4656. பெருகுமா கருணைப் பெருங்கடல் இன்பப்
பெருக்கமே என்பெரும் பேறே
உருகும்ஓர் உள்ளத் துவட்டுறா தினிக்கும்
உண்மைவான் அமுதமே என்பால்
கருகும்நெஞ் சதனைத் தளிர்த்திடப் புரிந்த
கருணையங் கடவுளே விரைந்து
வருகஎன் றுரைத்தேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
உரை: மேன்மேலும் பெருகுகின்ற உயர்ந்த கருணையே நிறைந்த பெரிய கடல் போன்றவனே! இன்ப மிகுதியே! எளியேனுடைய பெருஞ் செல்வமே! அன்பால் உருகுகின்ற உள்ளத்தின்கண் தெவிட்டாமல் இனிக்கின்ற மெய்ம்மை சான்ற தேவாமிர்தமே! என்னுடைய அன்பின்றிக் கருகுகின்ற நெஞ்சினை அருளால் தளிர்த்தோங்கச் செய்தருளிய கருணை யுருவாகிய கடவுளே! என்பால் விரைந்து வருக என்று பலகாலும் சொல்லி வழிபட்டேனாதலால், என்னுள் தோன்றி அருட் சோதி வழங்கியருளிய நின்னுடைய மாண்பு நீடு வாழ்க. எ.று.
கருணை பெருகிய வண்ணமாய்க் கடல்போல் எல்லையின்றிப் பெருகும் இயல்பினது என்பது புலப்படச் சிவபரம்பொருளை, “பெருகும் மாகருணைப் பெருங் கடல் என்று போற்றுகின்றார். பெருகி நிறைந்த செல்வமே சிவத்தின் திருவுரு என்பாராய், “இன்பப் பெருக்கமே” என்று பரவுகின்றார். பெறலாகும் பேறுகளில் சிவப் பேற்றினும் பெரியதொன்று இல்லாமைபற்றி, “என் பெரும் பேறே” என்று ஏத்துகின்றார். உவட்டுதல் - தெவிட்டிக் குமட்டுதல். தெவிட்டுதலாகிய குற்றமில்லாமல் உண்ணுந்தோறும் உண்ணும்தோறும் தெவிட்டாமல் தெவிட்டுதலின்றிப் பருகும் ஆர்வத்தையே உண்டுபண்ணுவது என்றற்கு, “உவட்டுறாது இனிக்கும் உண்மை வானமுதமே” என்றும், தேவர் உலகத்து தேவர்கள் உண்ணும் அமுதம் என விளக்குதற்கு “வானமுதமே” என்றும் இறைவனைப் பாராட்டுகின்றார். அருளாகிய ஈரமில்லாமையால் வாடி வதங்கும் நெஞ்சினை, “கருகும் நெஞ்சு” எனவும், அதனைச் சிவபெருமான் கருணை நீர் பெய்து வளர்ந்தோங்கச் செய்கின்றமை புலப்பட, “கருகும் நெஞ்சதனைத் தளிர்த்திடப் புரிந்த கருணையங் கடவுளே” என்று துதிக்கின்றார். வருக என்று வேண்டிய என் முன் வேண்டியாங்கு வந்தருளித் திருவருள் வழங்கிய உனது பெருமாண்பு நெடிது வாழ்கவென வாழ்த்துவாராய், “வருக வென்று உரைத்தேன் வந்து அருட் சோதி வழங்கினமை நின் மாண்பு வாழி” என்று பாராட்டுகின்றார். (2)
|