4642. ஆடகப்பொற் சபைநடுவே நாடகஞ்செய் தருளும்
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
ஏடகத்தே எழுதாத மறைகளெலாம் களித்தே
என்உளத்தே எழுதுவித்த என்உரிமைப் பதியே
பாடகக்கால் மடந்தையரும் மைந்தரும்சன் மார்க்ககப்
பயன்பெறநல் அருளளித்த பரம்பரனே மாயைக்
காடகத்தை வளஞ்செறிந்த நாடகமாப் புரிந்த
கருணையனே சிற்சபையில் கனிந்தநறுங் கனியே.
உரை: ஆடகப் பொன்னால் அமைந்த பொற் சபையின் நடுவில் திருநடம் செய்தருளும் எனக்கு, அம்மையும் அப்பனும் ஐயனும் அருளரசுமாகிய-பெருமானே! ஏட்டில் எழுதுவதில்லாத வேதங்களின் பொருளனைத்தும் மகிழ்ச்சியுடன் என் மனத்தின்கண் பொறித்தருளிய எனக்கே யுரிமையான சிவபதியே! பரம்பரனே! மாயையாகிய காட்டினை ஞான வளமிக்க நாடாகச் செய்தருளிய கருணாமூர்த்தியே! ஞான சபையில் பழுத்துக் கனிந்த பழம் போன்றவனே! பாடக மணிந்த பாதங்களையுடைய மகளிரும் ஆடவரும் வேற்றுமையின்றிச் சன்மார்க்கத்தை மேற்கொண்டு அதன் நற்பயனைப் பெறுமாறு அருள் புரிந்தருளினாய். எ.று.
சாம்பு நாதம் - கிளிச் சிறை என வரும் பொன் வகைகளில் ஆடகம் என்பது ஒன்று. பொன் வேய்ந்திருத்தல் பற்றித் தில்லையம்பலம், “ஆடகப் பொற்சபை” எனப்படுகிறது. நாடகம் - ஈண்டுக் கூத்து என்னும் பொருளில் வந்துளது; நாடகம் செய்தருளும் அருளரசே என இயையும். வேதங்களை “எழுதாக் கிளவி” எனச் சான்றோர் வழங்குவது கொண்டு, “ஏடகத்தே எழுதாத மறைகள்” என்று கூறுகின்றார். மறைகளின் முடிபொருளைத் தம்முடைய மனத்தின்கண் பதிய அளித்தமை விளங்க, “என்னுளத்தே எழுதுவித்த என்னுரிமைப்பதியே” என இயம்புகின்றார். எழுதியது என்பது எழுதுவித்த என வந்தது. தம்மைச் சூழ்ந்த மக்கள் அனைவரும் சன்மார்க்க ஞானம் உணர்ந்து ஒழுகுவது கண்டு மகிழ்கின்றாராகலின், “பாடகக் கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்கப் பயன்பெற நல்லருள் அளித்த பரம்பரனே” என்று நவில்கின்றார். பொருள் கோள் பற்றி அளித்த என்பது முற்றுவினை யாக்கப்பட்டது. பாடகம் - மகளிரணியும் காலணி வகையுள் ஒன்று. மடந்தையர் - மகளிரெனப் பொதுப் பொருள் மேற்று. அங்ஙனமே, மைந்தர் என்பது ஆண்மக்களை யுணர்த்தும் பொதுப் பெயராயிற்று. உலகியல் மாயையைப் போக்கிச் சன்மார்க்கம் விளங்கச் செய்ததை வியந்து, “மாயைக் காடகத்தை வளம் செறிந்த நாடகமாப் புரிந்த கருணையனே” என வுரைக்கின்றார். நாடு - நாடகம் என வந்தது. சிற்சபை - ஞானசபை. (8)
|