4644. ஆனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
மனந்தருவா தனைதவிர்த்தோர் அறிவினில்ஓர் அறிவாய்
வயங்குகின்ற குருவேஎன் வாட்டம்எலாம் தவிர்த்தே
இனந்தழுவி என்னுளத்தே இருந்துயிரில் கலந்தென்
எண்ணமெலாம் களித்தளித்த என்னுரிமைப் பதியே
சினந்தவிர்ந்தெவ் வுலகமும்ஓர் சன்மார்க்கம் அடைந்தே
சிறப்புறவைத் தருள்கின்ற சித்தசிகா மணியே.
உரை: எண்ணிறந்த வேதங்களும் ஆகமங்களும் அளந்து காண்பதற்கரிதாகிய சிவ பரம்பொருளே! எனக்கு அம்மையும் அப்பனும் ஐயனும் அருளரசனுமாகிய சிவபெருமானே! மனத்தால் உண்டாகும் விருப்பு வெறுப்புக்களாகிய வாதனைகளைப் போக்கிய சான்றோர் அறிவின்கண் அறிவுருவாய் விளங்குகின்ற குருமுதல்வனே! எனது உரிமைப் பதியே! என் வருத்தமெல்லாம் நீக்கிச் சித்தாம் இனமாகும் என்று என் மனம் புகுந்து தங்கி எனதுயிரிற் கலந்து என்னுடைய எண்ணங்களெல்லாம் ஈடேற்றியருளினாய்; சித்த சிகாமணியே! சின முதலிய குற்றங்களைக் கடிந்து எவ்வுலகத்தவரும் ஒப்பற்ற சன்மார்க்க நெறியைச் சார்ந்து சிறப்புறவைத்தருள்க. எ.று.
ஆதியில் வேதங்களும் ஆகமங்களும் எண்ணிறந்தனவாய் இருந்தனவென்றும் பிற்காலத்தே அவை சுருக்கித் தொகுத்தும் வகுத்தும் செய்யப்பட்டன என்றும் கூறுவராதலின், “அனந்த மறை ஆகமங்கள்” என்று குறிக்கின்றார். மனத்தால் உண்டாகும் காமம் வெகுளி முதலியவற்றால் விருப்பு வெறுப்புக்கள் தோன்றுதலால், “மனம் தரு வாதனை” என மொழிகின்றார். வாதனை - வாசனை எனவும் வழங்கும். அறிவு வடிவாய் உண்ணின்றுணர்த்தலின், “அறிவினில் ஓர் அறிவாய் வயங்குகின்ற குருவே” என வுரைக்கின்றார். உயிர்க்குயிராய்க் கலந்து எண்ணும் எண்ணங்களைக் கைகூட்டி வைத்தமை தோன்ற, “எண்ணமெலாம் களித்தளித்த பதியே” என இயம்புகின்றார். சன்மார்க்கத்துக்குப் பொறை யுடைமை தலையாய அறமாதலின், “சினம் தவிர்த்து” என்று புகல்கின்றார். விளக்கம் பற்றி, “அளித்த” எனவும், “வைத்தருள்கின்ற” எனவும் நின்ற எச்ச வினைகள் முற்றுக்களாகக் கொள்ளப்பட்டன. (10)
|