83
83. இறை யின்பக் குழைவு
அஃதாவது, சிவானந்தத்தில் ஆழ்ந்து உள்ளம்
உருகிக் குழைவுற்றுப் பாடுதல் என்பதாம். குழைவு மிகுதி தோன்றப் பன்னிரு சீர் கொண்ட விருத்தப்
பாவாற் பாடுவது நோக்கத் தக்கது.
பன்னிருசீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
4625. கருணை ததும்பிப் பொதுநோக்கும்
கண்ணிற் கிடைத்த கண்ணேஓர்
கனியில் கனிந்தன் புருவான
கருத்தில் கிடைத்த கருத்தேமெய்
அருள்நன் னிலையில் அதுஅதுவாய்
அறிவிற் கிடைத்த அறிவேஎன்
அகத்தும் புறத்தும் ஒளிநிறைவித்
தமர்ந்த குருவே ஐம்பூத
வருண முதலா அவைகடந்த
வரைப்பாய் விளங்கு மணிமன்றில்
வயங்கு சுடரே எல்லாஞ்செய்
வல்ல குருவே என்னுளத்தே.
தருண நடஞ்செய் அரசேஎன்
தாயே என்னைத் தந்தாயே
தணித்த தலைமைப் பதியேஇத்
தருணம் வாய்த்த தருணம்அதே.
உரை: மிக்குப் பெருகிக் கருணை வழியும் எவ்வுயிரையும் பொதுப்பட நோக்கும் இயல்புடைய கண்களில் சிறந்த கண் போன்றவனே! மா பலா வாழை யென்ற கனிகளில் முதிரக் கனிந்து அன்புருவாய் விளங்கும் கருத்திற் சிறந்து தோன்றும் கருத்தாகிய பெருமானே! மெய்ம்மையமைந்த திருவருள் நிலையில் அதுவதுவாய்க் கலந்து நிற்கும் நன்ஞானத்தின்க்கண் மிளிரும் மெய்யறிவான பொருளே! எளியேனுடைய அகத்திலும் புறத்திலும் அருளொளி பரப்பி அதனூடே எழுந்தருளும் குருபரனே! ஐம்பெரும் பூத முதலாகிய தத்துவ வகைகளைக் கடந்த பேரெல்லையாய் விளங்கும் மணியொளி திகழும் சிற்சபையின்கண் ஒளிரும் ஞானச் சுடரே! எல்லாம் செய்யவல்ல பெரும் பொருளே! அடியேனுடைய உள்ளத்தின்கண் தருண நடம் புரிகின்ற அருளரசே! எனக்குத் தாயானவனே! என்னை இவ்வுலகிற் பிறப்பித்தவனே! ஒப்பற்ற தலைமை சான்ற முதல்வனே! எனக்கு அருள் புரிதற்கு ஏற்ற தருணம் இதுவேயாகும். எ.று.
கருணை நிறைந்த உள்ளத்துடன் உயிர் வகை யனைத்தையும் வேறுபாடற நோக்குவது பொது நோக்கம்; அன்பர்களைச் சிறப்புற நோக்குவது சிறப்பு நோக்கம்; பொது நோக்கம் பயின்று சிறக்க நிற்பது பேரருணோக்கமாதலின், அதனைப் “பொது நோக்கும் கண்ணிற் கிடைத்த கண்ணே” எனச் சிவனை பராவுகின்றார். மாவும் பலாவும் வாழையும் முக்கனியாகும்; அவை மிகக் கனிந்த வழிச் சுவை மிகுதலின் அந்நிலை அன்பு கனிந்து உள்ளத்துக் காதலால் அன்பிற் கனிந்த சிவத்தை அதனோடு உவமிக்கின்றார். அதனால் “அன்புருவான கருத்திற் கிடைத்த கருத்தே” என்று கூறுகின்றார். அருனம் நிறைந்த போது காணப்படும் பொருள் வேறு காணும் தான் வேறு என்பதின்றி அதுவதுவாய் அத்துவிதமாய் அறிவு சிறந்து ஒன்றாதலின், “மெய்யருள் நன்னிலையில் அதுவதுவாய் அறிவிற் கிடைத்த அறிவே” என்று புகழ்கின்றார். காட்சிப் படும் பொருளின்கண் திருவருள் ஞான வொளி அணுப் புதைக்கவும் இடமின்றாமாறு உள்ளும் புறமும் ஓரொப்பப் பரந்து நிற்பதால், “என் அகத்தும் புறத்தும் ஒளி நிறைவித்து அமர்ந்த குருவே” எனக் கூறுகின்றார். வருணம் - ஈண்டுத் தத்துவங்களின் மேற்று. தத்துவங்கட்கு அப்பாற்பட்ட எல்லையாவது ஞானாகாசம் என்பது பற்றி, “ஐம்பூத வருண முதலா அவை கடந்த வரைப்பாய் விளங்கும் மணிமன்று” எனக் குறிக்கின்றார். வரம்பிலாற்றல் உடையது பரம்பொருள் என்பதனால், “எல்லாம் செய் வல்ல குரு” என மொழிகின்றார். செய் - செயல் மேல் நிற்கும் முதனிலைத் தொழிற் பெயர். குரு - கனவிய பொருள்; ஈண்டுப் பெரும் பொருள் என வுரை நின்றது. ஆன்ம வுணர்வின் வன்மை மென்மைக்கு ஒப்ப இறைவனது திருநடனம் அமைவது பற்றி, “என்னுளத்தே தருண நடம் செய் அரசே” என்று புகழ்கின்றார். தோற்றுவித்த முதல்வனாதல் புலப்பட, “என்னைத் தந்தாயே” என்று போற்றுகின்றார். தருணம் - சமயம்; முன்னது அழகிய மென்மை நலம் என்று பொருள்பட நின்றது. (1)
|