மீன்களும் மிக்க வெவ்வியவாய் ஒளியுற்றுத் திகழ்வதால் “ஒளியே” எனத் தெளிவிக்கின்றார். மண்ணில் கல்லும் மர முதலாகிய பொருள்களிலும், வானில் மேகக் கூட்டத்தில் தோன்றும் மின்னிலும் தீயின் ஒளி திகழ் பண்பு காணப்படுவது பற்றி, “அதில் ஆய் பல வகுத்து” என அறிவுறுத்துகின்றார்.

தீயிடை அருநிலை திருநிலை கருநிலை

ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        440

உரை : தீயாகிய பூதத்துக்கு அருநிலையும் கருநிலையும் திருநிலையும் ஆகிய மூன்று நிலையும் பொருந்த அமைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

அருநிலை - கல்லிலும் மரத்திலும் கரந்து நின்று கடைந்த வழி வெளிப்படும் நிலைமை. நுண்ணிய சிறு பொறியாய்ப் பெருகும் தீயின் இயல்பு கருநிலை; மிக்க தீயாய்ப் பெருகும் பேரொளியும் மிகுவெம்மையும் உடையதாகும் நிலை திருநிலை. இம்மூன்று நிலையும் இனிது அறியப்படுவதால், “அருநிலை கருநிலை திருநிலை” என வுரைக்கின்றார். செய்யுளாதலின் முறை மாறி நின்றது.

தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல

ஆய்வகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        442

உரை : தீயாகிய பூதத்தின்கண் மூன்று குணங்கள் பொருந்தச் செய்து, அவற்றின்கண் பற்பல இயல்புகளை நுட்பமாய் அமையப் படைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

மூன்று குணங்களையும் சத்தம், பரிசம், உருவம் என்று கூறுவர், “சத்தப் பரிச ரூபமென்னும் மூன்றும் தழலின் குணமாகும்” என்பது நித்தியானந்த சரிதை. தீயின்கண் வானத்தின் கூறும் காற்றின் கூறும் கலந்திருத்தலால் அவற்றின் குணங்களாகிய சத்தமும் பரிசமும் சேர்ந்து தீயின் உருவ குணம் கலந்து மூன்றாயின என அறிக. இவையும் பலவாய் விரியும் என்பது குறிப்பு.

தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை

ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        444

உரை : தீயின்கண் கோணுதலின்றி நடுநிற்கும் பண்பை விளங்குவித்து அதன்கண் தீயின் நடுவகத்தே நடுநிலை யொளி கொண்டு திகழப் படைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

தீச்சோதியின்கண் புறத்தே பொன்னிறச் சோதியும், அகத்தே தீத் திரண்டு வெண் பொன் சோதியும், அதன்கண் நீலநிறச் சோதியுமுற்று ஒளிர்வது பற்றி, “நடு நடு நிலையாயுற அமைத்த” என அறிவிக்கின்றார். நடுநடுவாய் நிற்கும் சோத்தியும் நேர்மை குன்றாது விளங்குதலால், “நடுநிலை” என்று குறிக்கின்றார்.

தீயிடைப் பெருந்திறல் சித்திகள் பலபல

ஆயுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி                                         446

உரை : தீயாகிய பூதத்தினால் பேராற்றல் வாய்ந்த காரிய சித்திகள் பற்பலவற்றை உயிர்கள் பெற்றுய்யுமாறு படைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பூமியையும் கடல்களையும் மேனிற்கும் காற்றையும் உருமாற்றி நிலைகுலையச் செய்யும் பேராற்றல் பூமியிலிருந்தெழும் தீயும் அணுக்களின் உண்ணின்றெழும் தீயும் மேகக் கூட்டத்தில் மின்சக்தியால் பிறக்கும் தீயுமாகிய இவை பலவும் பேராற்றலும் பெருவன்மையும் கொண்டு விளங்குதல் நோக்கி, “பெருந் திறற் சித்திகள்” என்று பேசுகின்றார். காரிய வுருவில் பயனுறுவது காரிய சித்தி.

தீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும்

ஆயுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி                                         448

உரை : தீயினால் அற்புதச் செயல்கள் எனக் கூறப்படுவன யாவும் உண்டாக அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

தம்முள் விளங்கும் யோகத் தீயினால் சித்தர்கள் அணிமா, மகிமா முதலிய சித்துக்கள் பலவற்றையும் வேள்வித் தீயினால் பலவேறு அரிய சாதனைகளைப் பெறுவது பற்றியும புராணங்கள் உரைத்தலால், “செப்புறு சித்திகள் அனைத்தும் ஆயுற அமைத்த அருட்பெருஞ் சோதி” என்று கூறுகின்றார். செப்புற சித்து - அற்புதச் செயல்கள். சித்துக்களைச் செய்பவர் சித்தர்.

தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்

ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                         450

உரை : தீயாகிய பூதத்தின்கண் மிகப் பல சத்திகளையும் சத்திமான்களையும் ஆயுந்தோறும் பலவாய்த் தோன்றப் படைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

சுடும் சத்தி, அடும் சத்தி, ஒளிரும் சத்தி, இருணீக்கும் சத்தி, விரிக்கும் சத்தி, சுருக்கும் சத்தி, உருவை அருவமாக்கும் சத்தி என மிகப் பல சத்திகள் உண்மையானாலும், சத்தி தோறும் சத்திமான்கள் உண்டாகையாலும், “சத்திகள் செறிதரு சத்தர்கள் ஆய் பல வகுத்த அருட்பெருஞ் சோதி” என வுரைக்கின்றார்.

தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல

ஆய்வகை வமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        452

உரை : தீயாகிய பூதத்தினால் உயிரினங்களும் பொருள் வகை பலவும் ஆய்ந்துணரத்தக்க வகையில் படைத்தருளியது அருட் பெருஞ் சோதி. எ.று.

உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உயிர்க் காற்று ( oxygen ) தீ மயமானது; தீயின் வெம்மைத் தன்மையால் எல்லாவகையுயிர்களும் வாழ்கின்றனவாதலால் “உயிர் பல” என்றும், “உயிர்கள் வாழ்தற்கு வேண்டி உண்டி, உடை, உறையுள், மருந்து ஆகிய அனைத்தும் தீயின் உதவியால் பயன் விளைவிக்கின்றமையின், “திகழுறு பொருள் பல” என்றும், ஆராயுமிடத்து உலகில் உயிர் வாழ்வு தீயாகிய பூத மில்வழிக் கெட்டழியும் என்று உணரப்படுவது விளங்க, “ஆய்வகை அமைத்த” என்றும் கூறுகின்றார். தீயொழிந்த ஏனைப் பூதங்கள் நான்கும் உயிர்கள் வாழ்தற்கு இடமாதலும், தீ மாத்திரம் இடமாகாது உறுதுணையாவதும் ஆராய்ச்சியால் அறியப்படுதலால், “ஆய்வகை யமைத்த” என இயம்புகின்றார்.

தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்

ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                         454

உரை : தீயின்கண் பலவகை நிலைகளும், அந்நிலைகட்கேற்பச் செயல்கள் பலவும், அவற்றால் விளையும் பயன்களும் எனப் பல இயல்புகள் அமைத்துதவுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

தீயாகிய பூதத்துக்கு உருவ நிலையும் அருவ நிலையும், நுண்ணிலையும் பருநிலையும், மென்மை நிலையும் வன்மை நிலையும் என நிலைகள் பலவுளவாதலின், “தீயிடை நிலை பல” எனவும், இந்நிலைகளால் உயிர் வாழ்க்கையும் உலகியல் அமைதியுமாகிய செயல் பயன் பலவும் உண்டாதல் நோக்கி, “திகழ் செயல் பயன் பல” எனவும் எடுத்துரைக்கின்றார்.

தீயினில் பக்குவம் சேர்குணம் இயற்குணம்

ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                         456

உரை : தீயாகிய பூதத்துக்கு ஒடுங்குவதும் ஒடுங்காது அளவின்றிப் பெருகி விரிவதுமாகிய பக்குவ நிலைகளும், அவ்வந் நிலைகட்கேற்பக் குணஞ் செயல்களும் அமையப் படைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

புறத்தே பூதாக்கினியாய்ப் பகலும் இரவும் வெப்பமும் தட்பமும் வாழ்க்கைக்கு ஒப்ப அமைவதும், அகத்தே உதராக்கினியாய் உயிர்கட்கு அறிவு செயல்கட் கேற்ற ஆற்றல் விளைய அமைவதும், “பக்குவமாகும்”. தனது வெம்மையால் எரிவது தீயின் “இயல் குணம்”. எரிப்பதும் பயன்படுவதும் செயற்கைக் குணம்; ஆதலால், “சேர் குணம் இயல் குணம்” எனப் பிரித்துரைக்கின்றார். அணுவுக்குள் புதைந்திருப்பது இயற்கைக் குணம்; பேரழிவுப் பெருந்தீயாய் வெளிப்படுவது “சேர் குணம்” என அறிக. உடலுக்குள் நின்று உயிராற்றலை இயக்குவதும், நில்லாது நீங்கி அதனைப் பிணமாய் அழியச் செய்வதும் தீயின் குண வகையாம். தீயின் இயல்புகளில் யோகாக்கினியாய் ஞானப் பயனைப் பெறுவிப்பது ஒன்று. இவ்வாறு இதன் குணவகைகள் ஆயுந்தோறும் பலவாய் மிகுதலால் அவை யிற்றை விரிக்கிற் பெருகும்.

தீயிடை உருக்கியல் சிறப்பியல் பொதுவியல்

ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        458

உரை : தீயாகிய பூதத்துக்குக் கடினப் பொருள்களை நீராய் உருக்கும் பண்பு சிறப்பியல்பாகும்; வெதுப்புவது பொதுப் பண்பாகும்; இவ்வியல்புகள் இனிதமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

எரிமலைகளில் கல்லும் மண்ணும் பிற பௌதிகப் பொருள்களும் உருகித் தீக்குழம்பாய்ப் பெருகி வழிந்தோடுவ துண்மையின், “தீயினில் உருக்கியல் சிறப்பியல்” என்றும், தீயாற் கதுவப்பட்ட காற்றும் நீரும் மண்ணும் சூடேறி வெம்மையுறுவது எங்கும் எளிதிற் காணப்படுதல் பற்றிப் “பொதுவியல்” என்றும் புகல்கின்றார்.

தீஇயல் பலபல செறித்ததில் பலவும்

ஆயுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி           460

உரை : தீயின்கண் பல வேறு இயல்புகளை அமைவித்து, ஒவ்வொன்றினும் வேறாய பல பண்புகளை நுண்ணிதின் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

மண்ணணு, நீரணு, காற்றணுவாகியவற்றில் தீயின் வெம்மையியல்பும் ஒளியியல்பும் கலந்து காணப்படுவதால், “தீயியல் பலபல செறித்து” எனவும், அணுவின் உள்ளுறு பண்பும் ஆற்றலும் பிறவும் தீயின் கூறு கொண்டு பிறங்குவதைத் தெரிவித்தற்கு, “அதில் பலவும் ஆயுற” எனவும் இசைக்கின்றார். உயிரும் தீயின் வெம்மையியற் கூறும் ஒளியியற் கூறும் செறிந்து ஆற்றல் வடிவாய் அமைந்திருப்பது அறிவாராய்ச்சியால் தெளியப்படுதலால் “ஆயுற” என வுரைக்கின்றார். உயிர் நின்ற வுடம்பின்கண் வெப்பமும் ஒளியும் காணப்படுதலும், அது நீங்கிய வுடம்பில் அவை யிரண்டும் இல்லாதொழிவதுடன், உடம்பின் தோல், நரம்பு, தசை, என்பு முதலிய கட்டும் பிணிப்பும் செறிவும் குலைந்து சிதைந்து அணுவணுவாய்ப் பிரிந் தொழிவதும் கண்கூடு.

காற்றிடை அசைஇயல் கலைஇயல் உயிரியல்

ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        462

உரை : காற்றாகிய பூதத்துக்கு அசையும் இயல்பும், உடம்பின் கண் கலைகளாய்ப் பிரிந்தியங்கும் இயல்பும், உயிர் வடிவாய் உடல் முற்றும் நிலவும் இயல்பும் தனது அருளாற்றலால் அமைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

பின்னும் முன்னும் ஓடுவதும், வட்டமாய்ச் சுழல்வதும், திரண்டு மோதுவதும் பிறவும் காற்றின் அசையும் இயல்புகளாகும். உடம்பின் கண் மேலும் கீழுமாய் இயங்கிச் சூரிய சந்திர கலைகளாய்ப் பிரிந்து இயங்குவது கலையியல். சுழு முனையில் சமநிலை நிற்றலும் கலையியல் வகையாகும். உயிர் நின்ற வுடம்பில், பிராணன், அபாணன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் என உயிரியல்பாய் உலவுதலால், “உயிரியல்” என்று உரைக்கின்றார். இவற்றின் இயல்புகளையும் செயல் வகைகளையும், சிலப்பதிகார அரங்கேற்றுக் காதை யுரையில் அடியார்க்கு நல்லார் உரைக்குமாற்றால் கண்டு கொள்க. ஆற்றல் சங்கற்பம், கரணம் என இருவகைப்படுமாயினும் பரம் பொருட்குச் சங்கற்ப மொன்றே அமைவது பற்றி, “ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார்.

காற்றிடைப் பூவியல் கருதுறு திறஇயல்

ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        464

உரை : காற்றின்கண் நிலத்திலும் நீரிலும் மலரும் பூக்களின் மணம் கலந்து பரப்பும் இயல்பும், வேறாகக் கருதப்படும் ஒலியும் பரிசமுமாகிய கூறுகள் அருளாற்றலால் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

நிலத்தினும் நீரினும் மலர்களின் மண வகைகள் காற்றிற் கலந்து பரந்து தத்தம் இனம் பெருக்கும் பணிபுரிவதுபற்றிப் “பூவியல்” எனவும், காற்றின் குணமாகக் கருதப்படும் சத்தம், பரிசம் ஆகிய இரண்டும் அவற்றின் பல்வேறு கூறுகளும் நிறைந்தியலும் தன்மை புலப்படக் “கருதுறு திறவியல்” எனவும் கூறுகின்றார். பூவியல் என்றதற்கு வேறு பொருள் கூறுதலும் உண்டு.

காற்றினில் ஊறியல் காட்டுறு பலபல

ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        466

உரை : காற்றினுடைய பரிசப் பண்பு கொண்டு காண நிற்கும் அதன் இயல்புகள் பலவாகத் தனது ஆற்றலால் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

காற்றின் பரிசப் பண்பால் அதன் வன்மையும் மென்மையும் இனிமையும் கடுமையும் ஆகிய பலவேறு பண்புகள் உணரப்படுவது பற்றிக் “காட்டுறு பலபல” என்று எடுத்துரைக்கின்றார்.

காற்றினில் பெருநிலை கருநிலை அளவில்

ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        468

உரை : காற்றாகிய பூதத்துக்கு மிக மிக நுண்ணிதாகும் கருநிலையும், சண்டமாருதமாகும் பெருநிலையும் மிகவும் அமைத்தருளிய அருட் பெருஞ் சோதி. எ.று.

மிகவும் நுண்ணிய மீன் முட்டையினுள்ளும், விதையினுள்ளும், அணுவினுள்ளும் ஒடுங்கி நிற்கும் காற்றின் இயல்பு கருநிலையாம், பெருமலை போல் கடல் அலைகளை எழுப்பியும், வானளாவியுயர்ந்த பெருமரங்களை மோதியலைத்து வேரொடு சாய்க்கும் இயல்பு பெருநிலையாகும். இவ்வியல்புகள் அளவிறந்தன என்றற்கு, “அளவில் ஆற்றவும் வகுத்த” என அறிவிக்கின்றார்.

காற்றிடை யீரியல் காட்டி யதிற்பல

ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        470

உரை : காற்றின்கண் இடகலை, பிங்கலை என இரு தன்மைகளை வகுத்து, அவற்றுட் பலவற்றை வகுத்தருளிய அருட் பெருஞ் சோதி. எ.று.

இக்கலை யிரண்டனையும் சூரிய சந்திர கலை என்பதும் மரபு. இவை பத்து வகை நாடிகளாக விரிவது விளங்க, “அதிற் பல வகுத்த” என்று கூறுகின்றார். அவை இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, சங்கினி, பூடா, குரு, கன்னி, அலம்புடை என்பன. இவற்றை “இடை பிங்கலை சுழுமுனை காந்தாரி யத்தி, புடை நின்ற சிங்குவை சங்கிலி - பூடாவோ, சங்குரு கன்னி யலம்புடை என்றுரைத்தார், தங்குதச நாடிகடாம்” ( சிலப். அடியார். மேற்கோள் ) என வரும் பழம்பாட்டால் அறியலாம்.

காற்றினில் இடைநடு கடைநடு அகப்புறம்

ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        472

உரை : காற்றாகிய பூதத்தின்கண் இடை நடு கடை என்ற பகுதிகளும், நடு நின்ற பகுதிக்கண் அகம் எனவும், புறம் எனவும், அகப்புறம் எனவும் பிரித்துணரப்படும் பகுதிகளும் நன்கு அமைத்துளது அருட் பெருஞ் சோதி. எ.று.

அடி, இடை, மேல் எனப் பாகுபடும் காற்று மண்டிலம், “காற்றினில் இடை நடு கடை” எனக் கூறுகின்றார். நடுப் பகுதியைக் கொண்டு அகம் புறம் என்பனவும், அகப்புறம் என்பதும் வகுக்கப்படுதலின், “நடு அகப்புறம்” என நவில்கின்றார்.

காற்றினில் குணம்பல கணம்பல வணம்பல

ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                         474

உரை : காற்றாகிய பூதத்துக்குப் பலவகைக் குணங்களையும், பலவாய்த் திரளும் கூட்டத்தையும், பலவேறு இயல்புகளையும் தனது பேராற்றலால் அமைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

மென்மை, வன்மை, சுகதுக்ககங்களைச் செய்தல் முதலியன உளவாதலால், “குணம் பல” எனவும், காற்றுத் தன்னிற் றிரண்டு வன்மையுற்று மோதுதலும், திரட்சி கலைந்து மென்மை யுறுதலும் நோக்கிக் “கணம் பல” எனவும், நலம் செய்தலும் தீது விளைத்தலும் காற்றிற் குண்டாதல் பற்றி, “வண்ணம் பல” எனவும் இயம்புகின்றார். வண்ணம், வணம் என வந்தது. வரம்பிலாற்றல் உடையதாகலின், அருட்பெருஞ் சோதிக் கடவுளை, “ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ் சோதி” எனச் சிறப்பிக்கின்றார்.

காற்றிடைச் சத்திகள் கணக்கில உலப்பில

ஆற்றவும் அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        476

உரை : காற்றாகிய பூதத்தின்கண் உள்ள சத்திகள் எண்ணிறந்தனவாய் என்றும் கெடாதனவாய் நிலைபெறுமாறு மிகவும் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூவகைப் பெருஞ் செயல்கட்கொத்த சத்திகள் எண்ணிறந்தன காற்றின்கண் எக்காலத்தும் உள்ளன என்ப தறிவித்தற்குச் “சத்திகள் கணக்கில உலப்பில” எனவுரைக்கின்றார்.

காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன

ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        478

உரை : காற்றின்கண் உளவாகிய சத்திகளைத் தம்மில் கொண்டுறையும் சத்திமான்களும் எண்ணிறந்தனவாக நன்கு அமைத்தருளியது அருட் பெருஞ் சோதி. எ.று.

சத்தியை யுடையது சத்தர்; சத்திமான் எனவும் வழங்கும். சத்திகள் “கணக்கில” என்றமையின் சத்தர்களும் எண்ணிறந்தவை என்றற்கு, “கணிதம் கடந்தன” என்று கூறுகின்றார். கணிதம் - கணித்தல்; அஃதாவது கணக்கிடுதல். எண்ணிக் காண்டற் காகாதவை என்பது கருத்து.

காற்றிடை உயிர்பல கதிபல கலைபல

ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        480

உரை : காற்றின்கண் வாழும் உயிர்களும், அவற்றின் பிறப்பு வகைகளும் செயல் வகைகளும் மிகப் பலவாகத் தனது பேராற்றலால் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

காற்றின்கண் அளந்தறிய முடியாத அளவில் நுண்ணுயிர்கள் பெருகி வாழ்கின்றன என இக்கால விஞ்ஞானிகள் கண்டுரைப்பது “காற்றிடை யுயிர் பல” என்பதை மெய்ப்பிக்கின்றது. கண்ணுக்குத் தெரியாத உருவுடைய அணுக்கள் எண்ணிறந்த வகையினவாயிருத்தலால், “கதி பல” என்றும், அவை ஒவ்வொன்றும் தனித்தனி செயலுடையவாதலால், “கலை பல” என்றும் இயம்புகின்றார். கலை - செயல். பேராற்றலுடையார்க்கன்றி உருவும் கதியும் கலையும் அமைத்தல் கூடாமை விளங்க, “ஆற்றலின் வகுத்த” என அறிவிக்கின்றார்.

காற்றிடை நானிலைக் கருவிகள் அனைத்தையும்

ஆற்றுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        482

உரை : சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் என உயிர்கள் எய்தும் நானிலை யவத்தைகளில் கருவிகள் பலவற்றையும் நன்கமைய வகுத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

துரியாதீத மென ஐந்தாம் நிலை யுளதாகவும், அந்நிலையின்கண் காற்றின் இயக்கமும் கலப்பும் இல்லையாதலால், சாக்கிர முதலிய நான்குமே “நானிலை” எனக் கூறப்படுகின்றன. சாக்கிரத்தின்கண் முப்பத்தைந்து கருவிகளும், களவின்கண் இருபத்தைந்து கருவிகளும், சுழுத்தியில் மூன்று கருவிகளும், துரியத்தில் இரண்டு கருவிகளும் வாயுவால் தொழிற்படுதலால், “நானிலைக் கருவிகள்” எனத் தொகுத்துரைக்கின்றார். இவற்றின் விரிவுகளைச் சிவஞானபாடியம், சிவஞான சித்தி முதலிய நூல்களில் விரியக் காணப்படும்; ஈண்டு விரிக்கிற் பெருகும்.

காற்றிடை உணரியல் கருதியல் ஆதிய

ஆற்றுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                         484

உரை : காற்றாகிய பூதத்தினால் உயிர்கள் இந்திரியக் காட்சியும், மானதக் காட்சி முதலியவற்றையும் நன்குணர வகுத்தமைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

கண், காது, மூக்கு, வாய், உடம்பு முதலிய பொறிகள் ஐந்தாலும் முறையே கண்டும், கேட்டும், மோந்தும், சுவைத்தும், பரிசித்தும் பொருள்களையறிவது “உணரியல்” எனப்படுகிறது. பொறிகளால் பெற்ற அறிவை மனத்தால் சிந்தித்துத் தெரிதல் மானதக் காட்சி; இவற்றின் வேறாய் யோகக் காட்சி, தன்வேதனைக் காட்சியென்பனவும் உண்மையின், “கருதியல் ஆகிய” என்று கூறுகின்றார். இவை யாவும் உடலின்கண் உயிர்க் காற்று நிலவும் போது செயற்படுதல் பற்றி, “ஆற்றுற” என்று குறிக்கின்றார்.

காற்றிடைச் செயல்எலாம் கருதிய பயன்எலாம்

ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        486

உரை : காற்றின் சூழலில்தான் உயிர்கள் தாம் செய்யக் கருதும் செயல் பலவற்றையும் செய்து கருதிய பயன்களைப் பெறுமாறு உதவியருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

காற்று நன்கு இயங்கும் சூழலில்தான் உயிர்கள் யாவும் செயல்பட முடியுமாதலின், செயல் வகையனைத்தையும் தொகுத்து, “செயலெலாம்” எனவும், செயற் பயனையும் காற்று இல்லாவிடத்துப் பெறுவதும் பயன் நுகர்தலும் அரிதாதலால் “கருதிய பயனெலாம் ஆற்றுற வகுத்த” எனவும் எடுத்துரைக்கின்றார். காற்றில் வழி உயிர்கள் செயல்படுவதும் பயன் நுகர்தலும் இல்லை என்பது கருத்தாம்.

காற்றினில் பக்குவக் கதிஎலாம் விளைவித்

தாற்றலின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        488

உரை : காற்றினால் உயிர்கட்குப் பக்குவ நிலைகளை யுறுவித்து அந்நிலைகட்கேற்பத் தோற்றம் பலவும் தோன்றுவித்து வாழச் செய்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

உயிரினங்களின் வாழ்க்கையில் காலத்துக்கேற்ப இளமை முதுமை முதலிய பக்குவத்தையும், பக்குவத்துக்கேற்பத் தோற்றமும் அறிவும் முயற்சியும் செய்கையும் தோற்றுவித்துப் பிறப்பின் பயனை எய்த அருளுவதன் நலம் இங்கே குறிக்கப்படுகிறது.

காற்றினில் காலம் கருதுறு வகைஎலாம்

ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        490

உரை : மேலே கூறிய பக்குவமே யன்றிக் காலத்தால் விளைய அமையும் வகை பலவும் முறையாக அமைய அருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

காற்றின் உதவியால் காலத்தால் உயிர் வாழ்க்கைக்கு அமைய வேண்டிய நலம் தீங்குகள் பலவும் முறையாக அமைந்தாலன்றி வாழ்க்கை நிரம்பாதாகையால், “காலம் கருதுறு வகையெலாம் ஆற்றவும்” என்று அறிவிக்கின்றார். ஆற்றல் - செயல்படல்.

காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்

ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        492

உரை : காற்றின் இயல்புகள் மிகப் பலவாகக் கணக்கிட்டறிந்து அவ்வாராய்ச்சியால் வேறு பல இயல்புகளும் நன்கு பொருந்த அமைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

உயிர்கட்கு நலம் செய்வனவும் கேடு செய்வனவுமாகிய பொருள் தங்க இடங்கொடுத்தலும் எங்கும் அவற்றைப் பரவச் செய்தலுமாகிய இயல்புகள் காற்றுக்குண்டாதலின், “காற்றியல் பலபல கணித்து” என்றும், காற்றுக்குள் பல வேறு வாயுக்கள் கலந்திருப்ப துணர்த்தற்குப் “பிறவும்” என்றும் கூறுகின்றார். தீயை எரிவித்தலும், நீர்க்குள் உயிரினங்கள் வாழச் செய்தலும் காற்றின் இயல்புகள் என அறிக.

வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல்

அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        494

உரை : ஆகாயமாகிய பூதத்தின் விரிந்த பண்பும், ஏனைப் பூதங்களைத் தன்கண் அணைத்து நிற்கும் பண்பும் அருளால் அமைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஏனைக் காற்று முதலிய பூதங்கள் விரிந்து நிலவுதற்கும், எல்லாம் தத்தம் நிலையில் நிற்ப இடங் கொடுத்தற்கும் உரிய இயல்புகளை ஆகாயமாகிய பூதத்துக்கு அமைத்திருப்பது பற்றி, “அளியுற அமைத்த அருட்பெருஞ் சோதி” என்று அறிவிக்கின்றார். இப் பூதங்களைப் படைத்தமைத்தற்குக் காரணம் இறைவனது பேரருளே என்பாராய், “அளியுற” என்று சிறப்பிக்கின்றார்.

வெளியிடைப் பூஎலாம் வியப்புறு திறன்எலாம்

அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        496

உரை : வானமாகிய பூதத்தின்கண் புவனங்களையெல்லாம் படைத்து அவற்றின் வியக்கத்தக்க கூறுகளையும் தனது கருணையால் அமைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

பூ - போகம் தரும் உலகங்கள். வானமாகிய பூதத்தின்கண் புவலோகம், சுவலோகம், மகலோகம், சனலோகம், சத்திய லோகம், விஷ்ணு லோகம், உருத்திர லோகம் எனப் பல லோகங்களை மிருகேந்திர ஆகமம் கூறுகின்றது. அண்டத்துள்ளாகக் கீழே காலாக்கினி யுருத்திர புவனம், கூர்மாண்ட புவனம், ஆட்ட கேசுர புவனம் எனவும், மேலே பிரமம், வைணவம், உருத்திரம் எனவும் கூறப்படும் புவனங்கள் ஆகும்; இவை நிவிர்த்தி கலையில் காணப்படுவன; பிரதிட்டா கலையிற் புவனம் ஐம்பத்தாறு எனவும், வித்தியா கலையிற் புவனம் இருபத்தேழு எனவும், சாந்தி கலையிற் புவனம் பதினெட்டு எனவும், சாந்தி யதீதையில் புவனம் பதினைந்து எனவும் சிவாகமங்கள் கூறுகின்றன. இவையும் இவை போல்வன பலவும் வியக்கத்தக்க வகையில் விரித்துரைக்கப்படுதலால், “வியப்புறு திறனெலாம்” எனத் தொகுத்துரைக்கின்றார். ஆகமங்கள் தோறும் இப் புவனவகைகள் வேறு வேறு வகையில் உரைக்கப்படுவதுபற்றி, “திறன் எலாம்” என்று மொழிகின்றார்.

வெளியினில் ஒலிநிறை வியனிலை அனைத்தும்

அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                        498

உரை : ஆகாயமாகிய பூதத்தின் சத்தமாகிய குணம் நிறைந்திருக்கும் நிலையினையும், வேறு வகையிற் பரந்திருக்கும் நிலையினையும் பிற அனைத்தையும் அருளால் அமைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஆகாயத்தின் குணம் சத்தம் என்பர். “சுத்த தன்மாத்திரையினின்றும் தூலமாய் ஆகாயம் தோன்றிப் பல்வேறு வகைப்பட்ட சுத்த முடைத்தாய்ப் பிராணிகள் போக்குவரவு முதலிய தொழில் செய்தற்கு இடம் கொடுத்து நிற்கும்” எனச் சிவஞானபாடியம் கூறுவது காண்க. வானமெங்கும் பரந்து ஒரு தன்மையாய் நில்லாது இடையிட்டு நிலவுதல் பற்றி ஒலி நிலையை நிறைநிலை என்று கூறி யொழியாது “வியனிலை யனைத்தும்” என்று விளம்புகின்றார்.

வெளியிடைக் கருநிலை விரிநிலை அருநிலை

அளிகொள வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                        500

உரை : வானமாகிய பூதத்தின்கண் ஏனைப் பூதங்களின் கருநிலையும், விரிநிலையும், சூக்கும அருநிலையும் நன்கமையப் படைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஆகாயமாகிய பூதத்தின்கண் ஏனைக் காற்று, தீ, நீர், நிலம் என்ற நான்கும் தத்தம் தன்மாத்திரைக்கண் அருவமாய்ச் சூக்குமமாய் இருந்து அணுவுருவில் தோன்றிப் பின்னர் விரிந்து நிற்குமாறு விளங்க, “அருநிலை, கருநிலை, விரிநிலை” என வகுத்துக் காட்டுகின்றார். அணுவுருவாய் நின்று விரிவது புலப்படவே, பரிபாடல் என்ற நூலும், “கருவளர் வானம்” எனக் குறிக்கின்றது.

வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே

அளிபெற விளக்கும் அருட்பெருஞ் ஜோதி                                        502

உரை : ஆகாயமாகிய பூதத்தின்கண் நில முதலிய பூதங்கள் முடிவில் ஒடுங்குகிற நிலையும் இனிது விளங்குமாறு அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஆகாயத்திலிருந்து தோன்றியவாறே நிலமாகிய பூதம் நீரிலும், நீர் தீயிலும், தீ காற்றிலும், காற்று வானத்திலும் ஒடுங்கும் என்பர். “இரு நிலனது புனலிடை மடி தர எரி புக எரியது மிகுபெருவெளியினிலவி தர வளி கெட வியனிடை முழுவது கெட இருவர்களுடல் பொறையொடு திரியெழிலுரு வுடையவன்” ( வேதாரணி ) எனத் திருஞானசம்பந்தர் கூறுவது காண்க. தோன்றுவன தோன்றியதன் கண்ணே யொடுங்கு மென்னும் இயற்கை வாதத்தால் விளங்குதல் புலப்பட, “விளங்குற வகுத்து” என விதந்துரைக்கின்றார்.

வெளியினில் சத்திகள் வியப்புறு சத்தர்கள்

அளியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                         504


உரை : ஆகாயத்தின்கண் ஏனைப் பூதங்களைத் தோற்றுவிக்கும் சத்திகளும், அச் சத்திகளைத் தங்கண் அடக்கி நிற்கும் சத்திமான்களும் நிலவுமாறு கருணையால் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பூத பௌதிகங்களைத் தோற்றுவித்தும், ஒடுக்குவித்தற்கும் ஏதுவாகிய சத்திகளும் சத்தர்களும் இன்றியமையாமையின், “சத்திகள் வியப்புறு சத்தர்கள்” என்று விளம்புகின்றார். இவற்றை இயக்கும் அதிதெய்வங்கள் சதாசிவன், மகேசன், உருத்திரன், மால், அயன் எனச் சிவாகமங்கள் ஓதுகின்றமை யறிக.

வெளியிடை ஒன்றே விரித்ததில் பற்பல

அளிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          506

உரை : ஆகாயமாகிய பூதத்துக்குச் சத்தமாகிய குணம் ஒன்றே யமைத்து அதுதானும் ஏனை நால்வகைப் பூதங்களிற் கலந்து பற்பலவாக விரியுமாறு தன் பெருங்கருணையால் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சத்த தன்மாத்திரையொன்றிலிருந்து தோன்றி, ஏனைக் காற்று, தீ, நீர், நிலம் நான்கினும் கலந்து ஓசை வேறுபாடுகள் பல பெற்று விளங்குவது பற்றி, “ஒன்றே விரித்து அதிற் பற்பல வகுத்த” என்று மொழிகின்றார். இவற்றின் விரிந்த பண்புகளைச் சிவஞான பாடியம் முதலிய விரிந்த நூல்களிற் காண்க.

வெளியிடைப் பலவே விரித்ததில் பற்பல

அளிதர அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          508

உரை : ஆகாய பூதத்தின்கண் பலவாகிய பூதங்களை அமைத்து ஒவ்வொரு பூதத்தின் குணஞ்செயற் கூறுகள் பற்பலவாய் விரிந்தமைய வகுத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

விரிந்தது தொகுத்தல் என்ற உத்தி பற்றி ஆகாயத்தின் இயல்களை நினைப்பிக்குமாற்றால், “பலவே விரித்து” என்றும், “அதில் பற்பல அமைத்த” என்றும் இயம்புகின்றார். பூதவியல்புகள் பற்பலவாய் விரிய அமைத்தற்குக் காரணம் அருட்சோதி யாண்டவனது பரம கருணையே என வற்புறுத்தற்கு, “அளி தர” என அடிதோறும் கூறியருளுகின்றார்.

வெளியிடை உயிரியல் வித்தியல் சித்தியல்

அளிபெற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          510

உரை : ஆகாயத்தின்கண் உயிர் வகைகளின் சூக்குமங்களும், நுண்ணிய விதை வகைகளும், அற்புதச் செயற் கூறுகளின் நுட்பங்களும் நன்கு அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

இல்லது தோன்றாதாகலின், உயிர் வகைகளின் மூல நிலையாகிய சூக்குமக் கூறுகளும், புல் முதலாய தாவரங்களின் தூலக் கூறுகளும், அற்புதச் செயல்கட்கேதுவாகிய சித்திக் கூறுகளும் எண்ணிறந்தன ஆகாயத்தின்கண் உள்ளன என்பது கருத்து. சித்தியல் என்பது அணுவை மலையாகவும், மலையை யணுவாகவும் இவ்வாறே ஒன்றைப் பிறிதொன்றாகவும், செம்பைப் பொன்னாகவும், பொன்னை யிரும்பாகவும் மாற்றுதற்குரிய வித்தைக் கூறு. வித்துக்கள் உயிர்க் கூறுகட்கு உடம்பாய் இடமாய் அமைதலின் அவற்றை வேறுபடுத் துரைக்கின்றார்.

வெளியின் அனைத்தையும் விரித்ததில் பிறவும்

அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          512

உரை : ஆகாயமாகிய பூதத்தின்கண் அண்டங்கள் பிண்டங்கள் அத்தனையும் எல்லையின்றிப் பரந்து நிலவச்செய்து இவற்றினிடையே நிறைந்துள்ள பிற பொருள்கள் யாவற்றையும் இருப்பித்து இனிது தம்மில் அமையச் செய்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பேருருவினவாகிய அண்டங்களையும், கட்புலனாகாத அணுக்களையும் சேரத் தொகுத்து, “வெளியில் அனைத்தையும் விரித்து” எனவும், அண்ட பிண்டங்கட்கு இடையே இதுகாறும் கண்டறிந்தனவும் இனியறியவிருப்பனவுமாகிய பொருள்களைப் “பிறவும்” எனவும் குறிக்கின்றார்.

புறநடு வொடுகடை புணர்ப்பித் தொருமுதல்

அறமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          514

உரை : பொருள் தோறும் முதல் இடை கடையென முக்கூறுகள் பொருந்துவித்து அவை சேர்ந்து ஒரு முதற்பொருள் என முறையுறுவித் தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

பொருள்களின் உருவாகும் தன்மை முதலிற் காணப்படுதலால், முதன்மையைப் “புறம்” என்கின்றார். பொருளின் இடைக்கூறு நடு என்றும், இறுதிக் கூறு கடை என்றும் குறிக்கப்படுவதால், “நடு வொடு கடை புணர்ப்பித்து” என நவில்கின்றார். அறம் என்பது ஈண்டு முறைமை எனக் கூறப்படுகிறது. அற முதல் எனவும், அறங்கடை எனவும் வழங்குதல் பற்றி, “அறமுற” என உடம்பொடு புணர்த்துரைக்கின்றார்.

புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை

அறம்பெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          516

உரை : புறமாகிய முதற்கூற்றோடு நடுக்கூறினைச் சேர்த்து இறுதியில் கடையாகிய கூற்றை முறையுற வகுத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

பொருள்களை முதல் இடை கடையெனப் பகுத்துணரும் முறையை உரைக்கலுற்ற வள்ளற் பெருமான், அவற்றைக் கூட்டியும் குறைத்தும் ஆராயும் அறிவியல் நெறியைக் கூறலுறுகின்றார். பொருளின் புறமாகிய முதற்கூற்றையும், நடுவாகிய இடைக் கூற்றையும் கூட்டி யுண்மை காண்டலும், பின்னர் அவற்றொடு இறுதிக் கூற்றை யிணைத்து நோக்குதலும் அறிவியல் நெறியாதல் விளங்க, “நடுவொடு புணர்ப்பித்து” எனப் புகல்கின்றார். இறுதிக் கூற்றை விலக்குவதும் இயல்பாதல் பற்றி, “ஒரு கடை” என்று கூறுகின்றார். இறுதிக் கூறு என்னாமல் விலக்கப்படும் இயல்பு விளங்க, “ஒரு கடை” என வுரைப்பதன் நயம் நோக்கற்பாலது.

அகப்புற நடுக்கடை அணைவால் புறமுதல்

அகப்பட வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          518

உரை : அகக்கூறும் புறக்கூறும் நடுக்கூறும் இறுதிக்கூறும் அணையும் இடைப் பகுதியில் முதற் கண்ணது புறமுதல் என உணர வகுத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

அகம் புறம் இரண்டையும் இரண்டு வட்டங்களாகக் கொண்டு அவை தம்மில் தொடுமிடம் புற முதலாகக் கருதப்படும் என்க. அது போல் நடுவின் வட்டமும் இறுதியின் வட்டமும் தொடுமிடம் புறமுதல் எனவே கொள்ளப்படும்.

அகப்புற நடுமுதல் அணைவால் புறக்கடை

அகப்பட அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          520

உரை : அகத்தின் புறக்கூறும் நடுக்கூறும் தம்மில் தீண்ட அமைந்தது புறக்கடையாம் என உணர அமைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

அகக்கூறும் நடுக்கூறும் தம்மின் புறப்பகுதி தீண்ட நிற்கும் நிலை “புறக்கடை” என உணர்த்துவது குறிப்பு. அகம், உணர்வுக் கருவியுமாதலால், “அகம் பெற” எனவுரைக்கின்றார்.

கருதக நடுவொடு கடைஅணைந் தகமுதல்

அருளுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          522

உரை : அக வட்டத்தின் நடுக் கூற்றின் வட்டமும் இறுதிக் கூற்றின் வட்டமும் தீண்ட நிற்கும் நிலை அகமுதல் என அருளால் உணர்விப்பது அருட்பெருஞ் சோதி. எ.று.

பொருள்கட்கு அகமெனவும் புறமெனவும் பகுத்தறியப்படுவன கருத்துப் பொருளாதலால், “கருதக நடுவொடு” என்று கூறுகின்றார். அணைதல் - தீண்டுதல்.

தணிஅக நடுவொடு தலைஅணைந் தகக்கடை

அணியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          524

உரை : தண்ணிய அகவட்டத்தின் நடுவும் கடைப்பகுதியும் சேர்விடம் அகக்கடைக் கூடம் என அழகுற அமைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

தலைக்கூறும் கடைக்கூறும் நோக்க நடுவாகி இடைக் கூறு தண்ணிதாகலின், “தணியகம்” என்று கூறுகின்றார். இறுதியினின்றும் நோக்குங்கால் அது முதலாதல் பற்றித் “தலையணைத்து” என மொழிகின்றார். அக வட்டத்தின் கடைக் கூற்றினை “அகக் கடை” என்று அறிவிக்கின்றார்.

அகநடு புறக்கடை அணைந்தகப் புறமுதல்

அகமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          526

உரை : அகவட்டத்தின் நடுவும் புறமாகிய இறுதிக் கூறும் சேர்த்து அகப்புற முதலாம் என உணர வகுத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

நடுவும் இறுதியும் சேர்ந்த வட்டத்துக்கு நடுவை ஒட்டியுறுவது முதலாதலால், அதனை “அகப்புற முதல்” என்று கூறுகின்றார். அகம் என்றது உள்ளுணர்வு.

அகநடு புறத்தலை அணைந்தகப் புறக்கடை

அகலிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          528


உரை : அகவட்டத்தின் நடுவும் இறுதி வட்டத்தின் அகவிளிம்பும் கலந்தது அகப்புறக் கடையாம் என நடுவகத்தை வகுத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

இறுதி வட்டத்தின் புற விளிம்பு புறந்தலை எனப்படுகிறது. நடுவும் புறந்தலையும் சேர்ந்தது அகப்புறக் கடை என்பதாம். அகமும் புறமும் என விரியும் பொருட் கூற்றினை “அகலிடை” எனக் கூறுகின்றார்.

அகநடு அதனால் அகப்புற நடுவை

அகமற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          530

உரை : அகவட்டத்தின் நடுநிலையை அடியாகக் கொண்டு அகப்புற வட்டத்திற்கும் நடுநிலை கண்டு தெளிய அருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

அகவட்டத்தின் நடுநிலைக்கும் புற வட்டத்துக்கும் நடுநிலைக்கும் நடுவானதாகும் அகப்புற வட்டத்துக்கும் நடு வுண்டென்று இதனால் வள்ளற் பெருமான் அறிவுறுத்துகின்றார்.

அகப்புற நடுவால் அணிபுற நடுவை

அகப்பட அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          532

உரை : அகப்புற வட்டத்தின் நடுநிலைக் காட்சியால் புற வட்டத்தின் அழகிய நடுநிலை வட்டத்தை உணர அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

அக வட்டத்தின் நடுநிலையும் அகப்புற வட்டத்தின் நடுநிலையும் காணும் காட்சி புற வட்டத்தின் நடுநிலையை யுய்த்துணர வுதவுதலால், “அகப்புற நடுவால் அணி புற நடுவை அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார்.

புறநடு அதனால் புறப்புற நடுவை

அறமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          534

உரை : புற வட்டத்தின் நடுநிலைக் காட்சி யுணர்வால் புறப்புற வட்டத்தின் நடுநிலைக் காட்சியுணர்வு உணர்வினுள் அமையுமாறு வகுத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

பொருள்களின் அகப்புற வட்டங்கள் போலப் புறப் பொருள்களின் வட்டங்கள் காணப்படுமாயினும், புறப்புறப் பொருள் வட்டங்கள் எல்லையின்றிப் பரவுவனவாம்; அவற்றின் நடுநிலையும் இம்முறையிற் கண்டறிந்து கொள்ளுமாறு பொருட் கூறுகள் அமைந்துள்ளன என்பது கருத்து.

புகலரும் அகண்ட பூரண நடுவால்

அகநடு வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          536

உரை : நுண்ணறிவால் நுழைந்தறிதற்கரிய அகண்ட நிறைவாகிய பரம்பொருட் காட்சியறிவால் எல்லாப் பொருட்கும் அகமாய் அது நடுநிற்கும் நிலையை யுணரவமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

புகல் - புகுதல்; பொருள் தோறும் அகம் புறங்களை நுணுகி நோக்குதல். பரம்பொருள் இவ்வாறு அறிவால் நுழைந்தறிதற் காகாதாதலால், “புகலரும் அகண்ட பூரணம்” என வுரைக்கின்றார். அகண்டம் - பகுத்துக் காண்டற் காகாதது. அது “குறையிலா நிறைவு” என்றற்குப் “பூரணம்” என்கின்றார். அதுவே, உருவம் அருவம் என நிற்கும் பொருளனைத்துக்கும் நடுநிலைப் பொருள் என்பது பற்றி அதனைப் “பூரண நடு” என மொழிகின்றார். பொருள் தோறும் நீக்கமற நிற்பதனால், அதற்குரிய இடத்தை “அகநடு” எனச் சிறப்பிக்கின்றார்.

புறப்புறக் கடைமுதல் புணர்ப்பால் புறப்புறம்

அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          538

உரை : புறப்புற மெனவும் கடைநிலை யெனவும் பொருட் பாகுபாடு கண்ட முறைமையினால் பொருட்களின் புறப்புறத்தே பொருட் கூட்டத்தை வகுத்தருளியது அருட் பெருஞ் சோதி. எ.று.

அகம் என்றும், புறமென்றும், அகப்புறமென்றும், புறப்புறம் என்றும், பொருட்கூறுகளை முதல், இடை, கடை என்றும் பகுத்துணரும் உணர்வு முறையை, “புறப்புறக் கடை முதற் புணர்ப்பு” எனப் புகன்று கூறுகின்றார். பொருள்கட்குப் புறமும் புறப்புறமும் வெறும் சூனியமாகாமல் பரம்பொருளாகிய தான் தங்குதற்கேற்ப எண்ணிறந்த பொருள்களை வகுத்தருளியிருப்பது தோன்ற, “புறப்புறம் அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் சோதி” என்று கூறுகின்றார். அற வடிவாகிய பரம்பொருள் தங்கும் பொருட் கூட்டத்தை “அறக் கணம்” என்று குறிக்கின்றார்.

புறத்தியல் கடைமுதல் புணர்ப்பால் புறத்துறும்

அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          540

உரை : புறமாகிய பொருள்களின் நிலையில் தரம் பற்றி முதல் இடை கடை யென நோக்கும் முறைமையால் புறத்தேயுள்ள பொருட் கூட்டத்தை வகுத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

புறப் பொருள்கள் தரத்தால் உத்தமம், மத்திமம், அதமம் எனப் பகுக்கப்படும் முறைமை வழியே நோக்கினும் புறத்துள்ள அவையனைத்தையும் தானுறையும் இடமாக்கி அமைத்துக் கொண்டுள்ளான் இறைவன் என்ற கருத்தை வலியுறுத்தற்குப் “புறத்துறும் அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் சோதி” என மொழிகின்றார். இதனாற் புறமாகிய பொருட் கூறனைத்தும் பரம்பொரு ளுறையும் “அறக்கணம்” என்றாராயிற்று.

அகப்புறக் கடைமுதல் அணைவால் அக்கணம்

அகத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி.                                          542

உரை : அகப்புறமாகிய பொருட் கூற்றில் தரம் பற்றிக் கடையாயவை முதலியவற்றின் சேர்க்கையால் அகப்புறப் பொருள்களின் அகத்தே தான் எழுந்தருள அமைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

அகப்புறமாகிய பொருட் கூற்றில் முதல் இடை கடை என்ற மூன்று தரப் பொருள்களிலும் இறைவன் எழுந்தருளுகிறான் என்பது கருத்து. அக்கணம் - அகப்புறப் பொருள்களின் கூட்டம்.

அகக்கடை முதல்புணர்ப் பதனால் அகக்கணம்

அகத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          544

உரை : அகத்துறை பொருட் கூற்றின் கடை முதல் கண்ட தரம்படு திறத்தால் அமையும் அகப் பொருட் கூட்டத்தின் அகநிலையையும் தனக்கு இடமாகக் கொண்டருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

அகநிலை - நடுநிலை. பொருள்கள் முதல் இடை கடையெனத் தரம் காணப்படினும், அவற்றி னகத்தை இடமாகக் கொண்டு பரம்பொருள் எழுந்தருளாது விலகுவதில்லை என்பது குறிப்பு.

வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்

ஆனற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          546

உரை : வானமாகிய பூதத்தின்கண் காற்றையும், காற்றாகிய பூதத்தின்கண் நெருப்பையும் வேறே இடமில்லையாமாறு வகுத்தமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

வான் - ஆகாயம். “ஆகாயத்தினின்றும் வாயுவும், வாயுவினின்றும் தேயுவும், தேயுவினின்றும் அப்புவும், அப்புவினின்றும் புடவியும் தோன்றும்” என்பது வேத நூற் கொள்கை; வாயுவாகிய பூதம் காரணாவத்தையிற் சூக்குமமாய் ஆகாயத்திற் கிடத்தலால் “வானிடைக் காற்றும்” என்றும், இவ்வாறே ஏனைப் பூதங்களிற் கிடத்தல் பற்றி, “காற்றிடை நெருப்பும் ஆனற வகுத்த அருட்பெருஞ் சோதி” என்றும் கூறுகின்றார். ஆன் - இடம்.

நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்

அருப்பிட வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          548

உரை : தீயாகிய பூதத்தினின்றும் நீரும் நீராகிய பூதத்தினின்றும் நிலமும் தோன்றுமாறு வகுத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

காரிய காரணாவத்தைகளில் காரணம் சூக்கும நிலையும், காரியாவத்தையில் தூலமாயும் நிற்றல் முறைமையாதலால், “நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும் அருப்பிட வகுத்த அருட்பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார். அரும்புதல் - தோன்றுதல். அரும்பிட என்பது அருப்பிட என வலித்தது.

நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மேல் உயிர்ப்பும்

ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          550

உரை : நீராகிய பூதத்தின் மேனிலையில் நெருப்பாகிய பூதமும், நெருப்பின் மேனிலையில் காற்றும் நிறைந்து பொருந்த அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

மேலே பூதம் ஐந்தின் தோற்றம் கூறினாராதலின், ஈண்டு அவற்றின் இருப்பைக் கூறுகின்றாராதலால், “நீர் மேல் நெருப்பும் நெருப்பின் மேல் உயிர்ப்பும்” என வுரைக்கின்றார். உயிர்ப்பு - காற்று. ஆர்தல் - நிறைதல். நீரின் மேனிலை இடை நிலை, அடிநிலை எங்கும் வெப்பமுண்மை காரண காரிய ஆய்வுணர்வாலும், இக்கால விஞ்ஞானக் காட்சியாலும் காணப்படுதல் பற்றி, “ஆர்வுற” என விதந்துரைக்கின்றார்.

புனல்மேல் புவியும் புவிமேல் புடைப்பும்

அனல்மேல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          552

உரை : நீராகிய பூதத்தின் மேனிலையில் நிலத்தையும் நிலத்தின் மேல் மலை முதலிய பெருக்கத்தையும், இவை யனைத்தும் நெருப்பாகிய பூதத்தின் மேலுற்றமையப் படைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

நிலத்தின் நாற்புறமும் கடல்நீர் சூழ்ந்தும், மேலும் நீராவி சூழ்ந்தும் கிடத்தலால், “புனல் மேற் புவி” என்கின்றார். நிலத்தின் மேல் ஏனை நால்வகைப் பூதங்களும், வானளாவிய மலைகளும் குன்றுகளும் பெருகி யிருத்தலால் அவற்றைப் “புவி மேற் புடைப்பு” எனக் கூறுகின்றார். புடைப்பு - பெருக்கம். நீருக்கும் நிலத்துக்கும் காரண பூதமாதலால் “அனல்மேல் வகுத்த அருட்பெருஞ் சோதி” என மொழிகின்றார். இக்கருத்தே புலப்படச் சங்கச் சான்றோர் “நிலனேந்திய விசும்பு” ( புறம் ) எனத் தொகுத்துரைக்கின்றார்.

பகுதிவான் வெளியில் படர்ந்தமா பூத

அகல்வெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          554

உரை : மூலப் பகுதியினின்றும் தோன்றிய மகாகாசப் பெருவெளியில் விரிந்த பெரிய ஆகாச முதலிய பூதங்களைந்தும் நிலவும் அகன்ற பெருவெளியைப் படைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

பகுதி, மூலப் பகுதி என்னும் தத்துவம்; இதன்கட் குணதத்துவமும், அதனினின்றும் தன்மாத்திரைகளும், அவற்றினின்றும் ஐம்பெரும் பூதங்களும் தோன்றின வென்னும் நூற்கருத்தையுட்கொண்டுரைப்பது விளங்கப் “பகுதி வான்வெளி” எனக் கூறுகின்றார். வான் வெளியைப் பரமாகாசம் என்றும், மகாகாசம் என்றும் உரைப்பர். அதன்கண் பூதங்கள் ஐந்தும் தோன்றிப் பெருகி நிற்பது பற்றி, “படர்ந்த மாபூத அகல் வெளி” என்று கூறுகின்றார். அகல் வெளி - அகன்ற பேராகாசம்.

உயிர்வெளி இடையே உரைக்கரும் பகுதி

அயவெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          556


உரை : உயிர் நிலவும் இடமமாகிய ஆகாயத்தின் சொல்லுதற்கரிய பகுதியாவது வியப்புடைய பிராணாகாசத்தை வகுத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

பொருட்கு இடம் கொடுத்தல் ஆகாசத்தின் பண்பாதலின், உயிர் இடம் பெறும் ஆகாசம் உயிர் வெளி யெனப்படுகிறது; அதுவே பிராணாகாசமாம். உயிர்க்கு இடமாகிய பிராணாகாசம் இத்தன்மைத்தென இயம்பலாகாமையின், அதனை உரைக்கரும் பகுதி எனவுரைக்கின்றார். அதுவும் மூலப் பகுதியின் கூறு என நினைவுறுத்தற்குப் “பகுதி” என மொழிகின்றார். இப்பகுதி யென்னும் சொல் பிரகிருதி என்றும் மான் என்றும் நூல்களில் வழங்கும். உடற்குள் நிலவும் போது இப் பிராணாகாசம் ஜீவாகாசம் என்றும், தனித்த நிலையில் ஆன்மாகாசம் என்றும் அறிஞர்களால் குறிக்கப்படும்.

உயிர்வெளி அதனை உணர்கலை வெளியில்

அயலற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          558

உரை : பிராணாகாசமாகிய உயிர் வெளிக்கு இடமாவது கலாகாசமாகிய கலைவெளி யெனவும், அது தானும் பிராணாகாசத்துக்கு வேறாகாது ஒன்றியிருக்க அமைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

உயிர் வெளி கலாதத்துவ வெளியின்கண் வேறறக் கலந்து நிற்கின்றது என்பது கருத்து. “ஆன்மாவிற்குக் குண முதல் நில மீறாகிய போக்கியங்கள் முறையேயுளதாதற் கேதுவாகக் கலையினின்றும் மூலப்பகுதி யென்னும் தத்துவம்” தோன்றும் எனச் சிவஞான மாபாடியம் தெரிவிப்பது காண்க. தத்துவ வகையில் வேறாயினும் தன்மையில் ஒன்றாதல் புலப்பட, “அயலற வகுத்த” என அறிவுறுத்துகின்றார்.

கலைவெளி அதனைக் கலப்பறு சுத்த

அலர்வெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          560

உரை : கலாகாசத்தின்கண் பிறிது யாதும் கலவாத தூய பரந்த அபரவெளியை வகுத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

வெளியின்கண் என ஏழனுருபிடத்து ஐயுருபு வந்து மயங்கிற்று. தூணின்கட் சார்ந்தான் என்பது தூணைச் சார்ந்தான் என வருதல் போல. கலாகாசத்தின்கண் சுத்த அலர் வெளியாகிய அபரவெளியுளது என்பது கருத்து.

சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி

அத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          562

உரை : தூய நல்ல அபர வெளியின்கண் குற்றமற்ற பரவெளியைப் படைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

அபர வெளி, அபரம் எனப்படுவதால் கீழ்மையுடையதன்று என்றற்குச் “சுத்த நல்வெளி” யெனச் சொல்லுகின்றார். இஃது ஐயமறுத்தல். மேன்மேல் உயர்வது விளங்க, பரவெளியைத் “துரிசறு பரவெளி” எனச் சிறப்பிக்கின்றார். துரிசு - குற்றம். அதனிடை என்பது அத்திடை என மருவிற்று. “விண் படர்ந்து அத்தூடு வினையினாற் கண் செவி கெட்டு” ( சிவ. ஞா. போ. 2:2 ) என்பதன் உரை காண்க.

பரவெளி அதனைப் பரம்பர வெளியில்

அரசுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          564

உரை : பரவெளியாகிய பராகாசத்தைப் பரம்பர வெளியின்கண் ஞானக் காட்சிக்குச் சிறந்து விளங்கப் படைத்தருள்வது அருட்பெருஞ் சோதி. எ.று.

பராகாசத்தைத் தன்கண் கொண்டு அஃது சிறப்புடன் தோன்றச் செய்வது பரம்பராகாசம் என்பதாம். பரம்பரவெளி - பரம்பராகாசம். சிறப்புற விளங்குவதை “அரசுற” என்று விளம்புகின்றார். அரசுற - அரசிருக்கை போல.

பரம்பர வெளியைப் பராபர வெளியில்

அரந்தெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          566

உரை : பரம்பராகாசமாகிய பரவெளியைப் பராபரம் என்ற ஆகாசத்தின்கண் அமைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

மேற் குறித்த பரம்பராகாசம் பராபர வெளியின்கண் அமைந்துள்ளது என்பது கருத்தாம். அராவித் துரிசு போக்க வேண்டாது தானே ஒளி திகழ்வது பற்றி, “அரம்தெற வகுத்த” எனக் கூறுகின்றார்.

பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்

அராவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          568

உரை : பராபரமாகிய பரமாகாசத்தைப் புகழ்ந்தோதப்படுகின்ற பெருவெளியில் ஒளியுறப் படைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

பராபரவெளி பெருவெளியாகிய பேராகாசத்தின்கண் அமைந்துளது என்பதாம். பகர்தல் - புகழ்ந்துரைத்தல். தீட்டி விளக்கம் செய்தலை வேண்டாது இயற்கை யொளி விளங்க என்பாராய், “அராவற வகுத்த” என வுரைக்கின்றார். அராவுதல் - தீட்டுதல்.

பெருவெளி அதனைப் பெருஞ்சுக வெளியில்

அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          570

உரை : பேராகாசமாகிய பெருஞான வெளியைப் பெரிய சுகவெளியில் தனது கருணையால் அமைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஞானானந்த வெளியைப் “பெருஞ் சுகவெளி” யெனப் பேசுகின்றார். இந்தச் சிவானந்த சுகவெளி பெருவெளியின்கண் அமைந்துளது என்பது கருத்து. இந்தச் சுகவெளி தானும் திருவருளாலன்றிப் பெறப் படாமை விளங்க, “அருளுற” என விதந்துரைக்கின்றார்.

குணமுதல் கருவிகள் கூடிய பகுதியில்

அணைவுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          572

உரை : அவ்வியக்கமாய்க் கூடி நிற்கும் மூலப் பகுதியின்கண் முக்குணங்களாகிய முதற் கருவிகள் பலவும் பொருந்த அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

குணமுதற் கருவிகள் - சத்துவம், இராசதம், தாமதம் என மூன்றாய் விரியும் குணங்களாகிய கருவிகள். செயல்களைச் செய்தற்கும் செய்வினைப் பயன்களை நுகர்தற்கும் இக்குணங்கள் கருவியாதலால், “குண முதற் கருவிகள்” என்று கூறுகின்றார். “முக்குணங்களும் விரிந்து விளங்குதலின்றிச் சூக்குமமாய் நின்ற அவத்தையே மூலப் பகுதியாம்” எனத் தத்துவ நூல்கள் கூறுதலால் அதனைக் “கூடிய பகுதி” என்று குறிக்கின்றார். அணைதல் - சேர்ந்திருத்தல்; அஃதாவது அவ்வியக்தமாதல் என அறிக. “முக்குணங்களையும் அடைவுபடவொடுக்கி அவ்வியக்தமாய் நிற்கும் அவத்தை மூலப் பகுதி” எனச் சிவஞான பாடியம் கூறுவது காண்க.

மனமுதல் கருவிகள் மன்னுயிர் வெளியிடை

அனமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          574

உரை : பெரிய உயிர் நிற்கும் பிராணாகாசத்தின்கண் மனம் முதலிய கருவிகள் பொருந்த அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

மன் - பெருமை; நிலைபேறெனக் கொண்டு உடல் போல் அழியும் தன்மையில்லாமையால் “மன்னுயிர்” என வுரைப்பினும் அமையும் உடம்பின்கண் உயிர் நிலவ இடம் தரும் ஆகாசம் “உயிர் வெளி” எனப்படுகிறது. உயிரின் வேறாய் மூலப் பகுதியின் காரியப்பொருளாதலின் மன முதலிய கருவிகட்கு இடம் பிராணாகாசம் என்றற்கு, “மன்னுயிர் வெளியிடை அனமுற வகுத்த அருட்பெருஞ் சோதி” என்று அறிவிக்கின்றார். அனம் - பொருத்தம். மனத்தின் கூறாய்ச் சித்தம், ஆங்காரம், புத்தி முதலியன உளவாதல் பற்றி, “மனமுதற் கருவிகள்” என மொழிகின்றார். இவற்றை அகவிந்திரியம் என்றும், அகக்கரணம் என்றும், அகக்கருவி யென்றும் வழங்குவதுண்மையின் “கருவி” என்கின்றார்.

காலமே முதலிய கருவிகள் கலைவெளி

ஆலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          576

உரை : கலாகாசத்தின்கண் காலம் முதலிய கருவிகள் இருந்து ஆன்மா போக நுகருமாறு படைத்தமைத் தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஆன்மாவின் தொழில் அறிவு இச்சைகளை இயக்கும் கலை வித்தை அராகம் என்ற தத்துவங்கட்குரிய இடம் கலாகாசமாகிய கலைவெளி என அறிக. அவ்வெளியின்கண் காலம் நியதி ஆகிய கருவிகள் இருந்து ஆன்மா போக நுகர்தற்குத் துணையாகுமாறு படைக்கப்பட்டுள்ளன என்பது கருத்து.

துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை

அரசுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          578

உரை : “கலப்பறு சுத்த அலர் வெளி” ( 559 - 60 ) எனப்பட்ட சுத்தாகாசத்தின்கண் குற்றமற்ற புற விந்திரியங்கள் இனிதமைய வகுத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சத்துவத்திற் சத்துவம், சத்துவத்தில் தாமதம், சத்துவத்தில் இராசதம் எனக் கலப்பது போலாது ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் கலப்பதில்லையாகலின், அவற்றைத் “துரிசறு கருவிகள்” என்று சிறப்பிக்கின்றார். இவை காலத்தோடு இயைந்தனவாதலால், கலாகாசத்துக்கு இடமாகிய சுத்தாகாசத்தில் உள்ளன என்பாராய், “சுத்த நல்வெளியிடை அரசுற” என்கின்றார்.

இவ்வெளி எல்லாம் இலங்கஅண் டங்கள்

அவ்வயின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          580

உரை : மேலே கூறிய வெளிவகைகள் யாவையும் இனிதிருந்து விளங்குமாறு அவ்வவ்விடத்தே அண்டங்களை வகுத்தருளியது அருட் பெருஞ் சோதி. எ.று.

பூத வெளி, உயிர் வெளி, கலை வெளி, சுத்த வெளி, பரவெளி, அபர வெளி, பரம்பர வெளி, பராபர வெளி, பெருவெளி, சுக வெளி என்பனவற்றைத் தொகுத்துச் சுட்டுகின்றாராதலால், “இவ்வெளியெல்லாம்” என இயம்புகின்றார். எல்லாம் என்றது எஞ்சாப் பொருட்டு. இவையனைத்தும் இருந்து தொழில் புரிதற்குத் தனித்தனி அண்டங்கள் உள்ளன என்பாராய், “இலங்க” என்றும், “அண்டங்கள் அவ்வயின் வகுத்த அருட்பெருஞ் சோதி” என்றும் அறிவித்தருளுகின்றார் அருட் சோதி வடலூர் வள்ளல்.

ஓங்கிய அண்டம் ஒளிபெற முச்சுடர்

ஆங்கிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                         582

உரை : பலவாய் உயர்ந்த அண்டங்கள் யாவும் ஒளி பெறுமாறு சூரியன் சந்திரன் அக்கினியென்ற மூன்று ஒளிப் பொருள்களையும் ஆங்காங்கு அவற்றிற்குப் படைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

அண்டங்கள் “நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன” வாகலின், அவற்றை “ஓங்கிய அண்டம்” என்று சிறப்பிக்கின்றார். அவை பலவும் நிலவுலகு சூழ்ந்த அண்டத்தினும் பெரியனவாதலால் அவற்றுக்கு ஞாயிறும் திங்களும் பலப்பல உண்டு என்றற்கு, “முச்சுடர் ஆங்கிடை வகுத்த அருட்பெருஞ் சோதி” என்று கூறுகின்றார்.

சிருட்டித் தலைவரைச் சிருட்டிஅண் டங்களை

அருட்டிறல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          584

உரை : படைத்தற்குரிய பிரமர்களாகிய தலைவர்களைக் கொண்டு படைத்தற்குரிய அண்டங்கள் பலவற்றையும் தனது அருட்சத்தியால் படைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சிருட்டித் தலைவர் - படைத்தற் றொழிலைச் செய்யும் தேவர்கள். சிருட்டியண்டங்கள் - படைத்தற்கமைந்த அண்டங்கள். இவையனைத்தையும் அத்தலைவர்களை யதிட்டித்து நின்று ஒழுங்குறப் படைத்தற்கமைவது தனது திருவருட் சத்தியாதல் விளங்க, “அருட்டிறல் வகுத்த அருட்பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார்.

காவல்செய் தலைவரைக் காவல்அண் டங்களை

ஆவகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          586

உரை : படைக்கப்பட்ட அண்டங்களைக் காத்தாளும் தலைவர்களாகிய நாராயணர்களைக் காத்தற்குரிய அண்டங்களை இனிது இயங்குமாறு அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

காவல் செய்தலைவர் - காத்தற் றொழிலைச் செய்தருளும் நாராயணர்கள். இத்தலைவர்களை அதிட்டித்து நின்று காத்தற் றொழிலைப் புரிவிப்பது பற்றி, “ஆவகையமைத்த அருட்பெருஞ் சோதி” என வுரைக்கின்றார்.

அழித்தல்செய் தலைவரை அவரண் டங்களை

அழுக்கற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          588

உரை : காக்கப்படும் அண்டங்களை ஒடுக்குதலைச் செய்யும் தலைவர்களாகிய உருத்திரர்களைத் தத்தம் அண்டங்களை மலப்பிணிப்பு நீங்கும் பொருட்டு ஒடுக்கச் செய்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

அழித்தற் றொழிலைச் செய்பவர் உருத்திரர்களாகலின், அவர்களை “அழித்தல் செய் தலைவர்” என்று இயம்புகின்றார். சிருட்டித் தலைவர் மூவரும் தத்தம் செயல் வகைகளை நன்கு செய்து முடிப்போர் பலர் அவரவர் கீழ் இருக்குமாறு புலப்பட, “தலைவர்” என்று குறிக்கின்றார். அண்டங்கள் தோறும் இத்தலைவர்கள் இருந்து பணிபுரிவதால் “அவர் அண்டங்கள்” எனக் கூறுகின்றார். இவ்வண்டங்களில் வாழும் ஆன்மாக்கள் ஆங்காங்கே தத்தம் மலவிருளாகிய அழுக்கு நீங்குதற் பொருட்டுப் பிறந்திறந்துழலும் அயர்ச்சி போக்கற்கு இவ்வழித்தற்றொழில் நடை பெறுகிற தென்றற்கு, “அழுக்கற” என்று இயம்புகின்றார். “உயிர்க்கு மன்னிய புத்தி முத்தி வழங்கவும் அருளால் முன்னே துன்னிய மலங்களெல்லாம் துடைப்பதும் சொல்லலாமே” ( சிவ. சித்தி : 1 : 36 ) என அருணந்தி சிவனார் உரைப்பது காண்க.

மறைத்திடு தலைவரை மற்றும்அண் டங்களை

அறத்தொடு வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          590

உரை : மறைத்தற் றொழிலைச் செய்யும் திரோபவ மூர்த்திகளை அண்டங்களில் வாழும் உயிர்களை மறைத்துப் போகம் நுகருமாறு பண்ணற்கு அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

செய்வினைப் போகங்களை ஒன்றியிருந்து நுகர்வித்தற்கு ஆன்மவுணர்வை மறைத்தருளும் தலைவர்களை “மறைத்திடு தலைவர்” என்று கூறுகின்றார். போகம் விளையும் இடமாதலால், “அண்டங்களை” விதந்துரைக்கின்றார். நுகரப்படும் போகத்தை வேறு எவற்றினும் படராது ஆன்ம வுணர்வை மறைத்து நுகர்வித்தல் முறைமையாதலின், “அறத்தொடு வகுத்த” என்று இசைக்கின்றார். திரோபவ மூர்த்தி - மறைத்தற் றொழிலைச் செய்யும் தேவதேவர்.

தெளிவுசெய் தலைவரைத் திகழும்அண் டங்களை

அளிபெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          592

உரை : அண்டங்களில் வாழும் ஆன்மாக்கட்குப் போக நுகர்ச்சியின் முடிவில் ஞானம் பெறுவிக்கும் ஞான மூர்த்திகளை அவ்வவ்வண்டத்தும் அருளால் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சிவஞானம் தந்து ஆன்மவுணர்வைத் தெளிவித்தருளும் ஞான தேவர்களைத் “தெளிவு செய் தலைவர்” என இயம்புகின்றார். போக நுகர்வின்கண் அதுவதுவாய்த் தோய்ந்து உணர்வு மறைப்புண்டிருக்கும் ஆன்மாக்கட்குத் திருவருள் ஞானமல்லது உய்தி நல்குவது பிறிது யாதுமின்மையின், அதன் இன்றியமையாமை விளங்கத் தெளிவு செய் தலைவரைத் தெரித்து மொழிகின்றார். தெளிவு பெற்றார்க்குத் தாம் வாழும் அண்டங்கள் ஞான நிலையமாய்த் திருவருள் ஞான வொளி பெற்றுத் தோன்றுதலால், “திகழும் அண்டங்கள்” என்று செப்புகின்றார். போக நுகர்ச்சி குறித்து ஆன்ம வுணர்வை மறைத்தருளிய அருட் சோதியாண்டவன் தனது பெருங் கருணையால் ஞான மருளுகின்றான் என்பாராய், “அளி பெற வகுத்த” என அறிவிக்கின்றார். அளி - அருள் ஞானம்.

விந்துவாம் சத்தியை விந்தின்அண் டங்களை

அந்திறல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          594

உரை : விந்து தத்துவமாகிய அருட் சத்தியை அத்தத்துவத்தின் கண்ணுள்ள அண்டங்களில் அச்சத்தியில் ஆற்றல் குன்றாது ஒளிருமாறு அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சத்தி தத்துவம் விந்து என்று கூறப்படுவது பற்றி, “விந்துவாம் சத்தி” என்று கூறுகின்றார். தத்துவங்கள் தோறும் பற்பல அண்டங்கள் கூறப்படுவதால், “விந்தின் அண்டங்கள்” என்று குறிக்கின்றார். சத்தி மயமாகி விந்து தத்துவத்தின் அருளாற்றல் பலவாகிய அண்டங்களில் குறைவற நிறைந்து நிற்பது தோன்ற, “அந்திறல் வகுத்த அருட்பெருஞ் சோதி” என்று கூறுகின்றார். அத்திறல் - எதுகை நோக்கி அந்திறல் என வந்தது.

ஓங்கார சத்திகள் உற்றஅண் டங்களை

ஆங்காக வமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          596

உரை : பிரணவமாகிய ஓங்கார தத்துவத்தின்கண் உள்ள சிவசத்திகள் தங்கண் பொருந்திய அண்டங்களில் ஆங்காங்கிருந்து அருளுணர்வு பரவ அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஓங்காரம் என்பது பிரணவ தத்துவம். இதன்கண் ஞானவொளி திகழும் அண்டங்கள் பலவாகும். இவ்வண்டங்களில் வாழும் ஆன்மாக்கள் அவ்வண்டங்கள் விளைவிக்கும் ஞான போகத்தை நுகரச்செய்வது பற்றி “ஓங்கார சத்திகளை” எடுத்தோதுகின்றார்.

சத்தத் தலைவரைச் சாற்றும்அண் டங்களை

அத்தகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          598

உரை : சத்த தத்துவத் தலைவர்களை அத்தத்துவங்களின் அண்டங்களில் தங்கிச் சத்தவியல்கள் இனிதமைய வகுத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சத்த தத்துவம், சத்த தன்மாத்திரைக்கு ஏதுவாய்க் காரியமாகிய ஆகாயத்துக்குச் சத்த குணம் எய்துவிப்பது; அதற்குரிய தேவர்கள், “சத்தத் தலைவர்” எனப்படுகின்றனர். சத்த தத்துவத்தில் உள்ள ஆகமங்கள் உரைக்கும் அண்டங்களைச் “சாற்றும் அண்டங்கள்” என வுரைக்கின்றார். சத்த தத்துவம், சத்த தன்மாத்திரைக்கும் அதனினின்றும் ஆகாசமாகிய மாபூதத்துக்கும் காரணமாய் நிலவுவதென அறிக.

நாதமாம் பிரமமும் நாதஅண் டங்களும்

ஆதரம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          600

உரை : நாதமாகிய பிரம தத்துவமும், அதன்கண் உள்ள அண்டங்களும் பிரமமாய் விளங்க அன்புடன் வகுத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

தத்துவங்கள் அனைத்திற்கும் தலையாயதும் பெரியதுமாகலின், “நாதமாம் பிரமம்” எனவும், நாத தத்துவத்தின் கண்ணவாகிய அண்டங்கள் பிரமாண்டங்கள் எனக் குறித்தற்கு, “நாத வண்டங்கள்” எனவும் நவில்கின்றார். ஆதரம் - அன்பு.

பகர்பரா சத்தியைப் பதியும்அண் டங்களை

அகமற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          602

உரை : நூல்கள் ஓதும் பராசத்தியையும் அவள் நின்று இயக்கும் அண்டங்களையும் ஆன்மாக்களின் மலக் குற்றம் நீங்கும்வண்ணம் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பரம்பொருளாகிய பரனிடத்துறையும் சத்தியாதலால், “பராசத்தி” என்றும், அவள் அவ்வவ் வண்டங்களில் நின்று ஆன்மாக்கட்கு உடல் கருவி கரணம் உலகு போகங்களைப் படைத்துதவுதலின், “பதியும் அண்டங்கள்” என்றும் கூறுகின்றார். அகம் - குற்றம்; மலப் பிணிப்பால் உண்டாகிய குற்றம்.

பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை

அரசுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          604

உரை : மேலான சிவதத்துவத்தில் உள்ள அண்டங்களையும், அவற்றை நிலவுவித்தருளும் சிவமாகிய பதிப்பொருள் விளக்கமுற இருந்து ஆண்டருளுமாறு அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சுத்த மாயா காரியங்களாதலால், சுத்த சிவதத்துவத் துறையும் அண்டங்கள் “பரசிவாண்டங்கள்” எனவும், சுத்த தத்துவத்தை ஆளும் சிவபதியைப் “பரசிவ பதி” எனவும் இயம்புகின்றார். சுத்த தத்துவங்கள் சுத்த மாயா காரியமாய்த் துன்பக் கலப்பில்லாதன என்பனவாகலின், அங்கு விளக்கமுறும் சிவத்தை, “அரசுற அமைத்த” என மொழிகின்றார். தத்துவத் தொகுதிகளில் காணப்படும் சிவம் “சிவபதி” எனச் சர்வ ஞானோத்தரம் முதலிய ஆகமங்கள் குறிக்கின்றன என அறிக.

எண்ணில்பல் சத்தியை எண்ணில்அண் டங்களை

அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          606

உரை : எண்ணற் கெட்டாத பலவேறு சத்திகள் எண்ணிறந்த அண்டங்களில் இருந்து பணி புரியுமாறு அமைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

அண்டங்கள் எண்ணிறந்தனவாதலால், அவற்றுள் நின்று இயக்கும் சக்திகளை, “எண்ணில் பல்சத்தி” என வுரைக்கின்றார். அறிவிச்சை தொழில் எனப் பலவாய்ப் பிரிதலால், “பல்சத்தி” எனக் கூறுகின்றார். அண்ணுறல் - நெருங்கியிருத்தல்.

அளவில்பல் சத்தரை அளவில்அண் டங்களை

அளவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          608


உரை : அளவின்றிப் பெருகிய சத்திமான்களை அளவில்லாத அண்டங்களில் அளந்து காண முடியாத நிலையில் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சத்திகள் எண்ணிறந்தனவாதலால் அச் சத்திகளைத் தம்கண் உடைய சத்திமான்களை, “அளவில் பல்சத்தர்” என்று கூறுகின்றார். சத்தர் எனினும் சத்திமான் எனினும் பொருந்தும். அளவிறந்த ஆற்றலுடையதாகலின், “அளவற வகுத்த அருட்பெருஞ் சோதி” என்று சிறப்பிக்கின்றார்.

