பக்கம் எண் :

4618.

     குலவுபேர் அண்டப் பகுதிஓர் அனந்த
          கோடிகோ டிகளும்ஆங் காங்கே
     நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
          நிகழ்ந்தபற் பலபொருள் திரளும்
     விலகுறா தகத்தும் புறத்துமேல் இடத்தும்
          மெய்அறி வானந்தம் விளங்க
     அலகுறா தொழியா ததுஅதில் விளங்கும்
          அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

உரை:

     பொருந்தியுள்ள பெரிய அண்டப் பகுதிகள் முடிவில்லாத கோடிக் கணக்கில் உள்ளன; அவற்றிலும் அவற்றுள் ஆங்காங்கு அமைந்த பிண்டப் பகுதிகள் அனைத்தும், அவற்றோடு பொருந்திய, பற்பல வகையான பொருட் பகுதிகளும் ஒன்றும் ஒழியாமல் அவற்றின் அகத்திலும் புறத்திலும் அவற்றை யுள்ளடக்கும் மேலிடத்தும் சிவபோகமாகிய சச்சிதானந்தம் பரவி விளங்க, அளவிடற்கின்றி ஒன்றையும் விடாது அதுவதன்கண் தோய்ந்து விளங்குகின்ற அருட்பெருஞ் சோதியாகிய என்னுடைய அரசே, வணக்கம். எ.று.

     உள்பொருளாதல் விளங்கக் “குலவு பேரண்டப் பகுதிகள்” என்றும், அவை எண்ணிறந்தவை என்று தெரிவித்தற்கு, “ஓர் அனந்த கோடி கோடிகள்” என்றும், அண்டங்களின் உள்ளுறு பொருள்களாதலால், “ஆங்காங்கே நிலவிய பிண்டப் பகுதிகள்” என்றும் இசைக்கின்றார். இவ்வண்ட பிண்டங்களில் உயிருள்ளனவும் இல்லனவும் இருத்தலால், உயிரில்லாதனவும் அடங்க, “நிகழ்ந்த பற்பல பொருள் திரளும்” எனப் பகர்கின்றார். அண்ட பிண்டங்கள் அனைத்திலும், அவற்றுள் நிறைந்த சேதனாசேதனங்களிலும் தோய்ந்து நிற்கும் சிவம் சச்சிதானந்தமாய் விளங்குகிற தென்றற்கு, “மெய்யறி வானந்தம் விளங்க” எனவும், இச்சிவ விளக்கம் இடையறவின்றி எல்லாவற்றிலும் விளங்குவது பற்றி, “அலகுறாது ஒழியாது அதுவதில் விளங்கும் அருட் பெருஞ் சோதி என் அரசே” எனவும் கூறுகின்றார்.

     (2)