4639. அன்புடைய என்னறிவே அருளுடைய பொருளே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
துன்புடைய உலகரெலாம் சுகமுடையார் ஆகத்
துன்மார்க்கம் தவிர்த்தருளிச் சன்மார்க்கம் வழங்க
இன்புடைய பேரருளிங் கெனைப்பொருள்செய் தளித்த
என்அமுதே என்உறவே எனக்கினிய துணையே
என்புடைநீ இருக்கின்றாய் உன்புடைநான் மகிழ்ந்தே
இருக்கின்றேன் இவ்வொருமை யார்பெறுவார் ஈண்டே.
உரை: அன்புடைய எனக்கு அறிவுருவானவனே! திருவருள் பெருகவுடைய பரம்பொருளே! எனக்கு அம்மையும் அப்பனும் ஐயனும் அருளரசுமாகிய பெருமானே! துன்பத்தால் வருந்துகின்ற உலகினர் யாவரும் சுகவாழ்வு உடையவராகுமாறு தீநெறியைப் போக்கிச் சன்மார்க்க நெறியை அவர்கட்கு நல்குதற்கு இன்பம் பெருக்கும் பேரருளை இங்கு என்னைப் பொருளாகக் கருதி என்பால் செய்தருளிய எனக்கு அமுதாகிய சிவனே! எனது நெருங்கிய உறவே! என் மனதுக்கினிய துணைவனே! என் பக்கத்தே இருந்தருள்கின்றாய்; உன்பால் நானும் இருக்கின்றேன்; இந்த ஒருமை நிலையை இங்கே யாவரே பெறுவர். எ.று.
அன்பு நல்ஞானம் பயக்கும் உயர்பொருளாதலின் அதனையுடையவர்க்கு இறைவன் துணையாதலால், “அன்புடைய என்னறிவே” என்றும், திருவருளே பரம்பொருட்கு உருவாதல் பற்றி, “அருளுடைய பொருளே” என்றும் உரைக்கின்றார். உலகியல் வாழ்வே துன்ப மயமாதலால் அதன்கண் வாழ்பவரை, “துன்புடைய வுலகர்” எனவும், துன்பத்துக்குத் துன்மார்க்கம் காரணமாதலின், “துன்மார்க்கம் தவிர்த்து” எனவும், துன்மார்க்கத்தினின்றும் நீங்கினபோது உளதாவது சுகவாழ்வாதலால், “சுகமுடையவராக” எனவும் கூறுகின்றார். சன்மார்க்க ஞானமும் அதனை யெடுத்துரைக்கும் திறமையும் தமக்கு இறைவன் அருளியது தோன்ற, “இன்புடைய பேரருள் இங்கு எனைப் பொருள் செய்தளித்த என் அமுதே” என விளம்புகின்றார். நீ என்னுள்ளத்திலும் நான் உன் திருவருள் ஞான வொளியிலும் இருக்கும் இவ்வொருமைத் தன்மை பிறர் பெறலரிதாம் என்று பேசுகின்றாராதலால், “என்புடை நீ இருக்கின்றாய்; உன்புடை நான் மகிழ்ந்தே இருக்கின்றேன்; இவ்வொருமை யார் பெறுவார் ஈண்டே” என்று கிளர்ந்துரைக்கின்றார். (5)
|