உயிர்வகை அண்டம் உலப்பில எண்ணில

அயர்வற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          610

உரை : உயிர் வகைகள் வாழ்தற் கமைந்த அண்டங்கள் அழிவிலவாய் அளவு கடந்தமையுமாறு தளர்வின்றிப் படைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

உயிர்கள் வாழ்ந்து உய்தி பெறும் பொருட்டு அண்டங்கள் படைக்கப்படுகின்றன. உயிர்கள் அழிவில்லாத அனாதி நித்தப் பொருள்களாதலால், அவற்றிற்குரிய அண்டங்களும் “உலப்பில எண்ணில” எனப்படுகின்றன. உலத்தல் - அழிதல். கரண வகையாலன்றிச் சங்கற்ப வகையால் படைக்கப்படுதல் பற்றி, “அயர்வற” என்று கூறுகின்றார்.

களவில கடல்வகை கங்கில கரைஇல

அளவில வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          612

உரை : மறைவின்றிக் காணப்படும் கடல் வகைகள் கங்கு கரையின்றி அளவிறந்தனவாய் நிலவ அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

கட்புலனாதலால் கடல் வகைகள் “களவில” எனப்படுகின்றன. பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ் சாற்றுக்கடல், மதுக்கடல், என்றும், பனிக்கடல், வெப்பக்கடல், செங்கடல், கருங்கடல் என்றும் பலவகையுண்மையின், “கடல் வகை” எனக் கூறுகின்றார். இவற்றின் இயல்புகளைக் கந்த புராணம் முதலியவற்றினும், சிவஞான பாடியும் சிவாக்கிர பாடியம் முதலியவற்றினும் காண்க. கங்கு - வளைந்த கடற்கரை. கரை - நேர்பட நிற்கும் கடற்கரை.

கடலவை அனைத்துங் கரைஇன்றி நிலையுற

அடல்அனல் அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          614

உரை : கடல்கள் யாவும் பெருகிக் கரை கடந்து செல்லாமல் நிலைபெறும் பொருட்டு அவற்றின் நடுவே வலி பொருந்திய வடவைத் தீயை அமைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

கடல் நடுவண் இருக்கும் வடவைத் தீ, கடல் நீர் மிகைபடப் பெருகி நிலத்திற் புகுந்து கேடு செய்யாவாறு அவ்வப்போது தனது வெம்மையாற் குறைக்கும் வன்மை மிக்கது; அதனால், இதனை “அடல் அனல்” என்று சிறப்பிக்கின்றார். இது குதிரையின் முகம் போன்று தோன்றுதலால் “படபா முகாக் கினி” எனப் புராணங்கள் உரைக்கின்றன. “மழை கொளக் குறையாது புனல் புக மிகாது, கரை பொருதிரங்கும் முந்நீர்” ( மதுரைக் ) எனச் சான்றோர் கூறுவர்.

கடல்களும் மலைகளும் கதிகளும் நதிகளும்

அடலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          616

உரை : ஆழ்ந்த கடல்களையும் உயர்ந்த மலைகளையும் பலவகைப் பிறப்புக்களையும், அகன்ற ஆறுகளையும் வலி மிகப் படைத்தமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

கடல்கள் மலைகள் எனப் பொதுப்படக் கூறுதலால் அவ்வவற்றின் சிறப்பை விதந்து உரை கூற வேண்டிற்று. பூ வெனப் பொதுப்பட மொழிபவாயின் சிறப்புடைய தாமரைப் பூ கொள்ளப்படும்; அம் மரபு பற்றி, ஆழ்ந்த கடலெனவும், உயர்ந்த மலைகள் எனவும், அகன்ற ஆறுகள் எனவும் உரை கூறப்பட்டது. கதிகள் - நீரில் தோன்றி வாழும் உயிரினங்கள். மலை போன்ற திமிங்கலப் பிறப்புக்களும் கண்ணுக்குத் தோன்றாத நுண்ணிய அணுவுயிர்ப் பிறப்புக்களும் உளவாதலால் “கதி” என்று கூறுகின்றார். மலைகளிலும், உயிரினத்துள் வலிமிக்க அரிமா, யானை, புலி முதலிய பெருவிலங்குகளும் பெரும் பாம்புகளும் பிறந்து வாழ்கின்றமையின், பல்வேறு கதிகட்கு இடமாக மலைகள் இருக்கின்றமை பற்றி மலைகளையும் சேர வுரைக்கின்றார். அழிவுறாமல் நீடு வாழ்தலின் “அடலுற வகுத்த அருட்பெருஞ் சோதி” என விளம்புகின்றார்.

கடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்உயிர்

அடலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          618

உரை : கடலின்கண் முத்து, பவளம் முதலிய பலவகைச் செல்வங்களைத் தோற்றுவித்து அதனோடமையாமல் பல்வகை உயிரினங்களையும் சிறப்புற அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

கடலும் மலையும் நதியும் கதியு மெனத் தொகுத்துரைத்ததனை விரியக் கூறலுறுகின்றாராகலின், “கடலிடைப் பல்வளம் கணித்து” என வுரைக்கின்றார். விலைவுயர்ந்த முத்துக்களும் பவளங்களும் பிறவும் காணப்படுவதால் “பல்வளம் கணித்து” என்கின்றார். கணித்தல் - சங்கற்பித்தல். மலைபோற் பருவுருவுடைய திமிங்கிலவுயிர்களும், கட்புலனாகாத அணு வுயிர்களும் அடங்கப் “பல்லுயிர்” என மொழிகின்றார். யாவும் இறைவனது சங்கற்ப சிருட்டி என்றற்குக் “கணித்து” என்கின்றார்.

மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்உயிர்

அலைவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          620

உரை : மலையின்கண் பலவேறு மணியும் முத்துமாகிய செல்வங்களை யுண்டாக்கி, அவற்றிடையே பல்வேறு உயிரினங்களையும் கெடாமல் இனிது வாழ அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

மலைகளிற் பனிப் பாறைகளையும் மழை மேகங்களையும் உளவாக்கி நீர்வளம் பெருகுவித்தலும், பலவேறு விலை மதிக்க வொண்ணாத மாணிக்கம், மரகதம் முதலாகிய மணிகளையும் தோற்றுவித்தலால், “பல்வளம் வகுத்து” எனவும், பல திறமான வன்மை மிக்க மரங்களும், உயிர்கட்கு நலம் தரும் தாவரங்களும் தழைத்தோங்க வன்மை மிக்க உயிரினங்களை ஆங்காங்கே தோற்றி வாழ்வித்தலும் இறைவன் அருட் செயலாதல் விளங்க, “பல்லுயிர் அலைவற வகுத்த” எனவும் இயம்புகின்றார். அலைவு - கெடுதல்.

ஒன்றினில் ஒன்றே ஒன்றிடை ஆயிரம்

அன்றற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          622

உரை : ஒன்றினில் ஒன்றும், ஒன்றினால் ஆயிரம் முதலிய பேரெண்களும் மாறுபாடின்றியமைய வகுத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஒன்றின்கண் ஒருமை யொன்றே நிற்க ஒன்றொன்றாய்க் கூடி ஆயிரம் முதலிய பேரெண்கள் உளவாதல் தோன்ற, “ஒன்றிடை ஆயிரம் அன்றற வகுத்த” என அறிவிக்கின்றார். அன்றுதல் - மாறுபடுதல். “அன்றி நின்ற அவுணர்” ( சித்தீச் ) எனச் சான்றோர் வழங்குதல் காண்க.

பத்திடை ஆயிரம் பகரதில் கோடி

அத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          624

உரை : பப்பத்தாய்க் கூடி ஆயிரமும் அதனால் பல ஆயிரம் கூடிக் கோடியாகிய பேரெண்ணை எல்லையாக அமைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

பத்துக்கள் கூடி ஆயிரமும், ஆயிரங்கள் பல கூடிக் கோடியும் ஆகுமாறு அருளியது அருட் சோதிப் பரம்பொருள் என்பது கருத்து.

நூற்றிடை இலக்கம் நுவலதில் அனந்தம்

ஆற்றிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          626

உரை : நூறுகளினால் இலக்கமும் அவ் விலக்கங்கள் பல சேர்வதால் அனந்தமும் அம் முறையிற் பெருக அமைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

ஒன்று பத்தாகவும், பத்து நூறாகவும், நூறு ஆயிரமாகவும், ஆயிரம் இலக்கமாகவும், இலக்கம் கோடியாகவும் முறையே பெருகுதலால், அவற்றை அவ்வாறே பெருக அருள் செய்வது அருட் சோதி யாண்டவனது அமைப்பு என்பது கருத்து. அது நன்கு புலப்படுத்தற்கு “ஆற்றிடை வகுத்த அருட் பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார்.

கோடியில் அனந்த கோடிபல் கோடி

ஆடுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          628

உரை : கோடியில் பல கோடி கூடுமிடத்து அனந்தம் கோடியும், மேன்மேலும் கோடி பலவும் பெருக அமைத்தருளியது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஒன்று முதல் அனந்தம் கோடியாக எண்ணும் எண்ணிறந்து பெருகுதலால் எண்களை இவ்வாறு எல்லையின்றிப் பெருக அருளியது இறைவன் திருவுள்ளக் குறிப்பு என்பாராய், “ஆடுற வகுத்த அருட்பெருஞ் சோதி” என நினைவுறுத்துகின்றார். ஆடுதல் - மேன்மேல் எண்ணுதல்.

வித்தியல் ஒன்றாய் விளைவியல் பலவாய்

அத்தகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          630

உரை : வித்து ஒன்றாக அதன் விளைவு பலவாக விரியும் இயல்பினை விதை தோறும் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

வித்தியல் - வித்தினுடைய முளைத்துத் தழைக்கும் இயல்பு. இது விதைதோறும் இயன்றிருத்தல் பற்றி “வித்தியல் ஒன்று” என இயம்புகின்றார். ஒரு விதை முளைத்துப் பல விதைகளை விளைவிக்கும் இயல்பு எல்லா விதைகட்கும் ஓரொப்ப அமைந்திருப்பது பற்றி, “விளைவியல் பலவா அத்தகையமைத்த அருட்பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார்.

விளைவியல் அனைத்தும் வித்திடை அடங்க

அளவுசெய் தமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          632

உரை : விளையும் திறம் அனைத்தும் வித்தின்கண் அடங்கியிருக்குமாறு அளவிட்டமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சிறு மீன் முட்டையினும் சிறிதாயினும் விதையின்கண் பெருமரமாய்க் கிளையும் இலையுமாய் விரிந்து தழைத்துப் பூவும் காயும் கனியுமாய் விளையும் ஆற்றல் முழுதும் ஒடுங்கியிருத்தல் பற்றி, “விளைவியல் அனைத்தும் வித்திடை யடங்க” என்று கூறுகின்றார். விதையின் விளைவு முற்றும் ஒருகாலத்தே முதிர்ந்து புலர்ந்து கெடுவது கண்டு, காலவளவுக்கும் இடத்தின் வளமை யளவுக்கும் வரையறைப்பட்டிருப்பதனால், “அளவு செய்தமைத்த” என்றும் இயம்புகின்றார்.

வித்தும் பதமும் விளையுப கரிப்பும்

அத்திறல் அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                         634

உரை : வித்தின்கண் முளைத்து வளர்ந்து விரிதற்கேற்ற பக்குவத்தையும் பிற வுயிர்கட்குப் பயன்படும் நலத்தையும் அவ் வகையில் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

வித்து முளைத்து வளர்ந்து பயன் விளைத்தற்கு நிலநலமும் நீர்நலமும் காலமும் அளவுறச் சமைந்தபோது, அது முளைத்து வளர்ச்சியுற்றுப் பூவும் காயும் கனியும் பயந்து பயன்படுதற்கேற்ற பக்குவம் “பதம்” எனப்படுகிறது. வித்தின் முளையும் தளிரும் இலையும் பூவும் காயும் கனியும் பிற வுயிர்கட்கு உணவாய்ப் பயன்படுவதால் அப்பயப்பாட்டை “உபகரிப்பு” எனக் கூறுகின்றார். முதிர்ந்து புலர்ந்து சருகாய வழியும் வித்தின் விளைவு பிறவற்றிற்கு எருவாய்ப் பயன்படுவது கொண்டே “அத்திறல் அமைத்த” என அறிவிக்கின்றார்.

வித்திடை முளையும் முளையிடை விளைவும்

அத்தக அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          636


உரை : வித்தின்கண் உடனடியாகத் தோன்றும் முளையும், அம்முளையின்கண் வளர்ந்து முதிர்ந்து பூவும் காயும் கனியும் விளைதற்கேற்ற நலம் யாவும் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

வித்தின்கண் விளைவுக்குரிய ஆற்றலனைத்தும் அருவாய்ப் புதைந்து கிடத்தலால், அதனை நீரும் நிலமும் காலமும் பக்குவப்படுத்த உடனடியாக உருக்கொண்டு வெளிப்படுவது முளையாகலான், அதன்கண் பின் விளைவுக்குரிய ஆற்றலனைத்தும் ஒடுங்கியிருப்பதுணர்த்தற்கு, “வித்திடை முளையும்” எனவும், “முளையிடை விளைவும்” எனவும் பகுத்துரைக்கின்றார். முளையாகிய இளமைக்கண் அதன் வளமை முற்றும் அமைந்திருப்பதறிவித்தற்கு “அத்தக அமைத்த அருட்பெருஞ் சோதி” என உரைக்கின்றார். வித்தின் முதன்மைக்கும் விளைவின் பெருமைக்கும் ஒப்ப முளை தன்கண் வேண்டும் ஆற்றலைக் கொண்டிருத்தலால் “அத்தக” எனச் சிறப்பிக்கின்றார்.

வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்

அத்திறம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          638

உரை : வித்தினுள் விதையும், அவ் விதையின்கண் வித்தை விளைவிக்கும் திறனையும் அம் முறையே அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

வித்தினிடத்து உளதாகும் விளைவு, முடிவில் வித்தாதலால் “வித்தினுள் வித்தும்” என்றும், ஆற்றல் வடிவாய் இருக்கும் அவ்வித்தின்கண் ஆற்றலுள் ஆற்றல் வடிவாய் விளைவு பயக்கும் திறமும் அமைந்து கிடத்தலால், “வித்தினில் வித்தும்” என்றும் இயம்புகின்றார். வித்து முளைத்துத் தழைத்துப் பூத்துக் காய்த்துக் கனியாகுமிடத்து விதையே உருவாய் விளைதலாலும், அவ் விதை பின்னர் விளைவு பயத்தலால் “வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்” என விளம்புகின்றார்.

விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்

அளையுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          640

உரை : வித்துக்களிடத்தே விளையும் விளைவுத் திறனையும், அவ் விளைவுத் திறத்தும் மேலும் விளையும் நலத்தையும் அருவாய் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

வித்துக்கள் யாவும் விளைவுத் திறனுடையவாதல் இல்லையாதலால், விளையும் நலம் பெற்றவற்றைக் குறித்தற்கு “விளைவினுள் விளைவு ”எனவும், அவ் விளைந்த விளைவு நல்கும் வித்தினிடத்து அவ்வாற்றல் குன்றலாகாது என்றற்கு “விளைவதில் விளைவு” எனவும் இசைக்கின்றார்.

முளையதின் முளையும் முளையினுள் முளையும்

அளைதர அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          642

உரை : விதையின் முதற் கலிப்பாகிய முளையின்கண் தளிர்ப்பனவும் அத் தளிர்ப்பின்கண் தழைக்கும் திறமும் அருவாய் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

வித்தின் முதற் கலிப்பாகிய முளையின்கண் மேன்மேல் வளர்ந்து தழைக்கும் திறமின்றித் கெடுவதுண்மையால், “முளையதன் முளையும் முளையினுள் முளையும்” என எடுத்து மொழிகின்றார். கெடுவன சிலவும், கலிப்பன பலவுமாதலால், பலவற்றையே ஈண்டு “அளைதர வகுத்த அருட்பெருஞ் சோதி” என்று கூறுகின்றார். அளைதல் - கலந்திருத்தல்.

வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்

அத்துற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          644

உரை : வித்தின்கண் காலத்தில் முளைக்கும் பக்குவமும், பக்குவத்தில் முளைத்து வித்து விளைவிக்கும் திறமும் அளவில் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

வித்து முளைத்துப் பயன் விளைவித்தற்கெனப் பக்குவமுறும் தன்மையை ஈண்டுப் “பதம்” எனப் பகர்கின்றார். பக்குவம் என்ற திறனில்லாதபோது வித்துக்கள் விளைபயனை நல்காவாதலால் “வித்திடைப் பதம்” எனவும், பதத்தின்கண் முளைத்துத் தளிர்த்துத் தழைத்து விதையாகிய பயன் உண்டாதலால், “பதத்திடை வித்தும்” எனவும் இயம்புகின்றார். வித்து விளைதற்கேற்ற காலம் பதம் என அறிக.

பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்

அதிர்வற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          646

உரை : பக்குவக் காலத்தில் விளைவு கருக் கொள்ளற்கமைந்த பதத்தையும், அதுதானும் புறத்தே அமையாமல் அப் பக்குவக் காலத்துள் அமையவும் தடுமாற்றமின்றியமையுமாறு செய்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பதம் - பக்குவம். அது தீவிர பக்குவம், அதிதீவிர பக்குவம் என வகைப்படுமாறு அமைந்திருத்தலால், “பதத்திற் பதம்” என்றும், அப் பக்குவ வகைகள் பக்குவக் கால எல்லைக்குள் அமைந்திருப்பது விளங்க, “பதத்தினுட் பதம்” என்றும் பகர்கின்றார். பக்குவம், மந்தம், மந்ததரம், தீவிரம், தீவிர தரம், அதிதீவிரம் எனப் பலவகைப்பட்டு, நிலம் காலம் என்பவற்றின் துணையால் பயன் விளைவிப்பது என்பர். அதிர்வு - தடுமாற்றம்; நடுக்கமுமாம்.

ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும்

அற்றென வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          648

உரை : பொருள்களினிடையே ஒற்றுமைப் பண்பும், வேற்றுமைப் பண்பும், உரிமைப் பண்பும் வித்துக்குரைத்த அத் தன்மையில் அமையவகுத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

குணஞ் செயல்களாலும், உருவம், நிறம் முதலியவற்றாலும் பொருள்களிடையே ஒற்றுமையும் வேற்றுமையும் காணப்படுகின்றன; ஒற்றுமைத் தன்மையால் உரிமையும், வேற்றுமையால் உரிமையின்மையும் பெறப்படுகின்றன. வித்துக்களிடையே இக்கூறிய ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உரிமைகளும் காணப்படுவது பற்றி, “அற்றென வகுத்த அருட்பெருஞ் சோதி” என்று அறிவுறுத்துகின்றார். அற்றென்னும் மாட்டேற்றினைத் தனித்தனியே கூட்டியுரைத்தல் வேண்டும்.

பொருள்நிலை உறுப்பியல் பொதுவகை முதலிய

அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          650

உரை : பொருள்களின் நிலைமைகளைப் பொதுவியல் சிறப்பியல் முதலிய பல கூறுகளாகக் காணுமாறு தனது திருவருளால் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

உலகியற் பொருள்களைக் காணும் அறிஞர்கள் பொதுத் தன்மை நோக்கியும், தனித்தனி இயல்நலம் கண்டும் பொதுவியல் சிறப்பியல் எனப் பகுத்து ஆராய்வது பற்றி, “உறுப்பியல் பொதுவியல் முதலிய வகுத்த” என்றும், இவ்வியல்கள் பலவாதற்குக் காரணம், இறைவன் திருவருட் குறிப்பு என்பார், “அருளுற வகுத்த அருட்பெருஞ் சோதி” என்றும் எடுத்தோதுகின்றார். உறுப்பியல் - சிறப்பியல். குணம், செயல், வடிவு, நிறம் எனப் பல கூறுகள் உண்மையால் “முதலிய” என மொழிகின்றார்.

உறவினில் உறவும் உறவினில் பகையும்

அறனுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                                                                   652

உரை : உறவினருள் உண்மை யுறவும் பொய் யுறவும் பகைவரும் உளராக உலகியலறமாக அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

உற்றவிடத்து உதவும் அன்பு உறவாகும்; உதவும் பண்புடையவர் உண்மை யுறவினராவர். தீங்கு நினைத்துத் தீது செய்பவர் பகைவர். இன்பமும் துன்பமும் விரவியது உலகியல்; இன்பத்தால் மயக்கமும் துன்பத்தால் தெளிவும் உயிர்கட்கு உண்டாகின்றன. அதனால் இன்பத்துள் மயங்காமல் துன்பத்தால் தெளிவுற்று உய்திபெறச் செய்வது உலகியலின் அறமாதலால், “அறனுற வகுத்த அருட்பெருஞ் சோதி” என இயம்புகின்றார். மக்களுலகில் யாவரும் ஒருவர்க்கொருவர் உறவினராயினும் அவரிடத்தே பொய் யுறவும் உறவு நோக்காத பகைமையும் தோன்றித் துன்பம் செய்தலால், உறவினில் உறவும் உறவினிற் பகையும் வகுத்தருளியது அருட்பெருஞ் சோதி என்பது கருத்து.

பகையினிற் பகையும் பகையினில் உறவும்

அகைவுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          654

உரை : பகைவரிடத்து மிக்க பகைமையும் அவரது மெலிவு கண்டு அருளுறவும் மனத்தின்கண் பொருந்துமாறு அமைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

பகையினிற் பகையாவது, பகைவருடைய பகைமைச் செயலையொடுக்காமல் கண்ணறக் கொன்றழிப்பதாகும். பகைவர் வலியிழந்து மெலிவுற்ற போது இரக்கம் கொண்டு ஆதரவு செய்தலும் மகட் கோடல் முதலியவற்றால் உறவு கொள்வதும் பகையினில் உறவாகும். அகைதல் - நிறைதல்; பொருந்துதல். “காழ் முளை அகைய” ( நற். 172 ) என வருதல் காண்க.

பாதியும் முழுதும் பதிசெயும் அந்தமும்

ஆதியும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          656

உரை : அரைகுறையாயும் முழுதுமாயும் நிலைபெறுவிக்கும் தொடர்பையும் அதற்கு அத் தொடர்பே காரணமாகவும் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

உறவுக்கும் பகைமைக்கும் காரணம் கூறுகின்றாராதலின், அரைகுறையான அன்பால் விளையும் பந்தம் பொய்யுறவுக்கும் பகைமைக்கும் ஏதுவாதலால், “பாதியும் பதி செயும் பந்தம்” என்றும், உண்மையுறவுக்கும் நட்புறவுக்கும் ஏதுவாதலால் “முழுதும் பதி செயும் பந்தம்” என்றும் உரைக்கின்றார். உறவுக்கும் பகைமைக்கும் காரணம் “பாதியும் முழுவதுமாகிய” பந்தமாதல் விளங்க, “ஆதியும் வகுத்த அருட்பெருஞ் சோதி” எனத் தெரிவிக்கின்றார். அரைகுறையான பந்தம் பகையாய்த் துன்பம் செய்வதும், முழுமையான பந்தம் உண்மையுறவாய் நட்பாய் இன்பம் செய்வதும் திருவருள் ஆணை என்பது கருத்து. பதி செய்தல் - நிலை பெறுதல்.

துணையும் நிமித்தமும் துலங்கதின் அதுவும்

அணைவுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          658


உரை : துணைக் காரணமும் நிமித்த காரணமும் விளங்குகின்ற காரணத்துக்கு முதலாகும் முதற் காரணமும் நன்கு பொருந்த அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

செயல் வகை யனைத்துக்கும் காரணம் உண்டு; அக் காரணம் ஆராயுமிடத்து முதல், துணை, நிமித்தம் என மூவகையாய் வெளிப்படுதலால், “அணைவுற வகுத்த” என்று கூறுகின்றார். குயவன் மண்ணாற் குடம் செய்தான் என்றவிடத்து, குயவன் நிமித்த காரணம்; மண் முதற் காரணம்; மற்றைய கருவிகள் துணைக் காரணம். இக் காரணக் கூறுகளும் இறைவனால் அமைந்தவை என்றற்கு, “வகுத்த அருட்பெருஞ் சோதி” என வுரைக்கின்றார்.

உருவதின் உருவும் உருவினுள் உருவும்

அருளுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          660

உரை : உருவப் பொருளின் புறமாகிய தூலவுருவும் அதன் உள்ளுறுகின்ற சூக்கும வுருவும் திருவருளாற் பொருந்த அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

உருவப் பொருள் அனைத்துக்கும் புறவுருவும் அகவுருவும் இறைவன் அமைத்துள்ளதைச் சான்றோர் கண்டு உரைத்துள்ளமையின், “உருவதின் உருவும் உருவினுள் உருவும் அமைத்த அருட்பெருஞ் சோதி” என்றும், அதற்குக் காரணம் அவனது திருவருள் என்றற்கு, “அருளுற” என்றும் அறிவிக்கின்றார். தூல வடிவம் புற விந்திரியங்கட்கும் சூக்கும வடிவம் அந்தக்கரணங்கட்கும் புலனாவன என அறிக.

அருவினுள் அருவும் அருவதில் அருவும்

அருளியல் அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          662

உரை : அருவப் பொருள்களில் சூக்கும அருவமும் அதன் தூல உருவமும் என்ற அருவ நிலையை வகுத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

கட்புலனாகாத பொருளனைத்தும் அருவப் பொருள்களாகும்; காற்றும் நீரும் ஒலியும் பிறவும் அருவப் பொருள்கள். காற்றினுள்ளும் நீரினுள்ளும் சூக்கும அருவமாய்ப் பலவேறு வாயுக்களும் ஆவிகளும் உள்ளமையால், “அருவினுள் அருவும் அருவதில் அருவும்” எனப் பகுத்துக் காட்டுகின்றார். இவ்வாறு அருவப் பொருள்களில் தூலமும் சூக்குமமுமாய் அருவங்கள் அமைந்திருப்பது திருவருட் குறிப்பு என்பதை வற்புறுத்தற்கு “அருளியல்” எனக் கூறுகின்றார்.

கரணமும் இடமும் கலைமுதல் அணையுமோர்

அரணிலை வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          664


உரை : உருவருவங்களை யுணரும் கரணங்களும் அவை இருந்து தொழிற்படும் இடங்களும் அவற்றை இயக்கும் கலைகளும் சேர்ந்துறையும் இடத்தை யமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

மன முதலிய அகக்கரணங்களும், அவை தொழிற் படுதற்கேதுவாய் இடமாய் நிலவும் ஆன்ம சிற்சத்தியும், அவற்றை முறையே இயக்கும் கலை, காலம், நியதி முதலியனவும் ஆன்ம வுணர்வு இடமாக அமைந்திருப்பது புலப்படுத்தற்கு, “அணையுமோர் அரணிலை” என எடுத்துரைக்கின்றார். கலையும் கரணமும் புறப்பொருள்களால் தாக்கப்படாத தன்மை பற்றி, ஆன்ம உணர்வாகிய இடத்தை, “அரணிலை” என்று குறிக்கின்றார். கலைகட் கிடம் ஆன்ம சிற்சத்தி.

உருவதில் அருவும் அருவதில் உருவும்

அருளுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          666

உரை : பொருள்களின் உருவம் இடமாக அவற்றின் அருவமும், அருவம் இடமாக உருவமும் அமையத் திருவருள் பாவித்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பொருள்களின் தூல வுரு இடமாக அதன் சூக்கும வுரு அறிவுக்கண்ணுக்குப் புலனாதல் பற்றி “உருவதில் அருவும்” என்றும், அறிவால் ஆராயுங்கால் அருவப் பொருளின் இயல்பும் அமைதியும் உருவ நிலையில் காண நிற்பது தெளியுமாறு “அருவதில் உருவும்” என்றும் கூறுகின்றார். அருவமாகிய நீராவியும் பிற எண்ணெய் ஆவிகளும் உருவப் பொருள்களை இயக்கும் இந்நாளைய விஞ்ஞானப் பொறிகளால் இனிது விளங்குதலால், இவ்வருளுரையின் உண்மை நன்கு உணரப்படும்.

வண்ணமும் வடிவும் மயங்கிய வகைபல

அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          668

உரை : நிறமும் வடிவமும் வேறறக் கலந்திருக்கும் பலவேறு பொருள் வகைகளைப் பொருந்த அமைத்தருள்வது அருட்பெருஞ் சோதி. எ.று.

பொருண்மை ஒன்றாயினும் அதன்கண் நிறமும் வடிவமும் வேறு வேறு வகையாய்ப் பல்கியிருப்பதை நிலத்திலும் நீரிலும் மலரும் பூக்களால் அறிகின்றோமாதலால், அவ்வுண்மை தோன்ற, “வண்ணமும் வடிவும் மயங்கிய வகை” என வோதுகின்றார். வண்ணம் - நிறம். மயங்குதல் - கலத்தல். தேன் கலந்த பாலைத் “தேன் மயங்கு பால்” ( ஐங் ) எனச் சான்றோர் வழங்குவது காண்க. மலர் ஒன்றாயினும் ஒரு நிறமுடையவும், பன்னிறங் கலந்தனவும், இரவில் மலர்வன ஒரு நிறமும், பகலில் மலர்வன பல நிறமும் கொண்டு விளங்குவதை உலகியலிற் காணலாம். அண்ணுதல் - பொருந்துதல்.

சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும்

அறிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          670

உரை : சிறியவற்றுள் சிறியனவும் பெரியனவுமாய் அறிவுடையோர் அறியுமாறு படைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சிறியவை அணுக்கள். அவற்றினுள்ளும் சிற்றணுவும் பேரணுவும் காணப்படுதலால், “சிறுமையிற் சிறுமையும், சிறுமையிற் பெருமையும் அறிதர” என வுரைக்கின்றார். இங்கே சிறுமை பெருமை என்பன, அப்பண்புகளையுடைய பொருள் மேல் நிற்கின்றன. “பணியுமாம் என்றும் பெருமை” ( குறள் ) என்றாற் போல. சிற்றணுக்களில் இது சிறிது பெரிது என்றும், இது மிகச் சிறிது என்றும் வழங்குவதுண்டாகையால், சிறுமையிற் பெருமை சிறுமைகள் காணப்படுவதுண்மையின், “அறிதர” எனக் கூறுகின்றார்.

பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும்

அருணிலை வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          672

உரை : பெரியவற்றுட் பெரியனவும், பெரியவற்றுள் சிறியனவும் காணுமாறு திருவருளால் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பெருமையுடையவை பெருமை யென்றும், சிறுமையுடையவற்றைச் சிறுமை என்றும் கூறுகின்றார். இப் பெரியவற்றுள் அது பெரியது எனவும், இப் பெரியவற்றில் இது சிறிது எனவும் வழங்குவதுண்மையின், “பெருமையிற் பெருமையும், பெருமையிற் சிறுமையும்” என வுரைக்கின்றார். பெருமை வியாபகம்; சிறுமை வியாப்பியம் எனப்படும். பெருமைக்குள் சிறுமை வியாப்பியம்; வியாபக வியாப்பியத் தொடர்பு இதனால் விளக்கப்படுகிறது. இதுவும் திருவருள் அமைப்பு என்பார். “அருணிலை” எனக் கிளந்து கூறுகின்றார்.

திண்மையில் திண்மையும் திண்மையில் நேர்மையும்

அண்மையின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          674

உரை : திண்ணியவற்றுள் திட்பமும், திண்ணிதாம் தன்மை குலையாமையும் செறிய அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

திண்ணியவை திண்மை எனப்படுகின்றன. திண்மை - கடினத் தன்மை. திண்மை திட்பம் எனவும் வழங்கும். இத்திண்ணியவற்றுள் இது மிகத் திண்ணிது என வழங்குதல் காண்க. நேர்மையாவது - திண்மை நிலைகுலையாமை. ஒருபோது திண்மையும், ஒருபோதும் நிலைகுலைந்து மென்மையுறுவதும் நேர்மையாகாது. அண்மை - ஈண்டுச் செறிவு குறித்து நின்றது.

மென்மையில் மென்மையும் மென்மையில் வன்மையும்

அண்மையற் றமைத்த அருட்பெருஞ் ஜோதி.                                          676

உரை : மெல்லியவற்றுள் மென்மைத் தன்மையும், அம் மென்மையுடையவற்றுள் வன்மையுடையனவும் வேறற அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

இது மென்மைத் தன்மையுடையதாகலின் மெல்லிது எனவும், இம் மெல்லியவற்றுள் இது மிகவும் மெல்லியது எனவும், இது சிறிது வலிமையானது எனவும் வழங்குவதுண்டாகலின், “மென்மையின் மென்மையும் மென்மையில் வன்மையும்” என்று வகுத்துரைக்கின்றார். அன்மை - வேறாதல். “அன்மையற்று” என்ற விதப்பினால் வன்மையின் வன்மையும், வன்மையுள் வன்மையும் கொள்ளப்படும். “வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை” ( குறள் ) என்பது காண்க.

அடியினுள் அடியும் அடியிடை அடியும்

அடியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          678

உரை : அடிப்பகுதிக்குள் முதல் இடை கடையென்று முக்கூறு உண்டாதலால், அவ்வடிக்கண் கடையாகிய அடியும், இடையாகிய அடியும் நன்கமையப் படைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஒவ்வொரு பொருட்கும் முதல் இடை கடை என முக்கூறு உண்டு; அம் மூன்றனுள் கடையாவது அடிப்பகுதி; அதன் கூறு மூன்றனுள் கடையாகிய அடிப்பகுதி “அடியினுள் அடி” என்றும், இடைப்பகுதி “அடியிடை அடி” என்றும் குறிக்கப்படுகின்றன. அடியின் கூறுகள் என வற்புறுத்தற்கு “அடியுற” என்று இயம்புகின்றார்.

நடுவினுள் நடுவும் நடுவதில் நடுவும்

அடர்வுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          680

உரை : அடி நடுவின் கூறு மூன்றனுள் நடுக் கூற்றில் நடுவும், அந்நடுவின் நடுவும் இனிது பொருந்தப் படைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

நடுக் கூற்றின் நடுவணது “நடுவதின் நடு” எனப்படுகிறது. அடர்வு - செறிவு. இவ்வுண்மை அணுவுக்கும் மலைக்கும் ஒப்பப் பொருந்துகின்றமை புலப்பட, “அடர்வுற” என உரைத்தருளுகின்றார்.

முடியினுள் முடியும் முடியினில் முடியும்

அடர்தர அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                         682

உரை : முதல் நடு கடை என்ற முக்கூற்றினுள், முதலாகிய கூற்றின்கண் முதலாகிய உட்கூறும், அதற்கு உட்கூறாகிய அடிக்கூறும் இனிதமைய வகுத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பொருள்களிற் காணப்படும் முதல் இடை கடை என்ற கூறுகள் தனித்தனியே இங்ஙனம் முக்கூறுகளாக வகுத்துணர நிற்கும் திறம் இதனால் கூறப்படுகிறது. அடர்தல் - அடர்வு எனவும் வரும். முன்னே அடர்வுற என்றாராகலின், ஈண்டு அடர்தர எனவுரைக்கின்றார்.

அகப்பூ அகவுறுப் பாக்க அதற்கவை

அகத்தே வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          684

உரை : பூவில் அகவிதழ்க்குள்ளிடம் அகப்பூ வென்னும் பகுதியாக அதற்கு உள்ளிருக்கும் பொருள்கள் அகவுறுப்பாக வகுத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பூவின் நடுவிடமும் அதனைச் சூழ்ந்த அகவிதழ் நிரையும் அகப்பூ என அறியப்படும். அவற்றிற்குள்ளிருக்கும் நடுத் தண்டும் அதன் அடியில் இருக்கும் கருப்பையும் பிறவும் அகவுறுப்புக்களாம். பூவின் அகத்தே இவை அமைக்கப்பட்டிருப்பது பற்றி, “அதற்கவை அகத்தே வகுத்த அருட்பெருஞ் சோதி” என்று கூறுகின்றார். ஆக வென்பது ஆக்க என வந்தது.

புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட

அறத்துடன் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          686

உரை : பூவின் புறவிதழ் புறத்தே நின்று அப்பூவிற்கு அழகிய உருவைத் தந்து சிறப்பிக்குமாறு முறையாக அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

அகவிதழ் பூவகத்து உறுப்புக்களைக் காத்துதவுதல் போலப் புறவிதழ்கள் அப் பூவுக்கு அழகிய உருவைத் தருகின்றன என்பது கருத்து. புனையரு - அழகிய உரு.

அகப்புறப் பூஅகப் புறவுறுப் பியற்றிட

அகத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          688

உரை : அகவிதழ்க்கும் புறவிதழ்க்கும் இடைப்பகுதியாகிய அகப்புறத்தே நிற்கும் தண்டுகளை அகப்புற வுறுப்புக்களாக நிறுத்திப் பூவின் அகத்தே கொண்டமையச் செய்வது அருட்பெருஞ் சோதி. எ.று.

பூவின் நடுவிடம் பூவகம்; அதனைச் சூழ நிற்கும் அக விதழ்க்கும் புறவிதழ்க்கும் இடையிலுள்ள பகுதி அகப்புறம்; புறவிதழின் புறப்பகுதி புறப்புறம் என அறிக. இவ்விதழ்கட் கிடையே நிற்கும் தண்டுகள் பூவின் உறுப்புக்கள் என்பது கருத்து.

புறப்புறப் பூவதில் புறப்புற உறுப்புற

அறத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          690

உரை : பூவின் புறப்புறமும் அப் பூவிற்குப் புறப்புற வுறுப்பாமென முறையே அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பூவின் புறப்புறம் பயனில்லதெனக் கருதாமைப் பொருட்டு, அதனைப் பூவின் புறப்புற வுறுப்பு என்று கூறுகின்றார். பூவால் உளதாகும் பயன் விளைவது குறித்து இப்புறப்புறம், “புறப்புற வுறுப்பு” எனப்படுகின்றது.

பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில்

ஆருயிர் அமைக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          692

உரை : மண்ணுலகில் உடம்பு வியர்வையிலிருந்தும், கருப்பையுற்றும், முட்டையிலிருந்தும் அரிய வுயிர்கள் தோன்றுமாறு அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பார் என மண்ணைக் குறிப்பதால் விதையிலிருந்து தோன்றுவனவும் கொள்ளப்படும். படவே, விதை, வியர்வை, கருப்பை, முட்டை என உயிர் தோன்றுமிடம் நான்காம். இவற்றை முறையே உற்பிசம், சுவேதசம், சராயுசம், அண்டசம் எனவும் கூறப்படும். இந்நான்கையும் நால்வகை யோனிகள் என்பர். இவை எண்பத்து நான்கு நூறாயிரமாக விரியும் என்பர். “உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம்” ( வீழிமிழலை ) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. நின்ற வுடம்பினின்றும் நீங்கினால் மீள எய்தலாகாமை பற்றி, “ஆருயிர்” எனவுரைக்கின்றார்.

ஊர்வன பறப்பன உறுவன நடப்பன

ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          694

உரை : மேற்கூறிய நான்கு யோனிகளில் தோன்றுவன, ஊர்வன, பறப்பன, நிற்பன, நடப்பன என நிலவ அருட்பெருஞ் சோதி. எ.று.

இங்கே ஊர்வன என்றது பாம்பு முதலியவற்றை. பறப்பன - பறவைகள். உறுவன - மரம் செடி கொடிகளாகிய தாவரங்கள். நடப்பன - விலங்குகள். ஆர்தல் - நிறைதல்.

அசைவில அசைவுள ஆருயிர்த் திரள்பல

அசலற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                         696

உரை : மேலே கூறிய உயிர்த் திரளை அசைவுடையன, அசைவில்லாதன என இரண்டாக வகுக்குமாறு அமைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

அசைவில்லாதவை, நிலைத்திணை யெனவும் தாவரம் எனவும் வழங்கும். அசையும் பொருள் சங்கமம் என்றும் இயங்குதிணை என்றும் கூறப்படும். ஆருயிர் - நிறைந்தவுயிர்கள். அசல் - அயல். இவ்வுயிர்களின் வேறே இல்லை என்னுமாறு இருத்தலால், “அசலற” எனவுரைக்கின்றார்.

அறிவொரு வகைமுதல் ஐவகை அறுவகை

அறிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          698

உரை : இவ்வுயிர்கள் ஓரறிவுடையன முதல் ஐந்தறிவும் ஆறறிவும் உடையன என அறிந்து கொள்ளுமாறு அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஓரறிவுடையதை “அறிவொரு வகை” என்று குறிக்கின்றார். இவற்றுள் உற்றுணர்வு ஒன்றே யுடையது ஓரறிவுயிர்; அதனோடு நாவுணர்வு முடையது ஈரறிவுயிர்; அவற்றோடு மூக்குணர்வு முடையது மூவறிவுயிர்; அவற்றோடு கண்ணுணர் வுடையது நாலறிவுயிர்; அவற்றுடன் ஓசை யுணர்வு முடையது ஐயறிவுயிர்; அவற்றுடன் மனவுணர்வு பெற்றது ஆறறிவுயிர் என்றும், “புல்லும் மரனும் ஓரறிவுயிரே”, “நந்தும் முரளும் ஈரறிவினவே”, “சிதலும் எறும்பும் மூவறிவினவே”, “நண்டும் தும்பியும் நான்கறிவினவே”, “மாவும் மாக்களும் ஐயறிவினவே”, “மக்கள் தாமே ஆறறிவுயிரே” என்றும் தொல்காப்பியம் கூறுகிறது. இப்பாகுபாடு அறிவு வகையாற் காணப்படுவ தென்றற்கு “அறிதர வகுத்த” என மொழிகின்றார்.

வெவ்வே றியலொடு வெவ்வேறு பயன்உற

அவ்வாறமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          700

உரை : இவ்வுயிர் வகைகள் வேறு வேறு தன்மையும் வேறு வேறு பயன்படும் பண்பும் அவ்வவ் வகைக்கேற்ப அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

வேறு வேறு என்பது வெவ்வேறென வந்தது என்பர் சிவஞான முனிவர். ஒத்த இயல்பும் ஒத்த பயப்பாடும் உடையவை வேறுவேறு வகைப்படா என்பது பற்றி, “வெவ்வேறியல்” எனவும், “வெவ்வேறு பயன்” எனவும் பிரித்தோதுகின்றார். இவற்றுள் பயனில்லன ஒன்றும் இல்லையென்றற்கு, “வெவ்வேறு பயனுற” என விளம்புகின்றார். பயனுருவாகிய இறைவன் பயனில்லன செய்யான் என்பது சமய நூற் கொள்கை என அறிக.

சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல

அத்தகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          702

உரை : இவ்வுயிர் நிற்றற் கமைந்த வுடம்புகள் சித்திரமாகவும் விசித்திரமாகவும் மிகப் பலவாய் அவ்வற்றிற் கமையப் படைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சிருட்டி - படைக்கப்பட்ட வுடம்புகள். உருவாலும் நிறத்தாலும் பொலிவாலும் இவை அழகிய தோற்றமுடையவாதலின், “சித்திர விசித்திர சிருட்டிகள்” என வுரைக்கின்றார். விசித்திரம் - சிறந்த அழகு. உயிர் வகைக்கேற்ப இவை அமைந்திருப்பதால், “அத்தகை” என விதந்து கூறுகின்றார்.

பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          704

உரை : பெண்ணுடம்பில் ஆண்மைக் கூறும், ஆணுடம்பிற் பெண்மைக் கூறும் பொருந்த அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

“ஆண் பாகம் சேராது பெண்ணுருவப் படாது; பெண் பாகம் சேராது ஆணுருவப் படாது” என்று உபதேசப் பகுதி கூறுவதால், “பெண்ணினுள் ஆணும் ஆணினுட் பெண்ணும் அண்ணுற” என வுரைக்கின்றார். அண்ணுறல் - பொருந்துதல். “ஆகாசத்திற் பிருதிவி தோன்றுவது போல் ஸ்திரீ பாகமாகிய பிருதிவியில் ( ஆண்பாகமாகிய ) ஆகாசமும் தோன்றும்” என்பது வடலூர் வள்ளலின் உபதேசம்.

பெண்ணினுள் மூன்றும் ஆணினுள் இரண்டும்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          706

உரை : பெண்ணிடத்தில் சத்தி விளக்கம் மூன்றும் ஆணுடம்பில் இரண்டுமாகப் பொருந்தப் படைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சத்தி விளக்கம் என்பது தொழிற்பாடு. தொழில் வகையிற் கிரியா சத்தியின் கூறுகளாகிய படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றும் பெண்ணுடம்பிலும், மறைத்தல் அருள் என்ற இரண்டும் ஆணுடம்பிலும் உள்ளனவாதலால், “பெண்ணினுள் மூன்றும், ஆணினுள் இரண்டும் அண்ணுற வகுத்த” என அறிவிக்கின்றார். கருவை உருவாக்குதல் படைத்தல் எனப்படுகிறது. கருத்தின்மையாலும் மாறான செயல்களாலும் கருவைச் சிதைத்தல் அழித்தலாகும்.

பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும்

அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          708

உரை : பெண்ணுடம்பில் விந்து விளக்கம் நான்கு பங்கும் ஆணுடம்பில் மூன்று பங்கும் நன்கு பொருந்த அமைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

பெண்ணுடம்பில் சுரக்கும் சுரோணிதத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கும், ஆணுடம்பில் சுரக்கும் சுக்கிலத்தில் ஆகாசம், பிரகிருதி, ஆன்ம வுணர்வு என்ற மூன்றும் உள்ளன என வுரைப்பதும் உண்டு. இவற்றின் இயல்புகளை உபதேசப் பகுதியிலும், சன்மார்க்க ஞானிகளிடத்தும் கேட்டறிந்து கொள்க. ஈண்டு விரிப்பிற் பெருகும்.

பெண்ணியல் ஆணும் ஆணியல் பெண்ணும்

அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          710

உரை : பெண்ணுருவில் ஆண்மையை அவாவுவனவும், ஆணுருவில் பெண்மைத் தன்மையை அவாவுவனவும் பொருந்த அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பெண்மையை அவாவும், ஆண்மையைப் பேடு எனவும், தன்மை திரிந்தவை எனவும் கூறுவர். இவர்களைப் பேடிகள் என்றும், அலிகள் என்றும் கூறுவதுண்டு; தத்துவா பாசிகள் என்று உபதேசப் பகுதியும் குறிக்கின்றன.

பெண்திறல் புறத்தும் ஆண்திறல் அகத்தும்

அண்டுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          712

உரை : புறவுருவாகிய பெண்மைக் கூறு புறத்திலும் அகவுருவாகிய ஆண்மைக் கூறு அகத்திலும் பொருந்த அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

புற வுருவைத் தூல தேக மென்றும், அகவுருவைச் சூக்கும தேகமென்றும், சூக்கும தேகம் இயக்கத் தூல தேகம் இயங்குமென்றும் கூறுவர். தூல தேகம் பெண் வயிற்றில் உருவாவதால் பெண் திறல் எனவும், சூக்கும தேகம் ஆற்றல் உருவாய் இயக்குவதால் அதனை ஆண் திறல் எனவும் குறித்தருளுகின்றார். அண்டுதல் - அண்ணுதல்; அஃதாவது பொருந்துதல். “உயிர் தந்தான் தந்தை உடல் தந்தாள் அன்னை செயிர் தந்த திவ்வுலகச் சேர்க்கை” என வரும் பழைய வெண்பாவால் இவ்வுண்மையறியப்படும்.

பெண்ணியல் மனமும் ஆணியல் அறிவும்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          714

உரை : பெண்மைக் கூறாகிய மனமும் ஆண்மைக் கூறாகிய அறிவும் இனிது பொருந்த அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பெண்மை யியல்பு மாயா காரியமாய் மன முதலிய கருவிகளைப் பயத்தலின், “பெண்ணியல் மனம்” என்றும், அறிவு உயிரின் கண்ணதாய் அதன் குணமாய் நிலவுதலால் “ஆணியல் அறிவு” என்றும் இயம்புகின்றார். அண்ணுறல் - நன்கு பொருந்துதல்.

தனித்தனி வடிவினும் தக்கஆண் பெண்இயல்

அனைத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          716

உரை : தனித்தனியாக வுள்ள உயிர்ப் பொருள் எல்லாவற்றினும் அதனதன் தகுதிக்கொப்ப ஆணியலும் பெண்ணியலும் பொருந்தியிருக்குமாறு அமைத்தருளுவது அருட்பெருஞ் ஜோதி. எ.று.

அறிவு இச்சை தொழில் என்ற மூவகைச் சத்திகளுள் அறிவியற் சத்தி ஆணாகவும் தொழிலியற் சத்தி பெண்ணாகவும் இச்சை இரண்டிலும் விரவியிருக்கின்றன என்பர். நேர்மாறான அறிவும் செயலுமாகிய சத்திகள் நேர்பட்டாலன்றிப் பொருட்கு உருவும் பண்பும் தொழிலும் உளவாகா என்பது அறிவியலறிஞர் கண்ட வுண்மை. அதனால் “தக்க ஆண் பெண்ணியல் அனைத்துற வகுத்த அருட்பெருஞ் சோதி” என்று கூறுகின்றார்.

உனற்கரும் உயிருள உடலுள உலகுள

அனைத்தையும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          718

உரை : எண்ணுதற் காகாத உயிரினங்களும் அவ்வவற்றிற்குரிய உடம்புகளும், அவற்றோடு கூடி வாழ்தற் கமைந்த உலகங்களும் ஆகிய யாவற்றையும் அமைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

இறைவன் படைப்பினுள் எண்ணிறந்த உயிரினங்களும் அவற்றின் வாழ்க்கைக்கமைந்த உலகங்களும் உள்ளன என்பது கருத்து. அவற்றின் தொகைகளையும் வகைகளையும் விரிவுகளையும் பவுட்கர முதலிய சிவாகமங்களிலும் மாபாடியங்களிலும் பரக்கக் காணலாம். உனல் - எண்ணுதல்.

ஓவுறா எழுவகை உயிர்முதல் அனைத்தும்

ஆவகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி                                          720

உரை : எழுவகையான பிறப்பை யுடைய உயிர்ப்பொருள் அனைத்தும் இடையறவு படாமல் வாழுமாறு அமைத்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

எழுவகை உயிர் முதல் அனைத்தும் ஓவுறா ஆவகை வகுத்த என இயையும். ஓவுறல் - இடையறவு படுதல். “ஓவற விமைக்கும் சேண்விளங் கவிரொளி” ( முருகு ) எனச் சான்றோர் வழங்குதல் காண்க. “ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம், நீர்ப்பறவை நாற்காலோர் பப்பத்துச் - சீரிய, பந்தமாம் தேவர் பதினாலயன் படைத்த, அந்தமில் சீர்த்தாவரம் நாலைந்து” ( குறள். பரிமே. 63 ) என வரும் மேற்கோளால் அறிக. உயிர் முதல், உயிர் நின்று வாய்தற் கமைந்த உடம்பு. உடம்பொடு கூடாத வுயிர்க்கு வாழ்வில்லையாதலால், உடம்பை உயிர் முதல் என உரைக்கின்றார். பிறப்பு வகையும் உடம்பாகிய முதலைக் கொண்டே பகுத்துணரப்படும். ஆவகை - வாழும் வகை.

பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்

ஐபெற அமைத்த அருட்பெருஞ் ஜோதி                                          722

உரை : உயிரினங்களைக் கருப்பை யிடமாகவும் முட்டையிடமாகவும் மண்ணிடமாகவும் வியர்வை யிடமாகவும் தோற்றுவித்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பை - கருப்பை. கருப்பையில் தோன்றுவனவற்றைச் சராயுசம் என்பர்; முட்டையில் தோன்றுவனவற்றை அண்டசம் என்றும், மண்ணிற் றோன்றுவன உற்பீசம் என்றும், வேர்வையில் தோன்றுவன சுவேதசம் என்றும் வழங்குவர். ஐ - தோற்றம். இவற்றை நால்வகைத் தோற்றம் என்பதுண்டு. அருமை பற்றி உயிரை “ஆருயிர்” என்று சிறப்பிக்கின்றார்.

தாய்கருப் பையினுள் தங்கிய உயிர்களை

ஆய்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          724

உரை : தாயினுடைய கருப்பாசயத்துள் இருந்து உருவாகும் உயிரினங்களைச் செம்மையாகக் காத்தருள்வது அருட்பெருஞ் சோதி. எ.று.

தாயுயிரின் கருப்பை கருப்பாசயம் எனவும் வழங்கும். கருப்பையில் தனது உடம்பு முழுவுரு வெய்தும் வரையில் இருந்து வளர்வது பற்றி, “கருப்பையில் தங்கிய வுயிர்” என்று இயம்புகின்றார். முழுவுரு நிரம்பும் வரையில் கருப்பையில் இருத்தலால் “தங்கிய” எனல் வேண்டிற்று. தாயின் உடல் இயக்கத்தால் கருப்பை சிதைதற்குரிய வாய்ப்புக்கள் பல இருத்தல் பற்றி, “ஆய்வுறக் காத்தருள் அருட்பெருஞ் சோதி” என வுரைக்கின்றார். கருப்பையில் எய்தும் துன்பங்களை, “மானுடப் பிறப்பினுள் மாதா வுதரத், தீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும், ஒருமையிற் பிழைத்தும், மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும், ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும், அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும், ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும், ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும், எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும், ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும், தக்க தசமதி தாயொடு தான்படும், துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்” ( போற்றித் ) என மாணிக்கவாசகர் முறைப்படுத்துரைப்பது காண்க.

முட்டைவாய்ப் பயிலும் முழுஉயிர்த் திரள்களை

அட்டமே காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          726

உரை : முட்டைக்குள் இருந்து வளரும் உயிரினம் முழுதையும் விடாது நின்று காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

முட்டைக்குள் இருந்து உரு நிறைவது விளங்க, “முட்டையிற் பயிலும்” என வுரைக்கின்றார். உயிர்த் திரள் முழுதும் எனற்பாலது “முழு வுயிர்த்திரள்” என மாறி நின்றது. அடம் என்பது அட்டம் என விரிந்தது. விடாது நின்று காப்பது தோன்ற, “அட்டமே காத்தருள் அருட்பெருஞ் சோதி” என்று கூறுகின்றார். விடாது நிற்றலை அடம் செய்தல் என்பது உலகவழக்கு. அடம் செய்வதால், இடையீடுகள் கெட்டழிவது பற்றி இவ்வாறு வழங்குகிறதென அறிக.

நிலம்பெறும் உயிர்வகை நீள்குழு அனைத்தும்

அலம்பெறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          728

உரை : நிலத்தின்கண் உருவாகும் உயிரினத்தின் தொகை முற்றும் அமைவாகக் காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

எண்ணுந்தோறும் எண்ணிறந்து பெருகுவதால், உயிரினத்தை “உயிர் வகை நீள்குழு” எனக் குறிக்கின்றார். அலம் பெறல் - அமைவுறல்; அஃதாவது கேடின்றி வாழ்தல். “அலம்வர அடியேற் கருள்வாயே” ( திருப்புகழ் ) என்பது காண்க. அலம் - வருத்தமில்லாமையுமாம்.

வேர்வுற உதித்த மிகும்உயிர்த் திரள்களை

ஆர்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          730

உரை : வியர்வை யடியாகத் தோன்றி யுருவாகும் உயிரினங்களை அன்புடன் காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

வியர்வை - வேர்வை; வேர்வு எனவும் வழங்கும். உடலின் உள்ளுறு அழுக்கினை வெளிப்படுத்தும் உப்பு நீர். அந்நீரிலும் அழுக்கிலும் உளவாதலின், இவ்வுயிரினம், சுவேசம் எனப்படுகின்றன. அழுக்கில் தோன்றுவன எனப் புறக்கணியாது காத்தலால், “ஆர்வுறக் காத்தருள்” என்று உரைக்கின்றார்..

உடலுறு பிணியால் உயிர்உடல் கெடாவகை

அடலுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          732

உரை : உடம்பின்கண் உண்டாகும் நோய்களால் உடம்பும் உயிரும் கெடாதவாறு வன்மையுற நின்று காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

காற்று, நெருப்பு, நீர், நிலம் முதலியவற்றால் உடம்பின்கண் உண்டாகும் நோய்கள். மருந்து வகையாலும் சுகாதாரக் காப்புக்களாலும் காக்கப்படாவிடில் தம்மிற் பெருகி உடம்பையும் அதன்கண் நிற்கும் உயிரையும் கெடுக்கும் என்பது உலகறிந்த உண்மை. காப்பானவற்றால் வன்மையுற நின்று காத்தல் பற்றி, “அடலுறக் காத்தருள் அருட்பெருஞ் சோதி” எனவுரைக்கின்றார். காத்தருள் என்பதற்கு உடம்பைக் காத்து உயிர்க்கு அருள் புரிவது எனப் பொருள் கூறுவதும் பொருத்தமாம்.

சிசுமுதல் பருவச் செயல்களின் உயிர்களை

அசைவறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          734

உரை : குழவிப் பருவம் முதலாக வுள்ள காலங்களில் அக்குழந்தைகளின் செயல் வகையால், குழந்தைகட்கு ஊறுண்டாகாதவாறு உயிர்களை வருத்தமறக் காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

தொடக்கமாதல் பற்றிக் குழந்தைப் பருவத்தை எடுத்துக் கூறினாரேனும், ஏனை எல்லாப் பருவங்களும் கொள்ளப்படும். பருவம் தோறும் செயல் வகைகள் வேறுபட்டுப் பெருகி உடம்புக்கு மெலிவும் நோயும் செய்தலால், “சிசு முதற் பருவச் செயல்கள்” எனத் தெரிவிக்கின்றார். சிசு - குழந்தை; இது குழவி யெனவும் வழங்கும். குழவிப் பருவத்தே செயல்களாலும், வளர்ந்த பருவத்தில் சொற் செயல் நினைவுகளாலும் நோயும் துன்பமும் உண்டாகும். அசைவு - தளர்ச்சி.

உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும்

அயர்வறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          736

உரை : உயிர் நின்ற உடம்பையும், உடம்பினுள் தங்குகின்ற உயிரையும் தளர்வுறாமற் காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

உயிர் நிற்கும் காலத்தில் அதன் வழி நின்று உடம்பு ஓய்வின்றி யுழைப்பதும், உடம்பின்கண் தங்கும்போது அதனினின்று நீங்காதவாறு உயிர், தனது உணர்வு முழுதும் தற்காத்தலிலும் உய்தி பெறுவதிலும் கண்ணும் கருத்துமாய் இருத்தலால், உயிர் தளர்ந்து மெலியாவண்ணம் காத்து நிற்பது திருவருளாதலால், அவ்வுண்மை விளங்குதற் பொருட்டு, “அயர்வறக் காத்தருள் அருட்பெருஞ் சோதி” என்று கூறுகின்றார்.

பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை

ஆடுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          738

உரை : உடம்பின்கண் தங்கும் உயிரினம் படுகின்ற அவத்தைகள் பலவற்றினும் கெடுவதின்றி நலம் பெறக் காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

உடம்பினுள் உறையும் உயிர், சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் எனப் பொதுவாகக் கூறப்படும் அவத்தைகள் ஐந்தாம். சாக்கிராவத்தையில் கருவிகள் யாவற்றோடும் கூடி, உயிர் புருவ மத்தியில் நின்று அறிவன அறிந்து சொல்வன சொல்லிச் செய்வன செய்யும்; சொப்பனாவத்தையில் மன முதலிய கரணங்களோடும் தசவாயுக்களோடும் கூடிக் கழுத்தில் நின்று உயிர் காரியப்படும்; சித்தம் ஒன்றொழிய, ஏனைய கருவிகளின் நீங்கி இதயத்தில் நிற்கும் நிலை சுழுத்தி என்பர். பிராணவாயு ஒன்றினோடே உந்தியில் ஒடுங்குவது துரியம்; மூலாதாரம் இடமாக நிற்பது துரியாதீதம். புருவ மத்தியிலிருந்து மூலாதாரம் நோக்கிச் செல்வது கீழாலவத்தை; ஆதரத்திலிருந்து புருவமத்திக்கு மேனோக்கிச் செல்வது மேலாலவத்தை. இதனை, “புருவ மத்தியத்தே புலன் கரணங்கள் பொருந்தியபொழுது, சாக்கிரமாம், கருவியிற் றூக்கம் போகி மற்றவை தாம் களத்தினில் நின்றிடு தசை கனவாம்; இருதயத்தெல்லாம் இறந்திடச் சித்தம் ஒன்றிட நின்றது சுழுத்தி, ஒருவி மற்றது நாபியினில் நால்விரலின் உம்பராய் நிற்பது துரியம்” என்று பெரியோர் கூறுவது காண்க. மூலாதாரத்தில் ஆணவ மலம் மறைப்ப நிற்பது துரியாதீதம் என்பர் (ஞானா). இவ்வவத்தைகள் உடம்பின்கண், நிகழ்ந்தவண்ணமிருத்தலால், ஊறின்றி உயிர் உணர்வனுபவம் பெறுவது விளங்க, “ஆடுறக்காத்தருள்” என மொழிகின்றார்.

முச்சுட ராதியால் எச்சக வுயிரையும்

அச்சறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          740

உரை : சூரியன், சந்திரன், நெருப்பு என்ற மூன்றினாலும் எல்லாவுலகத்து உயிர்களையும் அச்சமின்றி வாழுமாறு காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

முச்சுடர் - சூரியன், சந்திரன், நெருப்பு என்ற மூன்றுமாம். அண்டந்தோறும் இம்மூன்றும் உளவாதல் தோன்ற, “எச்சகவுயிரையும்” என இசைக்கின்றார். சகம் - உலகம்; அண்டமுமாம். அச்சம் தருவனவாயினும், சூரியன் முதலிய மூன்றும், உயிர்கள் அச்சமின்றி வாழ உதவுகின்றன என்பது கருத்து.

வான்முகில் சத்தியால் மழைபொழி வித்துயிர்

ஆனறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி 742

உரை : தனது சிவசத்தியால் வானத் துலவும் முகிற் கூட்டத்தை நிலத்தில் மழையைப் பொழியச் செய்து உயிர்களின் துன்பமறக்காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சிவமாகிய பரம்பொருளின் சத்தி பராசத்தி யென்றும், சிவசத்தி என்றும் வழங்கும். மாயையைக் கலக்கி உலகுகளைப் படைத்துக் காத்து ஒடுக்குவது அச்சிவசத்தியாதலால், அதனைச் “சத்தி” எனக் குறிக்கின்றார். பூவிற் சிறந்த தாமரையைப் “பூ” என்பதுபோல, வான் முகில் - வானத்தில் உலவும் மேகக் கூட்டம். நிலத்திலுள்ள நீரை முகந்து சென்று வானத்திற் பரந்து இருண்டு மழையைப் பொழியச் செய்வது சிவசத்தி என்றற்கு, “சத்தியால் வான்முகில் மழை பொழிவித்து” என வுரைக்கின்றார். ஆனம் - துன்பம்; குற்றமுமாம். மழையில்லையாயின் உளதாகும் துன்பத்தைப் போக்குவது ஈண்டு “உயிர் ஆனறக் காத்தருள்வது” எனக் கூறப்படுகிறது.

இன்புறு சத்தியால் எழில்மழை பொழிவித்

தன்புறக் காத்தருள்அருட்பெருஞ் ஜோதி                                          744

உரை : உயிர்கள் இன்ப மெய்துவிக்கும் தனது அருட் சத்தியால் உலகை அழகுறுவித்துத் துன்ப மின்றாமாறு காத்தருள்வது அருட்பெருஞ் சோதி. எ.று.

முன்பு உயிர்கள் ஆனறக் காத்தருள்வது அருட்பெருஞ் சோதி என்றாராகலின், ஈண்டு அவ்வுயிர்கட்கு வாழிடமாகிய உலகம் வளமும் அழகும் கொண்டு விளங்கச் செய்வது அச்சிவசத்தியே என்பாராய், “எழில் மழை பொழிவித்து” என்று கூறுகின்றார். படைத்தல் மூன்று தொழில்களையும் செய்வதாயினும், ஒடுக்கும் சத்தி வேறு, காக்கும் சத்தி வேறு, படைக்கும் சத்தி வேறு என நிற்றலின், வேறுபாடு புலப்படுத்தற்குத் திருவருட் சத்தியை, “இன்புறு சத்தி” என எடுத்து மொழிகின்றார். உலகு வளமும் அழகும் பெறுதலால், “எழில் மழை” என்று புகழ்கின்றார்.

எண்இயல் சத்தியால் எல்லா உலகினும்

அண்உயிர் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          746

உரை : தனது சத்தி சங்கற்பத்தால் எல்லா வுலகங்களிலும் வாழ்கின்ற உயிர்களை நன்கு காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஏனை யுயிர்களைப் போலக் கருவி கரணங்களைக் கொண்டு செயல் புரியாமல் தனது சங்கற்பத்தாலே சத்திகள் விரிந்து படைத்தல் முதலிய பணிகளைச் செய்வது தெரிவித்தற்கு, “எண்ணியற் சத்தியால் எல்லா வுலகினும் அண்ணுயிர் காத்தருள் அருட்பெருஞ் சோதி” எனவுரைக்கின்றார். உலகங்கள் எண்ணற்றவையாயினும் அவையெல்லாம் அடங்க, “எல்லா வுலகினும்” எனவும், உலகங்கள் அனைத்தினும் எண்ணிறந்த உயிர்கள் வாழ்கின்றன என்பாராய், “அண்ணுயிர்” எனவும் ஓதுகின்றார்.

அண்டப் புறப்புற அமுதம் பொழிந்துயிர்

அண்டுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          748

உரை : அண்டங்களில் அகத்தும் அகப்புறத்தும், புறத்தும், புறப்புறத்தும் வாழும் உயிர்கட்குத் தனது திருவருளாகிய அமுதத்தை நல்கி இனிது நிறைந்து வாழக் காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

“அண்டப் புறப்புறம்” என்றதனால் அண்டங்களின் அகமும் புறமும் அகப்புறமும் வருவிக்கப்பட்டது. இஃது உபலக்கணம் எனப்படுவது. திருவருள் அமுதம் எனப்படுவது பற்றி “அமுதம் பொழிந்து” எனக் கூறுகின்றார். உயிர்கள் உணர்வு வடிவன என்றாலும் திருவருள் ஞானவொளி பரவினாலன்றி வாழ்வாங்கு வாழ்ந்து உய்தி பெறலாகாமையால், “உயிர் காத்தருள் அருட்பெருஞ் சோதி” என்று இயம்புகின்றார். அண்டுதல் - நெருங்குதல்; “அண்டி வாழ்கிறான்” என்றாற் போல.

தேவரை எல்லாம் திகழ்புற அமுதளித்

தாவகை காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          750

உரை : அண்டங்கட்குப் புறத்தேயுள்ள தேவருலகத்துத் தேவர்கட்குத் தனது புறவருளாகிய அமுதத்தை வழங்கி அவர்கள் உய்தி பெறக் காத்தருள்வது அருட்பெருஞ் சோதி. எ.று.

அண்டங்கட்குப் புறத்தேயுள்ளது அமரருலகமாதலால் அவர்கட்கு வழங்கும் அருளமுதம் வேறாதல் விளங்கப் “புற வமுதம்” என்று புகல்கின்றார். தேவர்கட்கு நல்கும் திருவருள் ஞானம் புறவமுதம் என்பது கருத்து. அந்த அமுதம் அவர்கட்கு இன்றியமையா தென்றற்குத் “திகழ் புறவமுது” என்று தெரிவிக்கின்றார்.

அகப்புற அமுதளித் தைவரா திகளை

அகப்படக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          752

உரை : அகப்புறப் பகுதியிலுள்ள அண்டங்களில் வாழும் உயிர்கட்கு அகப்புறமாகிய அருளமுதத்தை நல்கி அங்கே அருளாட்சி செய்யும் ஐவகைத் தேவர் முதலியோர்கள் உட்படக் காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

தேவர்கட்குப் புறவமுதம் வழங்கியது போல அகப்புற வுலகினர்க்கு வழங்குவது “அகப்புற அமுதம்” எனப்படுகிறது. ஆங்கே அருளரசு புரிபவர், அயன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் ஆகிய ஐவராதலின், அவர்களை “ஐவராதிகள்” என்று கூறுகின்றார். அவர்கள் ஏவின செய்யும் தேவர் பலர் உளரென்பது புலப்படுத்தற்கு “ஆதிகள்” என்கின்றார். ஆதிகள் - முதலியோர்கள். காக்கப்படும் உலகங்களில் காவல் புரிவோரும் உட்படுதலால், “அகப்படக் காத்தருள் அருட்பெருஞ் சோதி” என இயம்புகின்றார்.

தரும்அக அமுதால் சத்திசத் தர்களை

அருளினிற் காக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          754

உரை : அகத்தே அமைந்த அண்டங்களில், வாழும் ஆன்மாக்களுக்கு அகமாகிய திருவமுதம் அளித்து அங்கே ஆட்சி செய்யும் சத்திகளையும் சத்திமான்களையும் திருவருளாற் காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

அகப்பகுதியில் அடங்கும் அண்டங்கள் “தரும் அகம்” எனவும், ஆங்கு வழங்கப்படும் திருவருள் ஞானமாகிய அமுதம் “அகவமு” தெனவும் குறிக்கப்படுகின்றன. அந்த அகவண்டங்களில் வாழ்வார்க்கு ஆவன செய்யும் தேவர்கள், சத்தி வடிவிலும் சத்திமான்கள் வடிவிலும் திகழ்வதால் அவர்கள், “சத்தி சத்தர்கள்” எனக் கூறப்படுகின்றனர். “தீயின் சத்தியொன்றே கூடுதல் அடுதல் முதலிய தொழில் வேறுபாட்டால் சுடுஞ் சத்தி, அடுஞ் சத்தி என்றற்றொடக்கத்துப் பலவேறு வகைப்படுமாறு போலச் சிவசத்தியொன்றே காரிய வேறுபாட்டால் பராசத்தி, திரோதான சத்தி, இச்சா சத்தி, ஞான சத்தி, கிரியா சத்தி எனப் பஞ்ச சத்திகளாயும், முறையே ஐந்தும் நான்கும் எட்டும் பதின்மூன்றும், எட்டுமாகிய கூறுபாடுடைய ஈசான முதற் சத்தி யோசாதம் ஈறாகிய பஞ்ச சத்திகளாயும் ஆரணி சனனி ரோதயித்திரி என்ற மூவகைச் சத்திகளாயும், நிவிர்த்தி பிரதிட்டை முதலிய பஞ்ச சத்திகளாயும், வாமை சேட்டை முதலிய அட்ட சத்திகளாயும், பரவாகீசுவரி அபரவாகீசுவரி, மனோன்மணி, மகேசை, உமை, திருவாணி என்ற எழுவகைச் சத்திகளாயும், அத்தியான்மிகமான உன்மனை சமனை முதலிய கலைகளாயும் இன்னும் பல வேறுவகைப்பட்டு நிற்கும்; அவ்வச் சத்திகளோடு புணர்ந்த ( சத்திமானாகிய ) சிவமும் அங்ஙனம் பலவேறு வகைப் பெயர் பெற்று நிற்கும்; அவ்வச் சத்திகட்கிடமாய விந்துவும் அங்ஙனம் பலவேறு வகையால் விருத்திப்பட்டு நிற்கும்; இவற்றின் இயல்பெல்லாம் ஆகமங்களுட் காண்க” என்று சிவஞான மாபாடியம் ( சிவ. போ. சூ. உ : அதி. 4 ) உரைப்பது காண்க. இச்சத்தி சத்தர்களை அதிட்டித்து நின்று பரசிவம் இயக்குதற்குக் காரணம் அவனது பரம கருணையாதலால், “அருளினிற் காக்கும்” என அறிவித்தருளுகின்றார் வடலூர் வள்ளல்.

காலமும் நியதியும் காட்டிஎவ் வுயிரையும்

ஆலுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          756

உரை : காலம் நியதி என்ற இருவகைத் தத்துவங்களையமைத்து, அவற்றின்படி உயிர்களனைத்தும் செய்வினைகளின் போக நுகர்ந்து வாழக் காத்தருள்வது அருட்பெருஞ்சோதி. எ.று.

“கலை வித்தை அராகங்களால் தொழிலும் அறிவும் இச்சையும் விளங்கிப் போக நுகர்ச்சிக்கட் சென்ற ஆன்மாக்களுக்குக் கணம், இலவம், துடி, நாழிகை என்றற்றொடக்கத்தாற் பலவேறு வகைப்பட்டுப் போக வரையறைப்படுத்துவது கால தத்துவம்” என்றும், “கலை முதலிய மூன்றானும் தொழில் அறிவு இச்சை விளங்கிப் போக நுகர்ச்சிக்கட் செல்லும் ஆன்மாக்கள் உயர்ந்த போகத்தின்கண் விழைவும், இழிந்த போகத்தில் வெறுப்பும் உடையராவரன்றே; அதனால் பிறரால் ஈட்டப்படும் நல்வினைப் பயனைக் கவரவும், தம்மால் ஈட்டப்படும் தீவினைப் பயனை நீக்கவும் எண்ணுதலுடைமையின் அங்ஙனமாக வொட்டாது அவரவரான் ஈட்டப்படும் வினையின் பயனை அவரவரே நுகருமாறு அரசராணைபோல் நியமித்து நிறுத்துவது நியதி தத்துவம்” என்றும் சிவஞான மாபாடியம் உரைப்பது காண்க. வினை செய்து போக நுகர்தற்கென்றே உயிர்கள் உலகங்களில் தோன்றுகின்றனவாதலால், அந்நுகர்ச்சிக்குக் காலமும் நியதியும் இன்றியமையாமையின் அவற்றை முதற்கண் எடுத்துரைக்கின்றார். ஆலுறல், போக நுகர்ந்து இன்பமும் துன்பமும் எய்துதல். இன்பமும் துன்பமும் போகமாம் என்று போக காரிகை என்ற நூல் கூறுகின்றமையறிக. போக நுகர்ச்சி பிறழாவாறு காத்தாதளுல் விளங்கக் “காத்தருள் அருட்பெருஞ் சோதி” என இசைக்கின்றார்.

விச்சையை இச்சையை விளைவித் துயிர்களை

அச்சறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          758

உரை : விந்தை, அராகம் என்ற கலைகளைத் தோற்றுவித்து உயிர்களை அஞ்சாமற் போகங்களை நுகர்வித்தாள்வது அருட் பெருஞ் சோதி. எ.று.

வித்தை விச்சை எனவும், அராகம் இச்சை யெனவும் வந்தன. வித்தையால் அறிவும், இச்சையால் விழைவும் உயிர்கட்குத் தொழிற்படுகின்றன என அறிக. அறிவும் இச்சையும் தோன்றாத போது உயிர்கள் வினைமேற் செல்லாவாதலின் இரண்டையும் எடுத்துரைக்கின்றார். அச்சமுண்டாயின், துன்ப நுகர்ச்சி தடைப்படுமாதலால் “அச்சறக் காத்தருள்” என்று இயம்புகின்றார். அச்சம் - அச்சு என வந்தது.

போகமும் களிப்பும் பொருந்துவித் துயிர்களை

ஆகமுட் காக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          760

உரை : போக நுகர்ச்சியையும், அதனால் மயக்கத்தையும் எய்துவித்து உயிரினத்துக்குப் பலவேறு பிறப்புக்களில் அவாவையுண்டாக்கி யருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

போக நுகரும் உயிர்கள் அதனால் உண்டாகும் இன்பமும் துன்பமுமாகிய இரண்டினும் அழுந்தி அறிவு மயங்குதலாம், “போகமும் களிப்பும் பொருந்துவித்து” என்று புகல்கின்றார். போகத்தால் மயக்காத போது போகானுபவம் இல்லையென அறிக. போக நுகர்வது உயிராயினும், அவ்வுயிர் நின்ற உடம்பையே போகமாகக் கருதி மயங்குவது இங்கே களிப்பு எனப்படுகிறது. அதனால் உயிர்கட்கு அவா வுண்டாகிப் பல பிறப்புக்கட்கு ஏதுவாதலின், “ஆகம் உட்காக்கும் அருட்பெருஞ் சோதி” என அறிவுறுத்துகின்றார். ஆகம் - அவா காரணமாக உளதாகும் பிறப்பு. உள்ளுறுவது உயிராதலால், “உட்கு” என மொழிகின்றார். “அருந்தின்பத் துன்பம் உள்ளத் தறிவினுக்கராகமாதி தரும் தன்வேதனைக் காட்சி” ( சிவ. சித்தி ) என்று அருணந்தி சிவம் கூறுவது காண்க. அவா பிறப்புக் கேதுவென்பதைத் திருவள்ளுவர், “அவா என்ப எல்லா வுயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பினும் வித்து” ( குறள் ) என்பது காண்க.

கலைஅறி வளித்துக் களிப்பினில் உயிரெலாம்

அலைவறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          762

உரை : கலை வித்தை முதலிய தத்துவங்களால் நல்லறிவு தந்து ஞான வின்பக் களிப்பின்கண் உயிர் வகைகள் பலவும் இடர்ப்படாது வாழுமாறு காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

கலையாகிய தத்துவத்தால் செயலறிவும், வித்தியா தத்துவத்தால் நூலறிவும் பெறப்படுதலால், “கலையறி வளித்து” என்றும், செயற்கையும் இயற்கையுமாகிய அறிவுகளால் உயிர்கள் இன்பக் களிப்பை எய்துவது கொண்டு, “களிப்பினில்” என்றும் கூறுகின்றார். அலைவு - இடர்ப்பாடு; துன்பமுமாம். கலை முதலிய தத்துவங்களால் ஆன்மாக்கள் ஞானானந்தத்தில் திளைத்து மகிழ்வது பற்றி அவை “வித்தியா தத்துவங்கள்” என ஆகமங்களில் குறிக்கப்படுகின்றன என அறிக.

