4641. ஆங்காரம் தவிர்ந்தவருள் ஓங்காநின் றவனே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
ஓங்கார நிலைகாட்டி அதன்மேல்உற் றொளிரும்
ஒருநிலையும் காட்டிஅப்பால் உயர்ந்ததனி நிலையில்
பாங்காக ஏற்றி எந்தப் பதத்தலைவ ராலும்
படைக்கவொணாச் சித்தியைநான் படைக்கவைத்த பதியே
தூங்காது பெருஞ்சுகமே சுகித்திடஇவ் வுலகைச்
சுத்தசன்மார்க் கந்தனிலே வைத்தருள்க விரைந்தே.
உரை: நான் என்னும் அகங்காரத்தைப் போக்கிய அருளமுதம் சிறந்தோங்க நின்ற பெருமானே! என்னுடைய அம்மையும் அப்பனும் எனக்கு ஐயனும் அருளரசுமாகிய சிவனே! ஓங்காரத்தின் நிலையைக் காட்டி அதற்கு மேலுள்ளதாய் விளங்கும் விந்து நிலையைக் காட்டி அதற்கு அப்பாலாய் உள்ள உயர்ந்த நாதாந்த ஒப்பற்ற நிலையில் அழகுற என்னை உயர்த்திப் பல்வகைப் பதங்களில் உறையும் தலைவர்களில் ஒருவராலும் பெறமுடியாத ஞான சித்தி நிலையை எளியனாகிய யான் பெற வைத்த தலைவனே! தூங்காமல் விழித்திருந்து பெறும் சிவபோகத்தை நுகர, இவ்வுலகம் சுத்த சன்மார்க்க நிலையிலே என்றும் இருக்கத் திருவருளை விரைந்து செய்க. எ.று.
நான் என்னும் அகங்காரம் தற்போதத்தை எழுப்பி அறிவை மறைப்பதாதலால், “ஆங்காரம் தவிர்ந்த” என்றும், தற்போதம் நீங்க நிற்பது திருவருள் ஞானமாதலின், “அருள் ஓங்கா நின்றவனே” என்றும் இசைக்கின்றார். ஓங்கா நின்றவன் - உண்பனை உண்ணா நின்றவன் என்பது போலும் வழக்கு. ஓங்கார நிலை - ஓங்காரமாகிய பிரணவத்தின்கண் நிற்கும் நிலை. தியான நிலையில் மூலாதாரத்திலும், சாக்கிர நிலையில் உள்ளத்திலும், யோக நிலையில் உச்சிக்கு மேல் துவாத சாந்தத்திலும் நிற்கும் நிலை. இதனை “ஆங்காரம் அற்றார் அறிவர்” என உண்மை விளக்கம் என்ற நூல் கூறுவது காண்க. அது பற்றியே ஆங்காரம் தவிர்தலை வள்ளற் பெருமான் முதற்கண் எடுத்துரைக்கின்றார். இதனை, “ஓங்காரம் உந்திக் கீழ் உற்றிடும்” (திருமந்) எனத் திருமூலரும், “உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா” (சிவபுரா) என மணிவாசகப் பெருமானும் ஓதுவர். உச்சிக்கு மேல் துவாத சாந்த வெளியில் விந்துவும், அதற்கு மேல் நாதப் பெருவெளியில் நாதமுமாதலால், “அதன் மேல் உற்றொளிரும் ஒரு நிலையும், காட்டி அப்பால் உயர்ந்த தனிநிலையில்” என வகுத்துரைக்கின்றார். இவற்றின் இயல்புகளை ஞான நூல்களிலும், மாண்டூக்கியம், கடவல்லி முதலிய உபநிடதங்களிலும் நீலகண்ட பாடியத்தும் கண்டு கொள்க. ஈண்டு விரிக்கிற் பெருகும். பாங்கு - அழகு; செம்மையுமாம். பதத் தலைவர் - பிரமன், மால், உருத்திரன், இந்திரன் முதலியோர். படைத்தல், இங்கே பெறுதல் என்னும் பொருளது. தூங்காமை உலகியலை நோக்காது கண்களை மூடியிருந்து ஆக்ஞை என்னும் ஆதாரத்தின்கண் ஆன்ம வுணர்வோடிருத்து சிவானந்தத்தை நுகர்வது, “தூங்காது பெருஞ் சுகமே சுகித்திட” என்று சொல்லுகின்றார். சிவானந்தானுபவம், எல்லாச் சுகங்களிலும் பெருமை வாய்ந்ததாகலின், அதனைப் “பெருஞ் சுகம்” எனப் புகழ்கின்றார். தான் பெற்ற இன்பத்தை உலக முற்றும் பெற வேண்டுமென விரும்பும் பேரருளாளராதலால் வள்ளற் பெருமான், “பெருஞ் சுகமே சுகித்திட இவ்வுலகைச் சுத்த சன்மார்க்கம் தனிலே விரைந்து வைத்தருள்க” எனச் சிவனை வேண்டுகின்றார். பிரணவோபாசனை நல்கும் “உயர்ந்த தனிநிலை” பெற சன்மார்க்கம் நன்னெறியாம் என்பது இதன் கருத்து எனவுணர்க. (7)
|