84
84. பெறாப் பேறு
அஃதாவது, பெறுதற் கரிதாய் இதுகாறும் பெறப்
படாதிருந்து பெற்றமை புலப்படத் திருவருள் அமுத ஞானத்தைப் பெறாப் பேறு என்று கூறுகின்றார்.
“ஆரும் பெறாதபேறு பெற்றேன்; பெற்ற தார் பெறுவார்” என்று பெரியோர் கூறியது போல என அறிக.
எண்சீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
4635. ஆவாஎன் றெனையாட்கொண் டருளியதெள் ளமுதே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
சாவாத வரம்எனக்குத் தந்தபெருந் தகையே
தயாநிதியே சிற்சபையில் தனித்தபெரும் பதியே
ஓவாதென் உள்ளகத்தே ஊற்றெழும்பேர் அன்பே
உள்ளபடி என்னறிவில் உள்ளபெருஞ் சுகமே
நீவாஎன் மொழிகள்எலாம் நிலைத்தபயன் பெறவே
நித்திரைதீர்ந் தேன்இரவு நீங்கிவிடிந் ததுவே.
உரை: ஆ, வருக என்று நோக்கி என்னை ஆண்டுகொண்ட தெளிந்த அமுத மனைய பெருமானே! எனக்கு அம்மையும் அப்பனும் ஐயனும் அருளரசனுமாகிய சிவனே! எனக்குச் சாகாமைக்கு ஏதுவாகிய வரத்தைத் தந்தருளிய பெருந்தகையே! அருட் செல்வமே! ஞான சபையில் எழுந்தருளுகின்ற ஒப்பற்ற பெரிய தலைவனே! எனது உள்ளத்தில் தங்கி இடையறாது ஊற்றுப் போல் சுரந்து பெருகும் அன்புருவாகியவனே! எனது அறிவின்கண் இயல்பாக உள்ளபடி உளதாகும் பெரிய இன்பமே! நினது நெறியினின்றும் நீங்காத என் சொற்களால் நிலைத்த பயனை அடையுமாறு உறக்கத்தினின்றும் நீங்கினேன்; என்னைச் சூழ்ந்திருந்த இருளிரவும் விடிந் தொழிந்தது காண். எ.று.
தெளிந்த இனிய அமுதம் போற் சிந்தையுட் பெருகி இன்பம் செய்தலின், “தெள்ளமுதே” என்று செப்புகின்றார். ஐயன்-தந்தைக்குத் தந்தை; தலைவனுமாம். சாகாதவரத்தினும் பெரியது வேறில்லையாகவும் அதனை அளித்தருளிய நலம் பற்றிப் “பெருந்தகை” என்றும், ஞான சபையில் ஞான நடம் புரிபவனாதலின், “சிற்சபையில் தனித்த பெரும் பதியே” என்றும் போற்றுகின்றார். சிந்திப்பார் சிந்தனையுள் தேனூற விளங்குபவனாதலால், “ஓவாது என் உள்ளகத்தே ஊற்றெழும் பேரன்பே” என்று கூறுகின்றார். ஓவுதல் - நீங்குதல். அறிவினுள் அருளால் மன்னிச் சுகானுபவம் விளைவிப்பது அறிவுருவாகிய சிவத்தின் மாண்பாதலால், “உள்ளபடி என்னறிவில் உள்ள பெருஞ் சுகமே” என வுரைக்கின்றார். நீவுதல் - நீங்குதல். பயன் பெறாவிடில் பயனில் சொற்களாமாதலாலும், பயனும் நிலைபேறுடையதாக வேண்டுமாதலாலும், “என் மொழிகளெலாம் நிலைத்த பயன் பெறவே” எனக் கூறுகின்றார். நித்திரை, ஈண்டு மயக்க வுணர்வு குறித்தது. இரவு என்றது மலவிருளிற் கிடந்தமை யுணர்த்துவதாயிற்று. (1)
|