விடய நிகழ்ச்சியால் மிகும்உயிர் அனைத்தையும்

அடைவுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          764

உரை : சுவை ஒளி முதலிய ஐவகைப் புலனுகர்ச்சிகளால் உலகியற் போகத்தைத் துய்த்துவாழ்ந்துயரும் ஆன்மாக்களை முறையாகக் காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஞானேந்திரியக் கன்மேந்திரியங்களால் எய்தும் புலனுகர்ச்சி “விடயநிகழ்ச்சி” எனப்படுகிறது. கண்ணாகிய இந்திரியத்துக்கு ஒளியும், காதாகிய இந்திரியத்துக்கு ஓசையும், மூக்குக்கு நாற்றமும், வாய்க்குச் சுவையும், மெய்க்குப் பரிசமும் விடயங்களாகும். கண் காது முதலிய ஞானேந்திரியங்களால் ஞானமும், வாய், கை, கால் முதலிய கன்மேந்திரியங்களால் செயலறிவும் எய்துதலால் அறிவுருவாகிய உயிர்கள் அறிவாற்றல் மிக்கு உலகியலிற் சிறப்புறுவது பற்றி, “விடய நிகழ்ச்சியால் மிகும் உயிர்” என விளம்புகின்றார். இந்திரியமாகிய கருவிகளால் முறை பிறழாமல் உயிர்கள் விடயங்களை நுகர்வது உலகியல் வாழ்வாகையால் “அடைவுறக் காத்தருள் அருட்பெருஞ் சோதி” என்று கூறுகின்றார். இதனால், உயிர்கள் விடய போக நுகர்ச்சியால் முறைப்பட வாழ்ந்து உய்தி பெறுவிப்பது திருவருட் பரம்பொருள் என்பது கருத்தாம்.

துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை

அன்புறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          766

உரை : உலகியல் வாழ்வில் உயிர்கட்குத் துன்பத்தைத் தந்து பின்னர் இன்பமெய்துவித்து, ஒன்றன்பால் ஒன்று அன்பு செய்து ஒழுகுமாறு காத்தருள்வது அருட்பெருஞ் சோதி. எ.று.

உலக வாழ்வில் துன்பமும் இன்பமும் இரவும் பகலும் போல விரவிக் கிடத்தலால், “துன்பு அளித்து ஆங்கே சுகமளித்து” என்று சொல்லுகின்றார். “இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும், நண்பகலமையமும் இரவும் போல, வேறு வேறியலவாகி, மாறெதிர்ந்துள” என்பது அகநானூறு. ஆதலால் முதற்கண் “துன்பளித்து” என்றும், பின்னர், “ஆங்கே சுகமளித்து” என்றும் இயம்புகின்றார். “துன்புள தெனினன்றோ சுகமுளது” எனக் கம்பரும் கட்டுரைக்கின்றார். துன்பம் - துன்பு என வந்தது. சுகம் - இன்பம். துன்ப நுகர்வில் இன்பமும், இன்ப நுகர்வில் துன்பமும் விரவுதலால், “ஆங்கே” எனத் தெளிவிக்கின்றார். இன்பமும் துன்பமுமாகிய நுகர்வுகள் எல்லாவுயிர்கட்கும் பொதுவாகப் படர்தலால், அன்புணர்வு பிறப்பது கண்டே, “அன்புற” என மொழிகின்றார்.

கரணேந்தி யத்தால் களிப்புற உயிர்களை

அரணேர்ந் தளித்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          768

உரை : மன முதலிய கரணங்களாகிய கருவியால் சிந்தித்தல் தெளிதலாகிய செயல்களைச் செய்து உயிர்கள் இன்புறும்வண்ணம் ஆதரவு தந்து காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

மனம், சித்தம், ஆங்காரம், புத்தி என்ற நான்கும் கரணங்களாகும். புறக்கருவிகளான கண் காது முதலிய ஞானேந்திரியங்களுக்கும், கை வாய், கால் முதலிய கன்மேந்திரியங்கட்கும் உள்ளே அருவாய் இருத்தலால், இவை அகக்கரணங்கள் என்றும், அந்தக்கரணங்கள் என்றும் கூறப்படுகின்றன. இந்திரியங்களைக் கருவியெனவும், அந்தக்கரணங்களைக் கரணங்கள் எனவும் கூறுவதுண்டு. கண் காது முதலிய கருவிகளால் பார்த்தல் கேட்டல் முதலியன நிகழ்வதுபோல மனம் முதலியவற்றால் சிந்தித்தல், தெளிதல் முதலியவை நிகழ்கின்றன என அறிக. கரணங்களாலும் உயிர்கள் அறிவின்பம் நுகர்வது பற்றி, “களிப்புற” என்றும், அஃது இனிதுண்டாக ஆதரவு புரிவதை “அரணேர்ந்து” என்றும் இசைக்கின்றார்.

எத்தகை எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்

கத்தகை அளித்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          770

உரை : எவ்வெவ்வுயிர்கள் எவ்வெவற்றை எண்ணுகின்றனவோ, அவ்வவ்வுயிர்கட்கு அவ்வவற்றை நல்கியருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

உயிர்கள் எண்ணிய எண்ணியாங்குப் பெறுவிப்பது அருட் பெருஞ் சோதி என்பது கருத்து. எண்ணுவோர் திண்ணியராகிய வழியே எண்ணிய எண்ணியாங்கு எய்துமாகலின், பின் வருதற்கு வேறாக எடுத்துரைக்கின்றார். எண்ணமும் பேறும் எண்ணும் உயிரின் தகுதிக்கொப்ப அருளுவது புலப்பட, “அத்தகை யளித்தருள் அருட் பெருஞ் சோதி” என வுரைக்கின்றார்.

எப்படி எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்

கப்படி அளித்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          772

உரை : எல்லா வுயிர்களும் எப்படி எண்ணுகின்றனவோ அப்படியே வேண்டுவனவற்றைப் பெறுவித்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

தமக்கு வேண்டுவனவற்றை முன்கூட்டி எண்ணுவது எல்லா வுயிர்கட்கும் இயல்பு; அவை வேண்டுவன அறிந்து வேண்டியபடியே பெற அருளுவது இறைவன் இயல்பு. சிறுபான்மை அப்படியே பெறுவிப்பதில்லையாகலின், “அவ்வுயிர்க்கு அப்படி யளித்தருள் அருட் பெருஞ் சோதி” என்று கூறுகின்றார். எண்ணியது எண்ணியபடியே எய்துமிடத்து உயிர்கட்கின்பமும், இறைவன்பால் பேரன்பும் தோன்றுதலால், அவ்வருட் சிறப்பை ஈண்டு எடுத்து மொழிகின்றார்.

ஏங்கா துயிர்த்திரள் எங்கெங் கிருந்தன

ஆங்காங் களித்தருள் அருட்பெருஞ் ஜோதி                                         774

உரை : உயிரினங்கள் உலகில் எங்கெங்கே இருக்கின்றனவோ அங்கெல்லாம் அவை இல்லையே என ஏங்கி வருந்தாதவாறு வேண்டுவன அளித்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

தாயின் கருப்பையிலும், கல், மண், நீர், காற்று முதலியவற்றினுள்ளும் உயிரினங்கள் வாழக் காண்கின்றோமாயினும், அவை அவ்வவ்விடத்தே இனிது வாழ்வதால், அவற்றிற்கு வேண்டுவன பலவும் இனிது எய்துவது உணரப்படுவதால், “ஆங்காங் களித்தருள் அருட் பெருஞ் சோதி” என வுரைக்கின்றார். ஏக்கமும் வருத்தமும் நிலவுமிடத்து உயிரினம் நெடிது வாழா என்பதுபற்றி, “ஏங்காது” என விதந்து கூறுகின்றார்.

சொல்லுறும் அசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை

அல்லலில் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          776

உரை : ஆகமங்களிற் சொல்லப்படுகின்ற அசுத்த மாயா புவனங்களில் வாழும் உயிரினங்கட்கு அவ்வசுத்த புவன நிலைகட்கொப்பத் துன்பமும் இன்பமும் பெறுவித்து வாழச் செய்வது அருட்பெருஞ் சோதி. எ.று.

பௌட்கரம், மிருகேந்திரம் முதலிய சிவாகமங்களில் அத்துவாக்களை யுணர்த்தும் பகுதிகளில் சுத்த, சுத்தாசுத்தம், அசுத்தம் என மாயையை மூவகைப்படுத்து ஒவ்வொரு வகையிலும் புவனங்கள் உரைக்கப்படுவதால், “சொல்லுறும் அசுத்தம்” என்றும், ஆங்கு வாழும் உயிரினங்களைத் “தொல்லுயி”ரென்றும் சுட்டிக் கூறுகின்றார். அசுத்த புவனம் துன்பம் மிக விரவியதாதலால், “அவ்வகை அல்லலிற் காத்தருள் அருட்பெருஞ் சோதி” என்று அறிவிக்கின்றார். அல்லல் - துன்பம்; அல்வகை - துன்ப நெறி. துன்பம் சிறிதாய போதும் தன்னை மிகுவித்துக் காட்டும் இயல்பினதாகையால், “அல்வகை அல்லலில்” என மிகுத்துக் கூறுகின்றார். போகமாவது துன்பமும் இன்பமும் இரண்டுமாதலால், துன்ப நெறியில் உயிர்களைப் போகம் துய்ப்பிப்பது திருவருட்கு விலக்கன்று என்பது கருத்து.

சுத்தமும் அசுத்தமும் தோய்உயிர்க் கிருமையின்

அத்தகை காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          778

உரை : சுத்தாசுத்த புவனங்களில் வாழும் உயிர்கட்கு இன்பமும் துன்பமும் ஆகிய இருநெறியாலும் அசுத்த புவனத்தவர்கட்கு அருளுவது போல அருள் புரிந்தாதரிப்பது அருட்பெருஞ் சோதி. எ.று.

இன்பமும் துன்பமுமாகிய போகங்கட்குரியவாகிய உயிர்களைச் “சுத்தமும் அசுத்தமும் தோயுயிர்” என்று சொல்லுகின்றார். அசுத்த புவனங்களில் பெறலாகும் போக நுகர்ச்சியை “அத்தகை” என மாட்டெறிந்துரைக்கின்றார்.

வாய்ந்திடும் சித்த வகைஉயிர்க் கொருமையின்

ஆய்ந்துறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          780

உரை : சுத்த மாயா புவனமென வுளதாகும் சுத்த புவனத்து உயிர்வகைகட்கு இன்ப நெறியாகிய ஒன்றினால் அப் புவன போகத்தை நுண்ணிதின் நுகர்வித்துக் காத்தாள்வது அருட்பெருஞ் சோதி. எ.று.

வாய்தல் - உளதாதல். சுத்த மாயா புவனங்களில் உள்ள சுத்தான் மாக்களைச் “சுத்த வகை உயிர்” எனவும், இன்ப நெறி ஒன்றே பற்றி அவர்கள் போகம் நுகர்பவராதல் விளங்க, “ஒருமையின் ஆய்ந்துற” எனவும் இயம்புகின்றார். ஒருமை - ஒன்றென்னும் எண்ணின் மேனின்றது; “மும்மைத் தமிழ்” என்பதுபோல.

எவைஎலாம் எவைஎலாம் ஈண்டின ஈண்டின

அவைஎலாம் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி                                          782

உரை : சுத்தம் சுத்தாசுத்தம் அசுத்தம் என மூவகைப்பட்ட மாயா புவனங்கள் யாவை யாவையோ அவை யனைத்தினும் நிறைந்துள்ள ஆன்மாக்கள் யாவையும் வாழ்வித்தருள்வது அருட் பெருஞ் சோதி. எ.று.

இது முடிந்தது முடித்தல். புவன போகங்களைப் படைத்து உயிர்கட்கு உடல் கரணம் கருவிகளைப் படைத்தளிப்பது இறைவனது அருட்பெருஞ் செயலாதலின், “எவையெலாம் எவை யெலாம் ஈண்டின ஈண்டின” எனத் தொகுத்துரைக்கின்றார். புவனங்கள் தோறும் ஆன்மாக்களை வாழ்வித்தல் திருவருள் என்பது கருத்தென வுணர்க.

அண்டத் துரிசையும் அகிலத் துரிசையும்

அண்டற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          784

உரை : அண்டங்களில் வாழும் உயிர்களின் மலப் பிணிப்பையும், அவற்றின்கண் அடங்கிய அகில வுலக உயிர்களின் மலவழுக்கையும் பொருந்தாவாறு அடக்கியருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

அறிவுருவாகிய உயிர்களை அனாதியே பற்றி நிற்கும் மூல மல அழுக்கு இங்கே “துரிசு” எனப்படுகிறது. அம் மலப் பிணிப்பால் உளதாகும் குற்றத்தைப் போக்குவது பரம்பொருளின் அருள் நலமாகும். அதுவே அண்டப் படைப்புக்கும், அண்டங்களில் அடங்கிய அகில வுலகப் படைப்புக்கும் காரணமாதலின், “அண்டத் துரிசையும் அகிலத் துரிசையும் அண்டற அடக்கும் அருட்பெருஞ் சோதி” எனவுரைக்கின்றார். உயிர் வாழ்க்கைக்கு இடமாதல் பற்றி, அண்டமும் அகிலமும் எடுத்தோதப்படுகின்றன. துரிசின் தொழிற் பாட்டுக்கு இடமும் காரணமாதலால் முதற்கண் அவற்றைக் கூறுகின்றார்.

பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்

அண்டற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          786

உரை : அணு வடிவினவாகிய உயிர்களைப் பிணித்திருக்கும் மலவழுக்கையும், பேரணுவுருவினவாகிய உயிர்களைப் பற்றியிருக்கும் மலவழுக்கையும் விரிய விடாது காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பிண்டம் - சிறிது; அண்டம் பெரியது. அண்டத்தை முன்னர் மொழிந்தமையின், சிறிதாகிய பிண்டத்தை இங்கே கூறுகின்றார். அண்டத்துள் அடங்குவது பிண்டம். சிற்றணுவும் பேரணுவுமாய் உயிருரு வேறுபடுதல் விளங்க, “பிண்டத் துரிசு” எனவும், “பேருயிர்த் துரிசு” எனவும் இயம்புகின்றார். அண்டுதல் - பொருந்துதல். அனாதியே பற்றியிருக்கும் மலவிருள் உயிரினத்தின் அறிவாற்றலைப் பிணித்து மறைத்தலால், “அண்டற அடக்கும்” என அறிவிக்கின்றார். மலப்பிணிப்பு இருளுருவினதாகலின் அதனை யடக்குதற்குத் திருவருளின் பேரொளி வேண்டப்படுதலால், “அருட்பெருஞ் சோதி”யை விதந்துரைக்கின்றார்.

உயிருறு மாயையின் உறுவிரி வனைத்தும்

அயிரற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          788

உரை : உயிரைப் பற்றி மறைக்கும் மாயா மலத்தின் மிக்கு விரியும் ஆற்றல் அனைத்தையும் ஐயமற அடக்கியருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

மூலமலமாகிய அழுக்கைப் போக்குதற்கு மாயையாகிய மலம் புணர்க்கப்படுகிறது. திருவருட் சத்தியின்கண் ஒடுங்கியிருக்கும் பரிக்கிரக சத்தி மாயை என்பர். திருவருள் மாயையைக் கலக்கி உயிர்கட்கு உலகு உடல் கருவி கரணம் போகம் ஆகியவற்றைப் படைத்தளித்தலால், “உயிருறு மாயை” எனவும், மாயா காரியங்களை “மாயை” எனவும் கூறுகின்றார். அவற்றை உயிரோடு புணர்ப்பது திருவருளாதலால், “உறுவிரி வனைத்தும் அடக்கும் அருட்பெருஞ் சோதி” என இசைக்கின்றார். உலகுடல் கருவி கரணங்களாக விரிந்து உயிரைப் பிணித்து மலநீக்கம் பெறுவிப்பது பற்றி, “உறுவிரி வனைத்தும்” என உரைக்கின்றார். இயற்கையாகிய மூலமலத்தை நோக்க, செயற்கையாகிய மாயா மலம் வலி குறைந்ததாகலின், மலவிருளைப் போக்க வல்லதாகுமோ என ஐயுறாமைப் பொருட்டு, “அயிரற வடக்கும்” என்று கூறுகின்றார். அயிர்தல் - ஐயுறல். மாயையிலிருந்து படைக்கப்பட்டு உயிரோடு செயற்கையாகப் புணர்க்கப் படுவது பற்றி, மாயா மலத்தை ஆகந்துகம் என்பர். இயற்கைப் புணர்ப்பாகிய மூலமலம், சகசம் எனப்படுகிறது.

உயிர்உறும் இருவினை உறுவிரி வனைத்தும்

அயர்வற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          790

உரை : உயிரைப் பற்றி நிற்கும் கன்ம மலமாகிய இருவினைப் புணர்ப்பின் விரிந்த செயல்வகையனைத்தையும் உயிர்கள் தளர்வுறாவாறு அடக்கியாள்வது அருட்பெருஞ் சோதி. எ.று.

மாயா காரியப் புணர்ப்பினால் உடல் கருவி கரணம் உலகுகளோடு கூடிய வுயிர், கன்ம மலம் காரணமாக மனம் மொழி மெய்களால்வினை வகை பலவற்றையும் செய்தாலன்றி மலப்பிணிப்பு நீங்காதாகலின், “உயிருறும் இருவினை” என இயம்புகின்றார். வினைவகையனைத்தும் நல்வினை தீவினை யென இரண்டாயடங்குதலால், “இருவினை” என்று கூறுகின்றார். நினைவு, சொல், செயல்களுக்கேற்ப, வினைகள் எண்ணிறந்தனவாகலின், அதனை “உறுவிரிவு” என வுரைக்கின்றார். நன்னினைவு, தீநினைவு, நற்சொல், தீச்சொல், நற்செயல், தீச்செயல் எனவும், பதிநல்வினை, பசுநல்வினை, பாசநல்வினை எனவும், அருட் செயல் மருட்செயல் எனவும் பலவாய் விரிதல் காண்க. கன்ம மலப் பிணிப்பும் மூலமலவிருள் காரணமாக உயிர்கட் குளதாவது என்றற்குத் திருவள்ளுவரும், “இருள்சேர் இருவினை” ( குறள் ) என்பது காண்க. வினை செயல் வகையால் உயிர்கள் தளர்வுறாமைப் பொருட்டு இறைவன் காத்தருளும் உண்மை விளங்க, “அயர்வற அடக்கும் அருட்பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார்.

காமப் புடைப்புயிர் கண்தொட ராவகை

ஆமற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          792

உரை : உயிர்கள் காம வேட்கையின்கண் தொடர்ந்து ஒழுகாதவாறு பசையற அடக்கியாள்வது அருட்பெருஞ் சோதி. எ.று.

மலக் குற்றங்கள் வந்து படிவது கூறிய வடலூர் வள்ளல், இதுமுதல் காம வெகுளி முதலிய குற்றங்கள் சேர்வது பற்றிக் கூறுகின்றார். உயிர்க்கு வேண்டும் உடம்பு தோன்றுதற்கு ஏதுவாகிய காம வேட்கை ஓரளவு வேண்டியதாயினும் அதன்கண் கன்றி நின்று அறிவு மயங்கிக் குற்றமும் நோயும் கொள்ளாதவாறு ஆதரவு செய்கின்றாராதலின், “காமப் புணர்ப்பின்கண் தொடரா வகை ஆமற அடக்கும் அருட்பெருஞ் சோதி” என வுரைக்கின்றார். ஆம் - நீர்; ஈண்டு நீர்ப்பசை குறித்தது. நுகருந்தோறும் இடையறாத வேட்கையை விளைவித்து அந்நுகர்ச்சிக் கண் அறிவை மயக்கிச் செறிவித்தலின் “தொடரா வகை அடக்கும்” என்றும், முற்றவும் ஒழிக்கலாகாததுபற்றி “ஆமற” என்றும் இயம்புகின்றார். ஆமற என்றற்கு வெறுப்புண்டாக என வுரைப்பதுமுண்டு. “காம வெகுளி மயக்கமிவை மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்” ( குறள் ) எனச் சான்றோர் அறிவுறுத்துவது காண்க.

பொங்குறு வெகுளிப் புடைப்புகள் எல்லாம்

அங்கற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          794

உரை : மிகுந்தெழுகின்ற கோபத்தின் அடியாகத் தோன்றும் குற்றங்கள் பலவற்றையும் இனியிடமில்லை யென்னுமாறு அடக்கியாள அருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பொங்குதல் - மிகுதல். சிறிதாய்த் தோன்றி மிகுவது பற்றி, “பொங்குறு வெகுளி” எனக் குறிக்கின்றார். வெகுளி - கோபம். வெகுளி பொங்குமிடத்து அறிவு சோர்ந்து விடுதலால் குற்றங்கள் மிக வுண்டாகின்றன என்றற்கு, “வெகுளிப் புடைப்பு” என்று புகல்கின்றார். அங்கு - இடம் குறிக்கும் சுட்டு மொழி. புடைப்பு - பெருக்கம்.

மதம்புரை மோகமும் மற்றவும் ஆங்காங்

கதம்பெற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          796

உரை : செருக்கும் மோகமும் உலோபம் முதலியனவும் அவ்வப்பொழுது கெட்டொழியுமாறு அடக்கியாள உதவுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

காமம், வெகுளி, உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்ற குற்றவகை ஆறனுள், காம வெகுளி மதம் மோகம் ஆகிய நான்கையும் எடுத்தோதினமையின், எஞ்சியவற்றை “மற்றவும்” எனக் குறித்தொழிகின்றார். மதம் - செருக்கு. வெகுளி காரணமாகத் தோன்றி மெய் வன்மை, பொருள் வன்மை, துணைவன்மை முதலிய வுணர்வுகளால் உளதாகும் செருக்கு மதம் எனப்படுகிறது. மோகம் - மயக்கம். உலோபம் - பொருட் பற்று. அதம் - அழிவு. இவற்றையடக்கியாள்வார்க்கு நலம் பலவும் ஞானமும் இனிது உண்டாதலால், “அதம் பெற அடக்கும் அருட்பெருஞ் சோதி” எனவும், அடக்கியாள உதவுதலால் “அடக்கும்” எனவும் கூறுகின்றார்.

வடுவுறும் அசுத்த வாதனை அனைத்தையும்

அடர்பற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          798

உரை : குற்றம் பொருந்திய அசுத்த வாதனை வகையெல்லாவற்றையும் நெருங்காவாறு அடக்கியாள உதவுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

வாதனை - பழைய நினைவுகள்; வாதனை - வாசனை எனவும் வழங்கும். நன்னினைவுகளைச் சுத்த வாதனை என்றும், தீய நினைவுகளை அசுத்த வாதனை என்றும் கூறுவர். பண்டிருந்து நீங்கிய நற்பொருளையும் நற்செயலையும் நினைப்பது சுத்த வாதனை; தீய பொருளையும் தீச்செயலையும் நினைப்பது அசுத்த வாதனை. இவ் வாதனைகட்கே யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்கள் காரணமென்று மூல சித்தி என்னும் நூலாசிரியர் கூறுகின்றார். இன்பக் காலத்திலும், துன்பக் காலத்திலும், பிறர் நம்மை இகழ்ந்த காலத்திலும் இவ் வாதனைகள் தோன்றும் என அறிஞர் உரைக்கின்றார்கள். இவற்றால் மனத்தின்கண் துன்பமே உண்டாதலால், “இருவாதனையற்று இறந்தான் பெருமை என்சொல்லுவேன் கச்சி யேகம்பனே” எனப் பட்டினத்தடிகள் கூறுகின்றார்.

சுத்தமும் அசுத்தமும் தேய்ந்தவா தனைகளை

அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                                         800

உரை : நல்வாதனைகளையும் தீய வாதனைகளையும் இரண்டு கலந்த வாதனைகளையும் ஞான நினைவால் ஒடுக்கி வாழ வுதவுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சுத்த வாதனையால் இன்பமும் அசுத்த வாதனையால் துன்பமும் தோன்றுதலால், மனம் அவற்றிற்கு இடமாதல் கூடாது என்பது கருத்து. இதற்கு வாயில் தூய ஞான வொழுக்கம் என்பார், “அத்தக” என்று குறிக்கின்றார். தகை - ஈண்டு ஞானத்தின் மேற்று. வாதனைகளால் வேதனைப்படுங்கால் திருவருள் ஞான நினைவு தந்து ஆட்கொள்ளுகிறது அருட்பெருஞ் சோதி என அறிவுறுத்துவாராய், “அத்தகையடக்கும் அருட்பெருஞ் சோதி” என்று மொழிகின்றார்.

நால்வயிற் றுரிசு நண்ணுயிர் ஆதியில்

ஆலற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          802

உரை : இந்திரியம், கரணம், சீவன், ஆன்மா என்ற நான்கிடத்தும் உயிர்கள் எய்தும் குற்றங்களைத் தொடக்கத்தையே காத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

உயிரை ஆன்மா என்பது உபநிடத வழக்கு. மூலமலத்தோடு பிணிப்புண்டு செயலற்றுக் கிடக்கும் நிலையை வடலூர் வள்ளல், ஆன்ம நிலையெனவும் ஆன்மா எனவும் இயம்புகின்றார். இதனைச் சிவாகமங்கள் கேவல நிலை என்றும், ஆன்மாவைக் கேவலான்மா என்றும் குறிக்கின்றன. மூலமலத்துடன் மாயை கன்ம மலங்களோடு கூடி நிற்கும் ஆன்ம நிலையை வள்ளற் பெருமான் சீவன் என மொழிகின்றார். இதனைச் சைவ நூல்கள் சகலநிலை என்றும் சகலான்மா என்றும் கூறுகின்றன. சகலான்மா மன முதலிய அந்தக் கரணங்களோடு கூடிக் கன்மங்களைச் செய்யுமிடத்துக் குற்றங்கள் உண்டாதல் பற்றி, அவற்றைக் கரணத்துரிசு என வுரைக்கின்றார். துரிசு - குற்றம். இந்திரியங்களாகிய கருவிகளைக் கொண்டு கன்மங்களைச் செய்வதால் வந்தடையும் குற்றங்களை, “இந்திரியத் துரிசு” என இயம்புகின்றார். ஆன்மாவிடத்து மூலமலச் சேர்க்கையால் உளதாகிய துரிசையும், சீவனிடத்து மும்மலக் கலப்பால் உளதாகும் குற்றத்தையும் தொடக்கத்தேயே தடுத்தாளும் அருணிலையை யுடையது அருட்பெருஞ் சோதி என்பாராய், “நால்வயிற்றுரிசும் ஆதியில் ஆலற அடக்கும் அருட்பெருஞ் சோதி” என எடுத்துரைக்கின்றார். ஆதி - தொடக்கம். மாயா மலத் தொடக்கத்திலும் கன்ம மலத் தொடக்கத்திலும் தடுத்தாளுதலால், “ஆதியில் அடக்கும்” என இயம்புகின்றார். ஆலுதல் - தழைத்தல்.

நால்வயிற் படைப்பும் நால்வயிற் காப்பும்

ஆலற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          804

உரை : அண்டசம் உற்பிசம் முதலான நால்வகைப் படைப்பின் கண்ணும் அவ்வவற்றிற்கேற்ப நால்வகையிற் குற்ற முண்டாகாதபடிக் காத்தளிப்பது அருட்பெருஞ் சோதி. எ.று.

நான்கிடமாவன : அண்டசம், உற்பிசம், சுவேதசம், சராயுசம் என்பன. வயின் - இடம். இந் நான்கிடங்களினும் தோன்றுவன வற்றிற்கு நால்வகைக் காப்புக்கள் அளிக்கப்பட்டிருத்தலின், “நால்வயிற் காப்பு” என்று கூறுகின்றார். ஓடும் தோலும் உரோமமும் கொம்பும் உயிரினங்கட்குக் காப்பாம் என அறிக.

மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்

ஆவிடத் தடக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          806

உரை : தன்மை முதலிய மூவிடங்களில், ஒருமை பன்மையாக இருந்து கருதிய தொழில்களில் ஒடுங்கியிருந்து செயலாற்றுவிப்பது அருட்பெருஞ் சோதி. எ.று.

தன்மை முன்னிலை படர்க்கை என்பன மூவிடம்; இருமை - ஒருமை பன்மை என்ற இரண்டு. தன்மை யொருமை, தன்மைப் பன்மை, முன்னிலை யொருமை, முன்னிலைப் பன்மை, படர்க்கை யொருமை, படர்க்கைப் பன்மை என வினைகள் இயலுதலால், “மூவிடத் திருமையின் முன்னிய தொழில்கள்” என மொழிகின்றார். தன்மைக்கண் பன்மையில்லையாயினும், முன்னிலையாரையும் படர்க்கையாரையும் உளப்படுத்துதலாற் பன்மையுண்டாதல் பற்றித் தன்மைக்குப் பன்மை கூறுகின்றார். முன்னுதல் - நினைத்தல். ஒரு தொழிலை மேற்கொண்ட விடத்து நினைவுகளும் செயல்களும் பலதலைப் படுவது கூடாதாகலின், “ஆவிடத் தடக்கும்” என அறிவிக்கின்றார். அவ்விடம் - ஆவிடமென வந்தது; இஃது ஆயிடம் எனவும் வரும்.

மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்

ஆவிடம் அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          808

உரை : தன்மை முதலிய மூவிடத்தும் மனம் மொழி மெய் என்ற மூன்றனையும் மேற்கொண்ட தொழில்களில் ஆங்காங்கு அடக்கியாள உதவுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

மூவிடம், மேற்கூறிய தன்மை முன்னிலை படர்க்கை என்ற மூன்றுமாம்; ஆங்கு, ஈங்கு, ஊங்கு என வரும் இடங்களுமாம். தொழிலை மேற்கொள்ளுதலும் முன்னுதல் என அறிக. தொழில் மேற் கொண்டவர் தம்முடைய கரணங்களை ஒன்றுவித்தல் வினைக்குச் சிறப்புத் தருவதுபற்றி, “மும்மையின் முன்னிய தொழில்களில் ஆவிட மடக்கும்” என வுரைக்கின்றார். மும்மை - மன மொழி மெய் யென்ற கரணம் மூன்று.

தத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும்

அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          810

உரை : தத்துவங்களின் குறும்புகளையும் குற்றங்களையும் அதனதன் எல்லைக்குள் ஒடுக்கி இயலச் செய்தாள்வது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஆன்ம தத்துவம் இருபத்து நான்கு, வித்தியா தத்துவம் ஏழு, சிவதத்துவம் ஐந்து என நிற்கும் தத்துவம் முப்பத்தாறாகலின், “தத்துவம்” எனப் பொதுப்படக் கூறுகின்றார். பூத தத்துவ வகையும் விரியும் சேர்ந்து தொண்ணூற்றாறு என்பதுமுண்டாகலின், இவ்வாறு கூறுகின்றார் எனினும் பொருந்தும். ஒன்றின் செயல் பிறிதொன்றிற் கலந்து தவறுற்றொழுகுதல் தத்துவச் சேட்டை; ஒன்றே பிறிதொன்றைக் காட்டித் துன்பத்துக்குள்ளாக்குவது தத்துவத் துரிசு. ஆண் தத்துவம் பெண் தத்துவத்தையும், பெண் தத்துவம் ஆண் தத்துவத்தையும் அவாவி யொழுகுதல் தத்துவத் துரிசு என்பதும் உண்டு. இதனைத் தத்துவாபாசம் என்றும் கூறுவர்.

சுத்தமா நிலையில் சூழ்வுறு விரிவை

அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          812

உரை : சுத்தமாகிய பெருநிலையில் ஆன்மாவைச் சூழ்ந்து ஒளிரும் ஞானஒளி விரிவை அனுபவ வெல்லைக்குள் அடக்கியாள்வது அருட் பெருஞ் சோதி. எ.று.

கேவலம், சகலம் என்ற இருநிலைகளையும் கடந்த வழி எய்துவது சுத்தநிலை. இந்நிலைக்கண் ஆன்மா சிவமாம் தன்மையுற்றுச் சிவஞானப் பேரொளி சூழ்ந்து எல்லையின்றிப் பெருகும் வியாபகத் தன்மையைப் பெற்றுச் சிவயோக போகங்கட்குரியதாகலின், அப்பெருநிலையை, “குழுறு விரிவு” எனச் சுருங்கச் சொல்லுகின்றார். ஆன்மாக்கடோறும் சிவயோக போக அனுபவ வெல்லை வேறுபடுவது விளங்க, “அத்தகையடக்கும் அருட்பெருஞ் சோதி” என்றும், அடக்காதபோது சிவானுபவம் கைவராது என்றும் அறிதல் வேண்டும். “உயிர்தானும் சிவானுபவம் ஒன்றினுக்கே யுரித்து” ( சிவ. சித்தி ) என்று சான்றோர் எடுத்து மொழிதலால், சிவபோகத்தை ஆன்மானுபவ எல்லைக்குள் அடக்கியாள்வது அருட்சோதிப் பரசிவத்தின் தனிமாண்பாம் என்பதாயிற்று.

கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்

அரைசது மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          814

உரை : மறைத்தலை இயல்பாக வுடைய மாயையாகிய கரிய பெரிய திரையினால் தனது அருள்ஞான ஆட்சியை மறைத்தாள்வது அருட் பெருஞ் சோதி. எ.று.

கரவு - மறைத்தல்; மறைதலுமாம். இன்ன தன்மைத் தென அறியத் தன்னைப் புலப்படுத்தாமையால், “கரவின் மாயை” எனக் கூறுகின்றார். அறியப்படாமையின் “கருந்திரை” என்றும், ஞானக் காட்சிக்கன்றிப் புலப்படாத சிறப்புடைமை பற்றிப் “பெருந்திரை” என்றும் விளக்கியருள்கின்றார். திருவருள் ஞான விளக்கம் ஈண்டு “அரைசு” எனப்படுகின்றது. அரசு - அரைசு என வந்தது. அறிவுருவாகிய ஆன்மா மாயா மயக்கத்தால் சுணங்கிக் கிடக்காமல் அறிவால் ஆராய்ந்தின்புறல் வேண்டுமென்ற கருணையால் மறைத்தாள்கின்றான் இறைவன் என்றற்கு, “அரைசது மறைக்கும் அருட்பெருஞ் சோதி” என வள்ளற் பெருமான் உரைத்தருளுகின்றார்.

பேருறு நீலப் பெருந்திரை அதனால்

ஆருயிர் மறைக்கும் அருட்பெரும் ஜோதி                                          816

உரை : பெருமை பொருந்திய நீல நிறமுடைய பெரிய திரையைக் கொண்டு அருமை வாய்ந்த உயிரின் உணரும் ஆற்றலை மறைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

தனிக் கருமையோடமையாது நீலநிறத்தையும் பொருந்தியிருப்பதால், “பேருறு நீலப் பெருந்திரை” என்று சிறப்பிக்கின்றார். பசுமை கலந்த கருமை நீலமாதலால், மலப் பிணிப்புடன் அருட் சத்தியின் ஒளியும் கலந்த கலப்புண்மை இதனாற் குறிக்கப்படுகிறது. அருட் சத்தி பசுமை நிறமுடையது என்பர். உணர்வே யுருவாய் அமைதலின், ஆன்மாவை “ஆருயிர்” எனக் கூறுகின்றார்.

பச்சைத் திரையால் பரவெளி அதனை

அச்சுற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          818

உரை : பசுமை நிறமுடைய திரையினால் மாயா மண்டலத்தைத் தன்கண் அடக்கி நிற்கும் பராகாசத்தை அச்ச முண்டாக மறைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

அருட் சத்தியின் தோல்வி மிகுதி விளங்கப் “பச்சைத் திரை” என்று கூறுகின்றார். மாயையின் உள்ளே யிருக்கும் ஆன்மாவின் சிற்சத்தி, அம் மாயையைக் கலக்கித் தொழிற்படுத்தும் திருவருளால் மறைப்புண்பது தோன்றப் “பச்சைத் திரையாற் பரவெளியதனை மறைக்கும் அருட்பெருஞ் சோதி” எனப் பகர்கின்றார். மாயா மண்டிலத்தின் மேல் விளிம்பு அருளொளி தோய்ந்து பச்சைத் திரையிட்டது போன்று ஆன்ம வுணர்வுக்கு இனிது அறியாவாறு செய்தலால், “அச்சுற” என மொழிகின்றார். அறிவருமை பற்றி அச்சம் நிகழ்கின்றதென அறிக.

செம்மைத் திரையால் சித்துறு வெளியை

அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          820

உரை : சிவந்த நிறமுடைய திரையினால் சிவபர வெளியைத் திருவருளால் ஆன்ற சிற்சத்தி அறியாவாறு மறைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சிவம் ஞானமே யுருவாகியதாகலின், அதன் ஒளிக் கலப்புப் புலப்படச் “செம்மைத் திரை” என்று சிறப்பிக்கின்றார். “செம்மையேயாய சிவபதம்” என்றும், “திருநின்ற செம்மை” என்றும் சான்றோர் குறித்தருளுவது காண்க. திருவருளுருவாகிய சிவசத்தியை “அம்மை” என ஓதுகின்றார். “சிவத்தின் ஆற்றலையும் ஞானவொளியையும் தாங்கும் ஆற்றல் உயிர்க் கின்மையால் அருளாகிய அன்னையால் வரையறுத்துக் காட்டப்படுவது தோன்ற, “அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார்.

பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை

அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          822

உரை : பொன்னிறமுடைய திரையினால் அபர வெளியாகிய மாயா காரியப் பொருள்கள் தங்குகின்ற மாய வெளியை அண்மை வாய்பாட்டால் மறைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சிவ சூரிய வொளியின் வேறாய் மாயா காரிய சூரிய வொளியால் உலகு விளங்குதலால் உலகிய லொளியைப் “பொன்மைத் திரை” என்று புகல்கின்றார். மாயா காரியங்களான உடம்பு, கருவி, கரணம், உலகு, போகங்கள் உறையும் மாயவெளி, “பொருளுறு வெளி” எனப்படுகிறது. சவிகற்பம், நிருவிகற்பம், விபரீதம் முதலிய காட்சிகளால் அல்லவென்றும் ஆம் என்றும் காணப்படுவது பற்றி, “அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ் சோதி” எனக் கூறப்படுகிறது. அன்று, அல்ல என்பன “அன்மை” வகைகளாம்.

வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை

அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          824

உரை : வெண்மை நிறமுடைய திரையினால், மெய்ம்மையுருவான சிவமாகிய பதிப்பொருள் தங்கும் சிவாகாசப் பெருவெளியை அணிமையிற் செல்லினும் காணாவாறு மறைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

மெய்ம்மைக்கு நிறம் வெண்மையாதலால் மெய்ம்மை யுருவான சிவாகாசத்தை மறைக்கும் அருட் டிரையை, “வெண்மைத் திரை” எனக் குறிக்கின்றார். மெய்ப்பதி - சிவபரம்பொருள். அது தங்குவது சிவாகாசம். உயிர்க்குயிராய்த் தங்கினும் காட்டாது மறைப்பது அருட் சத்தியாதலின், “அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார். அண்மையினும் என்னும் சிறப்பும்மை விகாரத்தாற்றொக்கது.

கலப்புத் திரையால் கருதனு பவங்களை

அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          826

உரை : கருமை முதலிய பல நிறங்கள் பொருந்திய திரையினால் உலகியலிற் பெறலாகும் அனுபவங்களை உயிரறிவு வருத்தமுற மறைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஞான வொளியையும் அஞ்ஞான விருளையும் தன்கண் கொண்டது உலகியலனுபவமாதலின் அதனை மறைத்தருளும் திரோதானம் “கலப்புத் திரை” எனப்படுகிறது. உலகியலனுபவம், இந்திரியானுபவம், கரணானுபவம், சீவானுபவம், ஆன்மானுபவம் எனப் பலவாதலின், “கருது அனுபவங்கள்” என வுரைக்கின்றார். இந்த அனுபவங்களே உலகியல் சீவனுக்கு வாழ்வாதலால், “கருது அனுபவங்கள்” என வுரைக்கின்றார். இந்த அனுபவங்களே உலகியல் சீவனுக்கு வாழ்வாதலால், “கருது அனுபவங்கள்” என்று விதந்து கூறுகின்றார். இந்த அனுபவம் பலவும் நினைப்பு மறப்பு என்ற செயல்களால் அலைக்கப்படுவது பற்றி, “அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் சோதி” என உரைக்கின்றார்.

விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்

அடர்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          828

உரை : ஐம்புல நுகர்ச்சிகளாகிய அனுபவ நிலைகளை வேறு வேறு திரைகளை அடர்த்தியாக நிறுத்தி மறைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

இதுவரையிற் கூறப்பட்ட திரைகள் ஏழனுக்கும் விளக்கமொன்றை உபதேசப்பகுதி ( 109 ) சுருக்கமாகக் கூறுகிறது : “இந்தப் பௌதிகவுடம்பிலிருக்கிற நீ யார் எனில், நான் ஆன்மா, சிற்றணு வடிவன் ; மேற்படி யணு கோடி சூரியப் பிரகாசமுடையது; இலாடத்தானம் இருப்பிடம்; கால் பங்கு பொன்மை, முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம்; இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய ஏழு திரைகளுண்டு: அவையாவன - கறுப்புத் திரை - மாயா சத்தி; நீலத்திரை - கிரியா சத்தி; பச்சைத் திரை - வராசத்தி; சிவப்புத் திரை - இச்சா சத்தி; பொன்மைத் திரை - ஞான சத்தி; வெண்மைத் திரை - ஆதி சத்தி; கலப்புத் திரை - சிற்சத்தி” விடய நிலை - கண் முதலிய பொறிகளைக்கொண்டு ஒளி முதலிய புலன்களால் நுகரப்படும் சுகதுக்கானுபவம். வேறு வேறு என்பது வெவ்வேறு என மருவிற்று. அடர்தல் - அடர்பு என வந்தது; நெருங்குதல் என்பது பொருள். மறைக்காத வழிச் சீவனுக்கு உலகானுபவம் பெருகாதாகலின், மறைத்தல் அருட்பெருஞ் சோதி ஆண்டவனுக்கு அருட்பெருஞ் செயலாயிற்றென அறிக.

தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்

அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          830

உரை : தத்துவங்கள் முப்பத்தாறின் பயன்படும் நிலைகளைத் தனித்தனித் திரைகளைக் கொண்டு ஆங்காங்கு மறைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

தத்துவ முப்பத்தாறினுள் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கின் நிலை பிரகிருதி மாயா மண்டலம்; கலா தத்துவம் ஏழின் நிலை அசுத்த மாயா மண்டலம்; சிவ தத்துவமைந்தின் நிலை சுத்த மாயா மண்டலம். ஆன்ம தத்துவானுபவம் பிரகிருதியிலும், கலாதத்துவானுபவம் அசுத்த மாயையிலும், சிவதத்துவானுபவம் சுத்தமாயையிலும் ஒடுங்குதலால், “அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ் சோதி” என்று இயம்புகின்றார்.

திரைமறைப் பெல்லாம் தீர்த்தாங் காங்கே

அரைசுறக் காட்டும் அருட்பெருஞ் ஜோதி                                          832

உரை : மேற்கூறிய திரை வகையால் உண்டாகும் மறைப்புக்களெல்லாவற்றையும் போக்கி அவ்வந் நிலைகளில் ஆங்காங்குப் பொருள் இனிது விளங்கக் காட்டியருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

பலவேறு திரைகளை நிறுத்தி, மறைத்தது ஆங்காங்கு இருக்கும் பொருள் உண்மைகளை இனிது உணர்வித்தற்காதல் விளங்க, “ஆங்காங்கு அரசுறக் காட்டும் அருட்பெருஞ் சோதி” என்று உரைக்கின்றார்.

தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளின்

ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ் ஜோதி                                          834

உரை : பலவாய் விரிந்து தோன்றும் மூலமாயையாகிய மாமாயையின் தொடர்பினைப் போக்கி அதற்கு மேலாய் நின்று அதனைக் கலக்கும் அருட் சத்தியின் ஆற்றலைப் புலப்படுத்துவது அருட்பெருஞ் சோதி. எ.று.

சுத்தம், அசுத்தம், சுத்தாசுத்தம், மசிரம், மூலப்பகுதியெனப் பலவாய் விரிந்து தோன்றும் இயல்பு பற்றி, “தோற்ற மாமாயை” என்று சொல்லுகின்றார், மாயா மலத்தொடர்பு ஆன்மாவைச் சூழ்ந்து பிணித்திருக்கும் மூலமலத்தை விலக்குதற் பொருட்டாதலின், “தொடர்பறுத்து” எனவும், தொடர்பறுத்தல் திருவருட் சத்தியின் செயலாதலால், “அருளின் ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார். மறைப்பகற்றி ஆன்மா அறிவு விளக்கம் பெறுவிப்பது திருவருளின் செம்மைச் செயல் என்பதை மேலும் வற்புறுத்தற்கு இவ்வாறு கூறுகின்றாரென அறிக.

சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை

அத்தகை காட்டும் அருட்பெருஞ் ஜோதி                                          836

உரை : பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாகிய சுத்த மாயையின் தொடர்பினைப் போக்கி, ஆன்மா மலத்தின் நீங்கி உய்தி பெறுதற்கு ஏதுவாகிய சிவஞானத்தைக் காட்டி யுதவுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

மாயையாவது பிரபஞ்ச முதற் காரணமாய் நித்தமாய்ச் சடமாய் முதல்வனுக்குப் பரிக்கிரக சத்தியாய் முதல்வன்கண் வியாப்பியமாய் அருவாய் உள்ளது. துன்பத்தோடு விரவுதலின்றி இன்ப மாத்திரையே பயத்தற் கேதுவாவது சுத்த மாயை; ஏனையது அசுத்தம் என்று சிவஞான மாபாடியம் முதலிய சைவ நூல்கள் தெரிவிக்கின்றன. சுத்த மாயை, குடிலை, குண்டலி, விந்து என்றெல்லாம் இது வழங்கும். சுத்த மாயையைக் கூறியதனால் ஏனைய அசுத்த மாயையும் கொள்ளப்படும். அசுத்தம் - அதோ மாயை, மோகினி, மாயை எனவும் வழங்கும். இம்மாயைத் தொடர்பு ஆன்மாவின் அறிவு செயல்களை மறைத்தலின், முதல்வனது அருட் சத்தி இதனைக் கலக்கி ஆன்மாவின் ஞான சத்தி, கிரியா சத்திகளை எழுப்பியுதவுதலால், “அருளை அத்தகை காட்டும் அருட் பெருஞ் சோதி” என மொழிகின்றார். இவற்றின் விரிந்த பண்புகளைச் சைவ மாபாடியங்களிற் கண்டு கொள்க.

எனைத்தா ணவமுதல் எல்லாந் தவிர்த்தே

அனுக்கிர கம்புரி அருட்பெருஞ் ஜோதி                                          838


உரை : ஆணவம் - மாயை, கன்மம் ஆகியவற்றின் தொடர்புகளனைத்தையும் போக்கி அறிவுருவாகிய ஆன்மா திருவருள் ஞானத்தால் உய்தி பெறுதற்குத் துணை புரிந்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

அணு வடிவிற்றாகிய ஆன்மாவினுட் கலந்து அது முழுதும் நுண்ணிதாய் வியாபித்தலால், “எனைத் தாணவம்” என வுரைக்கின்றார். மாயை வகைகளும் கன்ம வகைகளுமாகிய எல்லாம் அகப்பட, “ஆணவ முதல் எல்லாம்” எனப் புகல்கின்றார். அனுக்கிரகம் புரிதல் - திருவருள் துணை புரிதல். திருவருளின் அனுக்கிரகம் இல்லாவிடில், ஆன்மா மலப்பிணிப்பு நீங்கிச் சிவஞானானுபவம் பெறுதற்கு வாய்ப்பில்லாமையால், “எல்லாம் தவிர்த்தே அனுக்கிரகம் புரி அருட்பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார்.

விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை

அடைவுறத் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி                                          840

உரை : பொறி புலணுகர்ச்சியாகிய விடய போகங்கள் விளைவிக்கும் அறியாமையைப் போக்கி ஆன்மாக்களை ஞானத்தால் முறையாகத் தெளிவித்தருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

விடைய மறைப்பு - கண் காது முதலிய ஐம்பொறிகளாற் பெறப்படும் போகங்கள் உண்டுபண்ணும் மயக்கம். இந்திரிய மயக்கம் எனவும் இது கூறப்படும். “இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய் அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேன்” ( கண்ட பத்து ) என்று திருவாசகம் கூறுவது காண்க. விடயம் - எதுகை நோக்கி விடையமென வந்தது. அடைவு பெறல் - ஞானப் பேற்றால் வீடு பெறுதல்.

சொருப மறைப்பெலாம் தொலைப்பித் துயிர்களை

அருளினில் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி                                          842

உரை : பொருள்களின் உண்மை வடிவத்தைக் காண வொட்டாது மறைக்கும் கற்பனை மறைப்புக்களைப் போக்கித் திருவருளால் உண்மை நிலையை உணர்விப்பது அருட்பெருஞ் சோதியாகும். எ.று.

பொருள்களின் பெயர், உருவம், இனம், என்ற கற்பனைகளைக் கழிக்க நிற்கும் வடிவம் உண்மை எனவும், சொரூபம் எனவும் வழங்கும். பெயர், உருவம், குணம், இனம், தொழில் முதலிய கூறுகள் கற்பனை. இக் கற்பனைகளோடு கூடியது சவிகற்பம்; இவை போக எஞ்சி நிற்கும் பொருண்மை நிருவிகற்பம். செந்தாமரை வெண்டாமரை என்பன சவிகற்பம்; தாமரை என நிற்கும் பொருண்மை நிருவிகற்பம்; சொருபமுமாம். பெயர் முதலிய கற்பனைகளைக் கழிக்கும் அறிவு திருவருளால் உளதாகலின், “அருளினில் தெருட்டும்” என வுரைக்கின்றார். அருளறிவு உண்மையறிவு என்றும் குறிக்கப்படும்.

மறைப்பின் மறந்தன வருவித் தாங்கே

அறத்தொடு தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி                                          844

உரை : கற்பனைகளால் மறைக்கப்பட்ட பொருண்மை யுணர்வை ஆங்காங்கு உணர்வித்து நன்ஞானத்தை உண்மை நெறியில் நின்று விளங்கச் செய்வது அருட்பெருஞ் சோதியாகும். எ.று.

பெயர் குணம் தொழில் வடிவம் இனம் முதலியவற்றால் மறைந்து நிற்கும் உண்மைத் தன்மை யுணர்வு மனவுணர்வு. அவ் வுணர்வைத் தூண்டுவது திருவருட்கு அறமாதலால், “அறத்தொடு தெருட்டும் அருட்பெருஞ் சோதி” என அறிவிக்கின்றார். மலத்தால் பிணிப்புண்டிருக்கும் உயிரினது ஞானக் கிரியா இச்சா சத்திகளைத் தூண்டி யருளுவது திருவருட்கு அறமென வுணர்க.

எவ்வகை உயிர்களும் இன்புற ஆங்கே

அவ்வகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி                                          846

உரை : மிகச் சிறிய அணுவுயிர்களையும் இன்பம் பெறுமாறு அவற்றின் நிலைக்கேற்ப அருளொளி வழங்கியருள்வது அருட்பெருஞ் சோதி. எ.று.

எல்லா வகை யுயிர்களும் இன்பப் பேற்றில் நாட்டமுடையன என்பது உலகறிந்த உண்மை. “எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது, தானமர்ந்து வருஉம் மேவற்றாகும்” என்பர் தொல்காப்பியனாரும். உலகியல் வாழ்வு இன்பப் பேற்றைக் குறிக்கோளாக வுடையதாகையால், அதனை ஒவ்வோருயிரும் பெறுதல் வேண்டி இன்ப ஞானமருளுவது திருவருட்கு இயல்பாதல் பற்றி, “அவ்வகை தெருட்டும் அருட் பெருஞ் சோதி” என்று சொல்லுகின்றார். உயிர் நிற்கும் உடம்பு, சிற்றணு பேரணு முதல் மக்கள் தேவருடம்பு வீறாகப் பலதிறப்படுதல் பற்றி, “ஆங்கே அவ்வகை தெருட்டும்” என அறிவிக்கின்றார்.

கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்

அடையுறத் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி                                          848

உரை : தெய்வங்களால் உளதாகும் மறைப்புக்களைப் போக்கினவர்க்குப் பரஞானவின்பத்தை எய்துவித்தருள்வது அருட்பெருஞ் சோதி. எ.று.

கடவுளராவார், அயன், அரி, உருத்திரர், சதாசிவர், மகேசர், உமை, திருவாணி முதலாகக் கூறப்படும் தேவர்கள். இவர்களுடைய பெயரும் குணமும் செய்கைகளும் பிறவும் பரஞானப் பரம் பொருண்மையை உணரவிடாது மறைத்தலால், “கடவுளர் மறைப்பு” என இயம்புகின்றார். இம் மறைப்புத்தான் பலகோடி சமய வேற்றுமைகட்கும் சிறு தெய்வ வழிபாட்டுக்கும் காரணம் என அறிதல் வேண்டும். இம் மறைப்புச் சமரச சன்மார்க்க ஞானத்தாலன்றி ஒழியாதாகலின், “கடிந்தவர்க் கின்பம் அடையுறத் தெருட்டும்” என மொழிகின்றார். சமரச சன்மார்க்க ஞானமாவது பரம்பொருளொன்றையே பொருள் எனத் தேர்ந்து ஒழுகும் சிவஞானம்: இது பரஞானம் எனவும் வழங்கும். “பரஞானத்தாற் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார், பார்க்க வருஞானம் பலஞானம் அஞ்ஞான விகற்பம்” ( சிவ. சித்தி ) என்று பெரியோர் கூறுவது காண்க. அடைதல் - அடையுறல் என வந்தது.

சத்திகள் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்

அத்துறத் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி                                          850

உரை : சத்திகளாகிய தேவதை வழிபாட்டால் பரம்பொருளுணர்வு மறைக்கப்படுவதால் அம்மறைப்பைப் போக்கின பெரியோர்களுக்கு மெய்யான இன்பத்தை அவரவர் எல்லைக்கண் அளித்தாள்வது அருட்பெருஞ்சோதி. எ.று.

பரவாகீசுவரி, அபரவாகீசுவரி, மனோன்மணி, மகேசை, உமை, திரு, வாணி, ஈசானி, பூரணி, ஆர்த்தி, வாமை, மூர்த்தி, ஆரணி, சனனி, இரோதயத்திரி, சேட்டை, ரௌத்திரி, காளி, கலவிகரணி, பலப்பிரமதனி, சருவபூததமனி முதலாகப் பலர் கூறப்படுதலின், “சத்திகள்” எனக் கூறுகின்றார். இவர்களை வழிபடுதலால் பரஞானப் பரம்பொருள் உணர்வு மறைக்கப்படுவதால் அதனைச் “சத்திகள் மறைப்பு” என வுரைக்கின்றார். உயர் ஞானமுடையவர்க்கன்றி இச் சத்திகளின் மறைப்பு நீங்காமை புலப்பட, “தவிர்த்தவர்க்கு இன்பம்” என இயம்புகின்றார். அத்து - எல்லை. சத்தி வழிபாடு சாக்தம் எனப்படுகிறது.

சத்தர்கள் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்

அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி                                          852

உரை : சத்திகளைத் தங்கண் உடைய சத்திமான்களாகிய தேவர்கள் வழிபாட்டால் ஏற்படும் பரம்பொருள் பரஞானப் பேறு தடைப்படுவதால் அத் தடையைப் போக்கிய பெரியோர்களுக்கு அவர்களின் பெருமைக்குத் தக அருண் ஞானம் வழங்குவது அருட் பெருஞ் சோதி. எ.று.

சத்தர்கள் - திருமால் அயன் முதலிய தேவர்கள். திருமாலுக்குச் சத்தி திரு; அயனுக்குச் சத்தி வாணி. பிற்காலத்தோர் இச் சத்திமான்கட்கு விசுவரூபம் உண்மை கூறிப் பரம்பொருளாக்க முயன்று, பல கதைகளைப் புனைந்து கூறுகின்றனர். தெருள்பவர் சில ரென்றற்கு “அத்தகை தெருட்டும்” எனக் கூறுகின்றார்.

படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை

அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          854

உரை : உலகுகளைப் படைக்கும் தேவர்கள் பற்பல கோடியாகப் பொருத்தமுறப் படைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

“நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்த” உலகுகளைக் காலந்தோறும் படைக்கும் பிரமதேவர்களும் பலர் என்றற்குப் “படைக்கும் தலைவர்கள் பற்பல கோடி” என்று கூறுகின்றார். “நூறு கோடி பிரமர்கள் நுங்கினார்” எனத் திருநாவுக்கரசரும் கூறுகின்றார். அண்டங்கள் அனைத்திலும் அவற்றின் நிலைக்கொப்பப் படைக்குமாறு புலப்பட, “அடைப்புற” எனக் கூறுகின்றார்.

காக்கும் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை

ஆக்குறக் காக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          856

உரை : படைக்கப்பட்ட உலகங்களைக் காத்தாளும் தேவர்களான கணக்கில்லாத பலகோடி நாராயணர்களைத் தத்தம் தொழிலைச் செய்ய ஆக்கியருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

காக்கும் தலைவர்கள் - காத்தற் றொழிலைப் புரியும் நாராயணர்கள், “ஆறுகோடி நாராயணர்” எனப் பெரியோர் கூறுதலால், “கணக்கில் பலகோடி” என வுரைக்கின்றார். ஆக்குறல் - செய்தல். காக்கும் என்றவிடத்துக் காத்தல் ஆக்கி யமைத்தல்.

அடக்கும் தலைவர்கள் அளவிலர் தம்மையும்

அடர்ப்பற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          858

உரை : காக்கப்பட்ட வுலகங்களைக் காலமறிந்து ஒடுக்கும் உருத்திரர்கள் எண்ணற்ற பேர்களை நெருக்க மின்றாக ஒடுக்கியருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

அடக்குதல் - எண்ணற்ற உலகங்களை இட நெருக்கமில்லாதபடி ஒடுக்குதல். உலகங்கள் வரம்பின்றிப் பெருகுமாயின் உளதாகும் கேட்டினை எண்ணி அளவுற ஒடுக்குமாறு தோன்ற, “அடர்ப்பற அடக்கும்” என அறிவிக்கின்றார்.

மறைக்கும் தலைவர்கள் வகைபல கோடியை

அறத்தொடு மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி                                          860

உரை : உயிர்கள் உலகியலனுபவம் பெறல் வேண்டி, மறைத் தொழுகும் திரோபவத் தேவர்கள் எண்ணிறந்தோரை முறைப்படி நிறுத்தி மறைத்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

உயிர்கட் குரிய அறிகருவிகளைக் கொண்டு உயிர் அறியுமிடத்து எல்லாவற்றையும் ஒருங்குணரும் திறனின்றி ஒன்றொன்றாய்ப் பார்க்கும் சிறுமை யுடைத்தாகலின், அதற்கேற்ப ஒன்றாலொன்றைப் பார்க்குமிடத்து ஏனையவை மறைக்கப்படுவது திரோபவமாகலின், “அறத்தொடு மறைக்கும்” என வுரைக்கின்றார், “ஒன்றொன்றாய்ப் பார்த்துணர்வதுள்ளமே” எனச் சிவஞான போதம் கூறுவது காண்க. அறிகருவிகள் பலவகையவாதலால் அவற்றைத் திரோபவப் படுத்தும் தேவர்களும் பலவகையராதல் விளங்க, “வகை பல கோடி” என்று கூறுகின்றார்.

தெருட்டும் தலைவர்கள் சேர்பல கோடியை

அருட்டிறம் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி                                          862

உரை : திரோபவத்தால் உணர்வு மறைக்கப்பட்ட உயிர்கட்கு உணர்வு தந்து தெளிவிக்கும் பலகோடியளவில் உள்ள அனுக்கிரகத் தேவர்களைத் தனது திருவருள் வகையால் தோற்றுவித்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

திரோபவத் தேவர்களால் ஆன்ம வுணர்வு மறைக்கப்படுவது கூறினாராகலின், மறைப்பிலே கிடந்து மடியாவாறு உயிர்களை உணர்வு தந்தாளுவது அருட் செய்கையாதல் பற்றி, “அருட்டிறம்தெருட்டும்” என்று தெரிவிக்கின்றார். அருட்டிறம் - திருவருட் செயற்கூறு.

ஐந்தொழி லாதிசெய் ஐவரா திகளை

ஐந்தொழி லாதிசெய் அருட்பெருஞ் ஜோதி                                          864

உரை : படைத்தல் முதலிய ஐவகைத் தொழில்களையும் செய்யும் பிரமன் முதலிய ஐவகைத் தேவர்களையும் தோற்றுவித்து, அவ்வைந்து தொழில்களையும் இனிது செய்வித்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

ஐந்தொழில் - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என்பனவாம். ஐவராவார் - பிரமன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் எனப்படுவர். இவ்வைவகைத் தொழில்களையும், இக்கூறிய ஐவகைத் தேவர்களையும் கொண்டு, முட்டின்றிச் செய்ய இயக்கியருளுவது இறைவனுடைய திருவருட் சத்தி என்பது கருத்து.

இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில்

அறந்தலை அளித்த அருட்பெருஞ் ஜோதி                                          866

உரை : உலகில் இறந்த வுயிர்கள் யாவும் இறந்தே யொழியாது மீளப் பிறந்து அருள் ஞானப் பேற்றால் உய்திபெற அருளுவது அருட் பெருஞ் சோதி. எ.று.

இறத்தலாவது உயிர்கள் தாம் நின்ற உடம்புகளினின்றும் நீங்குவதாகும். எடுத்த வுடம்பால் பெறக் கடவ உய்தியைப் பெறாதபோது, அதனைப் பெறுதல் வேண்டி உடம்பெடுப்பது முறையாகலின், “இறந்தவரெல்லாம் எழுந்திட” எனவும், அவற்றிற்கு வேண்டும் உடம்பை நல்குதல் இறைவனுக்கு அருளறமாதலால், “அறந்தலை யளித்த அருட் பெருஞ் சோதி” எனவும் கூறுகின்றார். அறம் தலையளிப்பதாவது அறத்தை இனிது செய்தல்.

செத்தவர் எல்லாம் சிரித்தாங் கெழுதிறல்

அத்தகை காட்டிய அருட்பெருஞ் ஜோதி                                          868

உரை : இறந்தவர்கள் யாவரும் உவகையுடன் பிறந்தெழுமாறு அவரவர் தகுதிக்கொப்பப் பிறப்பைத் தந்தருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

செத்தவர் - உணர்வொடுங்கி இறந்தவர்கள். எழும்போது முன்னர் எடுத்த வுடம்பால் பெறற்குரிய பேற்றினைப் பெறாது ஒழிந்தோமே என்ற வருத்தமின்றி, இறைவன் தந்த உடம்பினை மகிழ்ச்சியுடன் ஏற்பது வருத்தமின்றி, இறைவன் தந்த உடம்பினை மகிழ்ச்சியுடன் எற்பது விளங்க, “சிரித்தாங்கு எழுதிறல்” என இயம்புகின்றார். நன்கு உறங்கினவன் உவகையுடன் எழுவது போலச் செத்த வுயிரும் மகிழ்வுடன் எழுகின்ற தென்றற்குச் “சிரித்தாங்கு எழுதிறல்” என்று கூறுகின்றார்.

இறந்தவர் எழுகஎன் றெண்ணியாங் கெழுப்பிட

அறந்துணை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                                          870

உரை : இறந்தவர்களைப் பார்த்து இவர்கள் எழுவார்களாக, என்று மனத்தால் எண்ணி அவ்விடத்து அவர்கள் எழுக என்று சொல்லி எழுப்புமாறு எனக்குத் திருவருள் நற்றுணையாகுக என அருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

உலகுயிர்களைத் தோற்றுவிப்பது இறைவன் திருவருளாதலால், அத் திருவருள் துணையாகியபோது நாமும் அது செய்வதைச் செய்யலாம் என்பது பற்றி, “எண்ணியாங்கு எழுப்பிட அறம் துணை எனக்கருள் அருட்பெருஞ் சோதி” என வேண்டுகின்றார். மனத்தால் எண்ணி வாயாற் சொல்ல வேண்டுதலால், “எண்ணியாங்கு எழுப்பிட” என்று கூறுகின்றார்.

செத்தவர் எழுகெனச் செப்பியாங் கெழுப்பிட

அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி                                          872

உரை : உணர்விழந்தவர்களை உணர்வுடன் எழுக என்று சொல்லி அவர்கள் அவ்வாறே உணர்வுடன் எழச் செய்யும் அவ்வாற்றலை எனக்கு அருளுவது அருட்பெருஞ் சோதி. எ.று.

முன்பு இறந்தவரை எழுப்பும் ஆற்றலை அருளுவது கூறினாராகலின், இங்கே உணர்வு இழந்தவர்களை எழுப்பும் ஆற்றலை அருளுவது இறைவன் திருவருள் என்று கூறுகின்றார். செத்தவர் - ஈண்டு உணர்வு இழந்தவர் மேற்று. உணர்வில் வழிச் செத்தவர் போறலின், “செத்தார்” என்று செப்புகின்றார். ஆங்கு - அப்பொழுதே அவ்விடத்தே என்றுமாம். திறல் - ஆற்றல்.

சித்தெலாம் வல்ல திறல்அளித் தெனக்கே

அத்தன்என் றோங்கும் அருட்பெருஞ் ஜோதி                                          874

உரை : எண்வகைச் சித்திகளையும் செய்ய வல்ல ஆற்றலைத் தந்து எனக்குத் தந்தையாய் ஓங்கியுயர்வது அருட்பெருஞ் சோதி. எ.று.

எண்வகைச் சித்திகளை அணிமா, மகிமா, லகிமா, குருமா, பிராத்தி, பிராகாமித்துவம், ஈசத்துவம், வசித்துவம் என்பர். இவை யோக நெறியிற் பெறப்படுவனவாதலின் தனிப்படக் கூறுகின்றார். சித்திகளைச் செய்தற்குரிய ஆற்றலைத் தந்தமையின் தனக்குத் தந்தையாயினார் என்றற்கு, “அத்தனென் றோங்கும் அருட்பெருஞ் சோதி” என வுரைக்கின்றார்.

ஒன்றதி ரண்டது ஒன்றின்இ ரண்டது

ஒன்றினுள் ஒன்றது ஒன்றெனும் ஒன்றே

உரை : ஒன்றாகிய பரம்பொருள் என ஞான நூல்கள் கூறுவது ஒன்றேயாம்; சிவமும் சத்தியுமாய்க் காணப்படுதலின் இரண்டாகும்; ஒன்றாகிய பரம்பொருளினது இருகூறாகும்; இரண்டும் வேறு வேறு இராது ஒன்றினுள் ஒன்றாய் உளது. எ.று.

ஞான நூல்கள் தெளிந்துரைப்பது பற்றி, “ஒன்றெனும் ஒன்று” என வுரைக்கின்றார். “ஒன்றென்ற தொன்றே காண், ஒன்றே” ( சிவ. போ ) என்று பெரியோர் கூறுதல் காண்க. சாமானிய ஞானத்துக்கு ஒன்றாய் விளங்கினும் விசேட ஞானத்துக்குச் சிவமும் சத்தியுமாய் நிற்பது பற்றி, “இரண்டது” என இயம்புகின்றார். “சத்தியாய்ச் சிவமதாகித் தனிப்பர முத்தியான முதல்” ( திருவிளை ) எனப் பரஞ்சோதியார் உரைப்பர். இவ்விரண்டும் தனித்தனி வேறு பொருள்களல்ல என்றற்கு, “ஒன்றின் இரண்டது” என்றும், அவை ஒன்றினுள் ஒன்றாய் இடமும் இடத்து நிகழ்பொருளுமாய் இருப்பன என்றற்கு, “ஒன்றனுள் ஒன்றது” என்றும் இயம்புகின்றார்.

ஒன்றல இரண்டல ஒன்றின்இ ரண்டல

ஒன்றினுள் ஒன்றல ஒன்றெனும் ஒன்றே

உரை : “ஏகம் ஏவ” என்ற வேதங்களிற் கூறப்படும் பரம்பொருள் ஒன்றுமல்ல; இரண்டுமல்ல; தன்னின் வேறாய பிறிதொன்றின் தொடர்புடையதன்று; ஒன்றினுள் ஒன்றாய் இயைவதுமல்ல. எ.று.

எங்கும் எல்லாமாய் இருத்தலால் “ஒன்றல” எனவும், எல்லாப் பொருட்கும் பாரமாய் வேறாய் உணரப்படினும் தன்மையால் ஒன்றாதலால் “இரண்டல” எனவும், பிறிதொன்றிலிருந்து தோன்றுவ தன்மையின், “ஒன்றினிரண்டல” எனவும், குணமும் குணியுமாய் இயைவ தன்மையின், “ஒன்றினு ளொன்றல” எனவும் உரைக்கின்றார். “கடவுள் ஒன்றல, இரண்டல, ஒன்றும் இரண்டுமானார் என்பதற்குத் தாற்பரியம்; ஒன்றல, கடவுளானவர் ஒன்றாகிய ஞான தேகியுமல்ல; இரண்டல; சுத்தப் பிரணவ தேகியுமல்ல; ஒன்றும் இரண்டுமானார்; கடவுளானவர் தன்னருளைப் பெற்ற சுத்த ஞானிக்கு ஞான தேகத்தையும் சுத்தப் பிரணவ தேகத்தையும் கொடுக்க முதற் கருவியாக இருக்கின்றார்; இதை அனுபவத்தால் குருமுகத்தில் உணர்க” என்று உபதேசப் பகுதி உரைப்பது ஈண்டு நினைதற் பாலது.

ஒன்றினுள் ஒன்று ஒன்றினில் ஒன்றில

ஒன்றுற ஒன்றிய ஒன்றெனும் ஒன்றே                                          880

உரை : ஒன்று என வற்புறுத்தப்படும் ஒன்றாகிய பரம்பொருள் ஏனைப் பொருள்கள் ஒவ்வொன்றிலும் பிரிப்பற ஒன்றாய் இருப்பது இருக்குமிடத்து ஒன்றினுள் ஒன்றாய் இருப்பதன்று; ஒவ்வொன்றிலும் அதுவதுவாய்க் கலந்து ஒன்றியிருப்பது. எ.று.

“ஒன்றினுள் ஒன்றுள” என்றதை விளக்குதற்கு “ஒன்றினுள் ஒன்றுற ஒன்றிய” என இசைக்கின்றார். தான் கலந்துள்ள ஒன்றின் தன்மையைத் தான் பெறாமல் தன் தன்மையை அதற்குத் தரும் இயல்பின தென்றற்கு, “ஒன்றினுள் ஒன்றில” என்று உரைக்கின்றார்.

களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி

விளங்கஎன் உள்ளே விளங்குமெய்ப் பொருளே                                          882

உரை : இவ் வுலகம் மலவிருளின் நீங்கி ஞானவின்பத்தில் திளைக்கும் பொருட்டுச் சன்மார்க்கம் எங்கும் விளக்கமுற, எனக்குள் எழுந்தருளுவது மெய்ம்மையான சிவபரம்பொருள். எ.று.

மெய்ந்நெறி - சன்மார்க்கம்; இதுவே சிவநெறி யென்றும் கூறப்படும். “இலகு மெய்ந்நெறி சிவநெறி” ( ஞானசம். புரா ) என்று சேக்கிழார் பெருமான் கூறுவது காண்க. மெய்ம்மை சத்து; நெறி, மார்க்கம் என வுணர்க. சன்மார்க்க ஞானம் சிவஞானமாதலால், சிவஞானத்தாலன்றி உலகம் மலவிருள் பயக்கும் துன்பத்தினின்றும் நீங்கி ஞானானந்தம் பெறாதென்பது பற்றி, “களங்கம் நீத்து உலகம் களிப்புற” என வுரைக்கின்றார். இன்பப் பேற்றினும் துன்ப நீக்கம் பெரிதும் விழையப்படுவதால், “களங்கம் நீத்து” எனக் கூறுகின்றார். களங்கம் - மலவிருள். உலகம் - மக்களுயிர். சிவஞானமும் சைவ வொழுக்கமும் மலவிருளை நீக்கிப் பின்னரும் அடராதவாறு காப்பன என்றற்கு, “மெய்ந்நெறி விளங்க” எனவும், தாம் அதனை உலகுணர எடுத்தோதும் கொள்கையரென்றற்கு, “என்னுள்ளே விளங்கு மெய்ப்பொருளே” எனவும் மொழிகின்றார். மக்கள் அகத்தே தோன்றி அவர்களின் நினைவாலும் சொல்லாலும் செயலாலும் விளங்குவதாகையால், “என்னுள்ளே விளங்கும் மெய்ப்பொருள்” என விளம்புகின்றார். “மெய்யகத்தே நம்மை வைத்து விழித்திருக்கின்றாய் நீ விளங்குக சன்மார்க்க நிலை” என்றும், “மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீங்கனியே” என்றும் வள்ளற் பெருமான் உரைப்பது காண்க.

மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்

ஓவற விளங்கும் ஒருமைமெய்ப் பொருளே                                          884

உரை : மூலாதாரம் முதலிய ஆறு நிலைகளில் முடியிலும் நடுவிலும் முடியிலுள்ள ஆஞ்ஞைக்கு மேலதாகிய நிலையிலும் இடையறவின்றி, விளங்குவது ஒன்றாகிய மெய்ப்பொருள். எ.று.

மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்ற ஆதாரம் ஆறும் மூவிரு நிலை யெனப்படுகின்றன. ஆஞ்ஞாதீதத்தை நிராதார மென்றும், முடி மேல் நிலை என்றும் யோக நூலார் கூறுவர். யோகக் காட்சி யுடையவர்க்கு நடுவிலும் முடியிலும் அதற்கு மேலும் சிவசூரிய வொளி இடையறவின்றி விளங்கும் என்பாராய், “முடி நடு முடிமேல் ஓவற விளங்கும்” என்று உரைக்கின்றார்.

எழுநிலை மிசையே இன்புரு வாகி

வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே                                         886

உரை : ஏழாம் நிலையாகிய ஆஞ்ஞாதீதத்தில் இன்ப வுருவாய்க் கீழ்நிலைகளிலிருந்த இருண் மல நிலையினின்றும் நீக்கி ஆன்மாவின்கண் விளங்குவது மெய்ப்பொருளாகிய சிவம். எ.று.

எழுநிலை - ஏழாம் நிலை. இதனை நிராதார யோகக் காட்சி என்பர். ஆங்கே இன்ப வுருவாய்ச் சிவம் விளங்குகிறதென்பாராய், “இன்பவுருவாகி வயங்கும் மெய்ப்பொருள்” என விளம்புகின்றார். ஒளி தோன்ற இருள் நீங்குவது போல, இன்பச் சிவவொளி தோன்றுகிற போது மூலாதார முதலிய மூன்று நிலைகளில் ஆன்மாவிற் படிந்த மலசம்பந்தம் நீங்குதல் பற்றி, “வழு நிலை நீக்கி” என மொழிகின்றார்.

நவநிலை மிசையே நடுவுறு நடுவே

சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே                                          888

உரை : நிராதார யோக நிலையாகிய ஏழாம் நிலையுடன் பராயோகம், பராபோகமாகிய இரண்டும் கூடிய ஒன்பது நிலைகட்கு மேலும், இவற்றின் நடுவுள் நடுவும் நின்று சிவமயமாய் விளங்குவது மெய்ப் பொருளாகிய பரசிவம். எ.று.

நிராதார யோகக் காட்சியிற் பெறப்படும் பரை தரிசனத்தின் இடம் யோகமும் பயன் போகமுமாம் எனச் சான்றோர் கூறுதலால் இவற்றைத் தொகுத்து, “நவநிலை” என்றும், பரை மண்டலத்தில் நடுவுள் நடுவாய் நின்று திகழும் சிவதரிசனச் சிறப்பை, “நடுவுறு நடுவே சிவமயமாகித் திகழ்ந்த மெய்ப்பொருளே” என்றும் இயம்புகின்றார். இவற்றின் விரிவைத் திருமந்திரம் முதலிய மெய்ந்நூல்களிற் காண்க. சிவதரிசனத்தில் எல்லாம் சிவமாய்க் காணப்படுதலால் “சிவமயமாகி” எனத் தெரிவிக்கின்றார்.

ஏகா தசநிலை யாததின் நடுவே

ஏகா தனமிசை இருந்தமெய்ப் பொருளே                                          890

உரை : நவநிலையுடன் முத்தி சாக்கிரம், சாக்கிராதீதம் என்ற இரண்டும்கூட வரும் நிலை பதினொன்றினுள் நடுவு யாதோ அதன் நடுவேயுள்ள ஒன்றை யாதனத்தில் வீற்றிருந்தருளுவது மெய்ப்பொருளாகிய சிவம். எ.று.

முத்தி நெறியிற் பேசப்படும் ஏகாதர கலா யோகக் காட்சி இங்கே குறிக்கப்படுகிறது. பத்தும் பதினொன்றும் முத்தி சாக்கிரம், சாக்கிராதீதம் என்று கூறப்படும். இவை துகளறு போதம் முதலிய நூல்களில் குறிக்கப்படுகின்றன. முத்தி சாக்கிராதீதத்தில் சிவஞான பீடத்தில் சிவமொன்றே காணப்படுவதால் அதனை “ஏகாதனம்” எனவும், விசுத்தி நிலையில் விளங்குதலின், “நடுவே” எனவும் நவில்கின்றார். நிலை பெற்றிருப்பது புலப்பட “இருந்த” என வோதுகின்றார்.

திரையோ தசநிலை சிவவெளி நடுவே

வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே                                          892

உரை : பதின்மூன்றாம் நிலையாகிய சிவாதார யோக முத்தி நெறியினை காட்டும் சிவப்பிரபையின் நடுவிடம் வரையில் ஓதப்படும் சிவஞான யோக வாழ்க்கைக்குரியது சிவமாகிய மெய்ப்பொருள். எ.று.

பன்னிரண்டாவதாகிய துவாத சாந்தப் பெருநிலைக்கு மேல் வைத்துப் பேசப்படுவது சிவாதார யோக நிலை. பன்னிற வட்ட வடிவில் துவாத சாந்தத்தில் காணப்படும் சிவப்பிரபையின் அவாந்தர மத்தியத்தைக் கண்டு சிவயோகம் புரிவது இதன் குறிப்பாதலால், “சிவவெளி நடுவு வரை ஓதரு சுகவாழ்க்கை” என வுரைக்கின்றார். சிவயோகம் வல்லார் வாய்க் கேட்டுணரத் தக்கது இதுவென்று பாதஞ்சல யோகியர் உரைக்கின்றனர்.

ஈரெண் நிலைஎன இயம்புமேல் நிலையில்

பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே                                          894

உரை : சோடச கலாதார யோக நிலையென வுரைக்கப்படும் பரசிவாந்த யோகத்தில் குறைவற நிறைந்த இன்பமாய்ப் பொருந்துவது பரசிவமாகிய மெய்ப்பொருள். எ.று.

