பக்கம் எண் :

4634.

     புரைசேர் வினையும் கொடுமாயைப்
          புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு
     புகலும் பிறவாம் தடைகள்எலாம்
          போக்கி ஞானப் பொருள்விளங்கும்
     வரைசேர்த் தருளிச் சித்தியெலாம்
          வழங்கிச் சாகா வரங்கொடுத்து
     வலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில்
          கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்
     பரைசேர் வெளியில் பதியாய்அப்
          பால்மேல் வெளியில் விளங்குசித்த
     பதியே சிறியேன் பாடலுக்குப்
          பரிசு விரைந்தே பாலித்த
     அரைசே அமுதம் எனக்களித்த
          அம்மே உண்மை அறிவளித்த
     அப்பா பெரிய அருட்சோதி
          அப்பா வாழி நின்அருளே.

உரை:

     துன்பம் விளைவிக்கும் வினைகளும் கொடிய மாயை விளைவிக்கும் துன்பங்களும் இருள் செய்யும் ஆணவ மலமறைப்பும், மேலும் கூறப்படும் தடைகள் யாவையும் போக்கி ஞானப் பொருளைத் தெளிய உணரும் திருவருள் ஞானமாகிய மலையில் ஏற்றியருளி, மூவகைச் சித்திகளையும் நல்கி வெறிதே சாவாத வரத்தையும் தந்து, தானே வலியப் போந்து என் உள்ளத்தில் எழுந்தருளி எனது உயிரிற் கலந்து மகிழ்ச்சியுடன் இருந்தருளுகின்றாய்; சத்தியொடு கூடிய மாயா தீத வெளியிற் பதிப் பொருளாய், அவ்வெளிக்கு அப்பாலதாகிய வியோம வெளியில் ஞானப் பதியாய் விளங்கும் பரம்பொருளே! சிறுமையுடையவனாகிய என்னுடைய பாடலுக்குரிய பரிசினை விரைந்து கொடுத்தருளிய அருளரசே! ஞானமாகிய அமுதத்தை எனக்குத் தந்தருளிய அம்மையே! திருவருளுண்மையறிவை வழங்கி யருளிய அப்பனே! பெரிதாகிய அருட்சோதி அப்பனே! நின்னுடைய திருவருள் வாழ்க. எ.று.

     புரை சேர் வினை - குற்றம் விளைக்கும் இருவினை; துன்பம் பயத்தலால், இவ்வாறு கூறுகின்றார். துன்பங்களை நுகர்வித்தலால் மாயையின் சேர்க்கையைக் “கொடுமாயைப் புணர்ப்பு” என்று கூறுகின்றார். இருளும் மறைப்பு - அறிவை மறைத்து இருள் செய்தலால், மூல மலமாகிய ஆணவத்தை, “இருளும் மறைப்பு” எனவும், ஏனை மாயேயங்களைப் “பிறவாம் தடைகள்” எனவும் இயம்புகின்றார். ஞானப் பொருளை மறைப்பின்றிக்கண்டு இன்புற வுதவும் உபசாந்த நிலையை, “ஞானப் பொருள் விளங்கும் வரை” என்று நவில்கின்றார். வரை - மலை. கன்ம சித்தி, யோக சித்தி, ஞான சித்தி, ஆகிய மூன்றையும் தொகுத்து, “சித்தி யெலாம்” என்று சொல்லுகின்றார். சாகா வரம் - பிறவிப் பயனைப் பெறாது சாவும் சாதலின்றித் திருவருட் பேறு பெற்றார் எய்தும் சாவா நிலைக்குரிய வரம். உயிர்க்குயிராய்க் கலந்து உள்ளத்தில் எழுந்தருளும் திறம் புலப்பட, “உளத்தில் அமர்ந்து உயிரிற் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்” என வுரைக்கின்றார். பரை சேர் வெளி - சத்தியொடு கூடிய சிவம் விளங்கும் மாயாதீதப் பெருவெளி. அதற்கு அப்பால் உள்ளது சுத்த சிவம் எழுந்தருளும் உபசாந்தப் பெருவெளி. அங்கே ஒளிரும் சுத்த சிவம் ஞான ரூபமாய்ச் சிந்திப்பார் சிந்தையுள் ஒளிர்வது பற்றி, “சித்த பதி” என்று தெரிவிக்கின்றார். பரிசு பாலித்தல் - பரிசு நல்குதல். வள்ளற் பெருமான் திருவருள் ஞானாமிர்தமும் அழியாத் திருவுருவும் பெற்றாராதலின், “பரிசுநல்கப் பெற்றேன்” என மொழிகின்றார். அருளமுதத்தைச் சிவசத்தியும், திருவருள் மெய்ஞ்ஞானத்தைச் சிவமும் அளித்தமை விளங்க, “அமுதம் எனக்களித்த அம்மே” எனவும், “உண்மை யறிவளித்த அப்பா” எனவும் எடுத்தோதுகின்றார். திருவருட்சோதியைச் சிவத்தின் பாற்பெற்றமை விளங்க, “அருட் சோதி அப்பா” என்று இயம்புகின்றார். பரிசு பெற்றவர் பரிசு தந்த பெரியவரை வாழ்த்தும் மரபு பற்றி, “நின் அருள் வாழி” என வாழ்த்துகின்றார்.

     (10)