பக்கம் எண் :

4643.

     அடியாதென் றறிந்துகொளற் கரும்பெரிய நிலையே
          அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
     முடியாதென் றறிந்திடற்கு முடியாதென் றுணர்ந்தோர்
          மொழிந்திடவே முடியாது முடிந்ததனி முடிபே
     கடியாத பெருங்கருணைக் கருத்தேஎன் கருத்தில்
          கனிந்துகனிந் தினிக்கின்ற கனியேஎன் களிப்பே
     மடியாத வடிவெனக்கு வழங்கியநல் வரமே
          மணிமன்றில் நடம்புரியும் வாழ்க்கைஇயற் பொருளே.

உரை:

     திருவடி நிலை யாதாகும் என்று அறிந்துகொள்வதற்கு அருமையான பெரிய நிலையாகிய பரம்பொருளே! எனக்கு அம்மையும் அப்பனும் ஐயனும் அருளரசுமாகிய பெருமானே! நின்னுடைய திருமுடி நிலை எங்குளது என அறிந்துகொள்ளுவதற்கு முடியாது என்று மெய்யுணர்ந்தோர் சொல்லும்படி அவர்கள் ஞானக் காட்சிக்கு முடித்த பொருளாக வுள்ள ஒப்பற்ற முடிபொருளே! விலக்க முடியாத பெரிய கருணை உள்ளத்தில் கருத்தாய் இருப்பவனே! என் உள்ளத்தில் இனிய கனி போல் பழுத்து இனிக்கின்ற கனி போல்பவனே! எனக்கு மகிழ்ச்சி தரும் பொருளே! சாவாத பொன் வடிவத்தை எனக்கு வரமாகத் தந்தருளிய பெருமானே! அழகிய அம்பலத்தில் திருக்கூத்தாடும் தொழிலைச் செய்கின்ற சிவபரம்பொருளே வணக்கம். எ.று.

     சிவ பரம்பொருளின் திருவடி நிலையும் திருமுடி நிலையும் திருமால் பிரமன் முதலிய தேவர்களால் காண முடியா தொழிந்தமையின் அக்குறிப்பு விளங்க, “அடி யாது என்று அறிந்து கொளற் கரும் பெரிய நிலையே” என்றும், “முடியாது என்று அறிந்திடற்கு முடியாது என்று உணர்ந்தோர் மொழிந்திட” என்றும் கூறுகின்றார். முழுதுணர்ந்த பெருமக்களாலும் தவயோக ஞானக் காட்சிகளால் இதுதான் முடிந்த பொருள் என முடிந்த முடிபாகக் கூறலாகாதாயினும் அவருடைய மெய்ம்மை யுணர்விற்குப் பொருளாகத் தோன்றுதலால், “முடியாது முடிந்த தனிமுடிபே” என்று மொழிகின்றார். கழி கண்ணோட்டமாகிய கருணை கடியப்படுவதாலின், பெரிய கருணை நிறைந்த பொருளாய் உள்ளத்தில் எழுந்தருளி ஒளிர்தலால், “கடியாத பெருங் கருணைக் கருத்தே” எனவும், உள்ளத்தில் நினைக்குமிடத்து நினைக்குந் தோறும் இனிமை செய்வது விளங்க, “கருத்தில் கனிந்து கனிந்து இனிக்கின்ற கனியே” எனவும் உரைக்கின்றார். கடிதல் - விலக்குதல். சாகாப் பொன் வடிவம் பெற்றுச் சிவமயமாய்த் திகழ்கின்றாராதலால் வடலூர் வள்ளல், “மடியாத வடிவு எனக்கு வழங்கிய நல்வரமே” என்று நவில்கின்றார். நல்வரம் தந்த பெருமானை நல்வரம் என்பது உபசார வழக்கு. தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடுவதும் தனது சிவபோக வாழ்வாகக் கொண்டமையின் சிவ பரம்பொருளை, “மணி மன்றில் நடம் புரியும் வாழ்க்கை இயற்பொருளே” என்று போற்றுகின்றார்.

     (9)