பக்கம் எண் :

85

85. சிவானந்தத் தழுந்தல்

 

     அஃதாவது, சிவஞானத்தால் உண்டாகும் சிவசிந்தனை செய்யுமிடத்து ஊறும் இன்பத்தில் ஆழ்ந் தொழிதல். சிவானந்த ஞான வடிவு பெற்றுச் சிவமயமாய்ப் பொலியும் நிலை என்றும் பொன்றாத பெருநிலையாதலின் அதனைச் சாகாவரம் என்றும், அதற்குரிய ஞானத்தைச் சாகாக் கலை என்றும் பலவிடத்தும் வள்ளற் பெருமான் கூறுகின்றார். சீவகரணங்கள் சிவகரணங்களாகுமிடத்துச் சாவேது? “தன்னைக் கண்ட என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசன்” எனச் சேரமான் பெருமாளும், “இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்” என நம்பியாரூரரும் உரைப்பன காண்க. “தன்னை யறிவித்துத் தான் தானாச் செய்தவன்” ( சிவ. போ. )  என மெய்கண்டார் கூறுவதுபோல் தான் தானாச் செய்யும் சிவன், ஏனையோர் போல் சாவ விடுவானோ? எண்ணுக. சீவகரணங்கள் சிவகரணமாகிய விடத்துச் சாகவில்லை என்பது கருத்து.

 

        எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4645.

     காரண காரியக் கல்விகள் எல்லாம்
          கற்பித்தென் னுள்ளே கலந்துகொண் டென்னை
     நாரணர் நான்முகர் போற்றமேல் ஏற்றி
          நாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப்
     பூரண மாம்இன்பம் பொங்கித் ததும்பப்
          புத்தமு தாம்அருட் போனகம் தந்தே
     ஆரண வீதியில் ஆடச்செய் தீரே
          அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

உரை:

     அருட் பெருஞ் சோதியால் என்னை ஆண்டு கொண்டவராகிய நீ, கற்கப்படும் பொருள்களின் காரிய காரணங்களைக் காட்டும் கல்வி வகையை எனக்குக் கற்பித்து என்னுட் கலந்து கொண்டு, நாரணர்களும் பிரமர்களும் என்னைக் கண்டு போற்ற மேனிலைக்கண் என்னை உயர்த்தி நாதாந்தமென்னும் மாயா மண்டலாதீத மண்டலத்துக்கு என்னைத் தலைவனாக்கிப் பூரணமான இன்பம் என்னுட் பொங்கிப் பெருக, புத்தமுதமாகும் திருவருள் ஞான அமுதத்தை எனக்குத் தந்து வேதங்கள் காட்டிடும் ஞான வீதியில் என்னை உலவச் செய்தீர் காண். எ.று.

     பொருட்கும் பொருளின் புடை பெயர்ச்சிக்கும் உரிய காரிய காரணங்களை ஆராய்வித்தல் கல்வியாதலால், “காரண காரியக் கல்விகள்” என மொழிகின்றார். தத்துவக் கல்வி காரணம் காட்டும் என்றும், விஞ்ஞானக் கல்வி காரியப் பாட்டைக் காட்டும் என்றும் இக்காலக் கல்வியாளரும் கூறுவர். நாரணனும் பிரமனும் பலர் என்று திருநாவுக்கரசர் முதலிய சான்றோர் கூறுதலின், “நாரணர் நான்முகர்” என வுரைக்கின்றார். நாதாந்த காடு - நாத தத்துவத்துக்கு மேலுள்ள உபசாந்த வெளி. பூரணம் - குறைவிலா நிறைவு. அருட் போனகம் - திருவருள் ஞானமாகிய அமுதம். ஆரண வீதி - வைதிக நெறி. ஆடுதல் - ஆடல் என வந்தது; ஆடுதல் ஈண்டு வாழ்தல் என்னும் பொருள்படி வருகின்றது. இனி வருமிடத்தும் இதனையே ஓதிக் கொள்க.

     (1)