பக்கம் எண் :

4654.

     இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
          இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
     மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
          வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
     தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
          சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
     அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
          அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

உரை:

     அருட்பெருஞ் சோதியாய் என்னை ஆண்டருளிய பெருமானாகிய நீர், அறியாமையால் தோன்றிய சாதிப் பிரிவுகளையும் தத்துவம் கூறும் சாத்திரக் குவியல்களையும் இரண்டாக வாய்த்த புல்லிய செவிகளில் தோன்றும் அழுக்காக எடுத்தெறிந்து, மருட்சியை யுண்டாக்கும் சாதிகள் சமயங்கள் மதங்கள் ஆசிரம ஒழுக்கங்கள் வழக்கங்கள் ஆகிய எல்லாவற்றையும் குழி தோண்டிப் புதைத்து மண் பெய்து மூடிவிட்டு, தெளிவமைந்த சுத்த சன்மார்க்க நெறி சிறந்து விளங்குதல் வேண்டிச் சிற்சபையாகிய சன்மார்க்கத்தைப் பரப்புகின்ற நன்னெறியில் என்னை வாழ வைத்தீராதலால் இதற்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     மக்களினத்தின் ஒருமையையும் எதிர்கால நலத்தையும் நோக்காமல் சாதி வேறுபாடுகளை ஏற்படுத்தினமையின் அவற்றை, “இருட் சாதி” என இயம்புகின்றார். தத்துவச் சாத்திரக் குப்பை, காணப்படும் நிகழ்ச்சிகட்கும் கூறப்படும் கதைகட்கும் தத்துவப் பொருள் கூறி அதற்கென நிலவும் பொய்ச் சாத்திரங்களின் மிகுதி விளங்க, “தத்துவச் சாத்திரக் குப்பை” என இகழ்கின்றார். இரு வாய்ப்புப் புன்செவி - இரண்டாக வாய்த்த காதுகள். பொய்யும் புனைவுமா கியவற்றைக் கேட்பதால் “புன்செவி” என்று புகல்கின்றார். செவியில் தோன்றும் அழுக்கை எரு என்கின்றார். எருவாக்கிப் போடுதல், அழுக்காகக் குடைந்தெடுத்து எறிதல். அறியா மயக்கத்தால் கிளைச்சாதிகளையும் பொய்ச் சமயங்களையும் அவற்றின் புல்லிய கொள்களைகளையும் குருட்டு வழக்கங்களையும், “மருட் சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கெல்லாம்” என வெறுக்கின்றார். பிரமசரியம், கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் நிலை நில்லாமல் அவ்வச் சாதியினரால் கைவிடப்பட்டு ஒழிந்து போயின. வானப்பிரஸ்தமும் சந்நியாசமும் இன்று நினைப்பாரின்றி மறைந்து போயின என அறிக. அவற்றால் இம்மை வாழ்வு சீர்குலைந்து ஒருமை துறந்து துன்ப வாழ்வாயினமையின், அவற்றைத் தலையெடாதவாறு அழிக்க வேண்டும் என்பாராய், “குழிக் கொட்டி மண் மூடிப்போட்டு” என முனிந்துரைக்கின்றார். இம்மையிற் பொருள் வாழ்வும் தொழில் வாணிகச் செல்வ வாழ்வும், மக்களொருமையின் செம்மை வாழ்வும் சன்மார்க்கக் கண் கொண்டு காண்பார்க்கு நன்ஞான விளக்கமாய்த் தோன்றுதலால், “தெருள் சாரும் சுத்த சன்மார்க்க நன்னீதி” என்று தெரிவிக்கின்றார். சாதி குலந்தோறும் வேறுபடாது மக்களனைவர்க்கும் சமமாய் நிலவும் நீதி இங்கே சன்மார்க்க நன்னீதி என்று சிறப்பிக்கப்படுகிறது. திருவருள் ஞானம் விளைவிக்கும் சுத்த சமரச நெறியை, “அருட் சோதி வீதி” என்று தெரிவிக்கின்றார்.

     (10)