இதனை அருட்பெருஞ் சோதி நல்கும் பரசிவ போக நிலையென அறிக. தானும் தன்னை யடைந்தவரும் சிவானந்த ஞானவொளி யுருவில் பொருந்தி நின்று பெறும் சிவபோகம் என்பர். சிவ சாயுச்சியம் என்பதும் இதுவே. சிவமேயாகாது சிவவுருவிற் பொருந்தினாலன்றிச் சிவபோகப் பேறு இல்லாமையாற், “பூரண சுகமாய்ப் பொருந்தும் மெய்ப்பொருளே” எனப் புகல்கின்றார். அத்தியான்மிகமான மேதை முதல் உன்மனாந்தம்வரை நிற்கும் துவாதச கலையோடு வியாபினிக்கு மேலுள்ள வியோம ரூபை, அனந்தை, அனாதை, அனாசிருதை என்ற நான்கினையும் கூட்டிச் சோடி கலை நிலையெனச் சிவஞான பாடியம் முதலிய சைவ நூல்கள் கூறுகின்றன.

எல்லா நிலைகளும் இசைந்தரங் காங்கே

எல்லா மாகி இலங்குமெய்ப் பொருளே                                                                                   896

உரை : மேதை முதல் அனாசிருதை ஈறாகவுள்ள நிலைகளெல்லாவற்றிலும் கலந்து ஆங்காங்கே பொருந்தியும் அவையேயாகியும் எல்லாமாய் விளங்குவது அருட்பெருஞ் சோதி மெய்ப்பொருள். எ.று.

மேதை, அருக்கீசம், விடம், விந்து, அர்த்த சந்திரன், நிரோதி நாதம், நாதாந்தம், சத்தி, வியாபினி, சமனை, உன்மனை, வியோமரூபை, அனந்தை, அனாதை, அனாசிருதை என்ற புவன பத நிலைகள் அனைத்தும் அடங்க, “எல்லா நிலைகளும் இசைந்து” என இயம்புகின்றார். ஆங்காய் வேறாய் நில்லாமல் ஒன்றாய் இயைந்து சிவம் நிற்பது விளங்க, “ஆங்காங்கே எல்லாமாகி இலங்கும்” என இசைக்கின்றார். நூற் பெருக்கமும் பொருள் நுணுக்கமும் நோக்குமிடத்து வடலூர் வள்ளல் யாவும் ஓதானுணர்ந்தவர் என்ற உலகுரையை மெய்ப்பிக்கின்றன.

மனாதிகள் பொருந்தா வானடு வானாய்

அனாதிஉண் மையதாய் அமர்ந்தமெய்ப் பொருளே                                          898

உரை : மனம் முதலிய அந்தக்கரணங்கட்கும் எட்டாத ஞான வானத்தின், நடுவானத்தின் நன்பொருளாய் அனாதி யுள்பொருளாய் எழுந்தருளுவது அருட்பெருஞ் சோதி மெய்ப்பொருள். எ.று.

கண் முதலிய கருவிகட்கும் பொருளாய் அமையும் உலகப் பொருள்களின் நுண்மையைக் காணவுதவுவது மனம், சித்தம், அகங்காரம், புத்தி முதலிய நான்குமாகிய அந்தக்கரணம்; காலம் நியதி முதலிய உள்ளந்தக்கரணங்கள் மானதக் காட்சிக்கும் எட்டாத நுட்பத்தையுணர்த்துவனவாகும். அவற்றிற்கும் எட்டாத சிதாகாசத்தை, “மனாதிகள் பொருந்தா வான்” எனவும், அதன் நடுவே ஞானமாய் விளங்கும் சிவ சிதாகாசத்தை ( சிவ ரகசியப் பிரதேசத்தை ) “வான் நடுவான்” எனவும் விளக்குகின்றார். சிவ சிதாகாசப் பிரதேசத்தில் திகழும் சிவம், ஆதியும் அந்தமும் இல்லாததென்பார், “அனாதி” எனவும், அதுதானும் இல்பொருளன்று, உள்பொருளே என்றற்கு, “உண்மையதாய்” எனவும் இயம்புகின்றார். அமர்தல் - விரும்பியுறைதல். “அகனமர்ந்து செய்யாள் உறையும்” ( குறள் ) என்றாற்போல.

தானொரு தானாய்த் தானே தானாய்

ஊனுயிர் விளக்கும் ஒருதனிப் பொருளே                                          900

உரை : சிதாகாச நடுவனதாகிய சிவபரம்பொருள் தானே தனக்கு ஒப்புயர்வற்றதாய், பிறிது யாதும் கலவாத தனிப் பொருளாய், உடம்பும் உயிருமாய்த் தோன்றும் பொருள்களிற் கலந்து அத்துவிதமாய் விளங்குவது. எ.று.

சிவம் ஒப்புயர்வற்ற தனிப் பரம்பொருள் என்பாராய், “ஒரு தனிப் பொருள்” எனச் சிறப்பிக்கின்றார். தான் ஒன்றே பரமாம் பொருள் என்றற்குத் “தான் ஒரு தானாய்” எனவும், கலப்பற்ற பரஞானப் பரம்பொருள் என்பது விளங்க, “தானே தானாய்” எனவும், உயிர்ப்பொருள் உயிரில் பொருள் எனவுள்ள பொருள்தோறும் கலந்து நின்று விளங்குவதால், “ஊன் உயிர் விளங்கும் ஒருதனிப் பொருள்” என இசைக்கின்றார். ஊன் - உடம்பு; ஆகு பெயர்.

அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்

பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே                                          902

உரை : தத்துவமசி என்னும் மகாவாக்கியத்திலுள்ள ‘தது’ என்று குறிக்கப்படும் அது வென்னும் சொல்லின் உட்பொருளாய், அப் பொருளே தனக்குப் பொருளாய் அம்பலத்தில் நடித்தருளுவது நிறைவாகிய பரம்பொருள். எ.று.

அது நீ ஆகின்றாய் என்று பொருள்பட வரும் தத்துவம் அசி என்ற உபதேச மகாவாக்கியத்தில் தது என்பது ஆன்மாவின் வேறாய்ப் பரமாயுள்ள பரம்பொருளைக் குறித்தலின், “அதுவினுள் அதுவாய்” என்று கூறுகின்றார். அது எனக் குறிக்கப்படுவது சொற்பொருள் என்பது கருத்து. அப் பரம்பொருளே சிவமாதலால், “அதுவே யதுவாய்” எனக் கூறுகின்றார். அது இரண்டனுள் முதலது பரம்பொருளையும், பின்னது சிவத்தையும் சுட்டுகின்றன. பொது - சிதாகாசச் சிற்றம்பலம். சிவபரம்பொருள் கூத்தப்பெருமானாய் அம்பலத்தில் நடிப்பதால், “பொதுவினில் நடிக்கும் பூரணப் பொருள்” என்று புகல்கின்றார். ஓருருவும் இல்லாத பரம்பொருள் கூத்தனுருவில் நடிப்பதால் குறையேதும் இல்லை என்றற்குப் “பூரணப் பொருள்” என்கின்றார்.

இயல்பினுள் இயல்பாய் இயல்பே இயல்பாய்

உயலுற விளங்கும் ஒருதனிப் பொருளே                                          904

உரை : இயல்பாய் இயன்ற பொருள்களனைத்தினும் இயல்புருவாய் இயல்பே தனக்கு இயல்பாகவும் உலகுயிரனைத்தும் உய்திபெற விளங்குவது ஒருதனிப் பரம்பொருள். எ.று.

இயற்கையும் செயற்கையுமாகிய பொருள் வகையுள் இயற்கைப் பொருள்களின் இயல்புருவாயது பரம்பொருள் என்பாராய், “இயல்பினுள் இயல்பாய்” எனவும், அவ் வியல்பே பரம்பொருட்கும் இயல்பு என்பாராய், “இயல்பே இயல்பாய்” எனவும் இயம்புகின்றார். இத்தகைய பொருள்தான் எற்றுக்கு என்பார்க்கு விடைகூறும் வகையில், “உயலுற விளங்கும்” என்று கூறுகின்றார். உலகம் உயிர் கலந்த உடம்பொடு தோன்றியிருப்பதற்குக் காரணம் உயிர்கள் உலகில் வாழ்வாங்கு வாழ்ந்து உய்தி பெறுதற்காக என்பார், “உயலுற” என வுரைக்கின்றார்.

அருவினுள் அருவாய் அருஅரு அருவாய்

உருவினுள் விளங்கும் ஒருபரம் பொருளே                                          906

உரை : உருவமும் அருவமுமாகிய பொருள் வகையில், அருவப் பொருட்கெல்லாம் அருவமாகியும், அருவங்கட் கெல்லாம் மூல அருவமாகியும் உருவப் பொருள்களிற் கலந்தும் விளங்குவது ஒப்பற்ற பரம்பொருள். எ.று.

உருவப் பொருளின் சூக்கும வடிவம் அருவம்; அதிசூக்கும வடிவத்தை “அருவினுள் அரு” என்று கூறுகின்றார். அருவருவரு என்றது, சூக்குமம் அதிசூக்குமம், மூலசூக்குமம் ஆகியவற்றின் காரண வருவத்தைக் குறிப்பதாம். அருவருவாகிய பரம்பொருள் உருவப் பொருள் யாவற்றிலும் கலந்திருக்கும் திறம் புலம்பட, “உருவினுள் விளங்கும்” என்று உரைக்கின்றார்.

அலகிலாச் சித்தாய் அதுநிலை அதுவாய்

உலகெலாம் விளங்கும் ஒருதனிப் பொருளே                                          908

உரை : அளவில்லாத ஞானமாய், அந்த ஞானமே நிலைத்த பொருளாய் உலகனைத்திலும் விளங்கி நிற்பது ஒப்பற்ற தனிப் பரம்பொருள். எ.று.

ஞானமே திருவுருவாம் என்றற்கு “அலகிலாச் சித்தாய்” என்கின்றார். சித்து - ஞானம். அந்த அனந்த ஞானமே, ஞானத்தால் உணரப்படும் பொருளாம் என்பாராய், “அதுவே நிலையதாய்” என்று உரைக்கின்றார். ஞானமும் பொருளும் பரசிவமே என்பது கருத்து. உலகங்கள் எங்கும் பரந்து விளங்குதலின், “உலகெலாம் விளங்கும் ஒருதனிப் பொருளே” என மொழிகின்றார்.

பொருளினுட் பொருளாய்ப் பொருளது பொருளாய்

ஒருமையின் விளங்கும் ஒருதனிப் பொருளே                                          910

உரை : பொருள் எனப்படுவன எல்லாவற்றினுள்ளும் உண்மைப் பொருளாய், பொருளால் உணரப்படும் பொருண்மையாய், ஒன்றாய் விளங்குவது ஒப்பற்ற பரம்பொருள். எ.று.

உருவமும் அருவமும் அகமும் புறமு மெனக் கூறப்படுவன பொருள்களாதலின், அவற்றின் பொருளாந் தன்மையைப் புலப்படுத்துவதென்றற்கு, “பொருளினுட் பொருளாய்” என்றும், பொருளின் பொருண்மையே தனக்கு இடமாய்க் கோடல் பற்றி, “பொருளது பொருளாய்” என்றும் இயம்புகின்றார். ஒன்றே பரம்பொருள் என வலியுறுத்தற்கு, “ஒருமையின் விளங்கும்” என இசைக்கின்றார்.

ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழு

கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே                                         912

உரை : வெற்றியுறச் செய்யப்படும் அரிய செயல்கள் அறுபத்து நான்கும் தனித்தனி எவ்வேழு கோடியாக விரிந்து விளங்கச் செய்து மேம்படுவது பரம்பொருள். எ.று.

ஆடுறு சித்தி - குறையின்றி முடிக்கப்படும் சித்திகள். சித்தி - அரிய செயல்; அற்புதச் செயல்கள். கலைகள் அறுபத்து நான்காதலின், கலைத் திறம்பட வரும் சித்திகள் அறுபத்து நான்காயின. எழுவகைப் பிறப்பினும் இச் சித்திகள் தோன்றி எண்ணிறந்தனவாய் விரிந்து பெருகுதலால், “எழு கோடியும் விளங்க” என இயம்புகின்றார்.

கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்

ஆட்டுற விளங்கும் அருட்பெரும் பொருளே                                          914

உரை : தன்னால் அதிட்டிக்கப்படும் தேவர்களின் கூட்டுறவால் சித்திகள் பலகோடியாக, நன்கு செய்தருளுவது அருளுருவாய பரம்பொருள். எ.று.

தன்னால் அதிட்டிக்கப்படும் பிரமன் முதலிய தேவர்களைக் கொண்டு செய்யப்படும் சித்திகள் “கூட்டுறு சித்திகள்” எனப்படுகின்றன. சத்தியின்றிச் சிவம் செயல்படுவதிண்மையின், திருவருளோடு கூடிய செயல் “கூட்டுறு சித்தியாகாது” என அறிக. ஆடுறு சித்தி, எதுகை நோக்கி, “ஆட்டுறு சித்தி” என வந்தது.

அறிவுறு சித்திகள் அனந்தகோ டிகளும்

பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே                                          916

உரை : அதிட்டான தேவர்களால் அறிவறிந்து செயல்படும் எண்ணிறந்த சித்திகள் யாவும் சிவசித்தியின் வேறல்ல என்னுமாறு ஒருமைப்பட வுணர நிற்பது பிரமமாகிய பரம்பொருள். எ.று.

அறிவே வுருவாகிய சிவத்தின் வேறு என்றற்கு, “அறிவுறு சித்திகள்” எனப்படுகின்றன. சிவசங்கற்பத்தால் நிகழ்வனவும், சிவாதிட்டானத்தால் நிகழ்வனவும் எனச் சித்தி வகை இரண்டாதல் விளங்க இவ்வாறு கூறுகின்றார். அதிட்டான சித்திகளும் சிவசங்கற்பச் சித்திகளே என்று வலியுறுத்தற்குப் “பிரிவற விளங்கும்” என்று பேசுகின்றார்.

வீடுகள் எல்லாம் விதிநெறி விளங்க

ஆடல்செய் தருளும் அரும்பெரும் பொருளே                                          918

உரை : விடப்படுவனவற்றுள்ளும் விடுதற்கேற்ற விதியும் முறையும் அமைந்திருப்பதனை அறிவால் தெரிந்துணர, அருளாணை செலுத்துவது பெயற் கரிதாகிய பிரமப் பொருள். எ.று.

பெரும்பொருள் - பிரமப்பொருள். பிரமம் - பெரியது. பிரம ஞானம் பெறுதற்கு விடப்படுவன பலவாதலின், அவற்றை “வீடுகள் எல்லாம்” என்று கூறுகின்றார். விடுவது வீடு. “அற்றது பற்றெனில் உற்றது வீடு” என்று பெரியோர் கூறுவதறிக. அறம் பொருள் இன்பம் என்ற மூன்றும் விடப்படும் வீடுகளாம். “பரனை நினைந்து இம் மூன்றும் விட்டதே வீடு” என்பர் சான்றோர். இவற்றை விடுமிடத்துச் சாத்திரங்கள் சில விதி முறைகளைக் கூறுவது பற்றி, “விதி நெறி விளங்க” என விளம்புகின்றார். விடுவதை விடுதற்குத் திருவருள் துணை வேண்டுதலால், “ஆடல் செய்தருளும் அரும் பெரும் பொருள்” என அறிவிக்கின்றார். ஆடல் - ஆளுதல்.

பற்றுகள் எல்லாம் பதிநெறி விளங்க

உற்றருளா டல்செய் ஒருதனிப் பொருளே                                          920

உரை : உய்தி பெறற்கு வேண்டிய அனைத்திலும் சிவஞான வுயர்நெறி விளக்கமுறத் திருவருள் அறிவருளி ஆண்டருளுவது ஒப்பற்ற தனிப் பொருளாகிய பிரமப் பொருள். எ.று.

ஞானத்தால் வீடு பெற நினைப்பவரால் மேற்கொள்ளப்படும் ஞானமும் ஒழுக்கமும் ஈண்டுப் “பற்றுகள்” எனப்படுகின்றன. பிரம ஞானப் பேறும், அதற்குரிய ஒழுக்கங்களும் பிரமப் பொருளின் பெருநெறியைக் காட்டுவதால், “பதிநெறி விளங்க” என மொழிகின்றார். ஆகாதன விடுதற்குத் துணை புரியும் திருவருளே, ஆவனவாகிய நெறிகளையும் ஒழுக்கங்களையும் பற்றுதற்குத் துணை புரிதலால், “அருளாடல் செய் ஒருதனிப் பொருளே” என வுரைக்கின்றார்.

பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே

பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே                                          922

உரை : மேன்மை தருகின்ற பரம்பொருள், மேலாய பொருள்களில் மேலானது; அது மிகமிக மேன்மை வாய்ந்தது; மேன்மைக்குள் அடங்கும் மேலாயவற்றுள் மேலானது. எ.று.

பரம்பொருள் நல்கும் மேலாய நலங்களில் பரமான நலம் வேறின்மை பற்றி, “பரம் தரு பரமே” என்று சிறப்பிக்கின்றார். இகபரம் இரண்டினும் பரம் எனப்படுவனவற்றிற் பரமாயது என்றற்குப் “பரத்தினிற் பரம்” எனவும், அதுதானும் மிகமிகப் பரமாவது என்பார், “பரம்பர பரம்” எனவும், பரமானந்தத்தாற் காணப்படும் பரம்பொருள்களில் மிக்க பரமானது என்பாராய், “பரத்தினுட் பரமே” எனவும் இயம்புகின்றார்.

பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே

பரம்பதம் பரமே பரஞ்சிதம் பரமே                                          924

உரை : மேன்மையே பெறுவது பரம்பொருள்; மேன்மையை நல்குவதும் அப்பரம்பொருள்; பரம்பொருளின் நிலையும் பரம்; பரமாவது சிதம்பரம். எ.று.

பெற்றாலன்றிப் பெறுவதன் அருமை புலப்படாதாகலின், “பரம் பெறும் பரமே” என்றும், அருமை தேர்ந்து தன்னைப் பரவுபவர்க்கு அளிப்பது விளங்கப் “பரம் தரும் பரமே” என்றும் கூறுகின்றார். பரத்தாற் பெறுவதும், பரம் தான் நல்குவதும் பரம்பொருளாம் என்பார், “பரம் பதம் பரமே” என இயம்புகின்றார். பரமாவது இன்னது என்று காட்டுகின்றாராதலால், “பரம் சிதம்பரம்” என மொழிகின்றார். சிதம்பரம் - சித்து அம்பரம் எனப் பிரிந்து ஞானாகாசம் என்று பொருள் படும்.

பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே

பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே                                          926


உரை : பரஞானிகளாற் புகழப்படுவது பரம்பொருள்; அவர்களால் ஏனையோர்க்குத் தரப்படுவது பரம்பொருள் ஞானம்; அந்தப் பரஞானத்தாற் பெறலாவது பரம சுகம்; அதனை எல்லார்க்கும் அளிப்பது மேலாய சிவமாகிய பரம்பொருள். எ.று.

பரம் புகழ் பரம் என்றவிடத்து முதற்கண் நிற்கும் பரம் பரஞானிகள் மேற்று. பகர்தல் - கொடுத்தல். பரஞானத்தால் பரஞானிகள் பெறுவது பரம சுகம் என விளக்குதற்குப் “பரம் சுக பரமே” எனவும், அந்தச் சுகத்தை நல்குவது சிவபரம் பொருள் என்பார், “பரம் சிவபரமே” எனவும் இசைக்கின்றார்.

பரங்கொள்சிற் பரமே பரஞ்செய்தற் பரமே

தரங்கொள்பொற் பரமே தனிப்பெரும் பரமே                                          928

உரை : ஒப்புயர்வற்ற தனிப் பரம்பொருள் மேன்மை யாவும் தன்கண் கொண்ட பரஞானமாகும்; பரஞானம் எய்துவிப்பது தன்னிற்றானே யுளதாகும் பரமாம் தன்மை; அத்தரம் தானும் அழகிய பரநிலையமாகும். எ.று.

சிற்பரம் - பரஞானம். பரஞானத்தாற் பெறலாவது தனிச் சிறப்புடைய பரசிவபோகம் என்றற்குப் “பரம் செய் தற்பரமே” என்று கூறுகின்றார். தரம் - தகுதி, பொற்பரம் - அழகிய சிவபர நிலை. பெருமை முற்றவும் உடையது பரசிவமாதலால், “தனிப் பெரும் பரம்” என்று சாற்றுகின்றார்.

வரம்பரா பரமே வணம்பரா பரமே

பரம்பரா பரமே பதம்பரா பரமே                                          930

உரை : சிவஞானத்தாற் பெறும் உயர் நலம் பரமும் அபரமுமாகும்; இயல்புகளும் பரமும் அபரமுமாகும்; மேன்மையும் பரமும் அபரமுமாகும்; பதநிலைகளும் பரமும் அபரமுமாகும். எ.று.

பரம் - மேன்மை; அபரம் கீழானது. ஞானத்தாற் பெறலாவது உயர் நலம்; அது வரம் எனப்படுகிறது. பரமும் அபரமுமாதற்குக் காரணம் இயல்புகளே எனத் தெனிவித்தற்கு, “வணம் பராபரமே” என வுரைக்கின்றார். வண்ணம் - வணம் என வந்தது. ஒன்றைப் பரம் என்றவிடத்து, இனமான மற்றொன்று அபரமாதலால், இரண்டனையும் கூட்டி, “பரம் பராபரம்” என்கின்றார். பரஞான பரபோகத்துக்கு இடம் பரம்பதம் என விளக்குதற்குப் “பதம் பராபரமே” எனப் பகர்கின்றார். சமய ஞானிகள் தத்தம் தரத்துக்கேற்பச் சாலோகம், சாம்பம், சாரூபம், சாயுச்சியம் என்ற பதங்களைப் பெறுவர் என்பர் சைவ புராணிகர் அவற்றுள் சாயுச்சியம் பரம் என்றும், ஏனையவை அபரம் என்றும் கூறுவர். இவை யாவும் அடங்க, “பதம் பராபரமே” என்று உரைக்கின்றார்.

சத்திய பதமே சத்துவ பதமே

நித்திய பதமே நிற்குண பதமே                                                                                   932

உரை : சத்திய லோக பதமும் சத்துவ குண பதமும் நித்தியமான பதமும், நிர்க்குண சிவபதமும் பரசிவ பதமாம். எ.று.

பிரம பதத்தைச் சத்திய பதம் என்றும், பிரம லோகம் என்றும் புராணிகர் கூறுவர். சத்துவ குண ஞானிகள் பெறும் பதம், சத்துவ பதம், என்றும் அழிதல் இல்லாத பதம், நித்திய பதம். குண தத்துவத்துக்கு அப்பாலானது சிவதத்துவம். சிவதத்துவத்துக்குரியது சிவபதம் என்க.

தத்துவ பதமே தற்பத பதமே

சித்துரு பதமே சிற்சுக பதமே                                          934

உரை : தத்துவ ஞான பதமும் தானே யியன்ற தற்பதமும் ஞான வுருவாகிய பதமும் ஞானானந்த சிவபதமாம். எ.று.

தத்துவ ஞானிகள் பெறும் பதம், தத்துவ பதம். தன்னிற்றானே உளதாகும் சிவபதம், தற்பத பதம். சித்து - ஞானம். ஞானமேயான சிவபதம் - ஞானானந்தமாகிய சிற்சுகம் நல்கும் பதம். சிற்சுக பதம் என வுணர்க.

தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே

அம்பரம் பதமே அருட்பரம் பதமே                                          936

உரை : தனித்த சுகத்தைத் தரும் பதமும் வானுலக பதமும், திருவருட் பேற்றுக்குரிய பதமும், இவை தமக்கு மேலான பதமும் சிவபதமாம். எ.று.

தனிச் சுகம் - சிவமேயாகிய உயர்பதம் நல்கும் இன்பம். அம்பரம் - இந்திரன் முதலியோர் உறையும் பதம். திருவருள் ஞானிகள் பெறும் சிவபதம். அருட் பரமபதம் என்க.

தந்திர பதமே சந்திர பதமே

மந்திர பதமே மந்தண பதமே                                         938

உரை : ஆகம ஞானிகள் பெறும் பதமும், அமுத சந்திரனது பதமும், மந்திர ஞான பதமும் அதிரகசியமான சிவபதமாம். எ.று.

தந்திரம் - சிவாகமங்கள். “தத்திரமாவது நீறு” என வழங்குவது காண்க. சிவாகம ஞானத்தாற் பெறுவது தந்திர பதம் என்பதாம். யோகிகள் துவாத சாந்தத்தில் தரிசிக்கும் அமுத சந்திரன் உறையுமிடம், சந்திர பதம்; சூரிய மண்டலத்துக்கு மேலது சந்திர பதம் என்பர் புராணிகர். மந்திர ஞானம் நல்குவது மந்திர பதம். சிவரகசிய மந்திர பதம், மந்தண பதம் எனப்படுகிறது. மந்தணம் - இரகசியம்.

நவந்தரு பதமே நடந்தரு பதமே

சிவந்தரு பதமே சிவசிவ பதமே                                          940

உரை : நவமாகிய மூர்த்த பேதம் நல்கும் சிவபதமும், அம்பலக் கூத்தின் தரிசனம் தருகின்ற சிவபதமும் பரசிவம் நல்கும் பதங்களாம்; அதுவே அருளொடு கூடிய சிவ மந்திரம் தரும் சிவபதமுமாம். எ.று.

நவ மூர்த்த பேதங்கள் “சிவ சத்தி நாதம் விந்து சதாசிவன் ஈசன் உருத்திரன் மால் அயன்” ( சிவசித்தி ) என்ற ஒன்பதாம். இவ்வொன்பதும் தரும் பதம் “நவம் தரும் பதம்” என அறிக. நடம் - அம்பலத்தின்கண் கூத்தப் பிரான் ஆடும் திருக்கூத்து. கூத்தப் பிரான் தரும் பதம் “நடந்தரு பதம்”. சிவதரிசனப் பேறு “சிவம் தரு பதம்”. சிவசிவ பதம், சி என்ற சிவமும் வ என்ற அருளும் கூடியது சிவசிவம். சிவசிவம் அருளுப் பதம் சிவசிவ பதம். சிவசிவ பதத்தில் சிவ என்ற பஞ்சாக்கர உபாசனையே கிரியை என உணர்க.

பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே

பிரமநிற் குணமே பிரமசிற் குணமே                                          942

உரை : சிவசாயுச்சியம் எனப்படும் நித்திய சிவகதியும், பிரம பதம் நல்கும் நித்தமான தலைவனும், பிரமமாகிய நிர்க்குண வுருவனும், பிரம ஞான வடிவனான சிவபரம்பொருளாம். எ.று.

சிவபரம்பொருள் பிரமம் என நூல்களிற் கூறப்படுதலால், அழிவில்லாத நித்திய சிவகதியைப் “பிரம மெய்க்கதி” எனவும், அப்பிரமப் பொருளே நித்திய சிவகதிக்குத் தலைமையாதலால், “பிரம மெய்ப்பதி” எனவும் கூறுகின்றார். குணதத்துவத்துக்கு அதீதமாதலால் “பிரம நிற்குணமே” என்று உரைக்கின்றார். நிர்க்குணம் - எதுகை நோக்கி நிற்குணம் எனப்படுகிறது. ஞானமே குணமாய்த் திகழ்தலால் “பிரம சிற்குணமே” எனப் பேசுகின்றார்.

பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்

பரமமே பரம பதந்தரும் சிவமே                                          944

உரை : பெரும்பொருளும், பெரும்பொருட் குரிய பெரிய பதத்தின் மேலே இருந்தருளும் பிரமப் பொருளும், தன்னை யுணர்ந்தடைபவர்க்கு மேலான பதவியைத் தரும் பொருளும் பரசிவமே. எ.று.

பெரியது பிரமமாகலின், சிவ பரம்பொருளை, “பிரமமே” என்று கூறுகின்றார். பிரம பதம் பெருமைக்கு எல்லையாய நிலையாதலால், “பெருநிலை மிசையுறும் பரமமே” என்றும், பரம் உறையும் பரமபதம் சிவபதமாதலால் “பரம பதம் தரு சிவமே” என்றும் சிறப்பிக்கின்றார்.

அவனோ டவளாய் அதுவாய் அலவாய்

நவமா நிலைமிசை நண்ணிய சிவமே                                                                                   946

உரை : அவனெனவும் அவளெனவும் அதுவெனவும் குறிக்கப்படுவதாகவும், இம் மூன்றும் அல்லதாகவும் ஒன்பது வகை உருவ நிலைகட்கு மேலதாகவும் விளங்குவது சிவ பரம்பொருள். எ.று.

சிவனை அவன் என்றும், சத்தியை அவளென்றும், சிவசத்தியை அது வென்றும் சான்றோர் கூறுவதால், “அவனோ டவளாய் அதுவாய்” என இயம்புகின்றார். “சிவனருவுரு மல்லன் சித்தினோ டசித்துமல்லன், பல முதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடுவானுமல்லன்” ( சிவசித்தி ) என்று நூலோர் கூறுவதால், “அலதாய்” என அறிவிக்கின்றார். அருவம் நான்கு, அருவுருவம் ஒன்று, உருவம் நான்கு என உருவ நிலை ஒன்பதாதலால், “நவமாநிலம்” என்று உரைக்கின்றார். இவ்விடங்கட்கு மேலதாய் விளங்குவது பரசிவம் என்றற்கு, “மாநிலமிசை நண்ணிய சிவமே” என்று நவில்கின்றார்.

எம்பொரு ளாகி எமக்கருள் புரியும்

செம்பொரு ளாகிய சிவமே சிவமே                                          948

உரை : எமக்கே உரிய பொருளாய் எங்கட்கு வேண்டும் நலங்களைச் செய்து செம்மைப் பரம்பொருளாய்த் திகழ்வது சிவமாகிய மெய்ப்பொருள். எ.று.

உலகியல் நெறியில் நமக்கே உரிய பொருள்கள் பலவும் நமக்கு வேண்டும் நலங்களை நல்குவது போல ஞான வாழ்வுக்குரிய நன்னெறிக்கமைந்த ஞான யோக போகங்களை நல்கி உய்விப்பது விளங்க, “எம்பொருளாகி எமக்கருள் புரியும் செம்பொருள்” என்று தெரிவிக்கின்றார். செம்மையேயாய சிவபதப் பொருள் செம்பொருள் எனப்படுகிறது. சிவமே சிவமே என அடுக்கிக் கூறியது வற்புறுத்தற் பொருட்டு; மேலும் இதனையே கூறிக்கொள்க.

ஒருநிலை இதுவே உயர்நிலை எனும்ஒரு

திருநிலை மேவிய சிவமே சிவமே                                          950

உரை : ஒப்பற்ற தனிநிலை என்றும், இதுவே உயர்ந்த சிவபோக நிலை என்றும் கூறப்படும் திருநிலைக்கண் விளங்குவது சிவமாகிய மெய்ப்பொருள். எ.று.

ஒப்புயர்வற்ற பரசிவ நிலையை “ஒருநிலை” என ஓதுகின்றார். இதனினும் உயர்நிலை எங்கும் இல்லாமை பற்றி, “இதுவே உயர்நிலை என்னும் ஒரு திருநிலை” என்று புகழ்கின்றார். திருநிலை - பரசிவ பரபோக நிலை.

மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு

தெய்வப் பதியாம் சிவமே சிவமே                                          952

உரை : ஞான வுடம்பு பெற்று அழியாத நிலையுடன் உபசாந்தம் என்ற வெறுவெளியின் நடுவே விளங்கும் தலைமைத் தெய்வமாவது சிவபரம்பொருள். எ.று.

மாயா வெளி, வியோம வெளியாகிய இரண்டையும் கடந்தோங்கும் சிவஞானிகள் ஞான வுடம்பு பெற்று அப்பாலுள்ள உபசாந்தப் பெரு வெளியை அடைதலால் அதனை, “மெய் வைத்து அழியா வெறுவெளி” என விளம்புகின்றார். வெளியைப் பாழ் எனவும், மாயா மண்டலாதீதப் பெருவெளியை மாயப் பாழ் எனவும், அதற்கு அப்பாலான வெறுவெளியைப் பராகாசம் எனவும், வியோமப் பாழ் எனவும், அதன் மேலேயுள்ள வெறுவெளியை உபசாந்தப் பாழ் எனவும் திருமூலர் குறிக்கின்றார். மெய் என்றது சிவஞான வுடம்பு. வெறுவெளி - ஒன்றுமில்லாத பரவெளி. இதன் நடுவண் சிவம் இருந்து திகழ்வது விளங்க, “நடுவுறு தெய்வப் பதி” என நவில்கின்றார். “சும்மா இருக்கும் சுகம்” இதுவே.

புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்

சிரமுற நாட்டிய சிவமே சிவமே                                          954

உரை : ஆன்ம சிற்சத்தியைப் பற்றிய குற்றங்களைப் போக்கி. சிவஞானமாகிய பொன் முடியைத் தந்து என் தலைமேல் விளங்க அணிந்தருளுவது சிவபரம் பொருள். எ.று.

புரை - குற்றம். மலத் தொடர்பால் உண்டாகும் குற்றம்; ஆன்ம வுணர்வைப் பற்றி மறைத்துக் குற்றத்துக்குள்ளாக்குவது பற்றிப் “புரை தவிர்த்” தென வுரைக்கின்றார். சிவஞானம் ஞானவான்களின் தேகத்தைப் பொன்னிற மடைவிப்பதால், அதனைப் “பொன் முடி” என்றும், என்றும் நீங்காதவாறு அணிவது தோன்ற, “சிரமுற நாட்டிய சிவமே” என்றும் இயம்புகின்றார். சிரம் - தலை.

கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச்

செல்வமும் அளித்த சிவமே சிவமே                                          956

உரை : உண்மைக் கல்வியும் சாவாமைக்கு உபாயமாகிய திருவருள் ஞானக் கல்வியும், அழிவில்லாத திருவருட் செல்வத்தையும் நல்குவது சிவ பரம்பொருள். எ.று.

உண்மைக் கல்வி - இயற்கை யறிவுடன் செயற்கையால் எய்தும் நூலறிவு கூடியது அறிவுடைமை என்பதற்குப் பரிமேலழகர் உரைக்கும் உரை காண்க. போகாப் புனலைச் சீரணித்து வேகாத் தீயை அவித்துப் பெறலாகும் சாகா நிலையை எய்துவிக்கும் யோக நிலைக்குரிய கல்வி “சாகாக் கல்வி” எனப்படுகிறது. இது சாகாக் கலை என்றும் வழங்கும். அழியாச் செல்வம் - திருவருள் ஞானத்தால் உளதாகும் சிவபோகம்.

அருளமு தெனக்கே அளித்தருள் நெறிவாய்த்

தெருளுற வளர்க்கும் சிவமே சிவமே                                          958

உரை : திருவருள் ஞானமாகிய அமுதத்தை எனக்கு நல்கி அது கொண்டு நான் திருவருள் நெறியைத் தெளிந்து மேன்மையுற வுதவுவது சிவ பரம்பொருள். எ.று.

திருவருட் சிவஞானத்தை “அருளமுது” எனக் குறிக்கின்றார். ஞானமில்லாதபோது அருணெறிக்கண் கடைபோகச் செலுத்துவது கைகூடாதென்பது பற்றி, “அருணெறிவாய்த் தெருளுற வளர்க்கும் சிவம்” என்று மொழிகின்றார். தெருளுதல் - தெளிதல்.

சத்தெலா மாகியும் தான்ஒரு தானாம்

சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே                                          960

உரை : சத்து எனப்படுவன எல்லாவற்றிற்கும் தானே பொருளாய், தன்னின் வேறில்லாத தனிப் பரம்பொருளாய், ஞானங்களெல்லாவற்றையும் தன்கண் கொண்டதாய் விளங்குவது திருவருளே யுருவாகிய சிவ பரம்பொருள். எ.று.

சத்து - உண்மை. உள்பொருள் அனைத்துக்கும் உண்மைத் தன்மை நல்கும் சிறப்புப் பற்றிச் சிவத்தை, “சத்தெலாம் ஆகி” எனவும், “ஒன்று ஒன்றே” என வேதங்கள் ஓதுதலின், “தான் ஒரு தானாம்” எனவும் கூறுகின்றார். சித்து - அறிவு. ஞானங்கள் எண்ணிறந்தனவாயினும் அவை யனைத்துக்கும் சிவமே ஆகரமாதலால், “சித்தெலாம்” எனத் தெரிவிக்கின்றார். ஆகரம் - இடம். “நானார் என் உள்ளமார் ஞானங்களார்” எனத் திருவாசகம் குறிப்பது காண்க. எல்லாம் வல்லதாதலால் பரசிவம், “சித்தெலாம் வல்லது” எனச் செப்புகின்றார். திருவருளே சிவத்துக்குச் சத்தியாதல் பற்றி, “திருவருட்சிவம்” என்று சிறப்பிக்கின்றார்.

எங்கே கருணை இயற்கையின் உள்ளன

அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே                                          962

உரை : எவ்வெப் பொருள்களில் அருட் பண்புகள் இயல்பாகவுள்ளனவோ, அவ்வப் பொருள்களில் விளங்கியருளுவது அருளுருவாகிய பெரிய சிவ பரம்பொருள். எ.று.

திருவருளே சிவத்துக் குருவாதலால் “அருட் பெருஞ் சிவம்” என அறிவிக்கின்றார். அருளிற் பெரியது பிறிது யாதும் இல்லை யென்று பெரியோர் கூறுதலால், “அருட் பெருஞ் சிவம்” என்கின்றார். உலகிலுள்ள உயிர்ப் பொருள்கள் அருளாட்சிக்குரியனவாகலின் அவற்றை “எங்கே” என்று குறிக்கின்றார். எங்கே என்றது ஈண்டுப் பொருள் மேனின்றது. கல்வி கேள்விகளாற் செயற்கையின் உளதாகாமல் இயல்பாக வுளதாகும் அருட் பண்பு சிறப்பாதலால், “இயற்கையின் உள்ளன” என இயம்புகின்றார். தீ யெரியுமிடத்து ஒளி விளங்குதல் போல, அருட் பண்பு உளதாமிடத்துச் சிவம் திகழ்வது விளங்க, “அங்கே விளங்கிய அருட் பெருஞ் சிவமே” என விளம்புகின்றார்.

ஆரே என்னினும் இரங்குகின் றார்க்குச்

சீரே அளிக்கும் சிதம்பர சிவமே                                          964

உரை : கொலை பாதகராயினும் அவர்பால் அருள் கொண்டு, மனமிரங்கும் பண்பும் செயலும் உடையவர்க்குப் புகழ் விளக்குவது ஞானாகாசத்தில் ஒளிரும் சிவ பரம்பொருள். எ.று.

இரக்கப் பண்பில்லாத அரக்கராயினும் அவருடைய செயல் கண்டு அருள் புரியும் நல்லோர்களை, “யாரே யெனினும் இரங்குகின்றார்” எனக் கூறுகின்றார். சீர் - புகழ். அழியாப் புகழ் எனச் சிறப்பித்தற்குச் “சீரே” எனப் பொது வாய்பாட்டிற் புகல்கின்றார்.

பொய்ந்நெறி அனைத்தினும் புகுத்தா தெனைஅருள்

செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே                                          966

உரை : பொய்யான மார்க்கங்கள் எவற்றிலும் செல்லவிடாமல் எளியவனாகிய என்னைத் திருவருள் மெய்ந் நெறியின்கண் செலுத்தியாண்டருள்வது ஞான சபையின்கண் விளங்கும் சிவ பரம்பொருள். எ.று.

இன்பம் தருவனபோலத் தோன்றித் துன்பப் படுகுழியில் வீழ்விக்கும் அறிவு ஒழுக்கங்களை யுணர்த்தும் சமயங்களைப் “பொய்ந்நெறி” எனப் புகல்கின்றார். தன்னுடைய அறிவு விருப்பு தொழில்களை இயக்குவது திருவருள் என்ற உணர்வினராதலால் வடலூர் வள்ளல் “புகுத்தாது” என்றும், “செலுத்திய” என்றும் கூறுகின்றார். திருவருள் ஞானமும் ஒழுக்கங்களும் கொண்ட மெய்ம்மைச் சிவநெறி “அருட் செந்நெறி” எனப்படுகிறது. சிற்சபை - ஞான சபை.

கொல்லா நெறியே குருவருள் நெறிஎனப்

பல்கால் எனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே                                          968

உரை : உயிர்களைக் கொல்லாமையாகிய சன்மார்க்கமே ஞானாசிரியர்கள் உபதேசித்தருளிய மெய்ந்நெறியாம் என்று, பலமுறையும் எளியவனாகிய எனக்கு உரைத்தருளியது மெய்ம்மைச் சிவ பரம் பொருள். எ.று.

கொல்லாமையாகிய அருள் நெறி “கொல்லா நெறி” எனப்படுகிறது. “தன்னை ஓருயிர் கொல்ல வரினும் தான் அதனைக் கொல்லற்க” என்பது கொல்லா நெறி. திருவள்ளுவர் திருமூலர் முதல் தாயுமானவர் ஈறாகவுள்ள ஞானவான்கள் வற்புறுத்திய நெறியாதலால், “குருவருள் நெறி” என்று கூறுகின்றார். கேட்டும் சிந்தித்தும் தெளிந்த போதினும் முக்குண வயத்தால் மன முதலிய கரணங்கள் திரிதல் இயல்பாகலின், “பலகால் எனக்குப் பகர்ந்த மெய்ச் சிவமே” என்று தெரிவிக்கின்றார். “நிர்க்குண நித்திய சிவம்” என்றற்கு “மெய்ச் சிவம்” என வற்புறுத்துகின்றார்.

உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக

செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே                                          970

உரை : உலகிலுள்ள உயிர்களெல்லாவற்றையும் தன்னுயிர் போலப் பொதுவியல்புடையன என்று மனத்திற் பதியக் காண்பாயாக. கோபம் முதலிய குற்றங்கள் எல்லாவற்றையும் விட்டொழிக என்று உபதேசித்தருளியது சிவ பரம்பொருள். எ.று.

ஞான மருளும் ஆசிரியனைச் சிவ மென்றே கருதவேண்டும் என்பது சிவநெறியாதலால், ஈண்டு ஞான குருவைச் “சிவம்” என்று கூறுகின்றார். இன்பத்தில் மகிழ்தலும் துன்பத்தில் வருந்துதலும் எல்லாவுயிர்கட்கும் பொதுவியல்பாதலால், “பொதுவின்” என்றும், மனத்திற் பதிவது மறதியால் மறையாது என்பது பற்றி, “உளம்பட நோக்குக” என்றும் இயம்புகின்றார். செயிர் - கோபம். கோபம் எழும்போது எல்லா நன்ஞானமும், நல்லொழுக்கங்களும் மறைந்தொழிதலால், “செயிர் எலாம்” என்று தெரிவிக்கின்றார்.

பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல

உயிர்த்திரள் ஒன்றென உரைத்தமெய்ச் சிவமே                                          972

உரை : மன முதலிய கரணங்களின் மிக்க செயல் வகைகள் பற்பலவாகும்; ஆயினும் அவற்றுக்கு முதலாகிய உயிரினம் ஒரு தன்மைய என உபதேசித்தருளியது மெய்ம்மைச் சிவகுரு. எ.று.

பயிர்ப்பு - மிகுதி. மனம், சித்தம், அகங்காரம், புத்தி என்ற நான்கும் கரணங்களாகும்; மனம் பற்றுதலும், சித்தம் சிந்தித்தலும், அகங்காரம் தெளிதலும், புத்தி ( உண்மை ) யுணர்தலும் இக்கரணங்களின் செயல் வகைகள். இவற்றைத் தன்னுட் கொண்டு மனம் செய்யும் நினைவு வகைகள் எண்ணிறந்த பலவாதல் பற்றி, “கரணப்பரிசுகள் பற்பல” என்று கூறுகின்றார். உயிர்தோறும் கரணங்கள் உளவாயினும் செயல் வகையில் வேறுபடுகின்றன. ஓருயிரின் கரணம் போல் மற்றொன்றின் கரணம் இருப்பதில்லை. ஆயினும் தன்மை வகையில் எவ்வுயிரும் ஒன்றே என்றற்கு, “உயிர்த்திரள் ஒன்று” என்கின்றார்.

உயிருள்யாம் எம்முள் உயிர்இவை உணர்ந்தே

உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே                                          974

உரை : உயிர் வகையுள் யாமும் ஒன்றே; இவ்வுயிர் வகை யாவும் எம்மினமே என்று உணர்ந்து அவ்வுயிர்கட்கு வேண்டும் நலங்களையே விரும்பிச் செய்க என்று உபதேசித்தருளுவது மெய்ம்மைச் சிவகுரு. எ.று.

உயிரினத்தின் வேறாக யாரும் தம்மை எண்ணலாகாது என்றற்கு, “உயிருள் யாம்” எனவும், ஏனையுயிர்கள் பலவும் எம்முடைய இனத்தவையே என்று எண்ண வேண்டும் என்பாராய், “இவை எம்முயிர் என உணர்ந்து” என்றும், அவ்வுணர்வால் ஏனை உயிர்கட்கு நலமே புரிய வேண்டும் என்பாராய், “உயிர் நலம் பரவுக” என்றும் ஞானாசிரியர் உபதேசித்தருளினார் என மொழிகின்றார். நலம் புரிவதே யன்றி அவற்றிற்குள்ள நலம் கெடாதவாறு பாதுகாத்திடுக என்றற்குப் “பரவுக” எனப்படுகிறது.

இயலருள் ஒளிஓர் ஏகதே சத்தினாம்

உயிர்ஒளி காண்கஎன் றுரைத்தமெய்ச் சிவமே                                          976

உரை : சிவத்தின்கண் இயலும் திருவருளொளி, ஓரோர் உயிரின்கண் சிறிதளவே விளங்குமாக, ஒவ்வோர் உயிரிடத்தும் இன்பவொளி யுண்மை இனியது செய்து காண்பாயாக என உபதேசித்தருளியது மெய்ம்மைச் சிவகுரு. எ.று.

சிவமும் சத்தியும் பிரிப்பற நிற்றலின், திருவருள் ஞானவொளி ஓரோர் உயிரின்கண் சிறிதளவே காணப்படுவது புலப்பட, “இயல் அருளொளி ஏக தேசத்தினாம்” என்றும், உயிர்தோறும் உளதாகிய இன்பவொளி இனியது செய்தவிடத்து உயிர் முற்றும் பரந்து விளங்கித் தோன்றுதலை எப்போதும் காண்க என்று வற்புறுத்தற்கு, “உயிரொளி காண்க” என ஞானாசிரியர் உபதேசிக்கின்றார். அருளொளி ஏக தேசத்தில் தோன்றும் என்றதனால், உயிர்களின் இன்பவொளி முற்றும் பரவி இனிது விளங்கும்; அதனைக் காண்பாயாக என்பது குறிப்பு.

அருளலா தணுவும் அசைந்திடா ததனால்

அருள்நலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே                                          978

உரை : சிவசத்தியாகிய திருவருளாலன்றி உலகில் ஓரணுவும் அசையாதாதலால், அத்திருவருளின் நலம் உணர்ந்து பரவுவாயாக என உரைத்தருளுவது மெய்ஞ்ஞான சிவ பரம்பொருள். எ.று.

அருள் என எடுத்து மொழிவதால் சிவசத்தியாகிய திருவருள் வருவிக்கப்பட்டது. “தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும் சத்தி பின்னமிலான் எங்கள் பிரான்” ( திருவருட் பயன் ) என உமாபதி சிவனார் உரைப்பது காண்க. “சிவமெனும் பொருளும் ஆதிசத்தியொடு சேரின் எப்பொருளும் வல்லதாம்” என்று பெரியோர் கூறுவது பற்றி, “அருளலாதணுவும் அசைந்திடாது” என இயம்புகின்றார். “அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம்” ( சிவசித்தி ) என அருணந்தி சிவனார் உரைப்பது காண்க. திருவருளின் ஆற்றற் பெருமை கூறியது, அதனைப் போற்றிப் பரவுதல் வேண்டும் என்றற்கு, “அருணலம் பரவுக” என ஞானாசிரியர் உபதேசிக்கின்றார்.

அருளுறின் எல்லாம் ஆகும்ஈ துண்மை

அருளுற முயல்கஎன் றருளிய சிவமே                                          980

உரை : திருவருள் எய்தினால் அது எல்லா நலங்களையும் பயப்பதாகும்; இது முக்காலும் உண்மை; ஆதலால் அதற்குரிய திருவருள் ஞானம் பெற முயல்க என உபதேசித்தருளுவது ஞான குருவாகிய சிவம். எ.று.

அருள் - சிவசத்தியாகிய திருவருள் ஞானம். ஏனை ஞானப் பேறுகள் அனைத்தினும் தலைமையும் பெறலருமையும் வாய்ந்த தென்றற்கு, “அருளுறின் எல்லாம் ஆகும்” என அறிவுறுத்துகின்றார். அதன் மெய்ம்மையை வற்புறுத்தற்கு “ஈது உண்மை” என்கின்றார். அருளுற முயறலாவது, திருவருள் ஞானம் பெற்று அருள் நெறிக்கண் நிலைபெற நின்று ஒழுகுதலாகும். ஞானகுரு சிவமெனக் கருதப் படுதலின், “சிவமே” எனத் தெரிவிக்கின்றார். “வானவ ரென்றும் மனிதரிவ ரென்றும், றேனமர் கொன்றைச் சிவனருளல்லது, தானமர்ந்தோரும் தனித் தெய்வ மொன்றில்லை” ( திருமந்தி ) என்று திருமூலர் உரைப்பது காண்க.

அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெலாம்

இருள்நெறி எனஎனக் கியம்பிய சிவமே                                          982

உரை : திருவருளை நல்கும் நெறியொன்றே பரசிவஞானப் பெருநெறியாகும்; மற்றவை யாவும் அஞ்ஞானத்தை விளைவிக்கும் இருள் சூழ்ந்த நெறியாகும் என்று எனக்கு உபதேசித்தருளியது பரம குருவாகிய சிவமாகும். எ.று.

அயராத இன்பத்தை நல்கும் செம்மை நெறியாதலால், சிவநெறியைத் “திருவருள் நெறி” எனவும், அஃது ஒன்றே தெளிவான பரஞானம் பயக்கும் சன்மார்க்கம் என்றற்குத் “தெருள் நெறி” எனவும் இயம்புகின்றார். மற்றைய நெறிகள் அறியாமையில் முடிதலால், “மற்றெலாம் இருள் நெறி” என வுரைக்கின்றார். “பரஞானத்தாற் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர், பதார்த்தங்கள் பாரார்; பார்க்க வருஞானம் பலஞானம் அஞ்ஞான விகற்பம்” ( சிவ. சித்தி ) என்று அருணந்தி சிவனார் கூறுவதறிக. அஞ்ஞானமாய் முடிதலால், “இருள் நெறி” எனக் குறிக்கின்றார்.

அருள்பெறில் துரும்பும்ஓர் ஐந்தொழில் புரியும்

தெருள்இது எனவே செப்பிய சிவமே                                                                                   984

உரை : திருவருளைப் பெறுமாயின் சிறு துரும்பும் சிவமாம் தன்மையுற்றுப் படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் எளிதிற் செய்ய வல்லதாம் எனத் தெளிவாயாக என்று எனக்குத் தெரிவித்தருளியது சிவகுருவாகிய பரசிவம். எ.று.

அருள் - சிவசத்தியாகிய சிவஞானம். “சத்தி தன் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும்” என்பர் சிவஞான சித்தியார். திருவருட் சத்தி ஒன்றே யாயினும் இச்சை, ஞானம், கிரியை என்று மூன்றாகிச் சிவனது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழிற்கும் ஏதுவாதலால், “அருள் பெறின் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும்” என அறிவுறுத்தி, இதனைத் தெளிவாக மனத்திற் கொள்க என்பாராய், “தெருள் இதுவெனவே செப்பிய சிவமே” என்று உபதேசிக்கின்றார். “ஒன்றதாய் இச்சா ஞானக் கிரியை யென்றொரு மூன்றாகி நின்றிடும் சத்தி” என்று பெரியோர் உரைப்பது காண்க.

அருளறி வொன்றே அறிவுமற் றெல்லாம்

மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே                                          986

உரை : பெறப்படும் ஞானங்கள் எல்லாவற்றினும் திருவருள் ஞானமொன்றே தலையாய ஞானமாகும்; மற்ற ஞானங்கள் பலவும் அறிவை மயக்கும் மருளறிவாம் என உரைத்தருளியது மெய்ம்மைக் குருவாகிய சிவம். எ.று.

அருளறிவு - திருவருள் ஞானம். காணப்படும் பொருள் அறிவு ஆற்றல் செயல் பலவற்றில் மூல வுண்மையைக் கண்டறிவது தலையாய ஞானமாதலால், சிவத்தின் ஐம்பெருந் தொழில்கட்கும் மூல காரணம் திருவருட் சத்தி எனக் காண வுதவுதலால், “அருளறிவு ஒன்றே அறி” வெனக் கூறுகின்றார். மற்றவை உண்மையைக் காட்டாமல் மயக்குதல் பற்றி, “மற்றெல்லாம் மருள் நெறி” என வற்புறுத்துகின்றார்.

அருட்சுகம் ஒன்றே அரும்பெறல் பெருஞ்சுகம்

மருட்சுகம் பிறஎன வகுத்தமெய்ச் சிவமே                                          988

உரை : திருவருளாற் பெறலாகும் இன்ப மொன்றே பெறுதற் கரிதாம் பெருமை வாய்ந்த சிவானந்தமாகும்; மற்றவை இன்பமாய்த் தோன்றித் துன்பத்தில் வீழ்த்தும் மருட் சுகமாம் என உபதேசித்தருளியது குருவாகிய மெய்ம்மைப் பரசிவம். எ.று.

திருவருள் ஞான யோகத்தாற் பெறலாகும் பேரின்பம், அருட் சுகம் எனப்படுகிறது. பெறுதற் கருமையே இதற்குப் பெருமை எனத் தெரிவித்தற்கு, “அரும் பெறற் பெருஞ் சுகம்” என்று உரைக்கின்றார். மருட் சுகம் - இன்பம் போலத் தோன்றி நிலையின்றித் துன்பத்தில் வீழ்த்தும் இயல்பினது. மருளுணர்வால் துய்க்கப்படுவதால் இது மருட் சுகமாயிற்று.

அருட்பே றதுவே அரும்பெறற் பெரும்பே

றிருட்பே றறுக்கும்என் றியம்பிய சிவமே                                          990

உரை : திருவருள் ஞானப் பேறு பெறுதற் கரிய பெரிய பேறாகும்; அது தன்னைப் பெற்ற சான்றோர்களை அஞ்ஞானப் பேறுகள் எய்தாமல் அவற்றின் தொடர்பறுத்து ஆட்கொள்ளும் என அறிவுறுத்தியது அருட் குருவாகிய பரமசிவம். எ.று.

திருவருள் ஞானப் பேறு - திருவருள் ஞானத்தாற் பெறலாகும் சிவபோகச் செல்வம். சிவஞான சிவயோகங்களாலன்றிப் பெறலாகாமையின், அதனை “அரும் பெறற் பெரும் பேறு” என அறிவிக்கின்றார். அதனிற் பெருமை வாய்ந்தது வேறின்மையால், “பெரும் பேறு” என்று புகழ்கின்றார். இருட் பேறு - உலகியலிற் பெறலாகும் பொருளும் புகழும் தர வரும் பேறுகள். அவை துன்ப விருளைப் பயக்கும் சிறுமையுடையவையாதலால், “இருட் பேறு” என்றும், அதற்கு ஏது வினைத்தொடர்பாதலால், அதன் தொடர்பை அருட் பேறு அறுத்தொழிக்கும் என்றற்கு, “இருட் பேறறுக்கும்” என்றும் கூறுகின்றார். “வினையாலசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்” என்பது சிவஞான போதம் ( சூ. 12 ).

அருட்டனி வல்லபம் அதுவே எலாம்செய்

பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே                                          992

உரை : திருவருளின் ஆற்றலுக்குச் சான்றாவது அதுவேயாம்; அது எல்லாம் செயல் வல்ல தனிப் பொருளாகும்; அது ஒப்பற்ற ஞானப் பொருள் என உபதேசித்தருளியது மெய்ப் பொருட் குருவாகிய சிவம். எ.று.

திருவருள் சிவசத்தி யென்பது பற்றி, அதன் தனிப் பேராற்றலை, “தனி வல்லபம்” என்கின்றார். வல்லபம் - வல்லமை; ஆற்றல். ஒப்புயர்வற்றதாகலின், திருவருளின் ஆற்றலை, “அதுவே எலாம்செய் பொருள்” என இயம்புகின்றார். ஆற்றலுக்கு உறைவிடம் பொருளாதலால், திருவருட் சத்திக்கு இடமாவது சிவம் என்பாராய், “எல்லாம் செய் பரம்பொருள்” என மொழிகின்றார். சிவம் அசித்தாகாது சித்துப் பொருள் எனத் தெரிவித்தற்குத் “தனிச் சித்து” எனக் குறிக்கின்றார்.

அருளறி யார்தமை அறியார் எம்மையும்

பொருளறி யார்எனப் புகன்றமெய்ச் சிவமே                                          994

உரை : திருவருள் ஞானமில்லாதவர் தம்மையே அறியாதவராவர்; அதனால் எம்மையும் திருவருட் குரிய பொருள் என அறிய மாட்டாதவராவர் என்று உரைத்தருளியது மெய்ம்மைக் குருவாகிய பரசிவம். எ.று.

திருவருளையும் அதனை யுடைய சிவத்தையும் அறியாதவரை “அருளறியார்” எனக் குறிக்கின்றார். அவர்கள் தம்மையும் தம்மையுடைய திருவருளையும், அதனோடு தொடர்புடைய யாமும் திருவருட்குரிய பொருளாதலையும் உணர மாட்டார் என்பார், “தமையறியார் எம்மையும் பொருளறியார்” எனப் புகல்கின்றார். “தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார், எம்மை யுடைமை எமை இகழார்” என மெய்கண்ட தேவர் கூறுவது காண்க.

அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை

பொருள்நிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே                                          996

உரை : திருவருள் ஞான நிலை யொன்றே எல்லா நலங்களையும் பெறுதற்குரிய நன்னிலையாகும்; அதுவே மெய்ப்பொருள் நிலையுமாம் என்று அறிக என உபதேசித்தருளுவது மெய்ம்மை ஞான குருவாகிய சிவம். எ.று.

திருவருள் ஞானப் பேற்றின் செவ்விய நிலையை எய்தினோர் எல்லாவகை ஞான யோக போகங்களையும் பெறுவர் என்பார், “அருணிலை யொன்றே அனைத்தும் பெறுநிலை” என்று கூறுகின்றார். ஞான சித்தி, யோக சித்தி, கன்ம சித்தி என்ற சித்திகள் பலவும் அடங்க “அனைத்தும் பெறுநிலை” என்கின்றார் எனினும் பொருந்தும். அருள் ஞான யோக நிலையே அனைத்தையும் பெறுவிப்பது என்பார், “அனைத்தும் பெறுநிலை” எனப் பேசுகின்றார். பொருள் வகையில் மெய்யானதும் தலையாயதும் முடிவாயதும் மெய்ப்பொருளாகிய பரஞானப் பரம்பொருளாதலால், “மெய்ப்பொருணிலை” என விளம்புகின்றார்.

அருள்வடி வதுவே அழியாத் தனிவடி

வருள்பெற முயலுகென் றருளிய சிவமே                                          998

உரை : திருவருள் ஞான வடிவம் என்றும் பொன்றாத ஒப்பற்ற வடிவமாதலால் அந்த அருள் வடிவத்தைப் பெறுதற்கு முயலுவாயாக என்று உபதேசித்தருளுவது ஞான குருவாகிய சிவம். எ.று.

திருவருட் சத்தியால் சிவம் பெறுகின்ற அருவம், அருவுருவம், உருவமாகிய பல எக்காலத்தும் எவ்வாற்றாலும் அழிவுறாதவை என்றற்கு, “அருள் வடிவதுவே யழியாத் தனிவடிவு” என எடுத்து மொழிகின்றார். மெய்ப்பொருளை யுணர்ந்தடையும் சிவஞானிகள் பெறும் “நண்ணரிய சிவானந்த ஞான வடி”வமும் அவ்வியல்பினதே என வற்புறுத்தற்கு அதனைப் பெற முயலுக என உபதேசிக்கின்றார் என்பது விளங்க, “அருள் பெற முயலுக என்று அருளிய சிவமே” என உரைக்கின்றார்.

அருளே நம்மியல் அருளே நம்உரு

அருளே நம்வடி வாம்என்ற சிவமே                                          1000

உரை : சிவமாகிய பரம்பொருளின் இயல்பு அருட் டன்மையாகும்; அப்பரசிவமாகிய நமது உருவங்களும் அருள் காரணமாக இயலுவன; நமது பல்வேறு மூர்த்தங்களும் திருவருளால் அமைவனவாம் என உபதேசித்தருளுவது சிவகுருவே. எ.று.

திருவருளின் தன்மை முற்றும் சிவமாதலின், “அருளே நம்மியல்” என்கின்றார். ஆன்மாக்கட்கு அருள் புரிவது காரணமாக உருவம் அருவம் முதலிய உருவ பேதங்கள் நிகழ்வன என்பாராய், “அருளே நம்முரு” என்று வகுத்துரைக்கின்றார். “ஒரு நாமம் ஓருருவம்” இல்லாத சிவம், நாம ரூபங்களோடு தோன்றும் மூர்த்தம் வடிவமாம் என அறிதல் வேண்டும். “சூடக முன்கை மங்கை யொருபாகமாக அருள் காரணங்கள் வருவான்” ( நறையூர் ) என்று ஞானசம்பந்தர் நவின்றோதுவது காண்க.

அருளே நம்அடி அருளே நம்முடி

அருளே நம்நடு வாம்என்ற சிவமே                                          1002

உரை : அருளுருவாகிய சிவனுக்குத் திருமுடியும் திருவடியும் இடையேயுள்ள தேகமும் யாவையும் திருவருளேயாம் என்று உபதேசிப்பது ஞான குருவாகிய சிவம். எ.று.

சிவபெருமானுக்குத் திருவருளே திருமேனி எனத் தெரிவித்தவாறாம்.

அருளே நம்அறி வருளே நம்மனம்

அருளே நம்குண மாம் என்ற சிவமே                                          1004

உரை : அருளே திருமேனியாகவுடைய சிவபெருமானுக்கு மனமும் குணமும் அறிவுமாகிய அனைத்தும் திருவருளேயாம் என அறிவுறுத்துவது ஞான குருவாகிய சிவம். எ.று.

மனமாகிய கருவி அறிவு வயம் நின்று குணநிலைக்கொப்ப இயங்குவதாகலின், அறிவு மனம் குணம் என முறைப்படுத்து மொழிகின்றார்.

அருளே நம்பதி அருளே நம்பதம்

அருளே நம்இட மாம்என்ற சிவமே                                          1006

உரை : சிவபெருமானுக்கு அமைந்த பதமும் இடமும் ஊரும் யாவும் திருவருளேயாம் என்று உரைத்தருளுவது ஞான குருவாகிய சிவம். எ.று.

பதம் - சிவபதம்; இடம் - சிவலோகம்; பதி - சிவமாநகர்.

அருளே நம்துணை அருளே நம்தொழில்

அருளே நம்விருப் பாம்என்ற சிவமே                                          1008

உரை : சிவமாகிய நமக்கு விருப்பமும் தொழிலும் துணையுமாவது அருளே என்று உரைத்தருளுவது சிவம். எ.று.

துணை யாதும் வேண்டாத தனிப் பரம்பொருளாயினும், அருட்டிருமேனி கொண்டு நிற்பது பற்றி, “அருளே நம் துணை” என அறிவிக்கின்றார்.

அருளே நம்பொருள் அருளே நம்ஒளி

அருளே நாம்அறி வாய்என்ற சிவமே                                          1010

உரை : அருட் டிருமேனியை யுடைய சிவபெருமானுக்கு ஒளியும் அருள்; வேண்டும் பொருளும் அருள்; அவர் அறிவால் அறிவன யாவும் அருளே என அறிவிப்பது ஞான குருவாகிய சிவம். எ.று.

ஒளி - புகழுமாம். “உறங்குமாயினும் மன்னவன் தன்னொளி கறங்கு வெண்டிரை வையகம் காக்குமால்” ( சீவக ) என்பது காண்க.

அருளே நம்குலம் அருளே நம்இனம்

அருளே நாம்அறி வாய்என்ற சிவமே                                          1012

உரை : அருளுடைமையே நமது குலப் பெருமை; அருளுடையவரே நம் இனத்தவராவர்; நாம் அறியும் செயலும் திருவருட் செயலே என அறிவித்தருளுவது ஞான குருவாகிய சிவம். எ.று.

குலம் - சிவபெருமான் உறையும் திருக்கோயிலுமாம். பெருமையாற் பிறங்குவதாகலின், குலம் எனப்பட்டது. அறிவு - அறியும் செயல் மேனின்றது.

அருளே நம்சுகம் அருளே நம்பெயர்

அருளே நாம்அறி வாய்என்ற சிவமே                                          1014

உரை : சிவபெருமான் நல்கும் சுகம் திருவருளின்பமாவது; திருப்பெயர் பலவும் திருவருளே; அறிவதெல்லாம் அருளே என்று அறிவித்தருள்வது ஞான குருவாகிய சிவம். எ.று.

சிவத்தின்பாற் பெறலாகும் சிவபோக சுகமும் திருவருள் என்பதாம். சிவனுக்கு வழங்கும் பன்னூறாயிரம் பெயர்களும் திருவருள் விளக்கமேயாம் என்றற்கு, “அருளே நம் பெயர்” என்கின்றார்.

அருள்ஒளி அடைந்தனை அருள்அமு துண்டனை

அருண்யதி வாழ்கஎன் றருளிய சிவமே                                          1016

உரை : மகனே, நீ அருண் ஞானத்தைப் பெற்று விட்டாய்; திருவருளாகிய அமுதுண்டு மகிழ்கின்றாய்; இனி அந்த அருள்ஞான வழியில் வாழ்வாயாக என்று எனக்கு உபதேசித்தருளியது ஞானகுருவாகிய சிவம். எ.று.

திருவருள் ஞானியாக விளங்குதல் பற்றி, “அருளொளி யடைந்தனை” என்றும், இன்பம் விளங்குதலால் “அருளமு துண்டனை” என்றும் இயம்புகின்றார். அருள் மதி - திருவருள் அறிவு காட்டும் வழி.

அருள்நிலை பெற்றனை அருள்வடி வுற்றனை

அருளர சியற்றுகென் றருளிய சிவமே                                                                                   1018

உரை : மகனே, நீ திருவருட் பெரும் பதத்துக்குரியனாய் விட்டாய்; திருவருளே வடிவாகப் பெற்றுள்ளாய்; இனி நீ திருவருளாட்சி செய்க என வுரைத்தருளியது ஞான குருவாகிய சிவம். எ.று.

திருவருள் ஞானிகள் பெறும் சிவபதம் “அருணிலை” எனப்படுகிறது. மேனி முற்றும் அருள் ஒளி திகழ்வது விளங்க, “அருள் வடிவுற்றனை” என்று மொழிகின்றார். எல்லா வுயிரிடத்தும் அருள்கொண்டு நலமே புரிந்தொழுகுவது அருளாட்சி.

உள்ளகத் தமர்ந்தென துயிரில் கலந்தருள்

வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே                                                                                   1020

உரை : என்னுடைய உள்ளத்தின்கண் எழுந்தருளி, எனது உயிர் முழுதும் கலந்தொளிரும் வள்ளலாகிய சிவபிரான் திருச்சிற்றம்பலத்தின் கண் நடம் புரிந்திலங்கும் சிவலோக நாயகன். எ.று.

உள்ளம் - உள்மனம்; உயிர் தங்கும் இடமும் அதுவாம் என்பர் உயிர்க்குயிராய்க் கலப்பது புலப்பட, “உயிரிற் கலந்து” எனவும், கலந்து செய்வது இது என்றற்கு, “அருள் வள்ளல்” எனவும், மொழிகின்றார். அருளுதல் - அருளறிவு தருதல். சிற்றம்பலத்தின்கண் ஆடல் புரிதலால், “நடம் புரிந்திலங்கும்” என உரை கூறப்பட்டது. சிவபதி - சிவலோகத்துக்கு நாயகன். தில்லைச் சிற்றம்பலத்துக் கருகிலுள்ள திருப்புன்கூர்ச் சிவனைச் “சிவலோக நாயகன்” என்பர்.

நிகரிலா இன்ப நிலைநடு வைத்தெனைத்

தகவொடு காக்கும் தனிச்சிவ பதியே                                          1022

உரை : ஒப்பற்ற இன்பத்திடையே என்னை யிருத்தித் தக்கவகையில் காத்தருளுவது ஒப்பற்ற சிவலோக நாயகனாகிய பரசிவம். எ.று.

சிவஞான சிவபோகத்தால் எய்தும் சிவானந்தம் “நிகரிலா இன்பம்” எனப்படுகிறது. நிகர் - ஒப்பு. நடு வைத்து என்பது சிறப்புற இருக்கச் செய்து என்பதாம். இன்பத்தின் மயக்கத்தால் உள்ளம் தடுமாறாவண்ணம் காத்தமை கூறுவார், “தகவொடு காக்கும்” என வுரைக்கின்றார்.

சுத்தசன் மார்க்கச் சுகநிலை தனில்எனைச்

சத்தியன் ஆக்கிய தனிச்சிவ பதியே                                          1024

உரை : சுத்த சன்மார்க்க மென்னும் நெறியின்கண் பெறலாகும் சிவானந்த நிலையில் என்னை இருப்பித்துச் சத்தாகிய சிவமாக்கிய ஒப்பற்றவன் சிவலோக நாயகனாம் சிவம். எ.று.

சுத்த சன்மார்க்கமாவது, எவ்வுயிரும் தன்னுயிர் போல் எண்ணி வேறுபாட்டுணர்வின்றி என்றும் இன்பமே நினைந்து செய்தொழுகும் ஞான நெறி. இதனால் உண்டாகும் இன்ப நிலையைச் “சுத்த சன்மார்க்கச் சுகநிலை” என்று சொல்லுகின்றார். சத்தியன் - சத்தாகிய சிவஞானத்தால் சிவமாகியவன்.

ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருள்என்

கைவரப் புரிந்த கதிசிவ பதியே                                          1026

உரை : அயன் மால் முதலிய தேவதேவர்களும் பெறுதற்கரிதாகிய பரஞான பரபோகமாகிய இன்பம் எனக்குக் கைவருமாறு அருள் புரிந்தது உயர் நிலைக்குரிய சிவமாகிய பதிப்பொருள். எ.று.

பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்ற ஐவரும் ஈண்டு ஐவர் எனப்படுகின்றனர். ஐவரும் படைத்தல் காத்தல் முதலிய பெரிய தொழில்களில் எப்போதும் ஈடுபட்டிருத்தலால் பரஞான பரபோகம் அவர்கள் பெறுதற் கரிதாயிற் றென உணர்த்தற்கு, “ஐவரும் காண்டற் கரும் பெரும் பொருள்” எனக் கூறுகின்றார். திருவருளாலன்றிப் பெறலாகாமையின் “கைவரப் புரிந்த சிவபதி” என இயம்புகின்றார். சிவலோக நாயகன் - சிவபதி.

துன்பம் தொலைத்தருட் சோதியால் நிறைந்த

இன்பம் எனக்கருள் எழிற்சிவ பதியே                                                                                   1028

உரை : மலப்பிணிப்பால் உளதாகும் துன்பமாகிய இருளைப் போக்கித் திருவருள் ஞானவொளி நிறைந்த இன்ப வாழ்வை எளியனாகிய எனக்களித் தருளுவது அழகிய பதியாகிய சிவம். எ.று.

துன்பம் - மும்மலச் சேர்க்கையால் விளையும் அறியாமையாகிய இருளால் உண்டாகும் துன்பங்கள். ஒளி தோன்ற இருள் மாய்வதுபற்றி, “துன்பம் தொலைத்து அருட்சோதி நிறைந்த” என்று கூறுகின்றார். அருளொளி இன்பமாதலால், “அருட் சோதியால் நிறைந்த இன்பம்” எனப்படுகிறது. எனினும் அருட் சோதி நிறைவித்துத் துன்பம் தொலைப்பது கருத்தாகக் கொள்க.

சித்தமும் வாக்கும் செல்லாப் பெருநிலை

ஒத்துற வேற்றிய ஒருசிவ பதியே                                          1030

உரை : சிந்தையும் மொழியுமாகிய கரணங்கட் கெட்டாத பெருமை சிறந்த ஞானநிலை, அக்கரணங்கள் ஒப்ப வுணரச் செய்தருளியது ஒப்பற்ற பதிப் பொருளாகிய சிவம். எ.று.

சிவானந்தம் - சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத நிலைமைத் தென யாவரும் கூறுபவாயினும், எளியனாகிய என் கரணங்கட்கு எட்ட வைத்து அதனைப் பலகாலும் நினைந்தும் பல பாட்டுக்களால் பாடியும் பரவுமாறு செய்துளது என்பார், “ஒத்துற வேற்றிய ஒரு சிவபதி” என வுரைக்கின்றார். சித்தம் - மனமாகிய சிந்தை. சிந்திக்கும் செயலுடையதாதல் பற்றி மனம் சிந்தை யென்றும், சித்தம் என்றும் வழங்கும். இதனை, ஒத்து உறவேற்றிய எனக் கொண்டு, பசுகரணங்களாக இருந்த போது எட்டாதொழிந்த ஞானானந்த நிலை, பதிகரணங்களாகிய போது எட்ட வுணர்ந்தும் பாடியும் மகிழச் செய்கிறது எனக் குறிப்பதாகக் கூறலும் உண்டு. எவ்வாற்றாலும் கரணங்கட்கு எட்டா தொழியுமாயின், சிவானந்தம் நுகர்வாரின்றி வெற்றுரையாய்க் கழியு மென அறிக.

கையற வனைத்தும் கடிந்தெனைத் தேற்றி

வையமேல் வைத்த மாசிவ பதியே                                          1032

உரை : செயலற வருத்தும் துன்பங்கள் யாவற்றையும் போக்கி மனம் தெளிவித்து உலகின்கண் என்னை வாழ வைத்தருளுவது பெரிய சிவலோக நாயகனாகிய சிவம். எ.று.

என்ன செய்வது என்று செயலறச் செய்யும் துன்பங்கள் கையறவு எனப்படுகின்றன. அத் துன்பங்களை நீக்கினாலன்றி உலகிற் செய்வன செய்து வாழலாகாமையின், “கையறவனைத்தும் கடிந்து” எனவும், கையறவு தோன்றின் மனம் கலங்கிச் செயல் வகை தெளியாமல் வருந்துவதால், “தேற்றி” எனவும் தெரிவிக்கின்றார். சிவபதி - சிவலோகத் தலைவன்; சிவமாகிய பதி எனவுமாம்.

இன்புறச் சிறியேன் எண்ணுதோ றெண்ணுதோ

றன்பொடென் கண்ணுறும் அருட்சிவ பதியே                                          1034

உரை : எளியவனாகிய யான் இன்புற வேண்டி நினைக்கும் போதெல்லாம் அன்புடன் என் நெஞ்சின்கண் அமர்ந்தருளுவது அருளுருக் கொண்ட சிவபதியாகிய சிவம். எ.று.

இன்ப வடிவினனாதலின், இன்பம் வேண்டுவோர் சிவனை நினைப்பது பற்றிச் “சிறியேன் இன்புற எண்ணுதோறு” என்று கூறுகின்றார். சிறியேன் என்பதிற் சிறுமை, இன்பத்தைத் தானே பெற மாட்டாத தன்மை குறித்து நின்றது. அப்பெருமானுடைய அருளாலன்றி எய்தலாகாமையால், “அன்பொடு என் கண்ணுறும் சிவபதியே” என வுரைக்கின்றார்.

பிழைஎலாம் பொறுத்தெனுள் பிறங்கிய கருணை

மழைஎலாம் பொழிந்து வளர்சிவ பதியே                                          1036

உரை : மயக்கத்தால் யான் செய்யும் பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி என்னுடைய உள்ளத்தின்கண் எழுந்தருளித் திருவருள் நலமனைத்தையும் மழை போற் பொழிந்து, என்னை உய்பிப்பது நாளும் உயர்ந்தோங்குகின்ற பதியாகிய சிவம். எ.று.

கணந்தோறும் சுழலும் சத்துவ முதலிய முக்குண வயத்தால் உயிர்கள் மயங்குவது இயல்பாகலின், பிழை யுண்டாதல் கண்டு பொறுத்தருளுகின்றாராதலின், “பிழை யெலாம் பொறுத்து” எனப் புகல்கின்றார். பிழை நீங்கிய உள்ளம் தூய்மை யடைவதால், “என்னுட் பிறங்கிய” எனவும், தனது திருவருள் ஒளியை மழை போலச் சொரிவது விளங்க, “கருணை மழை யெலாம் பொழிந்து” எனவும் இயம்புகின்றார். உயிர் தோறும் நாளும் தன் கருணையைப் பொழியும் திறம் புலப்பட, “வளர் சிவபதியே” என்று உரைக்கின்றார்.

உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது

குளத்தினும் நிரம்பிய குருசிவ பதியே                                                                                   1038

உரை : எனது மனத்தினும், கண்ணினும், உயிரிலும் நெற்றியிலும் நிறைவுடன் தோன்றுவது ஞான குருவாகிய சிவம். எ.று.

