பக்கம் எண் :

82

82. அருட் பெருஞ் சோதி அட்டகம்

 

     அஃதாவது, அருட்பெருஞ் சோதி பொருளாகப் பாடிய பாட்டுக்கள் எட்டுக்கொண்டது என்பதாம். திருவருள் ஞான நித்தியானந்தப் பெருஞ் சோதிப் பரபோகம் அருட் பெருஞ் சோதி எனப்படுகின்றதென வுணர்க. இதன்கண் அருட்பெருஞ் சோதியை நெடும் பேரகவலால் விரித்தோதிய வள்ளற் பெருமான் அதனை உண்மைத் தன்மையை மெய்யுணர்வுடைய சான்றோர் உரை மேல் வைத்து ஓதுகின்றார்.

 

 எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

4617.

     அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்
          தருட்பெருந் தலத்துமேல் நிலையில்
     அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்
          அருட்பெருந் திருவிலே அமர்ந்த
     அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே
          அருட்பெருஞ் சித்திஎன் அமுதே
     அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே
          அருட்பெருஞ் சோதிஎன் அரசே

உரை:

     திருவருள் ஞானாகாயத்தில் நிலவுகின்ற திருவருள் ஞானப் பேருலகத்தில் உள்ள திருவருள் ஞானப் பேரிடத்தில் மேனிலையில் திருவருள் ஞானப் பெரிய பீடத்தின்கண் திருவருள் ஞானப் பேருருவில் திருவருள் ஞானப் பெருஞ் செல்வச் சிறப்பினிடையே வீற்றிருந்தருளும் திருவருள் ஞானப் பெரும் பதியே! திருவருள் ஞானப் பெருநிதியே! திருவருள் ஞானச் சித்தி யாவும் நல்கும் என்னுடைய அமுதமே! திருவருள் ஞான மிகுதியளிக்கும் பேரின்பமே! திருவருள் ஞானபோகம் பயக்கும் பெருஞ் சுகப் பொருளாகியவனே! திருவருள் ஞானப் பேரொளி திகழும் என்னுடைய அரசே, வணக்கம். எ.று.

     பல்வகை யுலகங்களைச் சூழ்ந்திருக்கும் ஆகாசங்களை நோக்க, சிவஞானாகாசம் பெரிதாதல் விளங்க, “அருட் பெருவெளி” என்றும், அதன்கண் உள்ள சிவபோக வுலகை, “அருட் பெருவுலகம்” என்றும், சிவம் எழுந்தருளும் சிவபோக மாநகரை, “அருட்பெருந் தலம்” என்றும், அந்நகர்க்கண் உயர்வற உயர்ந்த இருக்கையில் சிவன் எழுந்தருளும் திறத்தை, “அருட்பெரும் பீடத்தில்” என்றும், சிவன் மேற் கொண்டருளும் திருவுருவை, “அருட் பெருவடிவு” என்றும், ஆங்குக் காணப்படும் செல்வச் சிறப்புக்களை, “அருட் பெருந் திருவிலே யமர்ந்த” என்றும், சிவ பரம்பொருளை, “அருட் பெரும் பதியே” என்றும் எடுத்துரைக்கின்றார். சிவஞானமே பெருந் திரவியமாகலின், ஞானமே யுருவாகிய சிவனை, “அருட் பெருநிதியே” எனவும், ஞான சித்திகள் அனைத்தையும் நல்குதலால், “அருட் பெருஞ் சித்தி என்னமுதே” எனவும், சிவானந்த ஞானபோகம் விளைவிக்கும் மகிழ்ச்சியை, “அருட் பெருங் களிப்பே” எனவும், போகானுபவத்தை “அருட் பெருஞ் சுகமே” எனவும், தம்முள் அருட் சோதி நிறைதலால், “அருட் பெருஞ் சோதி என் அரசே” எனவும் இயம்புகின்றார்.

     (1)