பக்கம் எண் :

4632.

     இரவும் பகலும் தூங்கியஎன்
          தூக்கம் அனைத்தும் இயல்யோகத்
     திசைந்த பலனாய் விளைந்ததுநான்
          இரண்டு பொழுதும் உண்டஎலாம்
     பரவும் அமுத உணவாயிற்
          றந்தோ பலர்பால் பகல்இரவும்
     படித்த சமயச் சாத்திரமும்
          பலரால் செய்த தோத்திரமும்
     விரவிக் களித்து நாத்தடிக்க
          விளம்பி விரித்த பாட்டெல்லாம்
     வேதா கமத்தின் முடிமீது
          விளங்கும் திருப்பாட் டாயினவே
     கரவொன் றறியாப் பெருங்கருணைக்
          கடவுள் இதுநின் தயவிதனைக்
     கருதும் தொறும்என் கருத்தலர்ந்து
          சுகமே மயமாக் கண்டதுவே.

உரை:

     இரவிலும் பகலிலும் நான் தூங்கிய உறக்கமனைத்தும் தன்னில் இயன்ற யோகத்தோடு ஒத்து நற்பயன் விளைவித்தது; காலை மாலை என்ற இருபோதும் நான் உண்டதெல்லாம் யாவரும் விரும்பும் அமுத வுண்டியாய் நலம் செய்துளது; பலரிடம் சென்று பகலும் இரவுமாய்ப் படித்தறிந்த சமய நூல்களும் ஞானசம்பந்தர் முதலிய பல பெரியோர்கள் செய்துள்ள தோத்திரப் பாடல்களும் உள்ளம் உவந்து நாத் தழும்பேற நான் விரிவாகப் பாடிய பாட்டுக்கள் யாவும் வேதங்களின் முடியிலும், ஆகமங்களின் உச்சியிலும் இருந்து சிறக்கும் திருப்பாட்டுக்களாய் நற்பயன் தந்துள்ளன; வஞ்சம் சிறிதும் இல்லாத பெருங் கருணைக் கடவுளாகிய உனது இன்னருளாகிய இதனை நினைக்கும் போது என் மனம் விரிந்து இன்பமாய் விட்டது காண். எ.று.

     உழைப்பின் பயனாய் இரவிலும், அயர்வால் பகலிலும் யாவரும் உறங்குவது இயல்பாகலின், “இரவும் பகலும் தூங்கிய என் தூக்கமனைத்தும்” எனவும், நன்ஞானப் பயன் விளைந்தமை பற்றி, “இயல் யோகத்து இசைந்த பயனாய் விளைந்தது” எனவும் இயம்புகின்றார். சரியை கிரியைகளின் வழி எய்தாது தானே அமைந்தமை புலப்பட, “இயல் யோகம்” என்று சிறப்பிக்கின்றார். பகற் போதிலும் முன்னிரவிலும் உணவுண்பது யாவர்க்கும் பொதுவாய், பின்னிருந்து உழைக்கும் உடம்பிற்கு ஏதுவாய்ப் பயன் படுவது போலின்றி, தேவர்கள் விரும்பி யுண்ணும் அமுதமாய் நற்பயன் விளைவித்தது என்பாராய், “இரண்டு பொழுதும் உண்ட எல்லாம் பரவும் அமுத வுணவாயிற்று” என வுரைக்கின்றார். வேதாந்தங்களாகிய உபநிடதங்கள் பலவும், சித்தாந்த சாத்திரங்களாகிய சிவாகமங்களும் மெய்கண்ட சாத்திரங்களும் வள்ளலார் பாடியுள்ள ஆயிரக்கணக்கான பாட்டுக்களில் பயிலக் காணப்படுவதால், “பலர்பால் பகல் இரவும் படித்த சமயச் சாத்திரமும்” என்றும், தேவார திருவாசகங்களின் சொல்லும் பொருளும் தம்முடைய பாட்டுக்களில் விரவிக் கிடக்கின்றமையின், “பலராற் செய்த தோத்திரமும்” என்றும், தாம் பாடிய பாட்டுக்களின் தன்மை விளங்க, “விரவிக் களித்து நாத் தடிக்க விளம்பி விரித்த பாட்டு” என்றும் எடுத்துரைக்கின்றார். வேதாகமங்களின் உச்சியில் சிறப்புறுவது பரம்பொருளாகிய பரசிவமாதலாலும், அதுவே அருட் சோதிப் பரம்பொருளாதலாலும், “வேதாகமத்தின் முடிமீது விளங்கும் திருப்பாட்டாயின” என்றும், இச் சிறப்பு இறைவனது பேரருளால் உண்டாயிற்றென்பாராய், “இது நின் தயவு” என்றும், இதனால் தாம் எய்திய பயன் இதுவெனக் கூறுபவர், “கருத் தலர்ந்து சுகமே மயமாய்க் கண்டது” என்றும் எடுத்துரைக்கின்றார்.

     (8)