உளம், மனம், மானதக் காட்சி மகிழ்வித்தலால் “உளத்தினும்” எனக் கூறுகின்றார். கண்ணில் தோன்றுவது - மனித வடிவில் அன்புருவாய்க் காட்சி தருதல். உயிர் - உணர்வுருவாகிய உயிரின்கண் தெளிந்த உணர்வாய் ஒளிர்தல். இதனைத் தன்வேதனைக் காட்சியென்பர். குளம் - நெற்றி; கழுத்துமாம். நெற்றியில் புருவ நடுவில் காட்சி நல்கும் சாக்கிரக் காட்சி; கழுத்தின்கண் தங்கிக் காட்சி வழங்குதல் சொப்பனக் காட்சி. இந்நிலைகளில் தோன்றும் காட்சிகள் குறைவற நிறைந்திருக்கின்றமை விளங்க, “நிரம்பிய குருசிவ பதியே” என்று கூறுகின்றார்.

பரமுடன் அபரம் பகர்நிலை இவையெனத்

திறமுற அருளிய திருவருட் குருவே                                          1040

உரை : பரமெனவும் அபரம் எனவும் கூறப்படும் குருவருட் காட்சி நிலை இவை யென்று நெஞ்சிற் பதியுமாறு விளக்கிக் காட்டுவது திருவருள் உருவாகிய குருபரம்பொருள். எ.று.

பரம் - மேல்; அபரம் - கீழ். கண்ணிற் காண மனித வுருவிற் போந்து காட்சி தந்தருளுவது அபர நிலை; இலாடத்தானமாகிய புருவ நடுவிலும், கழுத்தாகிய சொப்பனத் தானத்திலும் தரப்படும் காட்சிகள் பராபர நிலை; சுழுத்தித் தானமாகிய மனத்தில் தரப்படும் காட்சியும், அதற்கு அதீதமான துரியத்தின்கண் உயிரறிய நல்கும் காட்சியும் பரநிலையாம்: அபரம், பராபரம், பரம் என ஞானகுரு தரிசனம் விளங்குதலால், “உளத்தினும் உயிரினும், கண்ணினும் குளத்தினும் நிரம்பிய குரு” என்றும், இக்காட்சி வகை நெஞ்சின்கண் நிலைபெறக் காட்டியது தோன்ற, “இவை யெனத் திரம் பெற வருளிய திருவருட் குருவே” என்றும் இயம்புகின்றார். ஸ்திரம் - திரமென வந்தது. கண்ணினும் குளத்தினும் உளத்தினும் உயிரினும் எனக் கூறுதல் வேண்டுமாயினும், செய்யுளாதலால் மாறி நிறுத்திப் பாடுகின்றார். செய்யுட்களில் இசை யின்பம் பற்றி முறை மாறுவது இயல்பு.

மதிநிலை இரவியின் வளர்நிலை அனலின்

திதிநிலை அனைத்தும் தெரிந்தசற் குருவே                                          1042

உரை : சந்திரனது இயல்பு, சூரியனுடைய பெருகும் இயல்பு, தீயினுடைய காக்கும் தன்மை ஆகிய எல்லாவற்றையும் விளக்கியருளுவது மெய்ம்மைக் குருவாகிய சிவம். எ.று.

சூரிய மண்டலத்தின் உயர்ந்தது மதி மண்டல மென்பது புராணக் கொள்கையாதலின் அதனை முற்பட மொழிகின்றார். சூரிய வொளி நாளும் பெருகும் இயல்பின தென்றற்கு, “இரவியின் வளர்நிலை” எனக் கூறுகின்றார். சூரியனைத் திருத்தக்க தேவர், “மேல் வெம்பும் சுடர்” என்பது காண்க. அனல் - தீ மண்டலம். கடல் நீரைப் பெருகவிடாது சுருக்கித் தன்னளவில் நின்று உலகத்தைக் காப்பதாகலின், “அனலின் திதி நிலை” என்று உரைக்கின்றார். சத்தான ஞானப் பொருளை யுணர்த்துவதால் ஞானாசிரியனாகிய சிவத்தைச் “சற்குரு சிவம்” எனக் கூறுகின்றார்.

கணநிலை அவற்றின் கருநிலை அனைத்தும்

குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே                                          1044

உரை : அணுத் திரள்களாக வுள்ள பூதங்களின் இயல்புகளையும், அவற்றின் மூலமாகவுள்ள தன்மாத்திரைகளின் இயல்புகளையும் குறைபடாமல் மனம் கொள்ளத் தெரிவித்து உள்ளத்துள் நின்று நிலவுவது சற்குருவாகிய சிவம். எ.று.

நில முதலிய பூதம் ஐந்தும் அணுக்கள் செறிந்த இயல்பின வென்று கூறப்படுகிறது பற்றி அவற்றைக் “கணநிலை” எனக் குறிக்கின்றார். அவற்றிற்குக் காரணமாகியவை தன்மாத்திரை யைந்துமாகலின், அவைகளை, “அவற்றின் கருநிலை” எனவும், அவற்றிற்கும் முதற் காரணமாகிய மாமாயை அதனைக் கலக்கித் தொழிற்படுத்தும் திருவருட் சத்தி என்பவை யடங்க, “அனைத்தும்” எனவும் இயம்புகின்றார். கேட்பவர் உள்ளத்தில் நன்கு பொருந்த உரைத்தமையால், “குணமுறத் தெரித்து” என்று கூறுகின்றார்.

பதிநிலை பசுநிலை பாசநிலைஎலாம்

மதியுறத் தெரிந்துள் வயங்குசற் குருவே                                          1046

உரை : சிவாகமங்கள் உரைக்கும் பதி பசு பாசம் என்ற முப்பொருள்களின் இயல்கள் எல்லாவற்றையும் அறிவுக்குப் பொருந்துமாறு தெரிவித்துக் கேட்போர் உள்ளத்திருந்து ஒளிர்வது சற்குருவாகிய சிவம். எ.று.

உறுதிப் பொருள்களைப் பதி பசு பாசம் எனப் பகுத்து அவற்றின் இயல் நலங்களை எடுத்தோதிச் சித்தாந்தப் படுத்துவன சிவாகமங்களாதலின், “சிவாகமங்கள் உரைக்கும் பதி பசு பாசங்கள்” என உரை கூறுவதாயிற்று. சித்தாந்தப் படுத்துவதென்பது பிறர் கூறுவதை மதித்து வினா விடைகளால் தெளிவு படுத்துவதென அறிக. நிலையெலாம் என்றது, பதி முதலிய மூன்றின் பொதுவும் சிறப்புமாகிய இயல்புகள். மதி - கேட்போர் அறிவின் மேற்று. கேட்பவற்றின் நலம் உணர்ந்த மாணவன் நன்றி யுணர்வுமிக்கு ஆசிரியனை நினைத்த வண்ணமிருத்தலால், “உள்வயங்கிய சற்குருவே” என வுரைக்கின்றார்.

பிரம ரகசியம் பேசிஎன் உளத்தே

தரமுற விளங்கும் சாந்தசற் குருவே                                          1048

உரை : பிரம ரகசியத்தை உபதேசித்து என் மனத்தின்கண் சிறப்பாக அமர்ந்து விளங்குவது சாந்த குண வுருவாய் விளங்கும் சற்குருவாகிய சிவம். எ.று.

பிரமத்தைச் சுட்டித் தத்துவமசி என வுரைக்கும் உபதேசம் பிரம ரகசியம் எனப்படுகிறது. இதனை மகாவாக்கியம் என்றும் பெரியோர்கள் கூறுவர். இப் பிரபஞ்சம் விரிந்து ஒடுங்குவதற்கு மூல காரணம் பிரமமாதலால் அது நீயாகிறாய் என்பது இதன் பொருள். இந்த உண்மையை ஆசிரியர் மந்திரமாக உபதேசிப்பது பற்றி இது “பிரம ரகசியம்” எனப் படுகின்றது. இரகசியம், உண்மை. இதனை உபதேசிக்கும் ஞானாசிரியன் சாந்தமூர்த்தியாய் இருந்து சொல்லுவதால் அவனைச் “சாந்த சற்குரு” என்றும், அவனது நினைவே மாணவன் நெஞ்சில் ஓங்கி நிற்பதால், “என்னுளத்தே தரமுற விளங்கும் சாந்த சற்குருவே” என்றும் உரைக்கின்றார். தரம் - உயர்வு. இந்தப் பிரம ரகசியத்தைக் கேட்கின்ற மாணவன் அகம் பிரமாஸ்மின் என மனனம் செய்து பிரமோபாசனை செய்வன். அதனையும் சேர்த்துப் பிரம ரகசியம் என்பதும் உண்டு.

பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே

வரமுற வளர்த்து வயங்குசற் குருவே                                          1050

உரை : இந்த மேலான இரகசியத்தை எனக்கு உபதேசித்தருளி என்னுடைய மனத்தின்கண் பிரபஞ்ச மூல காரணம் பிரமம் என்ற கருத்து மேன்மையுற வளர்த்து விளங்குகின்ற ஞான குருவாகிய சிவமே. எ.று.

பிரமம் - பிரபஞ்ச மூல காரணம் என்ற உண்மை. ஏனை உலகியல் உண்மைகள் எல்லாவற்றிலும் மேலானது என வற்புறுத்தற்குப் “பரம ரகசியம்” என்றும், அதனைத் தமக்கு உணர்த்திய செய்தி இனிது விளங்கப் “பகர்ந்து” என்றும் கூறுகின்றார். இந்த ரகசியத்தை யறிந்து கொண்ட தாம் பிரபஞ்சத்தின் ஒரு கூறாதலால் தாமும் பிரமமே எனத் தெளிந்து நானும் பிரமமே என எண்ணி அகம் பிரமம் அஸ்மின் என உபாசனை செய்யும் முகத்தால் தமது உள்ளத்தில் பிரம ஞானம் சிறந்து விளங்குவது கண்டு, “எனது உளத்தே வரமுற வளர்த்து வயங்கு சற்குருவே” என்று பாராட்டுகின்றார். வயங்குதல் - விளங்குதல்.

சிவரக சியம்எலாம் தெரிவித் தெனக்கே

நவநிலை காட்டிய ஞானசற் குருவே                                          1052

உரை : சிவ ரகசியமெனக் கூறப்படும் நுண்பொருள்கள் பலவற்றையும் எனக்குத் தெரிவித்துச் சிவத்தின் புதுவை நலங்களைக் காட்டியருளியது ஞான சற்குருவாகிய சிவம். எ.று.

சிவநெறிக்குரிய நுண்ணிய கருத்துக்களைச் சிவ ரகசியம் என்பர். சிவஞானத்தால் திருவருளொழுக்கம் பூண்ட மாணவனுக்கு ஞானாசிரியன் தன்னுட் “சிவோகம்” எனப் பாவித்துச் “சிவத்துவ மசி” என்று அறிவுறுக்கும் சித்தாந்த மகாவாக்கியப் பொருளை நாளும் பயின்று சிவோகம் எனப்” ( சிவஞான மாபாடியம் ) பாவிக்கச் செய்வது சிவரகசியம் என அறிக. இப்பாவனையால் விளங்கும் சிவதரிசனானந்தம் கணந்தோறும் புதுமை யின்பம் பயத்தலை “நவநிலை” என்று குறிக்கின்றார். நவம் - புதுமை. “புணர்ந்தாற் புணருந்தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய் வளர்கின்றது” எனத் திருக்கோவையார் உரைப்பது காண்க. சத்தாகிய சிவம் குருவாய் எழுந்தருளுதலால், “ஞான சற்குருவே” என்கின்றார்.

சத்தியல் அனைத்தும் சித்தியல் முழுதும்

அத்தகை தெரித்த அருட்சிவ குருவே                                          1054

உரை : சத்துப் பொருள் இயல்புகளையும் சித்துப் பொருள்களின் இயல்புகளையும் குறைவற இரகசியங்களை உரைத்த முறையில் தெரிவித்தருளியது அருட் குருவாகிய சிவம். எ.று.

சிவசத்து, சீவசத்து, சடசத்து என வரும் சத்துப் பொருளின் இயல்புகளையும், சித்துப் பொருள்களான சிவம், ஆன்மா என வரும் அறிவுடைப் பொருளின் இயல்புகளையும் சிவகுரு உபதேசித்தருளினான் என்பாராய், “சத்தியல் அனைத்தையும் சித்தியல் முழுதும் தெரித்த அருட் சிவகுருவே” என்று போற்றுகின்றார். இவையனைத்தின் இயல்புகளையும் முழுதும் உணர்ந்த முதல்வனாதலால், “அனைத்தும்” என்றும், “முழுதும்” என்றும், பிரமரகசியம் பரமரகசியம் சிவரகசியம் என்பவற்றைத் தெரிவித்தது போல அறிவுறுத்தினமை கூறுவாராய், “அத்தகை தெரித்த” என்றும் இயம்புகின்றார். அம்முறை என்னாமல் “அத்தகை” என்கின்றார். தன் தகுதிக்கும் மாணவன் தகுதிக்கும் ஒத்த வகையில் உரைக்கின்றமை விளக்குதற்கு, மாணவன்பாற் கொண்ட அன்பு மிகுதியால் தான் மேற்கொண்டது திருவருட் குருவுருவம் என்பாராய், “அருட் சிவகுருவே” என்று சிறப்பித்துரைக்கின்றார்.

அறிபவை எல்லாம் அறிவித்தென் னுள்ளே

பிறிவற விளங்கும்பெரியசற் குருவே                                         1056

உரை : அறிய வேண்டிய அனைத்தையும் எனக்கு அறிவித்து என் மனத்தின்கண் அமர்ந்து பிரியாமல் இருந்து விளங்குவது பெருமை சான்ற சற்குருவாகிய சிவம். எ.று.

வேண்டியவை வேண்டாதவை என இரண்டுண்மையின், அறிய வேண்டியவற்றைத் தேர்ந்து அறிவித்தமை புலப்பட, “அறிபவை எல்லாம் அறிவித்து” என வுரைக்கின்றார். சில்வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவுடைய வுயிர்க்கு அறிபவை யறிதல் கூடாமையால், “அறிபவை அறிவித்து” என்றும், முற்றறிவுடைய முதல்வனாதலால், “எல்லாம்” என்றும் கூறுகின்றார். மலம் காரணமாக முக்குண வயத்தால் மறைக்கப்படும் இயல்பு பற்றி, அறிவுடைய உயிரின்கண் உயிராய் இருந்து உணர்த்தும் திறம் விளங்குதற்கு, “என்னுள் பிறிவற விளங்கும் சற்குருவே” என மொழிகின்றார். பிரிவு, எதுகைப் பற்றிப் “பிறிவு” என வந்தது. பெருமைப் பண்புகள் யாவும் உருவாக வுடையவனாதலால், சற்குருவைப் “பெரிய சற்குருவே” என்று புகழ்கின்றார்.

கேட்பவை எல்லாம் கேட்பித் தென்உளே”

வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே                                          1058

உரை : கேட்டற் குரியவை யனைத்தையும் தன்னாலும் பிற அறிஞர்களாலும் கேட்பித்து எனக்குள்ளே இன்ப அன்புருவாய் விளங்குவது விமலசற்குருவாகிய சிவம். எ.று.

தானே தனித்திருந்து கற்பது கல்வி; பிறரொடு கூடிக் கற்றும் கேட்டும் அறிவது கேள்வி; “கற்றலிற் கேட்டல்” நன்று என்பராகலின், “கேட்பவை யெல்லாம் கேட்பித்து” எனக் கிளந்து கூறுகின்றார். கேட்பவற்றுள் தக்கனவும் தகாதனவும் உண்டாதலால், தகாதவை நீக்கிக் கேட்பித்தான் என்பார், “கேட்பவை யெல்லாம்” என வுரைக்கின்றார். “காட்டாதன வெல்லாம் காட்டிப் பின்னும், கேளாதனவெல்லாம் கேட்பித்து என்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்” ( சதகம் ) என்று பெரியோர் கூறுதலால், இச் செய்கை அருட் குருவின் மரபு எனத் தெளியலாம். கற்பித்தலும் கேட்பித்தலும் அருட் செயலாதலால், “வேட்கையின் விளங்கும்” என விளம்புகின்றார். வேட்கை -இன்பம் கலந்த அன்பு. விமல சற்குரு - மல சம்பந்தமில்லாத சற்குரு.

காண்பவை எல்லாம் காட்டுவித் தெனக்கே

மாண்பதம் அளித்து வயங்குசற் குருவே                                          1060

உரை : காணத் தக்கவை யெல்லாவற்றையும் எனக்குக் காட்டி அக் காட்சியறிவால் மேன்மை நிலையை யான் எய்த அருளி விளங்குகின்ற சற்குருவாகிய சிவம். எ.று.

கண் முதலிய பொறிகளைந்தாலும் அறிவது காட்சி எனப்படுமாகலின், காண்பவை பொறிகளாற் கண்டறியப்படுவன என அறிக. காண்பித்து என்பது காட்டுவித்தெனத் திரிந்தது. “வினை யெஞ்சு கிளவி வேறு பல் குறிய” என்பது தொல்காப்பியம். காட்சி யறிவு மன முதலிய கரண வறிவொடு கலந்து உண்மையறிவாய் மாண்புறுதலின், “மாண்பதம் அளித்து வயங்கு சற்குருவே” என்று சாற்றுகின்றார். மாண்பதம் - மேன்மை நிலை.

செய்பவை எல்லாம் செய்வித் தெனக்கே

உய்பவை அளித்தெனுள் ஓங்குசற் குருவே                                          1062

உரை : நான் செய்கின்ற செய்கைகள் யாவற்றையும் செய்வித்து அதனால் எனக்கு உய்தி எய்துவித்து என்னுடைய உள்ளத்தின்கண் அமர்வது உயர்ந்தோங்குகின்ற சற்குருவாகிய சிவம். எ.று.

மனத்தால் நினைப்பதும் வாயாற் சொல்வதும், மெய்யாற் செய்வதும், அறிவால் அறிவதும் செயல்களாகலின், “செய்பவை யெல்லாம்” என்றும், நினைத்தல் முதலிய செயல்களுக்குரிய மன முதலிய கருவிகள் இனிது இயங்கச் செய்தலால், “செய்வித்து” என்றும் இயம்புகின்றார். செய்வனவற்றை நன்கு செய்பவர், நலமும் புகழும் எய்தி இன்புறுதலின், “உய்பவை யளித்து” என வுரைக்கின்றார். நல்லுணர்வாய் எழுந்தருளுதலால், “ஓங்கு சற்குருவே” என மொழிகின்றார்.

உண்பவை எல்லாம் உண்ணுவித் தென்னுள்

பண்பினில் விளங்கும் பரமசற் குருவே                                                                                   1064

உரை : உலகில் அனுபவிக்கத் தக்கவை யெல்லாவற்றையும் அனுபவிக்கச் செய்து தனது ஞானப் பண்பு குன்றாமல் என்னுள் விளங்குவது மேலான சற்குருவாகிய சிவம். எ.று.

உண்ணுதல் என்பது பொறி புலன்களால் எய்தும் இன்ப துன்பங்களை அனுபவித்தல். உண்டி யென்பதற்கு “விடயங்களின் இடமாக வரும் இன்ப துன்ப நுகர்ச்சி” ( சிவஞான பாடியம் ) எனப் பெரியோர் உரைப்பது காண்க. மன முதலிய கருவிகள் நன்கு இயங்கினாலன்றிச் செயலில்லையாதலால், அவை திருவருளால் இயங்குவது பற்றி, “உண்ணுவித்து” எனத் தெரிவிக்கின்றார். உண்பவற்றை இனிது பயனுற உண்டார்க்குப் புகழும் புண்ணியமும் ஞானமும் எய்துதல் கண்கூடாகலின், “பண்பினில்” எனப் பகர்கின்றார். போக நுகர்ச்சி அனுபவ ஞானத்தை நல்குதலால் இவ்வாறு கூறுகின்றார். ஞானம் சிவவொளியாதலால் “விளங்கும்” என விளம்புகின்றார். பரமகுரு - மேலான ஞான குரு.

சாகாக் கல்வியின் தரம்எலாம் கற்பித்

தேகாக் கரப்பொருள் ஈந்தசற் குருவே                                                                                   1066

உரை : மறக்கப்படாத திருவருட் கல்வியின் நலமனைத்தையும் எனக்கறிவித்து ஓரெழுத்து மொழியாகிய பிரணவப் பொருளை எனக்கு நல்கியது சற்குருவாகிய சிவம். எ.று.

சாதல் - ஈண்டு மறத்தல் மேற்று. ஒரு பிறப்பிற் கற்பது எழுமையும் உயிரின்கட் கிடந்து தொடர்தலால், “சாகாக் கல்வி” என்று சாற்றுகின்றார். “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து” ( குறள் ) என்று பெரியோர் உரைப்பது அறிக. தூல வுடம்பை விட்டு உயிர் இறவாமைக் கேதுவாகிய கல்வி என்று இதற்குப் பொருள் கூறுபவரும் உண்டு. சாகாக் கல்வியாவது திருவருள் ஞானம்; அஃது எக்காலத்தும் பொன்றுதல் இல்லாத பொற்புடையதாகலின், “சாகாக் கல்வி” யெனப்படுகிறது என்பது பொருத்தம். கற்பித்தல் - அறிவித்தல். ஏகாக் கரம் - ஓம் என்னும் ஓரெழுத்தாலாகிய மொழி; இதனைப் பிரணவம் என்பதும் உண்டு. ஓங்காரம் என்றும் உரைப்பர். இவ் வோங்கார வோரெழுத்து மொழியின் உட்பொருள் “சிவம்” என்று பெரியோர் கூறுவர்; “ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்” ( மழபாடி ) என்பர் திருநாவுக்கரசர். இவ் வோங்காரத்தின் உருவமும் மெய்ப்பொருளும் சிவனே என்பர். “உயிர்க்கெல்லாம் ஓங்காரத் துருவாகி நின்றான்” ( வலிவலம் ) எனவும், “ஓங்கார மெய்ப்பொருள்” ( ஆலம் பொழில் ) எனவும் நம்பியாரூரர் நவில்வது காண்க. பிரணவப் பொருளை முதற்கண் தமக்குத் தெளிய வுரைத்தமை விளங்க, “ஏகாக் கரப் பொருள் ஈந்த சற்குருவே” என வுரைக்கின்றார். இவ்வாறே “ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே” என்று அருணகிரியாரும் அறிவிப்பர்.

சத்திய மாம்சிவ சித்திகள் அனைத்தையும்

மெய்த்தகை அளித்தெனுள் விளங்குசற் குருவே                                          1068

உரை : உண்மைப் பொருளாகிய சிவத்தின் திருவருட் சித்திகள் எல்லாவற்றையும் மெய்ம்மையாக எனக்கு நல்கி என்னுடைய உளத்தின்கண் இருந்து விளங்குவது சற்குருவாகிய சிவம். எ.று.

சத்தியம் - உண்மை. சிவத்தின் திருவருட் செயல்கள் சிவசித்திகள் எனப்படுகின்றன. அவை திருவருள் அனுபவமுடைய பெரியோர்களுக்கே விளங்குமென அறிக. மெய்த்தகை - மெய்ம்மை. சிவசித்திகளைச் சிவசற்குரு நல்கினான் என வடலூர் வள்ளல் தெரிவித்தலால், மறுக்காமல் ஏற்பது நமக்குச் சிறப்பாம்.

எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்தெலாம்

வல்லான் எனஎனை வைத்தசற் குருவே                                          1070

உரை : தத்துவ நிலை முதலிய எல்லா நிலைகட்கும் மேலேற்றி இவன் சித்துக்கள் எல்லாவற்றையும் செய்ய வல்லவன் எனக் கண்டோர் சொல்லுமளவில் வைத்தருள்வது சற்குருவாகிய சிவம். எ.று.

பௌதிக வுலக நிலையில் இருக்கின்ற ஆன்மாவைத் தத்துவ நிலை, சுத்த மாயாநிலை, வியோம நிலை, உபசாந்த நிலை என நிற்கும் நிலைகட்கெல்லாம் மேனிலையிற் கொண்டு செலுத்தினமை புலப்பட, “எல்லா நிலைகளும் ஏற்றி” என்றும், அந் நிலையையடைந்த ஆன்மா எல்லாம் செயல் வல்லதாம் என்பது பற்றி, “சித்தெலாம் வல்லான்” என்றும் இயம்புகின்றார். அந்த உயர்நிலை பெற்ற முத்தான்மாக்கள் கண்டுரைப்பதால், “என வைத்த சற்குருவே” என மொழிகின்றார்.

சீருற அருளாம் தேசுற அழியாப்

பேருற என்னைப் பெற்றநற் றாயே                                          1072

உரை : நற்புகழை எய்தவும், திருவருள் ஞானமாகிய ஒளியைப் பெறவும், என்றும் அழியாத நற்பெயர் உண்டாகவும் என்னைப் பெற்று வளர்த்த தாயாவது சிவம். எ.று.

சீர் - நல்ல புகழ். தேசு - ஞானவொளி. அழியாப் பேர் - எக்காலத்தும் அழியாத பெயர்; கீர்த்தியுமாம். நல்ல புகழும் நன்ஞானமும் நற்பெயரும் தன் மகனுக்கு உண்டாக வேண்டும் என்பது பெற்ற தாயின் பெருவிருப்பமாகும். அவையனைத்தும் தனக்கு எய்தினமையின், “என்னைப் பெற்ற நற்றாய்” என்று கூறுகின்றார். நற்றாய் - பெற்ற தாய்.

பொருந்திய அருட்பெரும் போகமே உறுகெனப்

பெருந்தய வால்எனைப் பெற்றநற் றாயே                                          1074

உரை : உயிர்கட்குப் பொருந்துவதாகிய திருவருட் பேரின்பத்தையே நீ எய்துக என எண்ணிப் பேரருளுடன் என்னைப் பெற்று வளர்த்தது நற்றாயாகிய சிவம். எ.று.

உலகியற் பொருள்கள் நல்கும் போகத்தை விலக்குதற்குப் “பொருந்திய அருட் பெரும் போகம்” என்று சிறப்பிக்கின்றார். திருவருளால் எய்தும் சிவஞான சிவபோகம் “அருட் பெரும் போகம்” எனப்படுகிறது. பெரும் போகம் - மிக்க இன்பம். தயவு - அருள். பேரன்புடன் பெற்று மிக்க அருட் பண்புடன் வளர்த்தமை விளங்க, “பெருந்தயவால்” என்று கூறுகின்றார்.

ஆன்றசன் மார்க்கம் அணிபெற எனைத்தான்

ஈன்றமு தளித்த இனியநற் றாயே                                          1076

உரை : எவ்வுயிர்க்கும் பொதுவாய் அமைந்த சன்மார்க்க ஞான வொழுக்கங்கள் அழகுபெறும் பொருட்டு என்னைப் பெற்று ஞானவமுதளித்து வளர்த்த இனிமைப் பண்புருவாம் நற்றாயாகியது சிவம். எ.று.

தாய் தன்னைப் பெற்றதன் நோக்கம் உலகில் சன்மார்க்க ஞானமும் ஒழுக்கமும் தழைத்தோங்குதற்காக என்பது புலப்பட, “சன்மார்க்கம் அணி பெற” என்றும், ஏனை மார்க்கங்களை விட, எளிதாய் மேற்கொள்ளற் கமைந்தது என்பாராய், “ஆன்ற சன்மார்க்கம்” என்றும் இயம்புகின்றார். தாய் தந்த பாலை, “அமுது” எனப் புகழ்கின்றார். திருவருள் ஞானம் பெறுதற்கு ஏதுவாயினமையின், இனிமைப் பண்பே உருவாயமைந்தமை விளங்க, “இனிய நற்றாய்” என ஏத்துகின்றார்.

பசித்திடு தோறும்என் பால்அணைந் தருளால்

வசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே                                                                                   1078

உரை : நான் பசியுற்று வருந்தும்போதெல்லாம் என்னையடைந்து தனது அருட் பண்பால் என்னைத் தன்வசப்படுத்தி அமுதளித்து அருளுவது வாய்மை யுருவாய் அமைந்த நற்றாயாகிய சிவம். எ.று.

உடம்பின்கண் நிற்றல் வேண்டி உயிரிடத் தெழும் உணவு வேட்கை பசியெனப்படுகிறது. உயிர் வாழ்தலை வேண்டி உடம்பொடு கூட்டிப் பிறப்பித்த பரமசிவம், பசி வேட்கையைப் போக்குதல் முறையாதலை வெளிப்படுத்தற்கு, “பசித்திடு தோறும் என்பால் அணைந்து” எனவும், உண்பித்தல் வேண்டி அருளுரை வழங்கி ஆதரித்தமையின், “அருளால் வசித்து அருள் புரிந்தமை” எடுத்துரைக்கின்றார். வாய்மை - இனிய சொற்களை வழங்குதல். “நான் பசித்த போதெல்லாம் தான் பசித்தாராகி, நல்ல திருவமுதளித்தே, யல்லல் பசி தவிர்த்தே, ஊன் பசித்த என்னுடைய யுளத்தே தம்முடைய உபயபதம் பதித்தருளி அபயமெனக் களித்தார்” எனப் பிறிதோரிடத்தே வள்ளற் பெருமான் உரைப்பது காண்க.

தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை

உளந்தெளி வித்த ஒருமைநற் றாயே                                          1080

உரை : அடியவனாகிய யான் மனம் சோர்ந்து மெலியும் போதெல்லாம் என்னிடம் வந்து என் மெலிவு போக்கி அறிவு தெளிவுறச் செய்வது ஒருமைப் பண்பு பொருந்திய நற்றாயாகிய சிவம். எ.று.

மேற்கொண்ட நினைவுகளும் செயல்களும் கைகூடாதபோது உண்டாகும் சோர்வு இங்கே குறிக்கப்படுகிறது. தளர்ச்சி எய்தும் போது கருவிகரணங்கள் செயலற்றொழிதலால், அதனை விலக்கிச் சிவம், செயலூக்கம் தருவதை விதந்து, “தளர்ந்ததோ றடியேன் சார்பணைந்து” என்றும், வேண்டிய தெளிவும் செயலறிவும் தருவதை, “என்னை உளம் தெளிவித்த நற்றாயே” என்றும் உரைக்கின்றார். துணைவரைக் காண்பதே சோர்வு தெளிவிக்கும் மருந்தாதலால், “சார்பணைந்து” எனக் கூறுகின்றார். தன் மகன் மேற்கொண்ட செயல் நலம் காணும் தாய் அதனை அவன் செய்து முடிப்பதில் தானும் ஒத்த கருத்துடையளாவதால், “ஒருமை நற்றாயே” என வோதுகின்றார்.

அருளமு தேமுதல் ஐவகை அமுதமும்

தெருளுற எனக்கருள் செல்வநற் றாயே                                          1082

உரை : அருளமுத முதலாகவுள்ள ஐவகை யமுதங்களையும் எனக்கு ஞானத் தெளிவு உண்டாகும்வண்ணம் தந்தருளும் நல்ல செல்வத் தாயாவது சிவம். எ.று.

அமுதங்கட்கு இடம் ஐந்தாகலின், “அருளே முதல் ஐவகையமுதம்” எனக் கூறுகின்றார். நாக்கினடியில் இனிப்புள்ள ஊற்று நீர் போல் இருப்பது முதலாவமுதம்; உண்ணாக்குக்கு மேல் இளகின இனிப்புள்ள பாகு போல்வது இரண்டாவமுதம்; மூக்கு முனையில் காய்ச்சின பாகு போல் இருப்பது மூன்றாவதமுதம்; நெற்றி நடுவில் முதிர்ந்த சர்க்கரைப் பாகு போல் இருப்பது நான்காவதமுதம்; ஐந்தாவதாகிய அமுதம் புருவ நடுவில் மிக்க “இனிப்புள்ள மணிக்கட்டியாக இருக்கும்; அதிக குளிர்ச்சியாகவும் இருக்கும்; இந்த ஐந்தாவதமுதத்தையுண்டவர்கள் என்றும் அழியாத தேக சித்தியைப் பெற்றவர்கள்” என்று உபதேசப் பகுதி கூறுகின்றது. இந்த அமுத பானங்கள் ஆன்மவறிவுக்குத் தெளிவு நல்குவன என்பாராய், “தெருளுற எனக்கருள் செல்வ நற்றாயே” என்று தெரிவிக்கின்றார்.

இயலமு தேமுதல் எழுவகை அமுதமும்

உயலுற எனக்கருள் உரியநற் றாயே                                          1084

உரை : ஆன்ம வறிவின்கண் தோன்றும் ஞானவமுதம் முதலாக வுள்ள எழுவகை யமுதங்களையும் யான் உய்தி பெற அருளும் உரிமை சான்ற நற்றாயாகியது சிவம். எ.று.

ஆன்மாவின்கண் தன்னியல்பில் அமைந்த ஞானம், கிரியை, இச்சை என்ற மூவகைச் சத்திகளுள் ஞான சித்தி பெற அருளுவது இயலமுதம் எனப்படுகிறது; அஃதாவது அறிவமுதம். காரிய சித்திக்கண் ஊறும் அமுதம் ஏழாவது. “உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்” ( நற் ) என்று சான்றோர் தெரிவிப்பது காண்க. மேலே கூறிய ஐந்திடத் தைவகை யமுதங்களோடு ஈண்டுக் கூறிய ஞானவமுதமும் கலை யமுதமும்சேர அமுதம் ஏழாதலின், “இயலமுத முதல் எழுவகை யமுதம்” என வுரைக்கின்றார். ஆன்ம சித்தியாகிய உய்திப் பேற்றுக்கு இவை யுதவுதல் பற்றி, “உயலுற எனக்கருள் நற்றாய்” என்று கூறுகின்றார்.

நண்புறும் எண்வகை நவவகை அமுதமும்

பண்புற எனக்கருள் பண்புடைத் தாயே                                                                                   1086

உரை : ஆன்மாவாகிய என்னை யடைதற்குரிய திருவருளறிவமுதமும் அதற்கு அதீதமாய் எய்தும் சிவஞானாமிர்தமும் சிவப்பண்பும் எனக்குண்டாக அருளுவது சிவத்தின் தனிப் பண்புருவாம் நற்றாயாகிய சிவம். எ.று.

நண்ணுதல் - அடைதல்; அது நண்பு என வழங்குகிறது. எட்டாவதாகிய திருவருளறிவமுதம் யோக ஞான சித்திகட்கு ஏதுவாதலின் அதனை, “நண்புறும் எண்வகை யமுதம்” என நவில்கின்றார். ஞான சித்திக்கு இன்றியமையாமை பற்றி, திருவருள் ஞான வமுதத்தை ஒன்பதாவதாகக் கூறுதலின், அதனை “நவவகை யமுதம்” என்று இயம்புகின்றார். இதனையே தொடக்கத்தில் “இயலமுது” ( 1083 ) என எடுத்தோதுகின்றார். சிவத்தின் செம்மைப் பண்பே திருவருளாம் என்பது பற்றி, “பண்புடைத் தாயே” எனப் பகர்கின்றார்.

மற்றுள அமுத வகைஎலாம் எனக்கே

உற்றுண வளித்தருள் ஓங்குநற் றாயே                                                                                   1088

உரை : மேற்கூறிய ஒன்பது வகைக்கும் மேலுள்ள அமுத வகைகள் எல்லாம் யான் எய்தி நுகருமாறு திருவருள் பாலித்தோங்குவது நன்றாயாகிய சிவம். எ.று.

இவ்வமுத வகைகள் கன்ம யோக ஞான சித்திகளின் அடிப்படையில் மிகப் பலவாய் எய்தப்படுவது பற்றி, “மற்றுள அமுத வகையெலாம்” என மொழிகின்றார். இவற்றுள் யோக சித்தி வகை பதினான்காகவும், ஞான சித்தி அறுபத்து நாலாயிரமாகவும் விரிதலால், “மற்றுள அமுத வகை யெலாம்” எனத் தொகுத்துச் சொல்லுகின்றார். சித்தி வகை தோறும் அமுதப் பேறு உண்டு. இதனை உபதேசப் பகுதியில் சித்தி வகையால் உய்த்துணர்ந்து கொள்க. இவ்வமுதவகைகளை வடலூர் வள்ளல் பெற்று நுகர்ந்தமை புலப்பட, “எனக்கே உற்று உண்ண அளித்தருள் ஓங்கு நற்றாய்” என வுரைக்கின்றார்.

கலக்கமும் அச்சமும் கடிந்தென துளத்தே

அலக்கணும் தவிர்த்தருள் அன்புடைத் தாயே                                          1090

உரை : அமுத வகைகளைப் பெறுதற்கண் உண்டாகும் கலக்கத்தையும், அச்சத்தையும் போக்கி என் உள்ளத்தின்கண் உண்டாகும் வருத்தத்தையும் நீக்கியருளுவது என்பால் அன்புடைய தாயாகிய சிவம். எ.று.

பெறும் முயற்சிக்கண் மனம் திண்மை யிழந்து கலங்குதலைக் “கலக்கம்” என்றும், எடுத்த செயல் சித்தியாவதற் கிடை நிற்கும் தடைகளைக் காணத் தோன்றும் மலைவை, “அச்சம்” என்றும், இவற்றால் எய்தும் வருத்தத்தை “அலக்கண்” என்றும் இயம்புகின்றார். வருத்தம் கண்டு ஆற்றாது அருள் புரிவதால் சிவத்தை, “அன்புடைத் தாயே” எனக் குறிக்கின்றார்.

துய்ப்பினில் அனைத்தும் சுகம்பெற அளித்தெனக்

கெய்ப்பெலாந் தவிர்த்த இன்புடைத் தாயே                                          1092

உரை : உணவு வகையில் எல்லாச் சுகங்களையும் பெறுமாறு எனக்குத் தந்து, எனக்குண்டாகிய தளர்ச்சி யெல்லாம் போக்கியது இன்பமே யுருவாக வுடைய தாயாகிய சிவம். எ.று.

துய்ப்பு - உண்ணத் தக்க வுணவு வகை. உண்டார்க் கல்லது சுகம் இன்மை பற்றி, “சுகம் பெற அளித்து” என்று கூறுகின்றார். “அனைத்தும்” என்பதிலுள்ள உம்மையைப் பிரித்து அனைத்துச் சுகமும் எனக் கூட்டுக. “சுகம் அனைத்தும்” என இயைப்பதுமுண்டு. துய்ப்புப் பெறுதற்கண் உண்டாகும் துன்பங்களை “எய்ப்பு” என வுரைக்கின்றார். எய்ப்பு - தளர்ச்சி. இன்புடைத் தாய் - இன்பமே யுருவாகக் கொண்ட நற்றாய்.

சித்திகள் எல்லாம் தெளிந்திட எனக்கே

சத்தியை அளித்த தயவுடைத் தாயே                                          1094

உரை : சித்தி வகைகளனைத்தையும் உண்மை யறிவு கொண்டு தெளிந்துகொள்ளுமாறு அதற்குரிய சத்திகளை எனக்குத் தந்தது அருளே யுருவாக வுடைய தாயாகிய சிவம். எ.று.

உண்மை யறிவால் செய்தாற்றும் செயல்கள் “சித்திகள்” எனப்படும். அவை கன்ம சித்தி, யோக சித்தி, ஞான சித்தி எனப் பல திறப்படுதலால், “சித்திகள் எல்லாம்” எனவும், அவை யுண்மை யறிவால் உணரப்படுவது பற்றித் “தெளிந்திட” எனவும் இயம்புகின்றார். சத்தி - ஆற்றல்; வலிமையுமாம். தயவு - அருள். சிவத்துக்கு அருளே திருமேனியாதல் உணர்த்த “தயவுடைத் தாயே” என்கின்றார்.

சத்தினி பாதந் தனைஅளித் தெனைமேல்

வைத்தமு தளித்த மரபுடைத் தாயே                                          1096

உரை : சத்தினிபாதம் எய்துவித்து எளியனாகிய என்னை மேனிலைக்கண் வைத்து ஞானமாகிய அமுதத்தை யருளியது ஞான மரபினில் நிற்கும் தாயாகிய சிவம். எ.று.

சத்தினிபாதம் - அருட் சத்தி உணர்வின்கண் பதிதல். “ஓர் அவைக்களத்தின் நடுவே ஒரு கல் வந்து வீழ்ந்தால் அவ் வீழ்ச்சி அவ்வவைக்களத் துள்ளாரை ஆண்டு நின்றும் அகல்விக்கும்; அது போலச் சத்திநிபாதம் நிகழ்ந்த மாத்திரையே அஃது அவ்வான்மாவை மனைவி மக்கள் முதலிய உலகத் துழனியின் அச்சம் நிகழ்ந்து அவ் வுலக வாழ்க்கையினின்று வெரீஇப் போந்து உண்மைக் குரவனை நாடிச் செல்லுமாறு செய்வித்தலின், “அவ்வொப்புமை தோன்றச் சத்தி நிகழ்ச்சியென்னாது சத்தி வீழ்ச்சி என்று ஓதப்பட்டது” எனச் சிவஞான முனிவர் விளக்குகின்றார் ( பாடியம் ). அதுதானும் மந்தம், மந்தரம், தீவிரம், தீவிரதரமென நால்வகையாய் உயர்தலால் “மேல் வைத்து” எனக் கூறுகின்றார். சத்திநிபாதம் சத்தினிபாதம் எனத் தமிழில் எழுதப்படுகிறது; அநேகம் - அனேகம் என வருவது போல. அமுது என்பது திருவருட் சிவஞானம் ஆசிரிய மாணவ முறையில் வருதலால் “மரபு” என வழங்குகின்றார்.

சத்திசத் தர்கள்எலாஞ் சார்ந்தென தேவல்செய்

சித்தியை அளித்த தெய்வநற் றாயே                                          1098

உரை : சத்திகளும் அவற்றையுடைய சத்திமான்களும் என்னையடைந்து என் ஏவல் வழி நிற்பிக்கும் சித்தியை எனக்கு நல்கியது செல்வத் தாயாகிய சிவம். எ.று.

மெய் வலிமை பொருள் வலிமை முதலிய வன்மைகள் உண்டாக்கும் ஆற்றல் சத்தியமாம். அந்த ஆற்றலுடைய செல்வர்கள் சக்திமான்கள். சத்திமான்கள் திருவருளால் தமது ஏவல் வழி நிற்பதற்கு ஏது கூறுகின்றாராதலின், “ஏவல் செய் சித்தியை யளித்த செல்வ நற்றாயே” என்று வள்ளற் பெருமான் கூறுகின்றார்.

தன்னிகர் இல்லாத் தலைவனைக் காட்டியே

என்னைமேல் ஏற்றிய இனியநற் றாயே                                                                                   1100

உரை : தனக்கு ஒப்பாவார் இல்லாத தலைவனாகிய சிவபெருமானைக் காட்டி என்னை மேனிலையில் உயர்த்தியது இன்பமே நல்கும் தாயாகிய சிவம். எ.று.

“தனக்கு உவமை யில்லாதவன்” எனச் சான்றோர் புகழ்தலால் சிவபிரானைத் “தன்னிக ரில்லாத் தலைவன்” என்றும், காட்டக் காணினல்லது காணலாகாதவனாதலால், “காட்டி” என்றும் இயம்புகின்றார். காண்பதால் அடைந்த பயன் இது வென்பார், “மேல் ஏற்றிய” என்று கூறுகின்றார். மேல் - ஞானத் துறையில் உளதாகிய மேனிலை. தலைவனைக் காட்டி மேனிலையில் உயர்த்தியது சிவம் நற்றாயாய் எய்வித்த இன்பம் என்பது கருத்து.

வெளிப்பட விரும்பிய விளைவெலாம் எனக்கே

அளித்தளித் தின்புசெய் அன்புடைத் தாயே                                          1102

உரை : காரணத்திலிருந்து வெளிப்படுகின்ற காரியமாகிய விளைவுகள் பலவற்றையும் எனக்குப் பயன்படுவித்து மகிழ்விப்பது அன்புடைய அன்புடைய தாயாகிய சிவம். எ.று.

காரியமாகிய விளைவு காரணத்தின்கண் ஒடுங்கியிருந்து காலமும் இடமும் வாய்க்கும்போது வெளிப்படுவதால், “வெளிப்பட இருக்கும் விளைவுகள்” எனவும், காரியம் பயன்படும்போதே அது விளைவாதலால், “அளித்தளித்து” எனவும், காரியப் பயன் இன்பம் நல்கும்போது செய்பவன் மகிழ்வுறுதலால், “இன்பு செய் அன்புடைத் தாயே” எனவும் இயம்புகின்றார்.

எண்ணகத் தொடுபுறத் தென்னைஎஞ் ஞான்றும்

கண்எனக் காக்கும் கருணைநற் றாயே                                                                                   1104

உரை : எனக்குள்ளிருந்து அகத்தும் புறத்தும் எக்காலத்தும் என்னைக் கண்போற் காத்தருள்வது கருணை யுருவாகிய சிவம். எ.று.

பிறப்பித்து வாழச் செய்தலின், “கருணை நற்றாயே” என்றும், அகத்தே தீநினைவுகள் தோன்றாவண்ணமும், புறத்தே தன்னாலும் பிறவுயிர்களாலும் தீமை நேராவண்ணமும் காப்பது விளங்க, “எண்ணகத்தொடு புறத்து” என்றும் கூறுகின்றார். எண்ணகம் - உடம்பின் அகநிலை. உறங்கும்போதும் காப்பது பற்றி, “எஞ்ஞான்றும்” என இயம்புகின்றார்.

இன்னருள் அமுதளித் திறவாத் திறம்புரிந்

தென்னை வளர்த்திடும் இன்புடைத் தாயே                                          1106

உரை : இனிய திருவருள் ஞானமாகிய அமுதத்தை யளித்து இறவாத தன்மையையும் எனக்குத் தந்து என்னை வளர்த்தருளுவது இன்ப வுருவையுடைய தாயாகிய சிவம். எ.று.

இன்ப மயமானதாதல் தோன்ற, திருவருள் ஞானத்தை, “இன்னருள் அமுது” என்றும், உலகிடைப் பிறப்பித்து உய்தி பெறச் செய்யும் முதற் பொருள் என்பது பற்றி, “இறவாத் திறல் புரிந்து என்னை வளர்த்திடும் தாய்” என்றும் போற்றுகின்றார். இறவாத் திறல் - உய்தி பெறுங்காறும் இறந்தொழியாத் தன்மை.

என்னுடல் என்னுயிர் என்னறி வெல்லாம்

தன்னஎன் றாக்கிய தயவுடைத் தாயே                                                                                   1108

உரை : என்னுடைய உடம்பையும் என்னுடைய உயிரையும் என்னுடைய அறிவையும் தன்னுடையவையாக்கி யருளுவது அருளுருவையுடைய தாயாகிய சிவம். எ.று.

திருவருள் ஞானம் பெற்றோர், தம்முடைய பசுகரணங்களெல்லாம் பதிகரணங்களாக மாறப் பெறுவர் என்பது விளங்க, “என்னுடல் என்னுயிர் என்னறி வெல்லாம், தன்ன என்று ஆக்கிய தாயே” எனச் சாற்றுகின்றார். தன்ன - தன்னுடையவை. திருவருளால் கரணங்கள் பதிகரணமாகப் பெற்ற பெருமக்களை, மாணிக்கவாசகர், “காணும் கரணங்களெல்லாம் பேரின்பமெனப் பேணும் அடியார்” ( பண்டாய ) என வுரைப்பது காண்க.

தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திடத்

தரியா தணைத்த தயவுடைத் தாயே                                          1110

உரை : உண்மை ஞானம் பெறாமையால் சிறுமையுற்று யான் மனம் சோர்ந்தபோது, என் சோர்வு காணப் பொறாமல் அன்புடன் என்பால் வந்து தழுவிக் கொண்டது அருளே யுருவாக வுடைய தாயாகிய சிவம். எ.று.

இயற்கையும் செயற்கையுமாகிய அறிவுகளால் திருவருளுண்மை ஞானம் பெறாமல் திகைத்தமை புலப்பட, “தெரியா வகையால்” எனவும், அதனால் தாம் சிறுமை யுற்றமை தோன்ற, “சிறியேன்” எனவும், வேண்டுவது பெறாவிடத்து உள்ளம் சோர்ந்து உடம்பை மெலிவித்தலால், “தளர்ந்திட” எனவும் இயம்புகின்றார். உண்மை ஞான முதயமானதும் சிவஞானப் பேறு பெற்று இன்புற்ற குறிப்பை, “தரியாது அணைத்த தயவுடைத் தாயே” என்று போற்றுகின்றார்.

சினமுதல் அனைத்தையுந் தீர்த்தெனை நனவினும்

கனவினும் பிரியாக் கருணைநற் றாயே                                                                                   1112

உரை : கோபம் முதலிய குற்றங்களனைத்தையும் போக்கி நனவுப் போதிலும் கனவின் கண்ணும் என்னைப் பிரியாமல் இருந்து ஆதரிப்பது கருணை யுருவுடைய நற்றாயாகிய சிவம். எ.று.

கோபம், குரோதம், உலோபம், மோகம், காமம், மாற்சரியம் என்ற ஆறும் ஆன்மா உய்தி பெறுதற்குத் தடை செய்யும் குற்றங்களாதலின், அவற்றைச் “சினம் முதல் அனைத்தையும் தீர்த்து” என்று தெரிவிக்கின்றார். சினம் - கோபம். சினம், தோன்றும் போதே எல்லா நற்குணங்களையும் அழித்து விடுவதால் அதனை முற்பட மொழிகின்றார். நனவு - விழித்திருக்கும் காலம். கனவு - உறக்கக் காலம்; நனவின்கண் ஆன்மவுணர்வு பொறி புலன்களோடு கூடித் தொழிற்படுங் காலம் எனினும் அமையும். உறங்கிக் கிடப்பினும் விழித்திருப்பினும் திருவருள் பிரிவின்றி உடன் இருப்பது விளங்க, “பிரியாக் கருணை நற்றாயே” என்று புகல்கின்றார். உறக்கத்திற் காத்தளிப்பது கருணை மிகுதி.

தூக்கமும் சோம்பும்என் துன்பமும் அச்சமும்

ஏக்கமும் நீக்கிய என்தனித் தாயே                                          1114

உரை : உறக்கத்தையும், சோம்பலையும், இவற்றால் உண்டாகும் துன்பத்தையும் அச்சத்தையும் ஏக்கத்தையும் போக்கி யருளுவது எனக்கு ஒப்பற்ற தாயாகிய சிவம். எ.று.

கருவி கரணங்கட்கு ஓய்வு தரும் குறிப்பின்றி மடியுற்று உறங்குவது துன்பம் பயத்தலின் தூக்கத்தை முற்பட மொழிகின்றார். சோம்பல் - சோம்பு என வந்தது. ஏக்கம் - பெறற் குரியது பெறாத வழி எய்தும் மனவருத்தம். கையறவு பயந்து துன்பத்துக் கேதுவாதலால் “ஏக்கம்” குற்றமாயிற்று.

துன்பெலாம் தவிர்த்துளே அன்பெலாம் நிரம்ப

இன்பெலாம் அளித்த என்தனித் தந்தையே                                          1116

உரை : துன்ப வுணர்வுகளைப் போக்கி உள்ளத்தில் அன்பு நிறைய, இன்பங்கள் அனைத்தையும் தந்தருளுவது எனக்கு ஒப்பற்ற தந்தையாகிய சிவம். எ.று.

துன்பத்துக் கேதுவாகிய வுணர்வுகள் இன்பத்துக் கேதுவாகிய அன்புணர்வுகளை அழிக்கும் இயல்பினவாதல் பற்றி, “துன்பெலாம் தவிர்த்து உள்ளே அன்பெலாம் நிரம்ப இன்பெலாம் அளித்த” எனவுரைக்கின்றார். உண்மை ஞானம் வழங்கும் உரனுடையதாதலால், “தனித் தந்தை” என்று போற்றுகின்றார்.

எல்லா நன்மையும் என்தனக் களித்த

எல்லாம் வல்லசித் தென்தனித் தந்தையே                                          1118

உரை : எல்லா வகையான நலங்களையும் எனக்குத் தந்தருளுவது எல்லாம் வல்ல ஞானப் பொருளாகும் என் தனித் தந்தையாகிய சிவம். எ.று.

துன்பத்திற் றொடங்கி இன்ப மெய்துவிக்கும் நலங்களும் உண்மையின், “எல்லா நன்மையும்” என வுரைக்கின்றார். எல்லாம் செயல் வல்ல தன்மை அறிவில்லாத அசித்துப் பொருளுக்கு இல்லையாதலின், “எல்லாம் வல்ல சித்து” எனக் கூறுகின்றார்.

நாயிற் கடையேன் நலம்பெறக் காட்டிய

தாயிற் பெரிதும் தயவுடைத் தந்தையே                                                                                   1120

உரை : நாயினும் கீழ்ப்பட்டவனாகிய யான் நன்னலம் பெறும் ஞான நெறியைக் காட்டித் தாயினும் சிறந்த கருணை புரிவது தந்தையாகிய சிவம். எ.று.

பொறி புலன்கள் தரும் இன்பத்தையே பொருளாக எண்ணிக் கீழ்மை யுறுதலின், “நாயின் கடையேன்” என்று நவில்கின்றார். பெற்ற தாய் அன்புருவினளாதலால் அவளினும் பெருமை மிக வுடைமை புலப்படுத்தற்குத் “தாயிற் சிறந்த தயவுடைத் தந்தையே” என்று புகழ்கின்றார். தயவு - தயா எனவும் வழங்கும். “நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே” ( சிவபுரா ) என மணிவாசகர் வழங்குவது காண்க.

அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே

பிறிவிலா தமர்ந்த பேரருள் தந்தையே                                                                                   1122

உரை : அறிவறியாத இளம் பருவத்திலேயே, உண்மை, யறிவைத் தந்து என்னிற் பிரியாமல் என்னுள் இருந்தருள்வது பேரருளுருவுடைய தந்தையாகிய சிவம். எ.று.

மனவுணர்வு வளராத இளம் பருவம், “அறிவறியாப் பருவம்” எனப்படுகிறது. அக்காலத்தையே உள்ளதன் உண்மையறிவும் உண்மையறிவை இறைவன் தனக்குத் தந்தருளினமை புலப்படுத்தற்கு, “அறிவிலாப் பருவத்து அறிவெனக் களித்து” என்றும், அவ்வறிவு பிழைபடா தொழுகுதற் பொருட்டு உடனிருக்கின்றமை உணர்த்துதற்குப் “பிறிவிலா தமர்ந்த பேரருள் தந்தையே” என்றும் இயம்புகின்றார்.

புன்னிகர் இல்லேன் பொருட்டிவண் அடைந்த

தன்நிகர் இல்லாத் தனிப்பெருந் தந்தையே                                          1124

உரை : புல்லுக்கும் நிகராகாதவனாகிய எளியேன் பொருட்டு இங்கே என்பால் எழுந்தருளி அறிவின்பம் தந்தது தனக்கு ஒப்பொன்றும் இல்லாத தனிப் பெருந் தந்தையாகிய சிவம். எ.று.

தனது புல்லிய தன்மையை யுணர்த்துதற்கு, “புன்னிக ரில்லேன்” என்று புகல்கின்றார். எல்லாம் வல்ல பரம்பொருளாகிய பரமசிவன் தன் பொருட்டுக் குருவாய் எழுந்தருளி உண்மை யறிவு தந்து இன்புறுத்தினமையின், “இவண் அடைந்த” என வுரைக்கின்றார்.

அகத்தினும் புறத்தினும் அமர்ந்தருட் ஜோதி

சகத்தினில் எனக்கே தந்தமெய்த் தந்தையே                                          1126

உரை : இவ்வுலகில், எளிய எனக்குத் தன்னுடைய திருவருள் ஞான வொளியை எனது அகத்திலும் புறத்திலும் விளங்கத் தந்தருளியது மெய்ம்மை யுருவுடைய தந்தையாகிய சிவம். எ.று.

திருவருள் ஞான வொளியை “அருட்பெருஞ் சோதி” எனத் தெரிவிக்கின்றார். அந்த ஞான வொளி தமது உரு முற்றும் பரவி விளங்குவது தோன்ற, “அகத்தினும் புறத்தினும்” என மொழிகின்றார்.

இணைஇலாக் களிப்புற் றிருந்திட எனக்கே

துணைஅடி சென்னியில் சூட்டிய தந்தையே                                          1128

உரை : ஒப்பற்ற இன்பமுற்றிருக்குமாறு திருவடி யிரண்டையும் என் தலைமேல் வைத்தருளியது எனக்குத் தந்தையாகிய சிவம். எ.று.

ஒப்பற்ற திருவருள் ஞான வின்பத்தை, “இணையிலாக் களிப்பு” என்று கூறுகின்றார். துணையடி - இரண்டாகிய திருவடி. திருவருள் ஞானத்தைத் திருவடி ஞானம் என்பது பற்றி, “துணையடி சென்னியில் சூட்டிய தந்தை” என்று சொல்லுகின்றார். “சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்” என்பர் சேக்கிழார் பெருமான்.

ஆதியீ றறியா அருளர சாட்சியில்

சோதிமா மகுடம் சூட்டிய தந்தையே                                          1130

உரை : தோற்றமும் கேடும் இல்லாத அருள் ஞான ஆட்சியின் கண், ஒளி திகழும் பெரிய முடியை எனக்குச் சூட்டி யருளியது தந்தையாகிய சிவம். எ.று.

திருவருள் ஆதியந்தம் இல்லாததாகலின், திருவருள் ஞானத்தைப் பயன்கொள்ளும் நிலைமையை, “ஆதி யீறறியா அருளரசாட்சி” எனவும், அதன்கண் தமக்குள்ள உரிமையை, “சோதி மாமகுடம் சூட்டிய தந்தையே” எனவும் இயம்புகின்றார். மாமகுடம் - மணிமுடி.

எட்டிரண் டறிவித் தெனைத்தனி ஏற்றிப்

பட்டிமண் டபத்தில் பதித்தமெய்த் தந்தையே                                          1132

உரை : எட்டும் இரண்டுமாகிய எண்களைக் குறிக்கும் அகர வுகரங்களை எனக்குத் தெரிவித்து, என்னைத் தனியொருவனாக்கிப் பட்டிமண்டபத்தின்கண் நிலைபெறுவித்தது எனக்கு மெய்ம்மைத் தந்தையாகிய சிவம். எ.று.

எட்டென்னும் எண்ணை அ எனவும், இரண்டாகிய எண்ணை உ எனவும் தமிழில் எழுதுப. இவை எழுத்தாமிடத்துப் பிரணவமாகிய ஓங்காரத்தின் கூறுகளாம். ஓங்காரத்து உட்பொருள் இவை யிரண்டுமாம் என உபதேசித்தமை புலப்படுத்தற்கு, “எட்டிரண்டறிவித்து” என்றும், அரிய பொருளை அறிந்தமையால் உண்டாகிய சிறப்பு விளங்க, “தனியேற்றி” என்றும் கூறுகின்றார். பிற அறிஞர்களின் வேறுபடுத்திச் சிறப்பித்தமை தோன்ற, “தனியேற்றி” என வுரைக்கின்றார். பட்டி மண்டபம் - சான்றோர் கூடும் பேரவை. பதித்தல் - நிலைபெறுவித்தல். “பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை, எட்டினோ டிரண்டும் அறியேனையே” என்பது திருவாசகம்.

தங்கோல் அளவது தந்தருட் ஜோதிச்

செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே                                          1134

உரை : தனது அருட் சத்தியின் எல்லையைக் காட்டி, அது நல்கும் திருவருள் ஞானத்தை எங்கும் பரப்பிப் பயன் கொள்க என்று எனக்கு அறிவுறுத்தியது தந்தையாகிய சிவம். எ.று.

சிவசத்தி சிவத்தின் செயற் சத்தியாதலால் அதனைத் “தங்கோல்” எனக் குறிக்கின்றார். சத்தியின் எல்லை எங்கும் நிறைந்து நிற்கும் பரிபூரண நிலை. செங்கோற் செலுத்துதலாவது சிவசத்தியாகிய சிருவருளின் ஞானத்தை, உலகிற் பரப்புதல். சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடன் என்பதனால் “தந்தையே” எனப் பாராட்டுகின்றார்.

தன்பொருள் அனைத்தையும் தன்அர சாட்சியில்

என்பொருள் ஆக்கிய என்தனித் தந்தையே                                         1136

உரை : தனது அருளாட்சிக்குரிய பொருள்களாகிய அங்கங்கள் அனைத்தையும் எனக்கு உரியவாகத் துணை புரியச் செய்வது ஒப்பற்ற தந்தையாகிய சிவம். எ.று.

குடி, பொருள், அமைச்சு முதலிய ஆறும் ஈண்டுப் பொருள் எனப்படுகின்றன. அருளாட்சி பெற்றவிடத்து அதன் அங்கங்கள் பலவும், தனக்குரியனவாதலால், “என் பொருளாக்கிய என் தனித் தந்தையே” எனப் புகழ்கின்றார்.

தன்வடி வனைத்தையும் தன்அர சாட்சியில்

என்வடி வாக்கிய என்தனித் தந்தையே                                                                                   1138

உரை : அருளாட்சியின்கண் தான் கொள்ளும் சிவவடிவத்தையும் சிவக்கோலத்தையும் திருவருள் ஞான ஆட்சி புரியும் போது எனக்கு நல்கி என்னைச் சிவமாக்குவது எனக்கு ஒப்பற்ற தந்தையாகிய சிவம். எ.று.

சிவத்துக்குரிய பல்வேறு வடிவங்களும் அடங்க, “தன் வடிவத்தையும்” என்று கூறுகின்றார். தோலாடை - திருநீறு முதலியன சிவக்கோலம். “பெருமையொடும் தானாக்கி” ( சிவ. சித்தி. சூ-8 ) என்பதற்கு இது விளக்கமாதல் காண்க.

தன்சித் தனைத்தையும் தன்சமு கத்தினில்

என்சித் தாக்கிய என்தனித் தந்தையே                                                                                   1140

உரை : சிவமாகிய தன் முற்பட்ட உணர்வுடைய பொருள் யாவற்றையும் சிவஞானச் செம்பொருளாக்குவது எனக்குத் தந்தையாகிய சிவம். எ.று.

நெருப்பெதிர்பட்ட பொருள் யாவும் நெருப்புருவடைதல் போலச் சிவத்தின் முன்னே நிற்பவையனைத்தும் சிவமாம் என்ற உண்மையை விளக்கும் முறையில், “தன் சித்தனைத்தையும் தன் சமூகத்தினில் என் சித்தாக்கிய என்றனித் தந்தையே” என்று கூறுகின்றார்.

தன்வச மாகிய தத்துவம் அனைத்தையும்

என்வசம் ஆக்கிய என்உயிர்த் தந்தையே                                          1142

உரை : தனது திருவருள் இயக்க இயங்கும் தத்துவங்கள் யாவற்றையும், என்வயம் நிற்கப் பண்ணியது என் உயிர் போன்ற தந்தையாகிய சிவம். எ.று.

நிலம் முதல் நாதம் ஈறாகவுள்ள தத்துவங்கள் யாவும் திருவருட் சத்தியியக்க இயங்கும் இயல்பினவாதலின், “தன்வசமாகிய தத்துவங்கள்” எனவும், ஆன்மா திருவருளரசு புரியுமிடத்து அத் தத்துவங்கள் அதன் வழி நிற்பது பற்றி, “என் வசமாக்கிய என்னுயிர்த் தந்தையே” எனவும் கூறுகின்றார்.

தன்கையில் பிடித்த தனிஅருட் ஜோதியை

என்கையில் கொடுத்த என்தனித் தந்தையே                                          1144

உரை : தனது கையில் ஏந்தும் திருவருளொளியை என் கையிற் கொடுத்தருளியது எனக்குத் தனித் தந்தையாகிய சிவம். எ.று.

ஈசன் கையில் எரி ஏந்துபவனாதலின், அதன் ஒளி அருள் ஒளி என்றற்குத் “தன் கையிற் பிடித்த தனியருட் சோதி” எனக் குறிக்கின்றார். தாம் பெற்ற அருள் ஞானத்தை, “என் கையிற் கொடுத்த என் தனித் தந்தை” என வோதுகின்றார்.

தன்னையும் தன்அருட் சத்தியின் வடிவையும்

என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே                                          1146

உரை : சிவமாகிய தன்னையும் தனது அருட் சத்தியையும் ஆன்மாவாகிய தன்னையும் ஞான நிலையில் ஒருதன்மையவாகச் செய்வது தந்தையாகிய சிவம். எ.று.

சிவமேயாயபோது திருவருட் சத்தி ஞான வடிவாய் அதன்கண் ஒடுங்குவதும், திருவருள் ஞானப் பேற்றால் ஆன்மா திருவருள்மயமாய் அதன்கண் ஒன்றுதலும் செய்தலின், “தன்னையும் தன்னருட் சத்தியின் வடிவையும் என்னையும் ஒன்றென வியற்றிய தந்தையே” என்று கூறுகின்றார்.

தன்இயல் என்இயல் தன்செயல் என்செயல்

என்ன இயற்றிய என்தனித் தந்தையே                                                                                   1148

உரை : என்னியல்பைத் தன்னியல்பாகவும் என் சொற்களைத் தன் சொற்களாகவும் என்று சிவமாம் தன்மையில் மாற்றியமைப்பது என்னுடைய தந்தையாகிய சிவம். எ.று.

சிவஞானப் பேற்றால் ஆன்மா சிவமாம் தன்மை யெய்துமிடத்து ஆன்ம கரணங்கள் சிவகரணங்களாதலால், அவற்றின் சொல்லும் செயலும் சிவமாதல் விளங்க, “தன்னியல் என்னியல் தன்சொல் என்சொல் என்ன வியற்றிய தந்தையே” என வுரைக்கின்றார். “உளங்கொள்வார் உச்சியான் கச்சி யேகம்பன் ஒற்றியூருறையும் அண்ணாமலை யண்ணல் விளம்புவான் எனதுரை தனதுரையாக” ( இலம்பையங் ) என்று திருஞானசம்பந்தர் தெரிவிப்பது காண்க. “சிவனுளத்தே தோன்றித் தீயிரும்பைச் செய்வதுபோல் சீவன் தன்னைப் பந்தனையை யறுத்துத் தானாக்கித் தன்னுருவப் பரப்பை யெல்லாம் கொடு போந்து பதிப்ப னிவன்பாலே” எனச் சிவஞான சித்தியார் தெளிவிப்பது இக் கருத்தே என அறிக.

தன்உரு என்உரு தன்உரை என்உரை

என்ன இயற்றிய என்தனித் தந்தையே                                                                                   1150

உரை : சிவமாகியபோது ஆன்மாவாகிய என்னுருவைத் தன்னுருவாகவும், என்னுடைய உரைகளைத் தன்னுடைய உரைகளாகவும் செய்தருளுவது எனக்குத் தந்தையாகிய சிவம். எ.று.

இதுவும் பசுகரணங்கள் பதிகரணங்களாக மாறும் சிவயோக நிலையை வற்புறுத்துகின்றது.

சதுரப் பேரருள் தனிப்பெருந் தலைவன்என்

றெதிரற் றோங்கிய என்னுடைத் தந்தையே                                          1152

உரை : எல்லாம் வல்ல பேரருளுருவாகிய தலைவனென நிகரின்றி ஓங்குவது என்னுடைய தந்தையாகிய சிவம். எ.று.

சதுரப்பாடு - எல்லாம் செயல்வல்ல வித்தகம். பேரருளே திருவுருவாக அமைந்தமையின், சிவனை, “பேரருள் தனிப் பெருந் தலைவன்” என்று புகழ்கின்றார். எதிர் - நிகர். தனித் தலைவன் என்றவர், தனக்கும் அப் பெருமானுக்குமுள்ள தொடர்பு காட்டற்கு, “நிகரற்றோங்கிய தந்தையே” என்று கூறுகின்றார்.

மனவாக் கறியா வரைப்பினில் எனக்கே

இனவாக் கருளிய என்னுயிர்த் தந்தையே                                          1154

உரை : சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத எல்லையில் இருந்து கொண்டு அனுபவத்துக்கு இனமான அருளுரையை வழங்குவது என்னுயிர்க்கினிய தந்தையாகிய சிவம். எ.று.

மனத்துக்கும் வாக்குக்கும் எட்டாத சிவபோக எல்லையில் சிவம் விளங்குதல்பற்றி, அவ்வெல்லையை, “மனவாக் கறியா வரைப்பு” என்று குறிக்கின்றார். மனவாக்குக்கு எட்டாத நிலையிலே இருந்தொழியுமாயின் சிவ பரம்பொருள் பயனில் பொருளாமாகலின், அஃது அருளனுபவமுடையார்க்கு உணர்ந்தோதுதற் குரித்தாவது விளங்க, “இனவாக்கருளிய தந்தையே” எனப் போற்றுகின்றார். மக்களினத்து அனுபவ ஞானிகள் வாயிலாக உரைத்தருளுதலால், “இனவாக்கு அருளிய” என இயம்புகின்றார்.

உணர்ந் துணர்ந் துணரினும் உணராப் பெருநிலை

அணைந்திட எனக்கே அருளிய தந்தையே                                          1156

உரை : பசுபாச ஞானத்தால் நுண்ணுணர்வு கொண்டு உணர முயன்றாலும் உணர்தலாகாத சிவபோகப் பெருநிலையை எளியேன் உணர்ந்தடையத் திருவருள் வழங்குவது தந்தையாகிய சிவம். எ.று.

பாச ஞானம் - கல்வியறிவு; சாத்திர ஞானமுமாம். பசு ஞானம் - உயிரின் உண்மையறிவு. இவ்விரண்டிற்கு மேலாய திருவருள் ஞானத்தாலன்றி உணரலாகாமை பற்றி, “உணர்ந்து உணர்ந்து உணரினும் உணராப் பெரு நிலை” என்று உரைக்கின்றார். அருள்ஞானத்தால் உணரலாகும் பெருமையுடையதென்றற்குச் சிவஞான போக நிலையைப் “பெருநிலை” எனப் பேசுகின்றார். அதற்கு இன்றியமையாத திருவருள் ஞானத்தைத் தமக்கு அருளினமை விளங்க, “பெருநிலை யணைந்திட எனக்கு அருளிய தந்தையே” எனக் கூறுகின்றார்.

துரியவாழ் வுடனே சுகபூ ரணம்எனும்

பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே                                          1158

உரை : துரியத்தானத்திலிருந்து சிவயோகம் புரியும் வாழ்வுடன் அதற்கு அதீதத்திற் பெறலாகும் குறைவற நிறைந்த சிவானந்தப் பேற்றைப் பெற்று இன்புறும் பெரிய வாழ்வை அருளுவது பெரிய ஒப்பற்ற தந்தையாகிய சிவம். எ.று.

துரிய வாழ்வு - பிராண வாயுவும் புருடனும் ஆகிய இரண்டு கருவிகளுடன் கூடி உந்திக்கண் இருந்து பெறும் யோக வாழ்வு. அதற்கு அதீதமான மூலாதாரம் இடமாக இருந்து புருடனாகிய கருவியுடன் கூடிப் பெறும் யோக போகம் துரியாதீதம் எனப்படுவதன்றி ஏனைச் சுழுத்தி துரியங்கள்போல வேறு பெயர் கூறப்படாமையால் அதனைச் “சுகபூரணமெனும் பெரிய வாழ்வு” என்று இயம்புகின்றார். அதனிற் பெரிய வாழ்வு வேறில்லையாதலால், “பெரிய வாழ்வு” என்று மொழிகின்றார். பெருமை - குறைவற்ற நிறைவுடைமை.

ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த

பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே                                          1160

உரை : அழிவில்லாத சாலோக முதலிய பதங்கள் அனைத்துக்கும் மேலான சாயுச்சிய பதத்தைத் தந்து இன்புறுத்தி ஆண்டருளுவது பெருந்தகைமைத் தந்தையாகிய பரசிவம். எ.று.

சாலோகம், சாமீபம், சாரூபம் ஆகிய சிவபதங்கள் அழிவில்லாதவையாதலால் அவற்றை, “ஈறிலாப் பதங்கள்” என்று குறிக்கின்றார். ஏனை இந்திரன் முதலிய இறையவர் பதங்கள் ஈறு உடையன என அறிக. “ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே” ( கோயில் ) என மணிவாசகர் உரைப்பது காண்க. சாயுச்சிய சிவபோகம் “யாவையும் கடந்த பேறு” எனப்படுகிறது. சிவபோகத்தை நல்குதலினும் பெருந்தகைமை தந்தைக்கு வேறில்லை என்பது விளங்க, “பெருந்தகைத் தந்தையே” என்று கூறுகின்றார்.

எவ்வகைத் திறத்தினும் எய்துதற் கரிதாம்

அவ்வகை நிலைஎனக் களித்தநல் தந்தையே                                          1162

உரை : எத்தகைய முயற்சியாலும் பெறுதற் கரிதாகும் அத்தகைய உயரிய நிலைமையை எளியனாகிய எனக்குத் தந்தருளியது நல்ல சிவம். எ.று.

முயற்சிகள் தவமும் யோகமுமாம். முத்தி நலம் நோக்காது வேறு உலகியல் நலம் வேண்டிச் செய்யும் எத்தகைய முயற்சிகளாலும் சிவஞான யோக போகங்கள் எய்தப் படா என்பது பற்றி, “எவ்வகைத் திறத்தினும் எய்துதற் கரிதாம் அவ்வகை நிலை” என்று கூறுகின்றார்.

இனிப்பிற வாநெறி எனக்களித் தருளிய

தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே                                          1164

உரை : இனியும் இவ்வுலகிற் பிறவாமைக்குரிய முத்தி ஞான நெறியை எனக்கு உபதேசித்தருளியது ஒப்பற்ற பெருமை சான்ற தலைமையையுடைய தந்தையாகிய சிவம். எ.று.

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை” ( குறள் ) என்று பெரியோர் வற்புறுத்துவதால், பிறவாமைக் கேதுவாகிய ஞான நெறியை உபதேசித்தமை விளங்க, “இனிப் பிறவா நெறி எனக்களித் தருளிய” என எடுத்தோதுகின்றார். தனிப் பெருந் தலைமையும் ஞானச் சால்பு நல்கும் நலமும் உடையதாதல் பற்றி, சிவபரம்பொருளைத் “தனிப் பெருந் தந்தையே” என்று புகழ்கின்றார்.

பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்

சற்றும்அஞ் சேல்எனத் தாங்கிய துணையே                                          1166

உரை : யான் எனது என்ற உணர்வாய்த் தோன்றி வருத்தும் இருவகைப் பற்றுக்களைக் கண்டு, அஞ்சின எனது அச்சம் கண்டு என்னுட் போந்து, எனக்கு அபயமளித்து அஞ்சேல் என்று என்னை ஊக்கி யாதரித்தது நல்ல துணையாகிய சிவம். எ.று.

யான் என்னும் அகப்பற்றும் எனது என்னும் புறப்பற்றும் உலகியலோடு பிணித்துப் பல்வகைத் துன்பங்களையும் எய்துவிப்பனவாதலின், அவற்றின் தொடர்பு எண்ணி வருந்தினமை புலப்பட, “பற்றயர்ந் தஞ்சிய பரிவு” எனப் பகர்கின்றார். பரிவு - ஈண்டு அச்சத்தால் உண்டாகும் துன்பம். அந்நிலையில் அஞ்சாமை யல்லது துணை வேறின்மை விளங்க, “சற்றும் அஞ்சேல் எனத் தாங்கிய” என்று கூறுகின்றார்.

தளர்ந்தஅத் தருணம்என் தளர்வெலாம் தவிர்ந்துட்

கிளர்ந்திட எனக்குக் கிடைத்தமெய்த் துணையே                                          1168

உரை : இடுக்கண்களால் மனம் சோர்ந்தபோது, அச் சோர்வுகளைப் போக்கி என் உள்ளத்திற் கிளர்ச்சி யுண்டாகுமாறு அறிவு தந்து ஊக்கியது நிலைத்த துணையாகிய சிவம். எ.று.

உலகியல் வாழ்வில் இடுக்கண் வந்து தாக்கும்போது மனம் சோர்ந்து உடல் தளர்வுறச் செய்தலால், “தளர்ந்த அத்தருணம்” எனக் குறிக்கின்றார். தருணம் - சமயம். மனச் சோர்வும் உடல் தளர்ச்சியும் எடுத்த செயல் முடியாது குறைபடக் கெடுத்தலால், “தளர்வெலாம் தவிர்த்து” என்றும், செயல் முடிந்தவிடத்து இன்பமும் மனக் கிளர்ச்சியும் தோன்றி மகிழ்வித்தலால், “என்னுட் கிளர்ந்திட” என்றும் இயம்புகின்றார்.

துறைஇது வழிஇது துணிவிது நீசெயும்

முறைஇது எனவே மொழிந்மெய்த் துணையே                                          1170

உரை : உலகியலில் செயல் புரியும் இடம் இது எனவும், அதனையடையும் வழியிது வெனவும், செய்தற்குரிய செயல் இது வெனவும், அதனை நீ செய்து முடிக்கும் முறையிது வெனவும் உபதேசித்தருளுவது மெய்யான துணையாகிய சிவம். எ.று.

உலகியல் வாழ்வு உயிர்கள் வினை செய்தற்கும் வினைப் பயனை நுகர்தற்கும் உரிய நிலையமாதலால், வினைக்குரிய இடத்தையும் அதனை அடைதற்குரிய வழியையும், “துறையிது வழி யிது” என உபதேசிக்கப்பட்டமை இதனால் தெரிவிக்கின்றார். துறை - வினை செய்யும் இடம். அதனைச் சென்றடையும் திறத்தை, “வழி” யெனக் குறித்தருளுகின்றார். செய்வினையையும் அதன் விளைவையும் “துணிவு” எனச் சொல்லுகின்றார். செயல் வகை “முறை” எனப்படுகிறது. காட்டக் காண்பதல்லது தானே காணும் திறம் உயிர்க்கின்மை பற்றி, “மொழிந்த மெய்த்துணையே” என விளம்புகின்றார். மெய்ம்மை - நிலைபேறு..

எங்குறு தீமையும் எனைத்தொட ராவகை

கங்குலும் பகலும்மெய்க் காவல்செய் துணையே                                          1172

உரை : என்னை எங்கும் சூழ்ந்திருக்கும் தீவினைப் பயனாகிய துன்பம் யாவையும் என்னைத் தொடர்ந்து வருத்தாவண்ணம், இரவும், பகலும் உடனிருந்து காத்தருளுவது எனக்குத் துணையாகிய சிவம். எ.று.

