பக்கம் எண் :

462.

    அழகா வமலா வருளாளா
        அறிவா வறிவா ரகமேவும்
    குழகா குமரா எனையாண்ட
        கோவே நின்சீர்க் குறியாரைப்
    பழகா வண்ண மெனக்கருளிப்
        பரனே நின்னைப் பணிகின்றோர்க்
    கழகா தரவாம் பணிபுரிவார்
        அடியார்க் கடிமை யாக்குகவே.

உரை:

     அழகனே, அமலனே, அருளாளனே, அறிவனே, அறிவுடைய நன்மக்கள் மனத்தில் எழுந்தருளும் இளையவனே, குமரனே, என்னை ஆண்டருளிய தலைவனே, பரனே, நின் புகழை நினையாதவரோடு பழகா வண்ணம் எனக்கு அருள் புரிந்து, நின்னைப் பணிந்து போற்றும் அழகிய அன்புப் பணி செய்யும் பெரியோருடைய அடியார்க்கு என்னை அடியனாக்கி யருள்வாயாக, எ. று.

     முருகன் என்ற சொல்லுக்கே அழகன் என்பது ஒரு பொருள் மலத்தொடர்பில்லாதவன் - அமலன். முருகனது பரமாந் தன்மையை அறிந்தவர் மனத்தில் கோயில் கொள்வது பற்றி, “அறிவார் அகம் மேவும் குழகா” என்று கூறுகிறார். குழகன் - இளையவன். என்றும் இளமை யோடிருப்பதால் முருகன், “குழகன்” எனப்படுகின்றான். முருகன் திருப்புகழை விரும்பாதவரோடு வள்ளற் பெருமான் பழக விரும்பாதவராதலால், “நின் சீர் குறியாரைப் பழகாவண்ணம் எனக்கருளி”னான் என்று இயம்புகின்றார். பரன் - மேலானவன். முருகப் பெருமானைப் பணிந்தொழுகும் பெரு மக்களை முருகனாகவே எண்ணுகின்றாராதலால், நின்னைப் பணிகின்றோர்க்குப் பணி புரிவோர் எவரோ அவருடைய அடியார்க்கு என்னை அடியவனாக்குதல் வேண்டும் என்பாராய், “நின்னைப் பணிகின்றோர்க்குப் பணி புரிவோர் அடியார்க் கடிமையாக்குக” என வேண்டிக் கொள்ளுகிறார். “அடியார் அடியார்கட் கெல்லாம் தொண்டே பூண்டொழிந்தேன்” (மழபாடி) என்றும், “அத்தா ஆலங்காடா உன் அடியார்க் கடியேனாவேனே” (ஆலங்) என்றும் சுந்தரர் ஓதுவது காண்க. பணி புரிவோ ருள்ளும் அழகும் அன்பும் நிறைந்த பணி புரிவோரை வடலூர் வள்ளலார் பெரிதும் போற்றுகின்றா ரென்பதற்கு, “அழகா தரவாம் பணிபுரிவோர்” என்று சிறப்பித்துரைப்பது அறிக. முருகனது சீர்த்தியை நினைவிற் கொள்ளரொடு தாம் சேரா தொழிந்தது திருவருட் செயல் என்று நினைப்பது விளங்க, “நின்சீர்க் குறியாரைப் பழகாவண்ணம் எனக்கருளி” என்பதால் உணரப்படுகிறது.

     இதனால் அன்புடன் அழகுறப் பணி புரிவார்களின் அடியார்க் கடியனாதல் வேண்டும் என முருகனிடம் முறையிட்டவாறாம்.

     (3)