செய்வினைப் பயன்கள் செய்த வுயிரைச் சூழ்ந்துகொண்டு நுகர்வித்தற் பொருட்டுச் செவ்வி நோக்கியிருப்பது பற்றி, “எங்குறு தீமையும் எனைத் தொடரா வகை” என வுரைக்கின்றார். இறைவனையல்லது வினைத் தொடர்பை அறுக்க வல்லவர் வேறே ஒருவரும் இல்லையாதலால், “கங்குலும் பகலும் காவல் செய் துணையே” என மொழிகின்றார். “இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு” ( குறள் ) எனச் சான்றோர் கூறுவதும், ஏனைச் சான்றோர் அருளிய திருமுறைத் திருப்பாட்டுக்களும் இக்கருத்தையே வலியுறுத்துவதும் காண்க.

வேண்டிய வேண்டிய விருப்பெலாம் எனக்கே

ஈண்டிருந் தருள்புரி என்னுயிர்த் துணையே                                          1174

உரை : எவ்வெப்போது எவ்வெவற்றை விரும்புகின்றேனோ, அவற்றை என்னோடு கூடியிருந்து வேண்டியவாறு உதவி யருளுவது என் உயிர்க்குத் துணையாகிய சிவம். எ.று.

வேண்டுவார் வேண்டுவது பெறாத போது அது வினையாய் உயிரைப் பிணித்துக் கொள்ளுவதால், வினை யறுத்தாண்டருளும் இறைவன் அவ்விருப்பெலாம் நுகர்ந்து கழிய உதவுகின்றானாதலால், “விருப்பெலாம் எனக்கே ஈண்டிருந் தருள்புரி என் உயிர்த் துணையே” என விளம்புகின்றார். உயிர்க்குயிராய் உடனிருந்து துணை செய்வது பற்றி, “உயிர்த் துணை” என வுரைக்கின்றார்.

இகத்தினும் பரத்தினும் எனக்கிடர் சாரா

தகத்தினும் புறத்தினும் அமர்ந்தமெய்த் துணையே                                          1176

உரை : இவ்வுலக வாழ்விலும் மேலுலக வாழ்விலும் எனக்குத் துன்பம் உண்டாகாதபடி, என்னுடைய உள்ளும் புறமும் இருந்து துணை புரிந்தருளுவது நிலைத்த துணையாகிய சிவம். எ.று.

இகம் - இவ்வுலகம்; பரம் - மேலுலகம். வீடு பேறு கருதிய உயிர்கட்கு இன்றியமையாத பரசிவ ஞானம் வினைத் தொடர்பு தீரினன்றி விளையாது; வினை நீக்கத்துக்கென இகமும் பரமுமாகிய வாழ்வு பெறும் உயிர்கட்குத் துன்பம் தடையாதலின், அதற்குத் துணை புரியும் பரசிவத்தை, “இகத்தினும் பரத்தினும் எனக்கு இடர் சாராது அமர்ந்த மெய்த்துணை” என வுரைக்கின்றார். அகமாகிய மனத்தால் நினைத்தலும், புறத்துள்ள வாக்கால் பேசுதலும், மெய்யால் செயல் செய்வதும் வினையாதலின், “அகத்தினும் புறத்தினும் அமர்ந்த மெய்த்துணையே” என்று விளம்புகின்றார்.

அயர்வற எனக்கே அருட்டுணை ஆகிஎன்

உயிரினும் சிறந்த ஒருமைஎன் நட்பே                                                                                   1178

உரை : கருவி கரணங்களால் எனக்குத் தளர்ச்சி யுண்டாகாதவாறு திருவருள் ஞானத் துணை புரிந்தாள்வது என்னுடைய உயிரினும் மேன்மையுற்ற நீங்காத நட்புருவாகிய சிவம். எ.று.

கருவி - கண் காது முதலிய பொறிகள். கரணம் - மனம். சித்தம், ஆங்காரம், புத்தி என்பவை. இவை தளர்ச்சி யடையின் துன்பம் பெருகுமாதலால், “எனக்கு அயர்வற அருட்டுணையாகி” எனக் கூறுகின்றார். ஒருமை நட்பு - கூடுதலும் பிரிதலும் இல்லாத உயர்ந்த நட்பு.

அன்பினில் கலந்தென தறிவினில் பயின்றே

இன்பினில் அளைந்தஎன் இன்னுயிர் நட்பே                                          1180

உரை : என் அன்பின்கட் கலந்து என்னுடைய அறிவிலே அறிவாய்ச் சிறந்து எனது இன்பத்திலே தோய்ந்துள்ளது என்னுடைய உயிரினும் அருமை வாய்ந்த நட்பாகிய சிவம். எ.று.

அன்பும் சிவமும் ஒன்றாதலின், “அன்பினிற் கலந்து” என்றும், அறிவே சிவத்துக்கு உருவாதல் பற்றி, “அறிவினிற் பயின்று” என்றும், இன்ப வடிவினது சிவமாதலால், “இன்பினில் அளைந்து” என்றும் இயம்புகின்றார். உடம்பு தோன்றுங்கால் உடன் தோன்றி, அது வளர வளர்ந்து முடிவுகாறும் பிரியா திருப்பது விளங்க, “இன்னுயிர் நட்பு” எனப் புகழ்கின்றார். “உடம்போ டுயிரிடை என்ன மற்றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு” ( குறள் ) எனப் பெரியோர் வழங்குவதுணர்க.

நான்புரி வனஎலாம் தான்புரிந் தெனக்கே

வான்பத மளிக்க வாய்த்தநல் நட்பே                                          1182

உரை : நான் செய்ய விரும்புகின்றவற்றை யெல்லாம் என் பொருட்டுத் தானே செய்து, அதனால் உயர்நிலையைப் பெற அருளுவது எனக்கென்றமைந்த நல்ல பண்புருவாகிய சிவம். எ.று.

புரிதல் - செய்ய விரும்புதல். ஏகனாகி நிற்கும் ஆன்மாவுக்கு, “சிவனும் இவன் செய்தி யெல்லாம் என் செய்தி யென்றும், செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும் பவமகல வுடனாகி நின்று கொள்வன் பரிவால்” ( சிவசித்தி ) என்ற சாத்திர வுண்மை இதனால் விளக்கப்படுகின்றது. வான் பதம் - உயரிய சிவபதம். நண்பன் செயலைத் தன் செயலாகக் கருதி யொழுகும் நல்ல நட்பு “வாய்ந்த நட்பு” என அறிக.

உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண்

டௌ¢ளுறு நெய்யில்என் உள்ளுறு நட்பே                                          1184

உரை : உள்ளத்திலும் அதன் உணர்வுகளிலும் அவற்றையுடைய உயிரிலும் பிரிவறக் கலந்து எள்ளின்கண் நெய்போல் உள்ளே உறைந்தொழுகுவது உள்ளத்தில் உவந்திருக்கும் நட்புருவாகிய சிவம். எ.று.

உள்ளத்தின் செயல் உணர்தலாதலால், “உணர்ச்சி” என வுரைக்கின்றார். உள்ளத்தின் உணர்வு உயிருள்ள போதேயாகலின், உயிரை இறுதிக்கண் வைத்துச் சிறப்பிக்கின்றார். எள்ளில் எண்ணெய் போல் இறைவன் உயிரின்கண் இருப்பது பற்றி, “எள்ளுறு நெய்யில் என் உள்ளுறு நட்பே” என வுரைக்கின்றார். “யாவுளும் எள்ளும் எண்ணெயும் போனின்ற எந்தையே” ( சதகம் ) என்பது திருவாசகம்.

செற்றமும் தீமையும் தீர்த்துநான் செய்த

குற்றமும் குணமாக் கொண்டஎன் நட்பே                                          1186

உரை : பகைத்தலும் அதனால் தீங்கு செய்வதுமாகிய குற்றங்களைப் போக்கி, முன்பு செய்த குற்றங்களையும் உயிர்க் குணமாக மன்னித்தருளுவது எனது, நட்புருவாகிய சிவம். எ.று.

பகை யுணர்வு காரணமாக உள்ளத்தில் உண்டாகும் வெம்மை நிலை “செற்றம்” எனப்படும். செற்றத்தால் தீமைகள் செய்யப்படுதலால், “செற்றமும் தீமையும் தீர்த்து” என்று கூறுகின்றார். கோபம் - முற்றவும் போக்கலாகாத உயிர்க்குணமாகிய குற்றம். உயிருள்ளதளவும் அஃது ஒழியாமை பற்றி மன்னிக்கப்படும்; அதனால், “குற்றமும் குணமாக் கொண்ட வென் நட்பே” என இயம்புகின்றார்.

குணங்குறி முதலிய குறித்திடா தெனையே

அணங்கறக் கலந்த அன்புடை நட்பே                                                                                   1188

உரை : என்னுடைய குணம் செயல்களையும் பெயர் முதலிய சிறப்புக்களையும் கருதாமல் அச்சம் இல்லையாக என்னுட் கலந்து நின்றருளுவது அன்புடைய நட்புருவாகிய சிவம். எ.று.

செயல் வகைகள் குணங்கட் கொப்ப வேறுபடுவது பற்றி, செயல்களைக் “குண” மெனக் கொள்கின்றார். இயற்பெயரும் சிறப்புப் பெயரும் மக்களை வேறுபடுத்துவனவாம். பொதுத் தன்மையினின்றும் வேறு பிரிப்பனவாதலால், “குணம் குறி முதலிய குறித்திடாது” எனக் கூறுகின்றார். அணங்கு - அச்சம்; வருத்தமுமாம். குணங்களும் பெயர்களும் கண்டார்க்கு அச்சமும் வருத்தமும் தருதலால், “அணங்கற” என வுரைக்கின்றார்.

பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்

கணக்கும் தீர்த்தெனைக் கலந்தநல் நட்பே                                          1190


உரை : பேய் போல் அலையும் உலகவர் பிணங்கிப் பேசுவன வற்றையும் பேதித்துப் பேசுவனவற்றையும் அவர்கள் மேலும் பேசும் முறைகளையும் பொருளாகக் கொள்ளாமல் என்னுட் கலந்து மகிழ்விப்பது நல்ல நட்புருவாகிய சிவம். எ.று.

பிணக்கு - மாறுபட்டுப் பேசுவதும் ஒழுகுவதுமாகும். நல்லதைத் தீதாகவும், தீயதை நல்லதாகவும் வேறுபடுத்துரைப்பது பேத வுரை. கணக்கு - முறைமை. உணவும் உடையும் வேண்டி நாளும் அலைவது பற்றி, உலகத்து மக்களைப் “பேயுலகோர்” என்று கூறுகின்றார்.

சவலைநெஞ் சகத்தின் தளர்ச்சியும் அச்சமும்

கவலையும் தவிர்த்தெனைக் கலந்தநல் நட்பே                                          1192

உரை : கோழைமை பொருந்திய நெஞ்சின்கண் உண்டாகும் தளர்வையும் அச்சத்தையும்கவலைகளையும் போக்கி என்னுட் கலந்துறைவது நல்ல நட்புருவாகிய சிவம். எ.று.

எளிதிற் குழையும் தன்மை கோழைமையாகும். கோழை நெஞ்சுடையவர்க்குச் சோர்வும் அச்சமும் கவலையும் விரைவில் உண்டாதலால், “தளர்ச்சியும் அச்சமும் கவலையும் தவிர்த்து” என்றும், மீளவும் அவை தாக்காவண்ணம் காக்க வேண்டுதலின், “எனைக் கலந்த நன்னட்பே” என்றும் இயம்புகின்றார். கவலை - கவலுதல்.

களைப்பறிந் தெடுத்துக் கலக்கம் தவிர்த்தெனக்

கிளைப்பறிந் துதவிய என்உயிர் உறவே                                          1194

உரை : எனக்குண்டாகிய மனத் தளர்ச்சியை அறிந்து அதனை நீக்கி, என் உள்ளத்தில் தோன்றி வருத்தும் கலக்கத்தையும் போக்கி, அவற்றால் என் உடம்பில் தோன்றிய இளைப்பையும் தவிர்த்துதவுவது என் உயிர்க்கு உறவாகிய சிவம். எ.று.

களைப்பு - மனச்சோர்வு. அதற்கு ஏதுவாகிய மனத் தளர்ச்சி மேல் நின்றது. தளர்ச்சி காரணமாக உண்டாகும் நினைவு தடுமாற்றம் “கலக்கம்” எனப்படுகிறது. இளைப்பு - ஈண்டு உடம்பில் உண்டாகும் சோர்வு குறித்து நின்றது.

தன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா

என்னைத் தழுவிய என்உயிர் உறவே                                                                                   1196

உரை : சிவமாகிய தன்னை அறிந்தடையும் வகை சிறிதும் தெரியாத என்னைத் தானே கூடி இன்புறுத்துவது என் உயிர்க்கு உறவாகிய சிவம். எ.று.

சிவத்தை யடையும் யோக முறை தெரியாமை புலப்பட, “தன்னைத் தழுவுறு தரம் சிறிதறியா என்னை” என வுரைக்கின்றார். சிவம் தானே வந்து தன்னைக் கூடினல்லது உயிர் தானும் தானே தெரிந்து அணைதலின்மையின், “என்னைத் தழுவிய என்னுயிர் உறவே” என்று கூறுகின்றார். “இல்லா வருவாகி நின்றானை யாரறிவார் தானே யுருவாகித் தோன்றானேல் உற்று” ( சிவ. ஞா. போ. 8 ) எனப் பெரியோர் தெரிவிப்பது காண்க.

மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்

எனக்குற வாகிய என்உயிர் உறவே                                          1198

உரை : மன நினைவில் உண்டாகும் குறைகளைப் போக்கி, இன்ப ஞான வாழ்வை எளியேனுக்குத் தருவது என் உயிர்க்கு உறவாய் உடனிருக்கும் சிவம். எ.று.

மனக்குறை - மனத்தில் நினைக்கும் நினைவுகள் நிரம்பாவிடத்து உளதாகும் குறை. குறையுற்ற வாழ்வு நல்வாழ்வாகாமை பற்றி, “மனக்குறை நீக்கி நல்வாழ்வளித்து” என மொழிகின்றார். உறவாதல் - பிரியாது உடனிருத்தல்.

துன்னும் அனாதியே சூழ்ந்தெனைப் பிரியா

தென்உற வாகிய என்உயிர் உறவே                                          1200

உரை : என்னுட் பொருந்திய மன முதலிய கரணங்களிற் கலந்து கொண்டு என்னைப் பிரியாமலிருப்பது எனக்கு உயிருறவாகிய சிவம். எ.று.

உயிர்க்குக் கருவிகளாக வுள்ள மன முதலிய கருவிகட்கும் சிவத்துக்குமுள்ள சம்பந்தம் அனாதி என்றற்கு, “அனாதியே சூழ்ந்து” எனச் சொல்லுகின்றார். துன்னுதல் - நெருங்குதல்.

என்றும்ஓர் நிலையாய் என்றும்ஓர் இயலாய்

என்றும்உள் ளதுவாம் என்தனிச் சத்தே                                                                                   1202

உரை : எப்பொழுதும் மாறா நிலைமை யுடையதாய் எக்காலத்தும் ஒரே இயல்பையுடையதாய் எந்நாளும் உள்ளதொரு பொருளாய் இருப்பது யானுடைய ஒப்பற்ற சத்தாகிய சிவம். எ.று.

மாறும் இயல்புடைய உலகத்துப் பொருள் போல்வதன்று என்றற்கு, “என்றும் ஓர் நிலையாய்” எனவும், முக்குண வயத்தால் கணந்தோறும் இயல்பு மாறுவதின்றி ஒருதன்மைத் தென்பதற்கு, “என்றும் ஓர் இயலாய்” எனவும், ஒரு காலத்தில் ஓரிடத்திலிருந்து பிறிதொரு காலத்து இல்லா தொழியாதது என்பாராய், “என்றும் உள்ளதுவாம் என் தனிச் சத்து” எனவும் இயம்புகின்றார். சத்து - மெய்ப்பொருள். யான் அறிந்துரைக்கும் சத்துப் பொருள், “என் தனிச் சத்து” எனப்படுகின்றது.

அனைத்துல கவைகளும் ஆங்காங் குணரினும்

இனைத்தென அறியா என்தனிச் சத்தே                                          1204

உரை : எல்லா வுலகங்களிலும் அறிஞர்கள் ஆங்காங்கிருந்து ஓதுவன ஓதி யுணர்ந்தாலும் இத்தன்மைத்து என்று உணரலாகாதது யான் அறிந்துரைக்கும் ஒப்பற்ற சத்தாகிய சிவம். எ.று.

உலகவை - உயர்ந்தோர் தமது அறிவு விளங்கக் கூடும் பேரவை. தனித்திருந்தும் பலராய்க் கூடியிருந்தும் ஆராயினும் தன்மையுணரலாகாதது என்றற்கு, “ஆங்காங் குணரினும்” என வுரைக்கின்றார். இணைத்து - இத்தன்மையது. “உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன்” என்ற மெய்ம்மொழியை இது விளக்குகின்றது.

பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்

இதுஎனற் கரிதாம் என்தனிச் சத்தே                                          1206

உரை : பொதுவாயுள்ள வேத முடிபுகளும் புகழ்ந்தோதப்படும் ஞானிகளின் முடிபுகளும் இதுவே எனத் துணிந்து கூறற்காகாதது என் அறிவு கண்ட சத்தாகிய சிவம். எ.று.

சாதி குலந்தோறும் தனித்தனி வைத்துப் பேசப்படும் வேதங்களை விலக்குவதற்கு, “பொது மறை” எனப் புகல்கின்றார். அவை - ஈண்டு ஞான முனிவர் கூட்டத்தின் மேற்று.

ஆகம முடிகளும் அவைபுகல் முடிகளும்

ஏகுதற் கரிதாம் என்தனிச் சத்தே                                          1208

உரை : ஆகமங்களின் முடிவுரையும் அவற்றால் தெளிந்துரைக்கப்படும் சித்தாந்தங்களும் அறிவாற் சென்று காண மாட்டாதது யான் கண்டுரைக்கும் சத்தாகிய சிவம். எ.று.

மூலாகமம், உபாகமம் என விளங்கும் ஆகமங்களின் தெளிவுரைகள் “ஆகம முடி” எனப்படுகின்றன. இவ்வுரைகளின்கண் பூருவபக்கம் பண்ணிச் சித்தாந்தம் செய்யப்படும் பொருள்கள், “அவை புகல் முடிகள்” எனப்படுகின்றன. ஆகமம், ஆகமாந்தம் என இரண்டறிவாலும் அளந்தறிய மாட்டாதது என்பார், “ஏகுதற் கரிதாம்” என வுரைக்கின்றார்.

சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே

இத்தகை வழுத்தும் என்தனிச் சத்தே                                          1210

உரை : வேதாகம புராண இதிகாசங்களால் சத்தாம் தன்மையது, உண்மை, முக்காலும் உண்மை என்று ஒவ்வொன்றும் இவ்வாறு உரைக்கப்படுவது ஒப்பற்ற சத்தாகிய சிவம். எ.று.

“சாந்தம் சிவம் சத்தியம்” என வேதங்களும், “சத்தியம்” என ஆகமங்களும், முக்காலும் உண்மை யெனப் புராணங்களும் ஓதுதலால், “சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே இத்தகை வழுத்தும்” என மொழிகின்றார். வழுத்துதல் - சொல்லுதல்.

துரியமும் கடந்ததோர் பெரியவான் பொருள்என

உரைசெய்வே தங்கள் உன்னும்மெய்ச் சத்தே                                         1212

உரை : துரியாவத்தைக்கு அப்பால் யோகியர் கண்டு அனுபவிக்கும் பெரியதாகிய பரம்பொருள் என்று வைதிக ஞானிகளால் கருதப்படுவது மெய்ம்மையான சத்தாகிய சிவம். எ.று.

துரியாவத்தை - உந்தி யிடமாக யோகியர் ஆன்மாவை நிறுத்தி நோக்கும் ஞானக் காட்சி. அந்த அரிய காட்சிக்கும் அப்பாற் காண நிற்பது என வேதாந்திகள் உரைப்பதால், “உரை செய் வேதங்கள் உன்னும் மெய்ச்சத்தே” என விளம்புகின்றார். ஆன்மா எய்தும் அவத்தைகள் சாக்கிரம் முதல் துரியம் ஈறாக நான்கையும் வேதாந்திகள் கொள்வது மரபு. பெரிய வான்பொருள் - பிரமப் பொருள்.

அன்றதன் அப்பால் அதன்பரத் ததுதான்

என்றிட நிறைந்த என்தனிச் சத்தே                                          1214

உரை : துரிய நிலையோடன்றி அதற்கப்பாலதாகிய துரியாதீதத்துக்கு மேலதாம் சிவபரம்பொருள் எனச் சிவாகம ஞானிகள் எடுத்தோதும் எங்கும் நிறைந்திருப்பது யான் உரைக்கும் ஒப்பற்ற சத்தாகிய சிவம். எ.று.

அதன் அப்பால் - அத்துரியாவத்தைக்கு அப்பால் மூலாதாரத்தின் கண் இருந்து பெறும் துரியாதீதக் காட்சியும் உண்டெனச் சைவ சித்தாந்திகள் உரைப்பது பற்றி, “அதன் அப்பால் அதன் பரத்தது” என்று கூறுகின்றார். அன்று - துரியத்தோடு நிற்பதன்று. சிவாகமம் சித்தாந்தம் எனப்படுதலின், சிவாகம ஞானிகளைச் சைவ சித்தாந்திகள் என வழங்குகின்றார்.

என்றும்உள் ளதுவாய் எங்கும்ஓர் நிறைவாய்

என்றும் விளங்கிடும் என்தனிச் சித்தே                                                                                  1216

உரை : எக்காலத்தும் உளதாகிய பொருளாய், எவ்விடத்தும் நிறைந்ததுவாய், எந்நாளும் விளக்கமுறும் பொருளாய் இருப்பது எனது ஒப்பற்ற சித்தாகிய சிவம். எ.று.

எக்காலத்தும் எவ்விடத்தும் குறைவற நிறைந்த பரிபூரணப் பொருளாவது சிவம் என்பது கருத்து. “பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே” எனத் தாயுமானார் விளக்கியருளுவது காண்க. சித்து - ஞானம். முன்னே சிவம் சத்தாதல் கூறினமையின் இங்கே சித்தாதல் கூறுகின்றார்.

சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்

இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே                                                                                   1218

உரை : சிவாகமங்கள் கூறும் பலவாகிய சத்திகளும் மிகப் பலவாகிய சத்திமான்களும் இவ்வாறு எண்ணிறந்தனவாய் நிற்பன பலவும் ஞான வுருவாகிய சிவம். எ.று.

சத்திகள் எண்ணிறந்த பலவாதலையும் அவற்றை யுடைய சத்திமான்கள் பலராதலையும் அத்துவப் பிரகரணங்களில் சிவாகமங்கள் கூறுவது பற்றி, “இத்தகை விளங்கும் என் தனிச் சித்தே” என வுரைக்கின்றார்.

தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்

இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே                                                                                   1220

உரை : தத்துவங்கள் பலவாகவும், அவற்றையுடைய தத்துவிகள் பலவாகவும் இவ்வாறு விரிந்து விளங்குவது யான் கூறும் ஒப்பற்ற சித்தாகிய சிவம். எ.று.

நிலம் முதல் சிவம் ஈறாகத் தத்துவம் முப்பத்தாறு என்றும், தாத்துவிகம் அறுபது என்றும் கூறுவர்; இவை யிரண்டையும் கூட்டித் தத்துவம் தொண்ணூற்றாறு என்பதுமுண்டு. இத்தத்துவங்களையுடைய பொருள்கள் எண்ணிறந்தனவாதலின், “தத்துவி பலவாய்” என வுரைக்கின்றார். தத்துவங்களை யுடையது தத்துவி. உருவும் அருவுமாகிய உயிர்கள் யாவும் தத்துவிகள் என அறியப்படும். இவை யாவும் ஞான வுருவாகிய சிவமே என்பது கருத்து.

படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய்

இடிவற விளங்கிடும் என்தனிச் சித்தே                                                                                   1222

உரை : உலகங்கள் பலவாகவும், ஆங்காங்கு உள்ள பதங்கள் பலவாகவும் குறைவின்றி விளங்குவது யான் உரைக்கும் ஒப்பற்ற சித்தாகிய சிவம். எ.று.

தேவருலகத்து இந்திர பதம், மேலுலகத்துப் பிரம பதம், விஷ்ணு பதம், உருத்திர பதம் எனப் பல வுண்மையின், “படிநிலை பலவாய்”, என்றும், “பதநிலை பலவாய்” என்றும் கூறுகின்றார். படி - உலகம். இடிவு - குறை.

மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்

ஏற்பட விளக்கிடும் என்தனிச் சித்தே                                          1224

உரை : சிவ வுருவுடைய தேவர்களும் அத்தேவருள் தேவர்களும் எனப் பலராய் உரைக்க விளங்குவது சித்தாகிய சிவம். எ.று.

உருத்திரர், சித்தர் முதலாகச் சிவமூர்த்திகள் பலர் கூறப்படுதலால், “மூர்த்தர்கள்” என்றும், பிரமன் திருமால் முதலிய மூர்த்திகள் உண்மையின், “மூர்த்திகள்” என்றும் இயம்புகின்றார். மூர்த்தம் - உருவம். மூர்த்தி - நிலைத்த உருவுடையவர்.

உயிர்வகை பலவாய் உடல்வகை பலவாய்

இயலுற விளக்கிடும் என்தனிச் சித்தே                                                                                   1226

உரை : ஓரறி வுடைய வுயிர் முதல் பலவாகவும், ஊர்வன பறப்பன முதல் உடல் வகை பலவாகவும் இயங்குமாறு விளங்குவது ஒப்பற்ற சித்துப் பொருளாகிய சிவம். எ.று.

புல் பூடுகள் ஓரறிவுடைய உயிர் வகையாகும். பாம்பு வகை ஊரும் உடம்புடையவாகும். உயிர்க் கெனத் தனி உருவில்லையாதலால் உயிர் வேறாகவும், உடம்பு வேறாகவும் பிரித்துரைக்கின்றார். இயலுதல் - இயங்குதல்.

அறிவவை பலவாய் அறிவன பலவாய்

எறிவற விளக்கிடும் என்தனிச் சித்தே                                                                                   1228

உரை : அறிவுடையவை பலவாகவும், அறியப்படுபவை பலவாகவும் விலக்கின்றி விளங்குவது ஒப்பற்ற சித்தாகிய சிவம். எ.று.

அறிவுடையவை இல்லாதவை எனப் பலவகை யிருத்தலால், “அறிவவை” என எடுத்துரைக்கின்றார். அறிவுடையவற்றால் அறியப்படும் பொருள்கள் மிகப் பலவாதலின், “அறிவன பலவாய்” எனக் கூறுகின்றார். எறிவு - விலக்குதல். அறிவனவும், அறியப்படுவனவும் உயிர் வாழ்க்கைக்கு வேண்டப்படுதலால், வேண்டா என விலக்குவது ஒன்றுமில்லை என்றற்கு, “எறிவற விளக்கிடும்” என்று இயம்புகின்றார்.

நினைவவை பலவாய் நினைவன பலவாய்

இனைவற விளக்கிடும் என்தனிச் சித்தே                                          1230

உரை : நினைக்கும் மனவுணர்வுடையவை பலவாகவும், நினைக்கப்படுவன பலவாகவும் வருத்தமற விளங்கச் செய்வது ஒப்பற்ற சித்துப் பொருளாகிய சிவம். எ.று.

நினைத்தல் மனத்தின் செயலாதலால் மனவுணர்வுடையவற்றை, “நினைவவை” என்று குறிக்கின்றார். நினைவது நினையாத போது வருத்த முண்டாதலின், “இனைவு அற” என மொழிகின்றார்.

காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்

ஏட்சியின் விளக்கிடும் என்தனிச் சித்தே                                          1232

உரை : காணும் முறைகள் பலவாகவும் காணப்படுவன பலவாகவும் ஓர் எல்லையில் அகப்படுத்தி விளங்கச் செய்வது, ஒப்பற்ற சித்தாகிய சிவம். எ.று.

கண் காது மூக்கு முதலிய கருவிகள் பலவாதலின், அவற்றாற் காணும் திறம் பலவாதலால், “காட்சிகள் பலவாய்” என்றும், காணப் படுவன எண்ணிறந்தனவாதல் பற்றி, “காண்பன பலவாய்” என்றும் கூறுகின்றார். ஏட்சி - எல்லை. கண் காது முதலிய கருவிகள் ஓர் எல்லைக்குள் நின்று பொருள்களைக் காண்கின்றமையின், “ஏட்சியின் விளக்கிடும் சித்தே” எனத் தெரிவிக்கின்றார். ஏண் - எல்லை.

செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்

எய்வற விளக்கிடும் என்தனிச் சித்தே                                                                                  1234

உரை : உலகில் உயிர்கள் செய்யும் வினைகள் எண்ணிறந்தனவாகவும், அவற்றாற் செய்யப்படும் பொருள்கள் மிகப் பலவாகவும் தளர்வின்றித் தோற்றுவிப்பது ஒப்பற்ற சித்துப் பொருளாகிய சிவம். எ.று.

உலகில் உயிரனைத்தும் பல்வேறு வினைகளைச் செய்வதும், அவ்வினைகளாற் பல்வேறு செயற்படு பொருள்கள் உருவாவதும் நிகழ்தலால், “செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்” என்று செப்புகின்றார். எய்வு - தளர்ச்சி; ஈண்டு அஃது இடையறவு படுதல் மேற்று. இடையறாது கணந்தோறும் நிகழ்தலால். “எய்வற விளக்கிடும்” என இயம்புகின்றார்.

அண்ட சராசரம் அனைத்தையும் பிறவையும்

எண்தர விளக்கும் என்தனிச் சித்தே                                          1236

உரை : அண்டங்களையும், அவற்றில் வாழும் சரம் அசரம் என்ற இருவகைப் பொருள்களையும் பிறவற்றையும் மனத்தால் எண்ணியறியுமாறு விளங்கச் செய்வது, ஒப்பற்ற சித்தாகிய சிவம். எ.று.

அண்டங்களும் அவற்றின்கண் உள்ள அசையும் பொருள் அசையாப் பொருள்களும் அவை யல்லாத பிற பொருள்களும் நுண்ணுணர்வுடையவர் உணர்வால் காணப்படுகின்றன என்பது கருத்து. சரம் - அசையும் பொருள். அசரம் - அசையாப் பொருள். இவற்றை முறையே இயங்குதிணை யென்றும் நிலைத்திணை யென்றும் கூறுவர்.

எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட

எல்லாம் விளக்கிடும் என்தனிச் சித்தே                                                                                   1238

உரை : எல்லாம் வல்லதாகிய சைதன்யம் என வேதங்கள் முழங்குமாறு எல்லாவற்றையும் விளங்கச் செய்வது ஒப்பற்ற சித்துப் பொருளாகிய சிவம். எ.று.

வரம்பில் ஆற்றலுடையதெனச் சிவபரம்பொருளை வேதங்களும் ஆகமங்களும் எடுத்தோதுதலால், “எல்லாம் வல்ல சித்து என மறை புகன்றிட” என வுரைக்கின்றார். சித்து - ஞான மயமாகிய சிவ பரம் பொருள். ஞான மயமான சித்து, சைதன்யம் எனப்படும். மறைகள் ஓதுதற் கொப்ப, பரம்பொருள், அரியவும் பெரியவும் நுண்ணியனவுமாகிய பொருள்கள் யாவும் ஞானக் கண்ணுடையார் இனிது காணக் காட்டுவது விளங்க, “எல்லாம் விளக்கிடும் என் தனிச் சித்து” என இயம்புகின்றார்.

ஒன்றதில் ஒன்றென் றுரைக்கவும் படாதாய்

என்றும்ஓர் படித்தாம் என்தனி இன்பே                                                                                   1240

உரை : இன்பம் தரும் ஒன்றாகிய பொருள்களுள் சிவமும் ஒன்று எனப் பேசப் படாததாய் எக்காலத்தும் ஒருதன்மைத்தாய் விளங்குவது ஒப்பற்ற இன்பப் பொருளாகிய சிவம். எ.று.

ஒரு காலத்தே ஓரிடத்தே இருந்து இன்பம் தரும் பொருள்களில் ஒன்று பரசிவம் எனப் புராணங்கள் கூறுமாயினும், உண்மை ஞானத்தை யுரைக்கும் மெய்ந்நூல்கள் சிவ பரம்பொருள் “எஞ்ஞான்றும் ஒருதன்மைத்து” என்பதை வற்புறுத்துவாராய், “என்று மோர் படித்தாம் என் தனி இன்பே” எனக் கூறுகின்றார். சத்தும் சித்தும் ஆனந்தமுமாகிய சச்சிதானந்தப் பரம்பொருளை இதுவரையிற் சத்தாகவும் சித்தாகவும் உரைத்தாராகலின், இதன்கண், ஆனந்த வுருவாகிய நிலையை “என் தனி இன்பே” என எடுத்தோதுகின்றார்.

இதுஅது என்னா இயலுடை அதுவாய்

எதிர்அற நிறைந்த என்தனி இன்பே                                          1242

உரை : இதுவென்றும் அதுவென்றும் சுட்டி யுணர வொண்ணாத தன்மை யுடையதும் எங்கும் குறைவற நிறைந்ததுமாவது ஒப்பற்ற பரசிவம். எ.று.

பொறி புலன் முதலிய கருவி கரணங்கட்கு, அகப்படாமல் அப்பாற்பட்ட பரம் பொருளாதலின், “இது அது என்னா இயலுடையது” என்று கூறுகின்றார். எதிர் - குறைவு; ஒப்பு எனினும் பொருந்தும். வாயிற் காட்சி, மானதக் காட்சி, யோகக் காட்சி, தன்வேதனைக் காட்சியாகிய உணர்வுக் காட்சிக்கு எட்டாதது பரசிவம் என்பது கருத்து.

ஆக்குறும் அவத்தைகள் அனைத்தையும் கடந்துமேல்

ஏக்கற நிறைந்த என்தனி இன்பே                                          1244

உரை : உடலுறவால் உண்டாகின்ற சாக்கிரம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் கடந்து மேனிலையில் நிறைந்து விளங்குவது ஒப்பற்ற தனிப் பொருளாகிய சிவம். எ.று.

சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்ற அவத்தைகள் ஆன்மா உடம்பொடு கூடிய சகல நிலையில் அக்கூட்டத்தால் உண்டாவனவாதலின், அவற்றை, “ஆக்குறும் அவத்தைகள்” எனப்படுகின்றன. சாக்கிரத்தில் புருவ நடுவிலும், சொப்பனத்தில் கழுத்திலும், சுழுத்தியில் இதயத்தானத்திலும், துரியத்தில் உந்தியிலும், துரியாதீதத்தில் மூலாதாரத்திலும் காட்சி நிகழ்தலால், “அவத்தைகள் அனைத்தையும் கடந்து” என்றும், அவற்றின் எல்லைக்கு மேற்பட்ட மாயாதீத உபசாந்தப் பெருவெளியிற் குறைவற நிறைந்து ஞானப் பேரொளியாய்ப் பிறங்குவ துணர்த்தற்கு, “ஏக்கற நிறைந்த இயல்பே” என்றும் இயம்புகின்றார்.

அறிவுக் கறிவினில் அதுவது அதுவாய்

எறிவற் றோங்கிய என்தனி இன்பே                                          1246

உரை : அறிதலைச் செய்யும் ஆன்ம வுணர்வின்கண் அறியப்படும் பொருள் வகை பலவற்றினும் அதுவதுவாய்க் குறைவற நின்று ஓங்குவது ஒப்பற்ற தனிப் பொருளாகிய பரசிவம். எ.று.

ஆன்ம வுணர்வின்கண் காணப்படுவன சித்தும் அசித்தும் சத்தும் அசத்தும் எனப் பலவாதலின், “அது வது வதுவாய்” என மொழிகின்றார். எறிவு - வேண்டாவென விலக்குதல். தானே யியன்ற தனிப் பெரும் பரம்பொருளாதலின், “தனி இயல்பு” என்று குறிக்கின்றார்.

விடயம் எவற்றினும் மேன்மேல் விளைந்தவை

இடைஇடை ஓங்கிய என்தனி இன்பே                                                                                   1248

உரை : பொறி புலன்களால் அறியப்படும் பொருள்கள் அனைத்தினுள்ளும் காரண காரிய நெறியில் மேன்மேலாகத் தோன்றி அவற்றினும் அவற்றின் இடையினும் நிறைந்து நின்று ஓங்குவது ஒப்பற்ற பரசிவம். எ.று.

கண் முதலிய கருவிகளாற் காணப்படுவன யாவும் விடயம் எனப்படும். அவையாவும் காரிய காரண நெறியில் தூலமும் சூக்குமமுமாய் ஒன்றினொன்று மேம்படுவது விளங்க, “மேன்மேல் விளைந்து” எனவும், மேன்மேலாகுமிடத்து இடைவெளியுளதாகலின், அதுவும் அகப்பட, “இடை யிடை யோங்கிய” எனவும் இயம்புகின்றார்.

இம்மையும் மறுமையும் இயம்பிடும் ஒருமையும்

எம்மையும் நிரம்பிடும் என்தனி இன்பே                                          1250

உரை : இம்மை, மறுமை, அம்மை என ஓதப்படும் இடங்கள் யாவற்றிலும் நிறைந்து விளங்குவது ஒப்பற்ற பரசிவம். எ.று.

இம்மை - இவ்வுலக வாழ்வு; மறுமை - மேலுலக வாழ்வு. அம்மை - இரண்டற்கும் மேலாகிய பிறவாப் பெருநிலை. இம்மை மறுமை யிரண்டும் நிலையாதவையாதலின், என்றும் அழிவில்லாச் சிவபோகப் பெருநிலை “ஒருமை” எனப்படுகிறது.

முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்

எத்திறத் தவர்க்குமாம் என்தனி இன்பே                                          1252

உரை : முத்தான்மாக்களும் சித்தர்களும் சத்திகளும் சத்திமான்களுமாகிய எத்தகைய பெருமக்களுக்கும் தலையாயது ஒப்பற்ற இயல்பினதாகிய பரசிவம். எ.று.

முத்தர் - முத்திப் பேற்றுக்குரிய பக்குவம் முதிர்ந்த ஆன்மாக்கள். சித்தர்கள் - நுண்ணிய செயல் வகைகளைச் செய்தாற்றும் செயல் வீரர்கள். சத்தர் - சத்திகளையுடையவர்கள். ஆன்மாக்களிற் சிறந்தவர் களாதலின், “எத்திறத்தவர்” என ஈடுபடுத்துகின்றார். எத்திறத்தவர் எனப் பிரித்துக் கொண்டு, எத்தகைய உயர்ந்த தவமுடைய மேலோர்க்கும் என வுரைத்தலுமுண்டு.

எல்லா நிலைகளின் எல்லா உயிர்உறும்

எல்லா இன்புமாம் என்தனி இன்பே                                          1254

உரை : நிலை வகைகள் எல்லாவற்றின் கண்ணும் வாழும் உயிர் வகைகள் அனைத்தும் பெறும் இன்பங்கள் யாவுமாவது ஒப்பற்ற தனிமுதற் பொருளாகிய சிவம். எ.று.

கீழ் நடு மேல் என நிலைகள் பலவாதலின், அவைகள் அனைத்திலும் வாழும் உயிர்களை, “எல்லா நிலைகளின் எல்லா வுயிர்” எனக் கூறுகின்றார். இன்ப நுகர்ச்சியே வாழ்வாதலின், “எல்லா வுயிர்களும் வாழ்ந்து பெறும் இன்பம் யாவும்” சிவமென்பது கருத்தாயிற்று.

கரும்புறு சாறும் கனிந்தமுக் கனியின்

விரும்புறும் இரதமும் மிக்கதீம் பாலும்

குணங்கொள்கோற் றேனும் கூட்டிஒன் றாக்கி

மனங்கொளப் பதஞ்செய் வகையுற இயற்றி

உணவெனப் பலகால் உரைக்கினும் நிகரா

வணம்உறும் இன்ப மயமே அதுவாய்க்                                                                                   1260

உரை : கரும்பின் சாற்றையும், மா முதலிய முக்கனிகளின் விருப்ப மிக்க பிழிவையும், மேன்மையுடைய இனிய பாலையும், நற்றன்மை பொருந்திய கொம்புத் தேனையும் ஒன்றாய்க் கலந்து கூட்டி நறுமணம் கமழப் பக்குவம் செய்து உண்டற் கமைந்ததெனப் பலரும் கூறப்படும் சிறப்பு எய்தினும், அதற்கும் ஒப்பாகாவாறு இன்ப மயமாய் விளங்குவதாம். எ.று.

நன்கு பழுத்த கனிகளை, “கனிந்த முக்கனி” என்கின்றார். மா, பலா, வாழை ஆகிய கனிகள் “முக்கனிகள்” எனப்படும். நன்கு பழுத்தாலன்றிச் சாறு பெறப்படா தென்பது பற்றி, “கனிந்த முக்கனி” எனல் வேண்டிற்று. இரசம் - இரதம் என வந்தது. பெயரைச் சொன்னாலே உண்டாற் போல நாவிற் சுவையூறும் இயல்பினவாதலின் “விரும்புறும் இரதம்” என்று கூறுகின்றார். கோற் றேன் - கொம்புத் தேன். தேன் வகையில் உயர்ந்ததாகலின், “குணங் கொள் கோற்றேன்” என்று குறிக்கின்றார். உண்டற் குரிய பக்குவம் எய்தும் போது இனிய நறிய மணம் பிறப்பது பற்றி, “மணங் கொள் பதம் செய்வகையியற்றி” என வுரைக்கின்றார். “பதம்” உண்டாதல் செயற்கை முறையாதலால், “செய்வகை இயற்றி” என்று தெரிவிக்கின்றார். பதமாயினமை பலராலும் ஒப்ப அறிந்து உரைக்கப்படும் நிலையில் உண்ணப்படுவது விளங்க, “உணவெனப் பல்கால் உரைக்கினும்” என மொழிகின்றார். உண்ணற்குரிய பக்குவமுற்ற சிறப்பை வற்புறுத்தற்குப் “பல்கால் உரைக்கினும்” எனப் பகர்கின்றார். இவ்வாறு சிறப்பிக்கப் பெறும் தேன் கலவைக்கும் ஒப்பாகாது உயர்ந்தது சிவானந்தத் தேன் என்பாராய், “நிகரா வணமுறும் இன்ப மயமே அதுவாய்” என்று கூறுகின்றார்.

கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய்

நலந்தரு விளக்கமும் நவில்அருந் தண்மையும்

உள்ளதாய் என்றும் உள்ளதாய் என்னுள்

உள்ளதாய் என்றன் உயிர்உளம் உடம்புடன்

எல்லாம் இனிப்ப இயலுறு சுவைஅளித்

தெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச்                                                                                   1266

உரை : என்னுடைய உணர்வுடன் கலந்து அறிவுருவாகவும், உயிருணர்வால் உன்னுதற் கரிதாகவும், நலம் பயக்கும் விளக்கமும் நாவாற் சொல்லுதற் கரிய தட்பமு முடையதாகவும், எக்காலத்தும் உள்ள உள்பொருளாகவும், என்னுடைய உள்ளத்தின் உள்ளே உள்ளதாகவும், என்னுடைய உயிரும் உள்ளமும் உடம்பும் யாவும் இனிக்குமாறு அமையும் சுவை தந்து எல்லாம் செயல் வல்ல சித்தாகவும் இயலும் தன்மையதாகவும் விளங்குவது சிவம். எ.று.

உயிருருவில் வேறறக் கலந்திருப்பது அறிவாதலால், அதனால் சிவம் அறியப்படாமை பற்றி, “கலந்தறி வருவாய்” என்று கூறுகின்றார்; அஃதாவது, உயிரறிவால் அறிவரிது என்பது கருத்து. கருவி கரணங்களுடன் கலத்தலின்றித் தனித்திருந்து எண்ணிப் பார்க்கினும் பார்ப்பரிது என்றற்கு, “உன்னுதற் கரிதாய்” என வுரைக்கின்றார். அறிவுக் கறிவாய் நின்று அருள் விளக்கம் நல்குமிடத்து நலம் எய்துமாறு உணர்த்த, “நலம்தரு விளக்கமும்” எனவும், அவ்விளக்கத்திற் பரந்து நிலவும் இன்பக் குளிர்ப்புச் சொல்ல வொண்ணாத தன்மையுடையதாய் விளங்குதல் தோன்ற, “நவிலருந் தண்மையும் உள்ளதாய்” எனவும், இவ்வனுபவம் தம்முள் உளதாவது கண்டமையின், “என்னுள் உள்ள தாய்” எனவும், இதுதானும் ஒருகாலத்தே தோன்றி ஒருகாலத்தே இல்லா தொழிவதன்று என்பாராய், “என்றும் உள்ளதாய்” எனவும் இயம்புகின்றார். அருள் விளக்கம் எய்திய போது தமது உடல் கருவி கரணங்கள் யாவும் இன்புற்ற திறத்தை, “உயிர் உளம் உடம்புடன் எல்லாம் இனிப்ப” என இசைக்கின்றார். அரிய செயல்களைச் செய்யும் வன்மை அசத்துக் கொருகாலும் உளதாகாமை பற்றி, “எல்லாம் வல்ல சித்து இயற்கையதாகி” என்று கூறுகின்றார். எல்லாம் வல்ல சித்தாம் தன்மை சிவத்துக்கு இயல்பாகவேயுளது என்றற்கு, “இயற்கையதாகி” என இயம்புகின்றார்.

சாகா வரமும் தனித்தபேர் அறிவும்

மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்

செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்

மயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப்                                                                                   1270

உரை : இறவாப் பெருநிலையையும் தனித்துணரும் அவ்வியஞ்சக ஞானமும், பேரன்புருவாகிய சிவத்தின் ஆற்றலை நல்கும் சத்தியும், செய்தற்கரியவற்றைச் செய்யும் அனந்த சித்திகளும் இன்பமும் கலக்கமறத் தந்தருளும் வள்ளன்மை யுடையது சிவம். எ.று.

சாகா வரம் - பிறப்பிறப்புக்களில்லாத மேன்மை நிலை. துணை பிறிதின்றி யாவற்றையும் தனித்திருந்தறியும் பேரறிவு “தனித்த பேரறிவு” எனப்படுகிறது. இதனை அவ்வியஞ்சக ஞானம் என்பர். சிவ வல்லபம் - சிவத்தின் வரம்பில் ஆற்றல். அன்பே சிவவுரு என்று பெரியோர் கூறுதலால், “மாகாதலிற் சிவம்” என்று உரைக்கின்றார். அனந்த சித்தி - எல்லை யில்லாத சித்திகள். சித்தி - செய்து முடிக்கும் ஆற்றல். இங்கே கூறிய நலங்களைச் சிவம் வரையாது நல்குதல் புலப்பட, “மயக்கறத் தரும் வண்மையதாகி” என்று கூறுகின்றார். கொடை வண்மையும் திண்ணிய ஆற்றலுமுடையவர்க்கே அமைவது பற்றி, “திறல் வண்மையதாகி” என்று மொழிகின்றார்.

பூரண வடிவாய்ப் பொங்கிமேல் ததும்பி

ஆரண முடியுடன் ஆகம முடியும்

கடந்தென தறிவாம் கனமேல் சபைநடு

நடந்திகழ் கின்றமெய்ஞ் ஞான ஆரமுதே                                          1274

உரை : பூரண வுருவாய் மிகுந்து மேன்மேற் பெருகி வேத முடிபும் ஆகம முடிபும் கடந்து மேலுள்ள பொற்சபையின் நடுவில் திருக்கூத்தியற்றுகின்ற மெய்ம்மை ஞான அருமையான அமுதாகிய சிவமே. எ.று.

குறைவற நிறைந்த உரு என்றற்குப் “பூரண வடிவாய்” என்று கூறுகின்றார். பொங்குதல் - பெருகுதல். ததும்புதல், வழிதல் - ஈண்டு ஒளி மிகுதல். ஆரணம் - வேதம். வேத ஞான எல்லையையும் ஆகம ஞான எல்லையையும் கடந்தது என்றற்கு, “ஆரண முடிபும் ஆகம முடிபும் கடந்து” என வுரைக்கின்றார். ஞானாகாசமாகிய சபையைப் பொற்சபை என்பாராய், “எனதறிவாம் கனக மேற் சபை” என்கின்றார். கனகசபை - பொற் சபை. உயர்ந்த சபையாதலின், “மேற் சபை” என்று சிறப்பிக்கின்றார். மெய்ம்மைச் சிவஞான வுருவாய்க் காண்பார்க்கு அமுத மயமாய் இன்பம் தருவதனால், “மெய்ஞ்ஞானவமுது” என விளம்புகின்றார். பெறற்கு அரிதாதல் விளங்க, “ஆரமுதே” என இசைக்கின்றார். ஆர்வ மிகுதியால் சிவத்தை “ஆரமுதே” எனப் போற்றுகின்றார். மேல் வரும் இடமெல்லாம் இதுவே கூறிக் கொள்க.

சத்திய அமுதே தனித்திரு அமுதே

நித்திய அமுதே நிறைசிவ அமுதே

சச்சிதா னந்தத் தனிமுதல் அமுதே

மெய்ச்சிதா காச விளைவருள் அமுதே

ஆனந்த அமுதே அருள்ஒளி அமுதே

தானந்த மில்லாத் தத்துவ அமுதே

நவநிலை தரும்ஓர் நல்லதௌ¢ ளமுதே

சிவநிலை தனிலே திரண்டஉள் ளமுதே

பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே

கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வான் அமுதே

அகம்புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்

உகந்தநான் கிடத்தும் ஓங்கிய அமுதே

பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே

தனிமுத லாய சிதம்பர அமுதே

உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே

அலகிலாப் பெருந்திறல் அற்புத அமுதே                                          1290

உரை : சத்தியத்தின் உருவாய், ஒப்பற்ற வீட்டின்பம் தருவதாய், நித்தியமாய், நிறைந்தொளிரும் சிவமாகிய அமுதமே; சத்து, சித்து, ஆனந்தமாகிய தனிமுதலாய்த் திகழும் அமுதமே; மெய்மையான ஞானாகாசத்தில் விளைகின்ற திருவருளாகிய அமுதமே; பேரின்ப மயமாகியதும், திருவருள் ஒளி பரப்புவதும், முடிவில்லாத தத்துவமாகியதும், சிவ முதலிய ஒன்பது நிலைகளையும் தருவதாகிய ஒப்பற்ற நல்ல ஒளியமைந்ததுமாகிய அமுதமே; சிவமாகிய உயர்நிலைக்குள் திரண்ட உள்ளுறை அமுதமும், கெடாத கருணையுருவாய் அமைந்த புண்ணிய அமுதமே; பிறர் ஒருவரும் தீண்டியறியாத பெரிய சிறப்புடைய கடவுள் மயமான உயர்ந்த அமுதமே; அகம், புறம், அகப்புறம், புறப்புறம் என வுயர்ந்த நான்கிடத்தும் உயர்ந்து விளங்கும் உயர் அமுதமே; நடுக்க முதலிய குற்றத்தையுண்டாக்காத மேன்மேல் உயர்ந்த பர வமுதமே; தனி முதலாய்ச் சிதம்பரத்தில் காட்சிதரும் சிவாமிர்தமே; உலகத்தவர் அனைவரும் ஒருங்கிருந்து உண்டாலும் குறைபடாத அமுதமாகிய சிவமே; அளவில்லாத பெரிய வன்மையும் அற்புதமும் உடைய பரசிவமே. எ.று.

சத்திய வமுது - உள்பொருளாம் தன்மை நிறைந்த அமுதம்: அஃதாவது வெறுங் கற்பனையன்று என்பது கருத்து. பிறிதொன்றும் கலவாத தனிப் பொருள் என்றற்குத் “தனித் திருவமுது” என்று இயம்புகின்றார். திரு - வீட்டின்பம். அழியாத பரம்பொருள் என்பது பற்றி, “நித்திய அமுது” என்றும், குறைவற்ற இன்ப மயமாதல் விளங்க, “நிறை சிவம்” என்றும் கூறுகின்றார். தனிமுதல் - சத்தாந் தன்மையும், சித்தாந் தன்மையும் இன்பமாம் தன்மையும் ஒருங்கமைந்தது. சிதாகாசம் - ஞானமேயான ஆகாசம். ஞானாகாசமாகிய சிவத்தின்கண் விளங்குதலால், “சிதாகாச விளைவருள் அமுதே” என வுரைக்கின்றார். விளைவருள் அமுது - விளைவதாகிய அருளமுது என்பதாம். சிவவொளி திருவருட் பேரொளியாதலால், “அருள் ஒளி யமுதே” என அறிவிக்கின்றார். தான் - அசைநிலை; அந்தமில்லாத் தத்துவம். ஏனைத் தத்துவ தாத்துவிகங்கள் பலவும் நிலையின்றிக் கெடுவன என்பதனால், சிவத்தை, “அந்தமில்லாத் தத்துவ வமுதே” என்று புகழ்கின்றார். நவநிலை - நவபதம் :- சிவபதம். சத்தி பதம், நாதபதம், விந்து பதம், சதாசிவ பதம், ஈசுர பதம், உருத்திர பதம், திருமால் பதம், பிரம பதம் என்ற ஒன்பது நிலைகள். திருவருள் ஞானத்தால் இவை ஒன்பதும் ஆன்மாக்கள் எய்த அமைந்தனவாதலால், “நவ நிலைதரும் ஓர் நல்ல தௌ¢ளமுதே” என்று நவில்கின்றார். சிவபதத்தில் பெறலாகும் திருவருட் போகம், “சிவநிலை தனிலே திரண்ட வுள்ளமும்” எனப்படுகிறது. கருணையுருவிற் பொலிவதால், “கருணைப் புண்ணிய வமுது” என்றும், எல்லாவற்றினும் கலந்திருப்பினும், கலப்பால் மாசுபடாத தென்றற்கு, “கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள் வானமுதம்” என்றும் இயம்புகின்றார். தேவருலகத்துத் தேவர் பருகும் சிறப்புடைய அமுதம் என வுரைத்தலு முண்டு. இட வகை யாதினும் அடங்காத தென்பாராய், “அகம்புறம் அகப்புறமாகிய புறப்புறம் உகந்த நான்கு இடத்தும் ஓங்கிய அமுதமே” என்று இசைக்கின்றார். பனி - நடுக்கம். அமுதம் உண்ட வழிப் பிறக்கும் பனிப்பு, குளிர்ப்பு, வெப்பம் முதலிய குற்றமின்மை வெளிப்பட, “பனி முதல் நீக்கிய பரம்பர அமுதே” எனப் பகர்கின்றார். பரம்பரம் - மேன்மேல் உயர்ந்தது. சிதம்பரம் - சிதாகாசம். சிதம்பர சபையிற் காட்சி தரும் கூத்தன் உருவுடைய சிவம், “சிதம்பர அமுது” எனப்படுகிறது. உலகவர் அனைவரும் ஒருங்கு கூடி யுண்டாலும் ஒரு சிறிதும் குறைபடாத பெருமையுடையது எனப் புகழ்வாராய், “உலப்பிலா அமுதே” என வுரைக்கின்றார். உலத்தல் - சுருங்குதல். “கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்” என்றாற் போல. அலகு - அளவு.

அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள

பண்டமும் காட்டிய பரம்பர மணியே                                          1292

உரை : பல்வகை அண்டங்களையும் அவற்றுள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி நிற்கும் அண்டங்களையும் அவற்றுள் வாழ்கின்ற பொருள்களையும் உணர்வுக்குக் காட்டியது பரம்பர மணியாகிய சிவம். எ.று.

அண்டங்கள் எண்ணிறந்தனவாய் ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி இருக்கின்றன என்பது ஆகமங்களின் அத்துவாப் பகுதிகளும் கந்த புராணம் முதலிய நூல்களும் உரைப்பதால், “அண்டமும் அதன் மேல் அண்டமும்” எனவும், அண்டங்கள் தோன்றும் எண்ணிறந்த புவனங்கள் கூறப்படுவதால் அவற்றை, “அவற்றுள பண்டம்” எனவும் இயம்புகின்றார். புவனங்கள் அண்டங்களின் உள்ளுறுவனவாதலால் “பண்டம்” எனப்படுகின்றன. இவற்றின் இயல்புகளைச் சிவஞான மாபாடியத்து இரண்டாம் சூத்திரம் மூன்றாம் அதிகரணத்துள் மாதவச் சிவஞான முனிவர் உரைத்தருளுவது காண்க.

பிண்டமும் அதில்உறு பிண்டமும் அவற்றுள

பண்டமும் காட்டிய பராபர மணியே                                          1294

உரை : அண்டங்களைப் போல அணு வடிவிற் பல கோடி பிண்டங்களையும் அவற்றின் பல கோடி பண்டங்களையும் படைத்தளித்தருளுவது பராபரமாகிய மணியான சிவம். எ.று.

அண்டங்கள் பேருருவின எனின் பிண்டங்கள் சிற்றுருவில் அணு வடிவில் அமைந்திருப்பது விளங்க, “பிண்டமும் அதிலுறு பிண்டமும்” என்றும், அவ்வணுக்களிற் செறிந்திருக்கும் பொருள்களையும் சத்திகளையும், “அவற்றுள பண்டம்” என்றும் இயம்புகின்றார். அணுக்கள் தோறும் பலவேறு சத்திகள் நிறைந்து அண்டங்கள் போல இயங்குகின்றன என அணுவாராய்ச்சி புரியும் அறிஞர்கள் அறிவிக்கின்றார்கள். பரம் - மேல்; அபரம் - கீழ்.

நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற

அனைத்தையும் தரும்ஓர் அரும்பெறல் மணியே                                          1296

உரை : மக்களுலகம் நினைக்கின்ற பொருளும் செயலுமாகிய எல்லாவற்றையும் நினைத்தபடி எய்துமாறு தந்தருளுவது பெறுதற் கரிய மணியாகிய சிவம். எ.று.

நினைத்தவை என்பவற்றில் முதலில் நினைத்தவை யென்பது நினைக்கின்ற உயிர் வகை. இரண்டாவதான நினைத்தவை என்பது நினைக்கப்படுகின்ற பொருள்களையும் செயல்களையும் குறிக்கின்றது. “வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்” என்று பெரியோர் கூறுவதால், அவர் கூற்றினை, “நினைத்தவை நினைத்தாங் கெய்துற அனைத்தையும் தரும்” என வுரைக்கின்றார். உலகியல் மணிகளின் வேறுபடுத்தற்கு, “அரும் பெறல் மணியே” எனக் கூறுகின்றார்.

விண்பதம் அனைத்தும் மேற்பத முழுவதும்

கண்பெற நடத்தும் ககனமா மணியே                                                                                   1298

உரை : விண்ணவர் உலகங்களையும் அவற்றிற்கு மேற்பட்ட உலகங்களையும் ஆங்காங்கு இடம் பெற்றொழுகுமாறு நடத்துவது தேவமணியாகிய சிவம். எ.று.

விண் பதம் - தேவர்கள் வாழும் உலகம். மேற்பதம் - தேவதேவர்களாகிய சிவன், திருமால், பிரமன் முதலியோருடைய உலகம். ஆங்காங்கிருந்து ஆங்கு வாழும் தேவர்கட்கு வேண்டும் போக போக்கியங்களைத் தந்தாளுவது பற்றி, “கண் பெற நடத்தும் ககன மாமணி” என வுரைக்கின்றார். ககனம் - தேவருலகம்.

பார்பதம் அனைத்தும் பகர்அடி முழுவதும்

சார்புற நடத்தும் சரஒளி மணியே                                          1300

உரை : மண்ணுலகம் முழுதும் புகழ்ந்தோதப்படும் தனது திருவடி நீழலின்கண் வந்து ஒடுங்கச் செய்தருளுவது சரவொளியை யுடைய மணியாகிய சிவம். எ.று.

பார் பதம் - மண்ணுலகம்; தேவருலகத்தைத் தேவ பதம் என்பது போல. “பார் பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப் பரப்பே” ( கோயில் ) எனத் திருவாசகம் கூறுவது காண்க. உலக முழுதும் ஒடுங்குமிடத்து இறைவன் திருவடியே சார்பிடமாகச் சென்று ஒடுங்கும் திறம் புலப்பட, “சார்புற நடத்தும்” என மொழிகின்றார். “ஒருவன் இரு தாணிழற் கீழ் மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே” ( ஐங். கட. ) எனப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கூறுவது காண்க.

அண்டகோ டிகள்எலாம் அரைக்கணத் தேகிக்

கண்டுகொண் டிடஒளிர் கலைநிறை மணியே                                          1302

உரை : அரைக்கணப் பொழுதில் கோடிக் கணக்கான அண்டங்களுக்குச் சென்று நினைவுக் கண்ணாற் கண்டறியுமாறு விளங்குகின்ற கலை யெல்லாம் நிறைந்து ஒளிர்வது மணியாகிய சிவம். எ.று.

நினைவாற்றலுடையவர் அண்டங்களையும் அவற்றின் கண்ணுள்ள பொருள்களையும் தங்கள் அறிவுக் கண்ணிற் கண்டு தம்முடைய நூல்களில் குறித்திருப்பது பற்றி, “அரைக்கணத் தேகிக் கண்டு கொண்டிட” எனவும், அவ்வாற்றல் கலை யுணர்வால் உளவாவது பற்றி, “கலை நிறை மணியே” எனவும் இயம்புகின்றார். இக்காலத்தும் கலைவல்லுநர், சந்திர மண்டிலத்துக்குச் சென்ற அறிஞர் செயலை நிலத்திலிருந்தே அறிந்து உரைத்தமை போதிய சான்றாகும். “அண்ட கோடி முழுவதும் காணும் கண்கள் எய்தியே அங்கைக் கனி போல் அறிந்தேன் அவற்றினுள்ள செய்தியே” என்று பிறிதோரிடத்தில் வள்ளற் பெருமான் வற்புறுத்துவது காண்க.

சராசர உயிர்தொறும் சாற்றிய பொருள்தொறும்

விராவியுள் விளங்கும் வித்தக மணியே                                                                                   1304

உரை : சரமும் அசரமுமாகிய உயிர்ப்பொருள் தோறும், உயிரில் பொருள் தோறும் அதுவதுவாய்க் கலந்து விளங்குவது ஞான மணியாகிய சிவம். எ.று.

சரம் - இயங்கும் உயிர் வகை; அசரம் - நிலைத்திணையான புல் பூடு முதலிய ஓரறிவுடைய பொருள்கள். இவற்றைத் தாவரம் என்பர். உயிரும் உயிரில் பொருள்களுமாகிய எல்லாவற்றின் கண்ணும் சிவ பரம்பொருள் நிறைந்து கலந்திருக்கிறது என்பது கருத்து.

மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும்

தேவரும் மதிக்கும் சித்திசெய் மணியே                                                                                   1306

உரை : அரன், அரி, அயன் என்ற மூவகைத் தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும் தேவர்களும் ஞானத்தால் நன்கு மதித்துப் போற்றப்படுவது சிந்திப்பதைச் சித்தி யுறுவிக்கும் ஞான மணியுருவாகிய சிவம். எ.று.

அரன் - அழித்தற் கடவுள்; அரி - காத்தலைச் செய்யும் கடவுள்; அயன் - படைக்கும் கடவுள். முனிவர் - முற்றத் துறந்த ஞானச் செல்வர். முத்தர் - முத்தான்மாக்கள்; சித்தர் - பதினெண்வகைச் சிந்தனைச் செல்வர். தேவர் - தேவருலகத்தவர். சிந்தனையாற் சிந்திப்பவற்றைக் கைம்மேல் உருவாக்கித் தரும் சருவ வல்லமை யுடைமை பற்றிச் சிவனை, “சித்தி செய் மணியே” என்று புகழ்கின்றார்.

தாழ்வெலாம் தவிர்த்துச் சகமிசை அழியா

வாழ்வெனக் களித்த வளர்ஒளி மணியே                                          1308

உரை : இவ்வுலகில் நிலவும் குறைவுகள் எல்லாவற்றையும் போக்கி,. அழியாப் பெருவாழ்வை எனக்கு நல்குவது ஒளி பெருகும் மாணிக்க மணியாகிய சிவம். எ.று.

பிறப்பாலும் அறிவு குணம் செயல்களாலும் உள்ள குறைபாட்டால் உலகவரிடையே தாழ்வுகள் உண்டாதலின், “தாழ்வெலாம் தவிர்த்து” என்று கூறுகின்றார். அழியா வாழ்வு - சிவபோகச் செல்வ வாழ்வு. சகமிசை அழியா வாழ்வு என இயைத்து மண்ணுலகிற் சாவாப் பெருவாழ்வு எனப் பொருள் கூறுவதும் உண்டு.

நவமணி முதலிய நலம் எலாம் தரும்ஒரு

சிவமணி எனும்அருட் செல்வமா மணியே                                          1310

உரை : ஒன்பது வகை மணிகளின் நலமெல்லாம் ஒருங்கே தருகின்ற சிவமணி எனப்படுவது திருவருட் செல்வ மணியாகிய பரசிவம். எ.று.

மணி வகை யொன்பதும், முத்து, பவளம், கோமேதகம், புருடராகம், மாணிக்கம், நீலம், பதுமராகம், மரகதம், வயிரம் என்று கூறப்படும். இவற்றால் விளையும் நலம் அனைத்தையும் தருவதாகிய பெரிய மணி என்றற்கு, “நலமெலாம் தரும் ஒரு சிவமணி” என்று தெரிவிக்கின்றார்.

வான்பெறற் கரிய வகைஎலாம் விரைந்து

நான்பெற அளித்த நாதமந் திரமே                                          1312

உரை : விண்ணுலகத்துத் தேவர்களும் பெறுதற் கரிய நலங்களின் வகை யனைத்தையும் நான் விரைவிற் பெற்று இன்புற அருளுவது நாத மந்திரமாகிய சிவம். எ.று.

வான் - தேவருலகத்துத் தேவர்கள். வேண்டுவோர் பல திறத்தினராகலின், அவர் வேண்டும் நலங்களும் பலவகையாதல் பற்றி, “வகையெலாம்” என வுரைக்கின்றார். காலம் தாழாமை விளங்க, “விரைந்து” என மொழிகின்றார். நாத மந்திரம் - நாத தத்துவமாகிய சிவபோகப் பேற்றுக்குரிய மந்திரம். மனனம் திராணம் எனப் பிரிந்து மனோதிடத்தை நல்குவது என மந்திரம் என்ற பதம் பொருள் தருதலால், மனத் திண்மைக்குத் துணையாவது மந்திரம் என மொழிவதும் உண்டு. மனத் திண்மை பெற்றாலன்றிக் கருதுவது கைகூடாது என்பது கருத்து.

கற்பம் பலபல கழியினும் அழியாப்

பொற்புற அளித்த புனிதமந் திரமே                                         1314

உரை : பற்பல கோடி ஆண்டுகள் கழிந்தாலும் ஆற்றல் குன்றாத அழகிய சிவஞான சம்பந்தத்தை நல்குவது தூய மந்திரமாகிய சிவம். எ.று.

கற்பம் - பல கோடி ஆண்டுகள் கொண்டது என்பர். காலத்தால் பொருள்கள் திண்மையும் ஆற்றலும் குறைவதியல்பாகலின், “பலபல கழியினும்” என்று கூறுகின்றார். பொற்புறவு - அழகிய ஞான சம்பந்தம். மந்திரம் அறிவுரையுமாகலின், சிவஞான சம்பந்தத்தைப் பெற வுதவும் மந்திரம் அறிவுரையுமாகலின், சிவஞான சம்பந்தத்தைப் பெற வுதவும் மந்திரம் தூயதாதல் விளங்க, “புனித மந்திரம்” என்றும் மந்திர வடிவினனாதலால் சிவனைப் “புனித மந்திரம்” என்றும் புகல்கின்றார்.

அகரமும் உகரமும் அழியாச் சிகரமும்

வகரமும் ஆகிய வாய்மைமந் திரமே                                          1316

உரை : அகர வுகரங்கட்கு அப்பாலாய் நிலையுறுகின்ற சிவ என்ற இரண்டாலாகிய எழுத்தாலாவது மெய்ம்மை சான்ற சிவமந்திரம். எ.று.

நாத விந்து தத்துவங்களைக் குறிக்கும் அகர வுகரங்கள் சுத்த மாயைக்கு இப்பாலாய் மாயை ஒடுங்கும் போது உடன் ஒடுங்குதலால் அவற்றை வேறுபடுத்த, “அழியாச் சிகரமும் வகரமுமாகிய மந்திரம்” என்று கூறுகின்றார். சிவ என்பது சிவயசிவ என வரும் சூக்கும பஞ்சாக்கரத்துக்குக் காரணமாதலால், “அழியாச் சிகர வகரம்” எனத் தெரிவிக்கின்றார். சி சிவத்தையும், வ திருவருளையும் குறிப்பனவாம் என அறிக. தூல சூக்குமங்கள் விலக்குறினும், காரண பஞ்சாக்கரம் விலக்கப்படுவதில்லையாதலால், சிவ மந்திரத்தை, “வாய்மை மந்திரம்” என வற்புறுத்துகின்றார்.

ஐந்தென எட்டென ஆறென நான்கென

முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே                                          1318

உரை : ஐந்தெழுத்து மந்திரம் எனவும், எட்டெழுத்து மந்திரமெனவும், ஆறெழுத்து மந்திரமெனவும், நான்கெழுத்து மந்திரமெனவும் பழமையாக வேதங்கள் ஓதி வருவனவும் மந்திரப் பொருளாகிய சிவமே. எ.று.

ஐந் தெழுத்தாவன சிவயநம என்னும் பஞ்சாக்கரம்; எட்டெழுத்தாவன நமோ நாராயணாய என்னும் நாராயண மந்திரம்; ஆறெழுத்தாவன நமோ குமாராய என வரும் சடாட்சர மந்திரம். பஞ்சாட்சரத்தைச் சைவரும், அஷ்டாட்சர மந்திரத்தை வைணவரும், சடாட்சரத்தைக் கௌமாரரும் போற்றிப் பேணுவர். நான்கெழுத்தாவன ஐயும் கிலியும் சௌவும் ரீம் என்பதுமாம். இந்நான்கும் பீஜாட்சரம் எனப்பட்டு மந்திர ஜெபம் செய்யும்போது முதலிலும் இறுதியிலும் ஓதப்படும். இவற்றை மறை ( இரகசியம் ) என்றும், வேதங்களில் நெடுங் காலமாகக் குறிக்கப்பட்டு வருகின்றன என்றும் பெரியோர் கூறுவது பற்றி, “முந்துறும் மறை முறை மொழியும்” என விளம்புகின்றார். இவற்றை மானதம், மந்தம், உரை என்ற மூன்று வகையாக ஜெபிப்பராதலால், “முறை மொழியும்” என மொழிகின்றார். மானதத்தை உத்தமம் எனவும், மந்தத்தை மத்திமம் எனவும், உரையை அதமம் எனவும் இயம்புவதுண்டு. சிவம் மந்திர வடிவமாதல் மறவாமைப் பொருட்டு “மந்திரமே” என வுரைக்கின்றார்.

வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும்

ஓதநின் றுலவா தோங்குமந் திரமே                                          1320

உரை : வேதங்களும் ஆகமங்களுமாக விரிந்து கிடக்கும் நூல்கள் யாவும் பல்லாண்டுகளாக ஓதியும் கெடாது உயர்ந்து விளங்குவது மந்திர வடிவாகிய சிவம். எ.று.

வேதங்கள் நான்காகவும், வேதாந்தமாகிய உபநிடதங்கள் பலவாகவும், ஆகமங்கள் காமிக முதலிய இருபத்தெட்டாகவும், ஆகமாந்தமாகிய உபாகமங்கள் பலவாகவும் விரிந்து விளங்குதலின், “வேதமும் ஆகம விரிவுகளனைத்தும்” என விளம்புகின்றார். இவை தோன்றிப் பல்லாயிரமாண்டுகளாக ஓதி வரினும் இவற்றால் குறிக்கப்படும் மந்திரங்கள் இன்று வரை நின்று நிலவுவது பற்றி, “நின்று உலவாதோங்கும் மந்திரம்” என வுரைக்கின்றார். உலத்தல் - கெடுதல்.

உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்

அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே                                          1322

உரை : உடலைப் பற்றிய நோய் வகைகள் எல்லாவற்றையும் உயிரைப் பற்றிய வினைகளாகிய நோய்களையும் தொடர வொண்ணாதபடி போக்கவல்லது திருவருளுருவாகிய சிவஞான மருந்து. எ.று.

நோய் நீக்கத்துக்குரிய மணி, மந்திரம், மருந்து என்ற மூன்றனுள் முன்னர் மணியும் மந்திரமும் கூறினாராகலின், ஈண்டு மருந்து கூறுகின்றார். மணியை அக்குமணியெனவும், மந்திரத்தைத் திருவைந்தெழுத்தாகவும், மருந்தைத் திருநீறாகவும் சைவர்கள் உரைப்பர். உடற் பிணி - உடம்பைப்பற்றி வருத்தும் நோய் வகை; இவை வாத பித்த சிலேத்துமங்களின் மிகுதி குறைவுகளால் விளைவன எனத் திருக்குறள் கூறுகிறது. உயிர்ப்பிணி - உயிர் செய்யும் வினை வகைகள். வினைகளும் உயிரினைப் பற்றிக்கொண்டு அது புகும் உடம்புதோறும் விடாது சென்று வருத்தும் என்று பெரியோர் கூறுவர். “எனைப் பகையுற்றாரும் உய்வர் வினைப் பகை, வீயாது பின் சென்று அடும்” என்பது திருக்குறள். அடர்ப்பு - நெருங்கி வருத்துதல். திருவருளுக்கு முன்னே வினை யிருள் நில்லாதென்பதுபற்றி, “அருட் சிவ மருந்து” என்று புகழ்கின்றார்.

சித்திக்கு மூலமாம் சிவமருந் தெனஉளம்

தித்திக்கும் ஞானத் திருவருள் மருந்தே                                                                                   1324

உரை : மூவகைச் சித்திகட்கும் மூல மருந்தும், சிவமாகிய மருந்தாம் என்று மனம் இனிக்க நினைப்பது சிவஞானத் திருவருள் உருவாகிய சிவமாமருந்து. எ.று.

கன்ம சித்தி, யோக சித்தி, ஞான சித்தி எனச் சித்திகள் மூன்றாதலின், சித்தி எனப் பொதுப்படப் புகல்கின்றார். சிவமாகிய மருந்து இல்லாவிடத்து எவ்வகைச் சித்தியும் கைகூடாதென்பாராய், “சிவ மருந்து” என்று சிறப்பிக்கின்றார். நினைக்குந்தோறும் சிவஞானமாகிய திருவருள் இன்பம் செய்வது பற்றி, “உளம் தித்திக்கும் ஞானத் திருவருள் மருந்து” எனப் புகழ்கின்றார். “சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன” என்று திருநாவுக்கரசர் தெரிவிப்பது காண்க. சிவத்தையே மருந்து எனக் கருதுகின்றாராகலின் “திருவருள் மருந்து” என்று புகழ்கின்றார்.

இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியும்

சிறந்தவல் லபம்உறு திருவருள் மருந்தே                                          1326


உரை : உடம்பை விட்டு உயிர் நீங்கிச் செத்தவர் எல்லாரும் உயிர் பெற்று எழுந்திடச் செய்ய வல்ல சிறந்த வலிமையைப் பெறுவிப்பது திருவருள் மருந்தாகிய சிவம். எ.று.

“ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ, வாரார்” என்பது உலகியலுண்மையுரை; ஆயினும் அச் செத்தவரும் திருவருளால் உயிர் பெற்றெழச் செய்வது திருவருளின் பேராற்றல் என்பாராய், “இறந்தவ ரெல்லாம் எழுந்திடப் புரியும் சிறந்த வல்லபம்” என்று கூறுகின்றார். வல்லபம் - வல்லமை. அவ் வல்லமை திருவருட்கு உள்ளமை விளங்க, “திருவருள் மருந்தே” என்று போற்றுகின்றார்.

மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே                                                                                   1328

உரை : சாக்காடு என்னும் பெரிய நோய் வாராதபடித் தடுத்தற்குரிய அருள் வலிமிக்க கரணப் பெருவன்மை யுண்டெனக் காட்டியருளுவது மருந்தாகிய சிவம். எ.று.

சாக்காடு வரும் முன் பொறி புலன் முதலிய புறக்கரணங்களும், மனம் சித்தம் முதலிய அகக்கரணங்களும் வலியழிகின்றன என்பர் பெரியோர்; சாகும் காலத்தைப் “புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவழிந் திட்டைம் மேலுந்தி அலமந்த போது” ( ஐயாறு ) என ஞானசம்பந்தர் உரைப்பர். எனவே, புலன்களும் பொறிகளும் பிறவுமாகிய கரணங்கள் அலமர லுறாது திருவருளால் வலி மிக்கவிடத்துச் சாதல் தவிர்க்கப்படும் என வுணரலாம்; அதனால் “மிகு கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே” என்று வள்ளற் பெருமான் நுனித்துணர்ந்து நுவல்கின்றார். கரணங்கள் மிகுதிறல் பெறற்குத் திருவருளின் துணை பெற்ற வழிச் சாக்காட்டை விலக்கலாம் என்று வலியுறுத்தப் படுகின்றது போலும்.

நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்

உரைதரு பெருஞ்சீர் உடையநல் மருந்தே                                          1330

உரை : மயிர் நரைத்தலும் உடம்பு தோல் சுருங்குதலும் முதுமையுறுதலும் வந்தடையாவாறு நலம் புரிவது, புகழப்படுகின்ற பெரிய சிறப்பையுடைய நன்மருந்தாகிய சிவம். எ.று.

முதுமைக் குறியாகத் தலைமயிர் வெளிறுதல் நரை யெனப்படும். உடம்பின் தோல் சுருங்குதல் திரையாகும். நீரில் தோன்றும் சிற்றலைகளைப் போலுதலால், தோல் சுருக்கம் “திரை” எனப்படுகிறது. மூப்பு - முதுமை. நண்ணுதல் - பொருந்துதல். திருவருள் வளமுற்றபோது நரை திரை மூப்புக்கள் வந்தடையா என்பது கருத்து.

என்றே எனினும் இளமையோ டிருக்க

நன்றே தரும்ஒரு ஞானமா மருந்தே                                          1332

உரை : எக்காலத்தும் இளமை நலம் குறையாதிருக்க வல்ல நன்மையைத் தருவது ஒப்பற்ற ஞான மருந்தாகிய சிவம். எ.று.

முதுமைக்குரிய பருவம் வந்தபோது இளமை நலம் நில்லாதென்பது பற்றி, “என்றே யெனினும்” என இசைக்கின்றார். நன்மை - நன்று என வந்தது. திருவருள் ஞான வுருவினனாதல் பற்றிச் சிவனை, “ஞான மாமருந்தே” எனப் பராவுகின்றார்.

மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்

நலத்தகை அதுஎன நாட்டிய மருந்தே                                                                                   1334

உரை : மும்மல சம்பந்தத்தால் உண்டாகும் துன்பங்களைப் போக்கித் திருவருள் ஞான வன்மையைத் தரும் நலத் தகையினை நல்குவதெனச் சான்றோரால் வற்புறுத்தப்படுவது ஞான மருந்தாகிய சிவம். எ.று.

ஆணவம், மாயை, கன்மம் என்ற மூவகை மலங்களின் தொடர்பால் உயிரினம் துன்புறுவது பற்றி, “மலப்பிணி” என்று குறிக்கின்றார். மலப்பிணிப்பு நீங்கினாலன்றி ஞான நலம் உளதாகாதாகையால், “மலப்பிணி தவிர்த்து” என்று கூறுகின்றார். உயிரை மெலிவிக்கும் மலப்பிணி போலின்றி ஆன்மாவின் ஞான பலத்தை மிகுவிப்பது என்று பெரியோர் உரைத்தலின், “அருள் வலம் தருகின்றதோர் நலத்தகையது” என நவில்கின்றார். நலத்தகை - நலம் பெறுவிக்கும் தகுதிப்பாடு. “நலத்தகை நல்லவர்க் கேர்” ( குறள் ) என்று சான்றோர் வழங்குவதறிக. பல நல்ல அளவைகளாலும் பொருந்துமாற்றாலும் சான்றோர் வற்புறுத்தி யுள்ளமையின், “நாட்டிய மருந்து” என்று கூறுகின்றார். ஐய விபரீத வுணர்வின்றித் தெளிந்து கொள்க என்பது குறிப்பு.

சிற்சபை நடுவே திருநடம் புரியும்

அற்புத மருந்தெனும் ஆனந்த மருந்தே                                          1336

உரை : ஞான சபையின்கண் நடுவகத்தே நின்று திருக்கூத்தாடுகின்ற அற்புத மருந்து எனச் சான்றோர் போற்றும் ஆனந்த மருந்தாவது சிவம். எ.று.

சிற்சபை - ஞான சபை. தில்லைச் சிற்றம்பலத்தைச் “சிற்சபை” என்பதுண்டு. ஆன்மாக்களின் திருவருள் ஞான நிலையே ஞான சபையாம் என்பவரும் உண்டு. நடம் - கூத்து. காண்பார்க்குக் காட்சியளவிலே பேரின்பம் எய்துவித்தலால், “திருநடம்” எனவும், “அற்புத மருந்து” எனவும் புகழ்கின்றார். உண்ணப்படும் மருந்து போலாது காட்சியளவிலே இன்பம் தருதலால், “அற்புத மருந்து” எனப் புகல்கின்றார். திருக்கூத்து ஆனந்தம் நல்குவது விளங்க, “ஆனந்த மருந்து” என்று உரைக்கின்றார்.

இடையுறப் படாத இயற்கை விளக்கமாய்த்

தடைஒன்றும் இல்லாத் தகவுடை யதுவாய்

மாற்றிவை என்ன மதித்தளப் பரிதாய்

ஊற்றமும் வண்ணமும் ஒருங்குடை யதுவாய்க்

காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்

ஆட்சிக் குரியபன் மாட்சியும் உடைத்தாய்க்

கைதவர் கனவினும் காண்டற் கரிதாய்ச்

செய்தவப் பயனாம் திருவருள் வலத்தால்

உளம்பெறும் இடம்எலாம் உதவுக எனவே

வளம்பட வாய்த்த மன்னிய பொன்னே                                                                                   1346

உரை : இடையில் சில காரணங்களால் விளக்கம் பெறுவதின்றித் தன்னியல்பில் விளங்கும் விளக்கமுடையதாய், தன் விளக்கத்தைத் தடுக்க வல்லதொன்றும் இல்லாததாய், மேன்மையுடையவாய், இதற்கு மாற்றாவன இத்தனை யென என எண்ணி யளந்தறிய மாட்டாததாய், உறுதியும் நிறமும் ஒருங்கே யுடையதாய், காண்பதற் கினிமையும் கலைத்திறத்துக் கேற்ற அமைவும் உடையதாய், ஆளுதற்குரிய பலவேறு மாட்சிகளை யுடையதாய், வஞ்சகர்களால் கனவிலும் காண்பதற்காகாததாய், செய்யப்படும் தவப் பயனாகிய திருவருள் வளத்தால் மனம் விரும்பும் இடந்தோறும் எடுத்து உதவுக என்று குறை படாமல் உளதாகியது நிலைத்த பொன்னாகிய சிவம். எ.று.

உடன் தோன்றாது இடையில் உளதாகும் பொருள்களின் கலப்பால் ஒளி மிகுவன இரும்பு வௌ¢ளி முதலிய உலோக வகைகள்; சிவமாகிய செம்பொன் தன்னியல்பில் ஒளியும் விளக்கமும் உடையதென்றற்கு, “இடையுறல் - விளக்குதற்குத் துணை செய்யும் பொருள்களைக் கொணர்ந்து விளக்கமுறுவித்தல். சிவமாகிய பொன்னின் ஒளியைத் தடுப்பது ஒன்றுமில்லை யென்றற்குத் “தடை யொன்று மில்லாத் தகவுடையது” என்கின்றார். தகவு - ஈண்டு மேன்மை குறித்து நின்றது. பிறவற்றின் கலப்பால் தன்மை குறையும் பொன்னின் தரம் மாற்று எனப்படும். பொன்னினது மாற்று வல்லுநரால் அளந்தறிந்து இத்தனை மாற்று என்பது உலகியல் வழக்கு. சிவமாகிய பொன் மாற்று அளந்தறியப் படாத இயல்பிற்று என்றற்கு, “மாற்றிவை யென்ன மதித்து அளப்பரிதாய்” என வுரைக்கின்றார். “மாற்றறியாத செழும் பசும்பொன்னே” எனப் பிறிதோரிடத்தும் வள்ளற் பெருமான் உரைப்பர். ஊற்றும் - உறுதி; வண்ணம் - நிறம். உறுதியில்லது வண்ணங் கெடாமையுமுண்டாகலின், “ஒருங்குடையவதுவாய்” என்று ஓதுகின்றார். கலை - ஈண்டுக் கற்பனை வளம். மனத்தாலும் வாக்காலும் நினைந்தும் சொல்லியும் ஆளப்படுவது பற்றிச் சிவமாகிய பொன்னை, “ஆட்சிக்குரிய நன்மாட்சியு முடையது” எனப் புகல்கின்றார். ஆட்சியால் தன்மை குறையாமை விளங்க, “நன்மாட்சி யுடையது” என்று போற்றுகின்றார். கைதவர், வஞ்ச நெஞ்சினை யுடையவர். தவத்தாலன்றிற் பெறவொண்ணாமை விளங்க, “செய்தவப் பயனாம் திருவருள் வலத்தால்” எனத் தெரிவிக்கின்றார். வளம் - மிகுதி. எக்காலத்தும் இயல்பு மாறாமை புலப்பட, “மன்னிய பொன்னே” என்று போற்றுகின்றார்.

புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்

வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே                                          1348

உரை : புடமிட்டுத் தூய்மை செய்யப் படாத தரமும் விடம் கலந்து கெடாத தன்மையும் காய்ச்சி முறுக்கி மாலையாக்கப்படாத சிறப்பும் உடையது செம்பொன்னாகிய சிவம். எ.று.

உலகத்து வழங்கும் பொன் தீயிலிட்டுக் காய்ச்சி மாற்றுயரச் செய்வதுண்மையின், சிவமாகிய செம்பொன் அத்தகையதன்று என்றற்குப் “புடம்படாத் தரம் உடையது” என்று கூறுகின்றார். புடமிடுதல் - தீயிலிட்டுக் காய்ச்சுவது. “சுடச் சுடரும் பொன் போல் ஒளி விடும்” ( குறள் ) என்று திருவள்ளுவர் கூறுவது காண்க. தரம் - மேன்மை. விடம் படாத் திறம் - விடத்தாற் கறைபட்டுக் கெடும் தன்மை. தேவர்கள் தந்த கடல் விடத்தை யுண்டும் சிவமாகிய செம்பொன் கெடாமை விளங்க, “விடம் படாத் திறமும் உடையது” எனப் புகழ்கின்றார். வடம் படா நலம் - உலகத்துப் பொன் பொற்கொல்லர் கைத்திறனால் பூமாலை போலச் செய்யப்படும் இயல்புடையது; செம்பொன்னாகிய சிவம் அன்னதன்று என்பாராய், “வடம்படா நலமும் வாய்த்தது” என்று போற்றுகின்றார். வடம் - மாலை.

மும்மையும் தரும்ஒரு செம்மையை உடைத்தாய்

இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே                                          1350

உரை : இம்மை மறுமை அம்மை என்ற மூவகை வாழ்வையும் தருவதொரு செவ்விய இயல்புடையதாய் இந்த வாழ்விலேயே எனக்குக் கிடைத்துளது, விளக்கமிக்க பொன்னாகிய சிவம். எ.று.

இம்மை - இவ்வுலக வாழ்வு; மறுமை - தேவருலக வாழ்வு; அம்மை - சிவபோகப் பெருவாழ்வு. பொன்னுடையார் அதனால் இம்மையில் எல்லாம் பெறுவது போலச் சிவமாகிய பொன்னால் மூவகைப் பெருவாழ்வையும் பெறலாம் என்ற கருத்தால், “இம்மையே கிடைத்து இங்கு இலங்கிய பொன்னே” என வுரைக்கின்றார். இம்மையிலே யன்றி மறுமையிலும் சிவம் கிடைக்கப் பெறலாம் என்பது பற்றி, “இம்மையே கிடைத்து” என்று குறிக்கின்றார்.

எடுத்தெடுத் துதவினும் என்றும் குறையா

தடுத்தடுத் தோங்குமெய் அருளுடைப் பொன்னே                                          1352

உரை : கேட்குந் தோறும் தொடர்ந்து கொடுத்தாலும் எக்காலத்தும் குறைவுபடுதல் இல்லாத மேன்மேலும் மிகுத்தவண்ண முடையது மெய்ம்மையான திருவருட் சிறப்பையுடையது பொன்னாகிய சிவம். எ.று.

இடையறாது மேகங்கள் படிந்து முகந்தாலும் குறை படாத கடல் போல வேண்டுவோர் வேண்டும் போதெல்லாம் குறைவறக் கொடுத்தாலும் குறைவே படாதது சிவனது திருவருள் ஞானச் செல்வம் என்பது கருத்து. எடுத்து எடுத்து என்ற அடுக்கு வரையாது வழங்கும் திறம் உணர்த்துகின்றது. அடுத்தடுத்து என்னும் அடுக்கு இடையறவின்றிப் பெருகும் வளத்தைக் குறிக்கின்றது.

தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடு வேம்எனக்

கிளர்ந்திட உரைத்துக் கிடைத்தசெம் பொன்னே                                          1354

உரை : எடுத்தெடுத்து வரையாது கொடுத்தாலும் யாம் எம்முடைய இயலளவில் குறையமாட்டோம் என்று உணர்த்திப் பெறுவோர் மனம் கிளர்ச்சி யுறுமாறு கைவரப் பெறும் சிறப்புடையது சிவமாகிய செம்பொன். எ.று.

வாயால் உரையாவிடினும் உணர்வால் உணர்த்துவது பற்றித் “தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடுவேம் என” க் கூறுகின்றார். “வளவனாயினும் அளவறிந்துதவுக” என்பது உலகியலறமாதலால், “தளர்ந்திடேல் எடுக்கின்” எனத் திருவருள் ஊக்குகின்றது என்பது குறிப்பு. கிளர்தல் - மனவெழுச்சி.

எண்ணிய தோறும் இயற்றுக என்றெனை

அண்ணிஎன் கரத்தில் அமர்ந்தபைம் பொன்னே                                          1356

உரை : வேண்டும் போதெல்லாம் என்னை எண்ணி முயல்க என்று என்பால் அணுகி, என் கையகத் தமர்ந்தருளுவது பசுமையான பொன்னாகிய சிவம். எ.று.

இன்றியமையாது வேண்டப்படுகிறது என்ற குறை தோன்றும் போதெல்லாம் திருவருளை வேண்டுக என்ற குறிப்புப் புலப்பட, “எண்ணிய தோறும் இயற்றுக என்று” எனவுரைக்கின்றது. திருவருள் ஞானம் திருவுள்ளத்தில் நினைக்கப் பண்ணுவதுடன் கைம்மேல் வந்துறுவது விளங்க, “என் கரத்தில் அமர்ந்த பைம்பொன்னே” என்று போற்றுகின்றார்.

நீகேள் மறக்கினும் நின்னையாம் விட்டுப்

போகேம் எனஎனைப் பொருந்திய பொன்னே                                          1358

உரை : உனக்கு வேண்டுவதை நீ என்னைக் கேள்; என்னை நீ மறந்தாலும் நின்னை விட்டு யாம் நீங்காதுறைகுவேம் என்று என்னோடு கூடிப் பொருந்தியிருப்பது செம்பொன்னாகிய சிவம். எ.று.

சிவபிரான் தன்னோடே கலந்து பொருந்தி யிருப்பதால், எது வேண்டினும் தன்னையே வேண்டிப் பெறும் நினைவையும் முயற்சியையும் நல்குகின்றானாதலால் சிவத் தொண்டர் யாது வேண்டினும் சிவனையே வேண்டிப் பெற்ற வரலாறு இக் கருத்தை வற்புறுத்துகிறது. பொன் வேண்டினும் பெண் வேண்டினும் பெறலாம் என்பதற்கு, ஞானசம்பந்தர் ஆவவடு துறையில் பொன் பெற்றதும், நம்பியாரூரர் திருவாரூரிற் பெண் பெற்றதும் போதிய சான்றுகளாகும்.

எண்ணிய எண்ணியாங் கெய்தி எனக்குப்

பண்ணிய தவத்தால் பழுத்தசெம் பொன்னே                                          1360

உரை : முன்னைத் தவத்தால் இப்போது யான் எண்ணியது எண்ணியவாறே எனக்கு அருள்புரிந்தொழுகுவது தவப் பயனாகிய செம்பொன் போன்ற பரமசிவம். எ.று.

தவமுடையார் யாது எண்ணினும் அதனை எண்ணியவாறே பெறுவர் என்பது அறநூற் கொள்கை. திருவள்ளுவரும், “வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவம் ஈண்டும் முயலப்படும்” ( குறள் ) என்பது காண்க. எண்ணியவாறே எண்ணியது எய்தக் காண்கின்றாராதலின், தம்பால் தவமுடைமை தெளிந்து “பண்ணிய தவத்தாற் பழுத்த செம்பொன்னே” என்று புகழ்கின்றார். எண்ணியது எண்ணியவாறு பெற்ற குறிப்பை, “எண்ணிய எண்ணியாங் கெய்திட” என இயம்புகின்றார்.

விண்ணியல் தலைவரும் வியந்திட எனக்குப்

புண்ணியப் பயனால் பூத்தசெம் பொன்னே                                          1362

உரை : தேவருலகத்துத் தேவதேவரும் என்னைக் கண்டு வியக்குமாறு என்னுடைய புண்ணிய வினைவாய் எய்தியது செம்பொன்னாகிய சிவம். எ.று.

விண்ணுலகம் - தேவர்கள் வாழும் உலகம். தேவர்கட்குத் தலைவராயவர் தேவதேவர் எனப்படுவார்; அவர்கள் இந்திரன் முதலிய தேவர் தலைவர். தமக்கு எய்திய சிவஞானத் திருவருட் செல்வ நலம் கண்டு, என்னே இவர் செய்த புண்ணியம் என்று அதிசயிக்கின்றார் என்பாராய், “விண்ணியல் தலைவரும் வியந்திட” என்று விளம்புகின்றார். சிவபுண்ணியத்தால் சிறப்புற்றார்க் கன்றி, “சிவஞானத் திருவருட் செல்வம் கைவராதாகலின், “எனக்குப் புண்ணியப் பயனாற் பூத்த செம்பொன்னே” எனப் புகழ்கின்றார். பூத்தல் - ஈண்டுக் கிடைப்பது குறித்து நின்றது.

நால்வகை நெறியினும் நாட்டுக எனவே

பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே                                          1364

உரை : சற்புத்திர மார்க்கம் முதலிய நான்கு வகை நெறியினும் நின்று, சிவபுண்ணியத்தைச் செய்து கொள்க என்று ஊழ்வகை யனைத்தையும் எனக்கு உதவுமாறு பணித்தருளுவது பசிய பொன்னாகிய சிவம். எ.று.

சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், நேச மார்க்கம், சன்மார்க்கம் என்பன நால்வகை நெறிகளாகும். இவற்றுள் சிவபிரானைத் தந்தையாகவும், தன்னை மகனாகவும் எண்ணிப் பரவுவது சற்புத்திர மார்க்கம்; சிவனை ஆண்டானாகவும், தன்னை யவற்கு அடிமையாகவும் கருதித் தொண்டு புரிவது தாச மார்க்கம்; சிவனைத் தனக்கு நண்பனாகக் கொண்டு நட்புறவாடி வழிபடுவது நேச மார்க்கம்; சிவனைத் தனக்கு நாயகனாகவும், தன்னை யவற்குக் காதலியாகவும் நினைவுற்றுக் காதலுறவு கொண்டு உரையாடிப் போற்றி வழிபடுவது சன்மார்க்கம். இந்நெறிகளில் நின்று ஒழுகுமிடத்து நல்லூழ் நின்று துணை புரியவும், தீயூழ் போந்து இடையூறு செய்யாது விலகவும் திருவருள் புரிவது விளங்க, “பால்வகை முழுதும் பணித்த செம்பொன்னே” என்று பகர்கின்றார். பால்வகை - நல்லூழும் தீயூழும் ஆகிய ஊழ்வினைகள். ஊழ் வகைகள் இறைவன் திருவருளின் முன்னே நில்லாவாகலின், “பணித்த செம்பொன்னே” என்று குறிக்கின்றார்.

எழுவகை நெறியினும் இயற்றுக எனவே

முழுவகை காட்டி முயங்கிய பொன்னே                                          1366

உரை : தாவரம் முதலிய எழுவகைப் பிறப்பினும் பிறந்து சிவபுண்ணியத்தைச் செய்க என்று வீடு பேற்று நெறியைக் காட்டி யருளுவது உயிரோ டுயிராய்க் கலந்துள்ள செம்பொன்னாகிய சிவம். எ.று.

தாவரம், ஊர்வன, பறப்பன, நடப்பன, நீர் வாழ்வன, மானிடம், தேவர் என்பன உயிர்கட்குரிய பிறப்பு நெறியாதலால் இவற்றை எழுவகை நெறி எனக் கூறுகின்றார். இவ்வெழுவகைப் பிறப்பும் உயிர்கள் நல்வினை புரிந்து மலப்பிணியிலிருந்து நீங்கி வீடு பெறுதற்கென அமைந்தனவாதலால், “எழுவகை நெறியினும் இயற்றுக” என இயம்புகின்றார். முழு வகை - மேலும் பிறத்தற் கில்லாத முத்தி வகை. பிறப்பிறப்பில்லாத முத்தி நிலை பெறற்குத் துணை செய்தற் கென்றே உயிரோடு உயிராய்க் கலந்து சிவம் உதவுவது பற்றி, “முயங்கிய பொன்னே” என மொழிகின்றார்.

எண்ணிய படிஎலாம் இயற்றுக என்றெனைப்

புண்ணிய பலத்தால் பொருந்திய நிதியே                                          1368

உரை : நீ மனத்தால் நினைத்த படியே நினைத்த எல்லாவற்றையும் செய்து மகிழ்க என என்னை எனது புண்ணியம் தந்த வலிமைக் கேற்ப என்பாற் பொருந்துவது திருவருளாகிய செல்வம். எ.று.

எண்ணியபடியே எல்லாம் செய்தவிடத்து, மேலும் வினை செய்தற்கு இடமின்றாதலால், “எண்ணியபடி யெலாம் இயற்றுக” எனத் திருவருள் அறிவுறுத்துகின்றதென்று தெரிவிக்கின்றார். எண்ணியவற்றை யெல்லாம் எண்ணியபடி செய்தற்குத் திருவருள் இன்றியமையாதாகலின், “புண்ணிய பலத்தால்” எனப் புகன்று மொழிகின்றார். இதனால் புண்ணிய பலத்தால் திருவருள் துணையும், அத் துணையால் எல்லாம் எண்ணியபடி செய்தலும் நிகழும் என்பது கூறியவாறாம்.

ஊழிதோ றூழி உலப்புறா தோங்கி

வாழிஎன் றெனக்கு வாய்த்தநல் நிதியே                                                                                   1370

உரை : ஊழிக் காலந் தோறும் கெடுவதின்றி உயர்ந்தோங்கி வாழ்க என்று எனக்குத் திருவருட் செல்வத்தை நல்குவது சிவஞானச் செல்வத் திருவருளாகிய சிவம். எ.று.

ஊழிக் காலத்தில் பொருள்கள் யாவும் கெடு மென்பது பௌராணிகக் கொள்கை யாதலால், “ஊழி தோறூழி யுலப்புறாது” என வுரைக்கின்றார். உலப்புறல் - கெட்டழிவது. உயிர் அனாதி நித்தப் பொருளாதலின், “உலப்புறாது ஓங்கி வாழி” எனக் கூறுகின்றார். உயிர்க்கு உறுதியும் வீடு பேறும் நல்குவது சிவ பரம்பொருளின் திருவருட் செல்வமாதல் பற்றி, “எனக்கு வாய்த்த நன்னிதியே” எனப் புகழ்கின்றார். எக்காலத்தும் எவ்வாற்றாலும் கெடாத நித்தப் பொருளாதலால், “நன்னிதியே” என்று சிறப்பிக்கின்றார்.

இதமுற ஊழிதோ றெடுத்தெடுத் துலகோர்க்

குதவினும் உலவா தோங்குநல் நிதியே                                                                                   1372

உரை : ஊழிக் காலம் வரை அன்புடன் அள்ளி உலக மக்கட்கு வழங்கினாலும் குறைவுபடாமல் மிகுவது நல்லருட் செல்வமாகிய சிவம். எ.று.

எண்ணிறந்த காலம் ஊழிக் காலம் என்று கூறுவர். கையால் அள்ளி வழங்கும் போது உள்ளத்தில் அன்பு நிலவுமாயின் கொடைப் பொருள் அளவு மிகுமாதலால், “இதமுற எடுத்து உதவினும்” என மொழிகின்றார். உலகத்தார்க்கு எவ்வளவு பெறினும் ஆசை நிரம்பாதாதலால், “உலகோர்க்கு உதவினும்” என்று உரைக்கின்றார். உலவுதல் - குறைதல். திருவருட் செல்வ வுருவினனாதலால் சிவபெருமானை, “நன்னிதி” என்று போற்றுகின்றார்.

இருநிதி எழுநிதி இயல்நவ நிதிமுதல்

திருநிதி எல்லாம் தரும்ஒரு நிதியே                                          1374

உரை : சங்கம் பதுமம் ஆகிய இருவகை நிதிகளையும் எழுவகைச் செல்வங்களையும் இவற்றின் வேறாய் விளையும் செல்வங்களையும் சிவஞானமாகிய அழகிய செல்வத்தையும் குறைவற நல்குவது ஒப்பற்ற செல்வமாகிய சிவம். எ.று.

சங்க நிதி பதும நிதி என நிதி இரண்டாதலால், “இருநிதி” எனவும், எழுகோடி மந்திரங்களும் எழுவகைச் செல்வங்களைத் தருவதால், “எழுநிதி” எனவும் வழங்கும். மகாமந்திரம் ஏழும் கோடி என முடிவதால் அவற்றை எழுகோடி மந்திரம் என்பதும், அவை பெருஞ் செல்வமாய்த் தம்மை ஓதி யுணர்வார்க்கு நலம் பயத்தல் பற்றி, “எழுநிதி” எனப்படுகின்றன. எழுவகைப் பிறப்பினும் பிறப்புத்தோறும் பெறற்குரிய செல்வத்தை எண்ணி “எழுநிதி” எனக் கூறுகின்றார் என்பதுமுண்டு. இவ்விரு வகையினும் வேறாய்ப் புதுமையாய்த் தோன்றும் செல்வங்களை, “இயல் நவநிதி” எனக் குறிக்கின்றார். நவநிதி - புதுமைச் செல்வம். இனி, வயிடூரியம், மாணிக்கம், மரகதம், நீலம், கோமேதகம், புட்பராகம், பதுமராகம், முத்து, பவளம் என்ற ஒன்பது வகையினையும், “நவநிதி” என மொழிகின்றார் என்பாரும் உளர். செல்வங்கள் எல்லாவற்றினும் மேலாய், இவையனைத்தையும் தானே தர வல்லதாய் விளங்குவது திருவருள் ஞானச் செல்வமாதலால் அதனைத் “திருநிதி” என்று சிறப்பிக்கின்றார். அதனை ஒப்பதும் அதனின் உயர்ந்ததும் வேறு யாதும் இல்லையாகலின், “ஒருநிதி” எனச் சிறப்பிக்கின்றார்.

எவ்வகை நிதிகளும் இந்தமா நிதியிடை

அவ்வகை கிடைக்கும்என் றருளிய நிதியே                                          1376

உரை : மேற்கூறிய நிதி வகைகள் பலவும் திருவருள் ஞானச் செல்வமாகிய இந்தப் பெரிய நிதியால் வேண்டிய வகைகளில் பெறலாம் என உபதேசித்தருளுவது ஞானப் பெருநிதியாகிய சிவம். எ.று.

இருநிதி, எழுநிதி, நவநிதி. எனப்பட்ட நிதி வகைகள் அனைத்தும் அடங்க முடிந்தது முடித்தலாக மொழிகின்றாராகலின், “எவ்வகை நிதிகளும்” என இயம்புகின்றார். “இந்த மாநிதி” எனச் சுட்டியது மேலே “ஒருநிதி” ( 1374 ) என்று புகழ்ந்தோதியதனை என அறிக. இனி, “எவ்வகை நிதிகளும்” என்றதற்கு அணிமா மகிமா முதலிய எண் வகைச் சித்திகளைக் குறிப்பதாக உரைப்பதுண்டு. ஆனால் அவையாவும் “இயல் நவநிதி முதல் திருநிதி எல்லாம்” என்பதில் அடங்குகின்றன. வேண்டிய வேண்டியவாறு அருளுவது திருவருட் பெருநிதியின் மாண்பாதலால், “அவ்வகை கிடைக்கு மென்றருளிய நிதியே” என வுரைத்தருளுகின்றார்.

அற்புதம் விளங்கும் அருட்பெரு நிதியே

கற்பனை கடந்த கருணைமா நிதியே

நற்குண நிதியே சற்குண நிதியே

நிர்க்குண நிதியே சிற்குண நிதியே                                          1380

உரை : அற்புதமாக விளங்குகின்ற திருவருட் பெருமையையுடையதும், கற்பனைக் கெட்டாத கருணை நிறைந்ததும், நற்குணமே செல்வமாக அமைந்ததும், நிலைபெற்ற குணவுருவாகியதும், குணதத்துவமில்லாததும், ஞான குணமே குணமாகவுடையதுமாவது திருவருள் ஞானச் செல்வமாகிய சிவம். எ.று.

நற்குணம் - எவ்வுயிர்க்கும் நலமே புரிந்தருளும் குணம். நற்குணமே சிவகுணமாதல் பற்றி, “நற்குண நிதியே” எனப் போற்றுகின்றார். அற்புதம் - இயற்கையிற் காணப்படாது கண்டார்க்கு வியப்பு விளைவிப்பது. கலையறிவால் உயர்வமைய எண்ணும் திறம் - கற்பனை; உள்ளது பொருளாக உயர்வு மிக நினைத்தலும் இல்லது பொருளாக மிகைபட நினைத்தலும் எனக் கற்பனை நிகழ்தலின், “கற்பனை கடந்த கருணை மாநிதியே” எனக் கூறுகின்றார். இருவகைக் கற்பனைகளின் எல்லைக்கு அப்பால் விளங்குதல் பற்றி, “கற்பனை கடந்த கருணை” எனல் வேண்டிற்று. கருணை அருட் செல்வமாதலால், “கருணை மாநிதி” எனப் புகழ்கின்றார். நன்மையே எண்ணி நன்மையே செய்யும் நிலைத்த பண்பு, சற்குணம்; இது சத்து குணம் எனப் பிரிந்து சத்தாகிய குணம் என விரியும். சத்துவம், தாமதம், இராசதம் என்ற முக்குண விருத்திகட்கு அப்பாலாய் நிற்றலால், சிவனை, “நிர்க்குண நிதியே” எனவும், தூய திருவருள் ஞானமே குணமும் குணியுமாகக் குலாவுதலால் பரசிவத்தைச் “சிற்குண நிதியே” என்று சிறப்பிக்கின்றார்.

பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே

வளம்எலாம் நிறைந்த மாணிக்க மலையே

மதியுற விளங்கும் மரகத மலையே

வதிதரு பேரொளி வச்சிர மலையே

உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே

துரியமேல் வெளியில் சோதிமா மலையே                                          1386

உரை : குற்றமில்லாமல் உயர்ந்தோங்கியுள்ள பளிங்கு மணியாலாகிய மலையையும், வளம் பலவும் நிறைந்த மாணிக்க மலையையும், ஞானம் மிகத் திகழும் மரகத மலையையும், மிக்கவொளி தங்குகின்ற வயிர மணி மலையையும், வாக்கு மனங்களின் எல்லை கடந்தோங்கும் பொன் மலையையும், துரியத்தானத்துக்கு, மேல் விளங்குகின்ற ஒளியையுடைய யோகவொளி மலையையும் ஒப்புற்று விளங்குவது சிவம். எ.று.

பளகு - குற்றம். பளிங்கு மணி முதலிய மணிவகை ஒன்பதிற்குத் தனித்தனியாக ஆராய்ந்து குற்றம் காண்பது மணிவாணிகர் இயல்பு. சிலப்பதிகாரத்து உரைகாரர்களும் திருவிளையாடற் புராணத்து மாணிக்க விற்ற படலத்திலும் அறிஞர் விரிவாகக் கூறுவர். அவர்கள் கூறும் குற்றம் சிறிதும் இல்லாதது என்றற்குப் “பளகிலாது ஓங்கும் பளிக்கு மாமலையே” எனப் போற்றுகின்றார். பளிங்கு மலை - பளிக்கு மலை என வந்தது. மாணிக்க மணி - செம்மை நிறமுடையது; அதனால் சிவனை “மாணிக்க மலை” என்று புகழ்வர். “மாணிக்கத்தின் மலைபோல வருவார் விடைமேல்” ( கடவூர் ) என்று நம்பியாரூரர் நவில்வது காண்க. மரகத மலை - பசுமை நிறமுடைய மணிமலை. உமையம்மை கூறனாகலின், அவளது மேனி மரகத நிறத்ததாகலின், சிவனை, “மரகத மலை” என்றும், அவளது ஞானத் திருவொளி பிரிவின்றி ஒளிர்வது புலப்பட, “மதியுற விளங்கு மரகத மலை” என்றும் வழுத்துகின்றார். வயிரம் வச்சிரம் எனப்படுகிறது. சிவனது வெண்ணீற்றொளி திகழும் வெண்மணியான வயிரமணி மலை போலுதல் விளங்க, “வதிதரு பேரொளி வச்சிர மலையே” எனப் பராவுகின்றார். “பேரொளி வதிரு வச்சிர மலை” என்று மாறுக. “மாற்ற மனம் கழிய நின்ற மறையோன்” என்று சிவனைச் சிவபுராணம் கூறுவதால், “உரை மனம் கடந்தோங்கும் பொன் மலையே” என்று புகழ்கின்றார். பொன்னிற மேனியனாகலின், “பொன் மலையே” எனப் போற்றுகின்றார். ஆன்மா துரியாவத்தைக் கண் தங்கிப் பெறும் யோகக் காட்சியில் ஞானப் பேரொளியாய்க் காட்சி வழங்குவன் எனப் பாதஞ்சல யோகியர் பகர்தலால், “துரிய மேல் வெளியில் சோதி மாமலையே” என்று சொல்லுகின்றார். துரிய மேல் வெளி எனக்கொண்டு சிவாகமம் கூறும் துரியாதீதச் சிவயோகக் காட்சி என்று கூறுவதும் பொருத்தமாம்.

புற்புதம் திரைநுரை புரைமுதல் இலதோர்

அற்புதக் கடலே அமுதத்தண் கடலே                                          1388

உரை : குமிழியும் அலைகளும் நுரைகளும் வேறு பிற அழுக்குகளும் இல்லாததாகிய ஒப்பற்றதொரு அற்புதம் வாய்ந்த கடலாயும் அமுதமே நிறைந்த கடலாயும் விளங்குவது தண்ணிய சிவம். எ.று.

புற்புதம் - சிறிது போதிற் கெடுகின்ற நீர்க்குமிழி. திரை - அலை. நுரை - அலைகள் மோதுதலால் உண்டாவது. புரை - குற்றம்; குற்றமான பொருள்கள் கலப்பதால் உளதாவது. நீர்க் கடலில் இத்தகைய குற்றங்கள் காணப்படுதலால் சிவாமிர்தமாகிய தண்ணிய பெருங்கடல் ஒரு சிறு குற்றமும் இல்லாதது என்றற்கு, “புற்புதம் திரை நுரை புரை முதல் இலதோர் அற்புதக் கடலே” எனத் தெரிவிக்கின்றார். குற்றமில்லாமையால் அற்புதமாகிய கடல் சுவையால் அமுத மயமானது என்றற்கு, “அற்புதத் தண்கடல்” என்று சிறப்பிக்கின்றார்.

இருட்கலை தவிர்த்தொளி எல்லாம் வழங்கிய

அருட்பெருங் கடலே ஆனந்தக் கடலே                                          1390

உரை : இருள் நிறைந்த உலகியல் துன்பங்களில் ஆழ்த்தும் கலைத்துறைகள் எல்லாவற்றையும் போக்கிச் சிவம் பெருக்கும் அருட் கலைகளை நல்குவதாகிய திருவருட் பெருங் கடலாய்ப் பேரானந்தத்தையருளுவது சிவம். எ.று.

உலகியல் வாழ்வு எண்ணிறந்த பல கலைகளாய் வாழ்வாரை மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது கொண்டு அவற்றை, “இருட் கலை” எனக் குறிக்கின்றார். சிவத்தின் திருவருள் ஞானக் கலை ஏனைக் கலைகளால் உண்டாகும் இருளுணர்வைப் போக்கி உள்ளத்தில் சிவஞானப் பேரொளியைப் பரப்பி வற்றுதலும் முற்றுதலுமில்லாத பேரின்பத்தை யருளுவது விளங்க, “அருட் பெருங் கடலே ஆனந்தக் கடலே” எனப் போற்றுகின்றார். இக்கருத்து, சேக்கிழார் திருஞான சம்பந்தர் பெற்ற “உவமையிலாக் கலைஞானத்தை” விளக்குவதாகத் திகழ்வது காண்க.

பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே

உவப்புறு வளங்கொண் டோங்கிய கரையே                                          1392

உரை : பிறவியாகிய கடலைக் கடந்து கரை சேர்பவர்கட்குத் தளர்ச்சிபோக்கும் கானற் சோலையாக உவகை தரும் வளம் நிறைந்து ஓங்குவது சிவம். எ.று.

பவக் கடல் - பிறவிக் கடல். பிறவியாகிய கடலை அரிதின் முயன்று கரை காணும் முத்தான்மாக்களின் ஞானக் கண்ணில் சிவபதமாகிய கரை, வளம் நிறைந்து தன்னை யடைபவர்க்கு மிக்க இன்பம் தரும் கடற் கானற் சோலையாகக் காட்சி தருகிறது என்பார், “பவக் கடல் கடந்து நான் பார்த்த போது” என்று கூறுகின்றார். கற்பனைக் கண்ணாற் காண்பது புலப்பட, “நான் பார்த்த போது” எனப் புகல்கின்றார். கடலின் கரையருகே நிற்பது கானற் சோலையாகலின், “அருகே ஓங்கிய காவே” எனப் புகழ்கின்றார். பல்வகை இன்பங்கள் நிறைந்த சோலை என்பார், “உவப்புறு வளம்” என உரைக்கின்றார். கொள்ளுதல் - நிறைதல். வளமிக்க கானற் சோலை போல்வது சிவபதம் என்பாராய், “ஓங்கிய கரை” என்று மொழிகின்றார். கரை யென்றது கரைக்கண் ஓங்கி நிற்கும் கானற் சோலை என்று உணர்க.

என்துயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்துளம்

நன்றுற விளங்கிய நந்தனக் காவே                                          1394

உரை : என்னுடைய பிறவி வெப்பங்களெல்லாம் போக்கி எனது ஆன்ம சிற்சத்தி நலம் மிக விளங்குவது குளிர்ந்த மலர்ச்சோலை போல்வதாகிய சிவம். எ.று.

துயர்ச் - சோடை பிறப்பிறப்புக்களால் உண்டாகும் வெப்பம். வெம்மை நீங்கினாலன்றி ஆன்ம வுணர்வு கிளர்ச்சி யுறாதாகலின், “எல்லாம் தவிர்த்து உளம் நன்றுற விளங்கிய நந்தனக் காவே” என்று நவில்கின்றார். நந்தனக்கா - நறுமணம் கமழும் மலர்ச்சோலை. நந்தனம் - நந்தவனம் என இந்நாளில் வழங்குகிறது. நந்தனக் காவைப் போல்வதால் சிவபதம் “நந்தனம்” எனப் போற்றப்படுகிறது.

சேற்றுநீர் இன்றிநல் தீஞ்சுவை தரும்ஓர்

ஊற்றுநீர் நிரம்ப உடையபூந் தடமே                                          1396

உரை : சேற்றால் கலங்கிய நீரின்றி இனிய சுவை மிக்க நீரைச் சுரந்தளிக்கும் ஊற்றுநீர் நிறைந்துள்ள பூம்பொய்கை போல்வது சிவம். எ.று.

சேற்று நீர் நிறம் கரிதாய் நறுமணமின்றி இருத்தலால் அதனை விலக்கற்குச் “சேற்று நீரின்றி” என வுரைக்கின்றார். ஊற்று நீர் - மணற் கேணியில் ஊறும் இனிய நீர். ஊற்று நீர் நிறைந்து மணமிக்க பூக்கள் நிறைந்த பூம்பொய்கையைப் “பூந்தடம்” எனப் புகல்கின்றார்.

கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே

மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே                                                                                   1398

உரை : கோடைப் பருவத்து வெப்பம் மிகுமிடத்துக் கிளை விரிந்து தழை செறிந்து குளிர்ந்த நிழல் தரும் மரம் போல்வதும், அந்த நீழற்கண் அமைந்த மணி யிழைத்த மேடை மேல் வீசுகின்ற மெல்லிய காற்றைப் போல்வதும் சிவமாகும். எ.று.

வெயில் மிக்கு வருத்தும் வெப்பக் காலம் கோடைக் பருவம். அக்காலத்து நிழல் பரந்து விரிந்து குளிர்ந்த சூழலையே உயிர்கள் விரும்புவதியல்பாகலின், “கோடை வாய் விரிந்த குளிர்தரு நிழலே” என்று சிறப்பிக்கின்றார். மேடை யெனப் பொதுப்பட மொழிகின்றமையின், “மணி யிழைத்த மேடை” என வுரை கூறிற்று. குளிரும் பண்பின மணிகள் என்பது மரபு. குளிர் நிழலில் அமைந்த மணி மேடை வெயில் வெம்மையில் வெதும்புவோர்க்கும் குளிர்மை நல்குவதாம் என அறிக.

களைப்பறக் கிடைத்த கருணைநன் னீரே

இளைப்பற வாய்த்த இன்சுவை உணவே                                          1400

உரை : வெயில் வெம்மைக் காற்றாது களைப்பு மிக்கவர்க்குப் பேரருளாளனது கருணை போல் நன்னீர் கிடைக்கின் அதன் இன்பம் போல்வதும், வெம்மையால் உளதாகும் மெலிவு நீங்க இனிய சுவை பலவும் நிறைந்த உணவு கிடைக்கின் எய்தும் இன்பானுபவம் போல்வதும் சிவம். எ.று.

கோடை வெயிலின் வெம்மை உள்ளத்திற் களைப்பையும் உடம்பில் மெலிவையும் தருதலால் நீங்கற்கு நன்னீறும், மெலிவு நீங்க இன்சுவை யுணவும் குறிக்கப்படுகின்றன. இவற்றை யுண்ட வழியுண்டாகும் சுகானுபவம் போல்வது சிவானந்தானுபவம் என இதனால் தெரிவித்தவாறாம்.

தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே

தென்னைவான் பலத்தில் திருகுதீம் பாலே                                         1402

உரை : தெங்கினிடத்து காய் வழியாகப் பெறப்பட்ட செவ்விய இளநீரின் சுவையும், அத்தெங்கின் பழமாகிய முற்றிய காயிடத்துத் திருகிப் பெறலாகும் பாலின் இனிய சுவையும் போல்வது சிவம். எ.று.

தென்னை - தெங்கு எனவும் வழங்கும். தென்னையின் முற்றாத காயிடத்துப் பெறும் இனிய நீர் வேனியில் வருந்துவோர்க்கு மிக்க இன்பம் தருவது பற்றி, “தென்னைவாய்க் கிடைத்த செவ்விளநீர்” எனப் பரவுகின்றார். தென்னையின் நன்கு முற்றிய காய், “தெங்கம் பழம்” என்று புலவர்களால் புகழ்ந்துரைக்கப்படும். அதனால் தெங்கம் பழத்தைத் “தென்னை வான்பலம்” என்று சிறப்பிக்கின்றார். முற்றிய காயை யுடைத்த வழிப் பெறப்படும் உள்ளீடாகிய பருப்பு பொடியாய்த் திருகிப் பிழிந்தெடுக்கும் பால் உண்பார்க்கு உடல் நலம் பயக்கும் உறுதி வாய்ந்தது என்பர்; அதுபற்றியே “தென்னை வான்பலத்தில் திருகு தீம்பாலே” என்று பாராட்டி யுரைக்கின்றார்.

நீர்நசை தவிர்க்கும் நெல்லியங் கனியே

வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே                                         1404

உரை : கோடை வெயிலில் நீர் வேட்கை யுற்றவர்க்கு உண்டவிடத்து வேட்கை தணிக்கும் தூய நெல்லிக் கனியையும், வேர்ப்பலாவின் வேரிற் காய்த்துப் பழுத்த கனியின் சுளையையும் போல இனிப்பது சிவஞானானந்தம். எ.று.

நீர் நசை - தண்ணீர்த் தாகம்; இது தண்ணீர் வேட்கை எனவும் வழங்கும். கோடைக் காலத்து வெயில் உண்டுபண்ணும் நீர் வேட்கை மிக்க நாவறட்சி தந்து வருத்துவதாகலின், அதுவே ஈண்டுக் குறிக்கப்படுகிறது. வழிச் செல்வோர் நீர் வேட்கையை எண்ணியே முன்னோர் வழிக் கரைகளில் நெல்லி மரங்களை வைத்துப் பணி வளர்த்தனர். அம் மரங்களும் வெயிற் காலத்தே காய்த்துக் கனிவது இயல்பு. கிளைகளில் காய்த்துப் பழுக்கும் பலா வகையினும் வேரில் தோன்றிப் பழுக்கும் பலாவின் கனி சுவை மிக வுடையது என்பர். வேர்ப் பலாவின் கனி வெயிற் காலத்தே பழுத்துப் பயன் தருவதாகலின், அதனையும் உடன் கூறுகின்றார். பலாவின் பொன்னிறச் சுளைகள் இனிமை மிக வுடையன என அறிக.

கட்டுமாம் பழமே கதலிவான் பழமே

இட்டநற் சுவைசெய் இலந்தையங் கனியே                                         1406

உரை : குழையாத மாம்பழத்தின் சுவையும், வாழைப் பழத்தின் சுவையும், விருப்பம் விளைவிக்கும் இலந்தைப் பழத்தின் சுவையும் இனிதே யுடையது சிவம். எ.று.

நன்கு பழுத்த அப்பொழுதைய மாங்கனியைக் கட்டு மாம்பழம் எனக் கூறுகின்றார். இதனைக் கட்டிப் பழம் என்றும் கெட்டிப் பழம் என்றும் கூறுவர். கனிவு மிக்கபோது தோல் சுருங்கிப் பொலிவிழத்தலின், “கட்டு மாங்கனி” எனச் சிறப்பிக்கப்படுகிறது. கதலி - வாழை. வாழை வகையில் சுவையால் மிக்கதை, “வான் பழம்” எனப் புகல்கின்றார். இதனை, “மட்டிப் பழம்” என்றலும் உண்டு. மட்டு - தேன். இட்ட சுவை - விருப்பம் மிகுவிக்கும் சுவை. இஷ்டம் - இட்டமென வந்தது. இலந்தையின் புளிச் சுவை உண்பார்க்கு விருப்பம் மிகுவித்தல் தோன்ற, “இட்ட நற்சுவை செய் இலந்தை” என்று கூறுகின்றார்.

புனிதவான் தருவில் புதுமையாம் பலமே

கனிஎலாம் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே                                         1408

உரை : தூய பெருமை மிக்க மரத்தின்கண் பழுத்த புதுமையான பழத்தின் சுவையையும், வேறு பல பழ வகைகளையும் கூட்டிக் கலந்து பிழிந்து கொண்ட இனிய சாற்றின் சுவையையும் உடையது சிவம். எ.று.

வான் தரு - இனிய பழம் நல்கும் மரம்; தேவருலகத்துக் கற்பக மரத்தின் நறுங்கனி என்பதும் உண்டு. கற்பகத்தைத் தேவதாரு என்பவரும் உண்டு. புதிது பழுத்த பழத்தை, “புதுமையாம் பலம்” என்று புகல்கின்றார். பலம் - பழம். கனி யெலாம் என்று பொதுப்படப் புகல்வது, உண்டற் கினிய சுவை நிறைந்த பழ வகைகள் எல்லாம் அடங்க என்று அறிக. இனிய பழ வகைகளின் சுவை யாவும் சிவமயம் என்பது குறிப்பு.

இதந்தரு கரும்பில் எடுத்ததீஞ் சாறே

பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே                                                                                  1410

உரை : இனிமைச் சுவையைத் தருகின்ற கரும்பிலிருந்து எடுத்த இனிய சாற்றின் சுவையையும், அச்சாற்றைப் பதம் பெறக் காய்ச்ச வுளதாகும் வெல்லப் பாகினுடைய இனிய சுவையையும் உடையது சிவானந்தம். எ.று.

இதம் - இனிமைச் சுவை; கரும்பு நன்கு முற்றிய போதே இனிமை மிகுமாதலால் முற்றிய கரும்பை, “இதம் தரு கரும்பு” எனவும், கருப்பஞ் சாறும் பதம் தவறியபோது சுவை கெட்டொழிதலால், “பதம் தரு வெல்லப் பாகு” எனக் கூறுகின்றார். கருப்பஞ் சாற்றைக் காய்ச்சுதலால் உளதாவது “வெல்லப் பாகு”. அது செந்நிறமும் மணல் போன்ற தன்மையும் உடையதாம்.

£லவே இனிக்கும் சர்க்கரைத் திரளே

ஏலவே நாவுக் கினியகற் கண்டே                                                                                  1412

உரை : மிகவும் இனிக்கின்ற சர்க்கரையின் திரட்சி தரும் சுவையையும், நாவுக்குத் தகுந்த இனிமை தருகின்ற நல்ல கற்கண்டின் சுவையையும் மிக்கு விளங்குவது சிவானந்தம். எ.று.

வெல்லப் பாகினும் சர்க்கரைக் கட்டி இனிப்பு மிக வுடையது என்றற்கு, “சாலவே இனிக்கும் சர்க்கரைத் திரள்” என்று சாற்றுகின்றார். சர்க்கரைத் திரள் - சர்க்கரைக் கட்டி. கற்கண்டு கல் போல் உறுதி யுடையதாயினும் நாவில் இட்டு அதக்கிய வழி இனிப்பு தருதலால், “நாவுக்கு ஏலவே இனிய கற்கண்டே” என்று பாராட்டுகின்றார். சர்க்கரைக் கட்டியினும் நாவால் புரட்டிக் கரைத்தும், பல்லாற் கடித்தும் பொடி செய்து உண்ண வேண்டுதலின், “ஏலவே” என விதந்து கூறுகின்றார்.

உலப்புறா தினிக்கும் உயர்மலைத் தேனே

கலப்புறா மதுரம் கனிந்தகோற் றேனே                                                                                  1414


உரை : தெவிட்டாமல் இனிக்கின்ற உயர்ந்த மலையிடத்துக் கிடைக்கும் தேனின் சுவையையும் பிறிதொன்றும் கலவாத இனிமை நிறைந்த மரக்கிளைகளிலே கட்டப்பட்ட தேனின் சுவையையும் போல்வது சிவானந்தம். எ.று.

தேன் முதலிய பொருள்கள் மிகைப்பட உண்டவிடத்து வேண்டாமை யுணர்ச்சியை உண்டுபண்ணும் இயல்பினவாகும். அவ்வியல்பைத் தெவிட்டல் என்பது மரபு. எத்துணை உண்ணினும் தெவிட்டாது தித்திக்கும் இயல்புடையதாகையால் மலைத்தேனை, “உலப்புறா தினிக்கும் உயர் மலைத்தேன்” என வுரைக்கின்றார். உயர்ந்த மலைப் பகுதிகளில் உள்ள நெடும் பாறையில் தேனீக்களால் கட்டப்படும் தேன் கூட்டின் இனிய தேன், “உயர் மலைத்தேன்” எனப்படுகின்றது. கோற்றேன் என்பது உயர்ந்த மரங்களின் நெடிய கிளைகளில் தேனீக்களால் கட்டப்படும் தேன் கூட்டில் பெறலாகும் தேன்; தேனை யழிப்பவர்கள் புகையிட்டும் வேறு தழைகளை வீசியும் தேனின் சுவைக்கு ஊறு செய்தலால் அதனால் கெடாத தேன் என்பதற்கு, “கலப்புறா மதுரம் கனிந்த கோற்றென்” என்று கூறுகின்றார். புகை படிதலாலும் பல்வேறு தழைகளின் காற்றுத் தோய்தலாலும் கோற்றேன் தனது தூய்மையை இழப்பது பற்றி இவ்வாறு கூறுகின்றார்.

நவைஇலா தெனக்கு நண்ணிய நறவே

சுவைஎலாம் திரட்டிய தூயதீம் பதமே                                                                                  1416

உரை : குற்றம் சிறிதுமின்றி எனக்குக் கிடைத்தருளிய நறவுச் சுவை யெல்லாம் திரண்ட தூய இனிய பதத்தில் கிடைப்பது போல்வது சிவானந்தம். எ.று.

நறவு என்பது தென்னை, பனை, ஈந்து முதலியவற்றில் வடிக்கப்படும் சாறு. இவற்றைத் தென்னஞ் சாறு, பனஞ்சாறு, ஈந்தின் சாறு என்பது வழக்கம். இச் சாறுகள் நாட்படப் புளிப்பேறிய வழி உண்டார்க்கு மயக்கம் தரும் இயல்பினவாகிறபோது “கள்” எனப்படும். “உண்டார்க்க ணல்ல தடுநறாக் காமம் போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று” ( குறள் ) என்றவிடத்து நறவே காய்ச்சிப் புளிப்பேற்றிய விடத்து கள்ளாம் என்பது புலப்படுவது காண்க. புதிது இறக்கப்படும் நறவிடத்து விடமுடைய பூச்சிகள் வீழ்ந்து அதன் பண்பைக் கெடுத்தலால் அவ்வாறு கெடாது தூய்மையும் புதுமையும் பொருந்திய நறவு என்றற்கு, “நவையிலா தெனக்கு நண்ணிய நறவு” என்கின்றார். இந்நறவுகள் வேறுவேறு இனத்தனவாயினும் அவற்றின் பொதுச் சுவை எல்லாம் திரண்டு தூயதாய் உள்ள நறவின் இன்ப நிலையை, “தூய தீம்பதம்” என்று சொல்லுகின்றார். இப்பதத்தின் சுவையினும் மிஞ்சியது சிவஞானானந்தம் எனத் தெருட்டுவாராய், “தூய தீம்பதம்” என்று சிறப்பிக்கின்றார். இக் கருத்தைப் பிறிதோரிடத்தில், “கள்ளுண்டேன் எனப் புகன்றார் கனக சபை நடுவே கண்டதுண்டு சிற்சபையில் உண்டதுமுண்டு” என்று வள்ளற் பெருமான் எடுத்தோதுவதும் காண்க.

பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே

இதம்பெற உருக்கிய இளம்பசு நெய்யே                                         1418

உரை : பசுவினுடைய பதமாகக் காய்ச்சப்பட்ட இனிய பாலின் சுவையையும், இனிய மணமுண்டாக உருக்கிய வளம் மிக்க பசுமையான நெய்யினது சுவையையும் போல்வது சிவானந்தம். எ.று.

நல்ல பதத்தில் காய்ச்சிய பசுவின் பால் நல்ல சுவையும் இனிய மணமும் கொண்டு திகழ்வது பற்றி, “பதம் பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே” என்று சிறப்பிக்கின்றார். பதம் - பக்குவம். பதம் தவறிய வழிப் பால் முறுகி விடுமாதலின், “பதம் பெறக் காய்ச்சிய” என்று பகர்கின்றார். இதம் - ஈண்டு மணத்தின் மேற்று. முறுகக் காய்ந்த வழி மணம் குறைதலின் பக்குவமாகக் காய்ந்து நறுமணம் மிகுந்து விளங்கும் நெய்யை, “இளம் பசுநெய்” என்று இயம்புகின்றார். இதனால், பசும் பாலின் சுவையும் பசு நெய்யின் இனிமையும் உடையது சிவஞானானந்தம் என்று தெரிவித்தவாறாம்.

உலர்ந்திடா தென்றும் ஒருபடித் தாகி

மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே                                         1420

உரை : வாடுதலும் வதங்குதலும் இன்றி ஒருதன்மைத்தாய் மனங் கமழ மலர்ந்து நல்ல அழகுடன் விளக்குகின்ற மலர் போல்வது சிவம். எ.று.

உலர்தல் - பசுமையின்றிக் காய்ந்தொழிதல். வதங்குதல் - ஈரம் கெடுதல். வாடுதலும் புலர்தலும் இன்றி மலர்ந்த வண்ணம் எப்பொழுதும் மாறாமல் இருக்கும் தன்மை விளங்க, “ஒருபடித்தாகி” என்று உரைக்கின்றார். அப்பொழுது மலர்ந்த பூவினிடத்தே விளங்குகின்ற மணமும் நிறமும் ஒளியும் உடைமையால் சிவ பரம்பொருளை, “மலர்ந்து நல்வண்ணம் வயங்கிய மலரே” என்று கூறுகின்றார்.

இகந்தரு புவிமுதல் எவ்வுல குயிர்களும்

உகந்திட மணக்கும் சுகந்தநல் மணமே                                                                                  1422

உரை : இம்மைப் பிறப்புக்கு இடமாகிய நிலவுலக முதலாக உள்ள உலகங்கள் எல்லாவற்றிலும் வாழும் உயிர்கள் அனைத்தும் உயர்வு பெறுமாறு நன்மணம் கமழ விளங்குவது மங்கல நறுமணமாகிய சிவமணம் கமழும் சிவ பரம்பொருள். எ.று.

இகந்தரு புவி - இம்மைப் பிறப்புக்கு இடமாகிய நிலவுலகம். இதனைப் போல எண்ணிறந்த வுலகங்கள் உள்ளன என்பது நூல் வழக்காதலாலும், அவ்வுலகங்கள் அனைத்திலும் எண்ணிலடங்காத உயிர் வகைகள் வாழ்கின்றன என்று நூல்கள் கூறுவதாலும், “எவ்வுல குயிர்களும்” என்று எடுத்துரைக்கின்றார். உகத்தல் - உயர்தல். “உகப்பே உயர்வு” என்பது தொல்காப்பியம். உலகங்களில் வாழும் உயிர்கள் யாவும் பிறந்தும் இறந்தும் பல்வேறு பிறப்பு எடுத்தும் முடிவில் உயர்ந்த வாழ்வாகிய முத்தி இன்பப் பெருவாழ்வு பெறல் வேண்டும் என்பது சமயஞானிகளின் முடிபாதலின், “எவ்வுல குயிர்களும் உகந்திட” என வுரைக்கின்றார். உயிர்கட்குரிய நன்மணமாவது நல்ல சிவஞானப் பேறு. சிவஞான வொழுக்கத்தாலன்றி உறுதிப் பேறு இல்லையாதலின் அதனை, “நன்மணம்” என்று குறிக்கின்றார். சிவ மணம் என வற்புறுத்தற்கு, “சுகந்த நன்மணம்” என்று இயம்புகின்றார்.

யாழுறும் இசையே இனியஇன் இசையே

ஏழுறும் இசையே இயல்அருள் இசையே                                         1424

உரை : யாழிடத்துப் பிறக்கின்ற இசை யின்பமும், அவ்விசை யிடத்துத் தோய்ந்திருக்கும் இன்னிசை யின்பமும், சுரம் ஏழாகப் பிரிந்திசைக்கும் அதன் இன்பமும் இறைவனிடத்து விளங்குகின்ற இன்ப இசையாகும். எ.று.

யாழ், குழல், வீணை முதலிய கருவிகளின் வாயிலாகப் பிறக்கும் இசை சிறந்ததாகலின் அதனை விதந்து, “யாழுறும் இசையே” என்று எடுத்துரைக்கின்றார். இசையின்கண் இனியவும் அல்லாதனவும் என இருவகை யுண்டாதலால், இனிய இசையே வேண்டப்படுவது என்றற்கு, “இனிய இன்னிசையே” என இசைக்கின்றார். இன்னிசையும் எழுவகைச் சுரங்களாகப் பிரிந்து உணரப்படுவதாலும் அவ்வேழும் கலந்தே இன்னிசை உளதாவதாலும் அதனை, “ஏழுறும் இசையே” என்று எடுத்துரைக்கின்றார். இந்த இசையின்பம் மனத்தைத் தூய்மை செய்து சிவனருள் நலத்தை யுணரச் செய்வதால் அதனை, “இயலருள் இசை” என்று சிறப்பிக்கின்றார். இயலருள் என்பது சிவபோக இன்ப மயமானதாகிய சிவஞான நாதம் என அறிக. மந்த நிலையிலும் மானத நிலையிலும் செவி கேட்கும் வாக்கு நிலையிலும் திருவருள் ஞான இன்பத்தைத் தருவதால் அதனை, “இயலருள் இசை” என்று புகழ்கின்றார்.

திவள்ஒளிப் பருவம் சேர்ந்தநல் லவளே

அவளொடும் கூடி அடைந்ததோர் சுகமே                                         1426

உரை : ஒளி விளங்குகின்ற மேனியை யுடையவரும் இளம் பருவம் கனிந்த நல்ல பண்புடையவளுமான நங்கையோடு கூடி யடையும் இன்ப சுகம் போல்வது சிவபோகம். எ.று.

இளமைப் பருவத்து எழிலுடைய மேனி நலத்தை, “திவள் ஒளிப்பருவம்” என்று குறிக்கின்றார். திவளுதல் - விளங்குதல். எழில் மிகுந்து ஒளிரும் பருவமாதலின் அதனை, “திவள் ஒளிப் பருவம்” என்று சிறப்பிக்கின்றார். நல்ல கல்வியும், சிறந்த ஒழுக்கமும், உயர்ந்த பண்பும், இளமைச் செவ்வியும் உடைய நல் இளமங்கையை, “நல்லவள்” என்று குறிக்கின்றார். இத்தகைய பண்பும் குடிப் பிறப்பும் ஞானமும் ஒழுக்கமும் உடையவளை மணந்து கூடிப் பெறும் இன்பம் சிவபோகமாகத் திகழ்வதாம் என்பது இதன் குறிப்பு.

நாதநல் வரைப்பின் நண்ணிய பாட்டே

வேதகீ தத்தில் விளைதிருப் பாட்டே

நன்மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே

சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே

நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே

எம்பலம் ஆகிய அம்பலப் பாட்டே                                         1432

உரை : நாத தத்துவத்தின்கண் தோய்ந்து வரும் அழகிய பாட்டின்பமும், வேத ஓசையில் பிறக்கின்ற பாட்டின்பமும், நல்ஞான ஒழுக்க முடையவர் நாவால் உவந்து பாடும் பாட்டின்பமும், சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்த சான்றோர் மனம் குழைந்து பாடும் பாட்டிசையும், விரும்பப்படுகின்ற சிவாகமங்களை இசைப்பதால் உண்டாகும் பாட்டின்பமும், எங்கட்கு வலிய துணையாக விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தே பொருளாகக் கொண்டு ஓதும் பாட்டின்பமும், சிவானந்தம் நல்கும் பாட்டுக்களாகும். எ.று.

சுத்த தத்துவம் ஐந்தனுள் சத்தி தத்துவத்திற்கு மேலதாகிய சிவ தத்துவம் நாத தத்துவம் எனப்படும். அது பிரணவ ஓசை வடிவில் முத்தான்மாக்களுக்கு முழுத்த இன்பம் தரும் நிலையமாதலால் அதனை, “நாத நல்வரைப்பு” என்று குறிக்கின்றார். வரைப்பு - இடம். நாத தத்துவத்தின்கண் இருந்து நல்ஞானிகள் பாடும் பாட்டின் பொருளும் சிவ போகமாதலின் அதனை, “நாத நல்வரைப்பில் நண்ணிய பாட்டு” என்று சிறப்பிக்கின்றார். வேதம், மந்திரம் பிராமணம் என இரு கூறுபட்டு ஓதுதற்கு அமைவதாய் உள்ளது மந்திர பாகம். அதனை ஓதுவதால் மனம் ஒருமைத் தன்மையும் உறுதியும் பெற்றுச் சிவபோகத்திற்குரியதாதலால் அதனை, “வேத கீதத்தில் விளைதிருப்பாட்டு” என்று கூறுகின்றார். நன்மார்க்கர் - திருவருள் ஞான நெறியாகிய நன்ஞான ஒழுக்கம் உடையவர். ஞானமே நினைந்து ஞானமே மொழிந்து ஞான நெறியிலேயே ஒழுகும் நற்பண்பினரானதால் அவர்களை, “நன்மார்க்கர்” என்று புகழ்கின்றார். அவர்களது நாக்கு ஞானமே பயின்று நலமுடையதாய்த் திருவருள் நெறியில் இயங்குவதாய் விளங்குவதால் அவர்களது ஞானப் பாட்டை, “நன்மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டு” என்று குறிக்கின்றார். நாவால் நவிற்றிய என மிகுத்து கூறியது அவர்களுடைய நாவின் திருவருட் பயிற்சி மிகுதி புலப்படுத்தற்கு. சன்மார்க்கம் என்பது திருவருள் ஞான நெறியாய் தயாமூலதன்மம் தழுவியதாய் விளங்கும் சிவநெறியாகிய செந்நெறியாகும். அவர்களுடைய பாட்டுக்களில் திருவருள் ஞான நெறியே செறிந்த பொருளாய்த் திகழ்வது பற்றி, “சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே” என்று புகல்கின்றார். திருவருட் செந்நெறிக்குத் தயாமூலதன்மம் என்பது திருநாவுக்கரசு சுவாமிகள் வழங்கிய திருப்பெயர் என அறிக. நம்புதல் - விரும்புதல். சிவஞானிகள் விரும்பி ஓதி யொழுகும் இயல்பு உடையதாகலின் சிவாகமத்தை, “நம்புறும் ஆகமம்” என்று மொழிகின்றார். சிவாகமங்களில் கிரியா பாதங்களிலும் ஞான பாதங்களிலும் ஓதப் பெறும் பாட்டுக்கள் கிரியா யோக இன்பத்தை நல்குவனவாதலின், அவை பொருளாகப் பாடப் பெறும் பாட்டு சிவம் பொருளாக அமைவதால் அவற்றை, “ஆகமம் நவிற்றிய பாட்டு” என்று விளம்புகின்றார். எம்பலம் - எமக்குத் துணையாகிய வலிமை. இப் பாட்டுக்களால் ஓதுவார்க்குத் திருவருள் நலமும் சிவஞானச் செறிவும் சிவபோகக் காட்சியும் உண்டாவதால், “எம்பலம்” என்று புகல்கின்றார். இங்கே கூறிய நலங்கள் அத்தனையும் தில்லை அம்பலக் காட்சியால் கைவருதலின் “அம்பலப் பாட்டு” என்று புகழ்ந்து பாடுகின்றார். பிறிதோரிடத்திலும், “அம்பலப் பாட்டே அருட் பாட்டு, அல்லாத பாட்டெல்லாம் மருட் பாட்டு” என்று வள்ளற் பெருமான் வரையறுத்து உரைக்கின்றமை காண்க.

என்மனக் கண்ணே என்அருட் கண்ணே

என்னிரு கண்ணே என்கணுள் மணியே

என்பெருங் களிப்பே என்பெரும் பொருளே

என்பெருந் திறலே என்பெருஞ் செயலே

என்பெருந் தவமே என்தவப் பலனே

என்பெருஞ் சுகமே என்பெரும் பேறே

என்பெரு வாழ்வே என்றன்வாழ் முதலே

என்பெரு வழக்கே என்பெருங் கணக்கே

என்பெரு நலமே என்பெருங் குலமே

என்பெரு வலமே என்பெரும் புலமே

என்பெரு வரமே என்பெருந் தரமே

என்பெரு நெறியே என்பெரு நிலையே

என்பெருங் குணமே என்பெருங் கருத்தே

என்பெருந் தயவே என்பெருங் கதியே

என்பெரும் பதியே என்னுயிர் இயலே

என்பெரு நிறைவே என்தனி அறிவே

உரை : எனக்கு அகக்கண்ணும், அருட் கண்ணும், என்னுடைய இரண்டு புறக்கண்களும், அவற்றுள் திகழும் கண்மணியும் ஆகியதும், எனக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தருவதும், பெரிய பொருளாவதும், எனது பெரிய செயலாற்றலின் உருவாதலும், என் செயல்களுள் பெரிய செயலாவதும், எனது பெரிய தவத்தில் உருவாவதும், அத் தவத்தின் விளைவாவதும், யான் விரும்பும் பெரிய சுகமாவதும், யான் பெறுவனவற்றுள் பெரிய பேறாவதும், எனக்குப் பெரிய வாழ்வு அருளுதலும், என்னுடைய நல்வாழ்விற்கு முதலாவதும், யான் வழங்கி வாழ்வதற்குப் பெருவழக்காவதும், என் வழக்குக்குப் பெரிய முறையாவதும், யான் பெறுகின்ற பெரிய நலமாவதும், என் குலத்திற்குப் பெரிய முதற் பொருளாவதும், எனக்குப் பெருவன்மை தருவதும், பெரிய அறிவுப் பொருளாவதும், யான் பெறுகின்ற மேலான பொருளாவதும், மேலான தகுதியை எனக்குத் தருவதும், யான் மேற்கொண்ட பெரிய அருள் நெறியாவதும், அதனால் யான் எய்தவிருக்கின்ற பெரிய பதமாகவும், எனக்கு இன்றியமையாத பெரிய குணப் பொருளாவதும், என் உள்ளத்தெழும் பெருங் கருத்தாகவும், யான் செய்கின்ற பேரருட் செயலின் உருவாகவும், அதனால் யான் பெறுதற்குரிய பெருங் கதியாகவும் எனக்குப் பெருமை வாய்ந்த தலைவனாகவும், எனது ஆன்ம சிற்சித்தியாகவும், எனக்கு அமைகின்ற குறைவற்ற நிறைவாகவும், எனது ஆன்ம ஞானமாகவும் விளங்குவது சிவம். எ.று.

அறிவுக் கண்ணை மனக்கண் என்றும், அகக்கண் என்றும் கூறும் மரபு பற்றி, “என் மனக் கண்ணே” என்று கூறுகின்றார். அருட் கண் - அருட் பார்வைக்கேதுவாகிய தண்ணிய அருளை அருட் கண் என்று புலப்படுகின்றார். முகத்தில் உள்ள இரண்டு கண்களும் புறக்கண்கள் என்று புகலப்படுமாயினும் சிறப்பு விளங்க, “என் இரு கண்ணே” என்று இயம்புகின்றார். கண்ணுக்கு ஒளி தரும் உறுப்பு கருமணியாதலின் அதனை, “என் கண்ணுள் மணியே” என்று சிறப்பிக்கின்றார். மணியில்லாத கண் குருட்டுக் கண் எனப்படும். பெருமகிழ்ச்சி உளதாகும் போது அறிவும் இன்ப வுணர்வும் ஒன்றினுள் ஒன்றாய்ச் செறிந்து ஒன்றாதலின் அதனை, “என் பெருங் களிப்பு” என வுரைக்கின்றார். பொருள்கள் எல்லாவற்றிற்கும் பெரியது பரஞானமாதலின் அதனைப் “பெரும் பொருள்” என்று புகழ்கின்றார். பரஞானத்திற்குப் பொருளாவது பரசிவமாதலின் அதன் பரமாம் தன்மை விளங்கப் “பெரும் பொருள்” என்று குறிக்கின்றார். ஆன்ம சொரூபத்தின் அறிவாற்றல் மேன்மையுறுதற்கு இன்றியமையாத அருளாற்றலும், அருட் செயலும் பரசிவத்தின் பேரருளாதலின் அவ்வுண்மை விளங்க, “என் பெருந் திறலே என் பெருஞ் செயலே” என்று ஏத்துகின்றார். உற்ற நோய் தோன்றலும் உயிர்கட்கு ஊறு செய்யாமையும் பொது வகையில் தவமாயினும் பரசிவத்தின் அருள்நோக்கி முயலும் தவம் பெரிதாதலால் அதனை விளக்குதற்குச் சிவ பரம்பொருளை, “என் பெருந் தவமே” என்று போற்றுகின்றார். தவத்தின் விளைவாவது பரசிவ போகமாதலால் அதனை, “என் தவப் பலனே” என்று பாராட்டுகின்றார். சிவபோகத்தின் பயன் சிவானந்தம் என்பது பற்றி “என் பெருஞ் சுகமே” என்று இசைக்கின்றார். ஆன்மாக்கள் பெறுவனவற்றுள் சிவானந்தத்தினும் வேறு பேறு இன்மையின், “என் பெரும் பேறே” என்று பராவுகின்றார். சிவஞானானந்தத்தைப் பெற்று இன்புறுதலினும் ஆன்மாவுக்குப் பெருவாழ்வு பிறிதில்லை என்பது தோன்ற, “என் பெருவாழ்வே” என்றும், அவ்வாழ்வு தானும் பரசுகத்தின் திருவருளாலன்றி எய்துதற்கு இன்மை விளங்க, “என்றன் வாழ்முதலே” என்றும் சொல்லுகின்றார். வழக்கு - ஞான நெறியின்கண் ஒழுகுதல். கணக்கு - அவ்வொழுக்கத்திற்குரிய முறை. அதன் பெருமை புலப்பட, “பெருங் கணக்கே” என்று கூறுகின்றார். ஆன்ம கோடிகள் அனைத்துக்கும் தலைவனாதல் தோன்றச் சிவ பரம்பொருளை, “என் பெருங் குலமே” என்று போற்றுகின்றார். பெருவலம் - ஆன்ம ஞானத்தால் எய்தும் திருவருள் பேராற்றல். விளக்கமுறும் பரஞானம் “பெரும் புலம்” எனப்படுகிறது. பரஞானத்தால் நுகரப்படும் பரபோகம் பெருவரமாகும்; அதனால் எய்தும் உயர்வைப் “பெரும் தரம்” என்று சொல்லுகின்றார். அதனைப் பெறுதற்குரிய நெறியும் பெற்ற வழி எய்தும் நிலையும் உண்மை புலப்பட, “என் பெருநெறியே என் பெருநிலையே” என்று கூறுகின்றார். நற்செயற்குரிய நற்பண்பைச் சிவனருளாலே பெற வேண்டியிருத்தலின், “என் பெருங் குணமே” என்றும், குணவமைதியால் எண்ணங்கள் சுரத்தலின், “என் பெருங்கருத்தே” என்றும், அவற்றுள் அருட் குணமும் அதற்குரிய கருத்தும் செயலும் அருள் மயமாதலின், “என் பெருந்தயவே” என்று கூறுகின்றார். இதனைத் திருநாவுக்கரசர், “தயா மூலதன்மம்” என்று பாராட்டுவர். அதனையே சிவம் என்னும் கருத்தால், “என் பெருந் தயவே” என்று வள்ளற் பெருமான் சுருங்க உரைக்கின்றார். தயாமூலமாகிய அறத்தால் சிவகதி எய்துதல் பயனாதல் தோன்ற, “என் பெருங் கதியே” என்று இயம்புகின்றார். சிவ பரம் பொருளே உலகு உயிர்கட்கு எல்லாம் தலைமைப் பொருளாதலின், “என் பெரும் பதியே” என்றும், அதனால் ஆன்ம சிற்செயலும் இயக்கம் பெறுதலின், “என் உயிர் இயலே” என்றும், அதன் நுட்பம் புலப்பட நுவல்கின்றார். அவ்வியலால் குறைவிலா நிறைவாகிய சிவபோகம், உணரப்படுதலின், “என் தனி யறிவே” என்று சொல்லுகின்றார். ஆன்ம கரணங்கள் அனைத்தும் சிவ கரணங்களாய் ஒன்றி விடுதலால், “தனி அறிவே” என்று சிறப்பிக்கின்றார்.

தோலெலாம் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்

மேலெலாம் கட்டவை விட்டுவிட் டியங்கிட

என்பெலாம் நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட

மென்புடைத் தசைஎலாம் மெய்உறத் தளர்ந்திட

இரத்தம் அனைத்தும்உள் இறுகிடச் சுக்கிலம்

உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட

மடல்எலாம் மூளை மலர்ந்திட அமுதம்

உடல்எலாம் ஊற்றெடுத் தோடி நிரம்பிட

ஒண்ணுதல் வியர்த்திட ஒளிமுகம் மலர்ந்திடத்

தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட

உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக்

கண்ணில்நீர் பெருகிக் கால்வழிந் தோடிட

வாய்த்துடித் தலறிட வளர்செவித் துளைகளில்

கூயிசைப் பொறிஎலாம் கும்மெனக் கொட்டிட

மெய்எலாம் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்

கைஎலாம் குவிந்திடக் கால்எலாம் சுலவிட

மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட

இனம்பெறு சித்தம் இயைந்து களித்திட

அகங்காரம் ஆங்காங் கதிகரிப் பமைந்திடச்

சகங்காண உள்ளம் தழைத்து மலர்ந்திட

அறிவுரு அனைத்தும் ஆனந்த மாயிடப்

பொறியுறும் ஆன்மதற் போதமும் போயிடத்

தத்துவம் அனைத்தும் தாமொருங் கொழிந்திடச்

சத்துவம் ஒன்றே தனித்துநின் றோங்கிட

உலகெலாம் விடயம் உளவெலாம் மறைந்திட

அலகிலா அருளின் ஆசைமேற் பொங்கிட

என்னுளத் தெழுந்துயிர் எல்லாம் மலர்ந்திட

என்னுளத் தோங்கிய என்தனி அன்பே                                                                                  1476

உரை : தூல உடம்பின் தோல் அனைத்தும் குழைந்திடவும், தோல் கீழ்த்தசையைப் பிடித்து நிற்கும் நரம்புகள் யாவும் மேலும் கீழும் கட்டகன்று துண்டு பட்டு இயங்கவும், உள்ளிருக்கும் எலும்புகள் அனைத்தும் நெக்கு இடையிடையே நெகிழ்ந்திடவும், மென்மையுடைய தசைகள் யாவும் உடலின்கண் தளர்ச்சி யுறவும், அவற்றின் ஊடே பரவி யிருக்கின்ற குருதி முற்றும் உள்ளகம் இறுகிச் சுக்கிலத்தின் உள்ளுறு பகுதியில் இறுகி ஒரு திரளாய்ச் சுருங்கவும், மண்டைக்குள் இருக்கும் மூளை கூம்பிய நிலையிலிருந்து மலரவும், துவாத சாந்த ஞானவமுதம் உடல் முழுவதும் பரவி ஊற்றோடி நிரம்பவும், ஔ¢ளிய நுதற் பகுதி வியர்வைப் பொடிக்கவும், ஞானவொளி திகழும் முகம் மலரவும், குளிர்ந்த உயிர்ப்புக் காற்று மெல்லெனப் போக்கு-வரவு புரியவும், சாந்த நிலையில் உளதாகும் இன்பத்தால் உள்ளத்தில் தோன்றி வாய் வழி மலரும் புன்னகை தோன்றவும், மேனி முழுவதும் மயிர்க் கூச்செறியவும், கண்களில் இன்ப நீர் பெருகிக் கால்காலாய் வழிந்தோடவும், வாயிதழ் துடித்து அலறவும், செவி யிரண்டினில் கூப்பிடும் ஓசையை வாங்கும் செவிப்பொறி முழுதும் கும்மென ஒலிக்கவும், உடல் முழுதும் குளிர்ச்சி யுறவும், எலும்புக் கூடாகிய என் மெல்லிய மார்பு மேலும் கீழுமாக அசையவும், கைகள் இரண்டும் தலைமேல் குவியவும், கால்கள் ஒன்றன் மேல் ஒன்றாக மிதியுண்டசையவும், மனம் குழைந்துருகவும், துவாத சாந்தத்தில் ஒளிரும் ஞான மதி கலை நிறைந்து விளங்கவும், மனமாகிய கரணத்தின் கூறாகிய சித்தம் மனத்தோடு இயைந்து களிப்புறவும், அகங்காரமாகிய கரணம் ஆங்காங்குப் பரந்து மேம்பட்டு ஒடுங்கவும், ஏனை உலகியல் ஆன்மாக்களைக் காண்பதற்கு உள்ளம் ஆர்வம் தழைத்து விரியவும், அதன் மேலதாகிய புத்தி தத்துவம் இன்பம் நிறையவும், பொறி புலன்களுக்குக் காரணமாகிய மூலப்பகுதியும், அதன் வழி நிற்கும் ஆன்ம தற்போதமும் ஒடுங்கி மறையவும், மூலப்பகுதியில் காரியங்களாகிய ஆன்ம தத்துவங்கள் அத்தனையும் ஒருங்கியைந்து ஒடுங்கி ஒழியவும், குண தத்துவம் மூன்றனுள் சத்துவ குணம் ஒன்றே தனித்து நின்று ஓங்கவும், உலகனைத்தும் அதனை முழுதும் அறியும் ஐம்புல வறிவுகளும் மறைந்திடவும், அளவில்லாத திருவருளின்கண் ஆசை மேன்மேல் பெருகவும், என் உள்ளத்திலிருந்து எழுந்து உயிரகம் முழுதும் விரியவும், உலகனைத்திலும் உள்ள பொருள்கள் எல்லாவற்றையும் அறியாவாறு மான் என்னும் தத்துவத்தில் ஒடுங்குவதால் அதற்கு அப்பாலதாகிய அளவில்லாத திருவருட் பெருக்கை நுகர்வதில் ஆசை மேலோங்கவும், என் மனத்தின்கண் ஓங்கிய ஒப்பற்ற அன்பு வடிவாகிய பரசிவமே. எ.று.

தீயாகிய பூதத்தால் வெந்து கரிந்து சாம்பலாகும் இயல்பினதாகிய உடம்பின் உள்ளும் புறமுமாகிய தோல் வகைகள் திருவருள் ஞான ஒளியில் குழைகின்றன என்பது விளங்க, “தோலெல்லாம் குழைந்திட” என்றும், அத்தோலின் இனமாகிய நரம்புகளும் அருள் ஒளியில் குழைந்து கட்டவிழ்ந்து நின்றாங்கு நின்று துண்டுதுண்டாய் விடுபடுவது விளங்க, நரம்பனைத்தும் கட்டு விட்டுத் துடிப்புறுகின்றன என்பது புலப்பட, “விட்டுவிட் டியங்கிட” என இயம்புகின்றார். தோல், தசை, நரம்பு கட்கு உள்ளே உள்ளதாகிய எலும்புகள் வன்மை யிழந்து குழையும் நிலையைத் திருவருள் ஞான ஒளி எய்துவித்தலால், “என்பெலாம் நெக்கு நெக்கியலிடை நெகிழ்ந்திட” என்றும், எலும்புகட்கும் தோல் வகைகட்கும் இடையுளதாகிய தசைகள் முற்றும் திருவருள் ஞான யோகத்தில் தளர்ச்சியுறுவது தோன்ற, “தசையெலாம் மெய்யுறத் தளர்ந்திட” என்றும் சாற்றுகின்றார். இரத்தத்தின் உள்ளுறு சாரம் வெண்ணிறச் சுக்கிலமாதலின் இரத்தம் இறுகி வெண்ணிறச் சுக்கில அணுவாய்த் திரண்டு கனவிய பேரணுவாய் உருக் கொள்ளுதலின், “சுக்கிலம் உரத்திடை பந்தித்தொரு திரளாயிட” என்று உரைக்கின்றார். மூளையை மறைத்துக் காத்து நிற்கும் மண்டை ஈண்டு “மடல்” எனப்படுகிறது. பனை மடலை இக்காலத்தும் நாட்டவர் மண்டை என வழங்குவது காண்க. மண்டைக்குள் நிறைந்திருக்கும் மூளைப் பகுதி முழுதும் அலகலகாக விரிதலின், “மடலெலாம் மூளை மலர்ந்திட” என்று கூறுகின்றார். ஞான ஒளி பெருகியவிடத்து மண்டைக்கு மேல் பன்னிரண்டு அங்குல உயரத்தில் ஞான சந்திரன் நின்று ஞானவமுதத்தை பொழியும் எனவும், அது மூளை வழி உடற்குள் புகுந்து அணு புதைக்கவும் இடமின்றித் தேக முழுவதும் பரவும் என யோக நூலார் கூறுதலால், “மூளை மலர்ந்திட அமுதம் உடல் எலாம் ஊற்றெடுத்தோடி நிரம்பிட” என வுரைக்கின்றார். துவாத சாந்தத்து அமுத சந்திரனது ஒளி உடலின்கண் உள்ளும் புறமும் இடையறவின்றிப் பரவுதலால் அதன் ஒளி முகத்தில் விளங்கவும், நுதல் முழுவதும் வியர்வைத் துளிகள் பரவுவது புலப்பட, “ஒண்ணுதல் வியர்த்திட ஒளி முகம் மலர்ந்திட” என்று ஓதுகின்றார். ஞான ஒளியும் வியர்ப்பும் ஒப்பத் தோன்றுமிடத்து உள்ளும் புறமுமாக இயங்கும் மூச்சுக் காற்று மென்மையுற்று மந்தமாக இயங்குவது பற்றி, “தண்ணிய உயிர்பினில் சாந்தம் ததும்பிட” என்று சாற்றுகின்றார். அந்நிலையில் ஞானானந்தம் பெருகுதலால் உள்ளம் மலர அதனிடத்திலிருந்து ஒளி யுருவாய் இன்பம் முளைத்து வாய் வழியாகப் புன்னகை ததும்ப மயிர்க் கூச்செறியக் கண்கள் நீர் சொறியக் கண்ணீர் பெருகி நீர் ஊற்றுப் போலக் கண்ணீர் வழிவது விளங்க, “கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்தோடிட” என்று கூறுகின்றார். ஊற்றுக்கால் போலக் கண்ணில் நீர் சுரந்து ஒழுகுவதால், “கால் வழிந்து ஓட” என்றும், ஞானானந்தம் உள்ளத் தாமரையின்கண் ஊறி மேலெழுந்து வாயிதழ் வழியாக உவகை நகையுறுவிப்பதால் அதனை, “உண்ணகை” என்றும் உரைக்கின்றார். திருவருள் ஞானவின்பம் பெருகுமிடத்து வாயிதழ் துடிப்பதும் செவியில் ஓங்காரப் பிரணவ ஓசையுதிப்பதும் யோகியர் அனுபவமாதலின், “வாய் துடித் தலறிட வளர்செவித் துளைகளில் கூயிசைப் பொறியெலாம் கும்மென” என்று கூறுகின்றார். செவித் துளை - இரண்டாகிய காதுகள். அவற்றின் உள்ளிருந்து ஓசையாகிய புலனை யேற்கும் கருவியை, “கூயிசைப் பொறி” என்று குறிக்கின்றார். ஓங்கார ஓசையின் இயல்பை ஓரளவு நமக்கு உணர்த்துதற்கு, “கும்மெனக் கொட்டிட” என்று குறிக்கின்றார். கொட்டுதல் - இசைத்தல். திருவருள் ஆனந்த மேல¦ட்டால் உலகியல் வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சி யுறுவது தோன்ற, “மெய் எலாம் குளிர்ந்திட” எனவும், நிறைந்த இயக்க மின்மையின் யோகியருடைய மார்பு மென்மையுற்று அசைவது தெரியாமல் இருப்பது பற்றி, “மென்மார் பசைந்திட” எனவும் விளம்புகின்றார். அம்மென்மை நிலையிலும் யோக கைவல்ய ஞானிகள் யோகக் காட்சியில் தோய்ந்திருப்பது புலப்பட, “கையெலாம் குவிந்திட” எனவும், “காலெலாம் கலவிட” எனவும் அருளுகின்றார். கால் என்றது பிராணவாயு. அதனுடைய இயக்கத்தை நெறிப்படுத்துவதே யோகத்தின் உயிர் நாடியாதலால், “காலெலாம் சுலவிட” எனக் கட்டுரைக்கின்றார். வருவது போவது தெரியாமல் சுழலுவது பற்றி உடலில் இயங்கும் பிராண வாயுவை, “கால் எலாம் சுலவிட” என்று கூறுகின்றார். இதுகாறும் ஞானேந்திரிய கன்மேந்திரிய இயக்கம் பற்றி யோக நூல் நெறியில் எடுத்தோதிய வள்ளற் பெருமான் அவற்றின் உள்ளுறு கருவியாகிய அந்தக்கரணங்களையும், குணதத்துவங்களையும் அவற்றின் காரணமாகிய மான் முதலிய மூலப் பகுதிகளையும் எடுத்து மொழிகின்றார். மனம், சித்தம், அகங்காரம், புத்தி என்ற கரணங்கள் யோக நிலையில் அமையும் திறத்தை எடுத்துரைப்பாராய், “மனங் கனிந்துருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட இனம்பெறு சித்தம் இயைந்து களித்திட அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப்பு அமைந்திடச் சகங்காண உள்ளம் தழைத்து மலர்ந்திட” என வுரைக்கின்றார். கன்மேந்திரிய ஞானேந்திரியங்கள் ஒடுங்கிய வழி அந்தக்கரணங்கட்குப் புறப்பற்றுக் கோடு ஒழிதலால் உள்நோக்கி அவைகள் திருவருளாகிய அகத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு உள்நோக்குவதால் அதனைச் சென்று பற்றும் மனத்தின் இயல்பை, “மனங் கனிந்து உருகிட” என்றும், அந்நிலையில் திருவருள் ஞான ஒளி பரவி நிறைந்து மனத்தை ஊக்குதலின் அதன் இனமாகிய சித்தம் திருவருள் ஒளியைப் பற்றி அதனோடு கலந்து மகிழ்தலால், “இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட” என்றும், ஒளி பெற்றோம் என்ற மதர்ப்பு ( திமிர்ப்பு ) தோன்றி அளவில் மிகுந்து அருளொளியை மறைக்காவண்ணம் திருவருளால் காக்கப்படுதலால், “அகங்காரம் ஆங்காங் கதிகரிப்பமைந்திட” என்றும், ஆங்காரம் துணையாகத் தற்போதம் தோன்றா வண்ணம் ஆன்ம அருளறிவு உலகியலை நோக்கத் தூண்டுதல் புலப்பட, “சகங் காண உள்ளம் தழைத்து மலர்ந்திட” என்றும் இயம்புகின்றார். பார்வை யறவிட்ட உலகினை மீளக் காண்பது அகங்காரத்தால் மிதிப்புண்ணாமல் அருளற இன்பத்தில் மிதக்குமாறு செய்யும் முயற்சியாதலால், “சகங்காண உள்ளம் தழைத்து” விரிகின்றமை இதனால் புலப்படுத்துவது கருத்தாம்” அறிவுருவாகிய புத்தி தத்துவமாய் ஆன்மாவைக் குறித்து நின்றது. இவ்யோக முயற்சியால் ஆன்மாவின் சிற்சொரூபம் ஆனந்த மயமாதலும் பொறி புலன் காட்சிகளால் உளதாகும் ஆன்ம போதம் கெடுதலும் பயனாதலால், “பொறி யுறும் ஆன்ம தற்போதமும் போயிட” எனப் புகலுகின்றார். தற்போதத்தை ஆன்ம போதம் எனவும், பசு போதம் எனவும் சிவாகமங்கள் கூறும்; இதனைப் “பொறி புலன்களைப் போக்கறுத் துள்ளத்தை நெறிபடுத்து நினைந்தவர் சிந்தையுள் அரிப்புறும் அமுதாயவன்” என்று திருநாவுக்கரசர் சுருக்கமாகத் தெரிவிக்கின்றார். அன்ன மயம், பிராண மயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம் என்னும் கோசம் ஐந்தனுள் நுண்ணிதாகியது ஆனந்த மயம் என ஞான நூல் நவில்கின்றது. மனம் முதலிய தத்துவங்களுக்கு மேலது குண தத்துவமாதலால் அதன் பிரிவுகளான இராசதம், தாமதம், சத்துவம் எனும் மூன்றனுள் சத்துவம் ஒன்றும் ஓங்கி நின்றாலன்றி ஆனந்தானுபவம் கைவராது என்பது பற்றி, “தத்துவம் அனைத்தும் தாமொருங் கொழிந்திடச் சத்துவம் ஒன்றே தனித்து நின்றோங்கிட” என்று கூறுகின்றார். குணதத்துவத்திற்கு அப்பாலதாகலின் மான் என்னும் தத்துவத்தின் விரிவாகிய உலகங்களும், உலக போகப் பொருள்களும் உணர்வு எல்லைக்கு உட்படாமல் கீழ்ப்பட்டு ஒடுங்குதலால், “உலகெலாம் விடயம் உளவெலாம் மறைந்திட” என வுரைக்கின்றார். திருஞானசம்பந்தரது திருவெழுகூற்றிருக்கை கூறும் முறையில் தத்துவங்களை நோக்குகின்றாராதலின் இவ்வாறு கூறுகின்றார். சேக்கிழார் பெருமானும், நம்பியாரூரர் தில்லையில் கூத்தப் பெருமானுடைய திருநடம் கண்டு மகிழ்ந்தபோது பெற்ற ஆனந்தானுபவத்தை, “ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள, அளப்பறும் கரணங்கள் நான்கும் சிந்தையேயாகக் குணம் ஒருமூன்றும் திரிந்து சாத்துவிகமேயாக விளங்கினார்” என்று கூறுவது காண்க. இந்த ஆனந்தானுபவம் முழுதும் தமது உள்ளத்தின்கண் நோக்கிய திறமும் அவ்வழிப் பிறந்த இன்ப அன்பு நிலையும் இனிது விளங்கிட, “என்னுளத் தெழுந் துயிர் எல்லாம் மலர்ந்திட என்னுளத் தோங்கிய என்தனி அன்பே” என்று கூறுகின்றார். மாயா காரியமாகிய உடம்பினுள் உயிர் உறையும் இடம் உள்ளமாதலின் உயிரையே உள்ளமென, “என்னுளத் தெழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட” என்று குறிக்கின்றார். இரண்டாவது உள்ளம் மனம். இன்பானுபவத்தில் பிறக்கும் அன்பாதலால், “என் தனி அன்பே” என்று பரமசிவனைப் பாராட்டுகின்றார்.

பொன்னடி கண்டருள் புத்தமு துணவே

என்னுளத் தெழுந்த என்னுடை அன்பே                                         1478

உரை : உள்ளத் தோங்கிய தனி அன்பாகிய சிவஞானத்தால் சிவத்தின் திருவடியைக் கண்டு ஆங்குப் பெருகும் சிவானந்தத்தை நுகர்தற்கு ஆன்ம சிற்சத்தி உள்ளிருந்து எழுந்து ஓங்குமாறு தூண்டும் சிவஞானமே. எ.று.

திருவருள் ஞானத்தால் சிவத்தின் பொன்னார் திருவடிகளைக் கண்டு அக்காட்சியால் உள்ளுற ஊறும் புத்தமுதமாகிய செந்தேனைப் பருகித் திளைப்பதற்கு ஆன்ம சிற்சத்தி உந்தப்படுவது உணர்த்துவாராய், “பொன்னடி கண்டு அருட் புத்தமுது உண்ண என் உள்ளத்தெழுந்த அன்பே” என்று இயம்புகின்றார். இங்கு அன்பு என்பது சிவபோக ஞானம். “ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்” என்று சேக்கிழார் அடிகள் தெரிவிப்பது காண்க.

தன்னையே எனக்குத் தந்தருள் ஒளியால்

என்னைவே தித்த என்தனி அன்பே.                                         1480

உரை : சிவமாம் தன்மை எனக்குத் தந்து தன்னுடைய திருவருட் பேரொளியால் என் கருவி கரணங்களைச் சிவ கருவி கரணங்களாக மாற்றிய திருவருள் ஞானப் பொருளே. எ.று.

திருவருட் பேரொளியை அனுபவித்தற்கேற்ற ஆற்றல் பசு கருவி கரணங்கட்கு இல்லாமையால் தமது போகத்தை நுகர்வித்தல் வேண்டிச் சிவமாம் தன்மையை ஆன்மாவுக்குத் தருவது விளங்க, “தன்னையே எனக்குத் தந்து” என்றும், அதற்குக் காரணம் இறைவனது பேரருள் என்றற்கு, “அருள் ஒளியால்” என்றும், தன்னுடைய கருவிகரணங்கள் பசுத் தன்மையிழந்து சிவமாம் தன்மை எய்தினமை தோன்ற, “என்னை வேதித்த என் தனி அன்பே” என்றும் இசைக்கின்றார். செம்பைப் பொன்னாக்குவது போல வேறுபடுத்தும் செயல் வேதித்தல் எனப்படும். இங்கே பசுகரணம் பதிகரணமாகத் திருவருளால் மாற்றப் படுவதுபற்றி, “அருள் ஒளியால் என்னை வேதித்த” என எடுத்துரைக்கின்றார். மாணிக்கவாசகரும், “சிவமாக்கி எனை யாண்ட அத்தன்” என்றும், “தந்ததுன்றன்னைக் கொண்ட தென்றன்னை சங்கரா ஆர் கொலோ சதுரர்” என்றும் உரைப்பது காண்க.

என்னுள்ளே அரும்பி என்னுளே மலர்ந்து

என்னுளே விரிந்த என்னுடை அன்பே.                                                                                  1482

உரை : என்னுடைய உள்ளத்தில் அரும்பாய்த் தோன்றி எனக்குள்ளே மலர்ந்து எனது உள்ளத்திலே இதழ் விரிந்து விளங்குவது அன்பாகிய சிவம். எ.று.

புறப் பொருளாய்த் தோன்றாமல் ஆன்மாவின் அகத்தே சிவஞானமாகிய அன்பு தோன்றுவது என்றற்கு, “என்னுளே அரும்பி” எனவும், உள்ளத்தில் முகிழ்த்த ஞானமாகிய மலர் மலருமிடமும் ஆன்மாவின் உள்ளகம் என்பார், “என்னுளே மலர்ந்து” எனவும், மலர்ந்த அவ்விட முற்றும் சிவமணம் கமழ்வது விளங்க, “என்னுளே விரிந்த என்னுடைய அன்பே” எனவும் இயம்புகின்றார். அன்பே சிவமாதல் பற்றி ஞானசம்பந்தரும் இதனை, “ஞான மாமலர்” என நவில்கின்றார்.

என்னுளே விளங்கி என்னுளே பழுத்து

என்னுளே கனிந்த என்னுடை அன்பே.                                                                                  1484

உரை : இவ்வாறு மலர்ந்து மணம் விரியும் சிவஞானக் கொடியான அன்பு என் ஆன்மாவினுள் வளமுற வளர்ந்து என்னுள்ளத்துள் காய்த்துக் கனிந்து ஞான ரசம் நிறைந்து எனதாய் உளது. எ.று.

விளங்குதல் - வளமுற வளர்தல். வளவிய வளர்ச்சி அழகு திகழ்தல் பற்றி, “விளங்கி” எனவும், முதிர்ந்த நிலையைப் “பழுத்துக் கனிந்த அன்பே” எனவும் கூறுகின்றார்.

தன்னுளே நிறைவுறு தரம்எலாம் அளித்தே

என்னுளே நிறைந்த என்தனி அன்பே                                                                                  1486

உரை : எனது ஆன்மப் பிரதேசத்தில் நிறையுமிடத்துத் தீவிரம் தீவிரதரம் அதிதீவிரம் என்ற வகையிலெல்லாம் நிறைந்து ஆன்மாவாகிய எனக்குள் நிறைவுற்று விளங்குவது ஞானத் திருவுருவாகிய ஒப்பற்ற பரசிவம். எ.று.

அணு பக்கமாகிய ஆன்மாவும் தன்னளவுக்குச் சிவநிறைவுக்கு இடமாதல் விளங்க, “தன்னுளே” என்றும், ஞான நிறைவுக்குப் பலவகை நிலைகளை ( தரங்களை ) ஞான நூல்கள் கூறுதலால், “தரமெலாம் அளித்து” என்றும் இயம்புகின்றார். இதனால் சிவமும் படிப்படியாக நிறைகின்றமை புலப்படுத்தவாறாம்.

துன்புள அனைத்தும் தொலைத்தென துருவை

இன்புரு வாக்கிய என்னுடை அன்பே                                                                                  1488

உரை : சிவமாதற்கு முன்னர் வினையுருவிற் படர்ந்திருந்த துன்பங்கள் அனைத்தையும் போக்கி, எனது சீவ வுருவை இன்ப உருவாக்கியது எனது இன்ப வடிவாகிய சிவம். எ.று.

காரியம் காரணமாக உபசரிக்கப்படுகின்றது. துன்பம் வினைப் பயனாதலால், ஆன்மா வுளதாகுங்காறும் விடாது பற்றி யிருப்பது கொண்டு வினையைத் “துன்பம்” என்று சொல்லுகின்றார். வினையின் நீங்கிய போது ஆன்மா தனது உணர்வு மயமான உருவம் ஞானானந்த உருவது எனக் காட்டற்கு, “எனதுருவை இன்புருவாக்கிய என்னுடை யன்பே” என மொழிகின்றார்.

பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டாய்

என்னுளங் கலந்த என்தனி அன்பே                                         1490

உரை : சிவானந்த ஞான வுடம்பு எனக்கு அமைவதற்காக என்னுள் வேறறக் கலந்தருளுவது எனதன் புருவேயான சிவம். எ.று.

தீயிடைப்பட்ட இரும்பு தீ நிறம் பெறுதல் போலச் சிவமாம் தன்மை எய்துகிற ஆன்மா சிவத்தின் பொன்னிறத்தைப் பெறுதல் தோன்ற, “பொன் னுடம்பு எனக்குப் பொருட்டா” என்று புகல்கின்றார். ஆன்மா சிவத் திருமேனி யெய்துவதும் அச்சிவத்தின் திருவருளால் என்பது குறிப்பு.

தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி

என்வசங் கடந்த என்னுடை அன்பே                                         1492

உரை : தன்வயமாய் இயங்கி மேன்மேலெழுந்து என்வயமாகாது எல்லை கடந்து விளங்குவது என்னுடைய பேரன்புருவாகிய சிவம். எ.று.

தன்வயத்தாதல் பரசிவத்தின் குணங்களில் ஒன்றாதல் பற்றி, “தன்வசமாகி” என்று கூறுகின்றார். நிறைந்து பெருகும் இயல்பின தென்றற்குத் “ததும்பி மேற் பொங்கி என் வசம் கடந்தது” என வுரைக்கின்றார். எல்லையற்ற பரசிவமாதலின், “என் வசம் கடந்த என்னுடை யன்பே” என்கின்றார். என்னுடை யன்பே என்றற்கு என்னைத் தன்வயமாக்கிக் கொண்ட அன்பாகிய சிவமே என்றலும் உண்டு.

தன்னுளே பொங்கிய தண்அமு துணவே

என்னுளே பொங்கிய என்தனி அன்பே                                                                                  1494

உரை : தனது நிறைவுக்குள்ளே மேலெழுந்து தனது சிவ போகத்தை யான் நுகரும் பொருட்டு என்னுள்ளும் நிறைந்தோங்குவது எனது ஒப்பற்ற பரம்பொருளாகும் பரசிவம். எ.று.

நிறைவு குறைவின்றி ஒருதன்மைத்தாய் தண்ணிதாய் உள்ள தனது சிவபோகத்தை, சீவனாகிய யானும் உண்டு சிவபோகியாமாறு தனது பேரருளால் என்னுள்ளும் நிறைவிக்கிறது என்பது இங்கே கூறப்படும் கருத்தாம் என அறிக.

அருளொளி விளங்கிட ஆணவம் எனும்ஓர்

இருளற என்னுளத் தேற்றிய விளக்கே                                                                                  1496

உரை : சீவாத்மனாகிய யான் சிவபோக முண்டு தெளிவுருவினனாதற்கு என்னுள் அருளொளி விளங்கவும், என்னை மறைத்திருந்த ஆணவ விருள் நீங்கவும் என்னுள்ளக் கோயிலில் ஏற்றப்பட்ட ஒளி விளக்காகியது பரசிவம். எ.று.

ஏறுதற் கரிய மலை யுச்சியை யடைந்தவன் ஆங்கிருந்தே தான் ஏறிப் போந்த மலையின் நெறி நிலையைக் கண்டு வியப்பது போற் சிவ போகானுபவத்தைக் கண்ட வடலூர் வள்ளலார், தமக்குத் திருவருள் ஞான வொளி யுண்டாகவும், தம்மைப் பற்றி யிருந்த ஆணவ மலவிருள் நீங்கியதும் தாம் பெறும் சிவஞான போகானுபவம் எய்தியது என இதனால் உரைத்தருளுகின்றார். ஒளி விளக்கமும் இருணீக்கமும் உடனிகழ்ச்சிகள் என்றுணர்க.

துன்புறு தத்துவத் துரிசெலாம் நீக்கிநல்

இன்புற என்னுளத் தேற்றிய விளக்கே                                                                                  1498

உரை : சீவனாகிய நிலையில் நுகர்ந்த துன்பங்கட்குத் துணையாகிய தத்துவங்களின் தொடர்பால் உளதாகிய குற்ற மெல்லாம் போக்கி, தத்துவாதீதத்திற் பெறலாகும் சிவானந்தம் என்னுள்ளத்தே விளங்க நிறுவப் பெற்றது சிவஞானத் திருவுருவாகிய சிவம். எ.று.

மாயா காரியங்களாகிய தத்துவங்கள் முப்பத்தாறும் தாத்துவிகம் அறுபதும் உலகியல் துன்பங்களைக் காட்டி நுகர்வித்தமை பற்றி, “துன்புறு தத்துவத் துரிசு” என்று சொல்லுகின்றார். துரிசு - குற்றம். நல்லின்பம் - நல்லின்பு எனப்படுகிறது. நல்லின்பு - சிவஞானானந்தமாகிய திருவருட் பேரின்பம். அது பெருஞ் சோதியாய்ச் சிவமேயாய்த் திகழ்தலின், பரசிவத்தை “விளக்கே” என வியந்து கூறுகின்றார்.

மயலற அழியா வாழ்வுமேன் மேலும்

இயலுற என்னுளத் தேற்றிய விளக்கே                                                                                  1500

உரை : மலப்பிணிப்பாலும் தத்துவத் துரிசுகளாலும் உளதாகிய மயக்கம் கெடவும், நித்திய சிவபோக வாழ்வு மேன்மேலும் எனக்கு உண்டாகவும், என் அறிவின்கண் ஏற்றப்பட்ட “சூழொளி” விளக்காவது பரசிவம். எ.று.

மல முதலியவற்றின் தொடர்பால் மயலுற்றுச் சிவஞான போக முண்மை தெளியாது அழியும் நிலையற்ற வாழ்விற் கிடந்து தடுமாறியது தோன்ற, “மயலற” எனவும், “அழியா வாழ்வு மேன்மேலும் இயலுற” எனவும் இயம்புகின்றார்.

இடுவெளி அனைத்தும் இயல்ஒளி விளங்கிட

நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே                                         1502

உரை : தத்துவப் பிரதேசங்கட்கு இடையிடை யுளதாகும் ஆகாயங்களில் தனது அருளொளி விளங்குதற் பொருட்டு எல்லாவற்றிற்கும் நடுவே யுளதாகிய தத்துவாகாசத்தின் நடுநிலை விளக்காகத் திகழ்வது சிவசூரியன். எ.று.

தத்துவாகாசம் இந்திரிய மண்டலம், கரண மண்டலம், மிசிர மாயா மண்டலம், சுத்த தத்துவ மண்டலம் என்ற இவற்றின் இடையிடை யுளதாகும் இடைவெளி “இருவெளி” எனப்படுகிறது. திருமூலர் இதனை மாயப்பாழ் என்பர். இவ்வாறே மாயாதீதப் பெருவெளியை வியோமவெளி எனவும், அதன் உச்சிக் கண்ணது உபசாந்த வெளி யெனவும் கூறுவர். வியோம வெளியை வள்ளற் பெருமான், “நடுவெளி” எனக் குறிக்கின்றார். அதன் நடுவே நின்று திகழ்வது பரசிவ ஞான சூரியன். அங்கே யிருந்து கொண்டு மேலுள்ள உபசாந்தத்திலும், கீழுள்ள மாயா காரிய வெளியிலும் ஒளி செய்தலால், “நடுநிலை நடுவே நாட்டிய விளக்கே” என்று நவில்கின்றார்.

கருவெளி அனைத்தும் கதிரொளி விளங்கிட

உருவெளி நடுவே ஒளிதரு விளக்கே                                         1504

உரை : உருவப் பொருள்களின் நுண்ணிய கருத்தங்கும் வெளி முற்றும் தனது அருளொளி சென்று பரவுமாறு உருவப் பொருள் தோறும் அவற்றின் நடுநின்று ஒளி செய்வது சிவவொளி விளக்கு. எ.று.

கருவாகி யுருவாவது பொருளியல்பாதலால் கருத் தங்கும் வெளியிலும் தனது திருவருட் சீரொளி சென்று பரவுதல் வேண்டி உருவைத் தரும் பொருள் சூழ்ந்து கொள்வது விளங்க, “கதிரொளி விளங்கிட உருவெளி நடுவே ஒளிர் தரு விளக்கே” என விளம்புகின்றார். உருவு நல்கும் பொருளிடத்தே சிவவொளி நின்று திகழும் திருநிலை புலப்பட, “நடுவே” என மொழிகின்றார்.

தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட

ஏற்றிய ஞான இயல்ஒளி விளக்கே                                         1506

உரை : தெளிவுறுத்தும் வேதத்தின் உச்சிக்கண்ணிருந்து வைதிக ஞானவொளி பரவுதற் பொருட்டு விளக்கம் புரிவது சிவத்தின் இயலொளி விளக்கம். எ.று.

வேதம் பிரமாண நூலாதலால், “தேற்றிய வேதம்” என்று தெரிவிக்கின்றார். வேத ஞானம் - வைதிக ஞானம் எனப்படும். வேதாந்தமாகிய அதன் உச்சிக் கண்ணதாய் நின்று சிவஞான வொளியைப் பரப்புவது விளங்க, “ஏற்றிய ஞான இயலொளி விளக்கு” என இயம்புகின்றார். சாந்தோக்கிய உபநிடதம் முதலியவற்றால் இதன் உண்மை விளங்குவதால் அதனை, “இயலொளி” என இசைக்கின்றார்.

ஆகம முடிமேல் அருள்ஒளி விளங்கிட

வேகம தறவே விளங்கொளி விளக்கே                                                                                  1508

உரை : ஆகமாந்தத்தின் முடியாய்த் திகழும் திருவருள் ஞானவொளி ஆன்மாக்களின் பிறவி வேகம் கெடுமாறு விளங்கச் செய்விப்பது சிவத்தின்கண் ஒளிரும் பரசிவவொளி. எ.று.

சிவாகமங்களின் ஞானபாதம் திருவருள் ஞானத்தையே முடிந்த பொருளாக வுரைப்பதால், “ஆகம முடிமேல் அருளொளி” என அறிவிக்கின்றார். பிறப்பிறப்புக்களின் மிகுதியும் விரைவும் தோன்ற “வேகம்” எனக் கூறுகின்றார். “வேகம் கெடுத் தாண்ட வேந்தன் அடி வெல்க” எனச் சிவபுராணம் ஓதுவது காண்க.

ஆரியர் வழுத்திய அருள்நிலை அனாதி

காரியம் விளக்கும்ஓர் காரண விளக்கே                                                                                  1510

உரை : ஆரியர்கள் உபதேசித்தருளிய திருவருணிலை சிவத்துக்கு அனாதி நித்த நிலை எனவும், அதுதானும் ஆன்மாக்களின் ஞான வாழ்விற் கலந்து பயன் விளைவித்தற்குக் காரணமாகும் மூலஞானப் பொருள் எனவும் தெரிவிப்பதாம். எ.று.

ஆரியர் - ஆகம ஞான தேசிகர். சிவாகமங்களில் அவர்களால் திருவருட்கும் சிவத்துக்கும் உளதாகிய சம்பந்தம் அனாதி நித்த முத்த சம்பந்தம் என வற்புறுத்தப்படுவதால், “ஆரியர் வழுத்திய அருணிலை அனாதி” என வுரைக்கின்றார். பொருணிகழ்ச்சிகள் பலவற்றிற்கும் உரிய காரண காரியங்களை உணர்விப்பது திருவருள் ஞான வியல்பாதல் புலப்பட, “காரியம் விளக்குமோர் காரண விளக்கே” எனக் கூறுகின்றார்.

தண்ணிய அமுதே தந்தென துளத்தே

புண்ணியம் பலித்த பூரண மதியே                                                                                  1512

உரை : குளிர்ந்த திருவருள் ஞானவமுதத்தைத் தந்து என் மனத்தின்கண் சிவபுண்ணியம் விளைவித்தது நிறைமதியாகிய சிவஞானச் சந்திரன். எ.று.

பிறவிக்கேதுவாகிய உலகியல் வெம்மை நீங்குமாறு திருவருள் உணர்வும் ஒழுக்கமும் நிலவுவித்தமையின், “தண்ணிய வமுதே யளித்து” எனவும், அதனால் சிவபுண்ணியச் செயல்களே தங்கண் நிகழ்வித்தமையின், “உளத்தே புண்ணியம் பலித்த பூரண மதியே” எனவும் புகல்கின்றார். பலித்தல் - பயன் விளைவித்தல். பூரண மதி - குறைவற நிறைந்த சிவமாகிய சந்திரன். அருளமுதம் தண்ணிதாகலின், அதனைத் தரும் சிவபரஞ்சுடரை, “பூரண மதியே” எனச் சிறப்பிக்கின்றார்.

உயர்தர அமுதம் உதவிஎன் உளத்தே

செய்தவம் பலித்த திருவளர் மதியே                                         1514

உரை : உய்வுபெறுமாறு திருவருள் ஞானமாகிய அமுதத்தை என் உணர்வின்கண் நிலவுவித்து யான் செய்யும் தவம் பயன் விளைவிக்குமாறு அருளுவது சிவஞானச் செல்வம் பெருக்கும் சிவமாகிய சந்திரன். எ.று.

உயிர்கள் உய்திபெற உதவுதலால் திருவருள் ஞானாமுதத்தை, “உயர் தர வமுதம்” என வுரைக்கின்றார். தயாமூலதன்மம் புரிதல் வள்ளற் பெருமானது அருட் செயலாதல் விளங்க, “செய்தவம் பலித்த மதியே” என விளம்புகின்றார். திரு - சிவஞானச் செல்வம்.

பதிஎலாம் தழைக்கப் பரம்பெறும் அமுத

நிதிஎலாம் அளித்த நிறைதிரு மதியே                                                                                  1516

உரை : உலகமுற்றும் பரிபாலிக்கும் உலோக பாலர் உறையும் உயர் பதங்கள் யாவும் வளம் பெறுமாறு அவர்கட்கு ஞானமும் செல்வமும் அளித்தருளுவது திருவெலாம் நிறைந்த சிவமாகிய சந்திரன். எ.று.

உலகபாலர் - எட்டுத் திக்குகளிலும் இருந்து உலகத்தைக் காக்கும் இந்திரன், வருணன், நிருதி முதலிய தலைவர்கள். அவர்கள் இருக்கும் திக்குகள் எட்டும் பதங்களாகும். பதங்களையுடையவர் பதிகள். அவர்களும் அவர்களுடைய பதங்களும் வளம் பெற்றாலன்றி உலகுக்கு வாழ்வின்மையின், வாழ்வுக்குரிய நலங்களை, “அமுத நிதியம்” எனக் குறிக்கின்றார்.

பால்எனத் தண்கதிர் பரப்பிஎஞ் ஞான்றும்

மேல்வெளி விளங்க விளங்கிய மதியே                                                                                  1518

உரை : பால் போன்ற குளிர்ந்த நிலவொளியை எங்கும் பொழிந்து எக்காலத்தும் மேன் மேலாக வுயர்ந்துள்ள அண்டங்களில் ஒளி நிலவச் செய்வது சிவமாகிய மதியம். எ.று.

சந்திரனது ஒளி வெண்ணிறத்ததாதலால் அதன் ஒளிக் கதிர்களைப் “பால் எனத் தண்கதிர் பரப்பி” எனக் கூறுகின்றார். ஒளி மண்டலங்கள் எல்லாவற்றிற்கும் மேலாயது சந்திர மண்டலம் என்று புராணங்கள் உரைப்பது பற்றி, “மேல் வெளி விளங்க” என விளம்புகின்றார்.

உயங்கிய உள்ளமும் உயிருந் தழைத்திட

வயங்கிய கருணை மழைபொழி மழையே                                         1520

உரை : உலகியல் துன்பங்களால் வருந்திய உள்ளங்களும் உயிர் வகைகளும் வருத்தம் நீங்கி வளமுற்று ஓங்குமாறு ஒளி விளங்குகின்ற தனது கருணையாகிய மழையைப் பெய்து உதவுவது மழை வடிவாகத் திகழும் சிவ பரம்பொருள். எ.று.

உயங்குதல் - வருந்துதல். உள்ளம் - ஈண்டு உடம்போடு தொடர்புற்று உணர்வுக்கூடாய் நிற்கும் மனம். மழையில்லையாயின் உடம்பு நில்லாமையின், உயிர்தானும் நிற்றற் கிடமின்றி யொழிவது பற்றி, “உள்ளமும் உயிரும் தழைத்திட” என்றும், சிவத்தின் திருவருள் கூடாதாயின், யாவும் பாழ்படுவது பற்றி, அது எங்கும் எப்பொருளிலும் தோய்ந்து ஒளியுறுவித்தல் இனிது விளங்க, “வயங்கிய கருணை மழை” என்றும் இயம்புகின்றார். ஈண்டுச் சிவத்தை “மழையே” என்றது போல மாணிக்கவாசகர், மழையைச் சிவசத்தியாக நிறுத்தி, “முன்னியவ ணமக்கு முன் சுரக்கும் இன்னருளே யென்னப் பொழியாய் மழையே லோரெம்பாவாய்” எனப் புகழ்வது காண்க.

என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப

மன்னிய கருணை மழைபொழி மழையே                                         1522

உரை : எளியவனாகிய என்னை ஆளாகக் கொண்டு என்னுடைய உள்ளத்துள் நிறைந்து தன்னிடத்து நிலைபெற்ற தனது கருணையை மழைபோற் பெய்தருளுவது மேகம் போன்ற சிவ பரம்பொருள். எ.று.

பணி கொள்வது - பணித்தது செய்யும் ஏவலாளாய்க் கொள்வது; இதனை ஆட்கொள்ளுதல் என்றும் கூறுவர். தனது கருணையாகிய மழையைப் பெய்து நிறைவித்தருளி மேன்மேலும் பொழிந்தவண்ணம் இருக்கிறது பரசிவம் என்பது கருத்து.

உளங்கொளும் எனக்கே உவகைமேற் பொங்கி

வளங்கொளக் கருணை மழைபொழி மழையே                                         1524

உரை : தான் பொழிந்தருளும் கருணையை உள்ளத்தில் நிறைவித்துத் தேக்கி அதனால் மகிழ்ச்சி மேலிட என் ஆன்ம சிற்சத்தியும் வளம் படுமாறு தனது திருவருளைப் பொழிந்தருளுவது அருண் மழை போன்ற பரசிவம் எ.று.

இறைவனது திருவருளைப் புறம்பே வீண்போக விடாது தேக்கிக் கொள்ளும் தமது திறம் இனிது விளங்க, “உளங் கொளும் எனக்கு” என வுரைக்கின்றார். உவகை - மகிழ்ச்சி. திருவருள் ஞானப் பேற்றால் உண்டாகும் இன்பம் எனினும் அமையும். திருவருளால் வளம்படுவது ஆன்மாவின் சிற்சத்தி என்பது அறிஞர் நன்கறிந்ததாகலின், அதனை எடுத்து மொழியாமல், “வளம் கொள” என உய்த்துணர வுரைக்கின்றார்.

நலந்தர உடல்உயிர் நல்அறி வெனக்கே

மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே                                         1526

உரை : என்னுடைய உடம்பும் உணர்வும் எனக்கு நலம் பயக்குமாறு எனது சிற்சத்தி என்னிடத்தே விரிந்து விளங்குவதற்குத் தனது பெருங் கருணையை மழைபோற் பொழிவது பரசிவம். எ.று.

அனாதியே பற்றியிருக்கும் மலப்பிணிப்பைப் போக்குதற்கு வந்த உடம்பும் உணர்வும் பிறப்பிறப்புக்கட்கே பயன்படுதலின்றி மலத் தொடர்பு அறுத்தற்கு உதவுவதை, “நலம் தர” என வுரைக்கின்றார். உயிர் - ஈண்டு உடலூழாய்க் கழியும் உணர்வு குறித்து நிற்கிறது. நல்லறிவு - ஆன்ம சிற்சத்தி.

தூய்மையால் எனது துரிசெலாம் நீக்கிநல்

வாய்மையால் கருணை மழைபொழி மழையே                                         1528

உரை : அகம் தூய்மையால் என்னுடைய மலமாசினைப் போக்கித் தன்னுடைய நல்லருளால் தனது கருணையை மழை போற் பெய்தருளுவது பரசிவம். எ.று.

அறநினைவும், அறவுரையும், அறச் செயலும் உண்டாக்குவது அகத் தூய்மை. அதனால் மலமாசுக் கழுவப்படுவது பற்றித் “துரிசெலாம் நீக்கி” என்று கூறுகின்றார். “புறந் தூய்மை நீரான் அமையும் அகம் தூய்மை வாய்மையாற் காணப்படும்” ( குறள் ) என்பது தமிழ் மறை. வாய்மை - திருவருள் மேற்று.

வெம்மல இரவது விடிதரு ணந்தனில்

செம்மையில் உதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே                                         1530

உரை : வெவ்விய மலவிருள் புலரும் சமயத்தில் சிவஞான சத்தியைப் பதிவித்து ஞானவொளியைப் பரப்பி யருளுவது சிவந்த சிவ சூரியன். எ.று.

பிறப்பிறப்புக்களால் ஆன்மாக்களுக்குக் கொடுமை செய்தலால் “வெம்மலம்” என்றும், ஆன்ம சிற்சத்தியை மயக்கி அஞ்ஞான இருளில் ஆழ்வித்தலால் “வெம்மல இரவு” என்றும் கூறுகின்றார். மலத்தின் இருள் செய்யும் சத்தி கெடும் தருணத்தை “விடி தருணம்” என விளம்புகின்றார். இதனை “மலபரிபாகம்” எனவும், சிவசத்தி பதிவதனைச் “சத்தினி பாதம்” எனவும் சிவாகமங்கள் கூறுகின்றன. இக்குறிப்பு விளங்க ஈண்டுச் “சிவசூரியோதயம்” என்று வள்ளற் பெருமான் உரைத்தருளுகின்றார்.

திரைஎலாம் தவிர்த்துச் செவ்விஉற் றாங்கே

வரைஎலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே                                         1532

உரை : இடும்பையும் இன்பமுமாகிய திரைகளைப் போக்கி ஞானப் பக்குவம் எய்துவித்துச் சிவயோகப் படி முறைகளை இனிதுணர்விப்பது பரம்பொருளாகிய சிவசூரியன். எ.று.

உலகியல் துன்பங்களும் இன்பங்களும் நீர்த் தரங்கம்போல் மாறி மாறி வந்து அனுபவம் பெறுதற்கு ஆன்ம அறிவை மறைப்பனவாதலால், அவற்றைத் “திரை” என்று குறிக்கின்றார். திரை - ஆகுபெயர். செவ்வி - சிவப் பேற்றுக்குரிய பக்குவம். பக்குவ நெறிகளைத் தசகாரியம் என்று சித்தாந்த நூல்கள் கூறுகின்றன. அவை தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் எனப்படும். சிவஞானிகளால் வரையறுக்கப்பட்டு ஞான வேட்கை யுடையார்க்கு உபதேசிக்கப்படுவது பற்றி இவற்றை வரை எனக் கூறுகின்றார். இப்பத்தையும் அறிந்து அனுபவ வாயிலாகக் கைவரப் பெறுவது குன்றேறி யானைப் போர் காண்பது போலும் அருமை யுடைய தாகலின், “வரையெலாம் விளங்க” என மொழிகின்றார். உதயகிரியிற் றோன்றும் சூரியன், உலகிலுள்ள மலைகளையும் கடல்களையும் விளங்கிக் காட்டுவது போறலின், சிவஞானப் பரம்பொருளைச் “செஞ்சுடர்” எனத் தெரிவிக்கின்றார். வயங்குதல் - விளங்குதல். வரை மலையுமாம்.

அலகிலாத் தலைவர்கள் அரசுசெய் தத்துவ

உலகெலாம் விளங்க ஓங்குசெஞ் சுடரே.                                         1534

உரை : அளவில்லாத தலைவர்கள் இருந்து ஆட்சி செய்கின்ற தத்துவ வுலகங்கள் பலவும் தனது அருளொளி பரவ விளங்குவது உயர்ந்தோங்குகின்ற பரசிவம். எ.று.

நிலம் முதலிய தத்துவங்களில் தத்துவேசுரர்கள் இருந்து இவ்வத் தத்துவங்களை இனிது இயக்குகின்றார்களெனச் சிவாகமங்கள் அத்துவாப் பகுதிகளை விளக்குமிடத்து விரியக் கூறுதலால் அவர்களை, “அலகிலாத் தலைவர்கள்” என்று குறிக்கின்றார். தலைவர்களும், அவர்கள் ஆட்சி புரியும் தத்துவங்களும் பரசிவத்தின் அருளாலன்றி ஒன்றும் செய்ய மாட்டாமை பற்றி, “அரசு செய் தத்துவ வுலகெலாம் விளங்க” என வுரைக்கின்றார். மந்திரேசுரர், வித்தியேசுரர், அனந்தர் எனப் பலர் உண்மையின், அவர்கள் இருந்தியக்கும் தத்துவங்களைத் “தத்துவ வுலகெலாம்” எனப் பொது வகையாற் கூறுகின்றார்.

முன்னுறு மலஇருள் முழுவதும் நீக்கியே

என்னுள வரைமேல் எழுந்தசெஞ் சுடரே                                         1536

உரை : நினைக்கப்படுகின்ற மலவிருளை முற்றவும் போக்கித் தனது ஞான வொளியில் திகழ்விப்பதற்கு என் உள்ளமாகிய மலைமேல் எழுந்தருள்வது பரசிவமாகிய சூரியன். எ.று.

முன்னுதல் - நினைத்தல். ஆணவம், மாயை, கன்மம் என்ற மலங்களால் ஆன்ம வறிவு மறைக்கப்படுதலால், அவற்றின் மறைப்பை, “மலவிருள்” என்று குறிக்கின்றார். உள்ளத்தில் ஞானவொளி பரவினாலன்றி அறியாமையாகிய இருள் போகாதென்பது பற்றி, “என்னுள வரை மேல் எழுந்த செஞ்சுடரே” எனப் புகழ்கின்றார். உலகியலில் இருள் நீக்கமும் ஒளி விளக்கமும் உடனிகழ்ச்சியாவது போலவன்றி மலவிருள் நீக்கத்தின் பின் ஞானவொளி பரவுகிற தென்பாராய், “முன்னுறு மலவிருள் நீக்கியே உளவரை மேல் எழுந்த செஞ்சுடரே” என்று உரைக்கின்றார்.

ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த

சோதியாய் என்உளம் சூழ்ந்தமெய்ச் சுடரே                                         1538

உரை : உள்ளமாகிய மலைமேல் தோன்றும் சிவஞான சூரியன் ஆதியும் அந்தமும் நடுவுமில்லாத ஒளிப் பொருளாய் என் மனவெல்லை முழுதும் ஒளிர்கின்றது. எ.று.

ஆன்ம ஞான வுள்ளத்தின்கண் காட்சிப்படும் பரசிவம் ஒளிப்பொருள் எனவும், அதன் ஒளிக்குத் தோற்றமோ, இடைநிலையோ முடிவோ இல்லை எனவும் இதனால் வள்ளற் பெருமான் எடுத்துரைக்கின்றார்.

உள்ஒளி ஓங்கிட உயிர்ஒளி விளங்கிட

வௌ¢ஒளி காட்டிய மெய்அருட் கனலே                                         1540

உரை : உயிர்க்குயிராகிய அருளொளி ஓங்கவும், ஆன்ம வொளி விளக்கமுறவும், இரண்டினையும் காட்டியருள்வதாகிய சிவத்தின் மெய்ம்மையொளி அருட்கனலாய்த் திகழ்கிறது. எ.று.

உயிரின் அறிவுக்கறிவாய் நிலவுவது சிவத்தின் திருவருள் ஒளி; அதனைத் தனக்குட் கொண்டு ஒளிர்வது ஆன்மாவின் அறிவொளி. இரண்டன் இயல்பினைக் கண்டாலன்றிச் சிவத்தின் மெய்ம்மை ஞான வொளி கைவராது; இவ்வுண்மை புலப்பட, “உள்ளொளி ஓங்கிட உயிரொளி விளங்கிட மெய்யொளி காட்டிய சிவமே” எனத் தெரிவிக்கின்றார். சிவத்தின் திருவருள் மிகவும் தண்ணியதாகவும். அது உள்ளொளியையும் உயிரின் அறிவொளியையும் மறைக்கும் இருளைப் போக்குவதுபற்றித் திருவருளைக் “கனல்” என்று கூறுகிறார். கனல் - ஒளியுடைய நெருப்பு. தனது ஒளியால் இருளை நீக்குவதால், அருளைக் “கனலே” என்று குறிக்கின்றார். சுடும் சத்தியும் அடும் சத்தியுமுடைய ஒருங்குடைய அனலன்று எனத் தெளிவித்தற்கு, “அருட் கனல்” என விளக்குகின்றார்.

நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை

வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே                                         1542

உரை : சிவஞானப் பேறு வேண்டிச் செய்யப்படும் ஞான வேள்வியின்கண் வலமாகச் சுழித்து ஓங்குவதாகிய மெய்ம்மை ஞானத் தீயாவது பரசிவம். எ.று.

நலம் - சிவயோக போகம். ஞான நூல்களை யோதுதல், ஓதுவித்தல், நற்பொருளைக் கேட்பித்தல், கேட்டல், ஞான நூற்பொருளைச் சிந்தித்தல் என்ற ஐந்தும் ஞான பூசை யெனவும், ஞான வேள்வி யெனவும் வழங்கும். வேள்வி என்றதற்கேற்ப ஞான நூற் பயிற்சியை ஓமத் தீ வளர்த்தலாக உருவகம் செய்கின்றார். ஓமத் தீயை வளர்ப்போர் சமிதைகளை யடுக்கி நெய்யைப் பெய்து தீயானது ஓங்கியெழச் செய்வர். அத் தீ வலமாகச் சுழித் தெழுமாயின் வேள்வி நற்பயன் விளைக்குமென்பது பற்றி, “ஞான யாகத்திடை வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்த மெய்க்கனலே” என விளம்புகின்றார். உருவாய்க் காட்சிதரும் தீ “மெய்க்கனல்” எனப்படுகிறது.

வேதமும் ஆகம விரிவும் பரம்பர

நாதமும் கடந்த ஞானமெய்க் கனலே                                         1544

உரை : வைதிக ஞான வெல்லைக்கும் ஆகமங்கள் உரைக்கும் சித்தாந்த எல்லைக்கும் மேல் உள்ளதாகிய பரநாத எல்லைக்கு அப்பால் உயர்ந்த ஞான வுருவாவது மெய்ம்மைக் கனல் வடிவான சிவம். எ.று.

வேத ஞான விரிவு - வேதாந்த ஞான எல்லை. ஆகம விரிவு - சித்தாந்த ஞான விரிவு. பரம் - மேலாய எல்லை. இவ்வெல்லைகள் காட்டும் நாத தத்துவம், சுத்த மாயா மண்டலத்தின் மத்தகத்தில் ஒளிர்வது. மாயா மண்டலத்துக்கும் மேன்மேலாகவுள்ளது பரநாத தத்துவம். அதனையும் கடந்து நோக்கும் தத்துவ ஞானக் காட்சி யுடையவர்க்குச் சிவானந்த ஞான வுருவாய்க் காட்சிப்படுதல் பற்றிச் சிவத்தை, “ஞான மெய்க்கனலே” என்று நவில்கின்றார்.

எண்ணிய எண்ணிய எல்லாந் தரஎனுள்

நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே                                         1546

உரை : ஞான யோகியர்களால் எண்ணப்பட்ட பேறுகள் எல்லாவற்றையும் எனக்கு எய்துவித்தற் பொருட்டு என்னுடைய மனக் கோயிலுக்குள் எழுந்தருளுவது சிவபுண்ணிய மயமான ஞானத்தின் திருவுருவாகிய மெய்ம்மைக் கனலாகும் பரசிவம். எ.று.

எண்ணிய - ஞான யோகியர்களால் எண்ணித் துணியப்பட்ட சிவப் பேறுகள். எண்ணிய எல்லாம் என்றது, எண்ணப்பட்டனவும், படுவனவும் ஆகிய சிவயோகப் பேறுகளும் சிவபோகங்களுமாகிய வற்றை எனக் கொள்க. என் உள் - எனது மனமாகிய திருக்கோயில். மனமாகிய கோயிற்குள் எழுந்தருளுவதால் யான் பெறலாகும் பேறுகள் இவையென விளக்குதற்கு, “எண்ணிய எண்ணிய வெல்லாம்” என்று இயம்புகின்றார். சிவபுண்ணியப் பயன்களில் சிவயோக போகங்களும் அடங்குதலின், “நண்ணிய புண்ணிய ஞானம்” என மொழிகின்றார்.

வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு

நலம்எலாம் அளித்த ஞானமெய்க் கனலே                                         1548

உரை : வெற்றி மிக்க சுத்த சன்மார்க்க நிலையினாற் பெறலாகும் நலங்கள் அனைத்தையும் தந்தருள்வது ஞான மெய்யுருவாகிய கனல் வடிவு கொண்ட பரசிவம். எ.று.

வலம் - வெற்றி. ஏனை நன்மார்க்கங்கள் பலவற்றினும் மேன்மை யுடையதாகலின், சன்மார்க்கத்தை, “வலம் உறு சுத்த சன்மார்க்க நிலை” என வுரைக்கின்றார். உறுதல் - மிகுதல். சுத்த சன்மார்க்க நிலை - சுத்த சன்மார்க்க நெறியால் விளையும் அருள்நிலை. சுத்த சன்மார்க்கப் பேரருட் செல்வர்கள் பெறலாகாத நலங்கள் எங்கும் எக்காலத்தும் இல்லையாதலால், “நலமெலாம்” எனப் பொதுப்படப் புகல்கின்றார்.

இரவொடு பகலிலா இயல்பொது நடமிடு

பரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே                                                                                  1550

உரை : இரவு பகல் என்ற கால தத்துவத்தைக் கடந்த சாந்த ஞான வியல்புடைய ஞான சபையில் திருநடம் புரிவது உயர்ந்த வைதிக ஞானாந்தத்தில் விளங்குவதாகிய மிகமிக மேலதான சிவச் சுடர். எ.று.

இரவு பகல் என்ற காலக் கூறுகள் மாயா காரியமான கால தத்துவத்து உரியனவாம்; சிவம் காலாதீதமாதலால், “இரவொடு பகல் இலாப் பொது” என்றும், சாந்தியும் சாந்தமுமே ஞானாகாசச் சிற்சபைக் கியல்பாதலால், “இயல் பொது” என்றும், ஆங்கே பரசிவம் சாந்த ஞான மூர்த்தியாய்த் திருக்கூத்தாடுகின்றான் என்பது பற்றி, “பொது நடம் இடு பரஞ்சுடர்” என்றும் இயம்புகின்றார். உலகியல் வாழ்க்கை நலம் கருதிய வேதோபநிடதப் பொருள்களை நோக்காது சிவபோகப் பேறொன்றையே நோக்கும் வேத நெறி ஈண்டுப் “பரம வேதாந்தம்” எனப்படுகிறது. அந்த வேத ஞானக் காட்சி யுடைய சான்றோர் காணும் அருட் சிவச் சுடர்ப் பொருள் “பரம்பரஞ் சுடர்” எனக் குறிக்கப்படுகிறது. “அண்டமா ரிருளுடு கடந்தும்பர் உண்டு போலுமோர் ஒண்சுடர் அச்சுடர் கண்டிங் காரறிவார்” எனவும், “பரஞ்சுடர்ச் சோதியுட் சோதியாய் நின்ற சோதி” எனவும் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க.

வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி

பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே                                                                                  1552

உரை : மேன்மை யாவும் நிறைந்த அம்பலத்தின்கண் திருக்கூத்தாடும் பரம சித்தாந்தங்கள் ஓதுகின்ற பதிப் பொருளாவது பரஞ்சுடராகிய சிவம். எ.று.

வரம் - மேன்மை. பொது - சிவபிரான் திருக்கூத்தாடும் ஞான சபை. ஆன்மாக்கள் சிவப் பேறு பெறுதற்குரிய ஞானச் செல்வம் பெருக அருளும் திருக்கூத் தென்றற்கு, “வளர் திருநடம்” எனச் சிறப்பிக்கின்றார். சித்தாந்தம் - சிவாகமம். “வேதசாரம் இதம் தந்த்ரம் சித்தாந்தம் பரமம் சுபம்” என்று பெரியோர் கூறுவது காண்க. உபாகமங்களே யன்றி மூலாகமங்களும் பதிப் பொருள் சிவம் என்பதால், “பரம சித்தாந்தப் பதி” என்று பகர்கின்றார். “துஞ்சு நாள் துறந்து தோற்றமு மில்லாச் சுடர் விடு சோதி எம்பெருமான்” ( பாம்புரம் ) என ஞானசம்பந்தர் முதலியோர் குறித்தலின், “பரஞ்சுடர்” என்று வள்ளற் பெருமான் பாராட்டுகின்றார்.

சமரச சத்தியச் சபையில் நடம்புரி

சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே                                                                                  1554

உரை : எப்பொருட்கும் பொதுவாகிய உண்மை யம்பலத்தில் திருக்கூத்தாடுகிற வேதாந்த சித்தாந்தங்களைச் சமரசமாகப் போற்றும் சத்தியப் பொருளாவது சுயஞ்சுடராகிய பரசிவம். எ.று.

வள்ளலார் காலத்தில் நாட்டில் வேதாந்திகளும் சித்தாந்திகளும் தம்முட் போரிட்டுக் கலகம் விளைக்கவும் தில்லையம்பலப் பெருஞ் சிறப்பு இருதிறத்தாரையும் சமரச நிலையில் நிறுத்திப் பேணினமை பற்றிச் “சமரச சத்திய சபை” என்று கூறுகின்றார். பிரமப் பொருளும் சிவ பரம்பொருளும் வேறு வேறன்று; சமநிலை நித்தப் பொருளாம் தனிச் சுயஞ்சுடர் என்பது விளங்க, “சமரச சத்திய தற்சுயஞ்சுடர்” என்று சாற்றுகின்றார். பதிப் பொருளை வேதாந்திகள் பிரமம் எனவும், சித்தாந்திகள் சிவ பரம்பொருள் எனவும் பேசினர் என அறிக. “வேதாந்த நிலையோடு சித்தாந்த நிலையும் மேவும் பொது நடம் நான் காணல் வேண்டும்” என வள்ளற் பெருமான் பிறிதோரிடத்தில் பாடுவது காண்க.

சபைஎன துளம்எனத் தான்அமர்ந் தெனக்கே

அபயம் அளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி                                         1556

உரை : எளியனாகிய என்னுடைய மனத்தையே திருச்சிற்றம்பலமெனத் திருவுளம் கொண்டு எனக்கு அபயம் தந்து ஆள்வது திருவருள் ஞான வுருவாகிய பெரிய சோதியாகிய சிவம். எ.று.

சபை - சிவ பரம்பொருள் கூத்தப் பெருமானாய் நின்றாடும் திருச்சிற்றம்பலம். தான் ஆடற் கமைந்த சபையாக என்னுடைய மனத்தைக் கருதிக் கொண்டு எழுந்தருளுவதுடன் பிறப்புத் துன்பங்கட்கு அஞ்சுதல் ஒழிக எனத் தேறுதல் செய்தருளினான்; யான் பிறப்பிறப்புக்கட்கு அஞ்சேன் என்பாராய், “எனக்கு அபயம் அளித்தது” என்று கூறுகின்றார்.

மருள்எலாம் தவிர்த்து வரம்எலாம் கொடுத்தே

அருள்அமு தருத்திய அருட்பெருஞ் ஜோதி                                         1558

உரை : மயக்க வுணர்வுகளைப் போக்கி மேலாய தெளிவுணர்வுகளை நல்கித் திருவருள் ஞானமாகிய அமுதத்தை எனக்கு வழங்கிய திருவருட் பெருஞ் சோதியாகிய சிவம். எ.று.

மலமாயை கன்மங்களால் உண்டாவன மயக்க வுணர்வுகளாதலால், மலமறைப் பொழிந்தமை விளங்க, “மருளெலாம் தவிர்த்து” என வுரைக்கின்றார். மலங்கள் பலவாதலின், மருளுணர்வும் பலவாதல் பற்றி, “மருளெலாம்” எனக் குறிக்கின்றார். வரம் - ஞானப் பேற்றுக்குரிய நல்லுணர்வுகளே அறிவின்கண் நிலவுவித்தமை புலப்பட, “வரமெலாம் கொடுத்து” என்றும், அவற்றால் திருவருள் ஞானம் கைவரப் பெற்றமையின், “அருளமு தருத்திய அருட் பெருஞ் சோதி” என்றும் அறிவிக்கின்றார்.

வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்

ஆழிஒன் றளித்த அருட்பெருஞ் ஜோதி                                         1560

உரை : பிறவிக் கடலுக்குக் கரை யொன்று காட்டியது போலத் திருவருள் ஞானத்தை நல்கி யருளிய அருட் பெருஞ் சோதி யாண்டவனே, நின்னுடைய பேரருள் வாழ்க; நின்னுடைய பெரும் புகழ் வாழ்க. எ.று.

ஆழி - கரை. “பெருங் கடற்கு ஆழி யணையன்” ( புறம். 330 ) எனச் சான்றோர் கூறுவது காண்க. பிறவிக் கடற்குக் கரை வேண்டுமென வேண்டும் அடியார்கட்குத் திருவருள் ஞானம் கரை காட்டுவது என்றற்கு, “ஆழி யொன்றளித்த அருட் பெருஞ் சோதி” என மொழிகின்றார். ஊழியந்தத்தில் ஒலி கடல் ஓட்டந்து உலகங்களவை மூட, ஆழி எந்தை யென்றமரர்கள் சரண் புக அந்தரத் துயர்ந்தார்” ( சிரபுரம் ) எனத் திருஞானசம்பந்தர் இப்பொருண்மைக்கு ஏற்ப உரைத்தருளுவது காண்க. இறைவனது தயாமூலமாகிய அருளுக்கு எல்லை யின்மையின், “பேரருள்” என்றும், இறைவன் புகழ் பெரும் பொருட் புகழாதலால், “பெருஞ்சீர்” என்றும் போற்றுகின்றார்.

என்னையும் பொருள்என எண்ணிஎன் உளத்தே

அன்னையும் அப்பனும் ஆகிவீற் றிருந்து

உலகியல் சிறிதும் உளம்பிடி யாவகை

அலகில்பேர் அருளால் அறிவது விளக்கிச்

சிறுநெறி செல்லாத் திறன்அளித் தழியா

துறுநெறி உணர்ச்சிதந் தொளிஉறப் புரிந்து

சாகாக் கல்வியின் தரம்எலாம் உணர்த்திச்

சாகா வரத்தையும் தந்துமேன் மேலும்

அன்பையும் விளைவித் தருட்பேர் ஒளியால்

இன்பையும் நிறைவித் தென்னையும் நின்னையும்

ஓர்உரு ஆக்கியான் உன்னிய படிஎலாம்

சீர்உறச் செய்துயிர்த் திறம்பெற அழியா

அருளமு தளித்தனை அருள்நிலை ஏற்றினை

அருள்அறி வளித்தனை அருட்பெருஞ் ஜோதி                                         1574

உரை : அருட் சோதிப் பெருந் தெய்வமாகிய சிவமே! எளியவனாகிய என்னையும் சிவப்பேற்றுக்கு உரியவனாகத் திருவுளம் கொண்டு, என் மனத்தின்கண் எனக்குத் தாயும் தந்தையுமாய் எழுந்தருளி உலகியல் ஆசைகள் சிறிதும் என்னுள் இடம் பெறாதவாறு அளவில்லாத நினது பேரருளால் என்னுடைய சிற்றறிவை விளக்க முறவித்துத் தீது பயக்கும் சிறுமை பொருந்திய நெறிகளில் செல்லாத கூறுபாட்டினை எனக்குத் தந்து அழிவில்லாத பெருநெறியே பற்றி யொழுகும் உணர்வை யளித்து ஞான விளக்கம் சிறப்புற வுண்டாகுமாறு அருள் செய்து, சாகாக் கல்வியின் நலங்கள் அனைத்தையும் எனக்கு உணர்த்திச் சாவாமைக் கேதுவாகிய வரத்தையும் கொடுத்தருளி, மேன்மேலும் நின்பால் அன்பு தோற்றுவித்து நினது திருவருள் ஞானப் பேரொளியால் உளதாகும் ஆனந்தம் என்னுள் நிறையச் செய்து, சீவான்மாவாகிய என்னையும் நின்னுடைய சிவமாம் தன்மை யுடைய தாக்கி யான் கருதியவாறே எல்லாம் சிறப்புறச் செய்து உயிர்க்கு வேண்டிய உறுதிகளை எய்திப் பொன்றாத திருவருள் ஞானமாகிய அமிழ்தத்தை எனக்கு வழங்கி யருளினாய்; திருவருள் ஞான பீடத்தில் என்னை ஏற்றி இருக்கச் செய்தாய்; திருவருள் ஞான முழுதும் தந்தருளினாய்; இதற்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.

நோயுற்ற வுடம்பும் நுண்ணிய அறிவும் தருதலின், “உளத்தே அன்னையும் அப்பனுமாகி வீற்றிருந்து” என்றும், திருவருள் ஞானப் பேற்றுக்குத் தடையாதலால், “உலகியல் சிறிதும் உளம் பிடியா வகை” என்றும் கூறுகின்றார். பிடித்தல் - பற்றுதல். அலகு - அளவு. அளப்பருந் தன்மைத்தாதலால், “அலகில் பேரருள்” எனப் புகழ்கின்றார். உயிரறிவின் சிறுமை நீங்கினாலன்றிச் சிறுநெறியை நாடாத பெருமை யுண்டாகாதென்பது பற்றி, “அறிவது விளக்கிச் செறுநெறி செல்லாத் திறனளித்து” எனவுரைக்கின்றார். உறுநெறி - பெருநெறியாகிய திருவருள் ஞான நெறி. இந்நெறிக்குரிய உணர்வு தெளிவுற்று விளக்கமும் உறுதியும் பெறுவதாகலின், “உறுநெறி உணர்ச்சி தந்து ஒளியுறப் புரிந்து” என இயம்புகின்றார். சாகாக் கல்வி - பிறப்பிறப்புக்கட் கேதுவாகும் உணர்வுகளைத் தரும் அறிவை விலக்கித் திருவருள் ஞான வின்பத்தில் நிலைபெற அழுந்தி நிற்பிக்கும் கல்வி. உயிரைத் தாங்கி நிற்கும் ஆற்றல் உடலுக்குக் குன்றும்போது சாவு நிகழ்தலின், அவ்வாற்றல் குன்றா வகைத் திருவருள் வரம் தந்துளது என்பாராய், “சாகாக் கல்வியின் தரமெலாம் உணர்த்திச் சாகாவரத்தையும் தந்து” என்றும், திருவருள் ஞானப் பேற்றுக்கு இன்றியமையாமை விளங்க, “மேன்மேலும் அன்பையும் விளைவித்து” என்றும், “இன்பையும் நிறைவித்து” என்றும் இசைக்கின்றார். திருவருட் பேரொளி இன்பம் நிறைவித்தற்கு ஏதுவென வுணர்க. ஞானவின்ப அன்பு நிலை சிவமாம் தன்மையையுண்டாக்குதலால், “என்னையும் நின்னையும் ஓருருவாக்கி” என்றும், அந்நிலையில் உயிர் உறுதிப்பேற்றை எய்துவது தோன்ற, “உயிர்த் திறம் பெற” என்றும் இசைக்கின்றார். இதனைத் திருஞான சம்பந்தர், “திகழ்ந்த மெய்ப் பரம்பொருள் சேர்வார் தாமே தானாகச் செயுமவன்” ( கழுமலம் ) எனக் குறித்துரைப்பது காண்க. திருவருள் ஞானத்தை, “அழியா அருளமுது” எனவும், “அருணிலை” எனவும், பாராட்டித் திருவருட்சோதி ஞானப் பேற்றின் திறங்களை விளக்குகின்றார். அருளறிவின் முடிபயன், “அருள் நிலை” எனத் தெளிதல் வேண்டும்.

வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்

அல்கல்இன் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி                                         1576

உரை : குறைவற நிறைந்தோங்குகின்ற அருள் ஞானப் பெருஞ் சோதிப் பரசிவமே! நினது பேரருள் எல்லா வெற்றியும் பெறுக; நினது பெரும் புகழே வென்றோங்குக. எ.று.

வெல்க என்பதற்குச் சிறப்புறுக எனப் பொருள் கூறுவதுண்டு. “வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க” ( சிவபு ) என்பதற்கு மறைமலையடிகளார் உரைப்பது காண்க. திருவருளின் ஆற்றலுக்கும் புகழ்க்கும் எதிர் நின்று தடையாக யாதும் இன்மை தோன்ற, “வெல்க” என்கின்றார் எனக் கொள்க. அல்கல் - சுருங்குதல்; குறைதலுமாம்.

உலகுயிர்த் திரள்எலாம் ஒளிநெறி பெற்றிட

இலகும்ஐந் தொழிலையும் யான்செயத் தந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி                                         1580

உரை : வரம்பிலாற்ற லுடைமையால் உயர்ந்துள்ள அருட் சோதிப் பெருந் தெய்வமாகிய சிவமே! உலகிலுள்ள உயிர்கள் யாவும், அருள் ஞானம் ஒளிரும் நெறியிலே நின்று ஓம்ப, விளங்குகின்ற படைத்தல் முதலிய தொழில்கள் ஐந்தையும் என் போல் எளியரும் செய்ய அருள் புரிந்தாய்; நின் பேரருட்கு வணக்கம்; நின்னுடைய பெரிய புகழ்க்கு வணக்கம். எ.று.

உலகுகள் எண்ணிறந்தனவாதலால் ஆங்கு உயிர் வகை யாவும் அடங்க, “உலகுயிர்த் திரளெலாம்” என வுரைக்கின்றார். “உலகெலாம்” என்ற மெய்ம்மொழிக்கு வடலூர் வள்ளல் செய்துள்ள உரையின் கண் காட்டப்படும் உலகுகளை ஈண்டு நினைவு கூர்க. ஒளிநெறி, திருவருட் பரசிவ நெறி. திருஞானசம்பந்தரும், இக்கருத்தே புலப்பட, “முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி காட்டினை” ( எழுகூற் ) என்பது காண்க. ஐந்தொழில் செய்தல் சிவனுக்கே யுரியது; சிவமாந் தன்மை எய்திய உயிரும், நெருப்பிற் காய்ந்து சிவந்து நெருப்பாகிய இரும்பு நெருப்பின் செயலைச் செய்வதுபோல ஐந்தொழில் செய்யும் என்பவர் உளராதலின், அவர் மதத்தைத் தழுவி, “இலகு மைந்தொழிலும் யான் செயத் தந்தனை” என்று கூறுகின்றார். சைவ நூல்கள். “உம்பர் பிரான் உற்பத்தி யாதிகளுக் குரியன், உயிர் தானும் சிவானுபம் ஒன்றினுக்கும் உரித்தே” ( சிவ. சித்தி ) என்பது அறிக.

மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்

யாவரும் பெற்றிடா இயல்எனக் களித்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி                                         1584

உரை : வரம்பிலாற்றலால் உயர்ந்த அருட்பெருஞ் சோதிப் பெருமானே! பிரமன் முதலிய மூவரும், ஏனை இந்திரன் முதலிய தேவர்களும் முத்தான்மாக்களும் சித்தர்களும் பெறாத சிறப்பை எனக்குத் தந்தருளினாயாதலால், நின் பேரருட்கு வணக்கம்; நின்னுடைய பெரிய புகழ்க்கு வணக்கம். எ.று.

பிரமன் திருமால் உருத்திரன் என்பவரை “மூவர்” எனக் குறிக்கின்றார். தேவர் - தேவருலகத்து வாழும் தேவர்கள்; இவர்கட்குத் தலைவன் இந்திரன். முத்தர் - முத்தி நலம் பெற்றவர்கள். சித்தர்கள் - அணிமா முதலிய சித்தி எட்டும் கைவரப் பெற்றவர்கள். இயல் - சிறப்பு.

சித்திகள் அனைத்தையும் தெளிவித் தெனக்கே

சத்திய நிலைதனைத் தயவினில் தந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி                                         1588

உரை : வரம்பிலாற்றல் உடைமையால் உயர்ந்த அருட் சோதிப் பெருஞ்சிவமே! சித்தி வகைகள் எல்லாவற்றையும் யான் தெளிய உணர்த்தி அவற்றுள் உண்மை நிலையை என்பால் வைத்த இன்னருளால் எனக்கு அறிவித்தாயாதலால், நின் பேரருளுக்கும் நின் பெரும் புகழ்க்கும் வணக்கம் செய்கின்றேன். எ.று.

சித்திகள், அணிமா மகிமா முதலாய் எண்வகைச் சித்திகளும், கன்ம சித்தி, யோக சித்தி, ஞான சித்தி, என்ற மூவகைச் சித்திகளும் அடங்க, “சித்திகள் அனைத்தையும்” எனக் கூறுகின்றார். தெளிவித்தலாவது, சிவம் பயக்கும் நலம் அவற்றின்பால் இல்லாமை உணரச் செய்தல். உண்மைச் சித்தியாவது அருட்பெருஞ் சோதி ஆண்டவன் பேரருளைப் பெறுதலும் அவனது பெரும் புகழைப் பராவுதலுமாம் என்பது உணர்த்துதற்குச் “சத்திய நிலைதனைத் தயவிற் றந்தனை” என்று பாராட்டுகின்றார்.

உலகினில் உயிர்களுக் குறும்இடை யூறெலாம்

விலகநீ அடைந்து விலக்குக மகிழ்க

சுத்தசன் மார்க்கச் சுகநிலை பெறுக

உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி                                         1594


உரை : வரம்பில் ஆற்றலுடைமையால் உயர்ந்த அருட்பெருஞ் சோதி ஆண்டவனே! உலகில் வாழும் உயிர்கட் குண்டாகும் இடையூறுகள் யாவும் நீங்குமாறு நீ ஆங்காங்கே சென்று விலக்கி மகிழ்க; இச் சுத்த சன்மார்க்கத்தால் எய்தும் சுகநிலையில் வாழ்க; உத்தமனாய் விளங்குக; அதனால் உயர்க என உபதேசித் தருளினாயதலால் நின் பேரருட்கும் பெரும் புகழ்க்கும் வணக்கம். எ.று.

“நல்ல செயலுக்கு நானூறு இடையூறு” என்பவாகலின், “உயிர்களுக்குறும் இடையூறெலாம்” என்றும், உயிர் உற்று வருந்தும் இடையூறுகளைக் கண்டு சும்மா இராது, அவை நீங்குதற்கேற்ற செயற்படுக என்பார், “இடையூறெலாம் விலக நீ யடைந்து விலக்குக” என்றும், விலக்கிய வழி உயிர்கள் எய்தும் இன்பம் கண்டு நீயும் இன்புறுக என்பாராய், “மகிழ்க” என்றும் உரைக்கின்றார். இதுவே சுத்த சன்மார்க்கமும் அது விளைவிக்கும் இன்ப நிலையுமாம் எனத் தெரிவித்தற்குச் “சுத்த சன்மார்க்கச் சுகநிலை பெறுக” எனவும், சுத்த சன்மார்க்க நன்ஞானமும் நற்செயலும் மேற்கொள்ளுவது சன்மார்க்கத்தில் உத்தம நெறியாம் என்று வலியுறுத்தற்கு, “உத்தமனாகுக ஓங்குக என்றனை” எனவும் எடுத்தோதுகின்றார்.

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி                                         1596


உரை : இத் திருவகவல் உரைத் தொடக்கம் காண்க.

வெண் செந்துறை

அருட்சபை நடம்புரி அருட்பெருஞ் சோதி

தெருட்பெருஞ் சீர்சொலத் திகழ்வ சித்தியே                                         1598


உரை : திருவருள் ஞான சபையில் திருக்கூத்தாடும் அருட்பெருஞ் சோதியாண்டவனது தெளிவு மிக்க பெரிய புகழை எடுத்தோதிய வழி, சித்திகள் யாவும் இனிது கைவரும். எ.று.

வெண் செந்துறை என்பது யாப்பு நெறியில் பாவினத்துள் ஒன்று. திருவருள் ஞான ஒளி நிலவும் ஞான சபையின்கண் கூத்தப் பெருமான் திருநடம் புரிகின்றாராதலின், அப் பெருமானை, “நடம் புரி அருட்பெருஞ் சோதி” எனக் குறித்தருளுகின்றார். திருவருள் ஞானவொளிப் பிழம்பாதல் பற்றிச் சிவ பரம்பொருளை, “அருட்பெருஞ் சோதி” என வற்புறுத்துகின்றவர், அதன் பொருள் சேர் புகழ் உலகுயிர்கள் இனிதுணர்ந்து போற்றும் பெருமையுடையதாதல் விளங்க, “தெருட் பெருஞ்சீர்” என்றும், அஃது யாவராலும் ஓதத் தகுவதாகலின், “சீர் சொல” என்றும், ஓதும் முறை இதுவென்றற்கு, “அருட்பெருஞ் சோதி” என்றும் இயம்புகின்றார்.